Saturday, December 21, 2024

பெரியார் எனும் சுய மரியாதையின் அடையாளம் : அ. மார்க்ஸ்

 பெரியார் 5

1969 -1970  ஆம் ஆண்டுகளில் நான் சென்னை மாநிலக் கல்லூரியில் முதுகலைக் கல்வி படித்துக் கொண்டிருந்த போது கல்லூரி மற்றும் விடுதி வளாகங்களில் தந்தை பெரியார் உரை ஆற்றினார். கல்லூரி வளாகத்தில் பேசும்போது மாணவர்களுக்கான முதல் வரிசையில் அமர்ந்து அவரது உரையைக் கேட்கும் பேறு பெற்றவன் நான். 

கல்லூரியில் உரையாற்ற வந்தபோது அவர் தனது மூத்திரப் பையையும் சுமந்து வந்தார். அமர்ந்தவாரே பேசத் தொடங்கிய அவர், “பிள்ளைகளே! முதலில் ஒன்றைச் சொல்ல வேண்டும். எனக்கு ரொம்பவும் உடல் நலமில்லை. திடீர் திடீர் என தாங்க முடியாத வலி வந்து என்னை அறியாமல் கத்தி விடுகிறேன். இன்று நான் பேசும்போது திடீரென அப்படிச் சத்தம் போட்டால் பயப்படாதீங்க…”- என்று கூறி அவர் தன் உரையைத்  தொடங்கியது இன்று என் நினைவுக்கு வருகிறது. அன்று நல்ல வேளையாக அப்படி ஏதும் நடந்துவிடவில்லை. ஆனால் இப்போது அந்தக் காட்சியும் நினைவும் கண்முன் தோன்றி கண்களில் நீர் கசிகிறது. நான் என் நினைவில் இருந்துதான் இதைச் சொல்கிறேன். அப்போது இன்றைப்போல கைபேசிகள் எல்லாம் கிடையாது. 

அடுத்த சில ஆண்டுகளில் அவர் நம்மை விட்டுப் பிரிந்தார்.

அவரது கருத்துக்கள் அத்தனை எளிதாக எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியவை அல்ல. ’கடவுள் இல்லை’ என்பதையும், ‘தாலி’ ஒரு ஆணாதிக்க அடிமைச் சின்னம் என்பதையும் அத்தனை எளிதாக மக்கள் ஏற்றுக்கொள்ள இயலாது. ஆனாலும், அவற்றை ஏற்றுக் கொண்டவர்களும் அப்போது இருந்தனர். அதை ஏற்றுக் கொள்ளாதவர்கள் ஆனபோதிலும் அவரை நேசித்தவர்களும் இருந்தனர். 

தஞ்சை மாவட்டம் ஒன்றில் என் இளமைக்காலம் கழிந்தது. அப்போது நான் படித்த ஒரத்தநாடு அரசுப் பள்ளிக்கு அருகில் நடந்த திராவிடர் கழகக் கூட்டம் ஒன்று இப்போது என் நினைவுக்கு வருகிறது. சுற்று வட்டாரத்தில் உள்ள மிகச் சாதாரணமான எளிய மக்கள் கட்டுச் சோறு கட்டிக் கொண்டு. மாட்டு வண்டிகளில் வந்து இரண்டு நாட்கள் அங்கேயே தங்கி அங்கு பேசப்பட்ட உரைகளைத் தரையில் அமர்ந்து கேட்டுச் சென்ற காட்சியின் நினைவுகள் நிழலாடுகின்றன. 

தனது அரசியலை ஏற்ற மக்களுக்கு அப்படி அவர் என்ன சொன்னார். கடவுளை நம்பாதே என்றார். சுய மரியாதையை இழக்காதே என்றார். 

ஒருமுறை ’பகுத்தறிவுக் கல்வி’ எனச் சொல்கிறீர்களே அதென்ன? - என்கிற கேள்வி முன் வைக்கப்பட்டபோது அவர் சொன்ன பதில் இதுதான்:

“பகுத்தறிவுப் பள்ளிகளை’ வைத்து ’நிர்வாணமான’ சிந்தனா சக்தி தரும் படிப்பைக் கொடுத்து மக்களை எதைப்பற்றியும் எந்தப் பற்றுமற்ற வகையில் செல்லும் வரை சிந்தித்து முடிவுக்கு வரக் கற்பிப்போமே ஆனால்…..” 

என்று போகிறது அவரது கூற்று.

’பகுத்தறிவு’, ‘நிர்வாணம்’ ’பற்றறுப்பு’ ஆகியன பெரியாரியத்தில் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க இயலாதவை. இந்தச் சமூகம் மக்கள் மீது ஏராளமான மூட நம்பிக்கைகளைப் பதிய வைத்துள்ளது. அவற்றின் மீதான நம்பிக்கைகளையும் பற்றுகளையும் துடைத்தெறிந்து நாம் நம்மை, நம் சிந்தனை வெளியை நிர்வாணம் ஆக்கிக் கொள்ள வேண்டும் என்பதுதான். புத்தருக்கு மிக நெருக்கமானவர் பெரியார். ‘நிர்வாணம்’ எனும் கருத்தாக்கம் புத்தர் நமக்களித்த பெரும் கொடை. ஆழமான ஒரு சிந்தனை. 

கல்வி என்பது ”எந்தப் பற்றும்’ இல்லதவர்களாக மனிதர்களை ஆக்க வேண்டும்” - எனப் பெரியார் சொல்வது மிக மிக ஆழமான ஒரு கருத்து. எதெல்லாம் உன்னதமானவை என நம் சாத்திரங்களிலும், பொதுப் புத்தியிலும் முன்வைக்கப் படுகின்றனவோ அவை எல்லாவற்றில் இருந்தும் விடுதலை பெறுவதே நிர்வாணம். ஆம். கல்வி என்பது ஒரு வகையில் சமூக ‘உண்மைகளில்’ இருந்து விடுதலை பெறுவதே. அதாவது சமுகம் நம் மீது பதித்துள்ள பொய்யான மூட நம்பிக்கைகளிலிருந்து விடுதலை பெறுவதே.  பகுத்தறிவில்லாத எந்த ஜீவராசியும் தன் இனத்தை வருத்தி வாழ்வதில்லை. தன் இனத்தின் ஒரு சார்ரின் உழைப்பில் வாழ்வதில்லை. அதாவது உழைப்பைச் சுரண்டுவது இல்லை என்பதுதான்.

“ஒழுக்கம்” என்பதையும் கூடப் பெரியார் ஒரு "சூழ்ச்சியான கற்பிதம்” என்பார். 

'ஒழுக்கம்’ என்பதன் சமூக வரையறை எல்லோருக்கும் ஒன்றாக இல்லை என்பதை அவர் சுட்டிக்காட்டுவார்.  “தாசிக்கு ஒழுக்கம் ஒரு புருஷனையே நம்பி ஒருவனிடத்திலேயே காதலாய் இருக்கக் கூடாது என்பது. குலஸ்திரீ என்பவளுக்கு ஒழுக்கம் அயோக்கியன் ஆனாலும்,  குஷ்டரோகியானாலும் அவனைத் தவிர வேறு யாரையும் மனசால் கூட சிந்திக்கக் கூடாது என்பது...” என இப்படிப் பெரியார் சமூகப் பொதுப்  புத்தியில் நிலவும் மதிப்பீடுகள் குறித்து அவர் நிறையச் சொல்லுவார். முதலாளிக்கு ஒழுக்கம் தொழிலாளியைச் சுரண்டி பெரிய அளவில் லாபம் சம்பாதிப்பது. தொழிலாளிக்கு ஒழுக்கம் முதலாளிக்கு துரோகம் செய்யாமல் இருப்பது. பசுவை இரட்சிக்க வேண்டும் என்பது ஒருவர் நம்பிக்கை ஆனால்  இன்னொருவருக்கு பசுவைப் புசிக்கலாம் என்பதும் ஏற்புடைய ஒன்றுதான். கற்பு முறை ஒழிந்தால்தான் பெண்களுக்கு விடுதலை என்பார் பெரியார். இப்படிச் சமூகத்தில் நிலவும் நம்பிக்கைகள், வழமைகள், பொதுக் கருத்துக்கள், சாத்திரங்கள் என எல்லாவற்றைக் குறித்தும் ஆழமான சிந்தனைகளை முன்வைத்தவர் பெரியார்.

இரண்டு

ஒன்றை நாம் புரிந்துகொள்வது அவசியம். இப்படியெல்லாம் சொல்வதன் ஊடாகப் பெரியார் கல்விக்கு எதிரானவர் என்பதாகக் கருத வேண்டியதில்லை. இன்றைய கல்வி முறையில் உள்ள சிக்கல்கள், அவை மக்களுக்கான விடுதலைக் கல்வியாக அமையவில்லை என்பதை எல்லாம் இப்படிச் சுட்டிக்காட்டிய அதே நேரத்தில் அடித்தள மக்களின் கல்விமுறை, இட ஒதுக்கீடு, வேலை வாய்ப்பு ஆகியவற்றில் அக்கறை உள்ளவராகவும். அடித்தள மக்களின் கல்வி உரிமைக்காகவும், இட ஒதுக்கீடு முதலியவற்றிற்காகவும் களத்தில் நின்றவராகவும் அவர் இருந்தார் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. இந்தக் கல்வி முறையின் போதாமையைச் சுட்டிக் காட்டுவதே அவர் நோக்கம். கல்வியின் ஆக முக்கியமான நோக்கம் கற்பவர்களைச் சுய மரியாதை உள்ளவர்களாக ஆக்குவது. அதற்கு இன்றைய கல்வி முறை பயனற்றதாக மட்டும் அல்ல அதற்கு எதிராகவும் உள்ளதைச் சுட்டிக் காட்டத்தான். 

கடவுள் நம்பிக்கை குறித்த அவரது கருத்தும் நுணுக்கமான ஒன்று. 

“நான் ஒரு நாத்திகனல்ல. தாராள எண்ணமுடையவன். நான் ஒரு தேசியவாதியுமல்ல. தேசாபிமானியுமல்ல. ஆனால் தீவிர ஜீவரஷா எண்ணமுடையவன். எனக்கு சாதி என்பதோ, சாதி என்பதன் பெயரால் கற்பிக்கப்படும் உயர்வு தாழ்வுகளோ கிடையாது.”  - இது பெரியார் தன்னைப்பற்றி சொல்லிக் கொண்டது.

பெரியாரை ஆக இறுக்கமான ஒரு நாத்திகர் என நம்பிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒருவேளை அவரது இந்தக் கூற்று அதிர்ச்சியாக இருக்கக் கூடும். இது ஏதோ அவர் விளையாட்டாய்ச் சொன்னதல்ல. படு ‘சீரியசாகச்’ சொன்னது. 

கடவுள் இருக்கா இல்லையா என்பதெல்லாம் ஒரு வெட்டி வாதம். அதற்கு முடிவே கிடையாது. இருப்பதாக நம்புகிறவன் இல்லை எனச் சொல்பவனையும், இல்லை என்பவன் இருக்கிறது எனச் சொல்பவனையும் ஒருவனை ஒருவன் முட்டாள் எனச் சொல்லிக் கொண்டே காலம் கழிப்பதுதான்  என்பதே பெரியாரின் கருத்து. 

ஒருவர் கேட்டார்: 

’உங்கள் முன் கடவுள் தோன்றி இப்போது என்ன சொல்கிறாய் எனக் கேட்டால் என்ன பண்ணுவீர்கள்?’ 

பெரியார் சொன்ன பதில்: “அப்படி கடவுளே என் முன்னால் வந்து நின்றால் அவரை கும்பிட்டுட்டுப் போறேன்..”

பெரியார் லேசுப்பட்டவர் அல்ல. “மக்களுக்கு ஆத்திகம் நாத்திகம் என்பதற்குப் பொருள் தெரிவதே இல்லை. நாத்திகன் என்று சொன்னால் கடவுள் இல்லை என்று சொல்கிறவன் அல்ல. இருக்கிறது என்று நான் ஒப்புக்கொள்ளவும் இல்லை. புராண, இதிகாச, வேத, சாஸ்திரங்களை ஒப்புக் கொள்ளாதவர் களையே பார்ப்பனர் நாத்திகர் என்று குறிப்பிடுகின்றனர்” – என்பதுதான் இது குறித்த பெரியாரின் விளக்கம். 

“சமூக சீர்திருத்தம் என்றால் ஏதோ அங்கும் இங்கும் ஆடிப்போன, சுவண்டுபோன, இடிந்துபோன, பாகங்களைச் சுரண்டி, கூறுகுத்தி, சந்துபொந்துகளை அடைத்துப் பூசி மெழுகுவதுதான் என்று அநேகர் நினைத்திருக்கிறார்கள். ஆனால் நம்மைப் பொருத்தவரை நாம் அம்மாதிரித் துறையில் உழைக்கும் ஒரு சமுதாய சீர்திருத்தக்காரன் அல்லன் என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கிறோம். மற்றபடி நாம் யார் என்றால், என்ன காரணத்தினால் மக்கள் சமுதாயம் சீர்திருத்தப்பட வேண்டிய நிலைக்கு வந்தது என்பதை உணர்ந்து, உணர்ந்தபடி மறுபடி அந்நிலை ஏற்படாமலிருப்பதற்கு நம்மால் இயன்றதைச் செய்யும் முறையில் அடியோடு பேர்த்து, அஸ்திவாரத்தையே புதுப்பிப்பது என்கிறதான தொண்டை ஏற்றுக் கொண்டிருக்கிற படியால், சமுதாய சீர்திருத்தம் என்பதைப் பற்றி மற்ற மக்கள் அநேகர் நினைத்திருந்ததற்கு நாம் மாறுபட்ட கொள்கைகளையும், திட்டத்தையும், செய்கையையும் உடையவராய்க் காணப்பட வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

இதனாலேயேதான் பலவற்றில் மக்கள் உண்டு என்பதை இல்லை என்றும், சரி என்பதைத் தப்பு என்றும், தேவை என்பதை தேவையில்லை என்றும், கெட்டது என்பதை நல்லது என்றும், காப்பாற்றப்பட வேண்டியது என்பதை ஒழிக்க வேண்டும் என்றும், பலவாறாக மாறுபட்ட அபிப்பிராயங்களைக் கூறுபவராக, செய்பவராக காணப்பட வேண்டிய நிலையில் இருக்கின்றோம்.”

அத்தோடு நிறுத்தவில்லை. பெரியார் தொடர்வார்: 

”ஆனால் நம்போன்ற இப்படிப்பட்டவர்கள் பழிக்கப்படாமலும் குற்றம் சொல்லப்படாமலும் இருப்பதும் உலகில் நல்ல பெயர் சம்பாதிப்பதும், மதிக்கப்படுவதும், அருமை என்பது மாத்திரம் (எனக்கு) நன்றாகத் தெரியும்.”

பகுத்தறிவுக் கல்வி எனச் சொல்கிறீர்களே அதென்ன? - என்கிற கேள்விக்குப் பெரியார் சொன்ன பதில்: “இந்த நாட்டில் இன்று கல்வி என்னும் பெயரால் பலகோடிக் கணக்கான ரூபாய்களைச் செலவு செய்து பல்கலைகழகம், கல்லூரி, உயர்தரப்ப பள்ளி என்பதாகப் பல்லாயிரக் கணக்கான பள்ளிகளை வைத்து கல்வி கற்பிப்பதைவிட, பகுத்தறிவுப் பள்ளிகளை’ மாத்திரம் வைத்து நிர்வாணமான சிந்தனா சக்தி தரும் படிப்பைக் கொடுத்து மக்களை எதைப்பற்றியும் எந்தப் பற்றுமற்ற வகையில் செல்லும் வரை சிந்தித்து முடிவுக்கு வரக் கற்பிப்போமேயானால்...” - என்பதாகப் பெரியாரின் ‘பகுத்தறிவுப் பள்ளியின்’ வரையறை செல்கிறது. பெரியாரின்  ‘நிர்வாணம்’ எனும் கருத்தாக்கத்தை இப்படி நாம் பல்வேறு திசைகளின் ஊடாக நாம் புரிந்து கொள்ள வேண்டும். 

இரண்டு அம்சங்களை நாம் இதில் கவனிக்க வேண்டும்:

1. கல்வி ஒருவருக்கு நிர்வாணமான சிந்தனா சக்தியை அளிக்க வல்லதாக இருக்க வேண்டும்.

2. கற்பவரை அது எந்தப் பற்றுமற்ற நிலையிலிருந்து சிந்திக்கத் தக்கவராக ஆக்க வேண்டும்.

எனவே கல்வியின் நோக்கம் ஏதொன்றையும் திணிப்பது என்பதைக் காட்டிலும், ஏற்கனவே இந்தச் சமூகத்தால் திணிக்கப்பட்டவற்றிலிருந்து ஒருவரை மீட்டு நிர்வாணமாக்குவதே. எத்தகைய முன்முடிவுகளும் பற்றுகளுமின்றி ஒன்றை அணுகும்போதே சரியான முடிவுக்கு வர இயலும். எனவே முன்முடிவுகளைத் துறந்து நம்மை  நிர்வாணமாக்கிக் கொள்வது கற்றலின் முதற் படி.

மொத்தத்தில் அவர் சொல்வது இதுதான். இந்தச் சமூகம், உன் பெற்றோர் உட்பட, உனக்குச் சொல்லி வைப்பதை எல்லாம் காதில் வேண்டுமானால் வாங்கிக் கொள்ளலாம். ஆனால் அப்படியே புத்தியில் ஏற்காதே என்பதுதான். 

மூன்று

இப்படி ஒரு சுய சிந்தனையாளனாக நம் முன் வாழ்ந்து மறைந்தவர் பெரியார், மக்களுக்கு, குறிப்பாகத் தமிழ் மக்களுக்குச் சுய மரியாதையையும், சுய சிந்தனையையும் ஊட்டுவதைத் தன் வாழ்நாள் பணியாக முன்வைத்து நீண்ட காலம் நம்மோடு வாழ்ந்து தனது 94 வது வயதில் மறைந்தவர் அவர். தனது கருத்துக்களை அவ்வப்போது எழுத்தாக்கி இன்றளவும் நமக்குத் தந்து சென்றுள்ளவர். இன்று உலகளவிலும், இந்திய தமிழ்ச் சூழல்களிலும் பல்வேறு மட்டங்களில் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக மிகப் பெரிய அளவில் அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. .

பெரியார் உயிருடன் இருந்த போதும் பல்வேறு எதிர்ப்புகளையும் எதிர்கொண்டுதான் வாழ்ந்தார். அவர் மறைந்தபின்னும் இப்படியான எதிர்ப்புகளையும் அவதூறுகளையும் எதிர்கொள்பவையாகவே அவரது கருத்துக்கள் உள்ளன.

பெரியார் குறித்து ஏராளமாகப்பேசலாம். சுயமரியாதையுடன் வாழ வேண்டும் எனும் கருத்துடைய யாரும் இதை எளிதாகப் புரிந்துகொள்வார்கள். பெரியாரைக் கொண்டாடுவார்கள்.


(இப்போதைக்கு முற்றும். தேவையானால் இன்னும் இன்னும் தொடரும்)

No comments:

Post a Comment