Monday, September 6, 2021

பாரதி பாதை - அறிஞர் அண்ணா-2

 பாரதி பாதை - அறிஞர் அண்ணா-2

ஆடுவமே பள்ளுப் பாடுவமே!

வந்தேமாதரம் என்போம்

செந்தமிழ் நாடெனும் போதினிலே

தாயின் மணிக்கொடி பாரீர்

ஜெய ஜெய பாரத

இப்படிப் பல தேசியப் பாடல்களை, நாட்டு மக்களின் செவிக்கும் சிந்தனைக்கும் கொண்டு வந்துள்ளனர்.


பாரதியார் அவ்வளவுதானா? அல்ல! பாரதியார் முழு உருவம் அது அல்ல! அடிமை நிலை போக வேண்டும் என்ற கோப நிலையில் உள்ள பாரதி அது. ஆனால், அதைத் தாண்டி, நாட்டு உள் நிலை, மக்கள் மன நிலை, இவை களைக் கண்டு, மனம் நொந்து வேதனைப்படும் பாரதி இருக்கிறார்.


 மக்களின் மந்த மதியினைக் கண்டு அவர்களைத் திருத்த வேண்டும் என்று ஆவல் கொண்டு துடிக்கும் பாரதி இருக்கிறார், நாடு எப்படி எப்படி இருக்க வேண்டும், சமூகம் எவ்வண்ணம் அமைய வேண்டும் என்ற இலட்சியம் கூறும் பாரதி இருக்கிறார். தேசிய பாரதியின் உருவம், இத்தனை பாரதிகளை மறைக்கிறது -ஆச்சாரியார், பந்தல், மண்டபத்தை மறைக்கிறது என்று கூறினாரே அதுபோல.

பெரிய பந்தல், விழாவுக்காக, மண்டபமோ, கவியின் பெருமைக்குரிய சின்னம்.

விழா முடிந்ததும், பந்தலைப் பிரித்து விடுவார்கள் - மண்டபம், நின்று அழகளிக்கும். அதுபோல் பாரதியாரின் தேசியக் கவிதை, அன்னியரை ஓட்டும் அரும்பணிக்காக மட்டுமே அமைவது - அந்தக் காரியம். முடிந்தால், இனி, அந்தப் பந்தலுக்கு அவசியமில்லை, அவசிய மில்லாததால், அது எடுபடும்.

அது எடுபட்ட பிறகுதான், பாரதியாரின் மனம் தெரியும். பாரதியாரின் முழு உருவமும் தெரிய, அவருடைய கவிதா சக்தியின் முழுப் பயனைப் பெற, அப்போதுதான் முடியும்.

இனியும், மேடைகளிலே ஏறி, தாயின் மணிக்கொடி பாரீர் போன்ற தேசப் பக்திப் பாடல்களை மட்டுமே பாடிப் பயனில்லை.

தாயின் மணிக்கொடி பார்க்கிறோம், இங்கே காயும் வயிற்றையும் காண்பீர் - என்று மக்கள் -முழக்கமிடுவர்.

எனவே, எந்தப் பகுதியை மட்டுமே அதிகமாகப் போற்றி, நாட்டுக்கு எடுத்துரைத்து வந்தார்களோ, அந்தத் தேசியப் பாடல் பகுதிக்குள்ள பயனும் ஜொலிப்பும், இனி இராது.

ஆகவே, பாரதி பயன் இல்லையா? அல்ல, அல்ல!

பயனுள்ள பகுதி, பலரறியா பாரதி, மறைக்கப்பட்ட பாரதி, இனித்தான் மக்களுக்குத் தெரிய வேண்டும். தேசியக் கவிக்கு அப்பால் நிற்கிறார் அந்தப் பாரதி.

அநதப் பாரதி, ஆங்கிலேயனை, ஆரிய பூமியிலிருந்து விரட்டும் பாரதி மட்டுமல்ல! நாட்டை விட்டுக் கேட்டினை எல்லாம் ஓட்ட வேண்டு மென்று கூறும் பாரதி. மேடைகளிலே இதுவரை நிறுத்தப்படாத பாரதி!

தேசபக்தர்களின் நாவிலே நின்று இதுவரை நர்த்தனமாடாத பாரதி! மறைந்திருக்கிறார், பொன்னாலான பெட்டிக்குள் முத்துமாலை இருப்பது போல. அந்தப் பாரதியை, நாம் அறிமுகப்படுத்தினால், விழா கொண்டாடியவர் களிலேயே பலருக்கு, முகமும் அகமும் சுருங்கக் கூடும். ஆனால் அந்தப் பாரதி, நெடுநாட்களுக்கு மறைந்திருக்க முடியாது. வெளி வந்தாலோ, இன்று அவரை வந்திக்கும் பலரே, நிந்திக்கக் கூடும். இதோ அந்த பாரதி -பந்தலால் மறைக்கப்பட்டுள்ள மண்டபம்.

பண்டைப் பெருமை - பழங்கால மகிமை - அந்த நாள் சிறப்பு - என்றெல்லாம் பேசுகிறார்களே, அவர்களை நாம், எவ்வளவோ, கெளரவ மாகத்தானே, கேட்கிறோம், ஐயா! பழைய காலத்தைக் கட்டிப்பிடித்தழுகிறீரே, இது சரியா? என்று.

பலருக்குத் தெரியாத, முழுப் பாரதி, அவர்களை இலேசில் விடவில்லை! மூடரே! என்று அவர்களை விளிக்கிறார். கேட்கிறார் அவர்களை,

முன்பிருந்ததோர் காரணத்தாலே

மூடரே, பொய்யை மெய்யயன லாமோ?

முன்பெனச் சொலும் காலமதற்கு

மூடரே, ஓர்வரை துறையுண்டோ?

முன்பெனச் சொலின் நேற்றுமுன்பேயாம்

மூன்றுகோடி வருடமு முன்பே

முன்பிருந்த தெண்ணிலாது புவிமேல்

மொய்த்த மக்களெலா முனிவோரோ?

நீர் பிறக்கு முன் பார்மிசை மூடர்

நேர்ந்ததில்லை என நினைந்தீரோ?

பார் பிறந்தது தொட்டின்று மட்டும்

பலபலப்பல பற்பல கோடி

கார்பிறக்கு மழைத்துளிபோலே

கண்ட மக்களனைவருள்ளேயும்

நீர் பிறப்பதன் முன்பு மடமை

நீசத்தன்மை இருந்தனவனறோ?

பழமை விரும்பி, என்ன எண்ணுவான் பாரதியாரைப் பற்றி!

‘சென்றதினி மீளாது மூடரே, நீர்

எப்போதும் சென்றதையே சிந்தை செய்து

கொன்றழிக்கும் கவலையயனும் குழியில் வீழ்ந்து

குமையாதீர் சென்றதனைக் குறித்தல் வேண்டா

இன்று புதியதாயப் பிறந்தோம் என்று நீவிர்

எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக்கொண்டு

தின்றுவிளையாடி இன்புற்றிருந்து வாழ்வீர்

தீமையயலாம் அகன்றுபோம் திரும்பி வாரா’.

மற்றுமோர் சாட்டை! வெந்ததைத் தின்று, வாயில் வந்ததைப் பேசுபவர்களுக்கு, வகையாகத் தருகிறார் சாட்டை! சென்றது இனி மீளாது மூடரே! மனுதர்மம் இருந்ததே! அரசுகளிலே ஆதிக்கம் இருந்ததே! நமது வலக்கரத்திலே அக்னி இருந்ததே! நம்மைக் கண்டதும், மற்றவர்களுக் கெல்லாம் பயபக்தி இருந்ததே! இவை எல்லாம் இன்று இல்லையே! மீண்டும் கிடைக்கப் பெறுவோமா என்றெல்லாம், எண்ணி எண்ணி ஏங்காதீர், சென்றது இனி மீளாது, என்று திட்டமாகக் கூறுகிறார். கூறுகிறேன் கேளுங்கள் மூடர்களே! என்று இடித்துரைத்துப் பேசுகிறார். இந்தப் பாரதி, மேடையிலே தோன்றாத பாரதி!

செத்தபிறகு சிவலோகம் வைகுண்டம்

சேர்ந்திடலமென்றே எண்ணி  யிருப்பார் பித்த மனிதர்

...

சாதிக் கொடுமைகள்

 வேண்டாம் அன்பு

தன்னிற் செழித்திடும் வையம்

...

அரும்பும் வியர்வை உதிர்த்துப்புவிமேல்

ஆயிரம் தொழில் செயதிடு வீரே!

பெரும்புகழ் உமக்கே இசைக்கின்றேன்

பிரமதேவன் கலையிங்கு நீரே!

...

பெண்ணுக்கு விடுதலை நீர்

 இல்லையயன்றால்

பின்னிந்த உலகினிலே

 வாழ்க்கை இல்லை.

தேசியக் கவிஞரால் மறைக்கப்பட்டுள்ள, புரட்சிக் கவிஞர் தெரி கிறார், இன்னும் தெளிவாக.

‘நெஞ்சு பொறுக்குதிலையே இந்த

நிலைகெட்ட மனிதரைநினைந்து விட்டால்’

என்று சோகிக்கிறார் பாரதி !

ஏன் நிலைகெட்டு விட்டது? தேசியக் கவியாக மட்டும் இருப்பின், பரங்கி பிடித்தாட்ட பாரதநாடு பரதவித்தது என்று மட்டுமே கூறுவார். ஆனால், பலருக்குத் தெரியவிடாதபடி மறைக்கப்பட்டிருக்கும் முழுப் பாரதி பேசுவதைக் கேளுங்கள்.

‘அஞ்சி  அஞ்சிச் சாவார் இவர்

அஞ்சாத பொருள் இல்லை அவனியிலே!

வஞ்சனைப் பேய்களென்பார் இந்த

மரத்திலென்பார் -அந்தக் குளத்திலென்பார்

துஞ்சுது முகட்டிலென்பார் மிகத்

துயர்ப்படுவார், எண்ணிப் பயப்படுவார்!

மந்திரவாதி யயன்பார் -சொன்ன

மாத்திரத்திலே மனக்கிலி பிடிப்பார்

யந்திர சூனியங்கள் - இன்னும்

எத்தனையாயிரம் இவர் துயர்கள்’

...

கொஞ்சமோ பிரிவினைகள்?

ஒரு கோடி யயன்றால் அது பெரிதாமோ?

ஐந்து தலைப்பாம்பென்பான் அப்பன்

ஆறுதலையயன்று மகன் சொல்லிவிட்டால்

நெஞ்சுபிரிந்திடுவார் - பின்பு

நெடுநாள் இருவரும் பகைத்திருப்பார்

இங்ஙனம், சமுதாயத்திலே உள்ள கேடுகளை, மனதிலே உள்ள தலைகளை, மூடக் கொள்கைகளைத் தாக்குகிறார், தமது கவிதா சக்தியைக் கொண்டு.

பாரதியாரா? என்று ஆச்சரியத்துடன் நாடு கேட்கும், அவர் சொன்னது அத்தனையும் சொல்லப்போனால். ஆனால், அந்தப் பாரதியாரை, அரும்பாடு பட்டு மறைத்திருக்கிறார்கள்.

பார்ப்பானை ஐயனென்ற

காலமும் போச்சே

என்ற ஒருவரியைக் கூட அவர் சொன்னதாகச் சொல்ல, அஞ்சி மறைத்தனர் -அருந்தமிழ் நாட்டவர்தான்! பாரதியார் அந்தச் சமுதாயத்தை மேலும் என்னென்ன கூறினார் என்று தெரிந்தால்தானே பாரதியாரின் முழு உருவம் தெரியும்.

இந்நாளிலே பொய்ம்மைப் பார்ப்பார்

அவர் ஏது செய்தும் காசு பெறப்பார்ப்பார்

பிள்ளைக்குப் பூணுலா மென்பான்

நம்மைப் பிச்சுப்பணம் கொடெனத் தின்பான்

பேராசைக்காரனடா பார்ப்பான்

ஆனால் பெரியதுரை என்னில்

உடல் வேர்ப்பான்

யாரானாலும் கொடுமை செய்வான்,

பணம் அள்ளி இடவில்லையயனில் வைவான்.

மகாகவி பாரதியின் வாக்கு, பேராசைக்காரனடா பார்ப்பான்! என்பது. மேடைகளிலே கேட்டதுண்டா! பாரதி சிறப்பு விழாக் கூட்டங்களிலே, இந்தப் பாரதி தெரிந்தாரா? இல்லை! அவர், மறைந்திருக்கிறார், மண்டபம், பந்தலால் மறைக்கப்பட்டிருப்பது போல. விழா முடிந்தது பந்தலும் பிரிக்கப்பட்டது! மண்டபம் தெரிகிறது! என்பது போல, வெள்ளையர் வெளி யேறும் விழா முடிந்தது, இனி, தேசியக் கவிதை அலங்காரத்தைக் கடந்து நிற்கும், பாரதி காண விரும்பிய புது சமுதாயம்,

ஏழை என்றும் அடிமை என்றும்

எவனுமில்லை, ஜாதியில் இழிவுகொண்ட

மனிதரென்போர் இந்தியாவில் இல்லையே!

என்ற இலட்சியம் ஈடேறிய நிலை பெற்ற சமுதாயம், மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கமில்லாத சமுதாயம், பழைமை மோகத்தில் படியாத சமுதாயம், காசியில் பேசுவதைக் காஞ்சியிள்ளோர் கேட்பதற்கான கருவி செய்யும் சமுதாயம், அத்தகைய புதிய சமுதாயத்தைக் காண விரும்பிய பாரதி  நிற்கிறார். ஆனால், அவரைப் பந்தல் மறைத்துக் கொண்டிருக்கிறது!

அவரை, நாட்டுக்குத் தெரிய விடாதபடி செய்வதில் பலருக்கு இலாபம் இருக்கிறது. எனவே, தேசியக் கவி மட்டுமே தெரிய வேண்டும் என்று எண்ணி ஏற்பாடுகள் செய்வர். ஆனால் அவர் எண்ணமும் ஈடேறுவதற்கில்லை. மக்களுக்குத் தெரிய ஒட்டாது அவர்கள் மறைத்து வைத்துள்ள பாரதியார், உண்மையில் மறைந்துவிட வில்லை. அதோ பாடுகிறார், கேளுங்கள்.

இருட்டறையில் உள்ளதடா உலகம் ஜாதி

இருக்கின்றதென்பானும்...

அது பாரதிதாசன் குரல் அல்லவா? என்கிறீர்களா? ஆம்! பாரதிதாசன் தான்! அவர்தான், மணி மண்டபத்தை விட விளக்கமாக, முழுப் பாரதியை, தமிழகத்துக்குத் தரும் அரும்பணியாற்றுகிறார். அவரிடம் நாங்கள், முழுப் பாரதியாரைக் காண்கிறோம், களிக்கிறோம் - வாழ்த்துகிறோம்.

அச்சம் தவிர்

ஆண்மை தவறேல்

உடலினை உறுதி செய்

எண்ணுவதுயர்வு

ஏறுபோல் நட

ஒற்றுமை வலிமையாம்

ஒளடதங் குறை

கற்ற தொழுகு

காலமழியேல்

குன்றென நிமிர்ந்து நில்

கூடித்தொழில் செய்க

கைத்தொழில் போற்று

கொடுமையை எதிர்த்து நில்

சரித்திரத் தேர்ச்சிகொள்

சாவதற்கஞ்சேல்

சிதையா நெஞ்சுகொள்

சூரரைப் போற்று

சோதிடந்தனையிகழ்

தெய்வம் நீ என்றுணர்

தையலை உயர்வு செய்

தொன்மைக்கஞ்சேல்

நினைப்பது முடியும்

நூலினைப் பகுத்துணர்

நெற்றி சுருக்கிடேல்

பிணைத்தினைப் போற்றேல்

புதியன விரும்பு

பேய்களுக்கஞ்சேல்

போர்த்தொழில் பழகு

முனையிலே முகத்துநில்

மேழி போற்று

யாரையும் மதித்துவாழ்

இவை பாரதியாரின் புதிய ஆத்திச்சூடி!

புதிய பாதை! பாரதி பாதை! தேசிய மணி மண்டபத்தோடு முடிந்து விடுவதல்ல, அதற்கும் அப்பாலுள்ள சமதர்மபுரிக்குப் போவதற்கு அமைந்த பாதை! அந்தப் பாரதி பாதையை அமைத்துக் கொண்டிருக்கும் அரும்பணி யாற்றும் நாம் பாரதியார் பெற்ற சிறப்புக் கண்டு பெருமையடைவதுடன், பாரதியாரின் முழு உருவமும் மக்களுக்குத் தெரியச் செய்யும் காரியத்தையும் மேற்கொண்டுள்ளோம்.


பாரதி காட்டிய பாதையை நாடு நன்கு அறிய வேண்டும்! பரங்கியை ஓட்டி விடுவது மட்டுமல்ல அது. நாட்டின் கேட்டுக்குக் காரணமாக உள்ளதனைத்தையும் ஓட்டி, புதிய சமூக அமைப்பாக்கும் பாதை. அந்தப் பாரதி பாதையை நாம் போற்றுகிறோம்.


 (கவிதா மண்டலம், பிப்ரவரி 201

No comments:

Post a Comment