பெரியாரின் பண்பு நலன்
சிறைக்கு வந்த பிராமணர்களிடம் பெருந்தன்மையுடன் நடந்தது!
அக்காலத்தில் பத்மநாப ஐயங்கார் என்று ஒருவர் இருந்தார். நாங்கள் சிறையிலிருந்த காலத்தில், ஏதோ திருட்டுக் குற்றத்திற்காக அவரும் சிறையிருந்தார். அதே சமயத்தில் இன்னொரு ஐயங்காரும் ஒரு வைப்பகத்தில் பணம் கையாடல் பண்ணி, அவரும் சிறையில் இருந்தார். இவர்களுடன் இன்னொருவரும் வேறு ஒரு குற்றத்திற்காக அவர்களுடன் இருந்தார். அந்த பத்மநாப ஐயங்கார் உச்சிக் குடுமி வைத்திருந்தார். நாளும் பகவத் கீதை படிப்பார். பட்டை நாமமெல்லாம் போட்டுக் கொள்வார் ; அந்த மூன்று பேரும் பட்டம் படித்தவர்கள்தாம். ஐயா (பெரியார்) தம்மோடு சிறையிலிருந்த அண்ணாத்துரை மற்றும் இருந்தவர்களிடமெல்லாம் கூப்பிட்டுப் பிராமணன் கிராமணனெல்லாம் சிறைக்கு அப்பாலே, இங்கே யாருக்கும் மனம் நோக நடக்கக் கூடாது என்று சொல்வார். இப்படிச் சொல்லிவிட்டு ஏதாவது பேசும் பொழுதெல்லாம் அவர்கள் பக்கமாகவே பேசிவிட்டு, அவருக்கு வெளியிலிருந்து வரும் பழங்களையயல்லாம் மற்ற அன்பர்களுக்குக் கொடுக்கும் பொழுது, அவர்களுக்கும் அவர்கள் இருக்கும் அறை அறையாகக் கொண்டுபோய்க் கொடுப்பார்.
சிறையிலிருக்கும் பொழுது ஐயா அவர்களுக்கு அறுபதாவது ஆண்டு விழா நடந்தது. அக்கால் நான் அங்கிருந்த குரோட்டன் செடிகளையயல்லாம் பறித்து, மாலை கட்டி, அவரை உட்கார வைத்து அவர் கழுத்தில் போட்டு, நான், அண்ணாத் துரை, இன்னொருவர் (பெயர் நினைவில் இல்லை) மூவரும் அவரைப் பாராட்டிப் பேசினோம். அத்துடன் இந்த ஐயங்கார்களெல்லாம் கூட பேசினார்கள். அவர்கள் பேசும்பொழுது, நாங்கள் நூல்களில் படித்திருக்கிறோம். பெரியவர்கள் என்றால் இப்படி இப்படி இருப்பார்கள் என்பது பற்றியும், அவர்கள் அன்பு வடிவமாக இருப்பார்கள் என்றும்! அதை இங்குக் கண்ணாலே காண்கிறோம் என்றெல்லாம் மிக அழகாக உயர்வாகப் பேசினார்கள். அப்படி, அவர்கள் மனம் புண்படும்படி, பெரியார் அவர்கள் ஒருநாள் கூட பேசினது இல்லை.
இன்னொரு செய்தியும் சொல்ல வேண்டும். பெரியார் சிறையில் இருந்த பொழுது காலையில் எழுந்ததும் திருவருட்பா படிப்பார். அப்பொழுது (மார்கழி) சிலை மாதம் வந்தது. அந்தக் காலத்தில் காலையில் திருப்பாவை படிப்பார். அப்பொழுது , அந்த ஐயங்கார்களெல்லாம் இவரைப் பார்த்து இவர் உள்ளத்தால் பெருமாள் பற்றாளர். பாருங்கள் காலையில் எழுந்ததும் திருப்பாவையை எவ்வளவு அன்பாகப் படிக்கிறார் என்பார்கள்.
ஆனால், பெரியாருக்கு அந்த நோக்கம் இல்லை. இவருக்கு உள்ள நோக்கம் என்னவென்றால், இந்தத் தமிழ்ச்சுவைக்காவே படிப்பது. இதெல்லாம் வேடிக்கையாக இருக்கும். ஆனால் பெரியார் தமிழ் மொழியை நன்றாகப் படித்திருக்கின்றார். இலக்கியங்களையயல்லாம் நன்றாகப் படித்துப் பார்த்திருக்கின்றார். அவற்றை யயல்லாம் நன்றாகச் சுவையோடு படிப்பார். அவர் இசையயாடு பாட மாட்டார். ஆனால் ஒருவகையாகச் சொல்லுவார். இவ்வாறு அந்தப் பிராமணர்களிடம் ஒரு சிறிதாவது மனம் வருந்தும்படி நடக்கவில்லை. மற்றவர்களையும் நடக்கவிட வில்லை. அங்குள்ள குறும்புக்காரர்கள் வம்பர்களையயல்லாம் கூட கூப்பிட்டு எச்சரிக்கைப் பண்ணினார். (இளந்தமிழன், ஏப்பரல் -2009)
No comments:
Post a Comment