பாரதியார் - பரலி சு. நெல்லையப்பர்
செந்தமிழ் நாட்டிலே தோன்றிச் சிறந்த பாடல்களினால் தாஞ்நாட்டுக்குப் புத்துயிர ளித்த தற்காலப் பெருமக்களில் காலஞ் சென்ற சுப்ரமணிய பாரதியார் ஒப்பற்றவராவர். சென்ற சில ஆண்டுகளுக்கிடையில் தமிழ் மொழியில் உயிருள்ள பாடல்கள் பாடிய ஒப்பற்ற புலவர் பாரதியார் ஒருவரென்றே சொல்ல வேண்டும். தமிழ் உலகத்திலே பாரதியார் ஒரு மின்னல் போலத் தோன்றி மறைந்தார்.
காலஞ்சென்ற சுப்பிரமணிய பாரதியாரின் சரித்திரத்தை அவருடன் இளமை முதல் பழகிய அறிஞர் சோமசுந்தர பாரதியாரின் எழுத்தால் அறியலாம். ஆனால் பாரதியாரது பூரணமான ஜீவிய சரித்திரம் இனித்தான் வெளியாதல் வேண்டும்.
1906 அல்லது 1907 ஆம் ஆண்டாயிருக்கலாம். வங்காளத்தில் சுதேசியக் கிளர்ச்சி மும்முரமாயிருந்த பொழுது தென்னாட்டில் சுதேசிய ஊக்கம் உயர்நிலையிலிருந்த காலத்தில் தூத்துக்குடியில் திரு.சிதம்பரம்பிள்ளை திரு.சுப்பிரமணிய சிவம் முதலியவர்கள் மீது வழக்கு ஏற்பட்ட பொழுது திரு.பிள்ளையவர்கள் வீட்டில் ஒரு நாள் மாலையில் நான் பாரதியாரை முதல் முதலாகக் கண்டேன்.
அப்பொழுதுதான் நான் அவர் பெயரைக் கூடக் கேள்விப்பட்டிருக்க வில்லை. என்னுடன் நெடுநாள் பழகிய ஒருவர் போல அவர் எனது கையைப் பிடித்து இழுத்து உலாவுவதற்காக அழைத்துச் சென்றார். அன்று தான் அவர் திருநெல்வேலி யிலிருந்து தூத்துக்குடிக்கு வந்திருந்தார். ஊருக்குப் புதிது. வெளியே உலாவுவதற்காக என்னைத் துணையாக அழைத்துச் சென்றார். அப்பொழுது அவர் சென்னையில் நடந்த ‘இந்தியா’ பத்திரிக்கைக்கு ஆசிரியராயிருந்தார். கல கலப்பான பேச்சு. குதூகலமான நடை. குங்குமப்பொட்டு. ஓயாது பாடும் வாய். ரோஜா நிறப்பட்டு அங்கவஸ்திரம் இவற்றை நான் என்றும் மறக்க முடியாது.
பாரதியார் பாடிய
வந்தே மாதரம் என்போம்- எங்கள்
மானிலத் தாயை வணங்குதும் என்போம்
எந்தையுந் தாயும் மகிழ்ந்து குலா
யிருந்ததும் இந்நாடே
என்ற தொடக்கத்து இரண்டு பாடல்களையும் காலஞ்சென்ற சென்னைப் பேராசிரியரான வி.கிருஷ்ணசாமி அய்யர் ஆயிரக் கணக்காக அச்சிட்டு ப் பள்ளி ப் பிள்ளைகளுக்குக் கொடுக்குமாறு ஏற்பாடு செய்திருந்தார். இந்தத் துண்டுப் பிரசுரங்களும் பாரதியார் சுதேச கீதப் புத்தகங்களும் சிதம்பரம் பிள்ளையவர்கள் வீட்டில்¢ஏராளமாய் கிடந்தன. அவற்றைப் படித்த பின்னரே அவற்றின் ஆசிரியர் பெருமையை ஒருவாறு உணர்ந்தேன். நான் அதுவரை படித்திருந்த பல பாடல்களிலும் காணாத புதுவையைப் பாரதியார் பாடலில் கண்டேன். அக்காலத்தில் மக்கள் உள்ளத்தில் தோன்றிப் பொங்கியெழுந்த தேச பக்தி வெள்ளமே பாரதியாரின் சுதேச கீதமாக வெளியாயிற்றென்று சொல்லலாம்.
பின்னர் சுமார் மூன்று ஆண்டுகள் சென்ற பிறகு தேச பக்தர் களுக்கு அடைக்கலாமாக விளங்கிய புதுச்சேரியில் சலவை பங்களாவில் நான் பாரதியாரை இரண்டாவது முறையாகச் சந்தித்தேன். அப்பொழுது பாரதியாரை ஆசிரியராகப் பெற்றிருந்த ‘சூரியோதயம்’ என்று வாரப்பத்திரிகையில் உப பத்திராசிரியராக இருக்குமாறு நான் அங்கே சென்றிருந்தேன். பாரதியார் அது காலை பார்த்த பொழுது என்னை அவர் கூர்மையாக உற்று நோக்கினார். ஊக்க மற்று, உணர்ச்சியற்று, உயிரற்று அடிமைப் பட்டுக் கிடக்கும் தமிழ்நாட்டிலிருந்து வரும் இவனிடம் ஏதேனும் உணர்ச்சி, ஊக்கம், உயிர் இருக்கிறதா என்று அவர் சிந்தித்தது போலத் தோன்றியது. நான் புதுவையில் இருந்த காலத்தில் பாதி நாள் இராக்காலத்தைப் பாரதியாருடனேயே கழித்தேன். அப்பொழுது பாரதியார் வறுமையில் வாழ்ந்திருந்த போதிலும் வந்தவர்களுக்கெல்லாம் அவர் வீடு சத்திரமாகவே விளங்கியது.
புதுவையில் அவர் வறுமையிலேதான் வாழ்ந்திருந்தார். ஆயினும் எல்லோரையும் வருத்தும் வறுமை அவர் உள்ளத்தை வருத்தவில்லை. இரவெல்லாம் அவர் பாடிக் கொண்டு ஆனந்தக் களிப்பிலேயிருப்பார். தாயுமானவர் பராபரக்கண்ணியை அவர் ஓயாமல் பாடுவார். அவர் பேச்செல்லாம் தேசப் பேச்சாயும் தெய்வப் பேச்சாயுமே யிருந்தன. இயற்கைக் காட்சியில் அவ்ர பெரிதும் ஈடுபட்டிருந்தார். அதிகாலையில் அவர் புதுவை நகரிலிருந்து சுமார் ஒரு மைல் தூரத்திலுள்ள மடுவுக்கு நீராடச் செல்வார். அப்பொழுது பூபாள ராகத்தில் திருப்பள்ளியெழுச்சி பாடிக்கொண்டு செல்வார்.
‘பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால்’ என்ற தொடக்கத்து ஐந்து பாடல்களடங்கிய பாரதமாதா திருப்பள்ளி எழுச்சியைப் பாடிய பொழுது நான் அவருடன் இருந்தேன். அல்லும் பகலும்அவர் தெய்வ சிந்தனையிலும் தேச சிந்தனையிலுமே ஈடுபட்டிருந்தார். சுதேச கீதங்களில் ஒரு பகுதியைத் தவிர்த்துப் பாரதியார் பாடல்களிலும் எழுத்துக்களிலும் பல புதுச்சேரியிலேயே இயற்றப்பட்டவையாகும்.
சுமார் பத்து ஆண்டுகள் புதுவையில் வாழ்ந்திருந்த பின்னர் பாரதியார் சென்னைக்கு வந்தார். அவர் புதுவையிலிருந்த காலத்தில் அவரது வியாசங்களை ஏற்று அவரை ஆதரித்து வந்த ‘சுதேசமித்திரன்’ அவரை மீண்டும் ஓர் உப பத்திராசிரியராகக் கொண்டது. (காலஞ்சென்ற சுப்பிரமணிய அய்யர் காலத்தில் சில காலம் பாரதியார் ‘மித்திரனில்’ உப பத்திராசிரியராக இருந்தார்).
ஆனால் அவரை ஓர் உப பத்திராசிரியராகக் கொண்டிருக்கும் பாக்கியத்தைச் ‘சுதேசமித்திரன்’ நீண்ட காலம் பெற்றிருக்க வில்லை. புதுவையில் அவர் வறுமையில் வாழ்ந்திருந்த பொழுது கஞ்சாப் பழக்கம் எவ்வாறோ அவரைப் பற்றி விட்டது. அவர் தமிழ் நாட்டிற்குத் திரும்பி வந்த பின்னரும் அத்தீய வழக்கம் அவரை விடாமற்பற்றி முடிவில் அவர் வாணாள் விரைவில் முடிவதற்கும் காரணமாய் நின்றது. நண்பர்கள் சொல்லியும் கேளாமல் சென்னைக்கு வந்த பின்னரும் அவர் கஞ்சாவை அதிகமாக உட்கொள்ளத் தொடங்கி விட்டார். அவர் வாழ்நாளில் பிற்காலத்தில் அவர் பாடிய பாடல்களிலும் கஞ்சா வெறியன் பயனை ஒருவாறு காணலாமென்றே நான் சொல்வேன்.
சென்னை-திருவல்லிக்கேணியில் துளசிங்கம் பெருமாள் கோயில் வீதியில் ஒரு வீட்டில் 1921-ஆம் ஆண்டு அவ்ர உயிர் துறந்தார். அன்று இரவு முழுமையும் நான் அவருடன் இருந்தேன். மற்ற நாட்களில் இருந்த கஞ்சா மயக்கத்துடன் அன்றிரவு அவரிடம் சாவு மயக்கமுஞ் சேர்ந்திருந்தது. நண்பர்களுக்குச் சாவாமை உபதேசஞ் செய்த பாரதியார் சாக நேர்ந்தது. பாண்டி நாட்டில் எட்டையபுரத்தில் தோன்றிய உடல் தொண்டை நாட்டில் சென்னை-திருவல்லிக்கேணியில் சாம்பலாகிக் கடலிலே கலந்தது.
நான் மேலே கூறியவாறு, பாரதியார் தமிழுலகில் மின்னல் போலத்தோன்றி மறைந்தார். அவர் தமது அற்புதப் பாடல்களாலும், அதிசயமான கட்டுரைகளாலும் தமிழ் மக்களுக்குப் புத்துயிர் அளித்தார். எளிய நடையில் அரிய கருத்துக்களை ஏற்றி இன்பமான பாடல்கள் பாடுவதில் பாரதியார் இணையற்ற புலவராக விளங்கினார். அவர் பாட்டிலும் உரையிலும் தமிழ் மாது புதுமையும், இளமையும், இனிமையும், எழிலும், ஒளியும், உயர்வும் கொண்டு விளங்குகின்றாள். பழந்தமிழன்னைக்கு இளமை யளித்த புலவர் பெரு மக்களில் பாரதியார் ஒருவரென்று நான் போற்றுகிறேன். தென்றலின் இனிமையையும் கடலின் பெருமையையும் வானத்தின் உயர்வையும், மலையின் மாட்சியையும் பாரதியார் தமிழிலே ஏற்றியிருக்கிறார். பாப நாசத்து அருவியின் தெளிவைப் பாரதியார் பாடலிலே காணலாம். அவர் பாடல்களிலும் கட்டுரைகளிலும் பல தமிழ் இலக்கியத்தில் நிலையான இடம் பெறும் என்பதில் அய்யமில்லை.
செந்தமிழ் நாடெனும் போதினிலே-இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே
பாருக்குள்ளே நல்ல நாடு - எங்கள்
பாரத நாடு
என்பன போன்ற நாட்டுப் பாடல்களைப் படிக்கும் எவர் உள்ளந்தான் தேசபக்தியுடன் எழுச்சி பெறாது?
அவர் பாடிய கண்ணன் பாட்டை அரவிந்தர் போற்றுகிறார். பாஞ்சாலிச பதம் வீர ரசம் நிறைந்து விளங்குகிறது. வீரத் தமிழ்ச் சொலின் சாரத்தை அதிலே காணலாம். ஞானரதம் இன்பக் கதை. அவரது கட்டுரைகளெல்லாம் இனிய, எளிய, தெளிய, அழகிய நடை. எல்லோருக்கும் விளங்கும் இன்பத் தமிழ். அவர் பிற்காலத்தில் பாடிய பாடல்களிலும் எழுதிய உரைகளிலும் வீரச்சுவை அதிகமில்லை.
தமிழ் நாடடின் தீவினைப்பயனால் கஞ்சா நோய் பாரதியாரைப் பற்றாதிருந்தால் அவர் நெடுநாள் வாழ்ந்திருந்து தமிழில் இன்னும் எத்தனையோ பாடல்களையும் எழுதியிருத்தல் கூடும். ஆனால் அவர் வறுமையின் கொடுமையால் மேற்கொண்ட கஞ்சா அவரைக் கொண்று விட்டது. அதற்குக் காரணம் தமிழ்ச் செல்வர்களேயாவர். தமிழ் நாட்டுச் செல்வர்கள் அவர் பெருமையை அறிந்து அவரை வறுமையில் வாட விடாமல் ஆதரித்திருந்தால், அவர் வறுமையில் வருந்திக் கஞ்சாவை நாட நேர்ந்திராது. ஆயினும் விதியின் கதி அவ்வாறாயிற்று. புலவர் வறுமை புலவரைக் கொன்றது. ஆனால் இனியேனும் தமிழ்நாட்டில் தோன்றி வரும் அறிஞர்களை புலவர்களை, கவிகளை ஆதரிக்குமாறு நமது செல்வர்களுக்குப் பாரதியாரின் கதி ஓர் எச்சரிக்கை விடுக்க வேண்டும்.
பாரதியார் மக்கள் மீது அளவற்ற ஆர்வம் உடையவர். தமிழ் மீது தனியாக் காதல் கொண்டவர். இதனைக் கீழ்வரும் அவரது பாடலில் காண்க.
‘யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல்
இனி தாவதெங்கும் காணோம்’
தேச விடுதலையில் அவர் அல்லும் பகலும் சிந்தனை கொண்டிருந்தார். தெய்வத்தின் மீது உறுதியான பக்தி கொண்டவர். ஜாதி வேற்றுமையற்றவர். சமயத்திலே பெரும் பற்றுள்ளவர். சொல்லும் செயலும் ஒன்று பட்டவர். பெண் விடுதலையில் பேரார்வம் கொண்டவர்.
பாரதியார் காலஞ்சென்ற பின்னரே அவரது பாடல்களின் பெருமையைத் தமிழ் நாடு பெரிதும் அறியத் தொடங்கியிருக்கிறது. ஆயினும் தமிழ் மக்கள் இன்னும் பாரதியாரைப் பூரணமாக அறிய வில்லை. பாரதியார் தமது நூல்களை ப் பதினாயிரக் கணக்காக அச்சிட்டு நாடெங்கும் பரப்ப வேண்டுமென்று ஆவல் கொண்டிருந்தார். ஆனால் அவர் விருப்பம் அவர் நாளில் நிறைவேறவில்லை. பாரதியார் பாடல்களை லட்சக்கணக்காகப் பல முறைகளில் அச்சிட்டு நாடெங்கும் பரப்ப வேண்டும். பாரதியார் பாடலை வாயுள்ள மக்களெல்லாம் பாட வேண்டும். செவியுள்ள மக்களெல்லாம் கேட்க வேண்டும். அதனால் தமிழ் நாடு பல வகைக் கட்டுகளினின்றும் விடுதலை பெற்றுப் புது வாழ்வும் பெரு வாழ்வும் பெற வேண்டுமென்பதே பாரதியாரின் கனவகா இருந்தது. அவர் கனவை நனவாகச் செய்வதற்கு அவர் பாடிய பாடல்கள் பெரிதும் துணைபுரியுமென்பது எனது கருத்து. பாரதி வாழ்க! வந்தே மாதரம்!
தமிழரசு 1933, பக்கம் 212-216)(இளந்தமிழன் டிசம்பர் 1987 இதழில்)
No comments:
Post a Comment