'பூம்புகார் சிலப்பதிகாரக் கலைக்கூடம்' பற்றி
கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் தனது 'நெஞ்சுக்குநீதி' இரண்டாம் பாகத்தில் 408-410 பக்கங்களில் எழுதியிருப்பதாவது....
பொதுவாக, ஆறு, கடலுடன் கலக்கும் முகத்துவாரத்திற்குப் புகார் என்பது பெயர். அதன்படி, காவிரி ஆறு கடலுடன் கலக்கும் இடமும் புகார் என்றே வழங்கப்பெற்றது. பின்னர், இந்தப் புகார், பொலிவின் காரணமாகவும், சிறப்பின் காரணமாகவும் பூம்புகார் என்று அழைக்கப் பட்டது.
பிற்காலத்தில் பூம்புகார் என்னும் பெயர் மாறி, காவிரி புகும் பட்டிணம் என்றாகி, அதுவும் நாளடைவில் காவிரிப் பூம்பட்டிணம் என்று பல வாறாக வழங்கப்பெறலாயிற்று.
கழக அரசு பழந்தமிழ்ப் பெயர்களையும், போற்றத் தக்க பழந் தமிழ்ப் பண்பாட்டையும் விடாமல் வலியுறுத்தி வந்ததால், மீண்டும் பூம்புகார் மலர்ந்து, தமிழர் மனத்தில் மகிழ்ச்சியையும் எழுச்சியையும் ஏற்படுத்தத்திட்டமிட்டது.
காவிரிப்பூம்பட்டினம் முப்பெரும் பிரிவுகளாக விளங்கியது.
காவிரிப்பூம்பட்டினத்தில் கடற்கரையோரமாக அமைந்த பகுதி மருவூர்ப்பாக்கம்; நகரமாக அமைந்த பகுதி பட்டினப்பாக்கம். இவ்விரு பாக்கங்களும் இடையே அமைந்த பகுதி நாளங்காடி.
முத்துப் பந்தரும், தோரண வாயிலும் பொன்னும் மணியும் இழைத்த அரிய வேலைப்பாடுகள் உடையவை. கரிகாலன் இவற்றை யயல்லாம் காவிரிப் பூம்பட்டினத்திற்குக் கொண்டுவந்து, ஒன்று சேர்த்துக் கண்கவரும் கொலுமண்டபம் ஒன்றை அமைத்தான். இந்த மண்டபம் புலவர்கள் பாடும் சிறப்பைப் பெற்றது. இதற்கு பட்டிமண்டபம் என்று பெயர்.
பட்டினப்பாக்கத்தில் ஐவகை மன்றங்கள் இருந்தன. அவை, வெள்ளிடை மன்றம், இலஞ்சி மன்றம், நெடுங்கல் மன்றம், பூதச் சதுக்கம், பாவை மன்றம் எனும் பெயர் பெற்றிருந்தன.
இவைகள் எல்லாம் அமையப் பெற்ற பூம்புகார் காலத்தின் கோலத்தால் - கடற்கோளுக்கு இரையாகி, மறைந்த நகரங்களில் ஒன்றாகிவிட்டது. அப்படி மறைந்த நகரங்களை மீண்டும் அதே வனப்புடன் காண வேண்டும்‡ கண்ணகி வாழ்ந்த ஊரில் அவளுக்கு நிலையான நினைவுச் சின்னம் எழுப்ப வேண்டும் என்று நான் பெரிதும் விரும்பினேன்.
சிலப்பதிகாரக் காட்சிகளைச் சிற்பங்களாக வடித்து, அவற்றை ஒரு மண்டபத்திலே அமைத்து, சிலப்பதிகாரக் கதையை அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் எடுத்துரைக்க வேண்டும் என்றும், அதற்காக சிலப்பதிகாரக் கலைக்கூடம் ஒன்றை நிறுவ வேண்டும் என்று திட்டமிட்டேன். அந்தக் கலைக்கூடம் அமைந்துள்ள கட்டடம் எழுநிலை மாடம் என பெயர் பெற்றது.
சிலப்பதிகாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள செய்திகளின் அடிப்படையில்தான் இந்தக் கட்டடம் உருவாக்கப் பெற்றிருக்கிறது. நான்கரை லட்ச ரூபாய் செலவில் இந்தக்கலைக்கூடம் அமைக்கப் பட்டது. இதனை 1973 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 17 ஆம் தேதி, அதாவது இந்திர விழா நடந்த சித்திரைப் பெளர்ணமித் திருநாளில் திறப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
இந்தக் கலைக்கூடத்தில் கண்ணகியின் கதையை விளக்கும் 48 சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. இப்படி சிற்பத்தில் ஒரு காப்பிய கதையை வடித்த முதல் கலைக்கூடம் இதுதான்! அதைத் தவிர ஒரே கல்லில் எட்டு அடி உயரம் உள்ள மூன்றரை டன் எடையுள்ள மாதவி சிலை ஒன்றும் அற்புதமாக வடிக்கப்பட்டு அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த சிலைகள் யாவும் மாமல்லப் புரத்திலுள்ள அரசினர் சிற்பக் கலைப் பயிற்சி நிலையத்தில் கணபதி ஸ்தபதி அவர்கள் மேற்பார்வை யில் செய்யப்பட்டதாகும்.
கலைக் கூடம் ஏழு மாடங்கள் கொண்டதாகும். முதல் மாடம் 12 அடி உயரமும், அதன் மேலுள்ள ஒவ்வொரு மாடமும் ஐந்து அடி உயரமும், ஏழாவது மாடத்துக்கு மேலுள்ள கலசப் பகுதி எட்டு அடி உயரமும் கொண்டு மொத்த உயரமும் ஐம்பது அடிக்கு உள்ளதாகும்.
சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக அறிஞர் அண்ணா பெயரில் விருந்தினர் மாளிகை ஒன்றும் அங்கே அமைக்கப்பட்டது. முத்துச் சிப்பிகள் வடிவிலும், நத்தைகள் வடிவிலும் தங்கும் விடுதிகள் அமைக்கும் பணியும் தொடர்ந்தது.
சென்னையில் உலகத் தமிழ் மாநாடு எந்த அளவிற்கு விழாக் கோலம் கொண்டு நடைபெற்றதோ, அதைப் போலவே ஐந்து இலட்சம் மக்கள் ஊர்வலத்திலும், இரண்டு நாள் விழாவிலே பத்து இலட்சம் மக்களும் கலந்து கொண்டு நடைபெற்றது.
விழாவின் முதல் நிகழ்ச்சியாக பிரம்மாண்டமான ஊர்வலம் ஏப்ரல் திங்கள் 17 ஆம் தேதி காலையில் நடைபெற்றது. ஊர்வலத்தில் 24 அலங்கார வண்டிகள் இடம் பெற்றன.
பிற்பகலில் அங்கே அமைக்கப்பட்டிருந்த முத்துப் பந்தரில் தமிழர் வரலாற்றுக் கருத்தரங்கம் நடைபெற்றது. அதற்கு கி.வா.ஜகந்நாதன் தலைமை வகித்தார். அதில் புலவர் கோவிந்தராசன், நாகசாமி, கவிஞர் சுரதா, செளந்திரராசன், நான் அண்ணன் என அருமையாக அழைத்திட்ட பக்கர் எம்.எல்.சி., செ. கந்தப்பன், இராம. அரங் கண்ணல், சா. கணேசன், ராஜாராம் நாயுடு, புதுவை முதல்வர் பருக் மரைக்காயர் ஆகியோர் உரையாற்றினர்.
அடுத்து கல்வி அமைச்சர் நாவலர் தலைமையில் சிலப்பதிகாரக் கலைக் கூடத்தை நான் திறந்து வைத்தேன். அதன்பின் பூம்புகார் கடற்கரை நிலா முற்றத்தில் நாவலர் தலைமையில் சிறப்பு சொற் பொழிவு நடைபெற்றது. அதில் தவத்திரு அடிகளார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம், சிலம்புச் செல்வர் ம.பொ.சி., பேராசிரியர் (அன்பழகன்) ஆகியோர் உரையாற்றிய பின் நான் உரையாற்றினேன்.
இரவு கவிஞர் கண்ணதாசன் அவர்களால் எழுதப்பட்ட சிலப்பதிகார நாட்டியம் திருமதி கமலா குழுவினரால் நடத்தப்பட்டது. அதன்பின் நான் எழுதிய சிலப்பதிகார நாடகத்தை கரிகாலன் நாடக மன்றத்தினர் நடத்தினர்.
வெளிநாட்டுப் பயணிகளை கவரத்தக்க வகையில், இத்தகைய ஏற்பாடுகளை செய்ததோடு நின்றுவிடாமல், கலைக் கூடத் திறப்பு விழாவின் போது நான் கூறினேன், ‘இந்த இடத்தில் அழகிய கட்டிடங்கள், எழிலான மாடங்களை அமைப்பது மாத்திரம் தான் கழக அரசின் திட்டமல்ல ; இப்பகுதியில் வாழும் ஏழை எளிய மீனவர் களுக்காக தமிழக அரசு இப்போது தீட்டியிருக்கின்ற ஒரு திட்டத்தை இங்கே நான் வெளியிடுவது நலம் என்று கருதுகின்றேன்.
இந்தப் பூம்புகார் கடற்கரை ஓரத்தில் கிட்டத்தட்ட எழுநூறு மீனவர்கள் வாழ்கிறார்கள். அவர்களில் 400 பேர் கட்டு மரத்தை வைத்துக் கொண்டு தொழில் நடத்துபவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் எங்கள் கண்ணீரைத் தீர்க்க நீங்கள் எண்ண மாட்டீர்களா என்று அவர்கள் நினைப்பதற்கு முன் அதைச் செய்துமுடிக்க வேண்டும் என்று கருதும் இந்த அரசு வீட்டு வசதித் துறை வாயிலாக வும் சென்னையில் உள்ள குடிசை மாற்று வாரியம் தரும் அனுபவத் தின் அடிப்படையிலும் இங்குள்ள மீனவ மக்களுக்கெல்லாம் விரை வில் அவர்களது குடிசைகளை மாற்றி நல்ல வீடுகள் கட்டித் தரப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறியதோடு நின்று விடாமல் நாற்பது இலட்ச ரூபாய் நிதியினை அந்த ஆண்டு வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கீடு செய்து அவர்களுக்கு வீடு கட்டித் தந்ததோடு, மீனவர்களுக்கு படகுகளும், நைலான் வலைகளும் வழங்குவதற்கும் ஏற்பாடுகளைச் செய்தேன்.
ஏப்ரல் 18 ஆம் நாள் பூம்புகாரின் இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. காலையில் ‘சிலப்பதிகாரத்தில் பெரும் சிறப்புடையது புகார் காண்டமா? மதுரைக் காண்டமா? வஞ்சிக் காண்டமா?’ எனுந் தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. பட்டி மன்றத்துக்கு மதுரைப் பல்கலைக் கழகத் துணைவேந்தரான டாக்டர் மு.வ. அவர்கள் நடுவராக இருந்தார். புகார் காண்டமே சிறப்புடையது எனும் தலைப்பில் அவ்வை நடராசன், அறிவுடை நம்பி, கோவை இளஞ்சேரன் ஆகியோரும், மதுரைக் காண்டமே சிறப்புடையத எனும் தலைப்பில் சிலம்பொலி செல்லப்பன், மா.கி.தசரதன், புலவர் பொன்னி வளவன் ஆகியோரும், வஞ்சிக் காண்டமே சிறப்புடையது எனும் தலைப்பில் கா.வேழவேந்தன், புலவர் நன்னன், பேராசிரியர் காந்திமதி நாதன் ஆகியோரும் வாதிட்டனர்.
மாலையில் சிலப்பதிகாரத்தில் பாத்திரப் படைப்பு குறித்து கவியரங்கம் உவமைக் கவிஞர் சுரதா தலைமையில் நடைபெற்றது. பாண்டியனைப் பற்றி கவிஞர் சிக்கந்தரும், செங்குட்டுவனைப் பற்றி கவிஞர் தி.கு.நடராசனும், கண்ணகி பற்றி கவிஞர் முருகு சுந்தரமும், கவுந்தி அடிகள் பற்றி கவிஞர் கொத்தமங்கலம் சுப்புவும், மாதவி பற்றி கவிஞர் ஈரோடு தமிழன்பனும், கோவலன் பற்றி சுகி சிவமும் கவி பாடினர்.
தொடர்ந்து பூம்புகார் நிலா முற்றத்தில் இசைச் சித்தர் சிதம்பரம் ஜெயராமன் அவர்களின் இன்னிசை நடைபெற்றது.
இறுதியாக நான் அனைவருக்கும் நன்றி தெரிவித்து விழா நிறைவுரை ஆற்றினேன். அப்போது ஆண்டுதோறும் பூம்புகார் விழா நடைபெறும் என்று அறிவித்தேன்.
பதிவு: கந்தசாமி விநாயகம்
No comments:
Post a Comment