சுதந்திர நாடாக வாழும் எல்லா உரிமையும் மலேசிய நாட்டிற்கு உண்டு
சிங்கப்பூர் வரவேற்பில் அண்ணா பேருரை
சிங்கப்பூர், சூலை 16 இரவு 9.30 மணிக்கு அறிஞர் அண்ணா அவர்களின் பேச்சு துவங்கியது. முதலில் சிறிது நேரம் ஆங்கிலத்தில் பேசிவிட்டு, பிறகு சுமார் ஒரு மணி நேரம் தமக்கே உரித்தான தனி பாணியில் அழகுத்தமிழில், நல்ல கருத்துக்களை நகைச்சுவை கலந்து அள்ளி வழங்கினார் அறிஞர் அண்ணா.
உங்களைக் கண்டுகளிக்க வேண்டும் என்று நானும் என்னைக் காண வேண்டும் என்று நீங்களும் பல ஆண்டுகளாக விரும்பி வந்திருக்கிறோம். அந்த அவா இன்று நிறைவேறியது காண பெரு மகிழ்வெய்துகிறேன்.
விமான நிலையத்தில் என்னை வரவேற்க வந்திருந்தவர்களின் கண்களில் உவகைக் கண்ணீரை, என்னைத் தொட்டு வரவேற்றக்கரங்களை, கட்டிய ணைத்து முத்தங்களீந்த அன்பு உள்ளங்களைக் காண அக மகிழ்ந்தேன், உங்களிடம் உள்ளன்பு இருக்கும் என்பது நான் எதிர்பார்த்ததுதான் என்றாலும் இந்த அளவு இருக்கும் என்று நான் எதிர்ப்பார்க்கவில்லை என்றார் திரு. அண்ணா.
தம்மை வரவேற்கக் கூடியுள்ள மாபெரும் கூட்டத்தின் முன்னே தான் நிற்கும் நிலையை திருமணமான புதிய தம்பதிகள் முதல் இரவில் இருக்கும் நிலைக்கு ஒப்பிட்டார் அறிஞர் அண்ணா. புதிதாக மணமான தம்பதிகள் முதல் இரவில் சந்திக்கும் போது எந்தவித பேச்சும் பேசத் தோன்றாது சினிமாவில் வேண்டுமானால் அவர்கள் பேசுவதாகக் காட்டியிருக்கலாம். ஆனால், உண்மையில் அப்போது பேசுவதற்கே எதுவும் தோன்றாது. அந்த நிலையில் நான் இப்போது இங்கு நிற்கிறேன். (சிரிப்பு). என்னைக் கவ்வும் கண்களுடன் நீங்கள் நோக்குவதை நான் கண்டு உங்களின் ஒளி நிறைந்த கண்களை உள்ளன்பை ஊடுருவி நோக்கி அதை எனது இதயத்தில் பதித்துக் கொண்டு செல்ல விரும்புகிறேன் என்றும் அவர் கூறினார்.
தமிழ்ப்பண்பு:
அறிஞர் அண்ணா அவர்கள் தமது உரையில் தமிழ்ப் பண்புக்குச் சிறந்த விளக்கம் அளித்தார்.
இந்த இயற்கை வளம் மிகுந்த பொன்னான நாட்டைப் பூங்காவாக ஆக்க தமிழர்கள் ஆற்றிய பணி பற்றியும் பங்கு பற்றியும் சிங்கப்பூர் பிரதமர் லீ அவர்கள் சுட்டிக்காட்டினார்கள். தமிழர்கள் எந்த நாட்டை தங்களின் சொந்த நாடாகக் கருதினார்களோ அந்த நாட்டின் நல் வாழ்விற்காக, அதை ஒளிமயமாக்க தங்களை அர்ப்பணித்துக் கொள்ளும் பண்புள்ளவர்கள். இதற்கு எடுத்துக் காட்டாக சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பகுதியை நிறுவுவதற்காக இந்த நிகழ்ச்சியில் என் மூலம் 13,000 வெள்ளிக்கான செக் ஒன்றை வழங்கியிருப்பதில் பெருமைப்படுகிறேன். மேன்மேலும் இது போன்ற சிறப்புக் காரியங்களுக்கு வாரி வழங்கும்படி வேண்டுகிறேன். தமிழ்மொழி எந்த ஒரு நாட்டுக்கும் சொந்தமானதல்ல. பல்வேறு பண்பாடுகள் கலாசாரங் களையுடைய மற்றவர்களுக்கும் தமிழில் காணப்படும் இலக்கிய வளங் களையும், கலாச்சாரப் படைப்புகளையும் எடுத்துக் கூறும் செயல்களை தமிழர்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
அரசியல் ஓய்வு:
எங்கள் நாட்டில் அல்லும் பகலும் அரசியலில் உழன்று கொண்டிருக்கும் நான், இங்கு பயணம் செய்யும் ஒரு பத்து பதினைந்து நாட்களுக்காவது அரசியலை மறந்திருக்கலாமென்று எண்ணுகிறேன். அரசியல் நடவடிக்கைகளையும் அரசயில் எச்சரிக்கைகளையும் மறந்து இயற்கை வளம் நிறைந்த இந்நாட்டில் உங்களின் உபசரிப்பிலும், உள்ளன்பிலும் இணைந்து இந்த பதினைந்து நாட்களையும் செலவிடலாம் என்றிருக்கிறேன். தமிழகத்திலிருந்து வரும் ஓர் எதிர்க்கட்சிக்காரர் என்பதை விட ஓர் இந்தியர் என்ற முறையில் என்னை வரவேற்பதாக உங்களின் கலாசார அமைச்சர் திரு.ராசரத்தினம் கூறினார்.
எதிர்க்கட்சிக்காரன் என்றாலும் அவனும் ஓர் இந்தியன் தான் என்று எண்ணும் பெருந்தன்மை இங்கு மட்டுமல்ல, எங்கள் நாட்டிலும் ஏற்பட வேண்டுமென்று விரும்புகிறேன்.
நான் இங்கு ஒரு கலைத்தூதுவனாகத்தான் வந்திருக்கிறேனேயன்றி அரசியல் தூதுனாக அல்ல என்பதையும் வலியுறுத்திக் கூற விரும்புகிறேன்.
நான் தமிழகத்தில் அரசியல் கிளர்ச்சியயான்றில் ஈடுபட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்த நேரம், செஞ்சீனர்கள் இந்திய எல்லையில் ஆக்கிரமிப்பு செய்திருக்கிறார்கள் என்ற அறிந்ததுமே எனது நாட்டிற்கு, இந்தியாவிற்கு வந்திருக்கும் ஆபத்தை உணர்ந்து நடந்து வந்த எல்லாக் கிளர்ச்சிகளையும் நிறுத்தி ஆபத்து நேரத்தில் அரசாங்கத்தின் கரத்தை வலுப்படுத்தும்படி சிறையிலிருந்தவாறே மக்களைக் கேட்டுக்கொண்ட பொறுப்புள்ள ஒருவன்தான் நான் என்பதை கலாசார அமைச்சர் ராசரத்தினம் அவர்களின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.
தமிழர் பெருமை:
சிங்கப்பூரில் தமிழ்மொழியை ஆட்சிமொழிகளில் ஒன்றாக ஏற்று, துரைத் தனத்திலும் பொது வாழ்விலும் அதற்கு உரிய மரியாதையும் மதிப்பும் கொடுத்திருக்கும் இந்த அரசாங்கத்திற்கு எனது நன்றியைக் கூறிக் கொள்கிறேன்.
தமிழ்மொழியின் இலக்கியவளம் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னுள்ள வரலாற்றையுடையது. இன்று புதியவனாகக் காட்டும் பல விஞ்ஞான கருத்துகளை அன்றைய தமிழ் இலக்கியத்திலேயே கூறப்பட்டுள்ளன. இம்மொழி எந்த நாட்டவரும் ஏற்றுக் கொள்ளத் தக்க இனிய மொழி. அதிலுள்ள கருத்துக் கருவூலங்களை மாற்று மொழிக்காரர்கள் போற்றும் வண்ணம் எடுத்துக் கூற வேண்டும். உதாரணமாக கதிரவன் தன்னைத்தானே சுற்றி வருவதையும் பூமியும் மற்ற கோளங்களும் சூரியனைச் சுற்றி வரும் உண்மையை இன்றைய விஞ்ஞான உலகம் புதியதாகக் கூறுகிறது.ஆனால், இந்த உண்மை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்புள்ள தமிழ் இலக்கியங்களில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது .
சாதி:
மற்றொரு உண்மை பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவப் பெருந்தகையின் கூற்று. ஆதித் தமிழர்களிடம் சாதிமதப் பேதமிருக்கவில்லை. அது பின்னாலே வந்தவர்களால் புகுத்தப்பட்டது. இன்னும் கூறப்போனால் தமிழிலே ஜாதி என்ற வார்த்தையே கிடையாது. குரோட்டன்ஸ், டொமேட்கேப்பேஜ் போன்ற வார்த்தைகள் தமிழில் இல்லை. காரணம் அவை பழந்தமிழ் நாட்டுக் காய்கறி வகைகள் அல்ல. அது போன்றே ஜாதி என்ற வார்த்தையும் தமிழிலேயே கிடையாது. காரணம் பழந்தமிழ் நாட்டில் அது இல்லை. ஜப்பானை சப்பான் என்று சொல்வதால் தமிழாகி விடாது. அது போல ஜாதியை சாதி என்று கூறுவதால் தமிழாகி விடாது என்றும் அறிஞர் அண்ணா குறிப்பிட்டார்.
ஆய்ந்தறிக:
எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு என்பதே தமிழர்களின் பண்பாடு. ஆகவே யார் எது கூறினாலும், கூறுபவர் அறிஞராக இருந்தாலும் ஆட்சியாளராக இருந்தாலும் மனத்தைப் பறிகொடுத்து விடாமல் ஆராய்ந்து பார்த்துச் செய்யும் முடிவே பலன்தரும். பயன் தரும்.
நமது தமிழ் மொழியின் இலக்கிய வளத்தைத் தெரிந்து மற்றவர்கள் இத்தகைய வளமுள்ள மொழியினரின் வழியில் பிறக்காமல் போனோம் என்று வருந்துமளவுக்கு வளமுள்ள மொழிக்கு சொந்தக்காரன் என்பதில் நான் பெருமையடைகிறேன்.
கருவிலேயே:
கருவிலிருந்து வெளிவரும் குழந்தை கூட அது எந்த மொழியினரின் குழந்தையானாலும் முதன் முதலில் அம்மா என்று தமிழில் தான் பேசுகிறது. சில தமிழர்கள் என்ன தான் பிறமொழியில் ஈடுபாடுடையவராக இருந்தாலும் ஆங்கிலத்தையே பேசிக் கொண்டிருப்பவராக இருந்தாலும், திடீரென்று அவரது காலில் ஒரு கட்டெறும்பு கடித்து விட்டால் , ஆ! அய்யோ ! என்று தான் கூறுவாரே தவிர ஓ மை காட்! என்று கூற மாட்டார். இதைத்தான் தமிழ் உணர்வு என்று கூறுகிறோம்.
கெடுப்பவன் தமிழனல்லன்:
இந்த இயற்கையான தமிழ் உணர்வு , அம் மொழியின் மீதுள்ள பற்று, எந்த நாட்டையும் கெடுத்து விடாது. யாரையும் கெடுப்பது, தமிழ் பண்பல்ல. அப்படிக் கேடு நினைப்பவன் தமிழனாக இருக்க நேர்ந்தால் அவன் தமிழினத்தில் பிறந்தானே தவிர தமிழ்ப் பண்பை மறந்தவனாவான்.
அவன் சுவாசிக்கும் காற்றை, அருந்தும் நீரைத் தரும் இந்தப் பொன்னாட்டைத் தமிழர்கள் எந்நாளும் மறக்க மாட்டார்கள் என்பது நிச்சயம். யாதும் ஊரே , யாவரும் கேளிர் என்ற பண்பு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்களுக்கு ஏற்பட்டு விட்டது. வாழும் நாடு எந்த நாடோ அதையே தங்களின் சொந்த நாடாகக் கருதி வாழும் பண்புள்ளவர்கள்.
மலேசியத் தமிழர்கள்:
இங்கு வாழும் தமிழர்கள் தாங்கள் வாழும் இந்நாட்டிலேயே தங்கிவிட உறுதி பூண வேண்டும். தமிழகத்திற்குத் திரும்பிப் போய் வந்து கொண்டிருக்க வேண்டும் என்ற எண்ணத்தை விட்டு விட வேண்டும்.
மலேசியர்களாக விரும்பி மனு செய்த தமிழர்களையயல்லாம் இந்த அரசாங்கம் இந்நாட்டுக் குடிமகனாக ஏற்றுக் கொண்டது போல, இது வரை குடிமகனாகாதிருக்கும் மீதமுள்ள தமிழர்களையும் அவர்கள் விரும்பி மனு செய்தால் அவர்கள் அத்தனை பேரையும் பெருங்குடிகளாக ஏற்றுக் கொள்ளும்படி இந்த அரசாங்கத்தைப் பணிவன்புடன் வேண்டுகிறேன்.
தனித்தியங்கத் தகுதியுள்ளது:
தமிழ்மொழி தனித்தியங்கும் தகுதி பெற்றது என்று தமிழ்ப் புலவர்கள் நிருபித்துள்ளனர். நடைமுறையில் அது உண்மையானது என்பதை நான் உணருகிறேன். இரவல் வாங்கியே காலத்தைக் கழிப்பது ஒரு வாழ்வல்ல. குழம்பு இல்லை என்று அடுத்த வீட்டில் வாங்கி, வாங்கிய குழம்பில் காய்கறி இல்லை என்று பக்கத்து வீட்டில் இரவல் வாங்கிய குழம்பில், காய்கறியில் உப்பு இல்லை என்று பக்கத்து வீட்டில் இரவல் வாங்கி காலத்தைக் கழிப்பவன் தனிக் குடித்தனம் நடத்த தகுதியில்லாதவன். இது போன்று ஒவ்வொரு வார்த்தைக்கும் வேற்று மொழியிலிருந்து இரவல் வாங்கும் ஒன்றை மொழி என்று கூற முடியாது. ஓசை என்று தான் கூற வேண்டும்.
தமிழர்கள் தங்கள் மொழியின் பெருமையினைக் கூறிக் கொண்டிருப்பதால் பயனில்லை. நாங்கள் எப்படிப்பட்ட இனம் தெரியுமா? எங்கள் மொழி எப்படிப்பட்ட மொழி தெரியுமா? என்று கூறிக் கொள்வதில் சிறப்பில்லை. அந்த சிறப்புமிக்க மொழியினைக் கற்று, அதன் வளமிக்க இலக்கியத்திலுள்ள கருத்துக்களை உங்களின் வாழ்க்கையில் நடத்திக் காட்டி மற்றவர்களுக்கு எடுத்துக் கூற வேண்டும். மேடையில் பாடிக் கொண்டிருக்கும் பாடகன் தனது நிலைப்பாட்டை அடிக்கடி நிறுத்திக் கொண்டு ரசிகர்களை நோக்கிக் கைத் தட்டுங்கள் என்று கூறினால் அவன் ஒரு பாடகனுமல்லன். அவன் பாடுவது முறையான பாட்டுமல்ல என்றுதான் கூறவேண்டும்.
பண்டைய தமிழகத்தில் காணப்பட்ட ஏற்றத் தாழ்வுகளெல்லாம் இட்டார் பெரியார் இடாதார் இழிகுலத்தோர் என்ற வகையைச் சேர்ந்தவர்களாகத்தான் இருக்கும். தமிழகத்திலிருந்து இங்கு வந்திருக்கும் தமிழர்கள் தங்கள் கைகளை, கால்களை, கண்களை, காதுகளை மட்டும் இங்கு கொண்டுவந்து விட்டார்கள் என்ற அறிய வேதனைப் படுகிறேன். சாதியினால் தமிழர்கள் பெருமையடைய முடியாது.
விளக்கின் பயன் அதைப் பயன்படுத்தும் விதத்தில்தான் இருக்கிறது. கையில் பாட்டரி லைட் வைத்திருப்பவர்கள் இரவில் பூச்சி பொட்டுகள் பாதையில் இருக்கிறதா என்று பார்க்கப் பயன்படுத்துவதைவிட்டு கூட்டத்திலுள்ளவர்கள் பக்கம் விளக்கையடித்து அங்கு நிற்பவர்கள் யார், இங்கு நிற்பவர்கள் யார் என்று பார்க்கப் பயன் படுத்துவது தீமையாகும்.
பாராளுமன்ற ஜனநாயகம்:
இந்தியாவுக்கும் மலேசியாவுக்கும் இன்று பொதுவாக உள்ளது பாராளுமன்ற ஜனநாயகம், சில நாடுகளில் ஒரு மாதிரியான ஜனநாயகம் நடைமுறையில் இருக்கிறது. அங்கெல்லாம் ஒரே கட்சி தானிருக்கும். அதன் சார்பில் நிற்பவர் மக்களிடம் என்னை விரும்புகிறீர்களோ? இல்லையா என்ற கேள்வியோடு தேர்தலில் இறங்குவார்கள். யாரும் போட்டியிட முடியாது. அந்த நிலையில் நமக்கேன் வம்பு என்ற முறையில் மக்கள் அந்த ஒருவருக்கே ஓட்டளிப்பார்கள். உடனே பத்திரிக்கையில் அவருக்கு 98 சதவிகிதம் ஓட்டு கிடைத்ததாக செய்தி வரும். இது உண்மையான ஜனநாயகமல்ல.
நம்மிரு நாடுகளிலும் நடைமுறையிலுள்ளது பார்லிமென்டரி ஜனநாயகம். இந்த ஜனநாயகத்தில் அவசியம் ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிகள் இருக்கும். அவர்கள் தங்களின் திட்டங்களை மக்களின் முன் வைப்பார்கள். ஒன்று மக்களை இந்திரபுரிக்கு அழைத்துச் செல்கிறேன் என்று கூறும். மற்றொரு கட்சி சந்திரபுரிக்கு அழைத்துச் செல்வேன் எனலாம். மற்றொரு கட்சி இந்நாட்டிலேயே சுகவாழ்வு தருகிறேன் என்று கூறும். இவைகளை ஆராய்ந்து, மக்களுக்கு நன்மை செய்வதற்காக செயல்படும் தலைவர்கள் மக்கள் ஆட்சியில் அமர்த்துவர் அல்லது ஆட்சி மன்றத்தில் அமர்த்தி ஆளும் கட்சிக்கு ஆலோசனை கூறச் செய்வர். இதுதான் பாராளுமன்ற நாகரிகம்.
அதுவன்றி ஒரு கட்சியை மற்றொரு கட்சி வீழ்த்த, தாழ்த்த முனைந்தால் அது ஜனநாயகப் பண்புக்க முற்றிலும் மாறுபட்டது. ஜனநாயகத்தையே அது ஒழித்துவிடும். கட்சிகளுக்கிடையே மாச்சரியங்களின்றி மற்ற கட்சியின் கொள்கைகளுக்கு மதிப்பளிக்கும் பண்பு வளர்ந்தால் அங்கு பாராளுமன்ற ஜனநாயகம் நல்ல பயனைத் தரும். இத்தகைய ஆட்சி முறையில் குறைபாடுகள் இருக்கலாம். ஆனால், மக்களிடையே இந்தப் பண்பு வளர வளர நல்வாழ்வு பெற முடியும்.
ஆதியிலிருந்து நாங்கள் ஆண்டு வருகிறோம் என்பதாலோ, ஆண்டவன் அளித்தான் என்பதாலோ ஒருவருக்கு ஆட்சி உரியதாகிவிடாது. 22 வயதுக்கு மேற்பட்ட யாரும், அவர் ஆறாவதுவரை படித்திருந்தாலும் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் ஆறுவருடம் படித்திருந்தாலும், ஏழடி உயரமுடைய வரானாலும் என்னைப் போல் குள்ளமானவராக இருந்தாலும், சிகப்பாக இருந்தாலும், கருப்பாக இருந்தாலும், பணக்காரராக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும், தோட்ட முதலாளியாக இருந்தாலும் தொழிலாளியாக இருந்தாலும் மக்கள் ஆதரவைப் பெற்றவரே ஆட்சி பீடம் ஏற முடியும். இதுதான் பார்லிமெண்டரி ஜனநாயகம்.
ஆளும் கட்சியும் எதிர்க் கட்சியும்:
ஆளும் கட்சியும், எதிர்க்கட்சிகளும் ஒன்றுடன் ஒன்று பகைத்துக் கொள்ளாமல், மாச்சரியங்களை வளர்த்துக் கொள்ளாமல் இருக்க வேண்டும். ஒரு வீட்டிலே இரண்டு குடித்தனக்காரர்கள் இருக்கலாம். பின் வீட்டவர் இருக்கலாம். பின் வீட்டவர் சைவமாக இருக்கலாம். முன் வீட்டவர் இறைச்சி சாப்பிடுவராக இருக்கலாம். ஆனால் அவர்களுக்குள் பகை வளர்த்துக் கொண்டால் இருவருக்கும் நிம்மதி இருக்காது.
இறைச்சியை யார் தின்பது? மனிதன் தின்பதா ? கழுகல்லவா தின்னும் என்று சைவ உணவு உண்பவரும், காய்கறியை யார் உண்பார்கள்? காக்கை, கொக்ககளல்லவா தின்னும் என்று இறைச்சி சாப்பிடுபவரும் ஒருவரையயாருவர் திட்டிக் கொண்டால் அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் மத்தியஸ்தத்திற்கு வர வேண்டியிருக்கும். இவ்வித சச்சரவு நாட்டில் நிகழ்ந்தால் அண்டை அயல் நாடுகள் புத்தி சொல்ல வரும். புத்தகங்களோடு அல்ல, பீரங்கிகளையும், துப்பாக்கிகளையும் கொண்டு வரும். அது நாட்டின் பாதுகாப்புக்குக் கேடு தரும்.
அரசியல் ஈடுபடுபவர்கள் அதற்கேற்றவாறு அரசியல் திட்டங்கள் இலக்கணங்கள், மரபுகள் ஆகியவைகளை அறிந்து அதில் ஈடு பட வேண்டும். இல்லாவிட்டால் நாடு சர்வாதிகாரிகளின் கையில் சாய்ந்து விடும் வல்லரசுகளின் கைக்குப் போய்விடும். ஜனநாயகம் ஆலமரத்தைப் போன்றது. அதன் விழுதுகள் போன்று தழைத்து ஆழ ஊன்றி வளர வேண்டும். அதுவே உண்மையான பாராளுமன்ற ஜனநாயகம் என்றார் அண்ணா. அண்ணாவின் பேச்சிலே இடையிடையே தோன்றிய நகைச்சுவையை மக்கள் கையயாலி எழுப்பி மகிழ்ச்சியோடு ரசித்தனர் . (தமிழ்முரசு 17.07.1965)
No comments:
Post a Comment