திராவிடம் என்ற சொல்லும் அது உணர்த்தும் பொருளும்
- நாவலர் நெடுஞ்செழியன்
‘தமிழ்’ என்ற மொழிப் பெயரை அடிப்படையாகக் கொண்டு, ‘தமிழர்’ என்ற மக்கட் கூட்டத்தின் பெயரும், ‘தமிழகம்’ அல்லது ‘தமிழ்நாடு’ என்ற நாட்டின் பெயரும் தோன்றின. ‘தமிழம்’ என்பது, ‘தமிழ்’ என்பதன் மறுபெய ராகும். ‘தமிழம்’ என்ற அந்த பெயரே ‘தமிளம்’, ‘திரமிளம்’, ‘திரவிடம்’ என்று படிப்படியாகத் திரிபுற்று, இறுதியாகத் ‘திராவிடம்’ என்றாயிற்று என்று மொழி நூல் ஆராய்ச்சி அறிஞர்கள் சிலர் தெளிவு படுத்துகின்றனர்.
‘திராவிடம்’ என்பது ‘தமிழ் மொழியையும்’ தமிழ் வழங்கும் இடமான ‘தமிழ் கூறுநல்லுலகத்தையும்’ முதலில் குறிப்பிடும் சொல்லாகக் கொள்ளப் பட்டிருந்தது.
நாளாடையில், மொழிநூல் அறிஞர்களும், வரலாற்றாசிரியப் பெரு மக்களும், தமிழையும், தமிழிலிருந்து பிரிந்த கிளை மொழிகளான தெலுங்கு- கன்னடம்- மலையாளம் - துளு ஆகிய மொழிகளையும் உள்ளடக்கிய தொகுப்பைக் குறிப்பதற்கும், அந்த மொழிகள் வழங்கும் இடத்தைக் குறிப்பதற்கும் உரிய ஒரு சொல்லாகப் பயன்படுத்தத் தலைப்பட்டனர். தமிழர்-தெலுங்கர் - கன்னடியர் -மலையாளிகள் - துளுவர் ஆகிய மக்களை ஒன்று சேர்த்துக் குறிப்பதற்குரிய சொல்லாகத், ‘திராவிடர்’ என்ற சொல்லையும் பயன்படுத்தத் தொடங்கினர்.
‘திராவிட’ என்ற சொல்லை, 7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த குமரிலபட்டர் என்ற வடமொழியாசிரியர் பயன்படுத்தியுள்ளார். ஆதி சங்கராச்சாரியார், திருஞானசம்பந்தரைப் பற்றிக் குறிப்பிடும்போது ‘திராவிட சிசு’ என்று அழைக் கின்றார். ‘திராவிடம்’ என்ற சொல் சில இடங்களில் தமிழைக் குறிக்கும் பெயராகவும், வேறு சில இடங்களில் ‘திராவிட மொழிகள்’ எல்லாவற்றையும் சேர்த்துக் குறிக்கும் பெயராகவும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
சென்ற நூற்றாண்டில், அறிஞர் கால்டுவெல் அவர்கள், ‘திராவிடம்’ என்ற சொல்லைத் திராவிட மொழிகளின் பொதுப் பெயராகவும், தொகுப்புப் பெயராகவும் பயன்படுத்தி வந்துள்ளார்.
‘மனோன்மணியம்’ ஆசிரியர் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்கள் ‘திராவிட நற்றிருநாடு’ என்ற சொற்றொடரில் ‘திராவிடம்’ என்ற சொல்லைத் தமிழகத்தைக் குறிக்கும் ஒரு சொல்லாகப் பயன்படுத்தியுள்ளார்.
‘ஜனகனமன’ என்ற வங்க மொழியில் உள்ள நாட்டுப் பாடலைப் பாடிய கவி இரவீந்திரநாத தாகூர், ‘பஞ்சாப சிந்து குஜராத்த மாராட்ட திராவிட உட்கல வங்க என்ற சொற்றொடரில், ‘திராவிட’ என்ற சொல்லைத், தமிழகம் - ஆந்திரம் - கன்னடம் -கேரளம் ஆகிய நான்கு பகுதிகளும் ஒன்று சேர்ந்த தொகுப்பைக் குறிப்பிட, பயன்படுத்தியுள்ளார்.
1912 ஆம் ஆண்டில் டாக்டர் சி. நடேசனார் அவர்கள், தமிழர் - தெலுங்கர் -கன்னடியர் -மலையாளிகள் ஆகியோரை ஒன்று சேர்த்து அமைக்கப்பட்ட ஒரு அமைப்புக்குத் ‘திராவிடச் சங்கம்’ (பார்ப்பனரல்லாத மக்களுக் காகத்தான் திராவிடர் சங்கம் தொடங்கினார் டாக்டர் சி. நடேசனார். ஆனால் நாவலர் அவர்கள், தமிழர், தெலுங்கர், கன்னடியர், மலையாளிகளை ஒன்றுசேர்க்க திராவிடச் சங்கம் தொடங்கினார் என்று கூறுவது ஏன் என்று தெரியவில்லை. மேலும் டாக்டர் சி. நடேசனார் ‘திராவிடர் சங்கம்’ என்று தான் தொடங்கினார் - கவி) என்று பெயரிட்டார்.
1917 இல் நீதிக்கட்சியினர் தொடங்கிய தமிழ் நாளேட்டிற்குத் ‘திராவிடன்’ என்று பெயரிடப்பட்டது.
1942 இல் அறிஞர் அண்ணா அவர்கள் காஞ்சிபுரத்தில் ‘திராவிடக் கழகம்’ என்ற பெயரில் நீதிக்கட்சியின் சார்பு மன்றம் ஒன்றினை நிறுவினார். ‘திராவிட நாடு’ என்ற பெயரில் வார ஏடு ஒன்றினையும் துவக்கினார்.
1944 ஆம் ஆண்டில் சேலம் நகரில், பெரியார் ஈ.வெ.இராமசாமி அவர்களின் தலைமையின் கீழ் நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டில், பேரறிஞர் அண்ணா அவர்கள், ‘நீதிக்கட்சி’ என்ற கட்சியின் பெயரைத் திராவிடக் கழகம் (திராவிடர் கழகம் - கவி) என்று பெயர் மாற்றும் தீர்மானம் ஒன்றினைக் கொண்டு வந்து, அதனை முன்மொழிந்து, நிறைவேற்றினார்.
‘திராவிட இயக்கம்’ என்பது இப்போதைய நிலையில், நீதிக்கட்சி - சுயமரியாதை இயக்கம் - தமிழ் மறுமலர்ச்சி இயக்கம் - இந்தித் திணிப்பு எதிர்ப்பு இயக்கம் -திராவிடக் (திராவிடர்- கவி) கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் - அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் - மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய அனைத்தும் கொண்ட ஒரு தொகுப்பைக் குறிப்பிடும் ஒரு பொதுப் பெயராகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
திராவிட மற்றும் ஆரிய மொழிக் குடும்பங்கள்
தமிழ், அதன் தொன்முது நிலையில், உலக மூல மொழியாகத் திகழும் தன்மையைப் பெற்றிருந்தது என்பது முன்பே அறியப்பட்டது. காலங்கள் பல கடந்த நிலையில், உலகு எங்கணும் அது பல்வேறு கிளை மொழிகளாக உருப்பெற்று விளங்கிற்று என்பது அறிவுசான்ற ஆராய்ச்சி வல்லுநர்களின் கூற்று ஆகும்.
வெவ்வேறு இடங்களில் ஆங்காங்குள்ள சூழ்நிலைகளுக்கு ஏற்ப வளர்ந்த மொழிகள், அப்படிப்பட்ட சூழ்நிலைகளுக்கு ஏற்பத் திரிந்து புதுப்புது மொழிகளாக மாறின. மொழிகள் பலவும் மூலமொழி ஒன்றிலிருந்து தோன்றினாலும், நாளடைவில் இனம் காணமுடியாத ஒலிகள் திரிந்தும், உறழ்ந்தும் உருமாறிப் போயின. அப்படி ஆன மொழிகளெல்லாம் கலப்புக் காரணமாகவும், காடுகள், மலைகள், கடல்கள், ஆறுகள், பருவக் காலங்கள் ஆகியவற்றின் தடைகளாலும் பல்வேறு வகைகளில் மாறுபாடும், வேறுபாடும் கொண்டு விளங்கின.
மாறுபட்டு விளங்கிய பல்வேறு மொழிகளின் சில பல ஒற்றுமைத் தன்மை களை அடிப்படையாகக் கொண்டு, திராவிட மொழிக்குடும்பம், இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பம், கெல்டிக் மொழிக்குடும்பம், இத்தாலிய மொழிக் குடும்பம், யஹல்லேனிக் மொழிக் குடும்பம், லாடில் வலாவானிய மொழிக் குடும்பம், ட்யூடானி மொழிக் குடும்பம், ஈரானிய மொழிக் குடும்பம், ஆரமேயிக் மொழிக் குடும்பம், ஹைப்ரேயிக் மொழிக் குடும்பம், அராபிக் மொழிக் குடும்பம், துருக்கிய மொழிக் குடும்பம், பினிக் மொழிக்குடும்பம், இமாலய மொழிக்குடும்பம் போன்ற பல்வேறு மொழிக் குடும்பங்களை வகைப்படுத்தி ஆராய்ச்சி அறிஞர்கள் பாகுபடுத்தி வைத்துள்ளனர்.
இந்தியத் துணைக் கண்டத்தை எடுத்துக் கொண்டால், அதில் இரு பெரும் மொழிக்குடும்பங்கள் நின்று நிலவுகின்றன. ஒன்று ‘திராவிட மொழிக் குடும்பம்’ ஆகும்; மற்றொன்று இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பம் என்னும் ‘ஆரிய மொழிக் குடும்பம்’ ஆகும்.
தமிழ்- தெலுங்கு -மலையாளம் - கன்னடம் - துளு - கோண்டு - கூய் - ஓராயான்-பிராகுயி போன்றவை திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவை யாகும்.
வேதமொழி - சமத்கிருதம் - பாலி - பிராகிருதம் - அபபிரம்சம் - இந்தி - மாராட்டி - குசராத்தி - சிந்தி - ஒரியா - வங்காளம் - அசாமி போன்றவை ஆரிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவையாகும்.
திராவிட குடும்ப மொழிகள் மென்மையும், உயிர் எழுத்தொலிகளையும், பின் ஒட்டுச் சொற்களையும் உடைய மொழிகளாகும். ஆரிய மொழிகள் கடுமையையும், பல ஒற்றுக்கள் இணைந்த சொல்லாக்கத்தையும், முன் ஒட்டுச் சொற்களையும் உடைய மொழிகளாகும்.
‘பெண்’, ‘கண்’, ‘வியப்பு’, ‘நீர்’ போன்ற சொற்கள் மென்மை வாய்ந்த தமிழ்ச் சொற்களாகும். ‘ஸ்திரி’,‘அக்ஷ’, ‘ஆஸ்சரிய’, ‘ஜல’ ஆகிய சொற்கள் கடுமை வாய்ந்த வடமொழிச் சொற்களாகும்.
மூலத் திராவிட மொழியான தமிழ்மொழி, இந்தியா முழுவதும் பேசப்பட்ட மிக மிகத் தொன்மையான மொழியாகும் என்பதை, முன்னரே கண்டோம். மூலத் திராவிட மொழியான தமிழ், இட வேறுபாட்டாலும், பிற இனக் கலப்பா லும், இயற்கை மாற்றங்களாலும் சீற்றங்களாலும் தனித்தனி உருவங்களைப் பெற்றுத், தெலுங்கு - கன்னடம் - மலையாளம் - துளு போன்ற மொழிகளாக மாற்றங் கொண்டு நிலைக்கத் தலைப்பட்டன.
திராவிட மொழிச் சொற்களும், ஆரிய மொழிச் சொற்களும் தனித்தனித் தன்மையுடையனவாகும்.தமிழ் மொழி வடமொழிச் சொற்களின் ஆதர வில்லாமல் இயங்கக்கூடிய தனித்தன்மையுடைய மொழியாகும்.
திராவிட மொழிகளுக்கும் ஆரிய மொழிகளுக்கும் எழுத்துமுறை, அரிச் சுவடி போன்றவற்றில் சில ஒருமைப்பாடுகள் இருப்பதற்குக் காரணம், ஆரியர் இந்தியாவுக்கு வந்து, திராவிடரோடு கலந்ததற்குப் பிறகு, திராவிடரின் ஆக்கத்தால் ஏற்பட்ட விளைவு ஆகும். ஆரியர், திராவிடரிமிருந்து சில செம்மையான இலக்கண முறைகளைக் கற்றுத், தம் மொழியைத் திரித்திக் கொண்டனர்.
(நாவலர் நெடுஞ்செழியன் எழுதிய திராவிடர் இயக்க வரலாறு என்னும் நூலிலிருந்து)
பதிவு : கந்தசாமி விநாயகம்
No comments:
Post a Comment