Thursday, January 25, 2024

1965 இந்தி மொழி திணிப்பு எதிர்ப்புப் போராட்ட வரலாறு...1

1965 இந்தி மொழி திணிப்பு எதிர்ப்புப் போராட்ட வரலாறு...1

ஆட்சி மொழிச் சட்டத்தால் கொந்தளிப்பு!

பாராளுமன்றத்தில் 1963 ஏப்ரல் 13இல் உள்துறை அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரி ஆட்சி மொழி மசோதாவைத் தாக்கல் செய்தார்.

1965 சனவரி 26ஆம் நாள் முதற்கொண்டு இந்தி மொழி மட்டுமே ஆட்சிமொழியாக இருக்கும் என்று அறிவிக்கும் மசோதா ஆகும் இது. அதன்பிறகு அரசாங்கத்தின் ஆணைகள் அனைத்தும் இந்தி மொழியிலேயே வெளியாகும். எல்லாநடவடிக்கைகளும் இந்தியிலேயே நடக்கும். இவை மசோதாவின் முக்கிய விதிகளாகும்.

இம்மசோதாவின் மூன்றாவது விதியின் படி ஆங்கிலத்தின் இடத்தை இந்தி பூர்ணமாக ஆக்கிரமித்துக் கொள்கிறது. இதனால் இந்தி பேசாத மக்களுக்கு நிரந்தரத் தீங்கு ஏற்படும். இந்தி ஆதிக்கத்துக்கு அவர்கள் அடிமைகளாக வாழ நேரிடும்.

டில்லி மேலவையில் அறிஞர் அண்ணாவும் மக்கள் அவையில் நாஞ்சில் மனோகரனும், க. இராசாராமும் இம்மசோதாவைக் கண்டித்துப் பேசினார்கள்.

எதிர்ப்பை எல்லாம் துச்சமென உதறித் தள்ளிவிட்டுக் காங்கிரசு அரசு இம்மசோதாவை நிறைவேற்றி விட்டது.

இம்மசோதாவைக் கண்டித்துச் சென்னைக் கடற்கரையில் 1963 ஏப்ரல் 29ஆம் நாள் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்று நடை பெற்றது. ஆட்சி மொழிச் சட்டத்தைக் கண்டித்துப் பல கட்சித் தலைவர்கள் பேசினார்கள்.

கடைசியாகப் பேசிய அண்ணா, "ஆட்சி மொழி மசோதா மக்களின் எண்ணத்துக்கு மாறாக நிறைவேறிவிட்டது. தென்னக மக்கள் இதைத் தடுத்தே தீர வேண்டும். தமிழ் நாடெங்கும் அதற்கான கிளர்ச்சியில் மக்கள் ஈடுபடவேண்டும். இந்த அக்கிரமத்தைத் தடுத்து நிறுத்த நாம் போர்க்கோலம் பூண வேண்டிய காலம் வந்துவிட்டது என்பதை உணருகிறேன். அந்த உணர்வு ஒவ்வொருவர் மனதிலும் உருவாக வேண்டும் என்று விரும்பி வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.

ஆட்சி மொழிச் சட்டத்தை எதிர்த்துப் போராட்டம் நடத்துவது என்று கூட்டம் முடிவு செய்தது. 

எரிப்புப் போராட்டம்!

சென்னையில் இந்தி எதிர்ப்புப் பொதுமாநாடு 1963 அக்டோபர் 13-ஆம் நாள் நடைபெற்றது. அறிஞர் அண்ணா தலைமை வகித்தார்.

மாநாடு தொடங்குவதற்கு முன்பு மாபெரும் ஊர்வலம் ஒன்று நடைபெற்றது. மாநாட்டில் தலைவர்கள் அனைவரும் பேசிய பின்பு அண்ணா போராட்டத்திட்டங்களை அறிவித்து, உணர்ச்சி மிகு பேருரை நிகழ்த்தினார்.

அண்ணா பேசியதாவது:

திராவிட முன்னேற்றக் கழகம் போராட்டங்களுக்காக அலைந்து திரியாது. போராட்டம் நடத்த வேண்டிய நிலை வந்தால் சும்மா இருக்காது.

இந்த மாநாடு வெறும் மாநாடு அல்ல! இந்த நாட்டிற்கு வந்த கேட்டினை விளக்கவும், அலசி ஆராய்ந்து முடிவெடுக்கவும் கூட்டப்பட்ட மாநாடு ஆகும்.

தி.மு. கழகத்தினால் நடத்தப் படும் இந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம்- இரண்டு வகையில் நடைபெறும்.

ஒன்று அரசியல் சட்டத்தின் மொழிப்பிரிவான 37 வது விதியைப் பகிரங்கமாக அறிவித்துவிட்டுப் பொது இடத்தில் கொளுத்துவது, மற்றொன்று அரசாங்க அலுவலகங்களிலும், இந்திப் பிரச்சார சபைகளிலும் மறியல் செய்வது.

இந்தப் போராட்டங்கள் இரண்டையும் ஐந்து ஐந்து பேராக நடத்திச் செல்வார்கள்.

1963 நவம்பர் திங்கள் 17-ஆம் நாள் சென்னையில் துவங்குகின்ற இந்தப் போராட்டம், 1965 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 24-ஆம் நாளோடு முடிவடையும்.

இந்தப் போராட்டத்தின் முதல் அணியில் நான் பங்கு கொண்டு சட்டத்தை எரிக்க இருக்கிறேன்! அதற்கடுத்து பதினைந்து நாட்கள் பிரச்சாரம் நடைபெறும்! அதற்கு அடுத்த நாள் மறியல் போராட்டம் நடைபெறும்! இந்த மறியலிலும் ஐந்துபேர் பங்கு கொள்வார்கள்.

அதற்கு அடுத்து இன்னொரு மாவட்டத்தில் சட்ட எரிப்புப் போராட்டம் நடைபெறும். அதன்பிறகு பிரச்சாரம், அதன் பிறகு மறியல் போராட்டம்! இப்படியே எல்லா மாவட்டங்களிலும் சட்ட எரிப்பும், மறியலும் நடைபெற்றுக் கொண்டே இருக்கும்! 1965ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 24 ஆம் நாள் இந்தப் போராட் டத்தின் முதல் கட்டம் முடிவடையும். அதன்பிறகு இரண்டாவது கட்டப் போராட்டம் பற்றி முடிவு எடுக்கப்படும்.

உங்களிடத்தில் துப்பாக்கி இருக்கிறது. எங்களிடத்தில் உயிர் இருக்கிறது!

நீங்கள் சுடத் தயார் என்றால், நாங்களும் சாகத் தயார் என்ற உறுதியோடு ஆட்சியாளர்களுக்கு அறிவித்து விட்டுப் போராட்டக் களம் நோக்கிப் புறப்பட உங்களை அழைக்கிறேன்!

அண்ணாவின் இந்தப் போர்ப்பரணியைக் கேட்டு, மக்கள் வீறு கொண்டார்கள். எந்தத் தியாகத்துக்கும் தயார் தயார் என்று தோள் தட்டி எழுந்தார்கள். போர்க்களம் காணத் துடித்து நின்றார்கள்.

தி.மு.கழகத்தின் போராட்டத்தை அண்ணா வெளியிட்டதும் காங்கிரசு அரசு அடக்கு முறைகளைக் கட்டவிழ்துவிட்டது. முக்கிய நகரங்களில் 144 வது தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நவம்பர் 12-ஆம் நாள் இரவு கழக முன்னணியினர் பலர் கைது செய்யப் பட்டார்கள்.

சென்னைக் கடற்கரையில் சட்டப்பிரிவை எரித்துப் போராட் டம் நடத்துவதற்காக நவம்பர் 16-ஆம் நாள் அண்ணா காஞ்சி காரில் புறப்பட்டார். அவரோடு சட்ட எரிப்பில் ஈடுபடவிருந்த ஐவர் அணியினரும் வந்தனர். அமைந்தகரை அருகில் அண்ணாவின் காரைப் போலீசார் மறித்தனர். அண்ணாவையும், அவரோடு வந்த ஐவர் அணியின ரான டி.எம்.பார்த்தசாரதி, டி.கே.பொன்னுவேல், தையற்கலை கே.பி. சுந்தரம், வி.வெங்கா ஆகியோரையும் கைது செய்தனர்.

அறிஞர் அண்ணா மற்றும் நால்வர் கைது செய்யப்பட்ட செய்தி நகர்முழுவதும் காட்டுத்தீ போல் பரவி விட்டது. இவர்களை அழைத்துப் போகும் சாலையின் இருபக்கங்களிலும் மக்கள் கூடியிருந்து "அறிஞர் அண்ணா வாழ்க!"" "இந்தி ஒழிக!" என்று தொடர்ந்து முழக்கமிட்டவாறு இருந்தார்கள்.

அண்ணா கைது செய்யப்பட்டதால் அன்று சட்ட எரிப்புப் போராட்டம் நடைபெறவில்லை. இதனால் நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அண்ணாவுக்கு ஆறுமாதக் கடுங்காவல்:

அரசியல் சட்டப் பிரிவைக் கொளுத்த முயன்றதாக அண்ணா மீதும். டி. எம். பார்த்தசாரதி, டி.கே. பொன்னுவேல். கே.பி. சுந்தரம். வி. வெங்கா ஆகியோர் மீதும் வழக்குத் தொடுக்கப் பட்டது. இந்த வழக்கில் வழக்கறிஞரை வைக்காமல் அண்ணாவே வாதாடினார்.

இந்த வழக்கில் டிசம்பர் 10-ஆம் நாள் தீர்ப்புக் கூறப்பட்டது. அண்ணாவுக்கும் மற்ற நால்வருக்கும் ஆறுமாதக் கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது.

அண்ணா சிறைக்கோட்டம் புகுந்ததும், போராட்டம் தீவிர மடைந்தது.

தொடர்ந்து மாதந்தோறும் நடைபெற்றதால் தி.மு.கழகத் தலைவர்களும் தொண்டர்களும் நாடுமுழுவதும் போராட்டத்தில் குதித்துச் சிறைத் தண்டனை பெற்றார்கள். காஞ்சிபுரத்தில் ஏ.கோவிந்தசாமியும் அவர் அணியினரும் சட்டத்தை எரித்து 6 மாதம் கடுங்காவல் பெற்றார்கள். எஸ்.எஸ். தென்னரசு திருப்பத் தூரிலும், நாவலர் நெடுஞ்செழியன் கோவையிலும், பேராசிரியர் அன்பழகன், கே.ஏ. மதியழகள் சென்னையிலும் மறியல் செய்து தண்டனை பெற்றார்கள். சட்டத்தை எரித்து 75 மறவர்களும், மறி யல் போரில் 1200 மறவர்களும் சிறைக் கோட்டம் புகுந்தார்கள்.

சட்டஎரிப்புப் போராட்டமும் மறியல் போராட்டமும் தமிழக மக்களிடையே பெரும் எழுச்சியையும் துடிப்பையும் ஏற்படுத்தின.

( கே.ஜி.இராதா மணாளன் எழுதிய திராவிட இயக்க வரலாறு என்னும் நூலில் இருந்து)

No comments:

Post a Comment