Friday, August 27, 2021

நீதிக்கட்சியை வளர்த்த அரும்பெருந் த் தலைவர்கள் - 2

 நீதிக்கட்சியை வளர்த்த அரும்பெருந் த் தலைவர்கள் - 2

- நாவலர் நெடுஞ்செழியன்

சர். பி. தியாகராயர் (1852-1925)

திராவிட இயக்கத்தின் முன்னோடித் தந்தை என்று போற்றப்படும் சர். பி. தியாகராயர் 1852 ஏப்ரல் 27 ஆம் நாளன்று சென்னைக் கொருக்குப் பேட்டையில் பிறந்தார். சர்.பி. தியாகராயர் அவர்களின் குடும்பம் சென்னை யில் வாணிகத் தொழில் புரிந்த செல்வாக்கு மிகுந்த ஒரு பணக்காரக் குடும்பமாகும். அவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. பட்டத்தாரியாகத் தேர்வு பெற்றுத் திகழ்ந்தார்.

எப்பொழுதும் தூய வெண்ணிறமான நீண்ட கோட்டு- தார்ப்பாச்சிக் கட்டிய வெள்ளை வேட்டி -எடுப்பான வெண்ணிறத் தலைப்பாகை ஆகியவற்றுடனே காணப்பட்டதால் அவர் எல்லோராலும் ‘வெள்ளுடை வேந்தர்’ என்றே சிறப்பாகவும் பெருமையாகவும் அழைக்கப்பட்டார்.

அவர் தமது முப்பதாவது வயதிலேயே அதாவது 1882 ஆம் ஆண்டிலேயே ‘சென்னை உள்நாட்டினர் சங்கம்’ (Madras Native Association) என்ற பெயரில் அமைப்பு ஒன்றினை ஏற்படுத்தி, அரசியல் பணியாற்றத் தொடங்கினார். இந்தச் சங்கம் பிற்காலத்தில் ‘சென்னை மகாஜன சபை’ என்று பெயர் பெற்றது.

டாக்டர் சி. நடேசனார் வகுத்துத் தந்த பார்ப்பனரல்லாதார் நலம் கருதும் கொள்கை, குறிக்கோள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு டாக்டர் டி.எம். நாயர் அவர்களைத் துணையாக ஏற்றுச் சர். பி.தியாகராயர், 1916 நவம்பர் 20 ஆம் நாள் ‘தென்னிந்திய (ர்) நலவுரிமைச் சங்கம்’(South Indian Liberal Federation என்பதன் மொழியாக்கம் ‘தென்னிந்தியர் நல உரிமை சங்கம்’ -கவி) என்ற ஓர் அமைப்பை ஏற்படுத்தினார். அந்த சங்கம் ‘நீதி’ (Jusitice)  என்று பொருள்படும் ஆங்கிலப் பெயரில் நாளேடு நடத்தி வந்ததன் காரணமாக, அது ‘நீதிக்கட்சி’ (Justice Party) என்று நாளடைவில் பெயர் பெறலாயிற்று. 

சர். பி.தியாகராயர் அவர்கள் 1916 டிசம்பர் வாக்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘கொள்கை விளக்க அறிக்கை’ (Manifesto) ஒன்றினை வெளியிட்டார்.

அவர் சென்னை மாநகர மன்றத்தில் 40 ஆண்டுகாலம் உறுப்பினராகப் பணியாற்றியதோடு மாநகராட்சியின் தலைவராகச் சில ஆண்டுகள் பணிபுரிந்து பெயரோடும் புகழோடும் விளங்கினார். அவர் பச்சையப்பன் அறக் கட்டளையின் அறங்காவலராக இருந்து நீண்ட காலம் அரும்பணிகள் பல ஆற்றினார்.

தியாகராயரின் தொண்டுகளைப் பெரிதும் பாராட்டிய ஆங்கிலேய அரசு அவருக்கு 1909 ஆம் ஆண்டில் ‘இராவ் பகதூர்’ என்ற பட்டத்தையும் 1920 ஆம் ஆண்டில் ‘சர்’ பட்டத்தையும் வழங்கி அவரை மகிழ்வித்தது. சர். பி. தியாகராயர் அவர்களின் விடாமுயற்சியாலும் பேரூக்கத்தாலும் வளர்ச்சியுற்ற நீதிக்கட்சி மக்களின் நம்பிக்கையையும் நன் மதிப்பையும் பெற்று 1921 பொதுத் தேர்தலில் சிறப்பான முறையில் வெற்றி பெற்றுச் சென்னை மாகாண ஆட்சியைக் கைப்பற்றியது. 

மேதகு ஆளுநர் அப்பொழுது  நீதிக்கட்சியின் தலைவராக விளங்கிய சர். பி.தியாகராயரை அழைத்து மாகாண ஆட்சியை அமைக்குமாறு கேட்டுக் கொண்டார். சர்.பி.தியாகராயர், தாம் பதவி ஏற்கும் நோக்கத்தைக் கொள்ளாமல் மிக்க பெருந்தன்மையோடு கடலூர் வழக்கறிஞர் திவான் பகதூர் சுப்பராயலு ரெட்டியார் அவர்களை முதலமைச்சர் பொறுப்பை ஏற்குமாறு செய்தார்.

வெள்ளுடை வேந்தர் சர். பி. தியாகராயர் அவர்கள் 1925 ஏப்ரல் 28 ஆம் நாள் அன்று தமது 73 வயதில் இயற்கை எய்தினார். 

அவரது மறைவு திராவிட இயக்கத்தவரிடையே பேரதிர்ச்சியையும் பெருந்துக்கத்தையும் துயரத்தையும் உண்டாக்கியது. அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அவரது தொண்டு களை மிகவாகப் பாராட்டி ‘இந்து’ ஆங்கில நாளேடும் ‘நவசக்தி’ தமிழ்க் கிழமை ஏடும் தலையங்கங்கள் தீட்டி இருந்தன. 

அவர் 1882 முதல் 1923 வரை சென்னை நகராட்சி உறுப்பினராகவும் 1920 முதல் 1923 வரைஅதன் தலைவராகவும் 1919 முதல் 1925 வரை சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும் பணியாற்றினார். 

நீதிக் கட்சியின் நிறுவனரான சர்.பி. தியாகராயர் அவர்கள் திராவிட இயக்கத்தின் நினைவு அடையாளமாக என்றென்றும் நிலைத்து நிற்கும் பெற்றி வாய்த்தவர் என்று சொன்னால் அது மிகையாகக் கூறுவது ஆகாது.

No comments:

Post a Comment