Monday, December 23, 2019

பாரசீகமும், இஸ்லாமும் - தோழர் ரஹில சங்கிரியாயண பேச்சு

பாரசீகமும், இஸ்லாமும்
தோழர் ரஹில சங்கிரியாயண பேச்சு

லாகூரில் கூடிய இந்து சபை ஒன்றில் தோழர் ரஹில சங்கிரியாயண என்பவர் பாரசீகமும் இஸ்லாமும் என்பது பற்றிப் பேசியதன் சாரம்சமாவது:

இன்று பாரசீகத்தில் சகல துறைகளிலும் ஒரு பெரிய மாறுதல் ஏற்பட்டிருக்கிறது. அராபியர்கள் கைப்பற்றியது முதல் 1200 வருடங்களாக துருக்கி தேச சரித்திரத்தையே தலைகீழாக மாற்றியிருக்கிறது. நாதர்ஷாவையும் ஷாஅபாசையும் விட அதிகமாகவும், பிரியமாகவும் தாரியசையும், சைக்ரசையும், நெள´ரவானையும் மதித்து வருகிறார்கள்.
அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் தேசீக உணர்ச்சியின் காரணமாக, தாங்கள் அனுஷ்டித்து வரும் இஸ்லாம் மதம் எதிர்த்தாலும் அல்லது முரண்பட்டாலும்கூட கவலைப்படாமல் முன்னேறிக் கொண்டே வருகிறார்கள். பாரசீக  பாஷைகளில் கலந்திருந்த ஆயிரக்கணக்கான அராபிய பாஷைப் பதங்களை களைந்தெறிந்துவிட்டு அதற்கு பதிலாக சுத்தமான சுயமான பாரசீக பாஷையையே புகுத்தியிருக்கிறார்கள்.

ஏன்? எவ்வளவோ தெய்வ சக்தி வாய்ந்தது என்று சொல்லிக் கொள்கிற ‘பிஸ்மில்லா ரஹிமான ‡ இரஹீம்’ என்ற வார்த்தையைக் கூட இன்று மாற்றி ‘குதா பாக்ஷிந்தா ‡ இ ‡ மிஹிர்பான்’ எனத் திருத்தியமைத்திருக் கிறார்கள்.
ஈரான் தேசமுழுவதுமே ஐரோப்பிய மயமாக மாறிவிட்டது.

சிலவாண்டுகளுக்கு முன் சக்ரவர்த்தி தனது பிரஜைகளை ‘பிஹிலவி’ குல்லாக்களை அணியும்படி உத்தரவிட்டார்.

ஆனால் இன்றோ ஷா தன்னுடைய பிரஜைகளை ஐரோப்பிய தொப்பியை அணியும்படி உத்தரவிட்டிருக்கிறார்.

உடை மாற்றம் ஏற்பட்ட காலையில் மதத் தலைவர்களால் சிறிது இடையூறுகள் ஏற்பட்டன. அதிகாரிகளின் மிரட்டலுக்கும் அஞ்சாமல் தேவாலயங்களில் கூடி இச்சீர்திருத்தத்தைக் கண்டிக்கத் தலைப்பட்டார்கள்.
இம்முறையை நிறுத்துவான் வேண்டி சர்க்கார் தேவலாயங்களில் பிரவேசித்து இத்தகைய கூட்டங்களை வெடிகுண்டுகளால் கலைக்க நேரிட்டது. ஆனால் இன்று யாதொரு கஷ்டமும் இல்லை.

இதுமட்டுமல்லாமல் நகரங்களின் ரஸ்தாக்கள் விசாலப்பட்டும் பார்க்குகள் நிறைந்துமிருக்கின்றன. இந்தியாவிலே அத்தகைய விலாசமானதும், பார்க்குகள் நிறைந்ததுமான ரஸ்தாக்கள் இல்லையயன்றே சொல்லலாம்.
இந்த அற்பக் காரியமான ரஸ்தாக்கள் போடுவதில் கூட அவர்கள் எடுத்துக்கொண்ட முறை இந்தியாவில் உள்ள மதவாதிகளை நடுங்கச் செய்யக் கூடியதாயிருக்கிறது.

என்னவெனில், ரஸ்தாக்கள் ஏற்படுத்தும்போது அதாவது விசாலப்படுத்தும்போது அது சமயம் அருகாமையில் குறுக்கிடக் கூடிய மசூதிகளையும் தகர்த்து எறிய வேண்டியிருந்தது. அந்த ரஸ்தாக்களின் அகலம் ஏறக்குறைய 300 அடி இருக்கிறது. அந்நாளில் இருந்து வந்த பிணம் புதைக்கும் இடமெல்லாம் இந்நாளில் அழகிய நந்தவனமாக்கப்பட்டிருக்கின்றன.
இதற்கு முன் சிறுமிகள் கூட முக்காடு(புர்கா) இட்டுதான் வெளிவர வேண்டும். ஆனால் இன்றோ முக்காடு இட்ட ஒரு சிறுமியும் பள்ளிக் கூடங்களுக்கு செல்ல முடியாது. சாதாரணமாகப் பெண்கள் கூட முக்காட்டை களைந் தெரிந்து விட்டார்கள். நூற்றுக்கு நூறு பெண்கள் தலை மயிரைப் பின்னி தொங்க விட்டுக் கொண்டும், ஐரோப்பிய உடை தரித்துக் கொண்டும் வீதிகளிலே செல்லுவதை நாம் பார்க்கலாம். ஆனால் ஏதோ சிலர் மட்டும் கரு நிறத்தோடு கூடிய மெல்லிய மஸ்ஸின் துணியால் முகத்தை மட்டும் மறைத்துச் செல்கிறார்கள். இது ஒழிய வெகு நாள் செல்லாது. மத சம்பிரதாயங்கள் பறந்தோடுகின்றன.

பொருளாதார நிலையைக் குறித்து சர்க்கார் பற்பல வசதிகளை அளித்தும் முறைகளை கையாண்டும் வருகிறார் கள். சர்க்கார், பஞ்சாலைகளையும், சர்க்கரை ஆலைகளையும், நெருப்புப் பெட்டி ஆலைகளையும் உற்பத்தி செய்திருக்கிறார்கள்.

ராஜாஷா தோன்றுவதற்கு முன் கண்டறியாத பற்பல கைத்தொழிலாலைகளும் இன்று காணக்கிடக்கின்றன. பொருளாதார முன்னேற்றம் அதிகரித்ததால் மதப் பைத்தியங் கெணடவர்கள் கூட சிறிது நிதானிக்க வேண்டி யிருந்தது. சுருக்கமாகச் சொல்லுவோமேயானால் சில முல்லாக்களையம் மத பித்தர்களையம் தவிர மற்ற யாவர்களும், அதிலும் சிறப்பாக வாலிபர்கள் பகுத்தறிவாளராகிய, தங்களை ஆளுகிற ராஜாவை ஆதரித்தே வருகிறார்கள்.

ஷாவின் தோற்றத்திற்கு முன் ஈரான் பிரதேசத்தில் சாதாரணமாக யாரும் தைரியமாக ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு போக்குவரத்துக்கூட வைத்துக்கொள்ள முடியாது. வழியயல்லாம் திருடர்கள் பயமும் கொள்ளைக் கூட்டங்களின் திகிலுமே இருந்து வந்தன. ஆனால் இன்று நாம் அத்தகைய பயமில்லாமல், செளகரியமாக நாகரீகமான வாகனங்களில் ஊர்ந்து செல்லலாம்.

இரவென்றும் பகலென்றும் கூடக் கருதாமல் செல்லலாம். அப்பிரதேசத்தில் பற்பல இடங்களில் ஆகாய தந்தி ஆபீஸ்களும், ஆகாய விமான சர்வீசும் இன்னும் இதர நாகரீகமான வசதிகளையும் பார்க்கலாம். (குடிஅரசு 1935, நவம்பர் 17).

No comments:

Post a Comment