புதுக்கோட்டை பாவேந்தர் விழா
ஈழத்துச் செய்திகளைத் திரித்து வெளியிடும் துக்ளக் சோ. இந்து மற்றும் கல்கி இதழ்களின் மீது வைகோ பாய்ச்சல்
13.05.2000
அன்று புதுக்கோட்டையில் நடைபெற்ற பாவேந்தர் விழாவில் வைகோ பேசியவற்றிலிருந்து...
தலைமை அமைச்சர் வாசுபாய் அவர்கள் கூட்டிய கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக திருச்சி மாவட்ட நிகழ்ச்சியினை முடித்துக் கொண்டு ஓடோடிச் சென்றேன். பிரதம அமைச்சர் தலைமையேற்ற அந்தக் கூட்டத்தில் சொன்னேன். –மனிதாபிமான உதவி என்கிறார்களே? யாருக்கு மனிதாபிமான உதவி? சிங்கள இராணூவத்துக்கா? சிங்கள அரசுக்கா? அய்ந்தாண்டுகளுக்கு முன்பு 10 இலட்சம் தமிழர்கள் சிங்கள இராணூவத்தினரின் தாக்குதலால் யாழ்ப்பாண பகுதியிலிருந்து வெளி யேற்றப்பட்டார்களே/குழந்தை குட்டிகளோடு மூட்டை முடிச்சுகளோடு கொட்டும் மழையில் அடர்ந்த காடுகளுக்குள் சென்று பசியால் வாடினார்களே, அவர்களுக்கு யார் உதவினார்கள்? எந்த நாடு குரல் கொடுத்தது?
அந்தக் காலக்கட்டத்தில் அய்.நா. மன்றத்தினுடைய பொதுச் செயலாளர் புத்ரோஸ் காலி ஒரு அறிக்கை கொடுத்தார்.
‘சர்வதேச மனித சமுதாயமே/மனிதாபிமானத்தோடும் யாழ்ப்பாணத் தமிழர்களின் துன்பத்தினை நீக்குவதற்கு உதவி செய்ய முன் வாருங்கள்’ குரல் கொடுத்தார். அவரது அறிக்கை உலகம் முழுவதும் தொலைக்காட்சிகளி லும் பத்திரிக்கைகளிலும் வெளியானது. அந்த அறிக்கைக்கு இலங்கை அரசு கண்டனம் தெரிவித்தது.
நவாலியிலே புனித பீட்டர் தேவாலயத்தின் மீது குண்டு வீசப்பட்டு அங்கு தஞ்சம் புகுந்திருந்த 163 தமிழர்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட கொல்லப்பட்டார்கள். இந்தக் கொடுமையை கேள்விப்பட்டு போப் ஆண்டவர் அதிர்ச்சி தெரிவித்தார்.
‘என் வேதனையை தமிழர்களோடு பகிர்ந்து கொள்கிறேன்’ என்று சொன்னார் போப்பாண்டவருக்கு இருந்த உணர்ச்சி/அய்.நா.பொதுச்செயலாளருக்கு ஏற்பட்ட உணர்ச்சி அன்றைய இந்திய சர்க்காருக்கு ஏற்படவில்லை. இன்றைக்கு சிங்கள இராணூவம் தோற்றுபோகிற நிலையில் மனிதாபிமான உதவி செய்ய வேண்டும் சொல்கிறார்களே/இன்றைக்கு யுத்தக்களத்திலே ஆனை யிறவு விழாமல் இருந்திருந்தால் இதைப்பற்றிப் பேசுவார்களா?
யுத்தக் களத்திற்குப் போகும் போது தாய் தந்தையருக்கு ஒலிநாடா விலே தங்கள் குரலால் கடிதங்களைப் பேசிப் பதிவு செய்துவிட்டு போனார்கள். ஒலி நாடாவைக் கேட்டேன். அந்தக் கடித வாசகங்களை ஒலி நாடாவிலே கேட்டபோது என் கண்களிலிருந்து குபுகுபுவென்று பொங்கி வழிந்த கண்ணீரை என்னால் கட்டுப்படுத்த இயலவில்லை. அந்த ஒலி நாடாக்கள் தமிழ் நாடெங்கும் ஊர் ஊராகப்போட்டுக் காட்டு வேன். இன்றைக்கு சிங்கள அரசு ஏன் இராணுவ உதவி கேட்கிறது? இந்த உண்மைகளையெல்லாம் பேசுவதற்கு பலர் முன்வருவதில்லை.
86 ஆம் ஆண்டில் செயவர்த்தனே சொன்னார். என்னுடைய அரசியல் அனுபவம் இராஜிவ் காந்தியின் வயது என்று. எங்களுக்கு என்றும் நிரந்தரமான நண்பன் பாகிஸ்தான் என்று சொன்னார். இதற்குப் பிறகு உலக நாடுகளிலே வாங்கிய ஆயுதங்கள் எல்லாம் பயனற்றுப் போய் நெல்லியடியிலே கரும்புலிகளுடைய தொடக்க நிகழ்ச்சியை மில்லர் நடத்தி அங்கே சிங்கள இராணூவ முகாம் யுத்த முனையிலே சிதறியடிக்கப்பட்ட போது செயவர்த்தனே நயவஞ்சகமாக இந்தியாவுக்கு தூது அனுப்பினார்.
அப்போது இங்கு போபர்ஸ் பீரங்கி ஊழல் பிரச்சனை விஸ்வருபம் எடுத்திருந்தது.
1987 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16 ஆம் தேதி ஊழல் பிரச்சனையை ஸ்வீடன் தேசிய வானொலி ஒலி பரப்பிய போது அதிர்ச்சிக்குள்ளாகிய இராஜிவ்காந்தி அரசு அந்தப் பிரச்சனையி லிருந்து மக்கள் கவனத்தைத் திசை திருப்புவதற்காக பாட்டனாரும் தாயாரும் தீர்க்க முடியாத பிரச்சனையை நாம் தீர்த்துவிட்டோம் என்று பெயர் பெறலாம் என்று கருதி செயவர்த்தனே வீசிய வலையிலே விழுந்து உடனிருந்த சில அதிகாரிகள் தவறான பாதையை இராஜிவ் காந்திக்கு சொல்லிக் கொடுத்து ஒரு ஒப்பந்தம் போடலாம் என்று முடி வெடுத்தார்கள்.
ஆனால் அந்த ஒப்பந்தம் களத்திலேயிருந்த சிங்கள வருக்கும் தமிழர்களுக்கும் இடையிலே அல்ல. அவர்களுக்கிடையே மத்தியஸ்தம் செய்ய போன இந்தியா சிங்களவரோடு ஒப்பந்தம் செய்து கொண்டது. இது சரிதானா?
இந்த ஒப்பந்தத்தை போடுவதற்கு முன்பு பிரபாகரனை இங்கு அழைத்துக்கொண்டு வந்து அவரிடம் ஒப்புதல் வாங்கிட வேண்டுமென்று இலங்கையிலே/இந்தியாவின் முதல் தூதராக இருந்தவர் கருதினார். அவரே யாழ்ப்பாணத்திற்குச் சென்று உங்களை இராஜிவ் காந்தி அழைக்கிறார். டெல்லிக்கு வாருங்கள் என அழைத்தார்.
எக்காரணத்தைக் கொண்டும் நான் டெல்லிக்க வரமாட்டேன் என்று பிரபாகரன் சொன்னார். தமிழர்களின் ஒரே பிரதிநிதியாக உங்களை அங்கீகரித்து எல்லா உதவிகளையும் செய்யத் தயாராக இருக்கிறோம் என்று சொல்லி டெல்லிக்கு அழைத்துக் கொண்டு வந்தார்கள்.
டெல்லி ஓட்டல் அறையில் தங்கியிருந்த பிரபாகரனிடம் இப்படி ஓர் ஒப்பந்தம் போடப் போகிறோம் என்று அந்த ஒப்பந்தத்தை வாசித்துக் காட்டிய போது அவர்கள் அதிர்ச்சிக்கு ஆளானார்கள்.
எந்தப் பத்திரிக்கை யாளரும் அவரைச் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை.
நான் சந்திக்கச் சென்றேன். அவர் தங்கியிருந்த அறையை தெரிந்து கொண்டு 5 வது மாடிக்குச் சென்றேன். அப்போது நான் அணிந்திருந்த உடை என்னை ஒரு அதிகாரி போல் காட்டியதால் அந்த அறையின் வாசல்வரை என்னை அனுமதித்துவிட்டார்கள். நான் சபாரி உடை அணிந்து கொண்டு எந்தவித தயக்கமும் இல்லாமல் நேராகச் சென்றதால் என் மீது அதிகாரிகளுக்குச் சந்தேகம் எழவில்லை.
518 ஆம் எண் அறைக் கதவைத் தட்டப் போகிறபோது நீங்கள் யார் என்று கேட்டார்கள். நான் ஒரு பாராளுமன்ற உறுப்பினர். பிரபாகரனின் நண்பர் என்று சொன் னேன். இந்தப் பகுதிக்க யாரும் வரக்கூடாது. அவரைச் சந்திக்க அனுமதி யில்லை. உடனே வெளியேறுங்கள் என்று சொன்னார்கள்.
நான் உடனே ஓட்டலுக்கு வெளியே வந்து பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்தேன். பிரபாகரனை சிறை வைத்திருக்கிறார்கள் என்று. பத்திரிகையாளர்கள் என்னைப் பாராட்டினார்கள்.
ஓட்டல் அறைக்கு வந்து ஒப்பந்தத்தின் வாசகத்தை பிரபாகரனிடம் வாசித்துக் காட்டியவர்கள் அதனுடைய ஒரு நகலைக்கூட அவரிடம் கொடுக்கவில்லை. இப்படித்தான் ஒப்பந்தத்தை அவர்கள் மீது திணித்தார்கள். மறுநாள் காலை ஓட்டல் அறையிலிருந்து பிராபாகரன் என்னிடம் 33 நிமிடம் தொலைபேசியில் பேசினார். அப்போது அவர் கூறிய ஒவ்வொரு வார்த்தையையும் என்னுடைய நாட்குறிப்பிலே எழுதி வைத்திருக்கிறேன்.
அப்போது அவர் சொன்னார், ‘நான் இந்தியாவோடு மோதத் தயாராக இல்லை’.
அதன்பிறகு ஆகஸ்ட் 4 ஆம் தேதி சுதுமலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசினார். சூலை 29 ஆம் தேதி ஒப்பந்தம் போடப்பட்டது. அன்றைய தினம் முதலமைச்சராக இருந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் அமெரிக்காவுக்கு சிகிச்சைக்குப் பயணம் போனார்.
2ஆம் தேதி கடற்கரையில் இராஜிவ் காந்தி கூட்டம், பயணத்திற்காக முதலமைச்சருடைய லக்கேஜ் எல்லாம் விமானத்தில் ஏற்றப்பட்டுவிட்டது. முதலமைச்சர் தோட்டத்திலிருந்து புறப்படப் போகிறார். அந்தநேரம் பிரதமர் தகவல் சொல்லுகிறார். 2 ஆம் தேதி கடற்கரைக் கூட்டத்தில் நீங்கள் கண்டிப்பாக கலந்துகொள்ள வேண்டு மென்று. அவரை வற்புறுத்தி பயணத்தை ரத்து செய்ய வைத்தார்.
அந்தக் கடற்கரைக் கூட்டத்திலேதான் பிரதமர் இராஜிவ் காந்தி சொன்னார். இலங்கையிலே இருக்கிற தமிழர்கள் எல்லாம் இந்தியாவிலிருந்து போனவர்கள் என்று சொன்னார். அவருடைய தாயார் இந்திராகாந்தி அம்மையார் நாடாளுமன்று மாநிலங்களவை யில் மறைவதற்கு முன்பு நான் கொண்டு வந்த கவன ஈர்ப்புத் தீர்மானத் தின் மீது பேசியபோது இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் வசிக்கின்ற தமிழர்கள் அந்த மண்ணின் பூர்வீகக் குடிகள் என்று சொன்னார்.
அதற்கு இரண்டு நாள் கழித்து சுதுமலையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரபாகரன் பேசும் போது ஒரு பெரிய வல்லரசான இந்தியா இந்த ஒப்பந்தத்தை நம் மீது திணித்துவிட்டது. உயிர்ப்பலி கொடுத்து மகத்தான தியாகங்களைச் செய்து நம்முடைய போராட்டம் வெற்றி பெறும் தருவாயில் நம் மீது இந்த ஒப்பந்தத்தை இந்தியா திணித் திருக்கிறது. ஆனால் இந்தியாவோடு நாம் மோதத் தயாராக இல்லை. இந்தியத் துருப்புகளை எதிர்த்து நாம் ஆயுதம் ஏந்தத் தயாராக இல்லை. ஆனால் தமிழ் மக்களைப் பாது காக்கும் பொறுப்பை நான் இந்திய அரசாங்கத்திடம் தற்போது ஒப்படைக்கிறேன் என்று சொன்னார்.
நான் செய்தி கேட்டேன். வெளிஓயா பகுதியிலே யுத்தம் நடக்கிறது. அது தமிழர்களின் பூர்வீகப் பகுதி. அங்கு ஒரு சதவிகிதம் கூட சிங்களவர் கிடையாது. ஆனால், இன்று 24 சதவிகிதம் பேர் குடியேற்றப்பட்டிருக் கிறார்கள். பாலஸ்தீவீயர்களின் பூர்வீகத் தாயகப் பகுதியான மேற்குக் கரையிலே யூதர்களைக் கொண்டுவந்து குடியமர்த்திவிட்டார்கள் என்று சொல்லுகிறார்களே அதைப்போல இப்படி தமிழர்கள் பகுதியில் கொண்டுவந்து குடியேற்றப்பட்ட சிங்களவர்களை வெளியேற்ற வேண்டுமென்று கோரி உண்ணாவிரதம் இருந்த மடிந்தாரே திலிபன்.
என்ன காரணத்திற்காக இந்திய இராணூவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் மோதல் ஏற்பட்டது? ஒப்பந்தத்தின்படி விடுதலைப் புலிகளின் தளபதிகளுக்கு பாதுகாப்பு தரப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மையின் ஈரம் காய்வதற்கு முன்பு செயவர்த்தனே சொன்னார், வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஒன்றாக வேண்டுமென்ற கருத்துக்கணிப்புக்கு எதிராக நான் பிரச்சாரம் செய்வேன் என்று பேசினார்.ஆக ஒப்பந்தமே ஒரு பித்த லாட்டம். அதன் பிறகு என்ன ஆயிற்று?
17 விடுதலைப்புலித் தளபதிகள் கப்பலிலே வந்த போது இலங்கைக் கடற்படை அவர்களைக் கைது செய்தது. புலேந்திரன் மற்றும் 16 பேரும் முக்கிய தளபதிகள். இவர்களைக் கைது செய்த விபரத்தை இலங்கைக் கடற்படை இந்திய இராணூவத்திற்கு தெரிவித்தது. இந்திய இராணூவத் தளபதி பிரார் உத்தரவின் பேரில் இந்த 17 தளபதிகளும் வைக்கப்பட்டி ருந்த இடத்தைச் சுற்றி இந்திய இராணூவம் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. இந்த 17 புலித்தளபதிகளுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் உங்களை நிர்மூலம் ஆக்கிவிடுவோம் என்று இந்திய இராணூவத் தளபதி இலங்கை இராணூவத்தை எச்சரித்தார். இந்த சம்பவம் நடந்தது அக்டோபர் 3 ஆம் தேதி.
அதன் பிறகு 4 ஆம் தேதி பிரபாகரன் இவர் களை உடனடியாக விடுவிக்க ஏற்பாடு செய்யுங்கள் என்று இந்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார். இந்திய அரசு சொல்லும் ஆளை வடக்கு, கிழக்கு மாகாணங்களின் நிர்வாகக்குழுவின் தலைவராக ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று பிரபாகரனை நிர்ப்பந்திக்க இந்திய அரசாங்கத்திற்கு யோசனை சொல்லப்பட்டது.
17 தளபதிகள் முக்கியமானவர்கள். இவர்களை இலங்கை இராணூவத்திடம் ஒப்படைத்து விடுங்கள் பிரபாகரன் கையெழுத்து இட வருவார் என்று சொன்னார்கள்.
5 ஆம் தேதி காலை 11 மணிக்கு இந்திய இராணூவத்திற்கு ஒரு அதிர்ச்சிதரும் தகவல் வந்தது. உங்கள் கட்டுக்காவலை நீங்கள் விடுவித்துக் கொள்ளுங்கள் என்று. அதன்படி இந்திய இராணூவம் காவலை விலக்கிக் கொண்டது. இலங்கை இராணூவம் 17 பேரை நெருங்கியது. சயனைட் குப்பிகளைக்கடித்து 12 பேர் அந்த இடத்திலேயே இறந்து போனார்கள்.
இதையெல்லாம் கடந்த 9 ஆண்டுகளாக நான் ஊர் ஊராகப் போய் சொல்லவில்லையே. இனி நான் சொல்வேன்.
எத்தனை துரோகங்கள் இழைக்கப்பட்டது? என்பதைப் பட்டியலிட்டுச் சொல்வேன். அதனால் நான் அழிந்தாலும் அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. நியாயத்தைச் சொல்லுவேன். அந்த 17 பேர் ஒப்படைக்கப் பட்டதற்கு யார் காரணம்?
மாநிலங்களவையிலே விவாதங்கள் நடை பெற்றது. வெளிவிவகாரத்துறை அமைச்சர் நட்வர்சிங் பேசினார் நான் அமைச்சரைக் கேட்டேன். இந்திய இராணூவம் தவறு செய்துவிட்டது என்று தெரிவித்தேன்.
‘நீ தேசத் துரோகி’ என்று சொன்னார்கள். 1987 நவம்பர் 11 ஆம் தேதி நாடாளுமன்ற மாநிலங்களவையிலே விவாதத்தை நான் தொடங்கினேன். அந்த விவாதத்திலே பிரதம அமைச்சர் இராஜிவ் காந்தி பேசினார். ஆத்திரப்பட்டு பேசினார். இந்திய இராணூவத்தின் தவறுகளை நான் சுட்டிக்காட்டிய போது என்னைப் பேசவிடாமல் தடுத்தார்கள்.
அப்போது ‘வைகோவைப் பேச விடுங்கள், அவர் சொல்லுவதில் என்ன தவறு இருக்கிறது? என்று கேட்டவர் யார் தெரியுமா? ‘அவரைத் தேசத் துரோகி என்று குற்றம் சாட்டுவீர்களேயானால் அதை நிருபிக்க வேண்டும்’ என்று சொன்னவர் யார் தெரியுமா? என் நெஞ்சத்தில் நல்ல இடத்தை இன்றைக்குப் பெற்றிருக்கின்ற இன்றைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய்.
அந்தக் குறிப்புகளையெல்லாம் நான் இப்பொழுது கையிலே எடுத்து வைத்திருக்கிறேன். ஒவ்வொரு இடத்திலும் வாஜ்பாய் குறுக்கிட்டு எனக்காகப் பேசினார்.
‘நீ தேசத் துரோகி உனக்குக் கிடைக்கிற தண்டனை விபரீதமாக இருக்கும்’ என்று காங்கிரஸ் அமைச்சர் மிரட்டினார். அப்போது நான் சொன்னேன். உண்மைகளைச் சொன்னால் விளைவுகள் விபரீதமாக இருக்கும் என்று சொல்லுகிறீர்களே- உயர்ந்தபட்ச தண்டனை தூக்குத்தண்டனையாகத்தான் இருக்க முடியும். நான் அதையே பொருட்படுத்தவில்லை. இதெல்லாம் நாடாளுமன்ற குறிப்புகளிலே இருக்கிறது.
விவாதம் தொடர்ந்தது. மறுநாள் பதில் சொல்ல வந்தார் வெளியுறவு அமைச்சர். நான் அப்போது பேச முயன்ற போது 50, 60 காங்கிரசு எம்.பி.க்கள் என்னைப் பேச விடவில்லை. இந்தியில் கூச்சல் போட்டார்கள். நான் பதிலுக்கு கேட்டேன். என்ன கூச்சல் போடுகிறீர்கள்? என் கேள்விக்கு உங்களிடம் பதில் கிடையாது.
நான் கேட்டேன்.
5 ஆம் தேதி இந்திய இராணூவக் காவலை நீங்கள் வாபஸ் வாங்கச் சொன்னது உண்டா இல்லையா? என்று கேட்டேன். அவர்கள் பதில் சொல்லவில்லை.
சரி போகட்டும். போர் மூண்டுவிட்டது. விடுதலைப்புலிகளின் செய்தி நிறுவனங்கள் தகர்க்கப்பட்டன. டி.வி. டவர் உடைக்கப் பட்டது. யாழ்ப்பாணத்திற்குள்ளே இராணூவம் நுழைகிறது. அவர்கள் ஏன் இந்திய இராணூவத்தை எதிர்த்து வெற்றி பெற்றுவிடுவோம் என்றார் சண்டை போட்டார்காளா? மானத்திற்காகப் போரிட்டு மடிந்தார்கள்.
அதன்பிறகு 8 கடிதங்கள் பிரபாகரன் எழுதினார் இராஜிவ் காந்திக்கு. போர் நிறுத்தம் செய்யுங்கள் என்று கேட்டார். பதிலே கிடையாது. கடைசியாக இந்திய உளவுத்துறை யாழ்ப்பாணத்தின் கமாண்டராக இருந்த கிட்டுவைச் சந்தித்தது. பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்போவதாகச் சொன்னார். அப்போது ஒரு நாள் நான் கிட்டுவைச் சந்திக்கப் போனேன். ஆறடி உயரத்தில் ஆஜானுபாகுவான தோற்றத்தோடு இருந்த ஒரு வாலிபரை என் முன் கொண்டுவந்து நிறுத்தி அண்ணா இவர் யார் தெரியுமா? என்று கேட்டார். இவர்தான் யாழ்ப்பாண கமாண்டராக இருந்த ஜானி. நாளைக்கு இந்திய அரசு பிரபாகரனைச் சந்திக்க இவரை கெலிகாப்டரில் அழைத்துப்போகிறது என்று என்னிடம் அறிமுகப்படுத்தியபோது நான் அந்த இளைஞனின் கைகளைப் பிடித்துக் கொண்டேன். வலுவான கைகள்.
மறுநாள் அவர் புறப்பட்டுச் சென்றார். அவர் தன் பாதுகாப்புக்கு ஆயுதம் கேட்டார். எந்த ஆயுதமும் வேண்டாம். நீங்கள் உங்கள் பெயரைச் சொல்லுங்கள். இந்திய இராணூவத்திற்கு உத்தரவு கொடுக்கப் பட்டிருக்கிறது. உங்க ளுக்கு எந்த இடைஞ்சலும் இருக்காது என்று சொன்னார்கள். அவர் நான்கு தினங்களாக இரவு பகலாக நடந்து பிரபாகரனைச் சந்தித்து விட்டு திரும்பினார். அவரோடு மூன்று புலிப்படை இளைஞர்கள் வந்தார்கள். அவரை ஒரு இடத்திலே இந்திய இராணூவம் மறித்தது. உடனேஇரண்டு கைகளையும் தூக்கியவாறே சத்தம் போட்டுச் சொன்னார். ‘நான் இந்திய அரசாங்கத்தால் அனுப்பட்டவன். என் பெயர் ஜானி’, உன் பெயரைச் சொன்னால் போதும் என்று சொல்லி யிருந்தார்கள். அப்படி ஜானி தன் பெயரைச் சொன்னதற்குப் பிறகும் நிராயுத பாணியான அவரை உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை துப்பாக்கியால் சுட்டு சல்லடையாக்கினார்கள். உடன் வந்த மூவரை ஒன்றும் செய்ய வில்லை. அவர்கள் நான்கு நாட்கள் அங்கேயே இருந்து காட்டுச்சுள்ளிகளை பொறுக்கிப் போட்டு ஜானியின் உடலைக் கொளுத்தினார்கள்.
நான் இராணூவ அமைச்சரைக் கேட்டேன். துவறுதலாக நடந்துவிட்டது என்று சொன்னார். ‘வருத்தம் தெரிவித்தீர்களா?’ என்று கேட்டேன். இல்லையென்று சொன்னார். இப்படி அவர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகங்களை என்னால் பட்டியலிட்டுக் காட்ட முடியும்.
இராஜிவ் காந்தி படுகொலை ஒரு வன்முறைச் சம்பவம். கண்டனத்திற்குரிய சம்பவம். அந்த வன்முறைச் சம்பவத்திற்கு நான் கண்டனம் தெரிவிக்கிறேன். இந்த ஒரு சம்பவத்தை மட்டும் வைத்துக் கொண்டு ஈழத்தமிழர்களின் பிரச்சனையைக் குழித்தோண்டிப் புதைத்துவிடலாம் என்ற கருதாதீர்கள். அங்கே ஈழம் அமைந்துவிட்டால் இங்கே தனித்தமிழ் நாட்டு கோரிக்கை வலுத்துவிடும் என்று பூச்சாண்டி காட்டுகிறார்கள்.
பாலஸ்தீன விடுதலை இயக்கம் பயங்கரவாத இயக்கம் என்று சொல்லப்படவில்லையா? ஓலிம்பிக் விளையாட்டுக் கிராமத்திற்குள்ளே புகுந்து அங்கே தூங்கிக் கொண்டிருந்த 11 இளம் இஸ்ரேலிய வீரர்களை அவர்கள் சுட்டுக்கொல்லவில்லையா? அய்ரோப்பிய கண்டம் எங்கும் படுகொலைகள் நடத்தவில்லையா? அதே பாலஸ்தீன விடுதலை இயக்கத்தை 149 நாடுகள் அங்கீகரித்து இருக்கின்றன என்று சம்பத் சொன்னாரே.
இன்றைக்கும் பி.எல்.ஓ.வின் தலைவர் இடுப்பிலே பிஸ்டலை வைத்துக் கொண்டுதான் எங்கும் வருகிறார். அந்த அராபத்தோடு வெள்ளை மாளிகையிலே கிளிண்டன் கைகுலுக்குகிறபோது அராபத் என்ன சொன்னார்? ஜரிக்கோ பகுதிக்குக் கிடைத்திருக்கின்ற சுயாட்சி முதல் கட்டம். எங்களது இறுதி இலட்சியம் தனி பாலஸ்தீனம் என்று சொல்லுகிறாரே?
அயர்லாந்து விடுதலை இராணூவம் நடத்தாத படுகொலைகளா? இந்தியாவின் கடைசி வைஸ்ராய்/சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் மவுண்ட்பேட்டன் இங்கிலாந்து நாட்டின் மன்னர் பரம்பரையைச் சேர்ந்தவர். அவரைக் கொன்றார்கள். பிரதமர் மார்க்கரெட் தாட்சர் அம்மையாருக்கு குறி வைத்தார்கள். அவர் உயிர் தப்பி வீடு திரும்பினார். அப்போது தொலைபேசி மணி ஒலித்தது. அவரது செயலாளர் போனை எடுத்தார். ‘இப்போது உங்கள் பிரதமர் தப்பிவிட்டார். அவருக்கு ஒவ்வொரு முறையும் அதிர்ஷடம் வேண்டும். ஆனால் எங்களுக்கு ஒரே முறை அதிர்ஷடம் இருந்தால் போதும்’ என்று சொன்னார்கள். அவர்களுடன் டோனி பிளேயர் உட்கார்ந்து பேசுகிறார்.
அதைப்போல இங்கே ஏன் பேசக் கூடாது? அந்தப்பேச்சு வார்த்தைக்கு என்ன வழி நான் என்னுடைய கருத்தை சொல்லுகிறேன், விடுதலைப்புலிகளை மட்டும் பயங்கரவாதிகள் என்று சொல்லுகிறார்கள். நான் பயங்கரவாதத்தை ஆதரிக்கவில்லை. அங்கே அவர்கள் உரிமைப் போராட்டத்தை நடத்துகிறார்கள். தமிழீழம் என்பது அவர்களுடைய தாகம்.
தமிழீழத்தைப் பற்றி பேசுவது தவறு என்றால் பாலஸ் தீனத்தைப் பற்றி யாரும் பேசக் கூடாது. கிழக்கு தைமூரைப் பற்றி இந்தியாவில் எந்த அரசியல்வாதியும் வாய்திறக்கக் கூடாது. இவையெல்லாம் உலகத்திலே நடக்கின்றன. இதற்கெல்லாம் ஆதரவு கிடைக்கிறது. நாங்கள் திராவிட நாடு கேட்ட காரணங்களைவிட ஆயிரம் மடங்கு காரணம் தமிழீழத்திற்கு இருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது
(ஏடு-5)
No comments:
Post a Comment