Thursday, November 28, 2019

பாவேந்தர் பாரதிதாசன்

பாவேந்தர் பாரதிதாசன் - கவி

ஏப்ரல் 29, 1891-இல் பிறந்தார் தன்மானப் புலவர் பாவேந்தர் பாரதிதாசன். அவருடைய பெற்றோர்  கனகசபை-இலக்குமி அம்மையார் இட்டப் பெயர் சுப்புரத்தினம்.

தனது இயற்பெயரை பாரதிதாசன் என ஏன் வைத்துக் கொண்டேன் என்பது பற்றி அவரே கூறுகிறார், நான் அப்போது பாண்டிச்சேரியில் வாத்தியார் வேலையில் இருந்தேன். அப்போதே சில பத்திரிக்கைகளுக்கு கட்டுரைகளும் பாட்டுகளும் எழுதியனுப்புவது வழக்கம். யாராவது தொல்லை தருவார்கள் என்று கருதி நான் ஒரு புனைப்பெயர் வைத்துக்கொள்ள விரும்பினேன். அப்போது என் கண் முன்னே, சூத்திரனுக்கு ஒரு நீதி தண்டச்சோற்றுப் பார்ப்புக்கு ஒரு நீதி என்று கேட்ட பாரதியார்- பார்ப்பானாயிருந்தும் பயப்படாத, தீமை வரும் என்று தெரிந்திருந்தும் திகைக்காது,தமிழில், புரியும் படி சொல்லிய பாரதியார் தான் நின்றார். உடனே பாரதிதாசன் என்று புனைப்பெயர் வைத்துக்கொண்டேன்.

1906 ஆம் ஆண்டு புதுவைக்கு அடைக்கலம் தேடி வந்த பாரதியாருடன் 13 ஆண்டுகள் நெருக்கமாகப் பழகினார் பாரதிதாசன்.

புதுவையில் புதுவை முரசு என்ற பெயரில் திராவிடர் கழகத் தலைவர் ம. நோயல் அவர்கள் இதழைத் தொடங்கிய போது குத்தூசி குருசாமி அவர்களும் பாரதிதாசன் அவர்களும் இணைந்து பணிபுரிந்தனர். ம. நோயல் அவர்கள் முதன் முதலாக பாரதிதாசன் பாடல்களைத் தொகுத்து தாழ்த்தப்பட்டோர் சமத்துவப் பாட்டு மற்றும் சஞ்சீவி பர்வதத்தின் சாரல் ஆகிய நூல்களை வெளியிட்டார்.

1929 முதல் குத்தூசி குருசாமி அவர்களுடன் பாரதிதாசன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டாலும் 1938‡இல் கடலூரில் குத்தூசி குருசாமி குடியேறிய, புதுவை முரசில் ஆசிரியராக  செயல்படத் தொடங்கிய பின்னர் பாரதிதாசன் நெருக்கமாக பழகினார்.

குத்தூசி குருசாமி அவர்களின் மனைவி குஞ்சிதம் அவர்கள் பாரதிதாசனின் கவிதைகளைத் தொகுத்து முதல் தொகுதியை வெளியிட்டார். கடலூர் நாராயணசாமி அவர்கள் பணஉதவி புரிந்தார்கள்.

1954 - இல் பிரஞ்சு அரசு புதுவை மாநிலத்திற்கு சுதந்திரம் அளித்த பின்னர் அதனை இந்தியாவுடன் இணைக்கும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து  உடன்பாட்டில் கையயழுத்து இட மறுத்தார் பாரதிதாசன்.

1946-இல் தமிழாசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர், அவரது நல் வாழ்விற்கு  நிதி வழங்க பேரறிஞர் அண்ணா முடிவு செய்து நிதி திரட்டினார். ரூபாய் இருபத்திநான்காயிரமும் பொற்கிழியும் வழங்கினார். இத்தொகையைக் கொண்டு குயில் இதழைத் தொடங்கினார் பாரதிதாசன்.

குயில் இதழ் உரிமைத் தொடர்பான சிக்கல் இவருக்கும் நிர்வாக ஆசிரியாராக இருந்த டி.என். இராமனுக்கும் இடையே ஏற்பட்டது. இவ் விதழை சென்னையிவிருந்து நடத்த அரசும் தடைவிதித்தது. இது குறித்து பொன்னி இதழ்,
புதுச்சேரியிலிருந்து குயில் என்றொரு கவிதை இதழ் புரட்சிக்கவிஞரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்து கொண்டிருக்கிறது. புரட்சிக்கவிஞரின் கவிதை வளம் யாவரும் அறிந்தது. நிகர் யாருமில்லையயனச்  சிறப்புற்று விளங்கும் கவிஞர் கோமான் பாரதிதாசனார். அவர் தம் கவிதைகள் மக்களை ஆட்கொண்டன என்பதற்குச் சான்று சென்னையில் பெருந்திரளிடையே நடந்த நிதியளிப்பு விழாவேயாகும். அத்தகைய கவியரசரின் கவிதை இதழுக்குத் திங்கள் தோறும் தித்திக்கும் கவிதைகளைத் தந்து வரும் ஏட்டுக்குச் சென்னை ஆட்சி தடை விதித்துள்ளது என்றால் இதைவிடவேறு கொடுமை என்ன வேண்டும்? என்று எழுதிற்று.

இதனைத் தொடர்ந்து புதுச்சேரியிலிருந்து குயில் இதழை நடத்தினார் பாவேந்தர். பத்தாண்டுகளுக்கு பின் மீண்டும் 1.6.1958 இல் புதுவை பழனியப்பா அச்சகம் மூலம் அச்சடிக்கப்பட்டு குயில் வெளிவந்தது.

குயில் இதழின் நோக்கமாக, தமிழின் தொன்மையை, சிறப்பை, பெருமையைக் காப்பாற்றும் வகையிலும் வடமொழி ஆதிக்கத்தை எதிர்க்கும் வகையிலும் , சாதி, சமயம், கடவுள் மற்றும் மூட நம்பிக்கைகளை எதிர்ப்பதையும், தொழிலாளர் இயக்கம், பெண்ணுரிமை இயக்கம் ஆகியவற்றை ஆதரிப்பதாகவும் கொண்டு செயல்படும் என்று குறிப்பிடுகிறார்.

பாரதிதாசன் பெரியாரின் சுயமரியாதைக் கொள்கைகளைப் பரப்பும் போர் முரசாக விளங்கியவர். புதுவையின் முதல் திராவிடர் கழகத் தலைவராகவும் விளங்கியவர். திராவிடர் கழகம் ஒன்றே தமிழ் , தமிழர் நலங்கோரி உழைப்பது. அவ்வியக்கம் ஒன்றாலேயே தமிழ், தமிழர் நன்னிலை அடையச் செய்ய முடியும் என்ற உண்மையை எடுத்துக் காட்டி வந்துள்ளது என்று குயில் இதழில் எழுதினார்.

தமிழின் சிறப்பு குறித்து எழுதிய தமிழ் என்ற கட்டுரையில்,
நம் தாய்மொழியாகிய தமிழ் மொழி, மிகப் பழமை வாய்ந்தது. அம்மொழி பலமொழிகளுக்குப் பெற்றத் தாயாகவும் வளர்ப்புத் தாயாகவும் இருந்து வந்துள்ளது. தமிழ் மொழி, இங்கு வந்து புகுந்த எதிரிகள் பலரால் சாகடிக்கப்பட்டதோ என்ற நிலையிலும் சாகாத மொழி மறைக்கப்பட்டுவிட்டதோ என்று எண்ணிய நிலையிலும் மறையாது வாழும் மொழி. தமிழ் மொழி எண்ணிலாத நல்ல இலக்கிய வளமுடைய மொழி என்று தமிழ் மொழியின் சிறப்பைக் கூறுகிறார்.

தமிழுக்குச் சிறப்பு அதன் இலக்கணம்.  இலக்கணம் என்பதை இலக்கு அணம் எனப் பிரித்து அதன் பொருள், இலக்கணம் என்றால் இலக்கை நெருங்குவது என்பதாம். அணம் என்றால் அணுகுவது என்று பொருள் கூறினார் பாவேந்தர்.
தமிழே தமிழகத்தில் ஆட்சிமொழியாகவும் அலுவல் மொழியாகவும், பயிற்று மொழியாகவும் இருக்க வேண்டும் என்று பாவேந்தர் குயில் இதழில் எழுதிவந்தார். ஆங்கிலக் கலைச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களைக் கண்டறிந்து அவற்றை மக்கள் மனதில் நிலைக்கச் செய்ய வேண்டும் என்று விரும்பினார்.

கலெக்டர் என்பதற்கு தண்டல் நாயகம் என்றார். போலிஸ் ஸ்டேசன் என்பதை காவல் நிலையம் என்றார்.

தமிழிசையை வலியுறுத்தி, குயிலில் வரும் இசைப்பாடல்களுக்கு ஏற்ற இசையமைத்துப் பாடுகின்ற தெருபாடகற் குழு உருவாக வேண்டும் என்று எழுதினார். அதற்குக் காரணம், தெருப் பாடகர்கள்தான் தமிழ் மக்களைச் சந்திப்பவர்கள் என்பது அவரது கருத்து.

இறைவனைத் தமிழிலேயே வழிபாடு செய்ய வேண்டும் என்பதையும் வலியுறுத்தி,  சிவ பெருமானுக்குத் தமிழ் தெரியாது. பிள்ளயாருக்குத் தமிழ் தெரியாது. விஷ்ணுவுக்குத் தமிழ் தெரியாது. இவை போன்ற தெய்வங்களுக்குத் தமிழ்ப்பற்றிப் பரிந்துரை வழங்க அருச்சகர்கள் தேவை. அவன் வடமொழியால் வழிபாடு செய்ய வேண்டும் என்ற இந்தக்கல்வி இங்கு வேண்டாம் அந்தக் கல்விதான் இருக்கும் என்றால் கல்வி தேவையில்லை என்றார். தமிழ் ஒலியால் செவித்தகடு கிழியும் சிவம் நமக்கு எதற்கு? என்றார்.
தமிழ் தந்த சிவனார்க்கு வடமொழியில் சிபாரிசா என்ற குன்றக் குடிகளாரைப் பாராட்டி தமிழறிஞர் குன்றக்குடியார் என்று எழுதினார்.

தமிழில் இல்லாதது இல்லை என்பதும் தமிழ் சிறந்தால் தமிழர் வாழ்வு சிறப்படையும் என்பதும் தமிழ் பிறமொழிகளின் தாய் என்பதும் தமிழைக் காட்டிக் கொடுப்பவன்  கயவாளிப் பையன் என்பதும் தமிழை விட்டு ஆங்கிலத்தைப் போற்றுவோன் முடிச்சுமாறிப் பையன் என்பதும் நிலைநாட்டப்பட வேண்டும் என்று எழுதினார். தமிழை எதிர்க்கும் நிறுவனங்கள் எதுவாய் இருந்தாலும் நாம் எதிர்த்து ஒழிக்க வேண்டும். தமிழை எதிர்ப்பவன் தமிழைக் கெடுப்பவன் எவனாயிருந்தாலும் அவனைத் தலைதூக்க ஒட்டாமல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

வாழ்நாள் முழுக்க பெரியார் கொள்கைகளுக்காகப் போராடிய பாவேந்தர்,

பெரியாரின் தொண்டைப் பாராட்டி,
தொண்டு செய்து பழுத்தப் பழம்
தூயதாடி மார்பில் விழும்
மண்டைச் சுரப்பை உலகு தொழும்
மனக்குகையில் சிறுத்தை எழும்
அவர்தான் பெரியார்.
என்று எழுதினார்.

ஏப்ரல் 21, 1964 இல் பாவேந்தர் மறைந்தார்.

பெரியார் தனது இரங்கல் உரையில்,
நமது இயக்கத்தின் சமுதாயப் புரட்சிக் கருத்துக்களை கடந்த 35 ஆண்டுகளாகவே பரப்பி வந்த கவிஞர் மறைந்தது தமிழ்நாட்டிற்கே மிகப் பெரிய இழப்பாகும். நஷ்டம் என்பதோடு நமது இயக்கத்திற்குப் பெரிய இழப்பாகும் என்றார்.


No comments:

Post a Comment