Friday, October 17, 2014

பெரியார் - தமிழ்த் தேசத் தந்தை – 7

பெரியார் - தமிழ்த் தேசத் தந்தை – 7

பன்மொழிப்புலவர் கா.அப்பாதுரையாரின் சவுக்கடி:

திராவிட நாடு இருந்ததற்கான சான்றுகளைத் தேடி அலையும் தோழர் பெ.மணியரசன் அவர்கள் எளிதில் அடையாளம் காண்கின்ற வகையில், திராவிடம் என்பதும் குறித்தும் திராவிடர் என்பது குறித்தும் 32 தலைப்புகளில் பன் மொழிப் புலவர் கா. அப்பாதுரையார் அவர்கள் எழுதிய இதுதான் திராவிட நாடு என்னும் நூலிலிருந்து சில பகுதிகளைத் தருகிறேன்.
பழைய தமிழகத்தில் இன்றைய இலங்கை ஒரு பகுதி. இதை யவன உரோமர் குறிப்புகளே சுட்டிக் காட்டுகின்றன. தமிழகத்தில் ஓடும் தாம்பிரபரணி - தண் பொருநை - அன்று இலங்கை வழியாக ஓடிற்று. இலங்கையில் அது ஓடிய படுகையையும் விழும் இடத்தையும் இன்றும் காணலாம் என்று பலர் கூறியுள்ளனர். செந்தமிழ் பேசும் மக்கள் பழைய செந்தமிழ் நாட்டெல்லையாகிய இப்பகுதி வரை இன்றும் வாழ்கின்றனர். ஈழத்துத் தமிழ்ப் பெரும் புலவர் யாழ் நூல் இயற்றிய விபுலானந்த அடிகள் பிறந்த ஊர் பண்டைச் செந்தமிழ் மாநிலத்தின் இத் தென் கீழ்க் கோடியிலே உள்ளது.
கொங்கு - ஈழம் இந்த இரண்டு சொல்லுக்கும் தமிழில் பொன் என்ற பொருள் உண்டு. பொன்னாறே பொன்னியாகிய காவிரி! வடபெண்ணை, தென் பெண்ணை - வடவெள்ளாறு, தென் வெள்ளாறு போல, பண்டு வடபொன்னி, தென்பொன்னி ஆறுகள் இருந்திருக்கலாமோ என்று கூடக் கருதலாம். ஏனெனில் இலங்கையில் இடைக்காலத்தில் சோழர் எழுப்பிய தலைநகரம் பொலன்னருவாவிலும் ஈழம் என்ற இச் சொல்லின் பொருள் தொனிக்கிறது. இரு பொன்னிகளும் ஓடிய நிலங்களின் பெயர்களும் இதற்கேற்ப ஒருமையுடையவையாய் இருக்கின்றன. காவிரிக்கு வடக்கி லுள்ள தமிழகம் பண்டு அருவா என்றும் மாவிலங்கை என்றும் அழைக் கப்பட்டிருந்தது. ஈழம் தென் அருவா அல்லது பொன் அருவா அல்லது பொலன் அருவாவாகவும், தென்னிலங்கை அல்லது சிறு இலங்கை யாகவும் பெயர் பெற்றிருத்தல் இயல்பு.
பழந்தமிழ் நாகரிகம் பல திசையில் கெடாது பேணும் மலையாள மக்க ளுக்கும், இலங்கை வாழ் தமிழர் மட்டுமின்றி இலங்கை வாழ் சிங்கள வருக்கும் பல ஒப்புமைகள் மொழியில் பழக்க வழக்கங்களில், பண்பாட்டில் இன்றும் காணப்படுகின்றன. இவற்றை நாம் தென்கிழக்காசியா எங்குமே காணலாம்....
தமிழகத்தில் உள்ள ஊர்ப்பெயர்கள், மரபுப் பெயர்கள், ஆற்றுப் பெயர்கள் தென்கிழக்காசியாவெங்கும் கடல் கடந்து, சாவா, போர்னியோ, செலிபீஸ் தீவுகள் வரை காணப்படுகின்றன. பண்டைச் சப்பானிய எழுத்துக்கள் தமிழ் எழுத்துக்களின் திரிபே என்று சப்பானிய பழமையாராய்ச்சியாளர் குறித்துள் ளனர்.
சேர நாட்டவரையும் திபெத்தியரையும் போலவே, சீனர் தம்மை வானவர் என்று குறித்துக் கொண்டனர். இம் மூன்று நாடுகளிலும், சப்பானிலும் உள்ள கோயில்கள், நாடகங்கள் ஆகியவற்றின் ஒப்புமைகள் வரலாற்றுக் காலத் தொடர்பு கடந்தவை....
பண்டைத் தமிழரும், மலாய் மக்களும் கடலோடிகளாய் இருந்தனர். பிரிட்டன் உலகில் ஒரு பெருங்கடலரசாக வளர்ந்த காலம் 19-ஆம் நூற்றாண்டே யாகும். அதுவரை உலகின் கடற் பேரரசுகளாகவும் வாணிகப் பேரரசுகளாகவும் நிலவியவர்கள் இவர்களே. மேற்கே நடுநிலக்கடல் நாடுகளில் பரவிய திரையர் பண்டைய திராவிட இனத்தவரே என்று திருத்தந்தை ஹீராஸ் குறிப்பிடுகிறார். அதுபோல் அவர்கள் கிழக்கேயும் சீனம், சப்பான் கடந்து நெடுந்தொலை கடல் கடந்தும் கடலோரமாகவும் பரவியிருந்தனர். அமெரிக்க பழங்குடி மக்களைப் பற்றி ஆராய்பவர்கள் அக்கண்டத்தின் பழம் பெரு நாகரிகங்களான மய, இங்கா, பெருவிய இனங்கள் திராவிட இனத்துடனும் தென்கிழக்காசிய நாகரிகத்துடனும் மிகப் பழந்தொடர்புடையவை என்று குறித்துள்ளனர். வெற்றிலை, பாக்கு, சுண்ணக் கலவை இத்தொடர்புக் குரிய ஒரு சின்னம் என்று அவர்கள் கருதுகின்றனர்.
இங்ஙனம் விந்த முதல் குமரி வரை மொழியின வாழ்வு பெருக்கி, மேற்கும் கிழக்கும் பண்டை நாகரிக உலகெங்கணும் பண்பு பரப்பிய உலகின் தலை மாநிலமே திராவிட நாடு.
கொங்கு - ஈழம் என்ற இரண்டு சொற்களுக்கு உள்ள தொடர்பையும் பொருளையும் மலையாள மக்களுக்கும் இலங்கைவாழ் தமிழர்கள் மட்டுமின்றி சிங்களர்க்கும் உள்ள பண்பாட்டு தொடர்பையும் பன்மொழிப் புலவர் அப்பாதுரை யார் விளக்குவதோடு இலங்கை பண்டைய தமிழகத்தின் ஒரு பகுதி என்றும் நிறுவியுள்ளார்.
மேலும் கா. அப்பாதுரையார் அவர்கள்,
கதிரவன் வழிபாடு, நாக வணக்கம், உழவுத் தொழில், நெற்பயிர் விளைவு, பருத்தி நூற்றல், நெசவு, ஆநிரை பயிர்ப்பு முதலிய பண்புகளை உலகெங்கும் பரப்பிய ஒரு தொல் பழங்காலப் பேரினம் இருந்ததென்று, கதிரவன் சேய்கள் என்ற பழமையாராய்ச்சி நூலில் டபிள்யூ.ஜே.பெரி என்ற அறிஞர் விரித்து விளக்குகிறார். எகிப்தியரும், தென்னாட்டவரும் இவ் வினத்தின் இரு பெருங்கிளைகள் என்று அவர் கருதுகிறார். உலக வரலாறு இயற்றிய எச்.ஜி. வெல்ஸ் என்பார், மேற்கிலும் கிழக்கிலு மட்டுமின்றி, வடக்கிலும் தெற்கிலும் கூடக் கிட்டதட்ட நாகரிக உலகெங்குமே தமிழினத் துடன் தொடர்புடைய ஒரு பழம் பேரினம் பரவியிருந்ததென்றும், மற்ற உலகப் பகுதிகளில் அது பின்வந்த பல இனங்களுடன் கலந்து விட்டாலும், கிட்டத்தட்டத் தனிப் பண்புடன் தென்னாட்டில் இன்றுவரை உயிர் வளர்ச்சி பெற்று வருகிறதென்றும் தெரிவிக்கிறார் .
மொழிப் பண்பிலும், வானூல், உழவு, நெசவு, கரும்பாலைத் தொழில், இரும்பு, கனிச்சுரங்கத் தொழில், சிற்பம் ஆகியவற்றிலும் இன்றைய மனித நாகரிகம் தொடங்குமுன்பே தமிழினத்தவர் இக் கால உலகம் வியந்து மூக்கில் கை உயர் வளம் பெற்றிருந்தனர் என்று கில்பர்ட் ஸ்லேட்டர் என்பார் இந்திய நாகரிகத்தில் திராவிடப் பண்பு என்ற நூலில் குறித்துள்ளார்....
விழுந்து கிடக்கும் உருவிலாப் பரப்பிலே, அது பகுத்தறிவுக் கண்கொண்டு கண்டு சுட்டிக் காட்டும் பொன்னுருவே திராவிட நாடு. வரலாற்றின் துணை கொண்டு பண்பும் எல்லையும் விளக்கி, உலக நாகரிகத்தின் போக்கினைத் தீட்டிக்காட்டி உரிமை முழக்கமிட்டு, வருங்கால நோக்கி உயிர்ப்பூட்டி அது எழுப்பி வரும் தேசீய ஆர்வத்துக்குரிய நிலைக்களமே திராவிட நாடு .
தமிழ்மொழி, தமிழ் இனம், தமிழ்ப்பண்பு இவை உயிர்ப்புடன் நிலவி, தங்கு தடையின்றி வளர்ந்து உலக நாகரிகம் வளர்த்து வந்துள்ள, வளர்க்க இருக்கிற இடமே திராவிட நாடு. இன்று அது இருக்குமிடத்தையே நாம் உலகப் படத்தில் காணமுடியாது
என்று கூறிய பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையார் அவர்கள், எங்கே திராவிட நாடு என்று கேட்ட காங்கிரஸ், சோ­லிஸ்டு கட்சி, தமிழரசு கட்சி ஆகியவற்றுக்கு, பிரிட்டிஷ் ஆட்சிக் காலம் வரை எவருக்கும் தலை வணங்காமல் உலகில் தனியாட்சி செலுத்திய மாநிலம் திராவிட நாடென்று விடை பகர்கின்றார். மேலும் அவர் கூறுகிறார்,
தென்திசை யரசர் வடதிசையில் படையயடுத்து அதை அடிப்படுத்திய துண்டு. நிலந்தரு திருவிற் பாண்டியன், ஆரியப் படை கடந்த பாண்டியன் நெடுஞ் செழியன், இமய வரம்பன், நெடுஞ்சேரலாதன், சேரன் செங்குட்டுவன், கரிகாற் சோழன், ஆந்திரப் பெரும் பேரரசர், கலிங்கப் பெரும் பேரரசர், சோழப் பெரும் பேரரசன் இராசேந்திரன் ஆகியோர் வரலாறுகள் இதற்குச் சான்று.... சோழப் பேரரசர் கலிங்கம் கடந்து கங்கையும் கடாரமும் அடிப்படுத்தியதுண்டு.... சேரன் செங்குட்டுவன் கங்கை கடந்து கனக விசயரை -பேரரசன் கனிஷ்கனையும் அவன் கூட்டாளியையுமே - கல் சுமக்க வைத்தான். ஹர்­ன் விந்தம் கடந்ததில்லை. ஆனால் விந்தம் கடக்குமுன் தென்னகம் ஆண்ட புலிகேசி ஹர்சனையும், தமிழகம் ஆண்ட பல்லவன் நரசிம்மவர்மன் அந்தப் புலிகேசியையும் வென்று மண் கொண்டனர்!
அலாவுதீன் கில்ஜி, முகமது பின் துக்ளக் விந்தம் கடந்த அன்றே தம் பேரரச வாழ்வு இழந்தனர். அவர்கள் வட திசையை எவ்வளவு எளிதில் கீழடக்க முடிந்ததோ, அவ்வளவு எளிதில் விந்த எல்லையை கடக்க முடியவில்லை.... தென்திசை வட திசையை வெல்ல முடிந்தது. வட திசை தென்திசையை என்றும் அணுக முடிந்ததில்லை.
ஆரியர், பாரசீகர், கிரேக்கர், குஷாணர், பார்த்தியர், ஊணர், அராபியர், ஆப்பானியர், முகலாயர் முதலிய பல அயலார் படையயடுப்புகளின் வரலாறே வட இந்திய வரலாறு. திராவிடர் பழம் பண்பாட்டின் சிதைவுடன் அவ் வயலார்களின் அயற் பண்பாடு கலந்த கலவைப் பண்பாடே வட இந்திய பண்பாடு என்னும் அவியல்! ஆனால் தென் திசை இந்த இனங்கள் எவற்றின் படையயடுப்புக்கோ, குடியயழுச்சிக்கோ என்றும் ஆட்பட்ட தில்லை.... தென்னகப் பண்பே கீழ்த்திசையின் ஒரே பழந்தேசீயப் பண்பாக நின்று நிலவுகிறது.... வடநாடு அடிமைப் பரப்பாக அல்லல் பட்டுக் கொண்டிருந்த இந்த இரண்டாயிர ஆண்டுக்காலமும் தெற்கே திராவிடம் தனிச் செங்கோல் ஓச்சிக் கொண்டிருந்த காலம்.
... கனவில் கூட காளிதாசன் போன்ற சமஸ்கிருதக் கவிஞர்கள் இரு கடற்கரை வரை நீண்ட வடதிசைப்பரப்பையே தம் கனவுகளுக்குரிய உச்ச எல்லைப் பெரும் பேரரசின் எல்லையாகக் கொண்டிருந்தனர்....முத்தமிழ் நாடுகளான சேர, சோழ, பாண்டிய நாடுகள் மூன்றையும் ஒருங்கே ஆண்ட மன்னரையே மூவுலகாண்ட மன்னரென்றும், அவருள்ளும் எழுகடல் தாண்டிக் கடல் கடந்த உலகாண்ட மன்னரையே ஏழுலகாண்ட மன்ன ரென்றும் தமிழக வரலாறு காணாத புராணிகரைத் தமிழர் பாட வைத்தனர்!
திராவிட நாட்டின் எல்லைகளை வரையறுக்க வந்த அப்பாதுரையார்,
திராவிட நாட்டுக்கு இயற்கை எல்லைகள் உண்டு. மூன்று புறம் கடல், ஒரு புறம் , வடக்கே விந்திய மலையும் நடுமேட்டு நிலமும் அவற்றின் கடக்க முடியாக் காடுகளும் நிலவுகின்றன. இன்றை இருப்புப் பாதைகள் கூட இவ்வெல்லையை இரு கோடிகளிலும் தான் ஓரளவு ஊடுருவிச் செல் கின்றன. நேர்மாறாக இந்திய மாநிலத்துக்கு இம்மாதிரி எல்லைகள் திராவிட நாட்டுக்கமைந்த எல்லையன்றி வேறு கிடையாது. ஏனெனில் திராவிடத் தையும் அப்பரப்பில் சேர்த்துக் கொண்டால்தான் திராவிடத்தின் முப்புற எல்லையாகிய கடல் அதற்கும் எல்லையாக தென்எல்லையாக முடியும். இல்லாவிட்டால் திராவிடத்தின் வட எல்லையே, அதன் தென் எல்லை என்று படம் பிடித்துக் காட்டுகிறார்.
திராவிட நாட்டுத் தேசீயம் என்பதை பற்றி அப்பாதுரையார் அவர்கள் பின் வருமாறு விளக்குகிறார்,
திராவிட நாட்டு எல்லை மட்டுமல்ல, தேசீயமும் இயற்கைத் தேசீயம். அது மொழியையும், இனத்தையும், நாகரிகத்தையும் வரலாற்றையும் அடிப் படையாகக் கொண்டது. அதில் பேசப்படும் மொழிகள் தமிழ், மலை யாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய திராவிட மொழிகள். இவை கிட்டதட்ட ஒரே மொழி என்று கூறத் தக்க அளவு அடிப்படை ஒற்றுமையும் பொது வரலாற்று, நாகரிக, இனத் தொடர்பும் உடைய மொழிகள். திராவிட நாட்டின் நில இயல் எல்லையில், தேசீய எல்லையடுத்து நிலவும் மாரத்தி, பீலி, குஜராத்தி, கோண்டு, கூயி, ஒரியா முதலிய மொழிகளில் கூட , கோண்டு பண்படாத் திராவிட மொழி என்று வகுக்கப்படுவது....
திராவிட நாட்டின் தேசீய எல்லை திராவிட நாட்டின் நில எல்லையைப் பார்க்கச் சற்றுக் குறைந்ததே. ஆனாலும் திராவிட இயக்கத்தலைவர்கள் நில எல்லை முழுவதும் கோரவில்லை. ஏனெனில் வட திசைப் போலித் தேசீயத்தைப் போலத் திராவிடத் தேசீயம் ஏகாதிபத்திய நோக்கக் கொண்டதன்று. நில ஆதிக்க, இன ஆதிக்க நோக்கம் கொண்ட தன்று. துருக்கிய மறுமலர்ச்சித் தந்தையான கமால் பாஷா இஸ்லாமிய எல்லை, துருக்கி நாகரிக எல்லை முழுதும் கோராமல் அவற்றை வேண்டாம் என்று உதறி இன எல்லையுடன் நின்றது போல, திராவிடத் தலைவர்களும் தம் இன எல்லையுடன் தம் தேசீயக் கோரிக்கையை நிறுத்துகின்றனர்....
மூவாயிர ஆண்டாக, வெள்ளையர் வரும்வரை தனி இனமாக, தனிபெருஞ் சுதந்திர நாடாகத் திராவிடம் நிலவி வந்தது....
கடலாண்ட இனம் திராவிடம் என்பதை கா. அப்பாதுரையார் பின்வருமாறு விளக்குகிறார்;
திராவிடம் பண்டிருந்து பிரிட்டிஷ் ஆட்சிக் காலம் வரை உலகின் செல்வ வளமிக்க நாடு. திராவிடர் நாகரிக உலக நாடுகளெங்கும் சென்று குடியேறியும், வாணிகம் வளர்த்தும் உலகின் குபேர நாடுகளில் முதல் குபேர நாடாகத் தம் மாநிலத்தை வளமாக்கியிருந்தனர். இன்று போல் உலகின் வாணிக விலைக் களமாகத் தென்னாடு என்றும் - அணிமைக் காலம் வரையிலும் - இருந்ததில்லை. தொழிலும் வாணிகமும் பெருக்கி, உலகெங்கும் தன் விலையேறிய சரக்குகளை அனுப்பி, பெருங்கள மாக்கியிருந்தனர். இதற்கேற்ப ஆழ்கடல் கடக்கும் கப்பல்களும் கப்பல் தொழிலும் திராவிடத்திலே செழிப்புற்றிருந்தன.
இரண்டாயிர ஆண்டுகளுக்கு முன் இமயம் வரை வென்று பர்மாவையும் தம் ஆட்சிக்குள் கொண்டு வந்திருந்த ஆந்திரப் பேரரசர் ஆழ்கடல் செல்லும் இரு பாய்மரக் கப்பல்களையே தம் நாணயங்களில் வீறுடன் பொறித்திருந்தனர்! இராசேந்திர சோழன் 12-ம் நூற்றாண்டில் கடாரம் அதாவது தென்கிழக்காசியாவை வென்று ஆண்டது இத்தகைய கப்பல் தொழிலின் உருத்தகு வெற்றிக்கு ஒரு சான்று....
திராவிடர் வரலாற்றிலும், தமிழிலக்கியம் முழுவதிலுமே தென்னவரின் இக் கடலோடிப் பண்புக்குச் சான்றுகள் ஏராளமாகக் காணலாம்.
தொல்காப்பிய காலத்திலிருந்து தமிழருக்குரிய முந்நீர் வழக்கம் அதாவது கடல் வாணிக மரபினை, ஆரியர்களும் அவர்கள் இலக்கியமும் அறியா. அவர்களின் சுமிருதி ஏடுகள் இதை திராவிடருக்குரிய தகா வழக்கம். ஆரியர் மேற் கொள்ளக் கூடாத பெரும் பழி என்று இதனைக் கண்டித்தன. திராவிடர் கடல் கடந்து வாணிகமும் குடியேற்றமும் கண்டனர். ஆரியரோ கடல் கடந்த வரை - திராவிடரைக் கூடத் தம் சாதி வருணாசிரமக் கோட்டை யிலிருந்து விலக்கிச் சட்டம் இயற்றினர்.
திராவிட நாட்டின் தனிப்பேரினம் திராவிட இனமே என்பதை இந்தியத் துணைக் கண்டத்தின் கூட்டுறவரசு வெளியிட்டுள்ள இனவாரிப் படமே தெளி வாகக் காட்டும். விந்தியம் வரையுள்ள தென்னகப் பரப்புத் தூய திராவிட இனமாகவும், பஞ்சாப், இமயமலையடிவாரம் தவிர மீந்த பகுதிகள் பல்வேறினங்களுடன் கலந்த திராவிட இனமாகவும் அதில் குறிக்கப் பட்டுள்ளன. ...
திராவிடம் தேசிய இனமா என்று வடவரும் வடவர் பக்தரும் கேட்கும் கேள்வி இவ்வாறு அவர்களுக்குத்தான் ஆபத்தான கேள்வியாக முடிகிறது. ஏனெனில் அதன் விடை திராவிடம் தேசிய இனம் மட்டுமன்று , திராவிடம் தான் பண்டை உலகின் ஒரே தேசிய இனம் என்பது, பாரதமோ பண்டை உலகிலும் தேசிய இனமன்று, இன்றைய உலகிலும் ஒரு தேசிய இனமன்று.
தமிழ்நாடு , இந்திய நாடு என்பதற்கு எப்படி சான்று காட்ட முடியாதோ அதே போல் இந்தியர் என்ற இனத்திற்கும் சான்று காட்ட முடியாது. தமிழர்கள் சேர நாடாகவும், சோழ நாடாகவும், பாண்டிய நாடாகவும் இருந்தார்களே தவிர தமிழ்நாட்டரசாக இருக்க வில்லை. எனவே எங்கே திராவிடம் என்று கேட்பவர்கள் தமிழ் நாடு எங்கே என்பதற்கு வரலாற்றுச் சான்றுகளைக் காட்ட வேண்டும்.
பாரதக் கூட்டரசு வெளியிட்டுள்ள இனவாரி நிலப்படத்தை மேற்கோள் காட்டி பன்மொழிப் புலவர் அப்பாதுரையார் அவர்கள்,
கிழக்கே வங்காளிகள் திராவிட -மங்கோலியக் கலப்பினத்தவர். அசாமியர் பண்படாத் திராவிடர் அதாவது நாகர் - மங்கோலியக் கலப்பினத்தவர். மேற்கே மராத்தியர், குஜராத்தியர் திராவிட - சிதிய இனக் கலப்பினத்தவர். விந்தியப் பகுதி பண்படாத் திராவிட - மங்கோலிய - ஆரியக் கலப்பினத் தவர். இமயப் பகுதி ஆரிய -திராவிடக் கலப்பும், சிந்து காசுமீரப் பகுதி ஆரிய - சித்தியக் கலப்பும் உடையது
என்றும் விவரிக்கிறார்.
தமிழர் இன வேறுபாடற்ற தன்மையே தமிழ்ப்பண்பு. அதுவே தமிழகம் கடந்து, தென்னக முழுவதும் பரந்து, தென்னக பண்பாய் இயங்கிற்று, இயங்குகிறது, என்றும் இயங்கும் என்று கூறும் கா.அப்பாதுரையார், தன்னை சார்ந்த கிளை யினங்கள், அயலினங்கள் எல்லாவற்றையும் தன் பண்பினால் வயப்படுத்தி ஒற்றுமைப் படுத்தக் கூடியது என்கிறார். மேலும்,
தமிழகத்துள் சிவாஜியின் மரபினருடன் மராத்தியர் வந்து குடி புகுந்தனர். தத்தம் தாய்மொழி பேணிக்கொண்டே, தத்தம் பழக்க வழக்கங்களுட னேயே, தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் அவர்கள் பல்வேறு தொழில் களிலும் இன்றும் முனைந்துள்ளனர். வீட்டில் பேசும் மொழியன்றி வேறெதுவும் இன்று அவர்களைத் தமிழர் சமுதாயத்திலிருந்து பிரித்தறிய உதவாது. இவர்கள் போலவேதான் செளராஷ்டிரத்திலிருந்து நடு இந்தியா, கன்னட நாடு, தெலுங்கு நாடு ஆகியவற்றி லெல்லாம் சுற்றி இறுதியில் மதுரையிலும் தமிழகத்திலும் குடியேறிய செளராட்டிரர் தம் தாய் மொழி நீங்கலாக மற்றெவ் வழியிலும் தமிழரிட மிருந்து வேறு பிரித்தறிய முடியாதவராகியுள்ளனர்.... இக்காலம் வரை தமிழகத்திலிருந்தே எழுத்தும் இலக்கியமும் உண்டு பண்ணி இனப் பெருமை பேணுபவராய் உள்ளனர்.
விசயநகரப் பேரரசர் காலத்தில் தெலுங்கரும் கன்னடியரும் இது போலவே தமிழகத்தில் பரவி வாழ்ந்தனர்.
சென்ற நானூறு ஆண்டுகளுக்குள் தென்னகத்துக்கு உள்ளிருந்தும் அதன் எல்லையிலிருந்தும் தமிழகம் புகுந்த இவ்வினத்தவர் தத்தம் தாயகத்தில் வாழும் பழைய உறவினரை விடச் செல்வத்திலும் கல்வியிலும் வாழ்க்கை வளத்திலும் மேம்பட்டவர்களாக, தமிழகத்தின் வாழ்வில் வளமான பங்கு கொள்பவர்களாகவே உள்ளனர். அவர்களில் பலர் தமிழுக் காகப் பாடுபட, தமிழ்ப் புலமையிலும் ஆராய்ச்சியிலும் மேம்பட, தமிழுக் காகப் போராடக் கூடத் தயங்கியதில்லை. முதல் இந்தி எதிர்ப்பு இயக்கத்தில் இத்தகையோர் பலர் தலைமையே வகித்துத் தமிழ்த் தியாகிகளாயினர்.
ஏன் திராவிடம் சொல்லாராய்ச்சி என்று கேள்வி கேட்கும் அப்பாதுரையார் அதற்கான காரணத்தை பின்வருமாறு விளக்குகிறார்;
திராவிடமா, அது என்ன மொழிச் சொல்? தனித் தமிழ்ச் சொல்லா? சமஸ்கிருதச் சொல்லா? இலக்கியத்தில் அதற்கு வழக்கு உண்டா? வடவர் சொல்லையா தமிழர் வழங்குவது? திராவிடர் என்றால் ஓடி வந்தவர், போக்கிரிகள் என்றல்லவா பொருள்? அதை விட்டுவிட்டு தமிழன் தமிழ்நாடு என்று சொன்னாலென்ன?
இக்கேள்விகளுக்கு விளக்கங்கள் அடிக்கடி மேடைகளில், பத்திரிகைகளில் தரப்பட்டும்,கேள்விகள் கேட்கப்பட்டுக் கொண்டே தான் இருக்கின்றன. இதற்கு காரணம் உண்டு. கோல்டு ஸ்மித் என்ற ஆங்கிலக் கவிஞரின் பாழ்பட்ட ஊர் என்ற கவிதையில் தோற்று விட்டாலும் விடாது வாதாடும் ஒரு நாட்டுப்புற ஆசிரியர் பற்றி அவர் வருணிக்கிறார் ; -ஆனால் அங்கே ஆசிரியர், ஊரில் தன்மதிப்புப் பேணும் பழம் பாணியிலேயே அவ்வாறு செய்கிறார். இங்கே நோக்கம் அதுவன்று. திராவிட இயக்கம் படித்தவரையும் ஆட்கொண்டு விட்டது. படியாதவரையும் ஆட் கொண்டுவிட்டது. ஆகவே அரைகுறைப படிப்பினால் குழம்புவரையாவது சற்றுக் குட்டை குழப்புவோம் என்ற எண்ணமே இவ்விடாக் கேள்வி களுக்குரிய காரணமாகும்....
காங்கிரஸ், சோசலிஸ்ட், கம்யூனிசம் என்ன மொழிச் சொல் என்று கேட்டாயா? இந்தியா, இந்து மதம் என்ன மொழிச் சொல் என்று எந்த அகராதி யையாவது -தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், இந்தி - எந்த மொழி அகராதியையாவது எடுத்துப் பார்த்தாயா, தம்பி! உன் பெயர், உன் தாய் தந்தையர், அண்ணன் தம்பி, அக்காள் தங்கையர் பெயர்கள் என்ன மொழிச் சொற்கள் என்று எண்ணிப்பார்த்ததுண்டா? நம் நாட்டுத் தலைவர், நம் தமிழ்க் கவிஞர், தமிழப் புலவர் பெயர்களில் கூட எத்தனை பெயர்களில் தமிழ் இடம் பெற்றிருக்கும்? இவற்றையயல்லாம் கேட்கக் கருதாதவர்கள் நாவில், திராவிடம் என்ன மொழிச் சொல்? என்ற கேள்வி எழுகிறதென்றால், அதுவே திராவிட இயக்கத்தின் மாபெரு வெற்றிக்கு ஒரு சான்றாயிற்றே!
திராவிடம் என்ற சொல்லை மலையாளிகள், கன்னடர், தெலுங்கர் ஏற்பார்களா? தமிழர்கள் மட்டும் ஏன் திராவிடம், திராவிடர் என்ற சொல்லை சுமக்க வேண்டும் என்ற கேள்விக்கும் கா. அப்பாதுரையார் பின்வருமாறு விடையளிக்கிறார்;
திராவிடம் என்ற சொல்லை மலையாளிகள் ஏற்பார்களா? ஏற்காவிட்டால் கேடு முதலில் அவர்களுக்கு, பின் தான் அவர்கள் இனத்தவர்களாகிய - சுற்றத்தார்களாகிய நமக்கு!...
திராவிடம் என்ற சொல்லை வழங்காத கேரளம்- தேய்ந்த கேரளம் இமய வரம்பன் சேரலாதனின் கேரளமல்லசெங்குட்டுவன், இளங்கோவின் கேரளமல்ல.
திராவிடம் என்ற சொல்லை வழங்காத கேரளம், பண்டைக் கேரளத்தின் நாடகக் கலையின் அடிப்படையையே இழந்த கேரளமாகும். பழைய திருவாங்கூரில் அரசியலாரின் அரசியல் வெளியீடொன்று திருவாங் கூரில் கதகளி என்னும் தலைப்புடன் வெளியிடப்பட்டுள்ளது. கதகளிக்கு இன்னும் வழக்கிலுள்ள இசைக்கருவிகளின் பட்டியலொன்றையும் அது தந்துள்ளது. நூற்றுக்கு மேற்பட்ட இசைக் கருவிகள் தமிழர் கண்டறியாத, கேட்டறியாத சங்க இலக்கியத்தில் மட்டுமே புலவர் பெயரளவில் காணக் கூடிய கருவிகள் -அப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இவை இன்றளவும் திருவாங்கூரில் வழங்கும் கருவிகள் மட்டுமே. இவற்றுள் இன்னும் மிகப் பல கருவிகளையும் சேர்த்து இருநூறுக்கு மேற்பட்ட கருவிகளின் பெயர்கள் சிலப்பதிகாரம் என்ற பண்டை மலையாளப் பெருங்காப் பியத்தில் காணப்படுகின்றன என்று அரசாங்க வெளியீடு கூறுகிறது.
பழைய கொச்சி அரசர்கள் மலையாளிகள் பச்சை மலையாளிகள் தாம். ஆனால் அவர்கள் தாம் நேரே சேரர் பரம்பரையில் வந்தவர்கள் என்று உரிமை கொண்டாடுகிறார்கள். பதிற்றுப் பத்துப் பாடிய புலவர்களுக்குப் பத்து நூறாயிரம், கோடிக் கணக்கான பொன் காசுகளை எம் முன் னோர்கள் கொடுத்தார்கள் என்று பெருமையுடன் கூறிக் கொள்கிறார்கள். திருவாங்கூர் அரச மரபினரும் இதனுடன் போட்டியிட்டு நாங்களும் அதே மரபினர்தான் என்று போராடுகிறார்கள். அத்துடன் சிலப்பதிகாரத்தில் செங்குட்டுவன் முன் சாக்கியர் கூத்து நாடகமாடிய அதே பறையூர்ச் சாக்கையர் குடி மரபினரை இன்றும் அதே நாடகமாடுவித்து, மாதச் சம்பளமும் படிகளும் கொடுத்து வருகின்றனர் திருவாங்கூர் பழைய அரச மரபினர்.
தொல்காப்பியம் அரங்கேற்றியபோது அதை அவைத் தலைவராயிருந்து கேட்ட அதங்கோட்டாசான்குடி இன்னும் அதங்கோட்டாசான் என்ற பெயருடனே, அந்தக் குடியினால் பெருமை பெற்ற பெயருடைய ஊரிலே - திருவதங்கோட்டிலே - உள்ளது. இது இன்றைய குமரி மாவட்டத்தில் நாகர் கோவிலுக்கும் இரணியலுக்கும் இடையே உள்ளது. திருவாங் கூரின் பழந் தலைநகர் இதுவே - திருவாங்கூருக்கு அப் பெயர் தந்ததும் இந்த அதங்கோடே! தொல்காப்பியருக்கு ஆசிரியராயிருந்த புலவர் பெயரால் தான் கேரளத்தின் ஒரு பகுதியாகிய திருவாங்கூர் இன்றும் அழைக்கப் படுகிறது.
திராவிடம் என்ற சொல்லை மறுத்தால், மறந்தால், மலையாளம் சிறு மலையாளமாய், கேரளம் தேய்ந்த, தேயும் அடிமைக் கேரளமாய் இருக்க முடியுமேயன்றிக் கடம்பரைக் கடற்படையால் வென்ற சேரர் பரம்பரை யாய், உண்மைத் தேசியக் கேரளமாய் நில்லாது.
மலையாளத்துக்கு கூறியதே ஆந்திரத்துக்கும் அமையும்.
உண்மையில் இன்றைய ஆந்திரம், ஆந்திரம் என்ற பெயர் கூறவே வெட்கமடைய வேண்டும். ஆந்திரப் பேரரசர் ஆண்ட விசால ஆந்திரம் இன்றைய கட்டெறும்பு ஆந்திரமுமல்ல, அடிமை ஆந்திரமுமல்ல - இன்றைய இந்தியாவில் பெரும் பகுதியையும் பர்மா முழுவதையும் மலாயாவில் ஒரு பகுதியையும் உட்கொண்டதாகும். முக்கலிங்க மாண்டவர் (திரிசலிங்காபதி) முக்கடல் மன்னர் (த்ரிசமுத்ராதிபதி) என்ற பெயர்கள் பட்டங்கள் அவர்கள் பெருமை எல்லையை மட்டுமின்றி, வீழ்ந்த வகை யையும் (சமஸ்கிருதப் பட்டங்களையும்) ஒருங்கே சுட்டிக் காட்டும்.
ஆந்திரம் மீண்டும் அதே தேசிய உயிராற்றல் பெற வேண்டுமானால், அது பாரத ஆந்திரமாயிருந்து பயனில்லை. சுயேச்சையும் சுயாதீனமுமுடைய திராவிட ஆந்திரமாக வேண்டும்.
கன்னடத்தின் செய்தியும் இதுவே.
கன்னட நாடு என்று இன்று கூறப்படும் பகுதி முழுவதும், சேலம், கோயமுத்தூர், நீலகிரி மாவட்டங்களும் சேர்ந்ததுதான் பண்டைத் தமிழரின் கொங்குநாடு. கன்னடம் என்பது கொங்கு தமிழே. பழங் கன்னடப் புலவர்கள் கன்னட நாட்டெல்லையைக் காவேரி முதல் கோதாவரி வரை என்று கூறியது இதனாலேயே.
தெலுங்கர் திராவிடம் என்ற சொல்லை மறந்ததனால், வட எல்லையில் ஒரியாவை மட்டுமன்றித் தெலுங்கரும் திராவிடப் பழங்குடி மொழியினரும் வாழும் கஞ்சம், விசாகப்பட்டின மாவட்டங்களையும் வடவரிடம் கோட்டை விட்டது போலவே, கன்னடியரும் வட திசையில் தம் எல்லையின் பெரும் பகுதியை வடவருக்குக் கோட்டை விட்டுள்ளனர்
என்றெல்லாம் கூறிய அப்பாதுரையார் முடிவாக,
தெலுங்கர், கன்னடியர் பகுதிகளில் திராவிட இயக்கத்தை நம் கன்னடத் தாய்மொழி கொண்ட பெரியார் பரப்பியிருந்தால், தெலுங்கர், கன்னடியர் திராவிடம் என்ற சொல்லைப் போர்க் குரலாகக் கொண்டிருந்தால், வட திசையில் வளமான விந்திய மலைப் பகுதிகளைக் கையிழந்திருக்க மாட்டார்கள்
என்று முத்தாய்ப்பாகத் தீர்ப்பும் கூறிவிட்டார்.
தோழர் பெ.மணியரசன் அவர்கள், ஒரு மொழிக்குடும்பத்தின் பெயரே திராவிடம். திராவிட மொழிக் குடும்பம் இருப்பதாலேயே திராவிடர் என்ற ஓர் இனம் இருப்பதாக வரையறுக்க முடியாது என்று கூறுகிறார். பின் அவரே, தமிழகத்தில் பார்ப்பன வகுப்பில் தோன்றிய திருஞான சம்பந்தரை திராவிட சிசு என்று அழைத்தவர் ஆதி சங்கரர் என்ற பார்ப்பனர். திராவிடரில் பார்ப்பனர் இடம் பெறார் என்பதெல்லாம இருபதாம் நூற்றாண்டு அரசியல் தேவைக் காகப் புனைந்து கொள்ளப்பட்டதே என்றும் கூறுகிறார்.
திராவிட என்பது மொழிப் பெயர் என்று கூறினால் திராவிட என்ற மொழியைப் பேசுகின்ற குழந்தையை திராவிட சிசு என்றுதானே குறிப்பர். திராவிடர் என்பதெல்லாம் இருபதாம் நூற்றாண்டில் அரசியல் தேவைக்காகப் புனையப் பட்டது என்று கூறிவிட்ட பின் பார்ப்பனர் தம்மை திராவிடர்என்று கூறிக் கொண்டனர் என்று கூறுவது மொக்கையான ஆராய்ச்சியல்லவா?
(தொடரும்)

- கவி

No comments:

Post a Comment