Tuesday, July 13, 2021

முதல் விதவைத் திருமணம் பற்றி பெரியார் ஆற்றிய உரை

 பெரியார் ஆற்றிய உரை...


தம் குடும்பத்தில் தாமே நடத்திய விதவைத் திருமணம் பற்றிய பெரியார் உரை .....


என் குடும்பத்தில் 1909 இல் ஒரு நிகழ்ச்சி நடந்தது. எனது தங்கைக்கு (பொன்னுத்தாய்) ஒரு பெண் இருந்தது. அதற்கு ஒன்பது வயதிலேயே திருமணம் செய்துவிட்டார்கள்.


கல்யாணம் ஆகி 30 ஆம் நாள் நடைபெறும் சடங்கான தாலி மாற்றல் சடங்கு செய்வதற்காக ஏற்பாடு நடந்தது. அன்று மாப்பிள்ளைக்கு 2,3 தடவை திடீரென்று வயிற்றுப் போக்கு போயிற்று. சரி! பிள்ளையாண்டான் பலகாரம் அதிகமாய்ச் சாப்பிட்டிருப்பான், சரியாய்ப் போய்விடும் என்று இருந்து விட்டார்கள். அது 7, 8 தடவை என்றாகி கடைசியில் அது காலரா (பேதி)  என்ற நிலைக்கு வந்துவிட்டது. அப்புறம் என்னென்னவோ செய்தும் பயன் இல்லை. 12 வயதுள்ள மாப்பிள்ளை இறந்து போனான்.


பிறகு இரண்டு மூன்று வரு­ங் கழித்து அந்த பெண் பெரிய மனு´யாகி விட்டது.


உடனே மறுமணத்துக்கு ஏற்பாடு செய்து கடைசியாக ஒரு பையனைப் பார்த்து முடிவு செய்தேன். வெளியில் யாரிடமும் கூறவில்லை. எனக்கு இயற்கையாகவே சிறிது தைரியம் உண்டு.


ஒரு வேலை செய்தேன். நான் சந்தேகத்துக்கு இடமில்லாமல் ஊரில் இருந்த கொண்டேன்.

என் மைத்துனர், பெண், நம்பிக்கையுள்ள ஒரு அம்மை ஆகிய மூவரையும் சிதம்பரத்தில் நடைபெறும் ஆருத்திரா தரிசனத்தை பார்ப்பதற்கென்று சிதம்பரம் அனுப்பிவிட்டேன்.


பையனைப் பட்டணத்தில் அச்சாபீஸ் சாமான்கள் வாங்குவதற்காக என்ற இந்தப் பக்கம் சொல்லி அனுப்பிவிட்டேன்.


சாமானை வாங்கிக் கொண்டு சிதம்பரம் வந்துவிட வேண்டுமென்று ஏற்பாடு.


சிதம்பரத்தில் ஒரு நாயுடு இன்ஸ்பெக்டர்-எனக்கு மிகவும் வேண்டியவர். அவரிடம் அனுப்பி வைத்தேன். அவரிடம் போய், இராமசாமி அனுப்பி வைத்தான் என்று கூறி வி­யத்தைக் கூறியவுடன், அவர் மிக்க மகிழ்ச்சியோடு அதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். 


அவர் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதலால் பெரிய மனு­ர்கள் பலர் வந்தனர். அவர்களது இல்லத்திலேயே திருமணம் முடிந்தது. பிறகு எனக்குத் தந்தி வந்தது. ‘எங்களின் யாத்திரை சரியா நடந்து போயிற்று’ என்று.

கல்யாணம் ஆன இரண்டாம் நாள் செய்தி வெளியில் தெரிந்து போயிற்று. நான் ரயிலில் வரவேற்கப் போனேன். எனது அப்பா அழாக் குறையாய் ‘அவமானம் வந்து விட்டதே’ எனத் தலையில் கை வைத்து உட்கார்ந்து விட்டார்கள். அம்மாவோ தூக்கில் தொங்கவே போய் விட்டார்கள்.


ஊரில் பலர் கூடினார்கள். ஒரு மனதாக சாதி நீக்கம் செய்து விட்டார்கள்.


நாங்கள் மூன்று வீட்டாரும் நீக்கப்பட்ட ஆறு வரு­ம் வரை சாதியி லிருந்து தள்ளப்பட்டு (உறவினர் விலக்கம்) இருந்தோம்.


பிறகு சேர்மன் தேர்தல் வந்தது. நான் நின்று தேர்தலில் ஜெயித்தேன். ஒவ்வொரு சமுகத்தாரும் சீர் கொண்டு வந்து என்னைப் பார்த்துச் சென்றனர்.


ஓரிருவர், ‘என்ன’ நம்முடைய சாதியில் ஒருவன் சேர்மனாக வந்திருக்கிறான், ஊரில் உள்ள மற்ற சாதியார்கள் எல்லாம் சீர் கொண்டு வருகிறார்கள். நாம் சும்மா இருப்பதா? என்று கிளம்பி விட்டனர்.


எது எப்படியோ சூடு பிடித்து கடைசியில் என்னை பார்ப்பதற்கு என்று வந்தார்கள். முதல் நாளே வருவதாக சொல்லியனுப்பி இருந்தார்கள். சரி சரி வரட்டும். என்ன செய்கிறார்களோ பார்ப்போம் என்று ஒரு அண்டா நிறைய காப்பி போட்டு வைத்துக் கொண்டிருந்தார்கள். 


அவர்கள் மேளம் வைத்துக் கொண்டு, 7, 8 ரூபாயில் ஒரு (பட்டு) வேட்டியும் எடுத்துக் கொண்டு வந்தார்கள். உட்கார்ந்து பேச ஆரம்பித்தவுடன், நாகம்மையார் டம்பளரில் காபியை ஊற்றி ஆள் மூலம் அனுப்பினார்கள். பார்த்தார்கள். சரி என்று இரண்டு மூன்று பேர்கள் வாங்கிச் சாப்பிட்டனர். அவ்வளவுதான். எல்லோரும் மடமடவென்று தொடர்ந்து வாங்கிச் சாப்பிட்டார்கள். ஒரு அண்டா காப்பியும் தீர்ந்து இன்னொரு அண்டா போடும்படி ஆகிவிட்டது.

அன்று முதலே எங்களைத் தள்ளி வைத்தது போய்விட்டது. 


(விடுதலை, 7.4.1959).  (இளந்தமிழன், செப்டம்பர், 2005).

பெரியார் நடத்திய முதல் விதவைத் திருமணம் (1909)

 பெரியார் நடத்திய முதல் விதவைத் திருமணம் (1909)


தம் 30 ஆவது வயதில் தம் குடும்பத்திலேயே நடத்தினார்

இதற்காக ஆறு ஆண்டு காலம் ஜாதியிலிருந்து நீக்கப்பட்டார்!


பெரியாரின் தந்தை வெங்கட்ட நாயக்கர் தம்பதிகளுக்கு 1877 செப்டம்பர் 28 இல் கிருஷ்ணசாமியும் 1879 செப்டம்பர் 17 இல் (பெரியார்) இராமசாமியும், 1881 இல் பொன்னுத்தாயும், 1891 இல் கண்ணம்மாவும் மக்கட் செல்வங்களாக ப் பிறந்தனர். இதற்கு முன் இரண்டு பிள்ளைகள் பிறந்து, பிறந்த உடனேயே மறைந்து விட்டனர்.


பொன்னுத்தாய் கல்யாண சுந்தர நாயக்கரை மணந்தார். கண்ணம்மா அவருடைய தம்பி மஞ்சள் மண்டி வணிகம் எஸ். இராமசாமி நாயக்கரை மணந்தார்.


பொன்னுத்தாயின் கணவர் தம் 25 ஆவது வயதில் மறைந்தார். பொன்னுத்தாய் ‡ கல்யாணசுந்தரம் தம்பதிகளுக்கு அம்மாயி அம்மாள், அப்பய்யன் என இரு மக்கள் பிறந்தனர்.


அம்மாயி அம்மாள் 9 வயதடைந்ததும் அக்கால முறைப்படி 12 வயது நிரம்பிய உறவினர் பையனுக்குத் திருமணம் செய்து வைத்தார்கள். மணமகன் திருமணமான 30 ஆவது நாளிலே நோயால் தாக்கப்பட்டு திடீரென்று இறந்து விட்டான்.

அம்மாயி அம்மாள் தம் 9 ஆவது வயதில் விதவையானதை எண்ணி, எண்ணி, தாய் மாமனான பெரியார் ராமசாமி மனம் நொந்தார்.


இப்பெண்ணுக்கு வாழ்வு கொடுக்க வேண்டும் என்று பெரியார் விரும்பினார்.


இரண்டு மூன்று ஆண்டுகள் ஆனதும் குடும்பத்துக்குத் தெரியாமல் இப் பெண்ணுக்கு தந்திரமாகத் திருமணம் செய்து வைத்தார்.


பெரியார் எப்போது நாத்திகரானார், எப்பொழுது சீர்திருத்தவாதியானார் என்றெல்லாம் பலரும் கேட்கின்றனர்.


இது பெரியாருக்கும் கேள்விக்குறியாகத்தான் இருந்து வந்தது.


அவர் இயல்பாகவே நாத்திகராகவும், சீர்திருத்தவாதியாகவும் இருந்திருக்கிறார் என்பதை அவர் செயல்கள் எடுத்துக் காட்டுகின்றன!


பெரியாருக்கு முன் தோன்றிய சீர்திருத்தவாதிகள் எல்லாம் தம் கருத்துக்களை நீதி போதனையாகவே கூறியுள்ளனர். பெரியார் மட்டுமே அதற்காக இயக்கம் கண்டார்.


பெரியாரின் இயக்கப் பிரச்சார நடைமுறைகளைக் கண்டு வெறுப்புக் கொண்டவர்களும் அவர் சீர்திருத்தக் கருத்துக்களை விரும்பி ஏற்றனர்.


அவர் வாழ்க்கை, சீர்திருத்த அறிவுப் பிரச்சார வாழ்க்கையாகவே, அமைந்து விட்டது.

.....


முத்தமிழ்க காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் , பெரியார் தலைமையில் நடந்த திருமணம் ஒன்றை ‘முதல் சுயமரியாதைத் திருமணம்’ என்று குறிப்பிட்டு 1979 இல் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.


தந்தை பெரியார் இத் திருமணத்தை ‘பாதி சுயமரியாதைத் திருமணம்’ என்று கூறுகிறார்.

இத் திருமணம், தம் கட்டுரையில், 48 ஆண்டுகளுக்கு முன் (1931 இல்) நடந்ததாக அவர் குறிப்பிட்டாலும் அதற்கு இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே இத் திருமணம் நடைபெற்றிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.


முதல் சுயமரியாதைத் திருமணம்


நாற்பத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்பு இராமநாதபுரம் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த சுக்கிலநத்தம் கிராமத்தில் துரைசாமி ரெட்டியார் மகனுக்கு சுயமரியாதைத் திருமணம் செய்து வைக்க பெரியாரும், நானும், அப்போதைய ‘விடுதலை’ ஆசிரியர் ஜெ.என். கண்ணப்பரும், காரைக்குடி முருகப்பாவும், சிதம்பரம் என். தண்டபாணிப் பிள்ளையும் ஆக ஐந்து பேர் சென்றிருந்தோம்.

மணமேடையில் மணமகன் வந்து உட்கார்ந்ததும், மாப்பிள்ளையின் இரு புறமும் இரண்டு பெண்களை அலங்காரத்துடன் அழைத்து வந்து உட்காரச் செய்தார்கள். ரெட்டியாரும் எங்களிடத்தில் வந்து, ‘திருமணத்தை நடத்தி வையுங்கள்’ என்றார்.

நான் பெரியாரைப் பார்த்து, ‘இது என்ன, ஒரு மாப்பிள்ளைக்கு இரண்டு பெண்கள்?’ என்று கேட்டேன்.

பெரியாரும் ரெட்டியாரைப் பார்த்து ‘ஏன் இப்படி?’ என்று கேட்டார்.


அதற்கு ரெட்டியார், ‘ஒன்று மாமன் மகள் ; ஒன்றை அத்தைப் பெண். இரண்டிலும் ஒன்றைவிட்டு ஒன்றைச் செய்தால் குடும்பத்தில் குழப்பம் வரும். அதனால் இப்படிச் செய்கிறேன்!’ என்றார்.


பெரியார் இதைக் கேட்டதும், ‘எங்களிடம், எப்படியோ போகட்டும்! ஐயர் இல்லாமல் கல்யாணம் செய்ய ரெட்டியார் சம்மதித்தாரே! அது போதும். அதுவே பாதி சுயமரியாதை’ என்று சொல்லி திருமணத்தை நடத்தி வைத்தார்.


நாங்களும் வாழ்த்தி வந்தோம். இது தான் நாங்கள் நடத்தி வைத்த முதல் சுயமரியாதைத் திருமணம்.

இயக்கம் கண்டதற்குப் பிறகு 1931 அல்லது அதற்கு முன் நடைபெற்ற இத் திருமணத்தை, பாதி சுயமரியாதைத் திருமணம் என்று பெரியார் சலிப்புடன் சொன்னாலும், தம் குடும்பத்தில் தம் சொந்தத் தங்கை மகள் அம்மாயிக்கு ‘முதல் சுயமரியாதைத் திருமணத்துக்கு’ 20 ஆண்டுகளுக்கு முன்பே முழு விதவைத் திருமணமாக, தம் முயற்சியில், தம் 30 ஆவது வயதில், 1909 இல்  நடத்தி வைத்திருக்கிறார் என்பது அவர் வாழ்வில் செய்த பெரும் புரட்சியாகும்.


1909 இல் பெரியார் சமுதாய சீர்திருத்தவாதியாகவோ, அரசியல் பிரமுகராகவோ, பரிணமிக்கவில்லை. ஈரோட்டில் குறிப்பிடத்தக்க அளவுக்கு அவர் பணக்காரப் பிரமுகராக இருந்தார்.


1909 ஆம் ஆண்டு தங்கை மகளுக்கு விதவைத் திருமணம் நடத்தி வைத்தது இவர் இயற்கையாகவே சீர்திருத்த வாதியாக இருந்தார் என்பதற்கு அடையாளமாகும்.


இதற்குத் தண்டனையாக அவர் தம் சுய ஜாதியிலிருந்து (கன்னட மொழி பேசும் பலிஜ நாயக்கர் வகுப்பு) 6 ஆண்டுகள் நீக்கி வைக்கப்பட்டார்.


இத்திருமணத்தை நடத்திய விவரத்தைத் தந்தை பெரியாரே தம் சொற்பொழிவொன்றில் கூறியுள்ளார். 

இச்சொற்பொழிவு 7.4.1959 விடுதலை நாளிதழில் வெளி வந்துள்ளது. 


(தி.வ. மெய்கண்டார், இளந்தமிழன், செப்டம்பர் 2005)


Monday, July 12, 2021

தமிழீழ வரலாறு - இறுதிப் பகுதி - வைகோ

 வைகோ 1999 இல் எழுதிய ஈழ வரலாறு -  பகுதி -2


சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி


1951 ஆம் ஆண்டு அய்க்கிய தேசியக் கட்சியிலிருந்து சாலமன் பண்டார நாயகா விலகி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைத் தொடங்கினார். தொடக்கத்தில் சிங்களமும் தமிழும் ஆட்சி மொழியாக்கப்படுமென்று அறிவித்தார்.


ஆனால், பின்னர் சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி என்று கொள்கையை மாற்றிக் கொண்டார். இதன் எதிரொலியாக அய்க்கிய தேசியக் கட்சியும் அதுவரை கொண்டிருந்த நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி எனத் தீர்மானித்தது.


உண்ணாவிரத அறப்போர்


1956 இல் நடைபெற்ற தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி வெற்றி பெற்றது ‡ சாலமன் பண்டார நாயகா பிரதமரானார். 1956 ஜுன் 5 ஆம் நாள் தமிழர்களுக்குக் கொடும் தீங்கினைத் தந்த நாளாகும். அன்றுதான் ‘சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி’ என்ற தீர்மானம் இலங்கை நாடாளு மன்றத்தில் வைக்கப்பட்டது. 


தமிழ்த் தலைவர்களும், தமிழ் மக்களும் அதனை எதிர்த்து உண்ணாவிரத அறப்போர் நடத்தினர்-சிங்களவர்களால் தாக்கப்பட்டனர். நாடாளுமன்றத்தில் தந்தை செல்வா கடுமையாக எதிர்த்துப் போராடினார்.


சூன் 14 ஆம் நாள் வாக்கெடுப்பு நடந்த போது தமிழ் உறுப்பினர்கள் அனைவரும் எதிர்த்து வாக்களித்தனர். ஆனால் சட்டம் நிறைவேறியது.


பண்டாரநாயாகா- செல்வா ஒப்பந்தம் (1957)


தமிழர்களுக்கும், சிங்களவர்களுக்கும் இடையில் கருத்து மோதலும், கசப்புணர்வும் கடுமையாக வளர்ந்தன. தமிழர்கள் தாக்குதலுக்கும், கொடுமைக்கும் ஆளானார்கள். நிலைமை மோசமாகாமல் தடுக்கக் கருதிய பண்டார நாயகா, செல்வாவுடன் பேச்சு நடத்தினார். 1957 இல் பண்டார நாயகா - செல்வா ஒப்பந்தம் உருவானது. இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து அய்க்கிய தேசியக் கட்சி போராட்டம் நடத்தியது. கண்டி வரை ஜெயவர்த்தனா எதிர்ப்பு யாத்திரை நடத்தினார். 

(இதே ஜெயவர்த்தனாதான் உலகின் கண்களில் மண்ணைத் தூவி இந்திய அரசையும் வஞ்சகமாக ஏமாற்றி 87 ஆம் ஆண்டில் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டார்).


1957 ஒப்பந்தத்தில் ஓரளவு தமிழர்களுக்கு நீதி கிடைக்க வழி அமைந்திருந்தது. வடக்கு - கிழக்கு மாகாணங்களைத் தமிழர்களே ஆளும் மாநில அவைகளுக்கு இடமளிக்கப்பட்டது. தமிழ் ஆட்சி மொழியாக ஒப்புக் கொள்ளப்பட்டது. ஆனால், சிங்கள வெறியர்களும், புத்த பிக்குகளும் எதிர்த்ததால் ஒப்பந்தத்தை பண்டாரநாயகா கிழித்துக் குப்பைத் தொட்டியில் போட்டார். தமிழர் வாழ்வில் இருள் சூழ்ந்தது. தமிழர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டனர்.


சாஸ்திரி - சிரிமாவோ ஒப்பந்தம் (1964)


1959 ஆம் ஆண்டு புத்த பிக்கு ஒருவரால் சாலமன் பண்டாரநாயகா சுட்டுக் கொல்லப்பட்டார் - அவரது மனைவி சிரிமாவோ பண்டார நாயகா பிரதமரானார்.


சிங்கள அரசியலில் பெரும் மாறுதல் ஏற்பட்டது. 1962 இல் செஞ்சீனா இந்தியாவின் மீது ஆக்கிரமிப்புப் படையயடுத்தது. அதன் பின்னர் எழுந்த அரசியல் நெருக்கடியின் காரணமாக அண்டை நாடான இலங்கையின் நட்புறவை இந்தியா நாடியது.


1964 இல் நேரு மறைந்த பின்னர் பிரதமரான லால் பகதூர் சாஸ்திரி, சிரிமாவோ பண்டார நாயகாவுடன் ஓர் ஒப்பந்தம் ஏற்படுத்தினார். அது ‘சாஸ்திரி-சிரிமாவோ ஒப்பந்தம்’ என்று அழைக்கப்பட்டது. 


அதன்படி 100 ஆண்டுகளுக்கு மேல் இரத்தத்தை வியர்வையாகக் கொட்டி இலங்கையை செல்வபுரியாக்கிய தோட்டத் தொழிலாளர்களாகிய இந்திய வம்சாவளித் தமிழர்களுக்குக் குடியுரிமை யைப் பெற்றுத் தர வேண்டிய கடமையைச் செய்யாது, அகதிகளாக அவர்களை இந்தியா ஏற்றுக் கொள்ளும் அநீதிக்கு இந்த ஒப்பந்தம் காரணமாயிற்று. (தமிழ் ஈழத்திலிருந்து வந்து தற்போது தமிழ்நாட்டின் அகதிகள் முகாம்களில் உள்ள தமிழர்கள் இலங்கையின் பூர்வீகத் தமிழ்க் குடிமக்கள் ஆவர். அவர்களும் 1964 சாஸ்திரி - சிரிமாவோ ஒப்பந்தத்தில் சொல்லப்பட்டுள்ள தமிழர்களும் ஒரே பிரிவினர் அல்லர்).


டட்லி - செல்வா ஒப்பந்தம் (1970)


அதற்குப் பின்னர் 1965 ஆம் ஆண்டில் இலங்கையில் நடைபெற்ற தேர்தலில் அய்க்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்றது ‡ டட்லி சேனநாயகா பிரதமரானார். அவரும் தந்தை செல்வாவோடு ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தினார். அந்த ஒப்பந்தமும் நிறைவேற்றப்படவில்லை - தமிழர்கள் வஞ்சிக்கப்பட்டனர்.


 மீண்டும் 1970 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பெரும்பான்மையாக வெற்றி பெற்றது. சிரிமாவோ பண்டார நாயகா பிரதமரானார். 


சிங்களக் காவல் துறையினரும், இராணுவமும் தமிழர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தினர். 1974 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டிலேயே தாக்குதல் நடத்தி தமிழர்களைச் சுட்டுக் கொன்றனர். தமிழர் வாழ்வு துன்பக் கடலாயிற்று. சுயாட்சி அதிகாரத்தைப் பெற்றுக் கூட்டாட்சியில் இணைந்து வாழலாம் என்ற நம்பிக்கை தகர்ந்தது.


தனி ஆட்சியே குறிக்கோள்


தங்கள் கண்ணெதிரே பெற்ற தாயும், உடன் பிறந்தோரும், பச்சிளம் குழந்தைகளும் சிங்களக் காடையரால் கொல்லப்படும் கொடுமையை எதிர்த்து ஈழத்துத் தமிழ் இளைஞர்கள் உரிமை காக்கவும், மானத்தோடு வாழவும் ஆயுதப் போராட்டம் ஒன்றே மார்க்கமென்ற முடிவுக்குத் தள்ளப் பட்டனர்.


1975 பிப்ரவரியில் காங்கேசன் துறை இடைத் தேர்தல் நடைபெற்றது. தமிழ் ஈழ மக்கள் தனி ஆட்சி உரிமையையே விரும்புகின்றார்கள் என்ற குறிக்கோளை முன் வைத்து தந்தை செல்வா சிங்களக் கட்சிகளைத் தோற்கடித்தார். 


வெற்றி பெற்ற தந்தை செல்வா தேசிய அரசு பேரவைக்குச் சென்றார். அந்தப் பேரவையில் 1976 ஆம் ஆண்டு பிப்ரவரி 4 ஆம் நாள் தந்தை செல்வாவும் 12 பேரவை உறுப்பினர்களும் முன்மொழிந்த தீர்மானம் தமிழீழ வரலாற்றில் ஒரு திருப்பு முனையாகும்.


‘இலங்கையின் இரு வேறு நாட்டினங்களான சிங்களவரும், தமிழரும் சுயநிர்ணய உரிமையுடையவர்களாதலின் ;


அந்நிய ஆட்சியால் பிணைக்கப்பட்ட சிங்கள நாட்டினமும் தமிழ் நாட்டினமும் இன்று வரை பிணைக்கப்பட்டள்ளமையால், சுதந்திர இலங்கையின் அரசுகள் அனைத்தும், சிங்கள நாட்டினத்தினை ஆக்கிர மிப்பு நாட்டினமாக ஊக்குவித்து வளர்த்து அதன் பயனாக இப்போதுள்ள அரசியலமைப்பு ஒரு தலைப்பட்சமாகத் திணிக்கப்பட்டுத் தமிழ் நாட்டினம் ஆளப்படும் நாட்டினமாக்கப்பட்டுள்ளமையால்,

காங்கேசன் துறை இடைத்தேர்தலில் மக்களால் வழங்கப்பட்ட தீர்ப்பை, விடுதலை பெற்ற இனமுடைய மதச்சார்பற்ற சமதர்ம நாடான தமிழ் ஈழத்தை அமைப்பதற்குரிய ஆற்றலுரிமையாக ஏற்றுக் கொள்வதென இப்பேரவை தீர்மானிக்கிறது’ என்ற அத் தீர்மானம் எவ்வளவு நுட்பமும் திட்பமும் கொண்டது.


வட்டுக்கோட்டைத் தீர்மானம் (1976)


1976 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் வைர எழுத்துகளால் பொறிக்கப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை வழங்கிய ஆண்டாகும். மே 14 ஆம் நாள் தமிழர் விடுதலைக் கூட்டணியின் முதலாவது மாநாடு வட்டுக்கோட்டைத் தேர்தல் தொகுதியில் உள்ள பண்ணாகம் என்ற ஊரில் நடைபெற்றது. இங்கிலாந்து வரலாற்றில் ஒரு ‘மேக்னா கார்ட்டா’வைப் போல் தமிழ் ஈழ வரலாற்றில் புகழ்பெற்ற வட்டுக்கோட்டைத் தீர்மானம் இங்குதான் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்தை அப்படியே தருகின்றேன்.


சரித்திரத்திற்கு முற்பட்ட காலம் முதல் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வளவை நதியிலிருந்து சிலாபம் வரைக்கும், தெற்கு மேற்கு பகுதிகளிலும், மத்திய பிரதேசத்திலும் சிங்கள மக்களும், வடக்கு கிழக்கு பிரதேசங்களில் தமிழ் மக்களும் வாழ்ந்து இந்நாட்டின் ஆளுகையைச் சிங்களத் தேசிய இனமும், தமிழ்த்தேசிய இனமும் நமக்குள் பகிர்ந்து வந்தபடியாலும்,


சிங்கள இராச்சியங்களோடு தொடர்பற்ற வகையில் 1619 ஆம் ஆண்டு போர்த்துக்கீசியரால் தமிழ் இராச்சியம் யுத்த காலத்தில் தோற்கடிக்கப்பட்டுக் கைப்பற்றப்பட்டு, அவர்களிடமிருந்து ஒல்லாந்தராலும், பின் ஆங்கிலேயராலும் அதே விதமாக வெற்றி கொள்ளப்பட்டபடியாலும்,


சிங்கள இராச்சியங்களின் பிரதேசங்களையும், தமிழ் இராச்சியத்தின் பிரதேசங்களையும் வேறு வேறாக ஆட்சி செய்து வந்த ஆங்கில ஏகாதிபத்தியவாதிகள் 1933 ஆம் ஆண்டில் கோல்புருக் ஆணைக்குழுவின் சிபாரிசுப்படி தம் நிர்வாக வசதி கருதி வலுக்கட்டாயமாக இப்பிரதேசங்களை ஒன்றாக இணைத்தப்படியாலும்,


ஏகாதிபத்திய ஆட்சியிருந்து இலங்கையை விடுவிப்பதற்கான விடுதலைக் கிளர்ச்சியில் தமிழ்த் தலைவர்கள் முன்னோடிகளாக உழைத்து இறுதியில் 1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரமடைந்தபடியாலும், மேற்கூறப்பட்ட சரித்திர உண்மைகள் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டு, எண்ணிக்கையில் பெரும்பான்மையினர் என்ற அடிப்படையில் முழு நாட்டின் மீதுமான அரசியல் அதிகாரம் சிங்களத் தேசிய இனத்தின் கைக்கு மாற்றப்பட்டு அதனால் தமிழ்த்தேசிய இனம் அடிமை இனமாகத் தாழ்த்தப்பட்ட படியாலும்,


சுதந்திரம் பெற்ற நாள் முதல் ஆட்சிக்கு வந்த சிங்கள அரசாங்கங்கள் எல்லாம், சிங்கள மக்களின் தீவிர இனவாதத்தைத் தூண்டி வளர்த்துத் தம் அரசியல் அதிகாரத்தைத் தமிழ் மக்களுக்குப் பாதகமாக :


1. தமிழ் மக்களின் அரைப் பங்கினரின் குடியுரிமை, வாக்குரிமைகளைப் பறித்து அதனால் பாராளுமன்றத்தில் தமிழரின் பிரதிநிதித்துவத்தைக் குறைப்பதற்கும்,


2. திட்டமிட்டு அரசாங்க உதவியுடன் நடத்தப்பட்ட சிங்களக் குடியேற்றங் களாலும், இரகசியமாக ஊக்குவிடப்பட்ட சிங்களக் கள்ளக் குடியேற்றங் களைச் சட்டபூர்வமாக அங்கீகரித்தாலும், பண்டைய தமிழ் இராச்சியத்தின் பிரதேசங்களில் சிங்கள மக்களை நுழைத்து, தமிழரைத் தம் சொந்தத் தாயகத்திலேயே சிறுபான்மையிராக்குவதற்கும்,


3. இலங்கை முழுவதும் சிங்களம் மாத்திரமே ஆட்சி மொழியாக்கி, தமிழர் மீதும், தமிழ் மொழி மீதும் தாழ்வு முத்திரையைப் பொறிப்பதற்கும்,


4. குடியரசு அரசியல் அமைப்பில் பெளத்த மதத்திற்கு முதன்மையான இடத்தை அளித்து, இந்நாட்டில் இந்து, கிறித்துவ, இஸ்லாமிய மக்களை இரண்டாந் தரத்திற்குத் தாழ்த்துவதற்கும்


5. கல்வி, தொழில், வேலை வாய்ப்பு, நிலப்பங்கீடு, பொருளாதார வாழ்வின் சகல துறைகளிலும் தமிழ் மக்களுக்குச் சம சந்தர்ப்பத்தை மறுத்தும், பெருமளவிலான கைத் தொழில்கள், அபிவிருத்தித் திட்டங்களில் தமிழ்ப் பிரதேசங்களைப் புறக்கணித்தும், இலங்கையில் தமிழ் மக்களின் வாழ்க்கையே ஊசலாடும் நிலையை ஏற்படுத்துவதற்கும்,


6. இலங்கையில் தமிழ் மொழியைçயும், பண்பாட்டையும் வளர்க்கும் சந்தர்ப்பங்களை மறுக்கும் அதே நேரத்தில் தமிழ்நாட்டுக் கலாச்சாரத் தாயூற்றோடு உள்ள தொடர்பையும் திட்டமிட்டுத் துண்டித்துக் கலாச்சார இனக் கொலையை நோக்கி ஈழத் தமிழ் மக்களைத் தள்ளுவதற்கும்


7.  1956 ஆம் ஆண்டு கொழும்பிலும் அம்பாறை முதலிய இடங்களிலும் நடந்தது போன்றும், 1958 ஆம் ஆண்டு நாடு முழுவதும் மிகப் பெருமளவில் நடந்தது போன்றும், 1961 ஆம் ஆண்டு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கட்டவிழ்த்து விடப்பட்ட இராணுவக் காட்டாட்சி போன்றும், 1974 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் ஒன்பதின்மர் உயிர் துறக்கக் காரணமான காவல் படையின் காரணமற்ற தாக்குதல் போன்றும், 1976 ஆம் ஆண்டில் புத்தளத்திலும், இலங்கையின் வேறு பல பாகங்களிலும், காவல் படையினரும், சிங்கள வகுப்பு வெறியரும், தமிழ் பேசும் முஸ்லீம்கள் மீது நடத்திய தாக்குதல் போன்றும், தமிழ் பேசும் மக்கள் மீது வகுப்பு வெறிப் பலாத்கார நடவடிக்கைகளையும், பயமுறுத்தல் நடவடிக்கைகளையும் அனுமதித்தும், கட்டவிழ்த்து விட்டும், நமக்கு இழைக்கப்படும் அநீதிகளைத் தமிழ் பேசும் மக்கள் எதிர்த்து நிற்கும் ஆண்மையை அழித்துப் பீதியை ஏற்படுத்துவதற்கும்,


8. தமிழ் இளைஞர்களை எவ்வித நியாயமோ, நீதி விசாரணையோ இன்றித் தாக்கியும், சித்திரவதை செய்தும், வருடக் கணக்கில் சிறைச் சாலைகளில் வைத்து வதைத்தும்,


9. எல்லாவற்றிற்கும் மேலாக அவசர காலச் சட்டத்தின்கீழ், சுதந்திரமாக விவாதிக்கும் சந்தர்ப்பமின்றி பிரஜா உரிமைச் சட்டங்களினால் பிரதிநிதித்துவ விகிதாசாரமே மாற்றப்பட்டுச் சிங்களப் பெரும்பான்மைக்கு, விகிதாசாரத்துக் கும் கூடிய பிரதிநிதித்துவம் கொண்ட பாராளுமன்ற அரசியல் நிர்ணய சபையாக்கி, தமிழ் மக்களுக்கு முந்திய அரசியல் அமைப்பின் கீழ் எஞ்சி யிருந்த சிறு பாதுகாப்புகளையும் நீக்கி அடிமைத் தளையை இறுகப் பூட்டிய குடியரசு அரசியல் அமைப்பை அவர்கள் மீது திணிப்பதற்கும்,


தமது அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி வருவதாலும்,


பல்வேறு தமிழ் அரசியற் கட்சிகளும் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு அரசாங்கங்களோடு ஒத்துழைத்தும், பாராளு மன்றத்துக்கு உள்ளும், வெளியும் வாழக்கூடிய ஆகக் குறைந்த அரசியல் உரிமைகளையாவது நிலைநாட்டுவதற்கு அடுத்தடுத்து வந்த சிங்களப் பிரதமர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களும் பயனற்றுப் போனபடியாலும்,


ஒற்றையாட்சியில் பெரும்பான்மைச் சமூகம், சிறுபான்மைச் சமூகங் களை நசுக்காதவாறு பாராளுமன்றத்தில் சமபல பிரதிநிதித்துவத்தைப் பெறுவதற்கு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசு எடுத்த பெரும் முயற்சி தோல்வி கண்டதோடு, 


எந்தவொரு சமூகத்திற்கும் பாதகமான சட்டங்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதைத் தடை செய்யும் பொருட்டு சோல்பெரி அரசியல் திட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட 29 ஆவது விதியின் அற்ப பாதுகாப்பும் குடியரசு அரசியல் அமைப்பின் கீழ் நீக்கப்பட்டபடியாலும்,


அய்க்கிய இலங்கை சமஷ்டிக் குடியரசின் ஓர் அங்கமாக ஓர் சுயாட்சித் தமிழ் அரசை நிறுவுவதன் மூலம் தமிழ் மக்களின் தனித்துவத்தைக் காக்கும் அதேவேளையில் நாட்டின் ஒற்றுமையைப் பேணும் பொருட்டு இலங்கைத் தமிழரசுக் கட்சி அரசியல் நிர்ணய சபைக்கு சமர்ப்பித்த திட்டங்கள் அவற்றின் தகுதி ஆராயப்படாமலே முழுதாக நிராகரிக்கப்பட்ட படியாலும்,


வல்வெட்டித் துறையில் 1971 பெப்ரவரி 7 ஆம் தேதி கூடிய அனைத்துத் தமிழ் அரசியற் கட்சிகளின் மாநாட்டில் எடுக்கப்பட்ட ஏகோபித்த ஒன்பது அம்ச முடிவுகளின்படி அரசியல் நிர்ணய சபையின் அடிப்படைத் தீர்மானங் களுக்குக் கொண்டுவரப்பட்ட திருத்தங்களும் அரசியல் கட்சிகளாலும் இன்று ஆளுங்கட்சியில் இருப்போர் உட்பட தனிப்பட்ட பாராளுமன்ற உறுப்பினராலும் கொண்டுவரப்பட்ட திருத்தங்களும் அரசாங்கத்தினாலும் அரசியல் நிர்ணய சபையாலும் முற்றாக நிராகரிக்கப்பட்ட படியாலும்,


1972 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி அங்கீகாரம் பெற்ற குடியரசு அரசியல் அமைப்பை நிராகரித்த தமிழர் கூட்டணி, 1972 சூன் 25 ஆம் தேதி பிரதமருக்கும் அரசாங்கத்திற்கும் ஆறு அம்சக் கோரிக்கையைச் சமர்ப்பித்து, அவற்றின் அடிப்படையில் அரசியல் அமைப்பைத் திருத்தித் தமிழ்த்தேசிய இனத்தின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்ய ஏற்ற நடவடிக்கை எடுப்பதற்கு மூன்று மாத அவகாசம் அளித்து அரசு அவ்வித நடவடிக்கை எடுக்கத் தவறினால் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழ்த் தேசிய இனத்தின் சுதந்திரத்தையும் உரிமைகளையும் வென்றெடுக்க தமிழர் கூட்டணி அரசுக்கு எதிராகச் சாத்வீக நேரடி நடவடிக்கையில் இறங்குமென அரசாங்கத்திற்கு அறிவித்தபடியாலும்,


நாட்டின் ஒற்றுமைக்குப் பாதிப்பற்ற முறையில் தமிழ்த்தேசிய இனத்தின் உரிமைகளுக்கு அரசியற் சட்ட ரீதியான அங்கீகாரம் பெறுவதற்குத் தமிழர் கூட்டணியின் இறுதி முயற்சியை பிரதம மந்திரியும் அரசாங்கமும் உதாசீனம் செய்து உதறித் தள்ளியபடியாலும்,


தமது அரசியல் அமைப்புக்குத் தமிழ் மக்களின் ஆதரவுண்டு என்ற அரசின் கூற்றை நிலைநாட்டுவதற்குத் தேசிய அரசுப் பேரவையில் தமது ஸ்தாபனத்தைத் துறந்து ஓர் இடைத்தேர்தலை ஏற்படுத்துவதற்குத் தமிழர் கூட்டணித் தலைவர் அளித்த சந்தர்ப்பத்தை வேண்டுமென்றே இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஒத்தி வைத்துக் காங்கேசன் துறைத் தொகுதித் தமிழ் வாக்காளரின் ஜனநாயக உரிமையைப் புறக்கணித்தப்படியாலும்,


1975 பெப்ரவரி 6 ஆம் தேதி நடைபெற்ற இடைத் தேர்தலில் காங்கேசன் துறை வாக்காளர் அதிகப் பெரும்பான்மை வாக்குகளால் சிங்கள அரசாங்கத்தினால் தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்ட குடியரசு அரசியல் அமைப்பை நிராகரித்தது மாத்திரமின்றி திரு. சா.ஜே.வெ. செல்வநாயகம் அவர்கட்கும் அவர் மூலம் தமிழர் கூட்டணிக்கும் சுதந்திர இறைமையுள்ள, மதச்சார்பற்ற, சோ­லிச தமிழ் ஈழ அரசை மீள்வித்துப் புனரமைப்புச் செய்யக் கட்டளையிட்டபடியாலும்,


1976 ஆம் ஆண்டு மே 14 ஆம் தேதி பண்ணாகத்தில் கூடிய தமிழர் கூட்டணியின் முதலாவது மாநில மாநாடு தமது உன்னதமான தாய்மொழியாலும், தம் மதங்களினாலும், தமது சிறப்புப் பெற்ற கலாச்சார பாரம்பரியங்களாலும், ஐரோப்பியப் படையயடுப்பாளரின் ஆயுத பலத்தினாலும் வெற்றி கொள்ளப்படும் வரை பல நூற்றாண்டுகளாக ஓர் பிரத்தியேகமான பிரதேசத்தில் தனி அரசாங்கச் சுதந்திர வாழ்வு நடாத்திய வரலாற்றாலும், தமது பிரதேசத்தில் ஓர் தனி இனமாக வாழ்ந்து தம்மைத் தாமே ஆளும் உள்ள உறுதியாலும் இலங்கை வாழ் தமிழ் மக்கள் சிங்களவ ரிலிருந்து வேறுபட்ட ஓர் தனித்தேசிய இனமென்று இத்தீர்மானத்தால் பிரகடனப்படுத்துகின்றது.


1972 ஆம் ஆண்டுக் குடியரசு அரசியலமைப்பு தமிழ் மக்களைப் புதிய ஏகாதிபத்திய எஜமானர்களான சிங்கள மக்களால் ஆளப்படும் அடிமைத் தேசிய இனமாக மாற்றித் தாம் தவறாக அபகரித்துக் கொண்ட அதிகாரத்தைத் தமிழ்த் தேசிய இனத்தின் தனிப்பிரதேசம், மொழி, குடியுரிமை, பொருளாதார வாழ்வு, வேலை வாய்ப்பு ஆகியவற்றைப் பறித்துத் தமிழ் மக்கள் ஓர் தேசிய இனமென்று கூறுவதற்கான தகுதிகள் அத்தனையையும் அழிக்கின்றார்கள் என்றும் இம்மாநாடு இத்தீர்மானத்தால் உலகுக்கு அறிவிக்கின்றது.


தமிழ் ஈழ அரசமைப்போம்


எனவே, தமிழீழம் என்ற தனியரசு அமைப்பதை ஒட்டி வடக்கு-ிழக்குப் பகுதிகளுக்கு வெளியே வாழ்ந்து தொழில் புரியும் பெரும்பான்மையான தோட்டத் தொழிலாளரை உறுப்பினராகக் கொண்ட தொழிற்சங்கம் என்ற முறையில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசு தெரிவித்த மனத் தடைகளை கவனத்திற்கு எடுக்கும் அதே நேரத்தில் இந்நாட்டுத் தமிழ்த் தேசிய இனத்தின் நிலையான வாழ்வைப் பாதுகாப்பதற்கு ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் உரித்தான சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் ஓர் சுதந்திர இறைமையுள்ள மதச்சார்பற்ற சோ­லிச தமிழீழ அரசை மீள்வித்துப் புனரமைப்புச் செய்வது தவிர்க்க முடியாததாகிவிட்டது என்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.


இம்மாநாடு மேலும் கீழ்க்கண்டவாறு பிரகடனப்படுத்துகின்றது:


1. தமிழீழ அரசு வடக்கு கிழக்கு மாகாண மக்களைக் கொண்டதாகவும், தமிழீழக் குடியுரிமையை நாடும் இலங்கையின் எப்பாகத்திலும் வசிக்கும் தமிழ் பேசும் மக்கள் எல்லோருக்கும் உலகின் எப்பாகத்திலும் வசிக்கும் ஈழ வம்சாவழியைக் கொண்ட தமிழ் பேசும் மக்களுக்கும் பூரண சமத்துவ குடியுரிமைக்கு உத்திரவாதம் அளிக்கும்.


2. தமிழீழத்தின் அரசியலமைப்பு அவ்வரசின் எந்த மதப் பிரதேச சமூகங்கள் மீது வேறு எப்பிரிவினரும் ஆதிக்கம் செலுத்தாமையை உறுதிப்படுத்தும் வகையில் ஜனநாயக ரீதியில் அதிகாரம் பரவலாக்கப் பட்டதாக அமையும்.


3. தமிழீழ அரசில் சாதி அழிக்கப்பட்டுத் தீண்டாமை என்ற கொடிய முறையும் பிறப்பினால் உயர்வு தாழ்வு கற்பிக்கும் நிலையும் வேறொடு களையப்பட்டு எந்த உருவத்திலும் அவற்றை அனுஷ்டிப்பது சட்டத்தின் மூலம் தண்டிக்கப்படும்.


4. தமிழீழம் மதச்சார்பற்ற அரசாக இருக்கும். அதே நேரத்தில் அங்கு வாழும் தமிழ் மக்கள் அனுஷ்டிக்கும் மதங்கள் எல்லாவற்றிற்கும் சமமான பாதுகாப்பும் உதவியும் அளிக்கும்.


5. தமிழீழத்தில் அரச மொழியாகத் தமிழ் இருக்கும். அதே நேரத்தில் சிங்கள அரசில் வாழக்கூடிய தமிழ் பேசும் சிறுபான்மையோருக்குக் கிடைக்கும் உரிமைகளுக்குச் சமதையாகத் தமிழீழத்தில் வாழக்கூடிய சிங்களம் பேசும் சிறுபான்மையோருக்கும் தமது மொழியில் கல்வி கற்கும் அரசுடன் கரும மாற்றும் உரிமைகள் பாதுகாக்கப்படும்.


6. ஒரு சோ­சலிச நாடாக இருக்கப் போகும் தமிழீழத்தில் மனிதனை மனிதன் சுரண்டி வாழும் நிலை விலக்கப்பட்டும், உழைப்பின் பெருமை உறுதிப்படுத்தப்பட்டும் சட்டத்தினால் விதிக்கப்பட்ட எல்லைகளுக்கு உட்பட்டுத் தனியார் துறை இயங்க அனுமதிக்கப்படும். அதே நேரத்தில் உற்பத்திச் சாதனங்களும் அவற்றின் விநியோக வழிகளும், அரசு கட்டுப்பாட்டுக்கும் உடைமைக்கும் உட்படுத்தப்பட்டும் சோ­சலிச திட்டமிடுதலின் அடிப்படையில் பொருளாதார அபிவிருத்தி மேற்கொள்ளப்பட்டும், தனி மனிதனோ, தனி ஒரு குடும்பமோ சேர்த்து வைக்கக்கூடிய செல்வத்திற்கு உச்ச வரம்பு விதிக்கப் பட்டும் இருக்கும்.

முற்றும்

தமிழீழ வரலாறு - முதல் பகுதி- வைகோ

வைகோ அவர்கள் எழுதிய தமிழீழ வரலாறு.... முதல் பகுதி...


கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தில் முன் தோன்றிய மூத்த தமிழ்க் குடி, கொற்றம் அமைத்து வாழ்ந்த நிலம்தான் தமிழ் ஈழ நிலமாகும். கடல்கோளால் கபாடபுரமும், தென் மதுரையும் அழியும் முன்னர் பஃறுளி ஆறும் குமரிக் கோட்டமும் இடம் பெற்றிருந்த லெமூரியா கண்டத்தில் மீந்திருக்கும் தமிழர் பூமிதான் இன்றைய தமிழ்நாடும், தமிழ் ஈழமுமாகும்.


ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் வேந்தன் எல்லாளன் இலங்கையை ஆட்சி செய்த போது அநுராதபுரம் தலைநகரமாக இருந்தது.


 சிங்கள மன்னர் துட்டகைமுறு வஞ்சகத்தால் எல்லாளனை வீழ்த்தவும் சிங்கள அரசு எழுந்தது. ஆனால், தென்னாட்டு பாண்டிய மன்னனின் உதவியால் கி.மு.103 இல் மீண்டும் தமிழர் அரசு அமைந்தது. பத்து நூற்றாண்டுகள் கடந்தன. 


பொன்னியின் செல்வனாம் இராஜராஜ சோழன் கி.பி. 993 இல் இலங்கை மீது படையயடுத்து சிங்கள மன்னனைப் புறங்கண்டு அநுராதபுரத்தைத் தீக்கிரையாக்கி, இலங்கையின் வடபகுதியை சோழப் பேரரசின் அங்கமாக்கி மும்முடிச் சோழர் மண்டலம் என்று பெயரிட்டான். புலனருவை தலைநகரமாயிற்று.


புலிக்கொடி பறந்த பொற்காலம்


வேங்கையின் மைந்தனாம் இராஜேந்திர சோழன் கி.பி.1017 இல் பெரும்படையுடன் சென்று தென் இலங்கையில் ஆட்சி புரிந்த சிங்கள மன்னர் அய்ந்தாம் மகிந்தனைத் தோற்கடித்து இலங்கைத் தீவு எங்கும் தமிழரின் கொற்றக் கொடியைப் பறக்க விட்டான். 


இதற்கும் 1000 வருடத்திற்கு முன்னர் சோழப் பெருவேந்தன் கரிகால்வளவன் சிங்களவர்களைக் கைதிகளாகக் கொண்டு வந்து காவிரியின் கரைகளை உயர்த்தவும், கல்லணை கட்டவும் பணியில் அமர்த்தினான் என்பது பழைய வரலாறு.


இராஜராஜனும், இராஜேந்திரனும் படையயடுப்பதற்கு சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னர் பாண்டிய அரசன் மூன்றாம் இராஜசிம்மன் தனது மணிமகுடத்தை சிங்கள அரசனிடம் ஒப்படைத்திருந்தான். இராஜேந்திர சோழன் அம்மகுடத்தை சிங்கள அரசனிடம் ஒப்படைத்திருந்தான். இராஜ சோழன் அம்மகுடத்தைக் கைப்பற்றினான். 


கி.பி. 1070 இல் சோழர் களிடமிருந்து முதலாம் விஜயபாகு ஆட்சியைக் கைப்பற்றினான். 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கலிங்க நாட்டவர்கள் தமிழ்நாட்டு தமிழகம், மலையாளம் பகுதிகளில் சேனா வீரர்களின் துணையுடன் விஜயபாகு வமிசவழி அரசை வீழ்த்தினர். பின்னர் கலிங்கர்கள் ஆட்சியை பாண்டியர்கள் உதவியுடன் சாவக அரசர்கள் முறியடித்தனர்.


பாண்டியரும் ஆண்டனர்


ஒரு கட்டத்தில் பாண்டியரின் மேலாட்சியில் தமிழ்ஈழ அரசு இயங்கியது. பாண்டிய மன்னனால் அனுப்பப்பட்ட படைத்தளபதிகள் 13 ஆம் நூற்றாண்டின் கடைசியில் அரச பீடத்தைக் கைப்பற்றிக் கொண்டனர். தமிழ் ஈழ அரசு வணிகத்தில் சிறப்புப் பெற்றது. 


அரபு நாடுகளுடன் கடல் வாணிபத்தைப் பெருக்கினர். ஈழத்துக் கப்பல்கள் இந்து மகா கடலில் வலம் வந்தன.


இந்த பரம்பரையைச் சேர்ந்த கடைசி மன்னன்தான் மாமன்னன் சங்கிலியாவான். தமிழ் ஈழத்தின் வரலாற்றில் சங்கிலி மன்னன் புகழ் ஈடு இணையற்றது. 


தமிழர் மானம் காத்த இப்பெரும் வீரனே மண்ணின் உரிமையை நிலைநாட்ட பல களங்களை வென்றவனாவான்.


போர்ச்சுக்கீசியருடன் போராடிய சங்கிலி மன்னன்

1618 ஆம் ஆண்டு போர்ச்சுகீசிரியர்கள் ஈழத்தில் நுழைந்தனர். சங்கிலி மன்னனைச் சாய்க்க முயன்றனர். சங்கலி மன்னன் தஞ்சை இரகுநாத நாயக்க மன்னனிடம் படை உதவி கேட்டதுடன் தஞ்சை மன்னன், வருண குலத்தானையும் அய்யாயிரம் வீரர்களையும் அனுப்பி வைத்தான்.


 யாழ்ப்பாணத்தைத் தலைநகரமாகக் கொண்டு சங்கிலி மன்னன் ஆட்சி நடத்திய தமிழ் ஈழ அரசை வீழ்த்த போர்ச்சுக்கீசியர்கள் அனைத்து வழிகளிலும் முயன்றனர். 1617 இல் கோவாவிலிருந்த தனது இந்திய ஆளுநருக்கு போர்ச்சுக்கீசிய அரசனே நேரடியாகவே இப்படியயாரு உத்தரவைப் பிறப்பித்திருந்தான்.


இரண்டாண்டுகள் போர்ச்சுக்கீசியர்களை சமர்க்களங்களில் சங்கிலி மன்னன் தோற்கடித்தான். 


போர்ச்சுக் கீசியரின் படை பலம் குவியக்குவிய தனக்குத் துணை வலிமை தேடிய சங்கிலி மன்னன் ஒல்லாந்தாரை நாடினார். மலையாள நாட்டிலிருந்து குஞ்ஞாலி வீரர்களின் உதவியையும் நாடினார். இப்படி துணை வலிமையைப் பெற்று வெற்றி வேந்தனாக சங்கிலி அரசோச்சிய வேளையில், காக்கை வன்னியன் எனும் தமிழனே போர்ச்சுக்கீசியருக்கு உதவிடும் துரோகியானான்.


போர்ச்சுக்கீசியத் தளபதி ஒலிவேராவின் படைகள் சங்கிலியை வெற்றி கொள்ள முடியவில்லை.


ஒலிவேராவின் படைகள் பட்டினி கிடந்த போது மனிதாபிமானத்தோடு உதவிய சங்கிலி மன்னனை மீண்டும் ஒலிவேரா போருக்கு அழைத்தான்.


காக்கை வன்னியனின் கயமை


போர்ச்சுக்கீசியருக்குத் துணையாக முதல் அணியில் வந்த சிங்களக் கூலிப்படையைப புறமுதுகிடச் செய்தான். நேருக்கு நேர் யுத்தத்தில் சங்கிலி மன்னனை வெல்ல முடியாது என்று உணர்ந்து கொண்ட போர்ச்சுக்கீசியர் கள் காக்கை வன்னியனின் துரோகத்தைப் பயன்படுத்தி சங்கிலியை வீழ்த்த சதித் திட்டம் வகுத்தனர். 


போர்ச்சுக்கீசியரை விட்டுவிட்டு சங்கிலியின் பக்கம் சேர்ந்து விடுவதாக காக்கை வன்னியன் அறிவித்துவிட்டு கயவர்கள் பலரையும் உடனழைத்துக் கொண்டு சங்கிலியை போய்ச் சந்தித்தான். தமிழர் இனம் ஒன்றுபட்டு விட்டதே என்ற பெரும் மகிழ்ச்சியில் திளைத்த சங்கிலி மன்னன் காக்கை வன்னியனை கட்டித் தழுவவும் விபரீதம் நிகழ்ந்தது. சங்கிலியின் கையில் தனது வெற்றி வாள் இல்லாத நிலையில், அவரது மெய்க்காப்பாளர் அருகில் இல்லாத சூழலில் காக்கை வன்னியனும் வஞ்சகர்களும் சங்கிலி மன்னனைக் கைது செய்து போர்ச்சுக்கீசியரிடம் ஒப்படைத்தனர். 


1619 ஜுன் 5 ஆம் நாள் இக்கொடுமை நேர்ந்தது. தமிழ் ஈழத்தின் கொற்றம் கவிழ்ந்தது.


வஞ்சகம் வென்ற போது...


சங்கிலி மன்னன் இரவோடு இரவாகக் கொழும்புக் கொண்டு செல்லப் பட்டான். அங்கிருந்து கோவாவிற்குக் கொண்டு செல்லப்பட்டான். மாமன்னன் சங்கிலி நீதிமன்றம் எனும் மரணவாசலில் நின்ற போதும் அவனது வீரமும், கம்பீரமும் துளியும் மங்கவில்லை.


தமிழ் ஈழப் பெரு வேந்தன் தூக்கிலிடப்பட்டான். 


1619 இல் தமிழ் ஈழத்தைக் கைப்பற்றிய போர்ச்சுக்கீசியர்கள் 1658 வரை ஆட்சி செய்தனர்.


அதன் பின்னர் போர்ச்சுக் கீசியர்களைத் தோற்கடித்த ஒல்லாந்தார்கள் தமிழ் ஈழத்தை ஆட்சி செய்தனர்.

இலங்கைத் தீவில் தமிழர்கள் வாழ்விடங்கள் யாழ்ப்பாணம், திரிகோண மலை, மட்டக்களப்பு ஆட்சி மாவட்டங்கள் உள்ளிட்டதும், புத்தளத்தில் வடக்கே இருந்து கும்புக்கன் ஆறு வரை விரிந்த கிடந்ததை வரலாறு ஒப்புக் கொண்டுள்ளது. 


ஆதவன் எங்கள் ஆதிக்க எல்லைக்குள் என்றும் மறைவதே இல்லையயன்று உலகின் பெரும்பகுதியைக் கைப்பற்றிக் காலனி நாடுகளாக்கிய பிரித்தானியப் பேரரசின் படைகள் 1795 இல் ஒல்லாந்தாரைத் தோற்கடித்தது. திரிகோணமலையைக் கைப்பற்றின. 


அய்ரோப்பாக் கண்ட வரலாற்றை மாற்றியமைத்த 1815 ஆம் ஆண்டில் பிரித்தானியர் இலங்கைத் தீவு முழுவதையும் கைப்பற்றி யூனியன் ஜாக் கொடியைப் பறக்கவிட்டனர்.


பிரித்தானிய ஆட்சியாளரின் பேதமை


இலங்கைத் தீவில், தமிழ் ஈழம் பிரிட்டனின் ஆட்சிக்குட்பட்டது. பிரித்தானியர்கள் ஆட்சி தொடங்கிய காலகட்டத்தில் எழுதப்பட்ட குறிப்புகள் தமிழ் ஈழ நிலப்பரப்பைத் தனியான அரசு வழிவந்த நிலப்பரப்பாகவே தெரிவிக்கின்றன.


 இலங்கைத் தீவு இருவேறு தேசிய இனங்களைக் கொண்ட தீவு என்பதையும், சிங்களவரும், தமிழரும் தனித்தனி அரசு அமைத்து வாழ்ந்தனர் என்பதையும் இந்த இரண்டு தேசிய இனங்களும் மதத்தாலும், மொழியாலும், வாழ்க்கை பண்பாலும் முற்றிலும் வேறுபட்டிருந்தன என்பதையும் பிரித்தானியர்களின் குறிப்புகள் தெளிவுப்படுத்துகின்றன. 


இலங்கையில் தங்களுடைய ஆட்சி முறையை நடைமுறைப்படுத்த இங்கிலாந்தின் நான்காம் ஜார்ஜ் மன்னன் 1829 ஆம் ஆண்டில் கோல்புரூக் பிரபு தலைமையில் ஒரு ஆணைக்குழுவை நியமித்தார். 


இந்த ஆணைக் குழு 1832 ஆம் ஆண்டில் நான்காம் வில்லியம் மன்னரிடம் தங்கள் அறிக்கையைத் தந்தது. அந்த அறிக்கையின் மய்யக் கருத்துக்களை இங்கே மேற்கோள் காட்டுகின்றேன்.


‘நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு விதமான ஆட்சியைத் தொடர்வதில் பயனில்லை. நாட்டில் உள்ள பல்வேறு இன மக்களிடையே உற்ற வேறுபாடுகள் குறைக்கப்பட வேண்டும். பிரித்தானிய ஆட்சி முறை வழிகள் கையாளப்பட வேண்டும்.


கரையோர ஆட்சி மாவட்டங்களும் கண்டி ஆட்சி மாவட்டங்களும் தனித்தனியாக, வெவ்வேறு ஆட்சி முறைகளால் ஆட்சி செய்யப்பட்டன. அங்கே வெவ்வேறு வழமைகள் இருந்தன. மரபுரிமைகள் செயற்பட்டன.

சிங்கள நாட்டு இனத்தினர், ராசகாரிய முறையைப் பின்பற்றியவர்கள். தமிழ் நாட்டு இனத்தினர் தலைவரி முறையைப் பின்பற்றியவர்கள்.


சிங்கள ஆட்சி மாவட்டங்கள் தனியாக இருந்தன. ஆட்சி செய்யப்பட்டன. தமிழ் ஆட்சி மாவட்டங்கள் தனியாக அமைந்தன. ஆட்சி செய்யப்பட்டன.


நாடு ஒருமைப்படுத்தப்பட வேண்டும். தனித்தனி ஆட்சி முறை ஒழிக்கப்பட வேண்டும். சிங்களவருக்கும் தமிழருக்கும் ஒரே மாதிரியான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். பிரித்தானிய ஆட்சி முறை புகுத்தப்பட வேண்டும்.


பூர்வகுடிகள் தமிழரே!


1833 ஆம் ஆண்டில் இங்கிலாந்து அரசு கோல்புரூக் ஆணைக் குழுவின் அறிக்கைப்படி இலங்கைக்கு சட்டம் இயற்றியது. காலனி ஆதிக்கத்தை எதிர்த்து உலகெங்கிலும் விடுதலை கிளர்ச்சி எழுந்தது. 


காந்தியார் தலைமையில் இந்தியாவில் ஆயுதம் ஏந்தாத அகிம்சை புரட்சி விடுதலைப் போராட்டமாக வெடித்தது. இலங்கைத் தீவின் ஆட்சிப் பொறுப்பை இலங்கை மக்களிடமே ஒப்படைக்க வேண்டுமென்று விரும்பிய பிரிட்டன், ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவரும் ஏற்பாட்டைச் செய்ய சோல்பரி பிரபுவின் தலைமையில் ஒரு ஆணைக்குழுவை 1944 இல் இலங்கைக்கு அனுப்பியது.


1944 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டது. அதன் தலைவராக திரு. கணபதிப் பிள்ளை பொன்னம்பலம் திகழ்ந்தார். 1947 நவம்பர் 27 இல் ஜி.ஜி. பொன்னம்பலம் தலைமை உரை ஆற்றும்போது பின்வருமாறு குறிப்பிட்டார் :


‘... இலங்கைக்கு நாங்கள் அடிமைகளாக வரவில்லை. வலிமை கொண்ட ஆட்சியாளர்களாக இருந்தோம். எமது நிலத்தில் நாம் உரிமை கொண்டாடிக் குடியேறினோம். இதை நான் நினைவுப்படுத்துகின்றேன். தமிழர்கள்தான் இந்தத் தீவின் ஆதிக்குடிகள். இதை எமது (சிங்கள) நண்பர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பருத்தித்துறை முதல் தேவந்திர முனை வரை ஆட்சி செய்த அரசை நாம் பெற்றிருந்தோம். இதனை இலங்கையின் வரலாற்றில் காணலாம். அய்ரோப்பியக் கடலாடிகள் வரும்வரை நாம் (தமிழர்கள்) அந்நியரால் ஆட்சி செய்யப்படவில்லை. எம்மை நாமே ஆட்சி செய்தோம்...’


சிங்களப் பேரினவாதிகளின் பிடியில்...


1945 அக்டோபர் 9 ஆம் நாள் சோல்பரி பிரபு ஆணைக்குழு இலங்கைக்கு ஒற்றை மாற்று அரசைத்தான் பரிந்துரைத்தது. தமிழர்களின் வரலாற்று உரிமைகள் பறிபோயின. 


1947 டிசம்பர் 10 ஆம் நாள் இலங்கையின் சுதந்திரச் சட்டத்திற்கு இங்கிலாந்து அரசின் ஒப்புதல் வழங்கப்பட்டது. 1948 பிப்ரவரி 4 ஆம் நாள் இலங்கைக்கு முழு ஆட்சிப் பொறுப்பையும் பிரித்தானிய அரசு ஒப்படைத்தது. 

சோல்பரி பிரபு இலங்கையின் முதலாவது ஆளுநர் முதல்வரானார். 


இலங்கையின் ஆட்சிக் கொடியாக சிங்கக் கொடி ஏற்கப்பட்டது. ஆம் ; சிங்களவரின் ஆதிக்கக் கொடிதான் உயர்த்தப்பட்டது.


தமிழர்கள் பழைய அடிமை வாழ்விலிருந்து மீண்டும் ஒரு புதிய அடிமை வாழ்விற்குத் தள்ளப்பட்டனர். அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்ட 1944 இல்தான் ஜஸ்டிஸ் கட்சி திராவிடர் கழகமாக உதயமாகியது. ஈழத்தமிழர் தந்தையாம் மூதறிஞர் செல்வ நாயகம் அவர்கள் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியில் இடம் பெற்றிருந்து, தமிழர் நலம் காக்க உரிமைக் கொடி ஏந்தினார்.


வாக்குரிமை பறிக்கப்பட்ட கொடுமை


1948 டிசம்பரில் இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ் இனத்தின் உரிமைக் குரல்வளையை அறுக்கும் கொடுவாள்ச் சட்டம் வீசப்பட்டது. தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு நூறு ஆண்டுகள், நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர் சென்று இரத்தத்தை வியர்வையாகக் கொட்டி தேயிலைத் தோட்டங்களையும், ரப்பர் தோட்டங்களையும் அமைத்து இலங்கையைப் பொன் விளையும் பூமியாக ஆக்கிய இந்திய வமிசா வழித் தமிழர்கள் பத்து லட்சம் பேர் குடியுரிமை, வாக்குரிமையை சிங்களப் பேரின வாத அரசு சட்டம் இயற்றி பறித்துக் கொண்டது. இது உலகில் எந்த நாட்டிலும் நடக்காத அக்கிரமமான கொடுமையாகும். தமிழர்கள் சர்வதேச அகதிகளாக அனாதைகளாக ஆக்கப்பட்டனர். உலகில் எங்கு மனித உரிமைகள் பறிக்கப்பட்டாலும் குமுறி எழுந்த ஆசியாவின் ஜோதி பண்டித ஜவஹர்லால் நேரு இந்தக் கொடுமையைக் கண்டித்து வாய் திறக்கவில்லை.


தந்தை செல்வா


ஈழத் தமிழர்களின் வரலாற்றில் இந்தியாவின் மைய அரசு பல்வேறு கால கட்டங்களில் தீங்கினை விளைவித்துள்ளது என்பதை அசைக்க முடியாத ஆதாரங்களோடு நம்மால் பட்டியலிட முடியும். இந்தக் குடியுரிமை பறிக்கின்ற கொடுமைச் சட்டத்தை எதிர்க்கும் கடமையில் பொன்னம்பலம் தவறினாலும் தமிழர் தலைவர் செல்வ நாயகம் தவறவில்லை. 


நாடாளுமன்றத்தில் அதை எதிர்த்து வாக்களித்தார்.


 அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார். 1949 ஆம் ஆண்டில் தமிழரசுக் கட்சியைத் தொடங்கினார். 


 1949 டிசம்பர் 18 ஆம் நாள் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சி முதலாவது மாநாட்டில் தலைவர் செல்வநாயகம் ஆற்றிய தலைமை உரையில் பின்வருமாறு குறிப்பிட்டார் :


‘... 9,10 ஆம் நூற்றாண்டுகளில் இலங்கையின் வடக்கில் உள்ள தமிழர்களின் நிலப் பகுதிகளில் தமிழர் ஆட்சி தொடங்கியது. தெற்கே உள்ள சிங்கள நிலப்பகுதிகள் தனியாக ஆட்சி செய்யப்பட்டன. சில சமயங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட அரசுகள் தென்னிலங்கையில் இருந்தன.


... காலம் மாறினாலும் சிங்கள அரசும் தமிழ் அரசும் தனித்தனியாக நெடுங்காலம் தொடர்ந்தன. அய்ரோப்பியர்கள் வந்து முதலில் தமிழ் அரசைக் குலைத்தார்கள்.


... பல நூற்றாண்டுகளாக இருந்த இரு நாடுகள் பிரித்தானியரால் இணைக்கப்பட்டன. ஆட்சித் தேவைக்காக மட்டும் இணைக்கப்பட்டன இந்த இரு நாடுகளும் இயற்கையாக ஒன்றிணையவில்லை’.

வாழ்ந்து கொண்டிருக்கிறார் நாவலர் - பேரா.சு. மகாதேவன்


வாழ்ந்து கொண்டிருக்கும் நாவலர்

(11.7.1920 -12.1.2000)


பேராசிரியர் கொண்டல் சு. மகாதேவன்


தந்தை பெரியார் கண்ட தமிழ் எழுத்துச் சீர்மையில் ஆர்வமுடையவராக, நாடு போற்றும் நல்லவராக, நற்றமிழ் வளர்க்கும் வல்லவராக, நடமாடும் பல்கலைக்கழகமாகத் திகழ்ந்த நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் இன்று நம்மிடையே இல்லை என்பது, அடி நாள் தொட்டு அவரோடு பழகும்  வாய்ப்பினைப் பெற்ற எம் போன்றோருககு நினைத்ததற்கும் இயலாத ஒன்றாகவே உள்ளது!


எங்கும் வாழ்வும் எங்கள் வளமும்

மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு!


என்னும் பாவேந்தரின் பசுந்தமிழ்ப் பாடல் இன்றும் நாவேந்தர் நெடுஞ்செழியனின் வெண்கலக் குரலில் தொடர்ந்த நம் காதில் ஒலித்துக் கொண்டிருக்கின்றதே? ஆம்.


நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்

பெருமை உடைத்து இவ்வுலகு


எனப் பேசும் வள்ளுவரும் இன்று வந்தால், நாவலர் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருப்பதனைக் கண்கொண்டு காண்பார்!


தன்னேரில்லாத தமிழ் மாணவர் நெடுஞ்செழியன்!


1943 ஆம் ஆண்டு இளம் அறிவியல் பட்டப்படிப்பு மாணவனாக அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நான் சேர்ந்த போது, ‘இவர்தான் நெடுஞ்செழியன்’ என்று இளம் தாடி ஏற்றம் தர நிமிர்ந்து நடை பயிலும் நெடியதொரு தமிழ் உருவத்தினை நண்பர் ஒருவர் அறிமுகப்படுத்தினார்.


பல்கலைக் கழகத்துப் பசும்புல் வெளியிடை, ஒரு மர நிழலில் அமர்ந்தபடி, கைகளில் இலக்கிய, இலக்கண ஏடுகளை விரித்து வைத்துக் கொண்டு சிந்தனையில் ஆழ்ந்திருக்கும் அம் முதுகலைத் தமிழ் வகுப்பு மாணவரோடு, தமிழில் எனக்கு ஏற்படும் அய்யங்களை முன் வைத்து அளவளாவும் வாய்ப்பும் அவ்வப்பொழுது கிட்டியது. ஒரு நாள், ‘தன்னேரில்லாத தமிழ் என நம் தாய்மொழியினை உயர்த்திப் பேசுகிறோம். ஆனாலும், ‘பிழைப்புக்குத் தமிழ் உதவாது’ எனச் சிலர் பேசுகிறார்களே, ஏன்?’ என்ற வினாவை அவர் முன் எழுப்பினேன்! ஒரு மொழியின் சிறப்பு என்பது அம் மொழி வழி நாம் அறியக் கிடக்கும் கருத்து வளத்தைப் பொறுத்தே அமைகிறது. பல்வேறுபட்ட அறிவுத் துறை நுட்பங்களையும் எளிய, இனிய சொற்களில், ஈடிரடிக் குறட்பாக்களில் எடுத்தியம்பும் திருக்குறள் போன்ற ஒரு நூலை அகத்தே கொண்டுள்ள தமிழ் மொழியினைத் ‘தன்னேரில்லாத மொழி’ எனக் கொள்வது முற்றிலும் ஒவ்வும். இன்றும், ‘பள்ளிக் கணக்கு புள்ளிக்கு உதவாது’ என்று பெரியவர்கள் பேசுவதைக் கேட்கிறோம். பள்ளிக்கூடம் போகக் கூடாது என்று அவர்கள் சொல்வதில்லை! பள்ளிப்படிப்போடு நின்றுவிடக் கூடாது என்பதே அவர்கள் சொல்ல விரும்புவது. அவ்வாறே தமிழர்கள் தமிழ் படிப்பதோடு நின்று விடாமல் பல்வேறு கலை நுட்பங்களையும் கற்று சிறக்க வேண்டும் என்பதே அவர்தம் கருத்து’ என விளக்கினார். 


நாவலர் வழித் தமிழ் உலகம் நின்றால், என்றும் நம் தமிழ் ‘தன்னேரில்லாத தமிழாக’ இருக்கும் என்ற ஓர் உறுதியும் எனக்கு ஏற்பட்டது!


இருக்கைகளில் தவழ்ந்த தமிழ்!


அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் தமிழ் இலக்கியமன்றச் செயலாளராக நாவலர் பொறுப்பேற்றவுடன், தமிழ் தவழ்ந்து விளையாடத் தொடங்கியது. ‘கலா ரசிகர்கள்’ ‘அக்ராசனாதிபதி’களை ‘பிரேரேபித்து’, ‘ஆமோதித்து’ ‘பிரசங்கம்’ செய்ய வைத்து ‘காரிதரிசி’கள் ‘வந்தனோபசாரம்’ கூறிக் கொண்டிருந்த குழப்பக் காலம் மலையேறியது! தமிழ் மக்கள் அமரும் இருக்கைகளிலும் ‘புரு­ர்கள், ஸ்திரீகள்’ எனத் தமிழ் அல்லாத மொழியில் அறிவிக்கப்பட்டு வந்த காலம் காணமற் போனது! ‘ஆடவர் மகளிர்’ என்ற அழகான தமிழ்ச் சொற்கள் இடம் பெற்று, இருக்கைகளில் அமரும் மக்களை முழுத் தமிழரெனத் தெளிவித்தன!


மாமன்றம் கண்ட மறைமலை!


மன்றத்தின் செயலாளர் என்ற நிலையில், நாவலர் சொற்பொழிவாளரை வரவேற்று அறிமுகப்படுத்தும் போது, அவர் பற்றி அறியாதார் கொண்டுள்ள உண்மைக்குப் புறம்பான கருத்துக்களையும் எடுத்துக் கூறித் திருத்தம் காண்பார். ஒரு முறை, மறைமலை அடிகளார் வந்த போது, அவர் வட மொழிக்குப் பகைவர் என்ற ஒரு பிழைபட்ட கருத்தைச் சிலர் வேண்டுமென்றே பரப்பினர். கேள்வி கேட்டுக் குழப்பம் விளைவிப்பதற்கும் சிலர் ஆயத்த மானார்கள்! 


அந்நிலையில், அடிகளாரை அறிமுகப்படுத்த மேடையில் நின்ற நாவலர், ‘வடமொழிச் சாகுந்தல நாடகத்தினைத் தமிழ்த் தேனில் குழைத்துத் தமிழுலகுக்கு அளித்த மாமேதை ‘சுவாமி வேதாசலம்’ மறைமலை அடிகளாராக உயர்ந்து இன்று நம் மாமன்றத்துக்கு வந்தருளி யிருக்கின்றார். வடமொழிக் கடலின் ஆழங்கண்டு, தமிழ்ப் பேராழியில் நீந்தித் திளைக்கும் அடிகளாரை மன்றத்தின் சார்பாக வரவேற்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்’ என்றார். அன்று அடிகளார் வடமொழிப் பேரறிஞர் என்ற உண்மை பல்கலைக் கழக வளாகமெங்கும் பரவியது! அடிகளாரின் தனித் தமிழ்க் கோட்பாடு தழைத்தது.


விழுப்புண் ஏற்பது வீரர்க்கு அழகு!


நாவலர் தம் பேச்சு என்றும் இனிமையாக, ஆழமாக, இடையிடையே பெரிதும் நகைச் சுவை உடையதாக இருக்கும். தந்தை பெரியாரின் இராமாயணம் பற்றிய ஆராய்ச்சிக் கருத்துகளைச் செரிமானம் செய்து கொள்ள முடியாத சிலர், அவர் பேசவிருந்த ஒரு கூட்டத்தின் தொடக்கத்தில் தங்கள் மனது புண்பட்டு விட்டதாகக் கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தனர். 


அப்பொழுது நாவலர் எழுந்து, ‘விழுப்புண் படுவது குறித்து வீரமுடையோர் அஞ்சமாட்டார். சர்க்கரை நோயுடையவர் தாம் புண்படுவது கண்டு உயிர் போய்விடும் என ஓலமிடுவார்! இன்று பெரியார் பாசறையில் உள்ள நாங்களும் பெரியார் தம் கருத்துக்களை முதலில் கேட்ட போது புண்படாமலா இருந்திருப்போம்? உங்களையும் உரம் பெறச் செய்வதற்குத் தான் பெரியாரின் பகுத்தறிவுப் பாசறை பயிற்சி தந்து கொண்டுள்ளது. புண்படுவது கண்டு இனி அஞ்சாதீர்!’ எனக் கேளாரும் விரும்பும் வகையில் கேள்விச் செல்வம் நல்கினார்.


எல்லோர்க்கும் பெய்யும் மழை!


ஒரு முறை கோயமுத்தூரில் நாவலர் அவர்கள் பேசும் நேரத்தில் மழை வந்துவிட்டதால், அரை மணிக் காலம் தாழ்ந்து கூட்டத்தைத் தொடங்கினார்கள். அப்பொழுது, பகுத்தறிவாளர்களின் பேச்சைத் தடுக்கவே மழையைக் கடவுள் அனுப்பியிருக்கின்றார் என ‘அறிவாளர்கள்’ சிலர் உரத்துப் பேசிக் கொண்டிருந்தனர்! நாவலர், ‘மழை என்பது தில்லையில் நடராசர் எழுந் தருளும் போது கூட வந்தருளும்! அப்பொழுது மழை என்ன நோக்கத்தில் வருகின்றதோ, அதே நோக்கத்தில்தான் பகுத்தறிவாளர் பேசும் இன்றும் வந்துள்ளது!’ என்று கூறி அனைவரையும் பெரு நகைப்பில் ஆழ்த்தினார்.


பகுத்தறிவுப் பாசறையில் நாவலர்!


1947 ஆம் ஆண்டு பள்ளி, கல்லூரிகளின் கோடை விடுமுறை நாட்களில் மாணவர்கள் பகுத்தறிவு உணர்வும், பேச்சுத்திறனும் பெறும் வகையில், ஈரோட்டில், பெரியார் இல்லத்தில், ஏறத்தாழ ஒரு மாதக் காலம் பயிற்சி வகுப்புகள் நடந்தன. பெரியார் அவர்கள், நாட்டின் பல்வேறு இடங்களி னின்றும் வந்த எங்களைத் தம் வீட்டுக்கு வந்த விருந்தாளிக் குழந்தைகளாகக் கண்காணித்தார். ஆம், மிகவும் கண்டிப்பாகக் கண்காணித்தார்! 


உரிய நேரத்தில் உணவுக் கூடத்துக்கு எல்லோரும் வந்துவிட வேண்டும்! உணவுப் பந்தி வரிசையில் அவரும் உடன் அமர்ந்து எங்களோடு அளவளாவியபடி உண்பார். ‘உங்கள் வீட்டுச் சாப்பாடு போல் இருக்கிறதா?’ என அன்புடன் சிரித்துக் கொண்டு கேட்பார். அவரிடம் அணுக்கத் தொண்டராக இருந்த இளைஞர் ஒரு நாள் வரவில்லை. அவர் பெயரைச் சொல்லி, ‘என்ன ஆயிற்று அவனுக்கு?’ எனக் கேட்டார். அருகில் இருந்த ஒருவர், ‘அய்யா! அவருக்கு வயிற்றுப் போக்கு. அதனால்தான் வரவில்லை!’ என்று விடை பகன்றார். உடன் பெரியார், ‘அவனுக்கு வாய்க்கு ருசியாக எதுவும் அகப்பட்டு விடக் கூடாது!’ எனக் கூறி எல்லோரையும் நகைப்பில் ஆழ்த்தினார்! 


மறு நாள் அந்த இளைஞர் வந்ததும், நாவலர் அவரைப் பார்த்து, ‘அய்யா சொன்னாரே! உங்களுக்கு வாய்க்கு ருசியாக என்ன அகப்பட்டது?’ எனக் கேட்க, அவரும் விழுந்து விழுந்து சிரித்தார்!


நாவலர் நடத்திய திருக்குறள் வகுப்பு!


பெரியார் அவர்கள் நாள்தோறும், வகுப்பில் தொடர்ந்து பல்வேறு செய்திகள், நிகழ்வுகள், அனுபவங்கள் பற்றிப் பேசுவார். திருச்சி வேதாசலம், திரு. என்.வி.நடராசன், பேராசிரியர் அன்பழகன், நாவலர் நெடுஞ்செழியன் மற்றும் பல அறிஞர் பெருமக்களும் அவ்வப்பொழுது கலந்து கொண்டு பயிற்சி கொடுப்பார்கள். 


பயிற்சி நிறைவு நாளன்று, மாணவர்கள் பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று மேடையேறிச் சொற்பொழிவாற்றும் போது, எப்படிச் செயல்பட வேண்டும் என்பதற்கு நாவலர் ஒரு திருக்குறள் வகுப்பே தனியாக நடத்தினார்! ‘நீங்கள் பேசும் கூட்டங்களில், உங்கள் பேச்சை விரும்புகிறவர்களும் இருக்கலாம் ; விரும்பாதவர்களும் இருக்கலாம். விரும்புகின்றவர் தொடர்ந்து விரும்பும் வகையிலும் உங்கள் பேச்சு அமைதல் வேண்டும்’ எனக் கூறி,


கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்

வேட்ப மொழிவதாம் சொல்


என்ற குறட்பாவினைப் பெரியாரும் சுவைத்து மகிழ மேற்கோள் காட்டினார். கூட்டங்களில் பேசும்போது, பின் விளைவு எதுவும் ஏற்படாதபடி அடக்கத்துடன் சொற்களைத் தேர்ந்தெடுத்துப் பேசுதல் வேண்டும் என்பதை வலியுறுத்தி,


யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்

சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு


என்ற குறட்பாவினை நினைவூட்டினார். நாவலரிடம் அன்று பாடம் கேட்டுப பயிற்சி பெற்றவருள், திரு. கே.ஏ. மதியழகன், திரு. இராம. அரங்கண்ணல், திரு.வி.வி. சாமிநாதன் மற்றும் இக்கட்டுரை ஆசிரியரும் அடங்குவர். பின்னாளில் அவர்கள் ஒவ்வொருவரும் நாட்டுக்கும் மொழிக்கும் நற்பணி புரியும் நல்வாய்ப்பினைப் பெற்றனர்.


இத்தாலி நாட்டு முனிவரும், ஈரோட்டுப் பெரியாரும்!


1978 ஆம் ஆண்டு அரசின் சார்பில் அமைக்கப் பெற்ற பெரியார் நூற்றாண்டு விழாக் குழுவின் தலைவராகத் திகழ்ந்த நாவலர், தந்தை பெரியார் அவர்களின் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்த முன் வந்தார். ஒரு காலத்தில், இத்தாலி நாட்டிலிருந்து வந்த வீரமாமுனிவர் புள்ளியிட்டு எழுதப்பட்டு வந்த எகர, ஒகரத்தின் தலைச் சுழியை மாற்றி, ஏகார, ஓகார வடிவங்களுக்கு முறையே, கீழ்க்கோடும், கீழ்ச் சுழியும் சேர்த்து, உயிரெழுத்துக்கும் புள்ளியிட்டு வந்த குழப்பத்துக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்தார்! ஈரோட்டுத் தந்தை பெரியார், கடந்த அய்ம்பது ஆண்டுகளுக்கும் மேலாக, ஐகார, ஒளகார ஒட்டு வடிவங்களை விடுத்து, ‘அய்’, ‘அவ்’ எனவும், ஒட்டிக்கொண்டிருந்த,  வடிவங்களைப் பிரித்து ‘ணை, னை, லை, ளை’ எனவும், கீழ் விலங்கு மாட்டிக் கொண்டிருந்த உருவங்களை விடுவித்துக் கால் கொடுத்து ‘ணா, னா, றா’ எனவும் தம் வெளியீடுகளில் எழுதி வந்தார்.


இத்தாலி நாட்டு முனிவரின் எழுத்துத் திருத்தத்தை ஏற்ற நம் புலவர் குழாத்துக்கு, ஏனோ, ஈரோட்டுப் பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்தால் ஏற்படும் எளிமையினைப் புரிந்து கொள்ள இவ்வளவு காலம் பிடித்தது? 

பெரியாரின் எழுத்துச் சீர்மையினால் ஏழு எழுத்து வடிவங்கள் குறைந்து, அச்சுப் பெட்டியும், தட்டெழுத்துப் பலகையும் அளவில் குறைந்து, விரைந்து பணியாற்றக் கூடும் என்பதால், அந் நாள் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் என்ற நிலையில், இக்கட்டுரை ஆசிரியரும் (கொண்டல் சு. மகாதேவன்) பெரியார் நூற்றாண்டு விழா நாளில் (1978) அரசுக்குப் பரிந்துரைத்து ஆணை பிறப்பிக்க உதவினார். 


எகரத்தின் வழி யகரம் (எய்) ‘நெய்யில் - வெண்ணெ யில்’ என இரட்டவும், இரட்டாமலும் ஒலிப்பது போன்றே, அகரத்தின் வழி யகரமும் (அய்), அகரத்தின் வழி வகரமும் (அவ்) முறையே, ‘அய்யன் - நடையன்’ எனவும், ‘அவ்வை- நிலவு’ எனவும் ஒலிப்பது குறில் வழி ஒற்றுக்களின் பொது நெறி ; தமிழ் நெறி! இவ்வுண்மையினைப் புரிந்து கொள்ளத் தவறும் புலவர்கள், ‘அய், அவ்’ இடங்களில் ‘ஐ, ஒள’ ஒட்டெழுத்துக்களை நுழைத்து, ஒவ்வாமை கண்டு குறுக்க இலக்கணம் பேசிக் குழப்புவதோடு, ‘ஐ, ஒள’வின் மாற்றெழுத்துக்கள் ‘அய், அவ்’ எனப் ‘போலி இலக்கணமும்’ பேசித் தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்வது கண்டு, நாவலர் இரக்கப்பட்டார்! எழுத்தறிவுப் பெருக்கத்துக்குப் பெரியார் எழுத்துச் சீர்மை எவ்வாறு துணைப் போகிறது என்பதனை எல்லோரும் உணரச் செய்தார்.


நாவலர் மாணவர்தம் காவலர்!


மாணவர் நெடுஞ்செழியன், தமிழில் முதுகலைப்பட்டம் (எம். ஏ.) பெற்று, 1945 ஆம் ஆண்டில் தண் செய்யூர் மாவட்டத்து நீடாமங்கலத்தில் நடைபெற்ற மாணவர் கழகக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கி உரையாற்றத் தொடங்கும் போது, ‘நான் இன்று படிப்பை முடித்துக் கொண்டு பல்கலைக் கழகத்தினின்று வெளிவந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டனவென்றாலும், எனது ‘மாணவ முலாம் இன்னமும் கலையவில்லை’ எனப் பெருத்த ஆரவாரத்திற்கும் தொடர்ந்த கைத்தட்டலுக்குமிடையே கூறினார்! ஆம். நாவலர் தந்தை பெரியாரின் பட்டி தொட்டிகளிலெல்லாம் தன்மான உணர்வைத் தமிழிலே குழைத்து ஊட்டி வந்த காலத்தும், தம்பி! வா! தலைமை தாங்கவா! என அண்ணாவால் அழைக்கப் பெற்றுப் பெரும் பொறுப்புகளை ஏற்றுக் கொண்ட காலத்தும், தமிழகத்தின் கல்வி அமைச்சராக, நிதி அமைச்சராகத் திகழ்ந்த காலத்தும், அவர்தம் ‘மாணவர் முலாம்’ சிறிதும் கலையாமலேயே சுடர் விட்டு நின்றது! 

கல்விக் கூடங்கள் மாணவர் தம் வளர்ச்சியினை ஊக்குவதாக இருத்தல் வேண்டும் ; தேக்குவதாக இருத்தல் கூடாது என்பதில் நாவலர் கண்ணும் கருத்துமாக இருந்தார். ‘பள்ளித் தேர்வு ஒரு சூதாட்டம்’ என்று அவர் ஒரு சமயம் குறிப்பிட்டது கண்டு கல்வியாளர்களும் முதலில் திகைத்தனர். அடுத்து, ஆந்திர மாநிலத்தின் அன்றைய முதலமைச்சர் திரு. பிரம்மானந்த ரெட்டி அவர்கள் பள்ளிப் படிப்பினை ஏழாம் ஆண்டிலும், இறுதியாகப் பத்தாம் ஆண்டிலும் நடைபெறும் பொதுத் தேர்வு, மாணவன் அறிவு நிலையினை மதிப்பிடட்டும். இடையில், எந்த வகுப்பிலும், எந்த மாணவனையும் நிறுத்தி வைக்கக் கூடாது என ஆணை பிறப்பித்தது கண்டு சிந்திக்கத் தொடங்கினர்.


நல்ல உடம்பில் நல்ல மூளை!


நல்ல உடலில் தான் நல்ல மூளையும் உருவாக முடியும் என்ற உண்மை யினை வலியுறுத்தும் நாவலர், உடற் பயிற்சிக் கல்வியினையும் மாணவரின் தேர்வுத் தகுதியைக் குறிக்கும் நல்லதொரு பாடமாக ஆக்கினார்! நூலகப் படிப்பும் பள்ளிப்பாடத் திட்டத்தில் தேர்வுக்குரிய ஒன்றாக இடம் பெற்றுவிட்டது. இன்று, ஆசிரியர்களும், மாணவர்களும் நாவலரின் நல்ல திட்டத்தினால் பள்ளி நூலகங்களிலும், பல்வேறு பொது நூலகங்களிலும் புகுந்து நடமாடு வதனைப் பெற்றோரும் கண்டு மகிழ்ந்து பாராட்டுகின்றனர்.


இடையீற்ற கல்வியே இனிமை தரும் கல்வி!


பல்கலைக் கழகங்களில் பட்ட வகுப்பில் சேர்கின்றவர்கள் ஆண்டுகள் வீணாகாமல் தொடர்ந்து மூன்று ஆண்டுக்காலத்தில் எழுத வேண்டிய தேர்வுகளை எழுதி முடிக்கலாம் என்ற நிலை உருவானதற்கும் நாவலர் பெரிதும் காரணமாக இருந்துள்ளார். அவ்வாறே, அனைத்திந்தியத் தொடர்புள்ள தமிழகத்துப் பல்தொழில் நுட்பப் பள்ளிகளில் மாணவர்கள் மூன்றாண்டுகள் தொடர்ந்து படிக்க முடியாதபடி ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் சில பாடங்களில் தவறிவிட்டதற்காக மாணவர்களை வீட்டில் உட்கார வைத்து, ஆண்டினை வீணாக்கி வந்த பழக்கத்தையும் மாற்றிப் பட்டப் படிப்பில் இருக்கும்படி செய்தார். மாணவரின் வளர்ச்சிக் கருதிக் கல்வித் திட்டத்தில் நாவலர் செய்த பெரும் புரட்சி போன்று இதற்கு முன் எவரும் செய்திலர்!


நாவலர் வாழ்கின்றார்!


நாவலர் தம் வாழ்நாளின் ஒவ்வொரு நொடியினையும் தமிழ் மொழிக்காக வும், தமிழ் மக்களுக்காகவும், தமிழ் நாட்டுக்காகவும் செலவிட்டுள்ளார். இன்று, தமிழ் வாழ்கின்றது; தமிழ் மக்கள் வாழ்கின்றனர். தமிழ் நாடு வாழ்கின்றது; நாவலரும் வாழ்கின்றார்! (கவிதா மண்டலம், ஆகஸ்டு, 2011)

திராவிட மொழியின் தனிப் பெருஞ் சிறப்புகள்- நாவலர் நெடுஞ்செழியன்

 திராவிட மொழியின் தனிப் பெருஞ் சிறப்புகள்


தொல்பழம் பெருந்தமிழகமாக விளங்கிய குமரிக்கண்டத்தில்தான், முதல் மனிதன் தோற்றம் பெற்றான் என்பதும், மனித நாகரிகத்தின் தொட்டிலாக வும், மனிதப் பண்பாட்டின் வளர்ப்புப் பண்ணையாகவும் அந்தக் கண்டந்தான் திகழ்ந்தது என்பதுவும், அங்குத் தோன்றிய முதல் மொழியான தமிழ்தான் உலக மொழிகளுக்கெல்லாம் மூலமொழியாக மிளிர்ந்தது என்பதும், மனிதனின் சொல்லாற்றல் திறமையும், எழுத்தாற்றல் திறமையும் அந்த இடத்தில்தான் உருப்பெற்றெழுந்தன என்பதும், அங்குதான் மனிதன் சிந்தனையாற்றல் திறனை வளர்த்துக் கொள்ளத் தலைப்பட்டான் என்பதும் முன்னரே சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.


ஆராய்ச்சி அறிஞர் பெருமக்களான இராபர்ட் கால்டுவெல்(Robert Caldwell), ஏக்கல் (Haeckal), பி. கயில்ஸ் (P.Giles), என். ஆண்டர்சன் (N.Andarson), எச். சுவீட் (H.Sweet), பாப் (Bopp), டெயிலர் (Taylor), எப். ஆம்மல் (F.Hammal) போன்றோர், உலகில் உள்ள மிகப் பழைமை சார்ந்த மொழிகள் அனைத்தும், ஒரு மூல மொழியினின்றும் உண்டானவை என்றும், அந்த ஒரு மூலமொழியானது குமரிக்கண்டத்தில் முதலில் பேசப்பட்ட தமிழாகத்தான் இருக்க வேண்டும் என்றும், தமிழ் மொழியின் சொற்கள் உலகில் பேசப்படும் அனைத்து மொழிகளிலும் சில பலவாகக் கலந்து  காணப்படுவதே, தமிழ் மொழியின் பழைமைக்கும், சிறப்புக்கும் ஏற்ற சான்று ஆகும் என்றும், எடுத்துக்காட்டும் சில குறிப்புகளிலிருந்து தெளிவான கருத்தை அறிந்து கொள்ள முடிகிறது. 

பொதுவாக இந்தோ ‡ ஐரோப்பிய மொழிகளும், குறிப்பாகச் சமத்கிருத மொழியும், ஈபுரு முதலான சேமிய மொழிகளும், சித்திய மொழிகளும், அங்கேரிய மொழிகளும், சீன ‡ சப்பானிய மொழிகளும் திராவிட மொழிகளி லிருந்து சொற்களைக் கடன் பெற்றிருக்கின்றன என்பதற்கான ஒப்புமை எடுத்துக்காட்டுக்களை, அறிஞர் கால்டுவெல், தமது ஒப்பியல் மொழி நூலில் தெள்ளத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.


இவ்வாறே பரோ, எமனோ, சுனிதிகுமார் சட்டர்ஜி, இலகோவாரி போன்ற மொழி ஆராய்ச்சி வல்லுநர்கள், திராவிட மொழிகளிலிருந்து பிற மொழி களுக்குச் சென்றுள்ள சொற்கள் சிலவற்றைத் திட்டவட்டமாக எடுத்துக் காட்டியுள்ளனர்.


ஆசியாவில், சைபீரியா பகுதியில் வாழும் அக்கின் என்ற சாதியினரின் மொழியும், வட ஐரோப்பாவில் வாழும் பின் என்ற சாதியினரின் மொழியும், மீட்டியா நாட்டிலுள்ள பிஹிஷ்டன் என்ற சாதியாரின் மொழியும், திராவிட மொழிகளோடு சில வகைகளில் தொடர்புடைய மொழிகளாக இருந்து வருகின்றன என்று, வரலாற்று அறிஞர் ஹண்டர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறும்போது, ஆரிய இனத்தினர் இந்தியாவிற்கு வந்து சேருவதற்குப் பன்னெடுங்காலத்திற்கு முன்னரே, திராவிடர் சிறந்த முறை யில் நாகரிகம் பெற்றுத் திகழ்ந்தனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


இரைசு தாவீது (Rhys David) என்னும் ஆராய்ச்சி அறிஞர், கம்ஸ்கற்கா, நியுசிலாந்து, இரஸ்கானி முதலிய நாடுகளில் வழங்கும் மொழிகள் தமிழுக்கு உறவுடைய மொழிகளாகக் காணப்படுகின்றன என்றும், சீன ‡ சப்பான் ஆகிய மொழிகள் தமிழோடு தொடர்புடைய மொழிகள் என்றும், எபிரேயம், இலத்தின், கிரேக்கம், சமத்கிருதம் முதலிய மொழிகளில் தமிழ்ச் சொற்கள் காணப்படுகின்றன என்றும், ஜெர்மன் நாட்டு காதிக் மொழி, சுமேரிய மொழி ஆகியவை தமிழோடு தொடர்புடைய மொழிகள் என்றும், ஐரோப்பிய மொழிகள் பலவற்றிலும், பின்லாந்தில் வழங்கும் மொழியிலும் தமிழ்ச் சொற்கள் காணப்படுகின்றன என்றும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.


பேராசிரியர் கோ. இராமச்சந்திரனார் அவர்கள், ஆங்கிலம், சமத்கிருதம், இந்தி, மேலை ஆரிய மொழிகள் ஆகியவற்றில் காணப்படும் சில தமிழ்ச் சொற்களைத் தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.


டாக்டர் மு. வரதராசனார் அவர்கள், ‘மொழியியற் கட்டுரைகள்’ என்னும் நூலில், ‘இந்தி முதலிய வடநாட்டு மொழிகள் திராவிட மொழியைப் பின்பற்றி அமைந்திருக்கின்றன’ என்றும், ‘இந்தி முதலிய மொழிகள் வடசொற் பெருக்கம் மிகவாக உடையனவேணும், அவற்றின் அமைப்புக்குக் காரண மான தாய்மொழி, திராவிட மொழியே என்பது நன்கு விளங்கும்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.


டாக்டர் மு.வ. அவர்கள் ‘மொழி வரலாறு’ என்னும் நூலில், ‘வடநாட்டில் பண்டைக் காலத்தில் மக்களின் மொழியாக வளர்ந்த பிராகிருத மொழிகளில், வடமொழிக் கூறுகள் தவிர, திராவிட மொழிக் கூறுகளும் இருந்தன’ என்றும், ‘ஆரியர்கள் இந்தியாவிற்குள் புகுந்தபோது, திராவிட மொழிகளின் செல்வாக்கால், அவர்களின் மொழியில் மாறுதல்கள் பல ஏற்பட்டன என்னும் கொள்கை, மொழி நூலார் பலரும் உடன்பட்ட ஒரு கொள்கையாகும்’ என்றும், ‘வட இந்தியாவில் வாழ்ந்த பழங்காலத்து மக்கள் வழங்கிய பிராகிருதம், சமத்கிருதம், பாலி போன்றவற்றில் திராவிட மொழிச் சொற்கள் பல கலந்திருப்பதைத் தெளிவாகக் காணலாம்’ என்றும் கூறியுள்ளார். 


மொழிநூல் அறிஞர் அலெக்சாண்டர் கொந்தரத்தோவு என்பார், ‘உபெய்து மொழி, மெசபொடோமியா மொழி, ஏலம் மொழி, ஆத்திரேலியப் பழங்குடியினர் மொழி போன்றவைகள், திராவிட மொழியின் வேர்ச்சொற்கள் சிலவற்றைப் பெற்றிருக்கின்றன’ என்று சுட்டிக்காட்டியுள்ளார்.


ஆராய்ச்சி அறிஞர் திரு ஞான கிரியார் , Latin words fo Tamil Origin’ என்ற நூலிலும், ‘Greek words of Tamil Origin’ என்ற நூலிலும் முறையே இலத்தீன் மற்றும் கிரேக்க மொழிச் சொற்கள் பல தமிழ் மூலத்திலிருந்துதான் பிறந்தவை என்பதற்கான காரணகாரிய விளக்கங்களைத் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளார்.


‘காசுசியன் பல்கலைக் கழகத்தைச்’ சேர்ந்த பேராசிரியர் சுசுமு ஓனோ என்னும் அறிஞரும், தென் இந்தியாவின் ‘கேமிப் பல்கலைக் கழகத்தைச்’ சேர்ந்த பேராசிரியர் மத்துபாரா என்னும் அறிஞரும் சப்பானிய மொழித் தோற்றத்திற்குத் திராவிட மொழிகள் அடிப்படையாக அமைந்திருக்க வேண்டும் என்னும் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவர்கள், திராவிட ‡ சப்பானிய மொழிகளுக்கிடையே அமைந்துள்ள இலக்கண ஒற்றுமையை யும், உடலுறுப்புப் பெயர்கள், எண்கள் ஆகியவை இரு மொழிகளிலும் பெற்றுள்ள ஒற்றுமையையும் சிறப்பாக எடுத்துக் காட்டியுள்ளனர்.

அறிஞர் பர் குலாம் அலி அல்லானா என்பவர், சிந்தி மொழிக்கும், திராவிட மொழிக்கும் உள்ள ஒப்புமைகளை எடுத்துக் காட்டியுள்ளார்.


திரு. மீ.மனோகரன் என்பவர், தென் அமெரிக்காவில் வாழும் பழங்குடி மக்களின் மொழிகளில் தமிழ்ச் சொற்கள் இடம் பெற்றிருக்கின்றன என்றும், அவர்களுடைய நாகரிகமாகக் குறிப்பிடப்படும் ‘பெரு’ என்பதே, பெருமைக் குரிய தமிழ்ச்சொல் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.


திராவிட நாகரிகத்தின் தனிப் பெருஞ்சிறப்புகள்

இதுவரையிலும், அகழ்வாராய்ச்சியின் மூலம் கண்டறிந்த நாகரிகங் களில், பொருனை வெளி நாகரிகம் தொன்மை வாய்ந்ததாகக் கருதப்படு கிறது. அதற்குப் பிற்பட்டனவாகவே, சிந்து வெளி நாகரிகம், சுமேரிய நாகரிகம், அராபிய நாகரிகம், எகுபதிய நாகரிகம், ஈபுரு நாகரிகம், கிரேக்க நாகரிகம், உரோம நாகரிகம் போன்ற நாகரிகங்கள் காணப்படுகின்றன. பொருனை வெளி நாகரிகம், சிந்துவெளி நாகரிகம் ஆகிய இரண்டும் திராவிட நாகரிகம் ஆகும் என்பது, தெள்ளத் தெளிவாகக் கண்டறிந்த உண்மை யாகும். மேலே குறிப்பிட்டுள்ள பிற நாகரிகங்களும், பெரு நாகரிகமும், திராவிட நாகரிகத்தோடு, ஒற்றுமையுடையனவாகவும், தொடர்புடையன வாகவும் காணப்படுபவையாகும். உலக முதல் தாய்மொழி தமிழ்தான் என்பதையும், முதல் நாகரிகம் தமிழரின் நாகரிகந்தான் என்பதையும் நிலைநிறுத்த, இந்த நாகரிகங்கள் தக்கச் சான்றுகளாக இருந்து வருகின்றன.


வரலாற்றுப் பேராசிரியர்கள், தொல்பொருள் ஆராய்ச்சி வல்லுநர்கள், மொழி நூல் ஆராய்ச்சியாளர்கள் போன்றோர் பலரின் கருத்துக்களைத் தொகுத்து, வகுத்துப் பார்க்கும்போது மேற்கூறப்பட்டுள்ள கருத்தின் உண்மை தெள்ளிதின் புலப்படுகின்றது.


குமரிக் கண்டத்தில் தோன்றிய திராவிட நாகரிகந்தான் (9500 ஆண்டு களுக்கு முந்தியது), பொருனை வெளி நாகரிகமாக (8500 ஆண்டு களுக்கு முந்தியது) ஆயிற்று என்றும், பிறகு அது சிந்துவெளி நாகரிகமாகப் (7500 ஆண்டுகளுக்கு முந்தியது) பரவிற்று என்றும், பின்னர் அது யூப்ரிட்டிஸ் டைகிரிஸ் ஆறுகளுக்கிடையே உள்ள பகுதியில் சுமேரிய நாகரிகமாக (6500 ஆண்டுகளுக்கு முந்தியது) விரிந்தது என்றும், அதுவே பிறகு ஆரேபியா நாகரிகமாக (5500 ஆண்டுகளுக்கு முந்தியது) ஆயிற்று என்றும், பின்னர் எகுபதிய நாகரிகமாக (4500 ஆண்டுகளுக்கு முந்தியது) மாறிற்று என்றும், அதுவே பிறகு பாபிலோனியா நாகரிகமாக (3500 ஆண்டுகளுக்கு முந்தியது) ஆயிற்று என்றும், அது பின்னர் கிரேக்க நாகரிகமாக (2500 ஆண்டுகளுக்கு முந்தையது) மாறிற்று என்றும், பின்னர் அது உரோம நாகரிகமாக (2000 ஆண்டுகளுக்கு முந்தியது) வளர்ந்தது என்றும், பிறகு ஐரோப்பிய நாகரிகமாக (1500 ஆண்டுகளுக்கு முந்தியது) உருப்பெற்றது என்றும் வரலாற்று ஆராய்ச்சி அறிஞர்கள் காரண காரிய விளக்கங்களோடு தெளிவுபடக் கூறியுள்ளனர்.


https://m.facebook.com/story.php?story_fbid=4326401200713559&id=100000311652652

(நாவலர் நெடுஞ்செழியன் எழுதிய திராவிடர் இயக்க வரலாறு என்னும் நூலிலிருந்து)


திராவிடம் என்ற சொல்லும் அது உணர்த்தும் பொருளும் - நாவலர் நெடுஞ்செழியன்

 திராவிடம் என்ற சொல்லும் அது உணர்த்தும் பொருளும் 


- நாவலர் நெடுஞ்செழியன்


‘தமிழ்’ என்ற மொழிப் பெயரை அடிப்படையாகக் கொண்டு, ‘தமிழர்’ என்ற மக்கட் கூட்டத்தின் பெயரும், ‘தமிழகம்’ அல்லது ‘தமிழ்நாடு’ என்ற நாட்டின் பெயரும் தோன்றின. ‘தமிழம்’ என்பது, ‘தமிழ்’ என்பதன் மறுபெய ராகும். ‘தமிழம்’ என்ற அந்த பெயரே ‘தமிளம்’, ‘திரமிளம்’, ‘திரவிடம்’ என்று படிப்படியாகத் திரிபுற்று, இறுதியாகத் ‘திராவிடம்’ என்றாயிற்று என்று மொழி நூல் ஆராய்ச்சி அறிஞர்கள் சிலர் தெளிவு படுத்துகின்றனர்.


‘திராவிடம்’ என்பது ‘தமிழ் மொழியையும்’ தமிழ் வழங்கும் இடமான ‘தமிழ் கூறுநல்லுலகத்தையும்’ முதலில் குறிப்பிடும் சொல்லாகக் கொள்ளப் பட்டிருந்தது.


நாளாடையில், மொழிநூல் அறிஞர்களும், வரலாற்றாசிரியப் பெரு மக்களும், தமிழையும், தமிழிலிருந்து பிரிந்த கிளை மொழிகளான தெலுங்கு- கன்னடம்- மலையாளம் - துளு ஆகிய மொழிகளையும் உள்ளடக்கிய தொகுப்பைக் குறிப்பதற்கும், அந்த மொழிகள் வழங்கும் இடத்தைக் குறிப்பதற்கும் உரிய ஒரு சொல்லாகப் பயன்படுத்தத் தலைப்பட்டனர். தமிழர்-தெலுங்கர் - கன்னடியர் -மலையாளிகள் - துளுவர் ஆகிய மக்களை ஒன்று சேர்த்துக் குறிப்பதற்குரிய சொல்லாகத், ‘திராவிடர்’ என்ற சொல்லையும் பயன்படுத்தத் தொடங்கினர். 


‘திராவிட’ என்ற சொல்லை, 7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த குமரிலபட்டர் என்ற வடமொழியாசிரியர் பயன்படுத்தியுள்ளார். ஆதி சங்கராச்சாரியார், திருஞானசம்பந்தரைப் பற்றிக் குறிப்பிடும்போது ‘திராவிட சிசு’ என்று அழைக் கின்றார். ‘திராவிடம்’ என்ற சொல் சில இடங்களில் தமிழைக் குறிக்கும் பெயராகவும், வேறு சில இடங்களில் ‘திராவிட மொழிகள்’ எல்லாவற்றையும் சேர்த்துக் குறிக்கும் பெயராகவும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.


சென்ற நூற்றாண்டில், அறிஞர் கால்டுவெல் அவர்கள், ‘திராவிடம்’ என்ற சொல்லைத் திராவிட மொழிகளின் பொதுப் பெயராகவும், தொகுப்புப் பெயராகவும் பயன்படுத்தி வந்துள்ளார். 


‘மனோன்மணியம்’ ஆசிரியர் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்கள் ‘திராவிட நற்றிருநாடு’ என்ற சொற்றொடரில் ‘திராவிடம்’ என்ற சொல்லைத் தமிழகத்தைக் குறிக்கும் ஒரு சொல்லாகப் பயன்படுத்தியுள்ளார்.


‘ஜனகனமன’ என்ற வங்க மொழியில் உள்ள நாட்டுப் பாடலைப் பாடிய கவி இரவீந்திரநாத தாகூர், ‘பஞ்சாப சிந்து குஜராத்த மாராட்ட திராவிட உட்கல வங்க என்ற சொற்றொடரில், ‘திராவிட’ என்ற சொல்லைத், தமிழகம் - ஆந்திரம் - கன்னடம் -கேரளம் ஆகிய நான்கு பகுதிகளும் ஒன்று சேர்ந்த தொகுப்பைக் குறிப்பிட, பயன்படுத்தியுள்ளார்.


1912 ஆம் ஆண்டில் டாக்டர் சி. நடேசனார் அவர்கள், தமிழர் - தெலுங்கர் -கன்னடியர் -மலையாளிகள் ஆகியோரை ஒன்று சேர்த்து அமைக்கப்பட்ட ஒரு அமைப்புக்குத் ‘திராவிடச் சங்கம்’  (பார்ப்பனரல்லாத மக்களுக் காகத்தான் திராவிடர் சங்கம் தொடங்கினார் டாக்டர் சி. நடேசனார். ஆனால் நாவலர் அவர்கள், தமிழர், தெலுங்கர், கன்னடியர், மலையாளிகளை ஒன்றுசேர்க்க திராவிடச் சங்கம் தொடங்கினார் என்று கூறுவது ஏன் என்று தெரியவில்லை. மேலும் டாக்டர் சி. நடேசனார் ‘திராவிடர் சங்கம்’ என்று தான் தொடங்கினார் - கவி) என்று பெயரிட்டார்.


1917 இல் நீதிக்கட்சியினர் தொடங்கிய தமிழ் நாளேட்டிற்குத் ‘திராவிடன்’ என்று பெயரிடப்பட்டது.

1942 இல் அறிஞர் அண்ணா அவர்கள் காஞ்சிபுரத்தில் ‘திராவிடக் கழகம்’ என்ற பெயரில் நீதிக்கட்சியின் சார்பு மன்றம் ஒன்றினை நிறுவினார். ‘திராவிட நாடு’ என்ற பெயரில் வார ஏடு ஒன்றினையும் துவக்கினார்.


1944 ஆம் ஆண்டில் சேலம் நகரில், பெரியார் ஈ.வெ.இராமசாமி அவர்களின் தலைமையின் கீழ் நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டில், பேரறிஞர் அண்ணா அவர்கள், ‘நீதிக்கட்சி’ என்ற கட்சியின் பெயரைத் திராவிடக் கழகம் (திராவிடர் கழகம் - கவி) என்று பெயர் மாற்றும் தீர்மானம் ஒன்றினைக் கொண்டு வந்து, அதனை முன்மொழிந்து, நிறைவேற்றினார்.


‘திராவிட இயக்கம்’ என்பது இப்போதைய நிலையில், நீதிக்கட்சி - சுயமரியாதை இயக்கம் - தமிழ் மறுமலர்ச்சி இயக்கம் - இந்தித் திணிப்பு எதிர்ப்பு இயக்கம் -திராவிடக் (திராவிடர்- கவி) கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் - அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் - மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய அனைத்தும் கொண்ட ஒரு தொகுப்பைக் குறிப்பிடும் ஒரு பொதுப் பெயராகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.


திராவிட மற்றும் ஆரிய மொழிக் குடும்பங்கள்

தமிழ், அதன் தொன்முது நிலையில், உலக மூல மொழியாகத் திகழும் தன்மையைப் பெற்றிருந்தது என்பது முன்பே அறியப்பட்டது. காலங்கள் பல கடந்த நிலையில், உலகு எங்கணும் அது பல்வேறு கிளை மொழிகளாக உருப்பெற்று விளங்கிற்று என்பது அறிவுசான்ற ஆராய்ச்சி வல்லுநர்களின் கூற்று ஆகும்.

வெவ்வேறு இடங்களில் ஆங்காங்குள்ள சூழ்நிலைகளுக்கு ஏற்ப வளர்ந்த மொழிகள், அப்படிப்பட்ட சூழ்நிலைகளுக்கு ஏற்பத் திரிந்து புதுப்புது மொழிகளாக மாறின. மொழிகள் பலவும் மூலமொழி ஒன்றிலிருந்து தோன்றினாலும், நாளடைவில் இனம் காணமுடியாத ஒலிகள் திரிந்தும், உறழ்ந்தும் உருமாறிப் போயின. அப்படி ஆன மொழிகளெல்லாம் கலப்புக் காரணமாகவும், காடுகள், மலைகள், கடல்கள், ஆறுகள், பருவக் காலங்கள் ஆகியவற்றின் தடைகளாலும் பல்வேறு வகைகளில் மாறுபாடும், வேறுபாடும் கொண்டு விளங்கின.


மாறுபட்டு விளங்கிய பல்வேறு மொழிகளின் சில பல ஒற்றுமைத் தன்மை களை அடிப்படையாகக் கொண்டு, திராவிட மொழிக்குடும்பம், இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பம், கெல்டிக்  மொழிக்குடும்பம், இத்தாலிய மொழிக் குடும்பம், யஹல்லேனிக் மொழிக் குடும்பம், லாடில் வலாவானிய மொழிக் குடும்பம், ட்யூடானி மொழிக் குடும்பம், ஈரானிய மொழிக் குடும்பம், ஆரமேயிக் மொழிக் குடும்பம், ஹைப்ரேயிக் மொழிக் குடும்பம், அராபிக் மொழிக் குடும்பம், துருக்கிய மொழிக் குடும்பம், பினிக் மொழிக்குடும்பம், இமாலய மொழிக்குடும்பம் போன்ற பல்வேறு மொழிக் குடும்பங்களை வகைப்படுத்தி ஆராய்ச்சி அறிஞர்கள் பாகுபடுத்தி வைத்துள்ளனர்.


இந்தியத் துணைக் கண்டத்தை எடுத்துக் கொண்டால், அதில் இரு பெரும் மொழிக்குடும்பங்கள் நின்று நிலவுகின்றன. ஒன்று ‘திராவிட மொழிக் குடும்பம்’ ஆகும்; மற்றொன்று இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பம் என்னும் ‘ஆரிய மொழிக் குடும்பம்’ ஆகும்.


தமிழ்- தெலுங்கு -மலையாளம் - கன்னடம் - துளு - கோண்டு - கூய் - ஓராயான்-பிராகுயி போன்றவை திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவை யாகும்.


வேதமொழி - சமத்கிருதம் - பாலி - பிராகிருதம் - அபபிரம்சம் - இந்தி - மாராட்டி - குசராத்தி - சிந்தி - ஒரியா - வங்காளம் - அசாமி போன்றவை ஆரிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவையாகும்.


திராவிட குடும்ப மொழிகள் மென்மையும், உயிர் எழுத்தொலிகளையும், பின் ஒட்டுச் சொற்களையும் உடைய மொழிகளாகும். ஆரிய மொழிகள் கடுமையையும், பல ஒற்றுக்கள் இணைந்த சொல்லாக்கத்தையும், முன் ஒட்டுச் சொற்களையும் உடைய மொழிகளாகும்.


‘பெண்’, ‘கண்’, ‘வியப்பு’, ‘நீர்’ போன்ற சொற்கள் மென்மை வாய்ந்த தமிழ்ச் சொற்களாகும். ‘ஸ்திரி’,‘அக்ஷ’, ‘ஆஸ்சரிய’, ‘ஜல’ ஆகிய சொற்கள் கடுமை வாய்ந்த வடமொழிச் சொற்களாகும். 


மூலத் திராவிட மொழியான தமிழ்மொழி, இந்தியா முழுவதும் பேசப்பட்ட மிக மிகத் தொன்மையான மொழியாகும் என்பதை, முன்னரே கண்டோம். மூலத் திராவிட மொழியான தமிழ், இட வேறுபாட்டாலும், பிற இனக் கலப்பா லும், இயற்கை மாற்றங்களாலும் சீற்றங்களாலும் தனித்தனி உருவங்களைப் பெற்றுத், தெலுங்கு - கன்னடம் - மலையாளம் - துளு போன்ற மொழிகளாக மாற்றங் கொண்டு நிலைக்கத் தலைப்பட்டன.


திராவிட மொழிச் சொற்களும், ஆரிய மொழிச் சொற்களும் தனித்தனித் தன்மையுடையனவாகும்.தமிழ் மொழி வடமொழிச் சொற்களின் ஆதர வில்லாமல் இயங்கக்கூடிய தனித்தன்மையுடைய மொழியாகும்.


திராவிட மொழிகளுக்கும் ஆரிய மொழிகளுக்கும் எழுத்துமுறை, அரிச் சுவடி போன்றவற்றில் சில ஒருமைப்பாடுகள் இருப்பதற்குக் காரணம், ஆரியர் இந்தியாவுக்கு வந்து, திராவிடரோடு கலந்ததற்குப் பிறகு, திராவிடரின் ஆக்கத்தால் ஏற்பட்ட விளைவு ஆகும். ஆரியர், திராவிடரிமிருந்து சில செம்மையான இலக்கண முறைகளைக் கற்றுத், தம் மொழியைத் திரித்திக் கொண்டனர்.


(நாவலர் நெடுஞ்செழியன் எழுதிய திராவிடர் இயக்க வரலாறு என்னும் நூலிலிருந்து)

பதிவு : கந்தசாமி விநாயகம்