- தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்
தமிழ்மொழியின் சிறப்பு
எழுத்துக்கும் சொல்லுக்கும் இலக்கணம் பேசுகின்ற மொழிகளின் ஊடே வாழ்க்கைக்கு இலக்கணம் பேசியது தமிழ்மொழி. ‘உலகத்தின் நீதி இலக்கியங்களில் ஒப்பற்ற நீதி இலக்கியம் திருக்குறள்’ என்று ஆல்பர்ட் சுவைட்சரும் `திருவாசகம் தெய்வத் தமிழ்-இல்லை. திருவாசகமே தெய்வம்’ என்று ஜி.யூ.போப்பும் உலக அரங்கில் உரக்கக் கூவினர். மனித குலம் `வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வானுறையும் தெய்வ’நிலைக்கு உயர்த்திக் கொள்ள வழிகாட்டும் இத்தகைய தமிழ்மொழி ஆண்டவன் ஆலயத்தில் வழிபாட்டிற்கு ஆகாது என்ற செய்திதான் விந்தையாகவும் வேதனையாகவும் உள்ளது.
ஏழாம் நூற்றாண்டில் தமிழகத்தை மிகப்பெரிய இருள் கவ்விக் கிடந்தது. இன்று தமிழகத்தில் நாம் வணங்குகின்ற விண்முட்டும் ஆலயங் கள் எல்லாம் சமணப் பாழிகளாகவோ, பௌத்த விகாரங்களாகவோ உருமாறியிருக்கும். தமிழர்களின் சமய உலகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கும். ஆட்சியாளர்களை மதம் மாற்றுவதன் மூலம் மக்களை மதம் மாற்றுகின்ற எளிய ராஜதந்திரம் அரங்கேறிய காலம் அது. சமணம் சார்ந்த மன்னவன் பரிபாலனத்தில் இந்து மதம் என்று கூறிக்கொண்டாலும் சரி, சைவ சமயம் என்று கூறிக்கொண்டாலும் சரி அந்த மதம் கடைசி மூச்சு வாங்கிக் கொண்டிருந்த காலம்.
பொற்காசு கொடுத்து சிவபெருமான் கேட்ட இன்பத்தமிழ்
இவ்வாறு ஒரு மிகப்பெரிய வரலாற்றுப் போராட்டத்தில் சைவ சமய உலகத்தைக் காத்த மொழி அருச்சனைக்கு ஆகாது என்பது புரியாத புதிராகவே இருக்கின்றது[. நாளும் இன்னிசையால் தமிழ்ப்பரப்பிய ஞhனசம்பந்தப் பெருமானிடமும் `நாமார்க்கும் குடியல்லோம்’ என்று வீறுகொண்டு முழங்கிய அப்பரடிகளிடமும் நாளும் பொற்காசு கொடுத்து இறைவன் இன்பத்தமிழை விரும்பிக்கேட்டான் என்பது வரலாறு.
உலக அன்னை ஊட்டிய அருந்தமிழ் பாலமுது
ஞானக்குழந்தை சம்பந்தப் பெருமான் உலகஅன்னை உவந்து ஊட்டிய அமுது உண்டதும்., மொழிந்த மொழி `தோடுடைய செவியன்’எனும் தேவகான தெய்வத் தமிழ்மொழி. இதன் மூலம் அன்னை தன் பாலமுதில் அருந்தமிழ் உணர்வையும் குழைத்து ஊட்டி இருக்கிறார் என்பது புலப்படுகிறதல்லவா?
`நல்லுயர் நான்மறை நற்றமிழ் ஞhனசம்பந்தன்’ என்று தம்மைக் கூறிக்கொள்ளும் ஞhன சம்பந்தப் பெருமான் தாம் பாடியருளிய 4000/இக்கும் மேற்பட்ட திருப்பாடல்களில் 500/இக்கும் மேற்பட்ட இடங்களில் தமிழின் பெருமை பேசியும் தமிழ் மொழியால் பாடி இறைவனை அடைய முடியும் என்றும் அறுதியிட்டுக் கூறுகின்றார்.
தமிழுக்கு மந்திர சக்தி
`நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
மறைமொழி தானே மந்திரம் என்ப’
என்பது தொல்காப்பியம். தமிழுக்கு மந்திர சக்தி உண்டு என்பதை மயிலையில் நிறைமொழி மாந்தராகிய ஞhனசம்பந்தப் பெருமான் நிகழ்த்திய அற்புதம் உணர்த்தும்.
இறந்து போன பெண்ணின் எலும்புச் சாம்பலுக்கு உயிர் கொடுத்தது ஞhனசம்பந்தப் பெருமானின் மந்திரத் தமிழ். திருமறைக்காட்டில் வேதங் கள் பூட்டிய கதவினைத் தீந்தமிழ் தெய்வத் திருப்பாடல்கள் திறந்தன.
கல்லையும் கசிந்துருகச் செய்யும் கனித்தமிழ் மணிவாசகரின் மணித் தமிழ். கிறித்துவ மதத்தைப் பரப்ப வந்த ஜி.யூ.போப் திருவாசகத்தால் கட்டுண்டு தம் கல்லறையில் `தமிழ் பயிலும் மாணவன்’ எனப் பொறிக் கச்செய்தார்.
இறைவன் மதுரைத் திருவீதியில் மண் சுமந்ததும் அவர்தம் பொன் மேனி புண் சுமந்ததும் தேனினும் இனிய தீந்தமிழுக்காகவே[
பண் சுமந்த பாடற் பரிசு படைத்தருளும்
பெண்சுமந்த பாகத்தான் பெம்மான் பெருந்துறையான்
விண்சுமந்த கீர்த்தி வியன்மண்டத்தீசன்
கண் சுமந்த நெற்றிக் கடவுள் மதுரை
மண் சுமந்து கூலிகொண்டு அக்கோவால் மொத்துண்டு
பண் சுமந்த பொன்மேனி பாடுதும் காண் அம்மானாய்’
என்று திருவாசகம் கரைந்துருகுகின்றது.
அர்ச்சனை பாட்டேயாகும். ஆதலால் மண்மேல்
நம்மைச் சொற்றமிழ் பாடு கென்று’
நற்றமிழ்ச் சுந்தரருக்கு இறைவன் ஆணையிடுகின்றார்
இறைவன், சேரமான் பெருமான் நாயனாரின் பூசனையில் காலந் தாழ்ந்து எழுந்தருளியதற்கு, சுந்தரரின் சுந்தரத்தமிழில் தான் கட்டுண்டு விட்டதாகக் காரணம் கூறுகின்றார். நற்றமிழ்ச் சுந்தரரின் நல்ல தமிழக் காகக் கழுகு உறக்கம் கொள்ளும் நள்ளிரவில் இறைவன் தூது சென்ற காட்சியை எந்த எழுத்துகளில் எழுதிக் காட்ட முடியும்?
தில்லை மூவாயிரவர் நடராசப் பெருமானுக்கு திருவிழாக் கொண் டாடுகின்றனர். கொடி ஏற்ற சமஸ்கிருத மந்திரத்தைக் கொண்டு முயற்சி செய்த பொழுது கொடி ஏறவில்லை. தவத்தில் சிறந்த உமாபதி சிவம் தமிழில் கொடிக்கவி பாடக் கொடி தானே ஏறியது என்ற வரலாறு தமிழுக்கு மந்திர ஆற்றல் உண்டு என்பதற்குச் சான்றாகும்.
காஞ்சிப்புராணத்தில் அகத்தியர் காஞ்சியில் தமிழ் மந்திரங்களைக் கொண்டு பூசித்ததாகக் கூறியுள்ள பாடல் தமிழில் மந்திரங்கள் உண்டு என்பதற்கும் அந்த மந்திரங்களைக் கொண்டு திருக்கோயில்களில் அருச்சனை செய்தனர் என்பதற்கும் தக்க சான்றாகும்.
`மன்னிய இத்தமிழ்க் கிளவி மந்திரங்கள் கணித்தடியேன்
செந்நெறியின் வழுவா இத்திருக்காஞ்சி நகர் வரைப்பின்
உன்னணுக்க னாகி இனி துறைந்திடவும்பெற வேண்டும்
இன்னவரம் எனக்கருளாய் எம்பெருமான் என்றிரந்தான்’
என்பது அத்திருப்பாடல்.
ஆண்டவனுக்குப்புரியாத மொழி தமிழ் என்று கூறுகின்றனர். ஆனால் கண்ணுதற் பெருமானார் கழகமோடு அமர்ந்து தமிழாய்வு நிகழ்த்தியிருக்கின்றார் என்று பேசப்படுகிறார்.
ஊன் உருகி, உள்ளொளி பெருக வேண்டின் உணரும் மொழியால் ஓதினால் தானே சாத்தியமாகும்? இறைவன் உணர இயலாமொழி என்ற ஒன்று இல்லை. இறைவன் அனைத்து மொழிகளும் அறிந்தவன். விலங்கு களின் மொழியும் தாவரங்களின் உணர்வும்கூட அறிந்த தயாபரன் இறைவன். உயிர்களின் உணர்வுகளையும் அறிந்தவன். தாயில்லாப் பன்றிக்குட்டிகளுக்குத் தாயாகிப் பால் சுரந்தவன். தாயில்லாப் பெண் ணுக்குத் தாயாகி மகப்பேறு பார்த்தவன் தாயுமானவன்.
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே
என்ற திருமூலர் வாக்கு எதை உணர்த்துகிறது. இவையெல்லாம் எண்ணிப் பார்த்தால் ஆண்டவனுக்குத் தமிழ் புரியாது என்பது புரியாத புதிரா கவே உள்ளது.
ஆகம, சாத்திரங்கள் பெயரால் மனிதர்கள் ஆலயங்களில் நுழைய மறுக்கப்பட்டார்கள். நுழையக் கூடாத மனிதர்கள் நுழைந்து விட்டார்கள் என்று ஆண்டவன் ஆலயத்தை விட்டு வெளியேறிவிடவில்லை. மனிதர்களை கோவிலுக்குள் நுழைய விடாததைப்போல ஒரு மொழியை கோயிலுக்குள் நுழைய விடாமல் செய்வதும் ஒருவகைத் தீண்டாமையே’ (தினமணி 26.10.1998)
No comments:
Post a Comment