Friday, August 6, 2010

வெண்பாபுலி வேலுசாமிப் பிள்ளை

திராவிடன் 1.6.1917 முதல் இதழில் வெளிவந்தது

(மகாகனம் பொருந்திய திவான்பகதூர் சாமிக்கண்ணுப்பிள்ளை அவர்கள் வரவு நிமித்தமியற்றிய நேரிசை ஆசிரியப்பா

எல்.டி.சாமிகண்ணுப்பிள்ளை ஆங்கிலப் பேராசிரியரா விளங்கி, பிறகு அரசு அலுவலில் சேர்ந்து 1897 இல் கர்னூரில் டெபுடி கலெக்டராகவும்,1917 இல் நெல்லூர் கலெக்டராகவும் பணியாற்றி 1920 இல் அரசாங்கச் செயலாளராகப் பணிபுரிந்தார்.

இவர் 1905 இல் ராவ்பகதூர் பட்டமும் 1909 இல் திவான்பகதூர் பட்டமும் பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் பி.எல். பட்டமும் பெற்றதோடு 1910 இல் லண்டனில் எல்.எல்.பி. பட்டமும் பெற்றார்.

சென்னை மாகாணத்தில் முதல் தேர்தல் முடித்ததும் புதிதாக உருவாகி வெற்றியடைந்த ஜஸ்டிஸ் கட்சி 1920 இல் மந்திரி சபையை அமைத்தது.

சர்.பி.தியாகராயச் செட்டியாரை கவர்னர் மந்திரி சபை அமைக்குமாறு கேட்டுக் கொண்டார். அவர் மறுத்து, கடலூர் வழக்கறிஞர் சுப்பராயலு ரெட்டியாரை முதல்வராகக் கொண்ட மந்திரி சபையை நிறுவினார். பனகால் அரசர், கே.வி.ரெட்டி ஆகியோர் மந்திரியாக இருந்தனர்.
புகழ் வாய்ந்த சென்னை மாகாண முதல் சட்ட சபைக்குச் செயலாளராக எல்.டி.சாமிக்கண்ணுப் பிள்ளை நியமிக்கப்பட்டார். பின்னர் சர்.பி. இராஜகோபாலாச்சாரியர் சட்ட சபைத் தலைவர் பொறுப்பிலிருந்து விலகிய போது 1924 பிப்ரவரி 5 இல் சாமிக்கண்ணுப்பிள்ளை சட்ட சபைத் தலைவராக நியமனம் செய்யப் பெற்றார்.
கிறித்துவரான இவர் 1903 இல் ஐரோப்பிய யாத்திரையை மேற்கொண்டபோது ‘வத்திகானில்’ போப் ஆண்டவரைச் சந்தித்து அவருடன் பிரெஞ்சு, இலத்தீன், இத்தாலி ஆகிய மொழிகளில் பேசி அவரை வியப்பிலாழ்த்தினார்.

எல்,டி,.சாமிக்கண்ணுப்பிள்ளை இந்தியக் காலக் கணிதத்தைக் கணித்து ‘இந்திய எபிமெரிஸ்’ என்னும் பெயிரல் நூல் எழுதியுள்ளார். இந்நூல் 1922 இல் சென்னை அரசாங்கம் எட்டுப் பெரிய தொகுதிகளாக மூவாயிரம் முழுஅளவுப் பக்கங்களில் வெளியிட்டுள்ளது. ‘வி.ர.சுமித்தம் பண்டைய இந்தியா’ என்னும் நூலிலே இதைப் புகழ்ந்து போற்றியுள்ளார். 1300 வருட பஞ்சாங்கமாக இந்நூல் விளங்குகிறது.

வெண்பாபுலி வேலுசாமிப் பிள்ளை (1850/1923)

‘புலியூர் வெண்பா’,‘ சிதம்பரேசுவரர் விறலிவிடு தூது’ முதலிய இயற்றமிழ்நூல்களையும், இவர் தம் பெயரால் இக்காலத்து, ‘தில்லைவிடங்கன் மாரிமுத்தாப்பிள்ளை கீர்த்தனங்கள்’ என வழங்கும் இசைப் பாடல்கள் முதலிய இசைத்தமிழ் நூல்களையும் ஐயனார் நொண்டி, வருணாபுரிக் குறவஞ்சி, அநீதி நாடகம் முதலிய நாடகத் தமிழ் நூல்களையும் இயற்றி முத்தமிழ் வேந்தராய் விளங்கிய மாரிமுத்தாபிள்ளையின் ஐந்தாம் தலைமுறையினராக விளங்குகிறார் வெண்பாப்புலி வேலுசாமிப் பிள்ளை.

இவர் பாடுவதில் கடினம் எனக் கூறப்படும் வெண்பா பாடுவதில் வல்லவர். தமிழ்தாத்தா உ.வே.சாமிநாதையருடன் ஒரு சாலை மாணக்கராக திருவாடுதுறை ஆதீனத்தில் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களிடம் ஐந்தாண்டு காலம் பயின்றவர். ஆசிரியரால் ‘வெண்பாப்புலி’ என அழைக்கப் பெற்றவர்.

கந்தபுராணத்தை 5663 வெண்பாக்களில் பாடி முடித்தவர். மேலும், திருக்கச்சூர் ஆலக்கோயிற் புராணம், திருவேட்டக்குடிப்புராணம், தில்லைவிடங்கன் புராணம், இலம் பயங் கோட்டூர்ப் புராணம், கச்சி குமரகோட்டத் தலப்புராணம் என்னும் புராணங்களை இயற்றியதுடன் 85 க்கும் மேற்பட்ட சிறு நூல்களை எழுதியவர். கந்தபுராணம் 22.5.1907 இல் காஞ்சி குமரகோட்டத்தில் அரங்கேற்றம் செய்யப்பட்டது. இச் செய்தி சுதேசமித்திரனில் வெளிவந்துள்ளது.

இவரியற்றிய `திருத்தில்லை நிரோட்டகயமக அந்தாதி’ என்னும் நூலுக்கு இலங்கை யாழ்ப்பாணம் சுன்னாகம் பூ.முருகேச பண்டிதர் உரை எழுதியுள்ளார். அவர் மாணவரும் நம்பியகப் பொருள் உரையாசிரியருமான சுன்னாகம் அ.குமாரசாமிப் புலவர் சாற்றுக் கவி வழங்கி உள்ளார்.

திரு.வி.க.வின் ஆசிரியரான யாழ்ப்பாணம் நா. கதிரைவேற்பிள்ளை இவருடைய நண்பர். கதிரைவேற்பிள்ளையின் தமிழ் அகராதி 1899 இல் வெளிவந்த போது வெண்பாப்புலியார் சாற்றுக் கவி வழங்கியுள்ளார்.

கதிரைவேற்பிள்ளை வள்ளலாரின் அருட்பாவை மருட்பா எனக் கூறி இரண்டாங் கட்டமாகத் தமிழகத்தில் எதிர்ப்புப் போர் நடத்தினார். இதன் காரணமாக வெண்பாப்புலியார் மறைமலை அடிகளாருடன் சேர்ந்து இவரை எதிர்க்க வேண்டி நேரிட்டது.

முப்பதாண்டு காலம் (1890-1920) காஞ்சிபுரம் பச்சையப்பன் பள்ளித் தலைமைத் தமிழாசிரியராக விளங்கினார். இவர் 1923 இல் காலமானார்.

வெண்பாப்புலியார் காஞ்சிபுரம் ஸ்ரீ கச்சபேஸ்வர ஐக்கிய நாணய சங்கத்திற்கு எல்.டி. சாமிக்கண்ணு¢பபிள்ளை 1916 இல் வருகை தந்த போது இயற்றி அளித்த வரவேற்பு இதழ், திராவிடன் மதல் இதழ் 3 ஆம் பக்கத்தில் வெளிவந்துள்ளது.

வெண்பாப்புலி வேலுசாமிப்பிள்ளை என்னுடைய பாட்டனார் (தாத்தா- தந்தையின் தந்தை) என்பது குறிப்பிடத்தக்கதாகும்.- தி.வ.மெய்கண்டார்.)

மகாகனம் பொருந்திய திவான்பகதூர் சாமிக்கண்ணுப் பிள்ளை அவர்கள் வரவு நிமித்த மியற்றிய நேரிசை ஆசிரியப்பா

சீர்தரும் வளங்கள் செறிகோ யம்பத்
தூர்தரு சில்லா விலோர்தரு சோமனூ
ரென்னும் பதியி லினிதுறை சீர்த்தி
மன்னு சாமிக் கண்ணு மகிப!
அமிழ்தினு மினிய தமிழ்நனி யுணர்ந்தோய்!
சொற்றிடும் பல்கலை கற்றுணர் மாண்பினோய்!
செப்பரு மாங்கிலத் தொப்பில் நிபுண!
எம்.ஏ.,பி.எல்., எல்.எல்.பி.யெனும்
செமமையார் பட்டம் திகழ்தரப் பெற்றோய்!
வான சாஸ்திர ஞானமிக் குடையோய்!
சர்வகலா சாலைச் சங்கத் தொருவ!
பாரதிற் சனோப கார மாக
எண்ணிலாச் சங்கம் நண்ணிட வமைத்தவ!
சொல்லரும் புகழுடைச் சில்லா கலெக்ட
ரோதா வுடைய மேதா வியனே!
பங்கமி லிலக்கியச் சங்கம் பதிப்பவ!
அகமகிழ் தருதிவான் பகதூர ரபிதானம்
விளங்கப் பெற்ற களங்கமில் பெரியோய்!
எளியவர்க் கருள்செ யளிதரு குணத்தோய்!
பரோப கார கிருபா கரனே!
துன்னரு மாயிரத்துத் தொள்ளா யிரத்துப்
பதினா றாண்டிற் பதிகளுட் சிறந்த,
கச்சிப் பதியில் மெச்சிட வோங்கும்
பிள்ளையார் பாளையத் தெள்ளளில் சீர்சால்
முத்தி முடிவெனும் சித்தி நூல் செய்தருள்
சரவண தேசிகர் கிருக மதனில்
பொங்குசீ ரைக்கியச் சங்க மொன்று
செப்பரும் புகழ்சால் சுப்பிர மணிய
ஐயரால் ரிஜிஸ்தர் செய்யப் பெற்றது,
நெய்தற் றொழிலினோ ருய்தரும் பொருட்டே
யேற்படும் நூற்சங் கவேற்பா டுதன்னைப்
பதிவு புரிந்ததால் நிதிகோ டிதந்த
பரிசு போலும் பரிசு போலும்
கார்செயு முதவிக்கு நேருப கார
மார்செய வல்லவ ரன்ன
மாண்புடை நின்தனக் கென்புகல் வதுவே.
நேரிசை வெண்பா
பூமிக்கண் ணல்ல புகழுடைய சற்குணனாம்
சாமிக் கண் ணென்னுமபி தானத்தான்- தேமிக்க
தாருடையான் சோமூர்த் தி........
பேருடையான் வாழ்க பெரிது.

காஞ்சிரம் பிள்ளையார் பாளையம் ஸ்ரீகச்சபேஸ்வர ஐக்கிய நாணய சங்கத்தின் நிர்வாகக் கமிட்டியார்அவர்களாற் பிரசுரஞ் செய்யப் பெற்றது.

இவை யியற்றியவர் — யூர் பச்சையப்பன் ஹைஸ்கூல் தலைமைத் தமிழ்ப் பண்டிதர் வெண்பாப்புலி தி.சு. வேலுசாமிப்பிள்ளை சென்னை-பிங்கள வருடம் வைகாசி மாதம் 1917 ஜுன் 1 மலர் 1 இதழ் 1 (திராவிடன் முதல் இதழில் வெளிவந்தது)

No comments:

Post a Comment