Friday, October 17, 2014

பெரியார் - தமிழ்த் தேசத் தந்தை - 1

பெரியார் - தமிழ்த் தேசத் தந்தை - 1


தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழில் தொடர்ச்சியாக ஐந்து மாதங்களாக, மயிலாடுதுரை பேராசிரியர் செயராமன் அவர்கள் இனவியல்: ஆரியர்-திராவிடர்-தமிழர் என்ற தலைப்பில் தொடர் கட்டுரை எழுதினார் அதில், இந்திய அரசியலில் செயற்படு சக்திகளாக விளங்கிவரும் ஆரியர், திராவிடர், தமிழர் குறித்த கோட்பாடுகள் மற்றும் வரையறைகளை வரலாற்றியல் துணை யுடன் அளிக்கும் முயற்சியே இக்கட்டுரை என்கிறார்.
பிறகு அவர் சொல்கிறார், 20 ஆம் நூற்றாண்டில், தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகிய நிலப்பகுதிகளை இணைத்து ஒரு விடுதலை பெற்ற தேசத்தை உருவாக்கி விட தமிழகத் தலைவர்கள் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோர் இயங்கினர். குறைபாடுள்ள அக்கோரிக்கை தமிழகத்தின் கோரிக்கையாக மட்டுமே இருந்து வந்தது .
பேராசிரியர் செயராமன் கூறும் வரலாற்றியல் துணை என்பது தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகிய நிலப்பகுதிகளை இணைத்த ஒரு விடுதலை பெற்ற தேசத்தை உருவாக்கிட தந்தை பெரியார் இயங்கினார் என்பது. பெரியார் எப்போதாவது இந்த வகையான பரப்பளவைப் பற்றி கூறியிருக்கிறாரா? பெரியாரிடமிருந்து பிரிந்து வந்த பிறகு அறிஞர் அண்ணா கூறிக் கொண்டிருந்ததை பெரியார் கூறி வந்தார் என்று கூறுவதுதான் வரலாற்றியல் துணையா?
திராவிட நாடு பிரிவினை விளக்கம் என்ற தலைப்பில் பெரியார் அவர்கள் பேசிய பேச்சு குடியரசு 2.12.1944 இதழில் வெளிவந்திருக்கிறது. அதில் பெரியார் அவர்கள்,
மற்றொரு விஷயத்தை இங்கு மறுபடியும் தெளிவுபடுத்த ஆசைப்படுகிறேன் என்று தொடங்கி, திராவிட நாடு என்பது ஒரு பொருளாதார சமுதாய சீர்திருத்தப் பிரச்சனையே ஒழிய அது ஒரு அரசியல் பிரச்சனை அல்ல. தீண்டாமை ஒழிய வேண்டும் என்பது போலவே சுரண்டல் ஒழிய வேண்டும் என்கிறோம். அந்நியனுக்கு நம் நாடு சந்தை யாய் இருக்கப்படக் கூடாது என்பது போலவே, அந்நிய மாகாணத்தானுக்கு நம் நாடு சந்தையாய் இருக்கக் கூடாது என்கிறோம். வாழ்க்கையில் பகுத்தறிவுவாதியாய், சீர்திருத்தவாதியாய் இருப்பது போலவே மதத்தில் பகுத்தறிவுவாதியாய், சீர்திருத்தவாதியாய் இருக்க வேண்டும் என்கிறோம். இவைகளில் அரசியல் என்ன இருக்கிறது? நம் அரசியல் நம் நாட்டைப் பொறுத்ததாக மட்டும், நம் நாட்டு மக்களைப் பொறுத்ததாக மட்டும் இருக்க வேண்டும் என்கிறோம். நம் திராவிடப் பிரச்சனையில் பிரிட்டிஷ் அரசாங்கம் இருப்பதா போவதா என்கின்ற பிரச்சனையோ பிரிட்டனுக்கு எவ்வளவு உரிமை, நமக்கு எப்படிப்பட்ட உரிமை என்கின்ற பேச்சோ கூட கிடையாது. அவை முதலியவை தனிப்பட்ட வேறு விஷயமாகும். அது திராவிட நாடு பெற்றதும் கிளம்பும் அந்நியர் ஆதிக்கமும், அந்நியர் தயவு, உதவியும் கூட தேவையில்லாமலும் தனித்து இயங்க நாம் வேறு முயற்சி செய்வோம். அதை வேண்டுமானால் அரசியல் என்று சொல்லிக் கொள்ளட்டும். அதுவும் பிரிட்டிஷ் ஆதிக்கம் மாத்திரம் கூடாது என்பதோடு நம் அரசியல் தீர்ந்து விடாது. பிரிட்டன், அமெரிக்கன், ஜெர்மனியன், ஜப்பானியன், ஆர்ய வர்த்தம், காந்தி நேரு கம்பெனி ஆதிக்கம் முதலிய ஒன்றுமே இல்லாத நம் (திராவிடர் ) ஆதிக்கமே இருக்க வேண்டும் என்பது நம் அரசியலாகும். நாம் கேட்கும் திராவிட நாடு, நம்மை இப்படிப்பட்ட சுதந்திரத்துக்கு, முழு முழு சுயேச்சைக்குக் கொண்டு போய் விடும். ஆதலால், திராவிட நாடு பிரிவினை இன்று அரசியலாகாது. திராவிட நாடு பிரிவினை என்று நாம் என்ன சொல்லுகிறோம் என்றால், சென்னை மாகாணம் தான் இன்று திராவிட நாட்டு விஸ்தீரண அளவு, மற்ற மாகாணத்தான் திராவிட நாட்டிற்குள் காலடி வைப்பதனால் அனுமதி சீட்டு, பாஸ்போர்ட்டு வாங்கிக் கொண்டு வர வேண்டும், மற்ற மாகாண சரக்கு சுங்கம் கொடுத்து விட்டு அதுவும் நாம் அனுமதித்தால்தான் திராவிட நாட்டிற்குள் வர வேண்டும், விஸ்தீரணம் கூடுவதும் குறைவதும் நம் நாட்டின் சவுகரியத்தையும் இஷ்டத்தையும் பொருத்தது
என்றெல்லாம் குறிப்பிட்ட பெரியார் அவர்கள், மீண்டும் கூறுகிறார்,
முஸ்லிம்கள், ஆதிதிராவிடர்கள், கிறித்துவர்கள், பவுத்தர்கள் ஆகியவர்கள் அவர்களும் திராவிடர்களே ஆனதால் அவரவர்கள் சமயம், ஆத்மார்த்தம் என்பவற்றின் உணர்ச்சி இன்றுள்ளது போலவே அவரவர்கள் இஷ்டப்படி இருக்கும். ஆரியர்கள் நிலையும் அது போலவே மற்றவர்களுக்கு, நட்டமும், கேடும், இழிவும் இருப்பதற்கு இல்லாத நிலையில் சம உரிமையோடிருக்கும்.
1944 இல் சேலம் மாநாட்டில் தென்னிந்திய நல உரிமை கட்சி பெயர் திராவிடர் கழகமாக பெயர் மாற்றம் செய்யப்பட்ட பிறகு மேற்கண்ட விளக்கத்தை பெரியார் கூறியுள்ளார். திராவிட நாடு என்பது ஒரு பொருளாதார சமுதாய சீர்திருத்தப் பிரச்சனை என்றும், ஆங்கிலேயர் மட்டுமல்ல எந்த சக்திகளின் ஆதிக்கமும் இருக்கக் கூடாது என்பதையும் சென்னை மகாணம் தான் இன்று திராவிட நாட்டு விஸ்தீரண அளவு என்பதையும் என்றும் தெளிவாகக் குறிப்பிடுகிறார். ஆனால் பேராசிரியர் செயராமன் வரலாற்றியல் துணையுடன் இக் கட்டுரை என்று தொடங்கி புராணக் கதைகளையும் ஆரியர் சார்பான நூலாசிரியர்களின் நூல்களையும் சான்றாகக் கொண்டு எழுதியுள்ளார்.
திராவிட நாடு என்பதை பற்றி 1944 இலிலேயே சர்ச்சைகளை கிளப்பி விட்டவர்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில், பெரியார் அவர்கள் குடியரசு தலையங்கம் 25.11.1944 இல்,
திராவிட நாடு என்பது பற்றி பலர் பலவிதமான குறை கூறுகிறார்கள். நம்மவர்கள் என்று சொல்லிக் கொண்டும் சிலர் குறை கூறுகிறார்கள். அதில் சிலர் அறியாமல் சொல்லலாம். சிலர் யோக்கிய பொறுப்பில்லாமல் விஷமத்தனத்துக்கு ஆகவும் சொல்லுகிறார்கள். அவர்களைப் பற்றி கவலைப்பட வேண்டிய காலம் தீர்ந்து விட்டது
என்று கூறிய பெரியார் மெயில் நாளிதழின் தலையங்கத்தை,
திராவிட நாடு என்பது பூரண சுயேட்சை கேட்பதாகும். அதில் சிறிது குறைந்தாலும் ஒப்புக் கொள்ள முடியாத மாதிரி அந்தப் பிரச்சனை ஏற்பட்டுவிட்டது. பாகிஸ்தான் விஷயத்தில் தோழர் ஜின்னா அவர்கள் சற்று இறங்கினாலும் இறங்கலாம். ஆனால் தோழர் இராமசாமி சிறிதும் விட்டுக் கொடுக்க மாட்டார் என்றும் ஆந்திராக் காரர்கள் இதை ஒப்புக் கொள்ளுகிறார்களா என்று யாராவது கேட்டால் அவர்களும் திராவிடர்களே யாதலால் அவர்களுக்கு ஆகவும்தான் நான் திராவிட நாடு கேட்கின்றேன் என்றும் பதில் சொல்லி அடக்கிவிடுகிறார் என்றும் எல்லை புரியவில்லை, விஷயம் புரியவில்லை என்று சொல்லுகிறவர்களுக்கும் தோழர் இராமசாமி சென்னை மகாணத்தை அதன் எல்லை வரம்புக் கோட்டிற்கு உட்பட்ட பாகத்தைத் திராவிட நாடு என்றும் அதன் திட்டம் அதன் சம்பந்தமாக கவர்னர், கவர்னர் ஜெனரல், மத்திய அரசாங்கத்தார் ஆகியவர்கள் சம்மந்தமில்லாமல் இங்கிலாந்தில் உள்ள அரசரின் பிரதிநிதிகள் கவனிப்பதில் இருக்குமென்றும் சொல்லிவிட்டார்
என்றும் மெயில் எழுதியுள்ளதை சுட்டிக் காட்டுகிறார். 1939 ஆம் ஆண்டு தூத்துக்குடியில் திராவிட நாடு பற்றி பேசியதை கேலி செய்து 1939 நவம்பர் 20 ஆம் நாள் எழுதிய மெயில் இப்போது திராவிட நாடு கோரிக்கையை நியாயப் படுத்தி எழுதியதற்காகத் தான் மேற்கோள் காட்டுவதாகவும் பெரியார் குறிப்பிடுகிறார்.
மேலும் தினசரி என்னும் நாளிதழ் எழுதிய 'எதற்காக திராவிடஸ்தான்' என்னும் தலையங்கத்தை மேற்கோள் காட்டுகிறார் பெரியார்.
அதில், திராவிடஸ்தான் கேட்பதை கேலி செய்யக் கூடாது என்று மதராஸ் மெயில் உபதேசம் செய்கிறது. ... நாய்க்கர் குறிப்பிடும் (திராவிடஸ்தான் எல்லைப்) பிரதேசங்கள் தமிழ்நாடு, ஆந்திரா, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு நாடுகளும் சேர்ந்திருக்கினறன. அந்த நாட்டார் திராவிடஸ்தான் ஆதரிக்கிறார்களா என்று கேட்கிறது
(அப்பாடா! வரலாற்றியல் துணை பேராசிரியர் செயராமனுக்குக் கிடைத்து விட்டது. - கவி)
அதற்கு பதில் மெயிலிலேயே இருக்கிறது. அதாவது அந்த நாட்டாரும் திராவிடர்களேயாதலால் திராவிடர்களுக்காக கேட்கப்படும் காரியங்களுக்கு திராவிடர்கள் எல்லோருமே சேர்ந்து கேட்க வேண்டும் என்பது ஏமாற்றுவதற்காக சொல்லப்படும் காரணமாகுமே தவிர அதில் நியாயம் இருக்க முடியாதென்பதாகும். முஸ்லிம்களுக்காக பாகிஸ்தான் எல்லா முஸ்லிம்களும் சேர்ந்து கேட்கவில்லையே என்று சொன்ன காந்தியார் ஜின்னா சாயுபு வீட்டிற்கு ஏன் போனார். எல்லோரும் சேர்ந்து கேட்டால்தான் ஒப்புவோம் என்று சொன்ன ஆச்சாரியார் தானாகவே தனிமையாகவே ஜின்னா சாயுபு வீட்டிற்கு ஏன் போனார்? ஒரு சமுதாயத்துக்கோ, ஒரு நாட்டுக்கோ நலனைத் தேட ஒரு மனிதன் முயற்சித்தால் அது எந்த சட்டப்படியும் தப்பாகி விடாது. அந்த நாட்டை அந்த இனத்தைச் சேர்ந்த எந்த தனி மனிதனுக்கும் உரிமையுண்டு.
அன்றியும் எல்லோரும் எப்படிக் கேட்க முடியும்? முதலாவது இந்த திராவிடர்கள் 100- க்கு 90 பேர் எழுத்து வாசனை அற்ற தற்குறிகள். இரண்டாவது 100-க்கு 90 பேர்கள் தங்கள் இனத்தின் பிறப்பு, வளர்ப்பு அறியாதவர்களும், அல்லாததையும், இல்லாததையும் தங்களுடையதென்று கருதிக் கொண்டிருக்கிற பகுத்தறிவு இல்லாத மூட நம்பிக்கை மக்களும் ஆவார்கள். இந்த இலட்சணத்தில் இவர்களில் 100-க்கு 80 பேர் சுயநலத்திற்கு எதையும் விட்டுவிடும்படி பயிற்றுவிக்கப்பட்டவர்கள். இவர்கள் யாவரும் சேர்ந்து அல்லது மெஜாரிட்டியார் சேர்ந்து ஒரு நல்ல நேரான காரியம் செய்வதென்றால், அமாவாசையன்று சந்திரகிரகணம் இருக்க வேண்டும் என்று கோருவது போலவேயாகும்?
இவ்வளவு தர்க்கம் ஏன்? எந்த ஆந்திரா, கர்னாடகா, மலையாள மக்களாவது இந்த 5 வருஷ காலத்தில் வெளியில் வந்து எங்களுக்குத் திராவிட நாடு வேண்டாம் என்று சொன்னார்களா? அன்றியும் ஜஸ்டிஸ் கட்சி என்பது சென்னை மாகாணத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு நாட்டின் பிரதிநிதித்துவம் வாய்ந்தது என்பதை தினசரியோ மற்றவர்களோ மறுக்கிறார்களா?
என்றும் எதிர் கேள்வி கேட்ட பெரியாருக்கு இதுவரை எவரும் விடையளிக்கவில்லை.
திராவிடர் கழகத் தொண்டு என்னும் தலைப்பில் குடியரசு 7.10.1944 இதழில் தலையங்கம் எழுதிய பெரியார்,
மற்றொரு மகிழ்ச்சிக்கு உரிய சேதி என்னவென்றால் சேலம் தீர்மானத்தை பற்றி நம் எதிரிகளும், நம் துரோகிகளும் செய்த விஷமப் பிரசாரத்தின் பயனாய் அவற்றைப் பத்திரிகைகளில் கண்ட வெளி மாகாணத்தார் பஞ்சாப், லக்னோ முதலிய மாகாணங்களில் உள்ள சில தோழர்களால் தங்கள் மாகாணங்களுக்கும் வந்து கழகங்கள் அமைக்கும்படியும் திராவிடர் கழகத்தோடு சேர்த்துக் கொள்ளும்படியும் வேண்டிக் கொண்டிருக்கிறார்கள்.
திருவாங்கூர், கொச்சி முதலிய சமஸ்தானங்களிலிருந்தும் தாங்களும் திராவிடர்கள் என்றும் தங்களையும் சேர்த்துக் கொண்டு வேலை செய்ய வேண்டுமென்றும் கேட்டுக் கடிதங்கள் வந்திருப்பதாகவும் தெரிகிறது.
டாக்டர் அம்பேத்கர் அவர்கள் மத்திய மகாணத்தையும் மகாராஷ்டரர் உள்ள மற்ற பாகத்தையும் சேர்த்துக் கொண்டால் நலமாக இருக்குமென்றும் அவர்கள் தயாராய் இருக்கிறார்கள் என்றும் தெரிவித்தது வாசகர்கள் அறிந்ததேயாகும்.
அய்க்கிய மாகாண டாக்டர் மூஞ்சே அவர்கள் திராவிடர் கழகத்தின் சமயம், சமுதாயம் ஆகியவை சம்பந்தமான எல்லாத் தீர்மானங்களையும் ஏற்றுக் கொள்வதாகவும், வேண்டுமானால் இந்து மகாசபை மகாநாட்டில் வைத்து ஏற்றுக் கொள்ளச் செய்வதாகவும் இந்தியா பூராவுக்கும் திராவிடர் கழகம் வேலை செய்ய தாம் ஒத்துழைப்பதாகவும் கூறி இருக்கிறதும் குறிப்பிடத் தக்கதாகும்.
இவைகளையயல்லாம் விட மற்றொரு அதிசயம் என்னவென்றால் தோழர் எம்.என்.ராய் அவர்கள் சுமார் 2 வருஷங்களுக்கு முன்பாகவே திராவிடர் கழக சமய சமுதாய தீர்மானங்களைப் பாராட்டி ஏற்று தனது கட்சியுடன் இக் கொள்கைகளையும் திராவிட நாடு பிரிவினையையும் சேர்த்துக் கொண்டு வேலை செய்கிறேன் என்றும் சொன்னதோடு, பல இடங்களில் அந்தப்படி செய்தும் இருக்கிறார். ஆகவே நமது கட்சி நமது கொள்கை நமது திட்டம் ஆகியவைகள் இன்று எல்லா இந்தியாவிலுள்ள மற்ற முக்கிய கட்சிகள் கவனிக்கவும், பின்பற்றவும், பங்கு கொள்ள ஆசைப்படவும் செய்திருக்கிறது என்பதற்கு இது போதுமான ஆதாரங்களாகும்.
பெரியார் மேற்கூறிய செய்திகளை கூர்ந்து நோக்கும்போது, இப்போது பேராசிரியர் செயராமன், பெ.மணியரசன், பெங்களுர் குணா போன்றவர்கள் கிளப்புகின்ற சர்ச்சைகளெல்லாம் ஏற்கனவே இவர்களின் முன்னோடிகள் எடுத்த வாந்திகள் தான் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
1913 இல் தொடங்கி ஆந்திரர்கள் தனி மகாணம் கேட்டு வந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களிடையே தெலுங்கானா போராட்டமும் அப்போதும் நடந்தது. இப்போதும் தொடர்கிறது. எனவே எல்லாத் தெலுங்கர்களும் ஆந்திர மாகாணம் கேட்க வில்லை என்று இவர்கள் வாதாடுவார்களா? இன்றும் தமிழர்களில் பெரும் பான்மையோர் ஆங்கில வழிப் பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பதும், தமிழ்ப் புத்தாண்டாக சித்திரைப் புத்தாண்டாகக் கொண்டாடுவதையும் கருத்தில் கொண்டு இவர்கள் (மணியரசன் கும்பல்கள்) தமிழர்கள் தமிழ் வழிக் கல்வியையும் தைப் புத்தாண்டையும் விரும்பவில்லை என்று வாதாடுவார்களா?
தமிழர் திருமணங்கள் பார்ப்பனர்கள் கொண்டும் வடமொழி மந்திரங்கள் கொண்டும் நடைபெறுவதை இவர்கள் இதுதான் தமிழர்கள் எல்லாரும் விரும்புகிறார்கள். தமிழ்முறை திருமணங்களுக்கு தமிழர்கள் விரும்பவில்லை என்று கூறுவார்களா?
காவிரிப் பிரச்சனைப் போராட்டங்களுக்கு காவிரி டெல்டா மாவட்ட மக்கள் மட்டுமே போராடுகிறார்கள் என்றும் முல்லைப் பெரியாறு போராட்டங்களுக்கு தென்மாவட்ட மக்கள் மட்டுமே போராடுகிறார்கள் என்றும் தமிழகத்தில் உள்ள எல்லாத் தமிழர்களும் போராட வில்லையென்றும் இவர்கள் வாதாடுகிறார்களா?
இப்பொழுது கூட அணு உலையை எதிர்த்து கூடங்குளம் மக்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாகப் போராடி வருகிறார்கள். கடந்த 9 மாதங்களாக தங்களது போராட்டத்தைத் தீவிரப்படுத்தி வருகிறார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தைத் தாண்டி அப்போராட்டத்தை தமிழ் மக்கள் நடத்தவில்லையே? அப்படியயன்றால் அணுஉலை எதிர்ப்புப் போராட்டத்திற்கு மக்களிடம் ஆதரவில்லை என்று கூறி தோழர் மணியரசன் போன்றவர்கள் அணுஉலையை ஆதரிப்பார்களா?

(தொடரும்)