Wednesday, January 29, 2020

நாமக்கல் கவிஞரின் ‘என் கதை’


நாமக்கல் கவிஞரின்என் கதை

பாரதியார் காரைக்குடியில்- கானாடுகாத்தனில் தங்கியிருந்த போது அவரைத் தரிசிக்க நாமக்கல் கவிஞர் சென்றார். சென்ற இடத்தில்ஓவியக் கவிஞர்என்று பாரதியாருக்கு இவரை அறிமுகப்படுத்தினார்கள்.

ஓவியக் கலைஞரா! வருக கலைஞரே! தமிழ் நாட்டின் அழகே கலையழகுதான்என்று பாரதியார் சொன்னபோது கவிஞர் அவருக்கு முன்னால் வந்து வணங்கினார். அவரது கால்களைத் தொடப் போன நாமக்கல்லாரின் கையைப் பிடித்துக் கொண்டு, அருகில் அமர்த்தி, ‘பிள்ளைவாள் நீர் நம்மை ஓவியத்தில் தீட்டும். நாம் உம்மைக் காவியத்தில் தீட்டுவோம்என்று பாரதியார் சொல்லிவிட்டுக் கலகலவென்று சிரித்தார்.

அப்போதுராமலிங்கம் பிள்ளை கூடப் பாட்டுகள் சொல்வார்என்றாராம் அவரை அழைத்துப் போனவர்.

உடனே பாரதிஅப்படியா? ஓவியக் கலைஞர், காவியக் கலைஞருமா? எதைப் பற்றிப் பாடி இருக்கிறீர்? எங்கே ஒன்று பாடும். கேட்போம்என்றார்.

கூசிக்குன்றிக் குலைந்து, வெட்கித்தவராய் நாணத்துடன்தம் மரசைப் பிறர் ஆள விட்டுவிட்டுத் தாம் வணங்கிக் கைகட்டி நின்ற பேரும்என்ற முதலடியைக் கூறி முடிப்பதற்குள் பாரதியார் துள்ளித் துடிக்க ஆரம்பித்துவிட்டார்! கழுத்தை நீட்டிக் காதைக் காட்டி கவனத்தோடு கேட்டார்.

பாட்டை முடித்த போது, பலே பாண்டியா! பிள்ளை! நீர் புலவன்! அய்யமில்லை! தம் மரசைப் பிறர் ஆள - விட்டு விட்டுத்- தாம் வணங்கி- கை கட்டி- நின்ற பேர்கள்- பலே! பலே! இந்த ஒரு அடியே போதும்என்று கூறிப் பாராட்டினார்.

வெள்ளையரிடம் அடிமைப்பட்டிருந்த இந்தியா அவர் நினைவில் தோன்றி இருக்க வேண்டும்.
பிற்காலத்தில் திரு.வி.. பெரியார், டாக்டர் ராஜன், மதுரை வரதராஜுலு நாயுடு மதுரை வைத்தியநாதையர் முதலான பெருந் தலைவர்கள் கவிஞரை எங்கே கண்டாலும் வெகு குதூகலத்துடன் வரவேற்று அவருடைய பாட்டுக்களுக்கு முதன்மை கொடுத்துப் போற்றிப் புகழ்ந்தனராம். ‘அந்தப் புகழ்ச்சியில் நான் மெய் மறந்து உழைக்கலானேன்என்று கூறுகிறார் கவிஞர்

1906 ஆம் ஆண்டு வங்காளப் பிரிவினையால் உண்டான தேசியக் கிளர்ச்சியே இவருடைய தேசாபிமான உணர்ச்சிகளின் ஆரம்பம்.

அரவிந்தர் தன்னுடைய மனைவி மிருணாலினிக்கு எழுதிய கடிதம் ஒன்று, கவிஞருடைய வாலிப உள்ளத்தில் ஊசி கொண்டு தைத்தது போலப் பதிந்தது. அது இது; ‘உன்னுடன் இருந்தது ஊட்டக் கூடிய நிலையில் நான் இல்லையே! ஊட்டக் கூடிய நிலையில் நான் இல்லையே! என் செய்வேன்! மிருணாலினி! என்னுடைய அன்னையை ஒரு ராட்சசன் கீழே தள்ளி அவருடைய மார்பின் மீது படுத்துக் கொண்டு அவருடைய ரத்தத்தை உறிஞ்சிக் கொண்டிருக்கிறான், அதைப் பார்க்கிற நான். என்னுடைய அன்னையை மீட்க வழிதேடாமல் உன்னுடன் இருந்து காதல் பேசிக் களித்திருக்க என் மனம் இடம் கொடுக்க வில்லையே!’

இவரைக் காந்திஜியின் பக்கம் இழுத்ததாகக் கூறப்படும் நிகழ்ச்சி இது.

காந்திஜி காசியில் இந்து சர்வகலாசாலையின் திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய போது, அங்கு குழுமி இருந்த அந்தக் கலாசாலைக்கு பெருமளவுக்கு நன்கொடைகள் வழங்கியிருந்த மகா ராஜாக்களைப் பாராட்டமல், ‘கோடானு கோடி மக்கள் உண்ணக் கஞ்சியும் உடுக்கக் கந்தையும் இல்லாமல் தவிக்கும் இந்த நாட்டில் இன்னும் உங்களில் பலர், கோடிக்கணக்கான ஆபரணங்களை அணிந்து கொள்ளும் ஆடம்பரத்தில் வாழ்வது பாபமல்லவாஎன்று பேசியதாகும்.

இதுவே காந்திஜி ஒருமகா புருஷர்என்ற எண்ணத்தைக் கவிஞருக்கு உண்டாக்கியது.
கரூரின் அமராவதி ஆற்றங்கரையில் அவர் நடத்திய பொதுக் கூட்டங்களில் கலந்து கொள்ளாத தலைவர்களே அந்த நாளில் கிடையாதாம்.

இரண்டாவது முறையாக காந்தி அடிகள் தமிழ் நாட்டில் சுற்றுப் பிரயாணம் செய்தபோது கரூருக்கு வருவதாகத் தமிழகத் தினசரி களில் விளம்பரப்படுத்தி ரூ 3000 -க்குப் பண முடிப்பு தர வசூல் செய்தார்கள். காந்தி வருவதாக விளம்பரப்படுத்தப்பட்ட  மூன்று தினங்களுக்கு முன்னர்ராஜாஜி, காந்தியடிகளின் உடல் நலத்தைக் கருதி, கரூருக்கு வருவது ரத்தாகி விட்டது.ஏமாற்றத்திற்கு மன்னிக்க வேண்டும்என்று எழுதி விட்டார். ஏற்பாடு செய்தவர்களுக்கு இடி விழுந்தாற்போலாகி விட்டது.

உடனே சில பிரபலஸ்தர்களை கலந்து கொண்டு கோய முத்தூரில் திரு. ஆர்.கே. சண்முகம் செட்டியார் வீட்டில் தங்கி யிருந்த அடிகளாரை நேரிடையாகக் கேட்டனர். அதில் கவிஞரும் ஒருவர்.

சுமார் பத்துப் பேராக முன்னறிவிப்பு ஏதுமின்றி, மத்தி யானத்திற்கு மேல், காந்திஜி நூற்றுக் கொண்டிருந்த தருணத்தில் உள்ளே நுழைந்து, முறையிட்டனர்.

பிரயாணத் திட்டங்களுக்கு அதிகாரியான ராஜாஜியை அழைப்பித்து, காந்தி இது சம்பந்தமாக கேட்டார்.

அதற்கு ராஜாஜிதங்கள் உடல் நலத்தை முன்னிட்டும் மற்றும் புது ஊர்களுக்குப் போக வேண்டி இருப்பதை உத்தேசித்தும் சில இடங்களை நீக்க வேண்டி இருந்ததுஎன்றார்.

அது சரியல்ல. வாக்குறுதி என்றால், வாக்குறுதியாகத்தான் இருக்க வேண்டும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றியே தீர வேண்டும். எதிர்பாராத இடையூறுகள், ஏற்பட்டால் அல்லாமல் வாக்குத் தவறக் கூடாதுஎன்று கூறி பிரயாணத்தை திட்டத்தை வாங்கிப் பார்த்தார். அடுத்த இரு நாட்களுக்கு காந்திஜிக்கு கோய முத்தூரிலே ஓய்வு நாட்களாகக் குறிக்கப்பட்டிருந்தது. காந்திஜி அந்த நாளில்கரூருக்கும் கோபிச்செட்டிப் பாளையத்திற்கும் வர ஏற்பாடு செய்து கொள்ளுங்கள்என்று கூறி விட்டார்.

அப்பொழுது தயங்கித் தயங்கி வெளியே வந்து ராஜாஜியிடம் விடைபெற்றுக் கொண்ட நாமக்கல்லாரின் முகத்தைத் தடவிக் கொடுத்துஉங்கள் வெற்றியை நான் மிகவும் பாராட்டுகிறேன்என்று கூறினார் ராஜாஜி.

..சி. பற்றிய உணர்ச்சிகரமான குறிப்பொன்றும் இந்நூலில் உள்ளது.

தமிழறிஞர் பா.வெ. மாணிக்க நாயக்கர் நாமக்கல் கவிஞருக்கு மிக நெருக்கமான நண்பர். அவரைக் காண வரும் பெரியார் .வே.ராமசாமி அவர்களுடன் அவருக்கு நட்பு ஏற்பட்டது. அதைக் கவிஞரே கூறுகிறார்,

நானும் ஸ்ரீ ராமசாமி நாய்க்கரும் பலமுறை மாணிக்கம் நாயக்க ருடைய வீட்டில் சந்தித்திருக்கிறோம். மாணிக்கம்  நாயக்கருடைய கட்சி அபிப்ராயங்கள் எப்படியிருப்பினும் என்னிடம் மிகவும் அன்புடையவர். வெகு சரசமானவர். மிகவும் விரும்பத்தக்க நண்பர். தன்னிடத்திலுள்ள எதையும் பிறருக்குக் கொடுத்து இன்புறக் கூடியவர். கட்சி வாதத்துக்காக எவ்வளவு கர்ண கடூரமாகப் பேசினாலும் மனிதனுக்கு மனிதன் வெகு மரியாதை உள்ளவர். நான் பள்ளிப் படிப்பை முடித்தவுடன் அடிக்கடி மாணிக்க நாயக் கரிடம் போவேன். அங்கே ஸ்ரீ ராமசாமி நாயக்கர் அறிமுகமானார். அந்தக் காலங்களில் மாணிக்க நாயக்கர் தன்னுடையராவணா யாணத்தைப் பற்றிஅடிக்கடி பேசுவார். ராமசாமி நாயக்கரும் நானும் கேட்டுக் கொண்டிருப்போம். சில சமயங்களில் எனக்கும் மாணிக்கம் நாயக்கருக்கும் அபிப்ராய பேதம் உண்டாகும். அந்த சமயங்களில் ராமசாமி நாயக்கர் இரண்டு கட்சிகளிலும் சேராமல் வெகு சாமர்த்தியமாக நடுநிலை வகிப்பார்

பேரறிஞர் அண்ணா அவர்களாலே புரட்சித் தந்தை என வர்ணிக்கப்பட்ட நீதிக்கட்சியின் தலைவர் டி.எம்.நாயர் அவர் களிடத்திலே காந்தியக் கவிஞர் காது வைத்தியம் செய்து கொண்டிருக்கிறார்.

காது வைத்தியம் செய்து கொண்டதை கவினுறு எழுதியுள்ளார் கவிஞர். இது இந்தச் சித்திர எழுத்தாளர் மனிதர்களையும் நிகழ்ச்சிகளையும் அழகொழுக வர்ணித்து  எழுதிக் காட்டுவதில்  வல்லவர் என்பதற்கு ஒரு சான்றாகும்.

1908-1909 இல் திருச்சி எஸ்.பி.ஜி காலேஜில் எப்..இன்டர் மீடியேட் படித்தேன். 1909 இல் எனக்கு விவாகம் நடந்தது. அதே வருஷத்தில் எனக்குக் கடுமையான காதுவலி ஏற்பட்டது,
எப்.. பரீட்சைக்குச் சில நாட்களுக்கு முன்னால் காதுவலி அதிகப்பட்டு வீட்டுக்கு வந்து விட்டேன். காது வைத்தியம் செய்து கொள்ள சென்னைக்குப் போனேன். பரங்கிமலையில் அய்யாக் கண்ணுப் பிள்ளை வீட்டில் ஜாகை வைத்துக் கொண்டு  பட்டணத் தில் டாக்டர் டி.எம்.நாயரிடத்தில் காது வைத்தியம் தீக்ஷீ பார்த்து கொண்டேன். பிற்காலத்தில் சர்.தியாகராஜச் செட்டியாருடன் சேர்ந்து. பிராமணரல்லாதார் இயக்கத்தை ஆரம்பித்த டாக்டர் நாயர் இவர் தான். நாயர் காது, மூக்கு, தொண்டை இவற்றைப் பற்றிய வியாதிகளுக்கு நிபுணர் என்று பெயர்.

அவருடைய தகப்பனார் கோபாலன் நாயர் என்பவர் நாமக் கல்லில் டெபுடி கலெக்டராக இருந்தவர். என் தகப்பனாருக்கு ரொம்பவும் வேண்டியவர். அந்த உறவை என் தகப்பனார் சொல்லிக் கொண்டதற்காக டாக்டர் நாயர் சிங்கம் போன்ற அவருடைய முகத்தில் சிரிப்பைக் கூட்டி என்னைச் செல்லமாக கவனித்து வைத்தியம் செய்தார். .....காது வலியெல்லாம் தொண்டையின் கோளாறு என்று என்னுடைய தொண்டையை மின்சாரம் ஏற்றிக் கட்டையினால் சுட்டுப் பொசுக்கினார். அதுதான் வைத்தியத்தின் ஆரம்பம். காது வலியும் குறைந்தது. ஆனால் அது வரையிலும் வலியினால் கொஞ்சம் மந்தமாக  மட்டும் இருந்த என் காது செவிடாகிவிட்டது. தொண்டையிலிருந்த சங்கீத குரலும் கெட்டுவிட்டது. நாலு மாதம் வைத்தியம் நடந்தது. தினந்தினம் பரங்கிமலையிலிருந்து பட்டணம் போய் வருவேன். நாலாவது மாதக் கடைசியில் நாயர் கோடை காலத்துக்காக நீலகிரிக்குப் புறப்பட்டார்.
வைத்தியக் குறிப்புகளை எழுதிக் கொடுத்துவிட்டு நீலகிரி யிலிருந்து திரும்பி வந்த பிறகு மறுபடியும் வரச் சொன்னார்.

மறுபடியும் வந்தால் என் செவிடாகிப் போனதைச் சரி செய்து விடுவீர்களா?’  என்று கேட்டேன். அவருக்கு கோபம் வந்து விட்டது. இங்கிலீஷில் தன் தொழிலை அறிந்த எந்த டாக்டரும்  எந்த ஒரு நோயையும் செஸ்தப்படுத்திவிடுவேன் என்று வாக்குறுதி கொடுக்க மாட்டான். என்னால் முடிந்ததைச் செய்வேன். இல்லா விட்டால் அக்கறை இல்லைஎன்று அவருடைய கத்தை மீசை என்னைக் குத்திவிடும் போல் என் காதுக்கருகில் கத்தினார். வருத்தத் தோடு வெளியில் வந்துவிட்டேன்.

நான் அவருடைய பங்களாவின் வெளிக்கதவை தாண்டியதும் அவருடைய பியூன் ஓடிவந்து கூப்பிட்டான். போனேன். டாக்டர் நாயர்ராமலிங்கம் நீ மறுபடி வா. கவனித்து வைத்தியம் செய்கிறேன். உன்னுடைய காது சரியாகிவிடும். பயப்படாதேஎன்று உட்காரச் சொல்லி கேக்கும். பிஸ்கோத்தும். பழமும் கொண்டு வரச்செய்து என்னைத் தின்னச் செய்தார். தன் பங்களாவில் எப்போதும் வைத்திருக்கிறஸ்பென்சர் கலர்ஒன்றையும் குடிக்கச் செய்து என்னுடைய முதுகைத் தட்டிக் கொடுத்து இன்மொழிகள் பேசி அனுப்பினார்.

இலுப்ப மரப்பிசாசு. கவிஞரின்  வறுமையைக் கண்டு உதவ வந்த வள்ளல்கள் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக உதவ இயலாமற் போனதை விளக்கும்புலமையும் வறுமையும்’, ‘நம்புவீர்களா?’, ‘விபரீதம்ஆகிய தலைப்பிலமைந்த கட்டுரைகள், சுவையான சிறுகதைகாளக விளங்கிப்படிக்கச் சுவையூட்டுகின்றன.

இந்நூலில் உள்ளபுலமையும் வறுமையும்என்னும் பகுதியைப் பற்றிக் கல்கி குறிப்பிடும் போதுநாமக்கல் கவிஞர் தமக்குப் பொருளுதவி செய்து தம்முடைய பணக்கஷ்டத்தைத் தீர்ப்பதற்கு முயன்ற நண்பர்களுக்கு நேர்ந்த கதியைப் பற்றிச் சாங்கோபாங்க மாக, உணர்ச்சி பொங்கித் ததும்ப, ரோமம் சிலிர்க்கும்படியான நடையில் எழுதியிருக்கிறார்என்று புகழ்ந்துள்ளார்.

மாணிக்க நாயக்கருடன்டில்லிப்பயணம்என்னும் தலைப்பிலமைந்த கட்டுரை, படிப்பவரின் ஆர்வத்தை ஈர்க்க கூடியது. சிரார்த்தம் செய்த போது தராறு செய்த பண்டாக்களிடம் மாணிக்க நாயக்கர் கோபம் கொண்டு தகராறு செய்த நிகழ்ச்சி யையும், வட இந்தியா பெஷாவருக்கருகில் வடமேற்கு எல்லைப் புற மாகாணத்தில்-பிரிட்டிஷாருடன் பகைமை கொண்ட-எல்லைப் புற சாதியாரிடம் கைதியாக ஒருநாள் அவர்கள் குகையில் தங்கி இருந்த நிகழ்ச்சியையும், படித்தவர்கள் மறக்கவே முடியாது.

1912 இல் எல்லைப் புற சாதியாரிடம் பொ.வே.மாணிக்கவேலு நாயக்கருடன் கவிஞர் சிக்கிய அனுபவமே பிற்காலத்தில் 1932-இல் சிறையிலிருத போது அவர் மலைக்கள்ளன் நாவல் எழுது வதற்குக் கருவாக அமைந்துவிட்டது.

நாமக்கல் கவிஞர் பரிமேலழகர் உரையைப் பல இடங்களில் மறுத்துப் புது உரை ஒன்று எழுதியிருக்கிறாரல்லவா? அதைப் பற்றியும் இந்நூலில் விரிவாக எழுதியுள்ளார்.

உண்ணாமையுள்ள துயிர் நிலை ஊனுண்ண
அண்ணாததல் செய்யா நன்று

என்னும் குறளுக்கு தமிழாசிரியர் பிச்சை இப்ரகிம் புலவர் கூறிய உரை அவர் மனத்துக்குத் திருப்தி அளிக்கவில்லை. அது போன்றேகுன்றேறி யானைப் போர் கண்டற்றால்என்னும் குறளுக்கும் பரிமேலழகர் உரை திருப்தி அளிக்கவில்லை. அவர் பிற்காலத்தில் புத்துரை காணத்தூண்டுகோலாக அமைந்தவை இவ்வுரைகளே.

திருக்குறள் புது உரையைப் படித்துவிட்டு ராஜாஜி நாமக்கல் லாருக்கு எழுதிய கடிதத்தில்இந்த நூலுக்கு நான் முன்னுரை எழுதுவது என்ற வீண் பெருமையை விரும்பவில்லை. இந்த விஷயத் தில் என்னைவிட அறிவுடைய நீங்கள் எழுதிய நூலுக்கு முன்னுரை எழுத நான் யார்?’ என்று கடிதமெழுதினார்.

கவிஞரை ஈன்ற மணிவயற்றின் தவமே தவம்எனப் புகழ்ந்தார் தமிழ் முனிவர் திரு.வி..
நாமக்கல் கவிஞர் என் கதையில் தன் வாழ்வில் நடந்த அந்தரங்க மான நிகழ்ச்சிகளைக் கூடக் கூசாமல் சொல்லியிருக்கிறார்.

பள்ளி மாணவனாக இருந்த நாட்களில் அவர் தன்னுடைய பால்ய நண்பனான வெங்கிடவரதன் இல்லத்திற்குச் சென்று ஓவியம் தீட்டியபடி உல்லாசமாகக் காலம் கழிப்பாராம். அவருடைய முறைப்பெண்ணான சீதா, கவிஞரிடத்தில் பேரன்பும் பெரு மதிப்பும் உடையவளாம்.

ஒரு நாள் கவிஞர் படம்  தீட்டிக் கொண்டிருக்கும் போது இளம்பெண் சீதா பின்புறமாக வந்து அவர் கண்களைப் பொத்தினாள். இளைஞரான இவரும் வளையல்களோடு கைகளைச் சேர்த்துப் பிடித்தப்படி சற்று மெய் மறந்திருந்தார். தற்செயலாக வந்துவிட்ட சீதாவின் தாயார் இதைக் கண்டு விட்டு, சித்திரம் எழுதும் சாயக் கோல்களையும், டிராயிங் நோட்டையும் தூக்கி யெறிந்துவிட்டுப் பெரிதும் அவமானப்படுத்தி அனுப்பிவிட்டாள்.

அதற்கு பிறகு சீதாவிற்கும் வேறு ஒருவருக்கும் திருமணம் நடந்ததாம்.

சுமார் பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்னர்- சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு பேரும் புகழும் பெற்ற நிலையில், கரூர் செல்வதற்காகத் திருச்சி புகைவண்டி நிலையத்தில் கவிஞர் உலாவிக் கொண்டிருந்த போது சீதாவைச் சந்தித்தார். எந்த நிலையில்?

மூன்று இளம் குழந்தைகளுடன் கைம் பெண்ணாக, ‘ராமலிங்கம் மாமா! என்னைத் தெரியவில்லையா?’  என்ற நிலையில்....! சீதாவின் அமங்கல உருவத்தைக் கண்டு இராமலிங்கனார் அழுதே விட்டாராம்.

நாமக்கல்லார் மெட்ரிகுலேஷன் படிப்பதற்கு முன்பே அவரது தந்தையார் அவருக்குத் திருமணம் செய்ய ஏற்பாடு செய்தார். அதற்காக முத்தம்மாள் என்ற உறவினர் சிறுமியையும் கொண்டு வந்து வீட்டிலேயே வைத்திருந்தார். நாமக்கல்லாருக்கு அந்தப் பெண்ணைக் கண்டால் ஓர் இனம் தெரியாத வெறுப்பு. கண்ட போதெல்லாம் உறுமுவார், வெறுப்பார், அருவருப்புக் காட்டுவார். அப்படி இருந்தும் அவர் தந்தை கட்டாயப்படுத்தி, அப் பெண்ணைக் கவிஞருக்கு மணமுடித்து, வைத்தார். ஆனால் கவிஞரோ, ‘அவளைத் தீண்டினால் ஒரு நீலகண்டம்என்ற மாதிரி யில் ஒரு நாளல்ல, இரு நாளல்ல, ஒன்பது மாதம் ஓட்டி விட்டார். ஆம், அவள் உணர்ச்சிகளை அவர் மதிக்கவே இல்லை. எனினும் அந்தப் பெண் இந்தச் செய்தியை வெளியில் ஒருவருக்குமே தெரிவிக்கவில்லை.

ஒரு நாள் நாடகம் பார்த்து விட்டு நள்ளிரவில் வந்த கவிஞரை அந்தப் பெண், ‘அத்தான் பேசவே மாட்டேன்கிறீர்களே! நான் என்ன தப்பு செய்தேன்?’ என்று கேட்டே விட்டாள்.

கால்களைப் பற்றிய வண்ணம் தரையில் அமர்ந்து அண்ணாந்து பார்த்தபடி அவள் கேட்ட போதுடிட்மார்விளக்கின் வெளிச்சம் அவளுடைய முகத்தில் படர்ந்தது. அந்நிலையில் அந்தப் பெண்ணின் முகம் கவிஞரின் நெஞ்சறதிலிருந்த, ‘ஆரவாரப் பேய்களைஎல்லாம் அடித்துத் துரத்தியது. கவிஞர் அன்றுதான் அந்தப் பெண்ணின் பெருமையைக் கண்டார். ‘இகழ்வாரைத் தாங்கும் நிலம் போல அவளை இகழ்ந்த அவரை ஏற்றுக் கெண்ட இனிய தன்மையயை உணர்ந்தார். அதற்குப் பிறகு பதினான்கு ஆண்டுகள் அவளுடன் இன்பமாக வாழ்ந்தார்.

நாமக்கல்லாருக்கு மக்கட் செல்வம் கிட்டவே இல்லை. அதற்காக இரண்டாம் கல்யாணம் செய்து கொள்ளும்படி வற் புறுத்தப்பட்டார். கவிஞர் இசையவே இல்லை. மனைவி முத்தம்மாள்  பலவாறு வற்புறுத்தினார்.

நீ இருக்க இன்னொரு பெண்ணைக் கல்யாணம் செய்வதா? கனவிலும் நினைக்காதேஎன்றார்.
நான் இருக்கும் போது இன்னொரு பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ள மாட்டீர்கள். நான் செத்தாவது போகிறேன். அவளைக் கல்யாணம் செய்து கொள்ளுங்கள்என்றாள் துணைவி யார்.

கவிஞர் கோபித்துக் கொண்டார். மிக்க அன்போடும் மகிழ்ச்சி யோடும் பேசிக் கவிஞரின் சினத்தை மாற்றினாள் முத்தம்மாள்!.

மறுநாள் முத்தம்மாள் செத்தே போனாள்....!

கவிஞர் மூர்ச்சையானார். மறைந்த மனைவியின் உத்தரவாக அவளது கடைசித் தங்கை சவுந்தரத்தையே மணந்து கொண்டார்.

- இந்நிகழ்ச்சிகளையெல்லாம்காந்தியக் கவிஞரானஇராம லிங்கம் பிள்ளையவர்கள் எழுதியஎன் கதைகாந்தியடிகளின்சத்திய சோதனையோடு  ஒப்பிட்டுப் பார்க்கத் தூண்டுகின்றன.

இந்நூலில் ஏறத்தாழ ஒரு நூற்றாண்டின் பழக்க வழக்கங்களையும் பண்பாடுகளையும் ஊர்களையும் வரலாற்றுப் புகழ் வாய்ந்த பெரிய மனிதர்களையும் வரலாற்றுச் சிறப்புப் பெறாத சாதாரண மனிதர் களையும் காணமுடிகிறது.

கல்கி அவர்கள் இந்நூலைஅற்புதமான வசன புத்தகம்என்று கூறியுள்ளார்.

இலக்கியத் திறனாய்வாளர் என்று சொல்லப்படுகிற திரு..நா. சுப்ரமணியம் அவர்கள் , ‘தன் சொந்த அனுபவங்களை எடுத்து பிறரும் அனுபவிக்கும்படிச் சொல்வது மிகவும் சிறப்பான கலை. இந்தக் கலையை  மிகவும் சிறப்பான முறையில் நம் தலைமுறையில் இரண்டொருவர் கையாண்டுள்ளார்கள். அவர்களின் முதன்மை யானவர் என்று நாமக்கல் கவிஞரைச் சொல்லலாம்என்று குறிப்பிட்டுள்ளார்.

திரு..நா.சு. அவர்களுடைய திறனாய்வுக் கருத்துக்களை அப்படியே ஏற்றுக் கொள்வதில் பொதுவாக நமக்குத் தயக்கம் உண்டு என்றாலும் மேற்குறிப்பிட்ட வரிகளில் அவர் தம் உண்மை உணர்ச்சி பளிச்சிடக் காணுகிறோம்

- தி.. மெய்கண்டார். (இளந்தமிழன் டிசம்பர் 1987)

No comments:

Post a Comment