திருக்குறள் மாநாடு 15.01.1949
இன்றைய தினம் திருவள்ளுவர் பற்றியும், திருக்குறள் பற்றியும் உலகம் பேசுகிறது. இந்த நிலை உருவாவதற்கான அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுத்தவர் தந்தை பெரியார்.
புலவர்கள் மத்தியில் மட்டும் நடமாடிக் கொண்டிருந்த குறளை மக்கள் மத்தியில் தவழச் செய்ய முதன் முதலில் சென்னையில் மாநாட்டைக் கூட்டினார் தந்தை பெரியார். அதில் அறிவாய்ந்த தமிழ்ப் பெருமக்களைப் பங்கு பெறச் செய்தார்.
15.01.1949 அன்று திருவள்ளுவர் - குறள் மாநாடு கூட்டப்பட்டது.
பெரியார் வேண்டுகோள்!
திருவள்ளுவர் மாநாடு சென்னையில் பிரபலமாய் பல அறிஞர்கள் தலைமை யையும், சொற்பொழிவுகளையும் கொண்டு இம்மாதம் 15,16 சனி,ஞாயிறுகளில் நடக்கின்றது.
திராவிடர் கழகம் அதில் நல்ல பங்கு கொள்ள வேண்டும் என்பது எனது ஆசை. ஏனென்றால், தமிழர்களுக்கு ஆரியக் கலைகள், ஆரிய நீதி நெறி ஒழுக்கங்கள் அல்லாமல் வேறு இல்லை என்பது மாத்திரமல்லாமல், இவைகளில் ஆரியர் வேறு‡ தமிழர் வேறு என்று பாகுபடுத்துவது தவறு என்றும் கூறுவதோடல்லாமல், குறள் முதலிய தமிழர் பண்பு, ஒழுக்கம், நெறி ஆகியவைகளைக் காட்டும் தமிழ்மறைகள் பலவும் ஆரியத்தில் இருந்து ஆரிய வேத, சாஸ்திர, புராண, இதிகாசங்களில் உள்ளதைத் தொகுத்து எழுதப்பட்டவையே என்றும், பெரும் அளவுக்கு ஆரியர்கள் பிரசாரம் செய்வது மாத்திரமல்லாமல் பலவகைத் தமிழர்களைக் கொண்டும் அப்படிப்பட்ட பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.
குறளைப் பொறுத்தவரை என்னுடைய கருத்து ஆரிய கலை, பண்பு, ஒழுக்கம், நெறி முதலியவை யாவும், பெரிதும் தமிழர்களுடைய கலை, பண்பு, நெறி, ஒழுக்கம் முதலியவைகளுக்கு தலைகீழ் மாறுபட்டதென்பதும், அம்மாறுபாடுகளைக் காட்டவே சிறப்பாக குறள் உண்டாக்கப்பட்டது என்பதும் உறுதியான கருத்தாகும். குறளிலும் சிற்சில இடங்களில் ஆரியப் பண்பு கலப்பு இருக்கின்றது என்று இன்று பல பெரியார்கள் கருதுகிறார்கள். அதற்கேற்றப்படி சில எடுத்துக்காட்டுகளையும் காட்டுகிறார்கள்.
ஏதோ சில இருக்கலாம் என்றே வைத்துக் கொள்ளலாம். அப்படிப்பட்டவைகளை நாம் இக் காலத்துக்கும், குறளாசிரியரது பெரும்பாலான கருத்துக்கும், ஒப்பிட்டுப் பார்த்து நல்ல கவலையுடன் சிந்தித்தோமே யானால் ஏதாவது நம் கருத்துக்கு ஏற்ற தெளிபொருள் விளங்கும் என்றே கருதுகிறேன். விளங்காவிட்டாலும் அவை குறளின் தத்துவத்துக்கு முரண்பாடானது என்றாவது தோன்றலாம். அதுவும் இல்லாவிட்டால் நம் பகுத்தறிவுப்படி பார்த்து, கொள்வதைக் கொண்டு, விலக்குவதை விலக்கலாம்.
நீண்ட நாள் நம் கலைகள், பண்புகள் எதிரிகளின் இடையிலேயே காப்பு அற்றும், நாதி அற்றும் கிடந்ததாலும் அன்னிய கலை, பண்பு ஆட்சிக்கு நாம் நிபந்தனை அற்ற அடிமைகளாக இருந்ததாலும், நம் கலைகளில் இப்படிப்பட்ட தவறுதல்கள் புகுவது, நேருவது இயற்கையே யாகும். ஆதலால் அப்படிப்பட்ட ஏதோ சிலவற்றிற்காக நம்முடைய மற்றவைகளையும் பறி கொடுத்துவிட வேண்டும் என்பது அவசியமல்ல.
எனவே, குறள் தத்துவத்தை விளக்கிட வென்றே நடத்தப்படும் இம் மாநாட்டில் நாம் பங்கு கொண்டு தத்துவங்களை உணர்ந்து, தமிழ்ப் பாமர மக்கள் இடையில் அந்தத் தத்துவங்கள் புகும்படி செய்ய வேண்டியது நம் கடமையாகும். திராவிடர் கழகம் என்பது சமுதாய முன்னேற்றத்திற்காகவே இருப்பதால், அதன் சமுதாயக் காரியங்களுக்கு குறள் தத்துவம் பெருமளவுக்கு அவசியமாகும். ஆதலால், குறள் மாநாட்டைத் தமிழர்கள், திராவிடர்க் கழகத்தார் நல் வாய்ப்பாகக் கொண்டு கலந்து கொள்ள வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.
ஈ.வெ.ரா (விடுதலை 10.01.1949)
திருவள்ளுவர் குறள் மாநாடு
காரியக் கூட்டம் மவுண்ட்ரோடு மீரான் சாயிபு தெரு கட்டடத்தில் 8.1.1949 அன்று நடந்தது. பெரியார் உட்பட சுமார் 100 பேர் வந்திருந்தனர். சப்‡கமிட்டிகளும், தொண்டர் பதிவுகளும் நடந்தன.
1) கொட்டகை சம்பந்தமான காரியங்களும், அணி விரிப்பு, தண்ணீர் வசதி முதலியவைகளும் பொறுப்பேற்க சப்‡கமிட்டியாக தோழர்கள் பாவலர் எஸ்.எஸ். அப்துல்காதர், எஸ்.எம். ஜக்ரியா, வீரராகவன், துரைராஜ், எம்.கே.சாமு, எம்.கே.எஸ். சாயபு தம்பி, வி. முனுசாமி ஆகியோரும்,
2) லைட் (விளக்கு), ரேடியோ, லைட் அணி முதலிய பொறுப்பு ஏற்க தோழர்கள் கூத்தரசன், தலைவர் பரமசிவன், எ.ஆர். சேசாசலம் ஆகியோரும்,
3) வெளியூரிலிருந்து மாநாட்டுக்கு வருகிறவர்களுக்கு இடம் முதலிய வசதிக்குப் பொறுப்பேற்க தோழர்கள் பி. வீரராகவன், எ.ஆர்.சேசாசலம் ஆகியோரும்,
4) விளம்பரம், கடிதப் போக்குவரத்து, அழைப்பு, நிகழ்ச்சிக்குறிப்பு ஆகியவைகள் பொறுப்பேற்க புலவர் பு.செல்வராஜ், லிங்கராசு ஆகியோரும்,
இக்காரியங்களைக் காரியக் கவனிப்பு செய்து அடிக்கடி அறிக்கை வெளியிட, தோழர் கள் டாக்டர் கணேசன், கே.கோவிந்தசாமி ஆகியோரும் கேட்டுக் கொண்டு யாவரும் ஏற்றுக் கொண்டார்கள்.
தொண்டர்களாக அந்த இடத்திலேயே சுமார் 50 பேர்கள் அதாவது, தணிகாசலம், வெ.கண்ணன், எம்.குப்புசாமி, தா.வேணுகோபால், லிங்கராசு, எஸ்.பி.டி. திராவிடமணி, சுந்தரவதனம், டி.தாமஸ், சி.கணேசன், எஸ். பழநிவேலு, தெ. அண்ணாமலை, டி.சி.முருகேசன், டி.ராமலிங்கம், பி.ஆர். இராமச்சந்திரன், பி.எஸ். பழநி, சி.எஸ். மோகன சுந்தரம், எஸ்.வி. சீனிவாசன், சி.பிரசாரம், எஸ்எஸ். ராசவேலு, சி.ஆர்.சின்னப்பன், அனந்தசயனம், ரா.சண்முகம், ச.ப.சிவன், கே.மாணிக்கசாமி, எம்.டி.செல்வராசன், ஊ.கு.ராமநாதன், தி.ரா.பழநி, இராமானுஜம், மோகனரங்கம், காசிராசன், எ.இ. சுப்பிரமணியம், டி.எம்.வி. ராஜன், எஸ்.கணேசன், எம்.பி. பாண்டுரங்கம், சி.என்.சண் முகம், என்.கே.குப்புசாமி, எம்.ராஜூ, பெண் தொண்டர்கள் அமைப்புக்கு தோழியர் அலர்மேலம்மாள் கேட்டுக் கொள்ளப்பட்டார்கள்.
மற்ற காரியங்களைக் கவனிக்க, 10.01.1949 மாலை 5 மணிக்கு பவழக்காரத் தெரு, பாவலர் எஸ்.எஸ். அப்துல் காதர் அவர்கள் கட்டடத்தில் கூட்டுவதென்று தீர்மானிக்கப்பட்டது. செயலாளர் தோழர் மணிமொழியார் நன்றி கூற, கூட்டம் இரவு 8 மணிக்கு முடிவு பெற்றது.
மேலும் குறள் மாநாட்டு பெண் தொண்டர்கள்: 1. அலமேலு அப்பாதுரை அம்மாள், 2. சுசீலா முத்துக்கிருட்டிணன், 3. டி.பாப்பம்மாள், 4.எம்.எம்.லட்சுமி அம்மாள். மேலும் தொண்டர்களாகப் பதிவு செய்து கொண்டவர்கள்; து. குப்புசாமி, அப்துல் அஜீஸ், டி.கே.க. ராஜன், பி.சோமசுந்தரம், ம.கு. நெடுமாறன், ஏ.தாஸ் , வி. சங்கரன், மகிமை தாஸ், கி.பா.அய்யன், சி.என். கிருட்டிணசாமி, கே.இராமு, பி.டி.ஜனநாயகம், ம. ராஜேசுவரன், ச.வீ.வரதன், எம்.கண்ணன், கொ.பெருமாள், ச.தங்கவேல், ச. சோமசுந்தரம், கே.நடேசன், கே.பி. சந்திரன், மு.சடகோபன், ஆ.சம்பந்தன், ஜி.கணேசன், செ.ஆரோக்கிய தாஸ், ஆர்.சி.சுந்தரராஜி, எம்.சிவஞானம், நா.ரா. பத்மநாபன், ச. சந்திரபாபு, நாகையன், சி.எம்.சுவாமி, ம.இராவணதாஸ், பி.டி.டி. தேவராஜூலு, எஸ்.வி. சண்முகம், பி.எஸ்.பழனி, இ.ஆர்.கோவிந்தசாமி, எம்.எஸ்.சாமிநாதன், கோதண்டன், டி.ஐம்புலிங்கம், சாளை கபீர், ராவணன், துரைக் கண்ணம்மாள்.
நாளை 12.1.1949 மாலை மீரான் சாயுபு வீதி மாநாடு காரியாலயக் கட்டடத்தில் தேர்வு நடத்திய பின் கடமை உரை, பயிற்சி நடைபெறும்.
திருவள்ளுவர் குறள் மாநாடு அறிக்கை (12.1.1949)
மாநாட்டு ஏற்பாடுகள் அதற்குரிய தனித்தனி உட்கழக உறுப்பினர்களால் விரைந்து செய்யப்பட்டு வருகின்றன. பந்தல் வேலை பெரும்பாலும் முடிவு பெற்றுவிட்டது. கிட்டத்தட்ட 10,000 பேர்கள் இருக்கத்தக்க அளவு பந்தல் போடப்பட்டிருக்கிறது. பந்தலுக்கு ‘வள்ளுவர் பந்தல்’ என்றே பெயரிடப்பட்டிருக்கிறது.
நேற்று பெரியார் அவர்களுடன் தளபதி அண்ணா அவர்களும் நகரசபை உறுப்பினர் வி.முனுசாமி அவர்களும் மற்றும் பல பெரியார்களும் வந்து பந்தலையும் மற்ற ஏற்பாடுகளையும் பார்வையிட்டனர். நாள்தோறும் நூற்றுக்கணக்கானவர்கள் பந்தலைப் பார்த்துச் செல்கின்றனர். சென்னை முழுவதும் குறள் மாநாட்டைப் பற்றிய பேச்சாகவே இருக்கிறது. மாநாட்டு நுழைவுச் சீட்டுகள் இப்போதிருந்தே விற்பனையாகத் தொடங்கிவிட்டன.
தேவையான அளவுக்கு மேல் 100 தொண்டர்கள் வரை பதிவு பெற்றுள்ளனர். தொண்டு செய்வதில் உண்மையான ஆக்கமும், பற்றும் உள்ள இளைஞர்களே தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்கள். மாநாட்டைப் பற்றி விவரம் அறிய விரும்புவோர்: செயலாளர், திருவள்ளுவர் குறள் மாநாடு, 1. மீரான் சாயுபு தெரு,மவுண்ட் ரோடு, சென்னை என்ற முகவரிக்கு எழுதுங்கள். இதுவரை நடைபெறாத முறையில் சென்னை யில் குறள் மாநாடு நடப்பதற்கான முறையில் சிறந்த ஏற்பாடுகள் செய்யப் படுகின்றன.
பேரறிஞர்கள், புலவர் பெருமக்கள் பலர் இசைந்துள்ளார்கள். மாநாடு வெற்றிக ரமாகவும், பயனுடையதாகவும், நடைபெற தங்கள் அனைவருடைய கருத்துகளையும் முன்னதாகத் தெரிவிப்பின் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்ளப்படும். புலவர்கட்கு அழைப் பிதழ்கள் தலைமைத் தமிழாசிரியர் பேருக்கு அனுப்பப்படுகின்றன. மற்ற புலவர்கள் அவர்களிடம் பெற்று கொள்வார்களாக.
-சி.டி.அரசு,காஞ்சி மணிமொழியார், செயலாளர்கள்.
முதல்நாள் மாநாடு (15.01.1949)
மாநாட்டில் கட்சி கருத்து வேற்றுமையின்றி தமிழ் அறிஞர்களும், உயர்தர அதிகாரிகளும், புலவர் பெருமக்களும், நடிப்புக் கலைஞர்களும், வழக்கறிஞர்களும் பங்கு கொண்டுள்ளனர். மக்கள் கடல் எனக் கூடியுள்ளனர்.
காலை 8 மணி முதற்கொண்டே மக்கள் மாநாட்டுப் பந்தலில் குழும்ப ஆரம்பித்து விட்டனர். பெரியார் அவர்களும் 8.15 மணிக்குள்ளாகவே வந்து பந்தலின் ஒரு பக்கத்தில் அமர்ந்து தோழர்களை வரவேற்று மகிழ்வுடன் உரையாடிக் கொண்டிருந்தார்.
9.45 மணிக்கு நகைச்சுவை அரசு என்.எஸ். கிருஷ்ணன் அவர்கள் தம் சகாக்களுடன் வந்து சேரவும் பெரியார் அவர்கள் அன்னாரை வரவேற்று இருக்கை அளித்து உபசரித்தார்கள்.
அனைவரையும் வரவேற்றார் பெரியார்!
சரியாக 10.15 மணிக்கு பன்மொழிப் புலவர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் எம்.ஏ., பி.எல்., எம்.ஓ.எல் அவர்கள் மாநாட்டுப் பந்தலை அடையவும் பெரியார் அவர்கள் அன்னாரை வரவேற்று இருக்கையில் அமர்த்தினார்கள்.
சரியாக 10.30 மணிக்கு நாவலர் சோமசுந்தர பாரதியார் அவர்களும், தோழர் டி.எஸ். கந்தசாமி முதலியார் அவர்களும் மாநாட்டுப் பந்தலையடையவே மாநாடு கண்காணிப்பாளர் டாக்டர் கணேசன், அவர்களை வரவேற்று மேடையின்கண் அழைத்து வந்தார்.
மாநாட்டுச் செயலாளர் சி.டி.டி. அரசு அவர்கள் மாநாடு கூட்டப்பட்டதன் நோக்கத்தை எடுத்துக்கூறி அனைவரையும் வரவேற்று, நாவலர் சோமசுந்தர பாரதியார் அவர்களை மாநாட்டை திறந்து வைக்கும்படி கேட்டுக் கொண்டார்.
தெ.பொ.மீ. தலைமை
நண்பகல் 12 மணிக்குப் பிறகு, திருச்சி வழக்கறிஞர் தி.பொ. வேதாசலம் அவர்கள் முன்மொழிய, முஸ்லிம் தோழர் பாவலர் அப்துல் காதர் அவர்களும், தோழர் டி.கே.நாராயணசாமி நாயுடு அவர்களும் தொடர்ந்து வழிமொழிய நீண்ட கைதட்டலுக் கிடையே பன்மொழிப் புலவர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் தலைமையேற்றார். அவர் தம் உரையில் குறிப்பிட்டதாவது:‡
வள்ளுவர், புலவர் உலகத்திலேயே இதுகாறும் வாழ்ந்தது போதும். ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்ற பழமொழிக்கிணங்க வெறும் மேற்கோளுக்காக மட்டுமே இதுகாறும் புலவர்களுக்கு நம் குறள் பயன்பட்டு வந்தமை இப்போதேனும் மாய்ந்து போகட்டும்! கிறிஸ்தவன் ஒவ்வொருவனுக்கும் விவிலிய நூல் (பைபிள்) எப்படியோ, அதுபோல் திருக்குறளும் தமிழனது திருமறை நூலாக விளங்கும் வாய்ப்பை அடையட்டும், மக்களெல்லாம் இன்புற்று வாழ்தல் வேண்டும் என்ற ஒரு கருத்தையே அடிப்படையாகக் கொண்டு பண்டைத் தமிழனாகிய வள்ளுவனால் எழுதப்பட்ட நூல் பாமரர்களுக்கும் இனி பயன்படட்டும். அமெரிக்கப் பேரறிஞர் மில்டென் அவர்கள் விரும்பிய ஒரே உலகம் திருக்குறள் மூலமேனும் இனிது வந்தடையட்டும் என்று குறிப்பிட்டார்.
திருக்குறள் எஸ். முனுசாமி
திருக்குறளை நன்கு படித்துத் தெளிவாகத் தெரிந்து கொள்வது எப்படி என்னும் பொருள் பற்றி நகைச்சுவை ததும்ப அரிய சொற்பொழிவாற்றினார்.
திருவள்ளுவர் சொற்களை மிகவும் வரம்பு கட்டியும் கையாண்டிருக்கிறார். ஒவ்வொரு குறளையும் நன்கு படித்து மனப்பாடம் செய்து அவற்றின் பொருளை உரையாசிரியர் மூலம் தெரிந்து கொள்ள முயற்சிக்காமல் தன் அறிவு கொண்டே சிந்தித்துப் பார்த்துத் தெளிவுபெற முயற்சிக்க வேண்டும். குறளில் கையாளப் பட்டுள்ள ஒவ்வொரு வார்த்தைக்கும் விரிவான பொருள் குறளிலேயே எங்கேனும் ஓரிடத்தில் கொடுக்கப்பட்டே இருக்கிறது என்றும் விளக்கிக் கூறினார்.
பெரும்புலவர் டி.எஸ்.கந்தசாமி முதலியார்
வள்ளுவர் கூறியுள்ள சிறப்பான பண்புகளைக் கடைபிடித்து நடந்து வருவதன் மூலமே எவனும் முன்னேற்றம் அடைதல் கூடும். தலைவருள் தலைவனும் புலவருள் புலவனும் ஆன வள்ளுவன் தமிழ்க் கலையுள் ஓர் ஒப்பற்ற காவியம் திருக்குறளை இயற்றிக் கொடுத்துள்ளார். அன்னாரின் திருக்குறளை யாவரும் மாசறக் கற்றல் வேண்டும் என்று கூறி திருவுருவப் படத்தைத் திறந்து வைத்தார்.
எஸ்.முத்தையா முதலியார்
அந்தணர் என்பதும், பார்ப்பனர் என்பதும் வெவ்வேறு வார்த்தைகள் என்பது எடுத்துக் காட்டப்பட்ட உண்மையே என்றும், அந்தணப்பேட்டையும், பார்ப்பனச்சேரியும் அடுத்தடுத்து இருப்பதே இதற்குப் போதுமான சான்றாகும். திருக்குறள் வழிப்படி யாவரும் நடந்து வருவோமானால் நம்மை யாரும் குறை கூற மாட்டார்கள். கடவுள் உண்டா? இல்லையா? என்பது பற்றி நாம் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. நாம் ஒழுக்கமுடன் நடந்து கொண்டால் அதுவே போதுமானது என்று உரையாற்றினார்.
இயற்கையானது குறளை பெரியாரிடம் ஒப்படைத்துள்ளது
-பேராசிரியார் சி. இலக்குவனார்
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்
என்ற குறள் மொழிப்படி திருக்குறளை அனைத்துலகுக்கும் எடுத்தோதி அதற்குச் சிறப்பை உண்டாக்கித் தர இப் பெரியார் ஒருவராலேயே முடியும் என்பதை உணர்ந்தே இயற்கை யானது திருக்குறளை பெரியார் அவர்களிடம் ஒப்படைத்தி ருக்கின்றதென்றும், இயற்கை கூட வள்ளுவர் கட்டளைப்படியே நடக்கிறதென்பது வள்ளுவர்க்குப் பெருமை தருவதாகும் என்றும் எடுத்துக் கூறினார் பேராசிரியர் இலக்குவனார். ஒன்றிரு புலவர்கள் தமிழனுக்குக் கதியான நூல்கள் கம்பராமாயணமும், திருக்குறளும் என்று கூறி வருவது ஏற்புடையதல்ல வென்றும், கம்பனையும் வள்ளுவனையும் ஒப்பிடுவது பாம்பையும், பசுவையும் ஒப்பிட்டுப் பார்ப்பதாகும்.
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்றும், உழவர்க்கு எஞ்ஞான்றும் ஒப்பார் இல் என்றும் உழைப்பாளிகளைப் போற்றியிருக்கின்றமை மார்க்சியத்தையே குறிப்பதாகும் என்றும், மார்க்சியக் கொள்கைகளை விளக்க திரு. லெனின் தோன்றியது போல், வள்ளுவருடைய கருத்துகளுக்கு விரிவுரை வழங்க நம் பெரியார் அவர்கள் தோன்றி யுள்ளார். எனினும், அரசியல் நெறியை எடுத்துக் கூறும்போது கூட, வள்ளுவர் அறம் வழுவாது உயர் நெறிகளை எடுத்தோதி இருக்கிறார் என்றும், இன்றைய சர்க்கார் உண்மையிலேயே மதச் சார்பற்ற சர்க்காராக வேண்டுமானால், திருக்குறள் அதற்கேற்ற வழிகாட்டி என்றும் கூறி பழந்தமிழனான வள்ளுவன், புரட்சித் தமிழ் மகனான வள்ளுவன், சீர்திருத்தக் காரனான வள்ளுவன் எழுதிய குறளை யாவரும் படித்து அதன்படி நடந்து இன்ப வாழ்வு வாழ்தல் வேண்டுமென்று கூறினார்.
அஷ்டவதானம்
பிறகு, திரு.சுப்பிரமணியம் அவர்களின் அஷ்டவதானம் விமர்சையாக நடைபெற்றது. பலரும் பல கேள்விகள் கேட்டு அவர் சரியாக விடை கூற, மக்கள் யாவரும் அவருடைய ஞாபக சக்தியைப் பாராட்டினர். 8.15 மணிக்கு அவதானம் முடிவுற்றது. நன்றி கூறிய பின் மாநாடு மறுநாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டு இனிது கலைந்தது.
2 ஆம் நாள் மாநாடு
16.1.1949 காலை 9.30 மணிக்கு திரு. சக்ரவர்த்தி நயினார் அவர்கள் மாநாட்டுப் பந்தலுக்கு வந்துவிட்டார்கள். பெரியார் அவர்கள் அன்னாரை வரவேற்று ஆசனத்தில் அமர்த்தினார்.
சரியாக 10 மணிக்கு கற்றறிந்த மக்களிடையே ஒளியுடன் விளங்கி நிற்கும் பெரியார் என்றும் பதவி விருப்பமற்றவர் என்றும், ஆராய்ச்சி வல்லுநர் என்றும் கூறி சக்ரவர்த்தி நாயனார் அவர்களை பெரியார் அறிமுகப்படுத்தி அன்னாரைத் தலைமை
ஏ. சக்ரவர்த்தி நாயனார்
ஏற்கும்படி கேட்டுக் கொண்டார். தோழர் நெடுஞ்செழியன் அவர்கள் தொடர்ந்து வழி மொழிய ராவ்பகதூர் ஏ. சக்ரவர்த்தி நாயனார் அவர்கள் நீண்ட கைதட்டலுக்கிடையே தலைமையேற்று தம் சொற்பொழிவைத் தொடங்கினார். பின்னர் பெரியார் அவர்கள் சிறிது நேரம் பேசிய பின், தோழர் நெடுஞ்செழியன் அவர்கள் சொற்பொழிவாற்றத் தொடங் கினார்.
நேற்றைவிட இன்று மக்கள் திரளாக மாநாட்டில் கலந்து கொண்டனர். கொட்டகை பூராவும் மக்கள் நிரம்பியிருக்கின்றனர். கோவை ராவ்சாகிப், திரு.சி.எம். ராமச்சந்திரன் செட்டியார் அவர்களும் மாநாட்டில் கலந்து கொண்டார்கள். அறிஞர் அண்ணாதுரை, நாவலர் பாரதியார் ஆகியோரும் வந்திருந்தார்கள்.
நெடுஞ்செழியன் அவர்கள் பேசிய பிறகு, தொடர்ந்து அன்பழகன், விருதுநகர் திருக்குறள் சங்கத் தலைவர் வெள்ளைச்சாமி நாடார், கா. அப்பாத்துரை ஆகியோர் சொற்பொழிவாற்றினர். தலைவர் அவர்கள் வேறு வேலை நிமித்தம் வெளியில் செல்லுகையில் தனக்குப் பதிலாக நாவலர் பாரதியார் அவர்கள், தலைமை வகித்துத் தருவார் என்று கூறி விடை பெற்றார்.
நேற்றுப் போல் இன்றும் கோர் ஆபிசர் தோழர் ரா. ஜெகதீஸ்வரன் தலைமையில் ஜெயின்ட் ஜான் ஆம்புலன்ஸ் படையினர் 20 பேர் வந்திருந்தனர்.
பெரியார் குறளை ஏந்தியது ஏன்? வரவேற்புரையில் திரு.வி.க.விளக்கம்
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு திருக்குறளே. திருக்குறளைப் பயின்று பயின்று அதன் உள்ளுரையை உணர உணர திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு நமக்கு மேலும் மேலும் விளங்குவதாகும்.
திருவள்ளுவர் தமிழர். திருக்குறளைத் தமிழில் எழுதினார். இது உறுதி. மிக உறுதி. முழு உறுதி. அய்யமில்லை. இது உண்மை என்பதை அறுதியிட்டுக் கூறலாம். ஆனால், குறள் தமிழ் நூலன்று. தமிழர் நூலன்று. உலக நூல். உலகப் பொது நூல், சமதர்ம நூல்.
குறளைப் படிக்கும் முன்னர், படிப்பவர் (
Sexual Science) பால் அறிவு பெற்ற வராதல் வேண்டும். ஆண்-பெண் சேர்க்கை பற்றிய விஞ்ஞான அறிவின்றி திருக் குறளைப் பயின்றால் குறளின் முழு உண்மையையும் உணர்தல் அரிது. அரிது.
குறளைப் பயிலும் முன் மார்க்சிசமும் அறிந்திருத்தல் வேண்டும். மார்க்சிசம் அறியாமல் குறளைப் பயின்றால் பயனில்லை. மக்கள் கூடி வாழப் பிறந்தவர்கள். பிரிந்து வாழப் பிறந்தவர்கள் அல்லர். இதுதான் மார்க்ஸ் தத்துவத்தின் அடிப்படை. குறள் நூலின் அடிப்படையும் இதுதான்.
தமிழகத்தின் இயற்கைத் தலைவர் பெரியார் அவர்களே ஆவார். இந்த மாநாட்டின் இயற்கை வரவேற்புத் தலைவர் பெரியார் அவர்களே தான். என்னைச் செயற்கை வரவேற்புத் தலைவராக்கிற்று.
சில சமயங்களில் நான் (
Thesis) தத்துவம் ஆக இருந்திருக்கிறேன்; அவர்
எதிர்த் தத்துவமாக இருந்திருக்கிறார். சில சமயங்களில் நான்
ஆக இருந்திருக்கிறேன். அவர்
Thesis ஆக இருந்திருக்கிறார். ஆனால், இது போதோ தத்துவம்
(Thesis) எதிர் தத்துவம்
(Anti - Thesis) இரண்டும் மறைந்து (ஒருமைப்பாடு)
Synthesis ஏற்பட்டிருக்கிறது.
பெரியாருடைய அறிவியக்கம் புரட்சி இயக்கம் ; பகுத்தறிவு இயக்கம் தோன்றியது, வளர்ந்தது. எப்படி எப்படியோ சென்றது. நானும் பெரியாரும் பலமுறை போரிட்டோம். ஆனால், அக் காலத்திலேயே நான் சொல்லியது உண்டு. இத்தகைய ஒருமைப்பாடு
Synthesis ஏற்படப் போவது உறுதி, உறுதி என்று.
யார் என்ன கூறினாலும் கூறுக. பெரியாருடைய இயக்கம் - அறிவியக்கம், நாடுகளின் எல்லையை, மொழிகளின் எல்லையை, சமயங்களின் எல்லையை, சாதிகளின் எல்லையை, இனங்களின் எல்லையை எல்லா எல்லைகளையும் கடந்தது. அது உலகப் பொது இயக்கம்.
பெரியார் இன்று குறளைக் கையில் ஏந்தியுள்ளார். பலப்பல நூல்களை ஒதுக்கிக் கொண்டே வந்த பெரியார் குறளை மட்டும் கையில் ஏந்தியிருக்கும் காரணம் என்ன? திருக்குறள் உலகப் பொதுநூல். பெரியாரின் உலகப் பொது இயக்கத்திற்கு ஏற்ற உலகப் பொது நூல் திருக்குறளே! எனவேதான் அது பெரியாரின் கையிலே வீற்றியிருக்கிறது.
யார் யாரோ குறளைப் பாராட்டினார்கள். போற்றினார்கள். ஆனால், அவர்கள் தொண்டின் பயனாகவெல்லாம் குறள் தனக்கு உரிய இடத்தை அடைந்ததில்லை. இன்று பெரியார் குறளை ஏந்தியிருக்கிறார். இனி மிக விரைவில் குறள் தன் சிறப்பிடத்தை எய்துவது உறுதி! உறுதி! என்று உரையாற்றினார் திரு.வி.க.
ஆரியம் கலவாத திருக்குறள்
நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமை உரை
திருக்குறள் என்னும் இந்த ஒப்பற்ற தமிழ்க் கருவூலத்தின் பெருமையை, சால்பை, அருமையை, சிறப்பை தமிழ் மக்களை விட வேற்றவரே அதிகம் உணர்ந்துள்ளனர். நாம் திருக்குறளைப் போற்றுவதெல்லாம் ஒரு சடங்காக, ஒரு போலிக் கவுரவ வீண் பிதற்றலாகத்தான் இருக்கிறதே தவிர, திருக்குறளை எம் முறையில் போற்ற வேண்டுமோ அம் முறையில் இல்லை.
குறளாசிரியர் காலத்திலேயே தமிழரிடை ஆரியர் தொடர்பு ஏற்பட்டு விட்டது. ஆனால், தமிழகம் ஆரிய மயமாகவில்லை. தமிழர் ஆரியர் கருத்துகளை அறிய லாயினர். ஆனால், ஆரியக் கருத்துகளுக்கு அடிமைகளாகி விடவில்லை. தமிழகம் ஆரியத் தொடர்பு கொண்டு, ஆனால் ஆரியத்திற்கு அடிமைப்படாமல் வாழ்ந்து வந்த கால நிலையிலே தான் திருக்குறள் என்னும் இத் தமிழ்ப் பெருநூல் எழுவதாயிற்று. ஆரியர் கருத்துகளில் சிறந்தன உண்டேல் ஏற்றுக் கொண்டு, தனித்தமிழ்த் துறைகளை சிறிதும் விட்டுக் கொடாமல் வலியுறுத்திய தமிழ்ப் பெரியார்களுள்ளே தலைசிறந்த பெரியாரே திருவள்ளுவனார்.
இப்போது சங்க இலக்கியங்கள் என்று அழைக்கப்படும் நூல்கள் பலவற்றிலும் திருக்குறள் பாக்கள் மேற்கோளாகக் கையாளப்பட்டுள்ளன. இதுவும் குறளின் பழைமை யர்க்குத் தக்க சான்று.
எவ்வளவுக் கெவ்வளவு எதெது தங்கட்குத் தெரியாதோ, அவ்வளவுக்கவ்வளவு அவற்றைப் பற்றி தெரிந்தது போல் பாவித்து தெரியாததை எல்லாம் உளறி வைக்கும் அறியாமை இடைக்காலப் புலவர்களைப் பிடித்தாட்டிற்றே. அந்தப் பேதமை திருவள்ளு வரிடம் சிறிதும் கிடையாது.
திருக்குறள் தொன்மை மிகுந்த தமிழ்ப் பண்பு வடிவான, ஆரியமயம் ஆகாத தொல்காப்பிய நெறிவழி நிற்கும் உயர்ந்த நூல் என்பதற்கு இதுவே தக்க சான்று.
நம் அருமைத் தமிழை அறியாத ஆண்டவன் ஒருவன் இருப்பானாகில் அந்த ஆண்டவன் நமக்குத் தேவையே இல்லை. பிற்காலப் புலவர்கள் ஆண்டவனைப் பற்றிக் கூறியுள்ள இழிந்த முறையோடு திருவள்ளுவர் கூறியுள்ள உயர்ந்த முறையை ஒப்பிட்டுப் பாருங்கள். திருவள்ளுவரின் சிறப்பு எளிதில் புலனாகும்.
திருக்குறளைப் படிப்பவர் யாராயினும் அவர் திருக்குறளைப் படிக்கும் முன்னர், ஆரிய நாகரிகம் கலவாத தமிழ் நாகரிகம் ஒன்று தமிழகத்தில் தலை நிமிர்ந்தோங்கித் தழைத்திருந்தது என்பதையும், திருக்குறள் அந்தத் தமிழ் நாகரிகத்தின் வழி வந்த உயர்தனிச் சிறப்பு நூல் என்பதையும் உணர்ந்து ஆக வேண்டும். இவற்றை உணராதவர் திருக்குறளைப் படித்துப் பயன் இல்லை.
கா.அப்பாத்துரை
வடநாட்டில் முதன் முதலாக ஆரியத்திற்கு எதிர்ப்புத் தோன்றியது வங்காளத்தில் தான். அவ் வெதிர்ப்பின் தோற்றம்தான் பவுத்த மதமும், சமண மதமும். வங்காளிகளும் திராவிடர்களே. திராவிட நாட்டு மக்களாகிய நாம் தொடர்ந்து திராவிட கலாச்சாரத்துக்கு மறுமலர்ச்சியளிக்கப் பாடுபட்டு வருவோமானால் விரைவில் வடநாட்டிலுள்ள திராவிடர் களின் ஆரிய மோகமும் மாய்ந்து, பரந்ததோர் திராவிட நாட்டைக் காணலாம் என்று குறிப்பிட்டார்.
புலவர் குழந்தை
இராவண காவியம் ஆசிரியர் புலவர் குழந்தை அவர்கள், வள்ளுவரின் இன்பப் பாக்களில் (காமத்துப் பாக்களில்) கூறப்பட்டுள்ள குறள்களின் மேன்மைப்பற்றிச் சிறிது நேரம் பேசினார்.
சேலம் இராசிபுரத்திலிருந்து வெளிவரும் ‘திருக்குறள் ஆட்சியின்’ ஆசிரியர் திரு. அரங்கசாமி அவர்கள் நாடெங்கணும் திருக்குறள் கருத்துகள் பரப்பப்பட வேண்டிய அவசியத்தை எடுத்துக் கூறினார்.
பெரியார் அகமகிழ நடப்போம் ‡ கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன்
குறளுக்குத் தற்போது வழங்கிவரும் உரைகள் யாவும் சாதாரண மக்களுக்குச் சிறிதும் பயன்படாததாக இருக்கிறது. நல்லதோர் உரையை உண்டாக்கிக் கொடுப்ப தற்கான முடிவு இம் மாநாட்டின்கண் ஏற்பட வேண்டும். சில காங்கிரஸ் அறிவிலிகள் பெரியார் வெறும் பெருமைக்காகவும், பதவிக்காகவும் பாடுபட்டு வருகிறார் என்று கூறி வருவது போல், நம்மால் ஏன் வேறு எந்த அறிவுள்ள மகனாலோ கூற இயலாது. திராவிடன் தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என்ற ஒரே கருத்தை உட்கொண்டு தான் பெரியார் அவர்கள் பெருந்தொண்டாற்றி வருகிறார். அவர் வாழ்நாளிலேயே அவர் அகமகிழ அவர் வழிப்படி நடந்து இன்பத் திராவிடத்தை உண்டாக்கித் தர வேண்டும். ‘இடுக்கண் வருங்கால் நகுக’ என்று குறளையும் எடுத்தோதி கஷ்ட நஷ்டம் பாராமல் பெரியார் வழி பின்பற்றி நடக்க வேண்டும் என்று கூறினார்.
பெரியார் திருக்குறள் மாநாட்டை நடத்துவது ஏன்? -அறிஞர் அண்ணா
ஆண்டுக்கொருமுறை குறள் மாநாட்டைக் கூட்ட வேண்டும். குறளுக்கு நல்லதோர் உரை காண ஒரு குழுவை நியமித்து இன்றைய நடப்புக்கேற்ப ஒரு நல்லுரை உண்டாக்கித் தர ஒரு செயற்குழு திரு.வி.க. அவர்களைத் தலைவராக இருக்கவும், திருக்குறள் முனுசாமி அவர்களைச் செயலாளராகவும், தோழர்கள் நெடுஞ்செழியன், கா. அப்பாதுரை, புலவர் இலக்குவனார் ஆகியோர் அங்கத்தினர்களாகவும் கொண்டு இருக்க வேண்டும். அவர்களும் மேலும் சிலரையும் சேர்த்துக் கொள்ள அதிகாரம் அளித்தும் மூன்று தீர்மானங்களைப் பரேரேபிக்கும் முகத்தான்...
மக்கள் வாழ்வு நலிந்திருக்கக் கண்ட பெரியார் அவர்தம் வாழ்வை நலப்படுத்த நூற்கள் பல தேடிப் பார்த்த போது தான் கண்ட பாரதம், பாகவதம், பகவத் கீதை, இராமயணங்கள், வேதங்கள் உப நித்துகள் இவையாவும் பல கேடுகளைத் தம்மிடத்தே கொண்டு ஆரியப் பிரச்சாரத்தால், புரட்டுகள் வெளித்தோன்றாமல் இருந்து வருபவைகள். திராவிடர் வாழ்வுக்கு உண்மையில் பெரிதும் கேடு செய்து வருபவை இவைகளே என்று கண்டுதான் இதுகாறும் அவற்றிலுள்ள புரட்டுகளை எடுத்தோதி வந்து இன்று மக்களுக்கு அவற்றின் மீதுள்ள பற்றுதல் வெகுவாகக் குறைந்திருக்கும் இந்த வேளையில் திருக்குறள் என்ற ஒப்பற்ற நீதி நூலை மாநாடு கூட்டி திராவிடர்களுக்கு ‡ எல்லாத் தமிழர்களுக்கும் தருகிறார் தந்தை பெரியார். இனித் திராவிடன் ஒவ்வொருவன் கையிலும் குறள் எப்போதும் இருத்தல் வேண்டும். திராவிடன் கையில் குறள் இருப்பதை, பகவத் கீதை ஏந்தித் திரியும் பார்ப்பனர்கள் காண்பார்களாகின் பார்ப்பனியம் படுகுழியில் புதைக்கப்படப் போவது நிச்சயம் என்பதை உணர்ந்து நமக்கும் மேலாக திருக்குறளைப் போற்றிப் புகழ முற்படுவதோடு அல்லாமல் தம் அகம்பாவத்தையும் , மூட நம்பிக்கை களையும் கைவிட்டேயாக வேண்டும் என்ற தீர்மானத்துக்கு வந்து விடுவார்கள் என்றார்.
மேலும் அவர் குறிப்பிட்டதாவது:
பெரியார் இம்மாநாட்டின் மூலம் நல்லதோர் செயல் திட்டத்தைத் தருகிறார். பெரியார் கொடுத்த எத்திட்டத்தையும் இதுவரை கைவிட்டறியாத நாம், பெரியார் ஒரு நல்லுழவர் என்பதை நன்குணர்ந்துள்ள நல் பண்ணையாளர்களாகிய நாம் அவர்தம் முயற்சி வெற்றி பெற எல்லா வகையாலும் பாடுபடுவோம். திருக்குறளைத் துணைக் கொண்டு நம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் நம் வாழ்வைக் கெடுக்க வேண்டி ஆரியம் நம் பாதையில் வெட்டியுள்ள படு மோசப் படுகுழிகள் யாவும் நம் அறிவுக் கண்களுக்குத் தெற்றெனப் புலப்படும். கம்பருக்குத் திருவிழாக்கள் கொண்டாடும் புன் மதியாளர் காது செவிடுபடும்படி திருக்குறள் இனி ஓதப்படும். விரைவில் வெற்றி முரசு கொட்டிய நமது பெரும்படை, போர் பல நடத்தி நற்பயிற்சி பெற்றுள்ள நம் பெரும் படை திக்கெங்கணும் புறப்படும். வெற்றி கொண்டு பெரியாரின் பேரிதயம் மகிழச் செயலாற்றும் என்றார்.
பெரியார் பேருரை:
ஆரியத்தை ஒழிக்கும் ஒப்பற்ற ஆயுதம் திருக்குறளே!
சொற்பொழிவின் தொடக்கத்திலேயே, தான் எப்போதுமே தன் அறிவு ஒன்றையே ஆதாரமாகக் கொண்டு நடந்து வந்தவன் என்பதையும் அது ஒரு வேளை தவறாக முடியுமோ என்ற அச்சம் சில சமயங்கள் ஏற்பட்ட போதிலும், நாம் தொடர்ந்து உறுதியோடு அதையே ஆதாரமாகக் கொண்டு நடந்து வந்தமையையும் எடுத்துக் கூறி, அதையே காலையில் தலைவர் திரு.சக்ரவர்த்தி நயினார் அவர்கள் ஒப்புக் கொண்டமை, தான் நடந்து கொண்ட வகையே சாலச் சிறப்புடைத்து என்பதைத் தெரிந்து கொண்டதாகவும், மனிதன் ஒவ்வொருவனும் தன் வாழ்வுக்குத் தானே எஜமானன் என்பதை உள்ளபடி உணர்ந்து செயலாற்றி வருதலே நன்மை பயக்கத் தக்கது என்றும், தன்னறிவு தனக்கு காட்டிக் கொடுக்கும் வரை சற்று சங்கடம் ஏற்படினும் அதனால் கேடொன்றும் நேர்ந்து விடாதென்றும், இன்று திருக்குறளை தாம் புகழ்ந்து கூறுவதற்கும் தம்முடைய கருத்துகள் அதில் காணப்படுவதால்தானே ஒழிய, அது வள்ளுவரால் கூறப்பட்டது என்பதற்காகவோ அல்லது அதில் கூறப்பட்டுள்ளது யாவுமே பகுத்தறிவுக்கு ஏற்றது என்ற கருத்தினாலுமே அல்ல என்றும், அதில் தம் முன்னேற்றக் கருத்துக்கு ஒவ்வாதன இருப்பின் அவற்றை விலக்க தாம் எப்போதும் தயங்கப் போவதில்லை என்றும் தெரிவித்துக் கொண்டார்.
குறளும் சுயமரியாதையும்
மேலும், அவர் பேசுகையில், திருக்குறளின் மேன்மை நம் அருமை நண்பர் மாணிக்க நாயக்கர் காலத்திலேயே நமக்கு ஓர் அளவுக்குப் புலப்பட்டது என்றாலும், இன்றைய நாள் வரை அதைப்பற்றி அதிகம் பேசாமல் இருந்தமைக்குக் காரணம், நீண்ட நாள்களாகவே நம்மிடையே ஆரியத்தால் புகுத்தப்பட்டு நம் வாழ்வைக் கெடுத்துக் கொண்டு வரும் கடவுள், மதம், இவை சம்பந்தப்பட்ட மூட நம்பிக்கைகள், அறவே ஒழிக்கப்படும் வரை திருக்குறளை மக்களிடையே பரப்புவதால் பயனில்லை என்பதை தெளிவாக உணர்ந்ததன் காரணத்தினால்தான் என்றும் இன்று சுயமரியாதைப் பிரச்சாரத்தால் மூட நம்பிக்கைகளும், ஆரிய முறையும் பெருமளவுக்கு நீங்கி நாம் எடுத்துக் கூறும் சீர்திருத்தக் கருத்துகளை ஒப்புக்கொள்ளவும் அவற்றை மக்களிடையே பரப்பவும் போதுமான ஆதரவாளர்கள் ஏற்பட்டு விட்டனர். நமது பிரசாரம் வெற்றி பெற்றுவிட்டது. ஆரியம் அழியும் காலம் மிக நெருக்கத்திற்கு வந்து விட்டது என்பதை உள்ளபடி அறிந்த பிறகே அதைப் பரப்பத் துணிவு கொண்டு மாநாட்டைக் கூட்டு முயற்சியில் ஈடுபட்டதாகவும் குறிப்பிட்டார்.
குறளைக் கொண்டு வாழ்க்கையை நிர்ணயிப்போம்!
மேலும் பேசுகையில், சமுதாயத்தின் ஒழுக்கமும், நாணயமும் மிகவும் கெட்டுவிட்டதென்றும், மனிதனை மனிதன் வஞ்சித்து வாழும் கொடுமை மிகமிக மலிந்துவிட்ட தென்றும், இத்தகைய ஒழுக்கக் கேட்டிற்குக் காரணமான கடவுளும், மதமும் மாற்றப்பட்டாக வேண்டுமென்றும் தெரிவித்துக் கொண்டதோடு, காந்தியார் வணங்கிய கடவுளும், போற்றிய அகிம்சையும், சத்தியமும், மதமும் அவருக்கே பயன்படாது போய் விட்டமை காரணமாகவேணும் இவ்வுண்மை மக்களுக்குப் புலப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும் குறளை யார் எழுதியது, அவர் காலமென்ன என்ற விசாரத்தை யயல்லாம் ஆராய்ச்சி வல்லுநர்களான சரித்திரப் பேராசிரியர்களுக்கே விட்டு விட்டோம். குறளில் கூறப்பட்டுள்ள கருத்துகளை மட்டுமே கவலையோடு ஆராய்ந்து பார்த்து அவற்றின் படி நம் வாழ்க்கையை செப்பனிட்டுக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துக் கொண்டார்.
உருவக் கடவுளைக் குறிப்பிட்டாரா வள்ளுவர்?
‘கடவுள் வாழ்த்தி’ல் என்ன கூறப்பட்டுள்ளது என்று எடுத்துக் கூறுமுகத்தான் வள்ளுவர் எங்கும் உருவக் கடவுளைப் பற்றிக் குறிக்கவே இல்லை என்றும், அவர் கடவுள் வாழ்த்து என்ற அதிகாரத்தில் மனிதன் இன்னின்ன உயர்வான குணங்களைப் பெறுதல் வேண்டும் என்று மட்டுமே குறிப்பிடுகிறார் என்றும், உயர்வான மனிதத் தன்மை எதுவென்பதே அவ்வதிகாரத்தில் கூறப்பட்டிருக்கிற தென்பதையும் தெளிவாக எடுத்துக் கூறினார்.
அடுத்த அதிகாரமாகிய ‘வான் சிறப்பை’ப் பற்றிப் பேசுகையில், மக்கள் ஒழுக்க மாயிருந்தால் மழை பெய்யும் என்ற இன்றைய மதவாதிகளின் கருத்தைக் கண்டித்து வள்ளுவர் மழை பெய்தால் தான் மக்கள் கஷ்டமின்றி வாழ்தல் கூடும். கஷ்டமின்றி வாழ்தல் கூடுமானால்தான் மக்களிடையே ஒழுக்கம் நிலவ முடியும் என்று குறிப்பிட்டி ருப்பதை எடுத்துக் காட்டினார்.
திருவள்ளுவர் பெண்களைப் பற்றி ‘பெண் வழிச் சேரல்’ என்ற பகுதியில் கூறியி ருப்பது சிலரின் கண்டனத்திற்கு ஆளாகியிருப்பதைப் பற்றிக் குறிப்பிட்டு, திருவள்ளுவர் பெண்களை அய்ந்து வகையாக அதாவது தாய் தகப்பன் பாதுகாப்பில் கல்யாண மாகாமல் கன்னிகளாக இருந்துவரும் பெண்கள், கல்யாணமாகி இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டு வாழும் பெண்கள், விபச்சாரத்தைத் தொழிலாகக் கொண்டு வாழ்ந்துவரும் விலைமகள், கல்யாணம் செய்து கொள்ளாமல் தான் தோன்றித்தனமாக சுதந்தரமாக வாழ்ந்து வரும் பெண் என்று பிரித்தே பேசியிருக்கிறார் என்றும் பெண் வழிச்சேரல் என்ற பகுதியில் குறிப்பிடப் பட்டிருக்கும் பெண்டிர் கடைசியாகக் கூறப்பட்ட சுதந்தரர்கள் என்றும் அவர் வழி சேர்ந்த ஆடவர்களுக்கு கேடு சம்பவிக்கும் என்றுதான் திருவள்ளுவர் கூறியிருக்கிறாரே ஒழிய பெண்களைப் பற்றி இழுக்காக ஒரு வார்த்தை கூட திருவள்ளுவர் பேசவில்லை என்றும் குறிப்பிட்டார்.
திருவள்ளுவர் பொதுவுடைமைக்காரர்
மேலும் அவர் திருவள்ளுவர் காலம் பொது உடைமைக்காலமோ, சமதர்மக் காலமோ அல்ல. ஆனால், வள்ளுவர் சிறந்த பொது உடைமைக்காரராகவே விளங்குகிறார். அதனால்தான் நம் போற்றுதலுக்கு ஆளாகிறார் என்று குறிப்பிட்டு விட்டு இத்தகைய தனிச் சிறப்பு வாய்ந்த திருக்குறளை அனைவரும் போற்றி அதன்படி நடந்து நல்வாழ்வு வாழ வேண்டுமென்றும், நாட்டின் மூலை முடுக்குகள் தோறும்கூட திருவள்ளுவர் கழகங்கள் தோற்றுவிக்கப்பட்டு, திருக்குறள் கருத்துகள் பரப்பப்பட வேண்டுமென்றும், ஆண்டுதோறும் இது போன்ற வள்ளுவர் மாகாண மாநாடுகளும், ஒவ்வொரு ஜில்லாவிலும் தனி மாநாடும் கூட்டப்பட வேண்டும். குறள் ஆரியத்தை ஒழிக்க ஒப்பற்ற நல்லாயுதம் என்று திருக்குறள் பிரச்சாரக் குழு ஒன்று அமைக்கப்பட்டு, விரைவில் செயலாற்றத் தொடங்கும். அதற்கான ஆதரவைப் பொது மக்கள் தந்துதவ வேண்டும் என்று கூறி மாநாட்டில் கலந்து கொண்ட புலவர்களுக்கும், அறிஞர்களுக்கும், பொதுமக்களுக்கும் தம் நன்றியறிதலை தெரிவித்துக் கொண்டார்.
அண்ணாவின் நாடகம்
16.1.1949 இரவு 10 மணிக்குத் தோழர் அண்ணாதுரை அவர்கள் குழுவினரால் ‘சந்திரமோகன்’ என்கிற நாடகம் வள்ளுவர் மாநாட்டுப் பந்தலில் இனிது நடிக்கப் பெற்றது. நாடகத்தைக் காண வேண்டி மக்கள் 7.30 மணி முதற்கொண்டே வந்து குழும ஆரம்பித்து விட்டனர். 9 மணிக்குள்ளாகவே பந்தல் நிறைந்துவிட்டது. இதுவரை இம் மாதிரி பெருந்திரளான மக்களிடையே சென்னையில் நாடகம் நடைபெற்றிருக்க முடியாது என்பது வெளிப்படை. நாடகம் சுமார் 2 மணிக்கு முடிந்தது.
பெரியார் பாராட்டு
இதுவரை, இந்நாட்டில் பெருமையோடு நிலவி வருகின்ற அரசர்கள் யாவரும், தமிழ்நாட்டு மூவேந்தர் உள்பட யாவருமே சிவாஜியைப் போன்றே ஆரியத்துக்கு அடிபணிந்தே, ஆரியக் கொள்கைகளை ஆதரித்து அவற்றை பிரச்சாரம் செய்தே தம் ஆட்சியை நடத்தி வந்திருக்கின்றனர்.
இது போன்ற சீர்திருத்தக் கருத்துகளை உண்மையான சரித்திர ஆதாரங்களோடு எடுத்துக்காட்டப்படும் நடிப்புகளைப் பெரிதும் ஆதரிக்க வேண்டுமென்றும் புராணப் புரட்டுகளை மறைத்துக் காட்டும், புராண சம்பந்தமான நடிப்புகளை ஆதரிக்கக் கூடாதென்றும் பெரியார் தெரிவித்துக் கொண்டார்.
பிறகு பேசிய அண்ணாதுரை அவர்கள்,
நாடகத்தில் தம்முடன் சேர்ந்து நடித்த மற்ற தோழர்களுக்கும், நாடகத்திற்கு வந்து கவுரவித்த பொதுமக்களுக்கும் நன்றி கூறினார். தம்மால் எழுதப் பெற்று நடிக்கப்பட்ட ‘சந்திரமோகன்’ என்கின்ற நாடகத்தில் காணப்படும் நிகழ்ச்சிகள் யாவும் சரித்திர ஆதாரம் கொண்டதே என்பதற்கு ஆதாரமாக 15.1.1949 இண்டியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் பண்டிதர் நீலகண்ட சாஸ்திரியார் அவர்கள் எழுதியுள்ள கட்டுரையில் சிவாஜி சூத்திரன் என்ற காரணத்தால் முடி சூடத் தகுதியற்றவன் என்று கூறப்பட்டது, பிறகு காசி காகப்பட்டர் அவர்களால் ஓமத்தின் மூலமும், பிராமணர்களுக்கு சமராதனை செய்யப்பட்டதன் மூலமும் சுத்தியடையச் செய்து சத்திரியனாக்கப்பட்டு முடிசூட்டப் பெற்றான் என்பது, இந்தியாவின் பல பாகங்களில் இருந்தும் ஒரு லட்சம் பார்ப்பனர்கள் தம் மனைவி மக்களோடு சிவாஜியின் நாட்டை வந்தடைந்து நான்கு மாதங்கள் உண்டு களித்தது ஆகியன கூறப்பட்டிருப்பதை எடுத்துக் காட்டி, இந் நாடகத்தைத் தடை செய்ய நினைக்கும் இன்றைய மாகாண அமைச்சர்கள் இதைக் கண்டேனும் தெளிவு பெற வேண்டும் என்று எடுத்துக் கூறினார்.
பிறகு நடிகர் டி.கே.சண்முகம் அவர்கள் உரையாற்றினார்.
இறுதியாக தோழர் க. அன்பழகன் நன்றி கூறினார். மாநாடு நள்ளிரவு 2.30 மணிக்கு முடிவுற்றது.