நீதிக்கட்சி வளர்த்த அரும்பெருந்த் தலைவர்கள்-3
- டாக்டர் நாவலர் நெடுஞ்செழியன்
டாக்டர் டி.எம். நாயர் (1868 - 1919)
டாக்டர் டி.எம். நாயர் அவர்கள் பாலக்காட்டு நகருக்கு அருகே உள்ள ‘தாரவாத்’ என்ற ஊரில் 1868 ஆம் ஆண்டு பிறந்தவர். அவரது முழுப் பெயர் தாரவாத் மாதவன் நாயர் என்பதாகும்.
அவர் பாலக்காட்டில் பள்ளிப் படிப்பையயல்லாம் முடித்த பின்னர், சென்னை மாநிலக் கல்லூரியில் எம்.ஏ. தேர்வில் தேறிப் பட்டம் பெற்ற பின்னர் சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். மருத்துவக் கல்வியை மேலும் சிறந்த முறையில் பெற விரும்பி 1889 இல் இங்கிலாந்து நாட்டிற்குச் சென்றார். 1894 ஆம் ஆண்டில் அவர் எம்.பி.சி.எம். என்ற உயர்ந்த மருத்துவப் பட்டத்தைப் பெற்றார். பின்னர், சிறிது காலம் பிரைட்டன் நகரில் மருத்துவராகப் பணியாற்றினார்.
1896 ஆம் ஆண்டில் எடின்பரோ பல்கலைக் கழகத்தில் எம்.டி. பட்டத்தைப் பெற்றார். பின்னர் அவர் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில், செவி - மூக்கு - தொண்டை பற்றிய மருத்துவ ஆராய்ச்சியில் ஓராண்டு காலம் ஈடுபட்டார். அப்பொழுது அவர் கிரேக்க மொழியையும் நன்கு கற்றறிந்தார்.
அதன் பிறகு 1897 இல் சென்னைக்குத் திரும்பி வந்து, செவி ‡ மூக்கு‡ தொண்டை பற்றி மருத்துவராகச் சிறந்து விளங்கிப் பெயரோடும் புகழோடும் திகழ்ந்தார். டாக்டர் டி.எம். நாயர் அவர்கள் ஆறரை அடி உயரமுள்ளவராக விளங்கி, எடுப்பான-கவர்ச்சிகரமான-கம்பீரமான தோற்றங் கொண்டவராகத் திகழ்ந்தார். அவரது தோற்றப் பொலிவே பலரையும் அவரிடம் அடக்கவொடுக்க மாக நடந்து கொள்ளச் செய்தது.
டாக்டர் நாயர், ‘ஆண்டி செப்டிக்’ (Anti septic) என்ற பெயரில் மருத்துவ திங்கள் இதழ் ஒன்றை நடத்தினார். சென்னை மாகாணத்தில் தோன்றிய முதல் மருத்துவ இதழ் அதுதான் என்று குறிப்பிடலாம். அவர் ‘மெட்ராஸ் ஸ்டாண்டர்டு’ (Madras Standard) என்ற ஆங்கில நாளேட்டிற்குச் சில காலம் ஆசிரியராக இருந்து பணியாற்றினார்.
டாக்டர் நாயர் இங்கிலாந்திலிருந்து சென்னை வந்து சேர்ந்ததும், தம்மைக் காங்கிரஸ் கட்சியில் ஈடுபடுத்திக் கொண்டார். அவர் இங்கிலாந்தில் இருக்கும் போது தாதாபாய் நெளரோஜிடம் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார்.
டாக்டர் நாயர் 1904 ஆம் ஆண்டில் சென்னை நகராட்சி மன்றத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தொடர்ந்து பல தடவைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு 12 ஆண்டு காலம் உறுப்பினராகப் பணியாற்றி வந்தார்.
அவர் நகராட்சி மன்ற, ஊராட்சி மன்ற சீர்திருத்த நடவடிக்கைகளிலும் மிக்க ஆர்வங் காட்டி வந்தார். அவர் 1913 ஆம் ஆண்டிலிருந்து 1915 ஆம் ஆண்டு வரையில் சென்னைச் சட்டமன்றத்தில உறுப்பினராக இருந்து அரும்பணி யாற்றினார்.
பட்டம் பெற்ற டாக்டர்களின் தொழிலை ஒழுங்குபடுத்த, ‘சென்னை மெடிக்கல் ரெஜிஸ்ட்ரேன்’(Madras Medical Registration) சட்டத்தைச் சட்டமன்றத்தில் நிறைவேற உறுதுணையாக இருந்தார்.
டாக்டர் டி.எம். நாயரும், சர்.பி. தியாகராயரும் காங்கிரசுக் கட்சியில் இருக்கும் போதே, பார்ப்பனரல்லதா பெருங்குடி மக்களுக்கான உரிமை வாழ்வு, வாழ்க்கை வசதி வாய்ப்புகள் ஆகியவற்றிற்காகப் பாடுபடுவதில் மிகுந்த நாட்டங் கொண்டிருந்தனர்.
அவ்விருவரின் மனப் போக்குகளை நன்கு அறிந்திருந்த டாக்டர் சி. நடேசனார், அவ்விருவரையும் அணுகித் தாம் நிறுவிய திராவிடர் சங்கத்தின் நோக்கம், கொள்கை, திட்டம் ஆகியவை பற்றி எடுத்துரைத்தார்.
அவ்விருவரும் அவற்றில் மனம் ஒன்றிப் போய், அவற்றிற்கு ஆதரவு அளிக்க முன் வந்தனர். அவர்கள் இருவரும் காங்கிரசுக் கட்சியை விட்டு விலகி வந்து ‘தென் இந்திய(ர்) நலவுரிமைச் சங்கம்’ என்னும் ‘நீதிக் கட்சி’யைத் தோற்றுவிக்கும்படிச் செய்ய டாக்டர் சி. நடேசனார் முழு முதற் காரணமாக அமைந்தார்.
1916 நவம்பர் திங்களில் ‘தென் இந்திய(ர்) நலவுரிமைச் சங்கம்’ என்னும் ‘நீதிக் கட்சி’ அமைந்தவுடன் அதன் வளர்ச்சியை விரிவு படுத்தவும் அதன் செல்வாக்கை வளர்க்கவும் டாக்டர் டி.எம். நாயர், தமது அழுத்தந்திருத்தமான எழுத்தையும், ஆணித்தரமான பேச்சையும் பெரிதும் பயன்படுத்தினார்.
டாக்டர் நாயர் அவர்களைக் காங்கிரசுக்காரர்களும் தன்னாட்சி இயக்கத் தினர்களும் (சுயராஜ்ய கட்சியினர்‡ கவி) கடுமையாக எதிர்த்து வந்தனர். ‘நவசக்தி’ ஆசிரியர் திரு.வி.க. அவர்கள், டாக்டர் நாயரின் கொள்கையையும், போக்கையும் கடுமையாகத் தாக்கி எழுதி வந்தார்.
1917 ஆம் ஆண்டில் சென்னையில் நடைபெற்றக் கூட்டமொன்றில், டாக்டர் நாயர் பேசிக் கொண்டிருந்த பொழுது திரு.வி.க. அவர்கள் சில கேள்விகளை எழுப்பினார். டாக்டர் நாயர் அவர்களும் அவற்றிற்குத் தக்க ஆணித்தரமான விடையறுத்தார்.
டாக்டர் நாயர், ‘ஜஸ்டிஸ்’ என்ற ஆங்கில நாளேட்டின் மதிப்புறு பொறுப் பாசிரியராக இருந்து, கருத்து செறிந்த கட்டுரைகள் பலவற்றை வரைந்தார். 1916-க்கும் 1919- க்கும் இடையில் நீதிக்கட்சியின் சார்பாக நடைபெற்ற பல மாநாடுகள் - பொதுக் கூட்டங்கள் - சிறப்புக் கூட்டங்கள் - கருத்தரங்குகள் ஆகியவற்றில் கலந்து கொண்டு அழகாகவும் அருமையாகவும் கொள்கை விளக்கம் புரிந்தார்.
அந்தக் காலக் கட்டங்களில் டாக்டர் நாயரின் பேச்சைக் கேட்க ஏராளமான மக்கட் கூட்டம் கூடுவது உண்டு. அவரது வி.பி.ஹால் பேச்சும் ஸ்பர்டாங் ரோடு பேச்சும் வரலாற்றுச் சிறப்புப் பெற்றவைகளாகும்.
இந்தியாவிற்கு எப்படிப்பட்ட அரசியல் சீர்திருத்தம் வழங்க வேண்டும் என்பது பற்றி ஆராய 1917 டிசம்பரில் மாண்டேகு - செம்ஸ்போர்டு சென்னைக்கு வருகை தந்த போது நீதிக்கட்சியின் சார்பாக அவர்களிடம் சாட்சியம் சொல்ல சர். பி.தியாகராயர் அவர்களின் தலைமையில் அமைந்த குழுவில் டாக்டர் டி.எம்.நாயர் முக்கியமானதொரு பங்கு பெற்றிருந்தார். குழுவிடம் வாதங்களை அடுக்கடுக்காக எடுத்துவைத்தார்.
சென்னை மாகாணத்திலுள்ள பார்ப்பனரல்லாதார்க்குத் தனி வாக்குரிமை யுடன் கூடிய அரசியல் சீர்திருத்தம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, டாக்டர் நாயர் 1919 சனவரி 9 ஆம் நாளன்று சென்னை அரசுக்கு நீண்ட விளக்கமாக கடிதம் ஒன்றினை எழுதினார்.
நீதிக்கட்சியின் புதிய அரசியல் சீர்திருத்தம் பற்றிய கொள்கைக்கு இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைத் திரட்டுவதற்காக டாக்டர் டி.எம். நாயர் 1918 ஆம் ஆண்டில் இலண்டன் போய்ச் சேர்ந்தார். அங்குப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய பல கூட்டங்களில் அவர் பேசியதோடு, ஆங்கில நாளேடுகளில் கட்டுரைகள் பலவற்றை எழுதி வெளி யிட்டார். அவரது முயற்சிகள் ஓரளவுக்குப் பயன் அளித்தன. அவர் சென்னைக் குத் திரும்பி வந்தபோது அவருக்கு மாபெரும் வரவேற்பு கொடுக்கப்பட்டுப் பாராட்டும் வழங்கப்பட்டது.
டாக்டர் நாயர் மீண்டும் 1919 ஆம் ஆண்டில் இங்கிலாந்துக்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கு அவர் பாராளுமன்றக் கூட்டுக் குழுவினைக் கண்டு சாட்சியம் சொல்லுவதாக இருந்தது. அதற்குள் அவரது உடல் நலங்குன்றிப் போகவே அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். டாக்டர் டி.எம். நாயர் 1919 சூலை 17 ஆம் நாள் உடல் நலம் தேறாமல் 51 வயதில் இயற்கை எய்தினார்.
நீதிக்கட்சியின் சார்பாகச் சாட்சியம் சொல்ல சர். ஏ. இராமசாமி முதலியார் தலைமையில் இங்கிலாந்துக்குச் சென்றிருந்த குழுவினர், டாக்டர் நாயரின் மறைவு காரணமாக ஆற்றொணாத் துக்கத்திலும் துயரத்திலும் மூழ்கினர்.
டாக்டர் நாயரின் மறைவுச் செய்தி கேட்டுச் சென்னை மாகாண நீதிக்கட்சித் தலைவர்களும் பார்ப்பனரல்லா பெரு மக்களும் பெரும் துயரம் அடைந்தனர். சர். பி. தியாகராயர் பெருந்துக்கத்தில் ஆழ்ந்தார். அதிலிருந்து அவரால் நீண்ட காலம் மீள முடியவில்லை.
No comments:
Post a Comment