பெரியார் வரலாறு - நாரா. நாச்சியப்பன்
(மாநிலப் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் சார்பில் நடத்தப்பட்ட பெரியார் வாழ்க்கை வரலாறு போட்டியில் முதல் பரிசு ரூ 10,000 பெற்றது இந்நூல்.)
என் கண்மணிகளே! அன்புக் குழந்தைகளே! இப்போது உங்களுக்கு ஒரு வரலாறு சொல்லப் போகிறேன்.
இது நம் பெரியாருடைய வரலாறு. உங்கள் பாடப் புத்தகத்தில் பெரிய பெரிய தலைவர்களைப் பற்றி நீங்கள் படித்திருப்பீர்கள். அவர்களுக்கும், நமது பெரியாருக்கும் மிகப் பெரிய வேறுபாடு உண்டு.
தமிழ் மக்களின் தாழ்வுக்குக் காரணமாக இருந்தவை சாதிகளும், மதங்களுமே ஆகும். பல பெரியவர்கள் சாதி வேற்றுமை கூடாது என்றார்கள். மதவெறியைப் பல அறிஞர்கள் கண்டித்திருக்கிறார்கள்.
நமது பெரியார் இராமசாமியோ சாதிகளே கூடாது! என்றார். மதங்களை ஒழிக்க வேண்டும் என்றெல்லாம் கூறினார்.
இதுவரை இந்த மாதிரி துணிச்சலாகப் போராடியவர்கள் யாரும் இல்லை. நமது பெரியார் இராமசாமி தான் இவ்வாறு புதுமையாகப் போராடினார்.
அவர் வாழ்ந்த காலம் முழுவதும் இந்த நோக்கங்களுக்காகவும் தமிழ் மக்களின் நல் வாழ்வுக்காகவும் அயராமல் போராடினார்.
அவருடைய வரலாறு ஒரு வீர வரலாறு. அவருடைய வரலாறு ஓர் அறிவு வரலாறு. அவருடைய வரலாறு ஓர் எழுச்சி வரலாறு.
இந்த வரலாற்றை நீங்கள் படித்தால் நம் தமிழ் மக்கள் எவ்வாறு முன்னேறினார்கள், எவ்வாறு உயர்வடைந்தார்கள் என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ளலாம். (தொடரும்)
No comments:
Post a Comment