வைகோ 1999 இல் எழுதிய ஈழ வரலாறு - பகுதி -2
சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி
1951 ஆம் ஆண்டு அய்க்கிய தேசியக் கட்சியிலிருந்து சாலமன் பண்டார நாயகா விலகி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைத் தொடங்கினார். தொடக்கத்தில் சிங்களமும் தமிழும் ஆட்சி மொழியாக்கப்படுமென்று அறிவித்தார்.
ஆனால், பின்னர் சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி என்று கொள்கையை மாற்றிக் கொண்டார். இதன் எதிரொலியாக அய்க்கிய தேசியக் கட்சியும் அதுவரை கொண்டிருந்த நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி எனத் தீர்மானித்தது.
உண்ணாவிரத அறப்போர்
1956 இல் நடைபெற்ற தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி வெற்றி பெற்றது ‡ சாலமன் பண்டார நாயகா பிரதமரானார். 1956 ஜுன் 5 ஆம் நாள் தமிழர்களுக்குக் கொடும் தீங்கினைத் தந்த நாளாகும். அன்றுதான் ‘சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி’ என்ற தீர்மானம் இலங்கை நாடாளு மன்றத்தில் வைக்கப்பட்டது.
தமிழ்த் தலைவர்களும், தமிழ் மக்களும் அதனை எதிர்த்து உண்ணாவிரத அறப்போர் நடத்தினர்-சிங்களவர்களால் தாக்கப்பட்டனர். நாடாளுமன்றத்தில் தந்தை செல்வா கடுமையாக எதிர்த்துப் போராடினார்.
சூன் 14 ஆம் நாள் வாக்கெடுப்பு நடந்த போது தமிழ் உறுப்பினர்கள் அனைவரும் எதிர்த்து வாக்களித்தனர். ஆனால் சட்டம் நிறைவேறியது.
பண்டாரநாயாகா- செல்வா ஒப்பந்தம் (1957)
தமிழர்களுக்கும், சிங்களவர்களுக்கும் இடையில் கருத்து மோதலும், கசப்புணர்வும் கடுமையாக வளர்ந்தன. தமிழர்கள் தாக்குதலுக்கும், கொடுமைக்கும் ஆளானார்கள். நிலைமை மோசமாகாமல் தடுக்கக் கருதிய பண்டார நாயகா, செல்வாவுடன் பேச்சு நடத்தினார். 1957 இல் பண்டார நாயகா - செல்வா ஒப்பந்தம் உருவானது. இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து அய்க்கிய தேசியக் கட்சி போராட்டம் நடத்தியது. கண்டி வரை ஜெயவர்த்தனா எதிர்ப்பு யாத்திரை நடத்தினார்.
(இதே ஜெயவர்த்தனாதான் உலகின் கண்களில் மண்ணைத் தூவி இந்திய அரசையும் வஞ்சகமாக ஏமாற்றி 87 ஆம் ஆண்டில் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டார்).
1957 ஒப்பந்தத்தில் ஓரளவு தமிழர்களுக்கு நீதி கிடைக்க வழி அமைந்திருந்தது. வடக்கு - கிழக்கு மாகாணங்களைத் தமிழர்களே ஆளும் மாநில அவைகளுக்கு இடமளிக்கப்பட்டது. தமிழ் ஆட்சி மொழியாக ஒப்புக் கொள்ளப்பட்டது. ஆனால், சிங்கள வெறியர்களும், புத்த பிக்குகளும் எதிர்த்ததால் ஒப்பந்தத்தை பண்டாரநாயகா கிழித்துக் குப்பைத் தொட்டியில் போட்டார். தமிழர் வாழ்வில் இருள் சூழ்ந்தது. தமிழர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டனர்.
சாஸ்திரி - சிரிமாவோ ஒப்பந்தம் (1964)
1959 ஆம் ஆண்டு புத்த பிக்கு ஒருவரால் சாலமன் பண்டாரநாயகா சுட்டுக் கொல்லப்பட்டார் - அவரது மனைவி சிரிமாவோ பண்டார நாயகா பிரதமரானார்.
சிங்கள அரசியலில் பெரும் மாறுதல் ஏற்பட்டது. 1962 இல் செஞ்சீனா இந்தியாவின் மீது ஆக்கிரமிப்புப் படையயடுத்தது. அதன் பின்னர் எழுந்த அரசியல் நெருக்கடியின் காரணமாக அண்டை நாடான இலங்கையின் நட்புறவை இந்தியா நாடியது.
1964 இல் நேரு மறைந்த பின்னர் பிரதமரான லால் பகதூர் சாஸ்திரி, சிரிமாவோ பண்டார நாயகாவுடன் ஓர் ஒப்பந்தம் ஏற்படுத்தினார். அது ‘சாஸ்திரி-சிரிமாவோ ஒப்பந்தம்’ என்று அழைக்கப்பட்டது.
அதன்படி 100 ஆண்டுகளுக்கு மேல் இரத்தத்தை வியர்வையாகக் கொட்டி இலங்கையை செல்வபுரியாக்கிய தோட்டத் தொழிலாளர்களாகிய இந்திய வம்சாவளித் தமிழர்களுக்குக் குடியுரிமை யைப் பெற்றுத் தர வேண்டிய கடமையைச் செய்யாது, அகதிகளாக அவர்களை இந்தியா ஏற்றுக் கொள்ளும் அநீதிக்கு இந்த ஒப்பந்தம் காரணமாயிற்று. (தமிழ் ஈழத்திலிருந்து வந்து தற்போது தமிழ்நாட்டின் அகதிகள் முகாம்களில் உள்ள தமிழர்கள் இலங்கையின் பூர்வீகத் தமிழ்க் குடிமக்கள் ஆவர். அவர்களும் 1964 சாஸ்திரி - சிரிமாவோ ஒப்பந்தத்தில் சொல்லப்பட்டுள்ள தமிழர்களும் ஒரே பிரிவினர் அல்லர்).
டட்லி - செல்வா ஒப்பந்தம் (1970)
அதற்குப் பின்னர் 1965 ஆம் ஆண்டில் இலங்கையில் நடைபெற்ற தேர்தலில் அய்க்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்றது ‡ டட்லி சேனநாயகா பிரதமரானார். அவரும் தந்தை செல்வாவோடு ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தினார். அந்த ஒப்பந்தமும் நிறைவேற்றப்படவில்லை - தமிழர்கள் வஞ்சிக்கப்பட்டனர்.
மீண்டும் 1970 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பெரும்பான்மையாக வெற்றி பெற்றது. சிரிமாவோ பண்டார நாயகா பிரதமரானார்.
சிங்களக் காவல் துறையினரும், இராணுவமும் தமிழர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தினர். 1974 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டிலேயே தாக்குதல் நடத்தி தமிழர்களைச் சுட்டுக் கொன்றனர். தமிழர் வாழ்வு துன்பக் கடலாயிற்று. சுயாட்சி அதிகாரத்தைப் பெற்றுக் கூட்டாட்சியில் இணைந்து வாழலாம் என்ற நம்பிக்கை தகர்ந்தது.
தனி ஆட்சியே குறிக்கோள்
தங்கள் கண்ணெதிரே பெற்ற தாயும், உடன் பிறந்தோரும், பச்சிளம் குழந்தைகளும் சிங்களக் காடையரால் கொல்லப்படும் கொடுமையை எதிர்த்து ஈழத்துத் தமிழ் இளைஞர்கள் உரிமை காக்கவும், மானத்தோடு வாழவும் ஆயுதப் போராட்டம் ஒன்றே மார்க்கமென்ற முடிவுக்குத் தள்ளப் பட்டனர்.
1975 பிப்ரவரியில் காங்கேசன் துறை இடைத் தேர்தல் நடைபெற்றது. தமிழ் ஈழ மக்கள் தனி ஆட்சி உரிமையையே விரும்புகின்றார்கள் என்ற குறிக்கோளை முன் வைத்து தந்தை செல்வா சிங்களக் கட்சிகளைத் தோற்கடித்தார்.
வெற்றி பெற்ற தந்தை செல்வா தேசிய அரசு பேரவைக்குச் சென்றார். அந்தப் பேரவையில் 1976 ஆம் ஆண்டு பிப்ரவரி 4 ஆம் நாள் தந்தை செல்வாவும் 12 பேரவை உறுப்பினர்களும் முன்மொழிந்த தீர்மானம் தமிழீழ வரலாற்றில் ஒரு திருப்பு முனையாகும்.
‘இலங்கையின் இரு வேறு நாட்டினங்களான சிங்களவரும், தமிழரும் சுயநிர்ணய உரிமையுடையவர்களாதலின் ;
அந்நிய ஆட்சியால் பிணைக்கப்பட்ட சிங்கள நாட்டினமும் தமிழ் நாட்டினமும் இன்று வரை பிணைக்கப்பட்டள்ளமையால், சுதந்திர இலங்கையின் அரசுகள் அனைத்தும், சிங்கள நாட்டினத்தினை ஆக்கிர மிப்பு நாட்டினமாக ஊக்குவித்து வளர்த்து அதன் பயனாக இப்போதுள்ள அரசியலமைப்பு ஒரு தலைப்பட்சமாகத் திணிக்கப்பட்டுத் தமிழ் நாட்டினம் ஆளப்படும் நாட்டினமாக்கப்பட்டுள்ளமையால்,
காங்கேசன் துறை இடைத்தேர்தலில் மக்களால் வழங்கப்பட்ட தீர்ப்பை, விடுதலை பெற்ற இனமுடைய மதச்சார்பற்ற சமதர்ம நாடான தமிழ் ஈழத்தை அமைப்பதற்குரிய ஆற்றலுரிமையாக ஏற்றுக் கொள்வதென இப்பேரவை தீர்மானிக்கிறது’ என்ற அத் தீர்மானம் எவ்வளவு நுட்பமும் திட்பமும் கொண்டது.
வட்டுக்கோட்டைத் தீர்மானம் (1976)
1976 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் வைர எழுத்துகளால் பொறிக்கப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை வழங்கிய ஆண்டாகும். மே 14 ஆம் நாள் தமிழர் விடுதலைக் கூட்டணியின் முதலாவது மாநாடு வட்டுக்கோட்டைத் தேர்தல் தொகுதியில் உள்ள பண்ணாகம் என்ற ஊரில் நடைபெற்றது. இங்கிலாந்து வரலாற்றில் ஒரு ‘மேக்னா கார்ட்டா’வைப் போல் தமிழ் ஈழ வரலாற்றில் புகழ்பெற்ற வட்டுக்கோட்டைத் தீர்மானம் இங்குதான் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்தை அப்படியே தருகின்றேன்.
சரித்திரத்திற்கு முற்பட்ட காலம் முதல் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வளவை நதியிலிருந்து சிலாபம் வரைக்கும், தெற்கு மேற்கு பகுதிகளிலும், மத்திய பிரதேசத்திலும் சிங்கள மக்களும், வடக்கு கிழக்கு பிரதேசங்களில் தமிழ் மக்களும் வாழ்ந்து இந்நாட்டின் ஆளுகையைச் சிங்களத் தேசிய இனமும், தமிழ்த்தேசிய இனமும் நமக்குள் பகிர்ந்து வந்தபடியாலும்,
சிங்கள இராச்சியங்களோடு தொடர்பற்ற வகையில் 1619 ஆம் ஆண்டு போர்த்துக்கீசியரால் தமிழ் இராச்சியம் யுத்த காலத்தில் தோற்கடிக்கப்பட்டுக் கைப்பற்றப்பட்டு, அவர்களிடமிருந்து ஒல்லாந்தராலும், பின் ஆங்கிலேயராலும் அதே விதமாக வெற்றி கொள்ளப்பட்டபடியாலும்,
சிங்கள இராச்சியங்களின் பிரதேசங்களையும், தமிழ் இராச்சியத்தின் பிரதேசங்களையும் வேறு வேறாக ஆட்சி செய்து வந்த ஆங்கில ஏகாதிபத்தியவாதிகள் 1933 ஆம் ஆண்டில் கோல்புருக் ஆணைக்குழுவின் சிபாரிசுப்படி தம் நிர்வாக வசதி கருதி வலுக்கட்டாயமாக இப்பிரதேசங்களை ஒன்றாக இணைத்தப்படியாலும்,
ஏகாதிபத்திய ஆட்சியிருந்து இலங்கையை விடுவிப்பதற்கான விடுதலைக் கிளர்ச்சியில் தமிழ்த் தலைவர்கள் முன்னோடிகளாக உழைத்து இறுதியில் 1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரமடைந்தபடியாலும், மேற்கூறப்பட்ட சரித்திர உண்மைகள் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டு, எண்ணிக்கையில் பெரும்பான்மையினர் என்ற அடிப்படையில் முழு நாட்டின் மீதுமான அரசியல் அதிகாரம் சிங்களத் தேசிய இனத்தின் கைக்கு மாற்றப்பட்டு அதனால் தமிழ்த்தேசிய இனம் அடிமை இனமாகத் தாழ்த்தப்பட்ட படியாலும்,
சுதந்திரம் பெற்ற நாள் முதல் ஆட்சிக்கு வந்த சிங்கள அரசாங்கங்கள் எல்லாம், சிங்கள மக்களின் தீவிர இனவாதத்தைத் தூண்டி வளர்த்துத் தம் அரசியல் அதிகாரத்தைத் தமிழ் மக்களுக்குப் பாதகமாக :
1. தமிழ் மக்களின் அரைப் பங்கினரின் குடியுரிமை, வாக்குரிமைகளைப் பறித்து அதனால் பாராளுமன்றத்தில் தமிழரின் பிரதிநிதித்துவத்தைக் குறைப்பதற்கும்,
2. திட்டமிட்டு அரசாங்க உதவியுடன் நடத்தப்பட்ட சிங்களக் குடியேற்றங் களாலும், இரகசியமாக ஊக்குவிடப்பட்ட சிங்களக் கள்ளக் குடியேற்றங் களைச் சட்டபூர்வமாக அங்கீகரித்தாலும், பண்டைய தமிழ் இராச்சியத்தின் பிரதேசங்களில் சிங்கள மக்களை நுழைத்து, தமிழரைத் தம் சொந்தத் தாயகத்திலேயே சிறுபான்மையிராக்குவதற்கும்,
3. இலங்கை முழுவதும் சிங்களம் மாத்திரமே ஆட்சி மொழியாக்கி, தமிழர் மீதும், தமிழ் மொழி மீதும் தாழ்வு முத்திரையைப் பொறிப்பதற்கும்,
4. குடியரசு அரசியல் அமைப்பில் பெளத்த மதத்திற்கு முதன்மையான இடத்தை அளித்து, இந்நாட்டில் இந்து, கிறித்துவ, இஸ்லாமிய மக்களை இரண்டாந் தரத்திற்குத் தாழ்த்துவதற்கும்
5. கல்வி, தொழில், வேலை வாய்ப்பு, நிலப்பங்கீடு, பொருளாதார வாழ்வின் சகல துறைகளிலும் தமிழ் மக்களுக்குச் சம சந்தர்ப்பத்தை மறுத்தும், பெருமளவிலான கைத் தொழில்கள், அபிவிருத்தித் திட்டங்களில் தமிழ்ப் பிரதேசங்களைப் புறக்கணித்தும், இலங்கையில் தமிழ் மக்களின் வாழ்க்கையே ஊசலாடும் நிலையை ஏற்படுத்துவதற்கும்,
6. இலங்கையில் தமிழ் மொழியைçயும், பண்பாட்டையும் வளர்க்கும் சந்தர்ப்பங்களை மறுக்கும் அதே நேரத்தில் தமிழ்நாட்டுக் கலாச்சாரத் தாயூற்றோடு உள்ள தொடர்பையும் திட்டமிட்டுத் துண்டித்துக் கலாச்சார இனக் கொலையை நோக்கி ஈழத் தமிழ் மக்களைத் தள்ளுவதற்கும்
7. 1956 ஆம் ஆண்டு கொழும்பிலும் அம்பாறை முதலிய இடங்களிலும் நடந்தது போன்றும், 1958 ஆம் ஆண்டு நாடு முழுவதும் மிகப் பெருமளவில் நடந்தது போன்றும், 1961 ஆம் ஆண்டு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கட்டவிழ்த்து விடப்பட்ட இராணுவக் காட்டாட்சி போன்றும், 1974 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் ஒன்பதின்மர் உயிர் துறக்கக் காரணமான காவல் படையின் காரணமற்ற தாக்குதல் போன்றும், 1976 ஆம் ஆண்டில் புத்தளத்திலும், இலங்கையின் வேறு பல பாகங்களிலும், காவல் படையினரும், சிங்கள வகுப்பு வெறியரும், தமிழ் பேசும் முஸ்லீம்கள் மீது நடத்திய தாக்குதல் போன்றும், தமிழ் பேசும் மக்கள் மீது வகுப்பு வெறிப் பலாத்கார நடவடிக்கைகளையும், பயமுறுத்தல் நடவடிக்கைகளையும் அனுமதித்தும், கட்டவிழ்த்து விட்டும், நமக்கு இழைக்கப்படும் அநீதிகளைத் தமிழ் பேசும் மக்கள் எதிர்த்து நிற்கும் ஆண்மையை அழித்துப் பீதியை ஏற்படுத்துவதற்கும்,
8. தமிழ் இளைஞர்களை எவ்வித நியாயமோ, நீதி விசாரணையோ இன்றித் தாக்கியும், சித்திரவதை செய்தும், வருடக் கணக்கில் சிறைச் சாலைகளில் வைத்து வதைத்தும்,
9. எல்லாவற்றிற்கும் மேலாக அவசர காலச் சட்டத்தின்கீழ், சுதந்திரமாக விவாதிக்கும் சந்தர்ப்பமின்றி பிரஜா உரிமைச் சட்டங்களினால் பிரதிநிதித்துவ விகிதாசாரமே மாற்றப்பட்டுச் சிங்களப் பெரும்பான்மைக்கு, விகிதாசாரத்துக் கும் கூடிய பிரதிநிதித்துவம் கொண்ட பாராளுமன்ற அரசியல் நிர்ணய சபையாக்கி, தமிழ் மக்களுக்கு முந்திய அரசியல் அமைப்பின் கீழ் எஞ்சி யிருந்த சிறு பாதுகாப்புகளையும் நீக்கி அடிமைத் தளையை இறுகப் பூட்டிய குடியரசு அரசியல் அமைப்பை அவர்கள் மீது திணிப்பதற்கும்,
தமது அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி வருவதாலும்,
பல்வேறு தமிழ் அரசியற் கட்சிகளும் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு அரசாங்கங்களோடு ஒத்துழைத்தும், பாராளு மன்றத்துக்கு உள்ளும், வெளியும் வாழக்கூடிய ஆகக் குறைந்த அரசியல் உரிமைகளையாவது நிலைநாட்டுவதற்கு அடுத்தடுத்து வந்த சிங்களப் பிரதமர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களும் பயனற்றுப் போனபடியாலும்,
ஒற்றையாட்சியில் பெரும்பான்மைச் சமூகம், சிறுபான்மைச் சமூகங் களை நசுக்காதவாறு பாராளுமன்றத்தில் சமபல பிரதிநிதித்துவத்தைப் பெறுவதற்கு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசு எடுத்த பெரும் முயற்சி தோல்வி கண்டதோடு,
எந்தவொரு சமூகத்திற்கும் பாதகமான சட்டங்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதைத் தடை செய்யும் பொருட்டு சோல்பெரி அரசியல் திட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட 29 ஆவது விதியின் அற்ப பாதுகாப்பும் குடியரசு அரசியல் அமைப்பின் கீழ் நீக்கப்பட்டபடியாலும்,
அய்க்கிய இலங்கை சமஷ்டிக் குடியரசின் ஓர் அங்கமாக ஓர் சுயாட்சித் தமிழ் அரசை நிறுவுவதன் மூலம் தமிழ் மக்களின் தனித்துவத்தைக் காக்கும் அதேவேளையில் நாட்டின் ஒற்றுமையைப் பேணும் பொருட்டு இலங்கைத் தமிழரசுக் கட்சி அரசியல் நிர்ணய சபைக்கு சமர்ப்பித்த திட்டங்கள் அவற்றின் தகுதி ஆராயப்படாமலே முழுதாக நிராகரிக்கப்பட்ட படியாலும்,
வல்வெட்டித் துறையில் 1971 பெப்ரவரி 7 ஆம் தேதி கூடிய அனைத்துத் தமிழ் அரசியற் கட்சிகளின் மாநாட்டில் எடுக்கப்பட்ட ஏகோபித்த ஒன்பது அம்ச முடிவுகளின்படி அரசியல் நிர்ணய சபையின் அடிப்படைத் தீர்மானங் களுக்குக் கொண்டுவரப்பட்ட திருத்தங்களும் அரசியல் கட்சிகளாலும் இன்று ஆளுங்கட்சியில் இருப்போர் உட்பட தனிப்பட்ட பாராளுமன்ற உறுப்பினராலும் கொண்டுவரப்பட்ட திருத்தங்களும் அரசாங்கத்தினாலும் அரசியல் நிர்ணய சபையாலும் முற்றாக நிராகரிக்கப்பட்ட படியாலும்,
1972 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி அங்கீகாரம் பெற்ற குடியரசு அரசியல் அமைப்பை நிராகரித்த தமிழர் கூட்டணி, 1972 சூன் 25 ஆம் தேதி பிரதமருக்கும் அரசாங்கத்திற்கும் ஆறு அம்சக் கோரிக்கையைச் சமர்ப்பித்து, அவற்றின் அடிப்படையில் அரசியல் அமைப்பைத் திருத்தித் தமிழ்த்தேசிய இனத்தின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்ய ஏற்ற நடவடிக்கை எடுப்பதற்கு மூன்று மாத அவகாசம் அளித்து அரசு அவ்வித நடவடிக்கை எடுக்கத் தவறினால் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழ்த் தேசிய இனத்தின் சுதந்திரத்தையும் உரிமைகளையும் வென்றெடுக்க தமிழர் கூட்டணி அரசுக்கு எதிராகச் சாத்வீக நேரடி நடவடிக்கையில் இறங்குமென அரசாங்கத்திற்கு அறிவித்தபடியாலும்,
நாட்டின் ஒற்றுமைக்குப் பாதிப்பற்ற முறையில் தமிழ்த்தேசிய இனத்தின் உரிமைகளுக்கு அரசியற் சட்ட ரீதியான அங்கீகாரம் பெறுவதற்குத் தமிழர் கூட்டணியின் இறுதி முயற்சியை பிரதம மந்திரியும் அரசாங்கமும் உதாசீனம் செய்து உதறித் தள்ளியபடியாலும்,
தமது அரசியல் அமைப்புக்குத் தமிழ் மக்களின் ஆதரவுண்டு என்ற அரசின் கூற்றை நிலைநாட்டுவதற்குத் தேசிய அரசுப் பேரவையில் தமது ஸ்தாபனத்தைத் துறந்து ஓர் இடைத்தேர்தலை ஏற்படுத்துவதற்குத் தமிழர் கூட்டணித் தலைவர் அளித்த சந்தர்ப்பத்தை வேண்டுமென்றே இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஒத்தி வைத்துக் காங்கேசன் துறைத் தொகுதித் தமிழ் வாக்காளரின் ஜனநாயக உரிமையைப் புறக்கணித்தப்படியாலும்,
1975 பெப்ரவரி 6 ஆம் தேதி நடைபெற்ற இடைத் தேர்தலில் காங்கேசன் துறை வாக்காளர் அதிகப் பெரும்பான்மை வாக்குகளால் சிங்கள அரசாங்கத்தினால் தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்ட குடியரசு அரசியல் அமைப்பை நிராகரித்தது மாத்திரமின்றி திரு. சா.ஜே.வெ. செல்வநாயகம் அவர்கட்கும் அவர் மூலம் தமிழர் கூட்டணிக்கும் சுதந்திர இறைமையுள்ள, மதச்சார்பற்ற, சோலிச தமிழ் ஈழ அரசை மீள்வித்துப் புனரமைப்புச் செய்யக் கட்டளையிட்டபடியாலும்,
1976 ஆம் ஆண்டு மே 14 ஆம் தேதி பண்ணாகத்தில் கூடிய தமிழர் கூட்டணியின் முதலாவது மாநில மாநாடு தமது உன்னதமான தாய்மொழியாலும், தம் மதங்களினாலும், தமது சிறப்புப் பெற்ற கலாச்சார பாரம்பரியங்களாலும், ஐரோப்பியப் படையயடுப்பாளரின் ஆயுத பலத்தினாலும் வெற்றி கொள்ளப்படும் வரை பல நூற்றாண்டுகளாக ஓர் பிரத்தியேகமான பிரதேசத்தில் தனி அரசாங்கச் சுதந்திர வாழ்வு நடாத்திய வரலாற்றாலும், தமது பிரதேசத்தில் ஓர் தனி இனமாக வாழ்ந்து தம்மைத் தாமே ஆளும் உள்ள உறுதியாலும் இலங்கை வாழ் தமிழ் மக்கள் சிங்களவ ரிலிருந்து வேறுபட்ட ஓர் தனித்தேசிய இனமென்று இத்தீர்மானத்தால் பிரகடனப்படுத்துகின்றது.
1972 ஆம் ஆண்டுக் குடியரசு அரசியலமைப்பு தமிழ் மக்களைப் புதிய ஏகாதிபத்திய எஜமானர்களான சிங்கள மக்களால் ஆளப்படும் அடிமைத் தேசிய இனமாக மாற்றித் தாம் தவறாக அபகரித்துக் கொண்ட அதிகாரத்தைத் தமிழ்த் தேசிய இனத்தின் தனிப்பிரதேசம், மொழி, குடியுரிமை, பொருளாதார வாழ்வு, வேலை வாய்ப்பு ஆகியவற்றைப் பறித்துத் தமிழ் மக்கள் ஓர் தேசிய இனமென்று கூறுவதற்கான தகுதிகள் அத்தனையையும் அழிக்கின்றார்கள் என்றும் இம்மாநாடு இத்தீர்மானத்தால் உலகுக்கு அறிவிக்கின்றது.
தமிழ் ஈழ அரசமைப்போம்
எனவே, தமிழீழம் என்ற தனியரசு அமைப்பதை ஒட்டி வடக்கு-ிழக்குப் பகுதிகளுக்கு வெளியே வாழ்ந்து தொழில் புரியும் பெரும்பான்மையான தோட்டத் தொழிலாளரை உறுப்பினராகக் கொண்ட தொழிற்சங்கம் என்ற முறையில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசு தெரிவித்த மனத் தடைகளை கவனத்திற்கு எடுக்கும் அதே நேரத்தில் இந்நாட்டுத் தமிழ்த் தேசிய இனத்தின் நிலையான வாழ்வைப் பாதுகாப்பதற்கு ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் உரித்தான சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் ஓர் சுதந்திர இறைமையுள்ள மதச்சார்பற்ற சோலிச தமிழீழ அரசை மீள்வித்துப் புனரமைப்புச் செய்வது தவிர்க்க முடியாததாகிவிட்டது என்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.
இம்மாநாடு மேலும் கீழ்க்கண்டவாறு பிரகடனப்படுத்துகின்றது:
1. தமிழீழ அரசு வடக்கு கிழக்கு மாகாண மக்களைக் கொண்டதாகவும், தமிழீழக் குடியுரிமையை நாடும் இலங்கையின் எப்பாகத்திலும் வசிக்கும் தமிழ் பேசும் மக்கள் எல்லோருக்கும் உலகின் எப்பாகத்திலும் வசிக்கும் ஈழ வம்சாவழியைக் கொண்ட தமிழ் பேசும் மக்களுக்கும் பூரண சமத்துவ குடியுரிமைக்கு உத்திரவாதம் அளிக்கும்.
2. தமிழீழத்தின் அரசியலமைப்பு அவ்வரசின் எந்த மதப் பிரதேச சமூகங்கள் மீது வேறு எப்பிரிவினரும் ஆதிக்கம் செலுத்தாமையை உறுதிப்படுத்தும் வகையில் ஜனநாயக ரீதியில் அதிகாரம் பரவலாக்கப் பட்டதாக அமையும்.
3. தமிழீழ அரசில் சாதி அழிக்கப்பட்டுத் தீண்டாமை என்ற கொடிய முறையும் பிறப்பினால் உயர்வு தாழ்வு கற்பிக்கும் நிலையும் வேறொடு களையப்பட்டு எந்த உருவத்திலும் அவற்றை அனுஷ்டிப்பது சட்டத்தின் மூலம் தண்டிக்கப்படும்.
4. தமிழீழம் மதச்சார்பற்ற அரசாக இருக்கும். அதே நேரத்தில் அங்கு வாழும் தமிழ் மக்கள் அனுஷ்டிக்கும் மதங்கள் எல்லாவற்றிற்கும் சமமான பாதுகாப்பும் உதவியும் அளிக்கும்.
5. தமிழீழத்தில் அரச மொழியாகத் தமிழ் இருக்கும். அதே நேரத்தில் சிங்கள அரசில் வாழக்கூடிய தமிழ் பேசும் சிறுபான்மையோருக்குக் கிடைக்கும் உரிமைகளுக்குச் சமதையாகத் தமிழீழத்தில் வாழக்கூடிய சிங்களம் பேசும் சிறுபான்மையோருக்கும் தமது மொழியில் கல்வி கற்கும் அரசுடன் கரும மாற்றும் உரிமைகள் பாதுகாக்கப்படும்.
6. ஒரு சோசலிச நாடாக இருக்கப் போகும் தமிழீழத்தில் மனிதனை மனிதன் சுரண்டி வாழும் நிலை விலக்கப்பட்டும், உழைப்பின் பெருமை உறுதிப்படுத்தப்பட்டும் சட்டத்தினால் விதிக்கப்பட்ட எல்லைகளுக்கு உட்பட்டுத் தனியார் துறை இயங்க அனுமதிக்கப்படும். அதே நேரத்தில் உற்பத்திச் சாதனங்களும் அவற்றின் விநியோக வழிகளும், அரசு கட்டுப்பாட்டுக்கும் உடைமைக்கும் உட்படுத்தப்பட்டும் சோசலிச திட்டமிடுதலின் அடிப்படையில் பொருளாதார அபிவிருத்தி மேற்கொள்ளப்பட்டும், தனி மனிதனோ, தனி ஒரு குடும்பமோ சேர்த்து வைக்கக்கூடிய செல்வத்திற்கு உச்ச வரம்பு விதிக்கப் பட்டும் இருக்கும்.
முற்றும்