Thursday, March 17, 2011

நதி நீர் இணைப்பு மசோதா - வைகோ நாடாளுமன்றத்தில் பேச்சு -2

தீபகற்ப ஆறுகள் மேம்பாடு


இத்திட்டத்தின் பூர்வாங்க அறிக்கைகளின்படி, தீபகற்பப் பகுதி ஆற்று மேம்பாட்டுத் திட்டத்தினால், ஆந்திரப் பிரதேசத்திலும், தமிழ்நாட்டிலும் 50 இலட்சம் ஹெக்டேர் பரப்பு கூடுதல் நிலங்களுக்குப் பாசன வசதி கிடைக்கும். இத்திட்டத்தை நிறைவேற்ற, 1994-95 விலை நிலவரப்படி ரூ 30,000 கோடி செலவாகும். இத்திட்டத்தை நிறைவேற்றப் பல பத்தாண்டுகள் பிடிக்கும் என்பதால், இந்தச் செலவுத் தொகையைப் பார்த்து மத்திய - மாநில அரசுகள் இத்திட்டத்தை நிறைவேற்றாமல் இருந்துவிடக் கூடாது.

காவிரி வடிநிலப் பகுதி உழவர் பெருமக்கள் நெருக்கடி நேரத்தில் வானத்தையும், கர்நாடக மாநிலத்தையும் பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை நீங்க வேண்டுமானால், ஆற்று வடிநிலப் பகுதிகளிடையே நீர் மாற்றத்திற்கான திட்டத்தைத் தொடர்புடைய ஒவ்வொருவரும் போர்க்கால அடிப்படையில் உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

இதில் தொடக்க முயற்சி மத்திய அரசிடமிருந்து வரவேண்டும். ஆற்று வடிநிலங்களிடையே ஆற்று நீர் மாற்றத்திற்குத் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் முதலிடம் அளிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இதனை ஒரு கடமைப் பொறுப்பாக ஏற்றுக் கொண்டுவிட்டோம். ஆயினும், இதுபற்றிய அவர்களின் தகவல்கள் இன்னும் நாளது தேதிவரை புதுப்பிக்கப்படவில்லை; அவர்கள் இன்னும் கங்கை - காவிரி இணைப்புப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் போக்கு திருத்தப்பட வேண்டும்.

ஒருங்கியல் பட்டியலில் நீர்

இறுதியாக, இன்று நீர் மாநிலப் பட்டியலில் ( State List ) இடம்பெற்ற ஒரு பொருளாக இருந்து வருகிறது. இதனை மாற்றி, நீரை ஒருங்கியல் பட்டியலில் ( Concurrent List ) சேர்ப்பதற்கு அரசமைப்புச் சட்டத்தைத் திருத்துவதற்காக மத்திய-மாநில அரசுகள் ஒருமித்த கருத்தினை எட்ட வேண்டும். இரு நாள்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எனது நண்பர்கள், இத்தகைய கருத்துகளையும் கண்ணோட்டத்தையும் என்னிடமிருந்து தாங்கள் எதிர்பார்க்கவில்லையென்று வியப்புத் தெரிவித்தார்கள். சிலர் இதற்காக என்னைப் பாராட்டினார்கள்.

நான் மாநில சுயாட்சியில் அசைக்க முடியாத நம்பிக்கையுள்ளவன். நான் வலியுறுத்த விரும்புவதெல்லாம் இதுதான். நீரை மாநிலப் பட்டியலிலிருந்து மாற்றி அதனை ஒருங்கியல் பட்டியலில் சேர்க்கவேண்டும். அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் இருப்பதுபோல் எஞ்சிய அதிகாரங்கள் அனைத்தும் ( Residual Powers )மாநிலங்களுக்கே வழங்கப்பட வேண்டும். அதன்மூலம் உண்மையான கூட்டாட்சி அமைய வேண்டும்.

ஆனால், நீரைப் பொறுத்தவரையில் இது மாநிலப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு, ஒருங்கியல் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும். அது மிகவும் முக்கியமானதாகும். சாதாரணமாக எந்த ஒரு பொருளையும் மாநிலங்களின் அதிகார வரம்புக்குட்பட்ட பொருள்களின் பட்டியலிலிருந்து எடுத்துவிட்டு ஒருங்கியல் பட்டியலில் சேர்ப்பதை நாங்கள் விரும்பவில்லை. ஆனால் நீர் பற்றிய பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு அதனை ஒருங்கியல் பட்டியலில் சேர்த்தாக வேண்டும். புதிய நூற்றாண்டில் நிறைவேற்றப்படவிருக்கும் திட்டங்களில் நீர்வளத் திட்டங்களுக்குத் தலையாய முன்னுரிமையளிக்க வேண்டும்.

காவிரி வடிநிலம்

தென்னிந்தியாவில், கோதாவரி, கிருக்ஷ்ணா, மகாநதி ஆகிய நதிகளுக்கு அடுத்தபடியாக நான்காவது பெரிய நதியாக விளங்குவது காவிரி. இது மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து தோன்றி, 802 கி.மீ. தூரம் ஓடி வங்காள விரிகுடாவில் கலக்கிறது. பிரதான ஆறு கர்நாடகத்தில் 381 கி.மீ. தூரமும் தமிழ்நாட்டில் 357 கி.மீ தொலைவும் ஓடுகிறது. காவிரி நதிநீர் தொடர்பான 1924ஆம் ஆண்டு உடன்படிக்கையில் சில குறிப்பிட்ட பிரிவுகளில் வகுத்துரைக்கப்பட்டுள்ள வரம்புகளும், ஏற்பாடுகளும் அது நிறைவேற்றப்பட்ட தேதியிலிருந்து 50 ஆண்டுகள் முடிவடைந்ததும் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும். இந்த மறுபரிசீலனை எதிர்கொள்ளும் அனுபவத்தின் அடிப்படையிலும், அந்தந்த அரசுகளின் ஆட்சிப் பரப்புகளுக்குள் பாசன வசதியை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்தறிவதன் அடிப்படையிலும், ஒருவருக்கொருவர் ஒப்புக் கொள்ளக்கூடிய மாற்றங்கள், சேர்ப்புகளின் அடிப்படையில் நடைபெற வேண்டும்.

நதிநீர்ப் பூசல்கள்

பல்வேறு நாடுகளிடையே ஓடும் ஆறுகள் தொடர்பாக பன்னாட்டு ஆற்று நீர்த் தகராறுகள் எழுந்துள்ளன. இந்த ஆறுகள் பற்றிய பூசல்களைத் தீர்ப்பதற்கு எத்தனையோ கோட்பாடுகளும், கொள்கை அணுகுமுறைகளும் உண்டு. இக்காலத்தில், ஐரோப்பா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களில் பல நாடுகளுக்கிடையே இத்தகைய பூசல்கள் எழுந்துள்ளன.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, இந்தியா போன்ற பெரிய கூட்டாட்சி நாடுகளிலும் இத்தகைய பூசல்கள் ஏற்பட்டுள்ளன. ஐரோப்பாவில் 17ஆம் நூற்றாண்டிலேயே ஆற்று நீர்த் தகராறுகள் எழுந்திருக்கின்றன. ஆஸ்திரியாவுக்கும், துருக்கிக்கும் இடையில் டான்யூப் நதியிலும், ஜெர்மனிக்கும் பிரான்சுக்கும் இடையில் ரைன் நதியிலும், கப்பல் போக்குவரத்து நடத்துகின்ற உரிமைகள் குறித்துப் பூசல்கள் ஏற்பட்டன.

நதிநீர்ப் பூசல்களினால் போர்கள் கூட நடந்திருக்கின்றன. சோழப் பேரரசின் மன்னர்கள் ஆற்று நீர்ப் பூசல்களைத் தீர்க்க படையெடுத்துச் சென்றதை நினைவுகூர விரும்புகிறேன். ஆனால், இன்று காலம் மாறிவிட்டது. அதுபற்றியெல்லாம் பேச நான் விரும்பவில்லை. புத்தர் காலத்தில் வட ரோகிணி ஆற்றின் நீரைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாகச் சாக்கியர்களுக்கும், கோலியர்களுக்குமிடையில் சண்டைகள் நடந்திருக்கின்றன. ரோகிணி நதிநீர்ப் பங்கீடு குறித்து சாக்கியர்களும், கோலியர்களும் கடும் போரிடுவதையும், நீருடன் கலந்து இரத்த ஆறு ஓடுவதையும் பற்றி கவுதம புத்தர் அறிந்தபோது அவர், இருதரப்பினருடனும் பேச்சு நடத்தினார். சுமூகமான உடன்பாடு ஒன்று எட்டப்பட்டது. அவர் இந்தப் பிரச்சினையைத் தீர்த்து வைத்தார். அவர் தேவையான ஒரு காரியத்தைச் செய்தார். நீண்டகாலப் பூசலை முடிவுக்குக் கொண்டுவர இரு தரப்பினருக்குமிடையில் இணக்கம் ஏற்படுத்துவதில் கவுதம புத்தர் வெற்றி கண்டார்.

வட அமெரிக்காவில் அமெரிக்காவுக்கும், மெக்சிகோவுக்கும் இடையில் ரியோ கிராண்ட் - கொலராடோ ஆறுகள் குறித்தும், தென் அமெரிக்காவில் அமேசான் மற்றும் டெல் பிளாட்டா வடிநிலம் குறித்தும் பல தகராறுகள் எழுந்தன. ஆப்பிரிக்காவில் நைல் நதி நீர்ப் பங்கீடு குறித்து முக்கியமாக சூடானுக்கும், எகிப்துக்கும் இடையில் பூசல் எழுந்தது. இந்தத் தகராறில் ஏழு பிற நாடுகளும் தொடர்பு கொண்டிருந்தன. மேற்கு ஆப்பிரிக்காவில் நைஜர், செனிகால் ஆறுகள் பற்றிய தகராறுகள் எழுந்தன.

தென் கிழக்கு ஆசியாவில் கீழ் மேக் லிங் வடிநிலத்தில் கூட்டு ஏற்பாடுகளுக்கு லாவோஸ், தாய்லாந்து, வியட்நாம், கம்போடியா ஆகிய நாடுகள் தரப்பினர்களாக உள்ளன. அமெரிக்காவில் டெலாவர், லூராமி ஆறுகள் தொடர்பான நிலங்களிடையிலான பூசல்கள் தீர்க்கப்பட்டிருக்கின்றன. ஆஸ்திரேலியாவில் முர்ரே ஆற்று வடிநிலம் தொடர்பாக நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா, தெற்கு ஆஸ்திரேலியா ஆகிய மாநிலங்களுக்கிடையே எழுந்த பூசல்களுக்குத் தீர்வு காணப்பட்டிருக்கின்றது. கனடாவில் மானிட்டோயா, ஆல்மெட்டா, சாஸ்ஜெட்சிவான் ஆகிய மாநிலங்களுக்கிடையே சாஸ்ஜெட்சிவான் நதி குறித்து எழுந்த தகராறு தீர்க்கப்பட்டுள்ளது.

உலகெங்கிலும் பல்வேறு நாடுகளிடையே ஓடும் நதிகள் தொடர்பாக பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. அப்படியிருக்க, ஒரு நாட்டிற்குள் ஓடும் ஆறுகள் பற்றிய பூசல்களைத் தீர்ப்பதில் என்ன சிரமம் இருக்க முடியும்? நைல் நதி நீர் தொடர்பாக எகிப்துக்கும் சூடானுக்கும், இடையிலான தகராறு தீர்க்கப்பட்டுவிட்டது. அதேபோன்று, இந்தியாவில் ஓடும் ஆறுகள் தொடர்பான தகராறுகளுக்கு இணக்கமான இறுதித் தீர்வு காண்பதற்கு ஆறுகளின் நீர் நாட்டுடைமையாக்கப்பட வேண்டும். இந்த நோக்கத்துடன்தான், கடந்த காலத்தில் உலகெங்கும் நதிநீர்ச் சிக்கல்கள் எவ்வாறு தீர்க்கப்பட்டன என்பதை இந்த அவையின் மாண்புமிகு உறுப்பினர்களின் கவனத்திற்குக் கொண்டு வந்தேன்.
(தொடரும்)

No comments:

Post a Comment