Monday, July 12, 2021

வாழ்ந்து கொண்டிருக்கிறார் நாவலர் - பேரா.சு. மகாதேவன்


வாழ்ந்து கொண்டிருக்கும் நாவலர்

(11.7.1920 -12.1.2000)


பேராசிரியர் கொண்டல் சு. மகாதேவன்


தந்தை பெரியார் கண்ட தமிழ் எழுத்துச் சீர்மையில் ஆர்வமுடையவராக, நாடு போற்றும் நல்லவராக, நற்றமிழ் வளர்க்கும் வல்லவராக, நடமாடும் பல்கலைக்கழகமாகத் திகழ்ந்த நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் இன்று நம்மிடையே இல்லை என்பது, அடி நாள் தொட்டு அவரோடு பழகும்  வாய்ப்பினைப் பெற்ற எம் போன்றோருககு நினைத்ததற்கும் இயலாத ஒன்றாகவே உள்ளது!


எங்கும் வாழ்வும் எங்கள் வளமும்

மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு!


என்னும் பாவேந்தரின் பசுந்தமிழ்ப் பாடல் இன்றும் நாவேந்தர் நெடுஞ்செழியனின் வெண்கலக் குரலில் தொடர்ந்த நம் காதில் ஒலித்துக் கொண்டிருக்கின்றதே? ஆம்.


நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்

பெருமை உடைத்து இவ்வுலகு


எனப் பேசும் வள்ளுவரும் இன்று வந்தால், நாவலர் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருப்பதனைக் கண்கொண்டு காண்பார்!


தன்னேரில்லாத தமிழ் மாணவர் நெடுஞ்செழியன்!


1943 ஆம் ஆண்டு இளம் அறிவியல் பட்டப்படிப்பு மாணவனாக அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நான் சேர்ந்த போது, ‘இவர்தான் நெடுஞ்செழியன்’ என்று இளம் தாடி ஏற்றம் தர நிமிர்ந்து நடை பயிலும் நெடியதொரு தமிழ் உருவத்தினை நண்பர் ஒருவர் அறிமுகப்படுத்தினார்.


பல்கலைக் கழகத்துப் பசும்புல் வெளியிடை, ஒரு மர நிழலில் அமர்ந்தபடி, கைகளில் இலக்கிய, இலக்கண ஏடுகளை விரித்து வைத்துக் கொண்டு சிந்தனையில் ஆழ்ந்திருக்கும் அம் முதுகலைத் தமிழ் வகுப்பு மாணவரோடு, தமிழில் எனக்கு ஏற்படும் அய்யங்களை முன் வைத்து அளவளாவும் வாய்ப்பும் அவ்வப்பொழுது கிட்டியது. ஒரு நாள், ‘தன்னேரில்லாத தமிழ் என நம் தாய்மொழியினை உயர்த்திப் பேசுகிறோம். ஆனாலும், ‘பிழைப்புக்குத் தமிழ் உதவாது’ எனச் சிலர் பேசுகிறார்களே, ஏன்?’ என்ற வினாவை அவர் முன் எழுப்பினேன்! ஒரு மொழியின் சிறப்பு என்பது அம் மொழி வழி நாம் அறியக் கிடக்கும் கருத்து வளத்தைப் பொறுத்தே அமைகிறது. பல்வேறுபட்ட அறிவுத் துறை நுட்பங்களையும் எளிய, இனிய சொற்களில், ஈடிரடிக் குறட்பாக்களில் எடுத்தியம்பும் திருக்குறள் போன்ற ஒரு நூலை அகத்தே கொண்டுள்ள தமிழ் மொழியினைத் ‘தன்னேரில்லாத மொழி’ எனக் கொள்வது முற்றிலும் ஒவ்வும். இன்றும், ‘பள்ளிக் கணக்கு புள்ளிக்கு உதவாது’ என்று பெரியவர்கள் பேசுவதைக் கேட்கிறோம். பள்ளிக்கூடம் போகக் கூடாது என்று அவர்கள் சொல்வதில்லை! பள்ளிப்படிப்போடு நின்றுவிடக் கூடாது என்பதே அவர்கள் சொல்ல விரும்புவது. அவ்வாறே தமிழர்கள் தமிழ் படிப்பதோடு நின்று விடாமல் பல்வேறு கலை நுட்பங்களையும் கற்று சிறக்க வேண்டும் என்பதே அவர்தம் கருத்து’ என விளக்கினார். 


நாவலர் வழித் தமிழ் உலகம் நின்றால், என்றும் நம் தமிழ் ‘தன்னேரில்லாத தமிழாக’ இருக்கும் என்ற ஓர் உறுதியும் எனக்கு ஏற்பட்டது!


இருக்கைகளில் தவழ்ந்த தமிழ்!


அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் தமிழ் இலக்கியமன்றச் செயலாளராக நாவலர் பொறுப்பேற்றவுடன், தமிழ் தவழ்ந்து விளையாடத் தொடங்கியது. ‘கலா ரசிகர்கள்’ ‘அக்ராசனாதிபதி’களை ‘பிரேரேபித்து’, ‘ஆமோதித்து’ ‘பிரசங்கம்’ செய்ய வைத்து ‘காரிதரிசி’கள் ‘வந்தனோபசாரம்’ கூறிக் கொண்டிருந்த குழப்பக் காலம் மலையேறியது! தமிழ் மக்கள் அமரும் இருக்கைகளிலும் ‘புரு­ர்கள், ஸ்திரீகள்’ எனத் தமிழ் அல்லாத மொழியில் அறிவிக்கப்பட்டு வந்த காலம் காணமற் போனது! ‘ஆடவர் மகளிர்’ என்ற அழகான தமிழ்ச் சொற்கள் இடம் பெற்று, இருக்கைகளில் அமரும் மக்களை முழுத் தமிழரெனத் தெளிவித்தன!


மாமன்றம் கண்ட மறைமலை!


மன்றத்தின் செயலாளர் என்ற நிலையில், நாவலர் சொற்பொழிவாளரை வரவேற்று அறிமுகப்படுத்தும் போது, அவர் பற்றி அறியாதார் கொண்டுள்ள உண்மைக்குப் புறம்பான கருத்துக்களையும் எடுத்துக் கூறித் திருத்தம் காண்பார். ஒரு முறை, மறைமலை அடிகளார் வந்த போது, அவர் வட மொழிக்குப் பகைவர் என்ற ஒரு பிழைபட்ட கருத்தைச் சிலர் வேண்டுமென்றே பரப்பினர். கேள்வி கேட்டுக் குழப்பம் விளைவிப்பதற்கும் சிலர் ஆயத்த மானார்கள்! 


அந்நிலையில், அடிகளாரை அறிமுகப்படுத்த மேடையில் நின்ற நாவலர், ‘வடமொழிச் சாகுந்தல நாடகத்தினைத் தமிழ்த் தேனில் குழைத்துத் தமிழுலகுக்கு அளித்த மாமேதை ‘சுவாமி வேதாசலம்’ மறைமலை அடிகளாராக உயர்ந்து இன்று நம் மாமன்றத்துக்கு வந்தருளி யிருக்கின்றார். வடமொழிக் கடலின் ஆழங்கண்டு, தமிழ்ப் பேராழியில் நீந்தித் திளைக்கும் அடிகளாரை மன்றத்தின் சார்பாக வரவேற்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்’ என்றார். அன்று அடிகளார் வடமொழிப் பேரறிஞர் என்ற உண்மை பல்கலைக் கழக வளாகமெங்கும் பரவியது! அடிகளாரின் தனித் தமிழ்க் கோட்பாடு தழைத்தது.


விழுப்புண் ஏற்பது வீரர்க்கு அழகு!


நாவலர் தம் பேச்சு என்றும் இனிமையாக, ஆழமாக, இடையிடையே பெரிதும் நகைச் சுவை உடையதாக இருக்கும். தந்தை பெரியாரின் இராமாயணம் பற்றிய ஆராய்ச்சிக் கருத்துகளைச் செரிமானம் செய்து கொள்ள முடியாத சிலர், அவர் பேசவிருந்த ஒரு கூட்டத்தின் தொடக்கத்தில் தங்கள் மனது புண்பட்டு விட்டதாகக் கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தனர். 


அப்பொழுது நாவலர் எழுந்து, ‘விழுப்புண் படுவது குறித்து வீரமுடையோர் அஞ்சமாட்டார். சர்க்கரை நோயுடையவர் தாம் புண்படுவது கண்டு உயிர் போய்விடும் என ஓலமிடுவார்! இன்று பெரியார் பாசறையில் உள்ள நாங்களும் பெரியார் தம் கருத்துக்களை முதலில் கேட்ட போது புண்படாமலா இருந்திருப்போம்? உங்களையும் உரம் பெறச் செய்வதற்குத் தான் பெரியாரின் பகுத்தறிவுப் பாசறை பயிற்சி தந்து கொண்டுள்ளது. புண்படுவது கண்டு இனி அஞ்சாதீர்!’ எனக் கேளாரும் விரும்பும் வகையில் கேள்விச் செல்வம் நல்கினார்.


எல்லோர்க்கும் பெய்யும் மழை!


ஒரு முறை கோயமுத்தூரில் நாவலர் அவர்கள் பேசும் நேரத்தில் மழை வந்துவிட்டதால், அரை மணிக் காலம் தாழ்ந்து கூட்டத்தைத் தொடங்கினார்கள். அப்பொழுது, பகுத்தறிவாளர்களின் பேச்சைத் தடுக்கவே மழையைக் கடவுள் அனுப்பியிருக்கின்றார் என ‘அறிவாளர்கள்’ சிலர் உரத்துப் பேசிக் கொண்டிருந்தனர்! நாவலர், ‘மழை என்பது தில்லையில் நடராசர் எழுந் தருளும் போது கூட வந்தருளும்! அப்பொழுது மழை என்ன நோக்கத்தில் வருகின்றதோ, அதே நோக்கத்தில்தான் பகுத்தறிவாளர் பேசும் இன்றும் வந்துள்ளது!’ என்று கூறி அனைவரையும் பெரு நகைப்பில் ஆழ்த்தினார்.


பகுத்தறிவுப் பாசறையில் நாவலர்!


1947 ஆம் ஆண்டு பள்ளி, கல்லூரிகளின் கோடை விடுமுறை நாட்களில் மாணவர்கள் பகுத்தறிவு உணர்வும், பேச்சுத்திறனும் பெறும் வகையில், ஈரோட்டில், பெரியார் இல்லத்தில், ஏறத்தாழ ஒரு மாதக் காலம் பயிற்சி வகுப்புகள் நடந்தன. பெரியார் அவர்கள், நாட்டின் பல்வேறு இடங்களி னின்றும் வந்த எங்களைத் தம் வீட்டுக்கு வந்த விருந்தாளிக் குழந்தைகளாகக் கண்காணித்தார். ஆம், மிகவும் கண்டிப்பாகக் கண்காணித்தார்! 


உரிய நேரத்தில் உணவுக் கூடத்துக்கு எல்லோரும் வந்துவிட வேண்டும்! உணவுப் பந்தி வரிசையில் அவரும் உடன் அமர்ந்து எங்களோடு அளவளாவியபடி உண்பார். ‘உங்கள் வீட்டுச் சாப்பாடு போல் இருக்கிறதா?’ என அன்புடன் சிரித்துக் கொண்டு கேட்பார். அவரிடம் அணுக்கத் தொண்டராக இருந்த இளைஞர் ஒரு நாள் வரவில்லை. அவர் பெயரைச் சொல்லி, ‘என்ன ஆயிற்று அவனுக்கு?’ எனக் கேட்டார். அருகில் இருந்த ஒருவர், ‘அய்யா! அவருக்கு வயிற்றுப் போக்கு. அதனால்தான் வரவில்லை!’ என்று விடை பகன்றார். உடன் பெரியார், ‘அவனுக்கு வாய்க்கு ருசியாக எதுவும் அகப்பட்டு விடக் கூடாது!’ எனக் கூறி எல்லோரையும் நகைப்பில் ஆழ்த்தினார்! 


மறு நாள் அந்த இளைஞர் வந்ததும், நாவலர் அவரைப் பார்த்து, ‘அய்யா சொன்னாரே! உங்களுக்கு வாய்க்கு ருசியாக என்ன அகப்பட்டது?’ எனக் கேட்க, அவரும் விழுந்து விழுந்து சிரித்தார்!


நாவலர் நடத்திய திருக்குறள் வகுப்பு!


பெரியார் அவர்கள் நாள்தோறும், வகுப்பில் தொடர்ந்து பல்வேறு செய்திகள், நிகழ்வுகள், அனுபவங்கள் பற்றிப் பேசுவார். திருச்சி வேதாசலம், திரு. என்.வி.நடராசன், பேராசிரியர் அன்பழகன், நாவலர் நெடுஞ்செழியன் மற்றும் பல அறிஞர் பெருமக்களும் அவ்வப்பொழுது கலந்து கொண்டு பயிற்சி கொடுப்பார்கள். 


பயிற்சி நிறைவு நாளன்று, மாணவர்கள் பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று மேடையேறிச் சொற்பொழிவாற்றும் போது, எப்படிச் செயல்பட வேண்டும் என்பதற்கு நாவலர் ஒரு திருக்குறள் வகுப்பே தனியாக நடத்தினார்! ‘நீங்கள் பேசும் கூட்டங்களில், உங்கள் பேச்சை விரும்புகிறவர்களும் இருக்கலாம் ; விரும்பாதவர்களும் இருக்கலாம். விரும்புகின்றவர் தொடர்ந்து விரும்பும் வகையிலும் உங்கள் பேச்சு அமைதல் வேண்டும்’ எனக் கூறி,


கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்

வேட்ப மொழிவதாம் சொல்


என்ற குறட்பாவினைப் பெரியாரும் சுவைத்து மகிழ மேற்கோள் காட்டினார். கூட்டங்களில் பேசும்போது, பின் விளைவு எதுவும் ஏற்படாதபடி அடக்கத்துடன் சொற்களைத் தேர்ந்தெடுத்துப் பேசுதல் வேண்டும் என்பதை வலியுறுத்தி,


யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்

சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு


என்ற குறட்பாவினை நினைவூட்டினார். நாவலரிடம் அன்று பாடம் கேட்டுப பயிற்சி பெற்றவருள், திரு. கே.ஏ. மதியழகன், திரு. இராம. அரங்கண்ணல், திரு.வி.வி. சாமிநாதன் மற்றும் இக்கட்டுரை ஆசிரியரும் அடங்குவர். பின்னாளில் அவர்கள் ஒவ்வொருவரும் நாட்டுக்கும் மொழிக்கும் நற்பணி புரியும் நல்வாய்ப்பினைப் பெற்றனர்.


இத்தாலி நாட்டு முனிவரும், ஈரோட்டுப் பெரியாரும்!


1978 ஆம் ஆண்டு அரசின் சார்பில் அமைக்கப் பெற்ற பெரியார் நூற்றாண்டு விழாக் குழுவின் தலைவராகத் திகழ்ந்த நாவலர், தந்தை பெரியார் அவர்களின் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்த முன் வந்தார். ஒரு காலத்தில், இத்தாலி நாட்டிலிருந்து வந்த வீரமாமுனிவர் புள்ளியிட்டு எழுதப்பட்டு வந்த எகர, ஒகரத்தின் தலைச் சுழியை மாற்றி, ஏகார, ஓகார வடிவங்களுக்கு முறையே, கீழ்க்கோடும், கீழ்ச் சுழியும் சேர்த்து, உயிரெழுத்துக்கும் புள்ளியிட்டு வந்த குழப்பத்துக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்தார்! ஈரோட்டுத் தந்தை பெரியார், கடந்த அய்ம்பது ஆண்டுகளுக்கும் மேலாக, ஐகார, ஒளகார ஒட்டு வடிவங்களை விடுத்து, ‘அய்’, ‘அவ்’ எனவும், ஒட்டிக்கொண்டிருந்த,  வடிவங்களைப் பிரித்து ‘ணை, னை, லை, ளை’ எனவும், கீழ் விலங்கு மாட்டிக் கொண்டிருந்த உருவங்களை விடுவித்துக் கால் கொடுத்து ‘ணா, னா, றா’ எனவும் தம் வெளியீடுகளில் எழுதி வந்தார்.


இத்தாலி நாட்டு முனிவரின் எழுத்துத் திருத்தத்தை ஏற்ற நம் புலவர் குழாத்துக்கு, ஏனோ, ஈரோட்டுப் பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்தால் ஏற்படும் எளிமையினைப் புரிந்து கொள்ள இவ்வளவு காலம் பிடித்தது? 

பெரியாரின் எழுத்துச் சீர்மையினால் ஏழு எழுத்து வடிவங்கள் குறைந்து, அச்சுப் பெட்டியும், தட்டெழுத்துப் பலகையும் அளவில் குறைந்து, விரைந்து பணியாற்றக் கூடும் என்பதால், அந் நாள் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் என்ற நிலையில், இக்கட்டுரை ஆசிரியரும் (கொண்டல் சு. மகாதேவன்) பெரியார் நூற்றாண்டு விழா நாளில் (1978) அரசுக்குப் பரிந்துரைத்து ஆணை பிறப்பிக்க உதவினார். 


எகரத்தின் வழி யகரம் (எய்) ‘நெய்யில் - வெண்ணெ யில்’ என இரட்டவும், இரட்டாமலும் ஒலிப்பது போன்றே, அகரத்தின் வழி யகரமும் (அய்), அகரத்தின் வழி வகரமும் (அவ்) முறையே, ‘அய்யன் - நடையன்’ எனவும், ‘அவ்வை- நிலவு’ எனவும் ஒலிப்பது குறில் வழி ஒற்றுக்களின் பொது நெறி ; தமிழ் நெறி! இவ்வுண்மையினைப் புரிந்து கொள்ளத் தவறும் புலவர்கள், ‘அய், அவ்’ இடங்களில் ‘ஐ, ஒள’ ஒட்டெழுத்துக்களை நுழைத்து, ஒவ்வாமை கண்டு குறுக்க இலக்கணம் பேசிக் குழப்புவதோடு, ‘ஐ, ஒள’வின் மாற்றெழுத்துக்கள் ‘அய், அவ்’ எனப் ‘போலி இலக்கணமும்’ பேசித் தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்வது கண்டு, நாவலர் இரக்கப்பட்டார்! எழுத்தறிவுப் பெருக்கத்துக்குப் பெரியார் எழுத்துச் சீர்மை எவ்வாறு துணைப் போகிறது என்பதனை எல்லோரும் உணரச் செய்தார்.


நாவலர் மாணவர்தம் காவலர்!


மாணவர் நெடுஞ்செழியன், தமிழில் முதுகலைப்பட்டம் (எம். ஏ.) பெற்று, 1945 ஆம் ஆண்டில் தண் செய்யூர் மாவட்டத்து நீடாமங்கலத்தில் நடைபெற்ற மாணவர் கழகக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கி உரையாற்றத் தொடங்கும் போது, ‘நான் இன்று படிப்பை முடித்துக் கொண்டு பல்கலைக் கழகத்தினின்று வெளிவந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டனவென்றாலும், எனது ‘மாணவ முலாம் இன்னமும் கலையவில்லை’ எனப் பெருத்த ஆரவாரத்திற்கும் தொடர்ந்த கைத்தட்டலுக்குமிடையே கூறினார்! ஆம். நாவலர் தந்தை பெரியாரின் பட்டி தொட்டிகளிலெல்லாம் தன்மான உணர்வைத் தமிழிலே குழைத்து ஊட்டி வந்த காலத்தும், தம்பி! வா! தலைமை தாங்கவா! என அண்ணாவால் அழைக்கப் பெற்றுப் பெரும் பொறுப்புகளை ஏற்றுக் கொண்ட காலத்தும், தமிழகத்தின் கல்வி அமைச்சராக, நிதி அமைச்சராகத் திகழ்ந்த காலத்தும், அவர்தம் ‘மாணவர் முலாம்’ சிறிதும் கலையாமலேயே சுடர் விட்டு நின்றது! 

கல்விக் கூடங்கள் மாணவர் தம் வளர்ச்சியினை ஊக்குவதாக இருத்தல் வேண்டும் ; தேக்குவதாக இருத்தல் கூடாது என்பதில் நாவலர் கண்ணும் கருத்துமாக இருந்தார். ‘பள்ளித் தேர்வு ஒரு சூதாட்டம்’ என்று அவர் ஒரு சமயம் குறிப்பிட்டது கண்டு கல்வியாளர்களும் முதலில் திகைத்தனர். அடுத்து, ஆந்திர மாநிலத்தின் அன்றைய முதலமைச்சர் திரு. பிரம்மானந்த ரெட்டி அவர்கள் பள்ளிப் படிப்பினை ஏழாம் ஆண்டிலும், இறுதியாகப் பத்தாம் ஆண்டிலும் நடைபெறும் பொதுத் தேர்வு, மாணவன் அறிவு நிலையினை மதிப்பிடட்டும். இடையில், எந்த வகுப்பிலும், எந்த மாணவனையும் நிறுத்தி வைக்கக் கூடாது என ஆணை பிறப்பித்தது கண்டு சிந்திக்கத் தொடங்கினர்.


நல்ல உடம்பில் நல்ல மூளை!


நல்ல உடலில் தான் நல்ல மூளையும் உருவாக முடியும் என்ற உண்மை யினை வலியுறுத்தும் நாவலர், உடற் பயிற்சிக் கல்வியினையும் மாணவரின் தேர்வுத் தகுதியைக் குறிக்கும் நல்லதொரு பாடமாக ஆக்கினார்! நூலகப் படிப்பும் பள்ளிப்பாடத் திட்டத்தில் தேர்வுக்குரிய ஒன்றாக இடம் பெற்றுவிட்டது. இன்று, ஆசிரியர்களும், மாணவர்களும் நாவலரின் நல்ல திட்டத்தினால் பள்ளி நூலகங்களிலும், பல்வேறு பொது நூலகங்களிலும் புகுந்து நடமாடு வதனைப் பெற்றோரும் கண்டு மகிழ்ந்து பாராட்டுகின்றனர்.


இடையீற்ற கல்வியே இனிமை தரும் கல்வி!


பல்கலைக் கழகங்களில் பட்ட வகுப்பில் சேர்கின்றவர்கள் ஆண்டுகள் வீணாகாமல் தொடர்ந்து மூன்று ஆண்டுக்காலத்தில் எழுத வேண்டிய தேர்வுகளை எழுதி முடிக்கலாம் என்ற நிலை உருவானதற்கும் நாவலர் பெரிதும் காரணமாக இருந்துள்ளார். அவ்வாறே, அனைத்திந்தியத் தொடர்புள்ள தமிழகத்துப் பல்தொழில் நுட்பப் பள்ளிகளில் மாணவர்கள் மூன்றாண்டுகள் தொடர்ந்து படிக்க முடியாதபடி ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் சில பாடங்களில் தவறிவிட்டதற்காக மாணவர்களை வீட்டில் உட்கார வைத்து, ஆண்டினை வீணாக்கி வந்த பழக்கத்தையும் மாற்றிப் பட்டப் படிப்பில் இருக்கும்படி செய்தார். மாணவரின் வளர்ச்சிக் கருதிக் கல்வித் திட்டத்தில் நாவலர் செய்த பெரும் புரட்சி போன்று இதற்கு முன் எவரும் செய்திலர்!


நாவலர் வாழ்கின்றார்!


நாவலர் தம் வாழ்நாளின் ஒவ்வொரு நொடியினையும் தமிழ் மொழிக்காக வும், தமிழ் மக்களுக்காகவும், தமிழ் நாட்டுக்காகவும் செலவிட்டுள்ளார். இன்று, தமிழ் வாழ்கின்றது; தமிழ் மக்கள் வாழ்கின்றனர். தமிழ் நாடு வாழ்கின்றது; நாவலரும் வாழ்கின்றார்! (கவிதா மண்டலம், ஆகஸ்டு, 2011)

No comments:

Post a Comment