Tuesday, September 7, 2021

காலஞ்சென்ற பாரதியாரின் நூல்கள்...

 காலஞ்சென்ற பாரதியாரின் நூல்கள்.....


தென்னாட்டுத் தாகூரெனப் போற்றப்பட்டு வந்த ஸ்ரீமான் சி.சுப்பிரமணிய பாரதியின் மனைவியார் நமக்கு அனுப்பியுள்ள ஒரு நிருபத்தை மற்றோரிடத்தில் வெளியிட்டிருக்கின்றோம். காலஞ்சென்ற பாரதியாரின் பாடல்களும் வசனங்களும் ஒழுங்காக வெளியிட முயற்சி செய்யப்படுகிறது என்பதை அறிந்த நாம் பெரிதும் சந்தோ´க்கிறோம். இதற்காகப் பொருளதவி செய்யும் படி தமிழ்நாட்டாரை ஸ்ரீமான் பாரதியாரின் மனைவியார் கேட்கிறார். இவ் வேண்டுகோளுக்கு தமிழ் நாட்டார் எவ்விதத்திலும் பின்வாங்க மாட்டார் என்று நம்புகிறோம். 

ஸ்ரீமான் பாரதியார் ஐரோப்பாவிலேனும் அமெரிக்காவிலேனும் பிறந்திருப்பாராயின் அவருக்கு இது காலை எத்தனை ஞாபகச் சின்னங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கும் என்பதை நாம் கூற வேண்டுவதில்லை. தமிழ் நாட்டாரிட மிருந்து அவ்வளவு பெரிய நன்றியறிதலை நாம் எதிர் பார்க்கவில்லையே யாயினும் அவருடைய நூல்கள் நல்ல முறையில் வெளி வருவதற்கேனும் போதிய துணை புரிவார்கள் என்று நம்புகிறோம்.

‘நவசக்தி’ உப தலையங்கம் 1921, செப்டம்பர் 30)

ஸ்ரீமான் சி. சுப்பிரமணிய பாரதி மனைவி செல்லம்மா பாரதியின் கடிதம்...

தேசாபிமானப் பெருங் கவியான எனது அரிய கணவர் ஸ்ரீமான் சி. சுப்பிர மணிய பாரதியாரின் அகால மரணத்தைக் குறித்து, எனக்கு பல வகைகளில் அநுதாபம் காட்டிய எண்ணிறந்த நண்பர்களுக்குப் பகிரங்கமாக நன்றி கூறுவதற்காக நான் இந்த கடிதத்தை எழுதலானேன். தமிழ் நாட்டிலுள்ள பல சங்கத்தார்களும், சபையார்களும், நண்பர்களும் என்பால் அநுதாபம் காட்டிக் கடிதங்கள் அனுப்பியிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் தனித் தனிக் கடிதம் எழுதுவதற்கு, நான் தற்சமயம் இயலாதவளாயிருக்கிறேன். எனவே, இப் பத்திரிகை வாயிலாக அவர்கள் அனைவருக்கும் எனது நன்றியை அறிவித்துக் கொள்கிறேன்.

பாரதியார் எனக்குப் பெரிய ஆஸ்தியாக வைத்து விட்டுப் போயிருப்பது அவரது அரிய பாடல்களும், வசன காவியங்களுமேயாகும். அவற்றை யயல்லாம் அச்சிட்டு வெளியிடுவதற்குரிய ஏற்பாடுகளை நானும் எனது நண்பர்களும் செய்து வருகிறோம். இந்த முயற்சியில் எனக்கு பொருள் உதவி புரிவதாகச் சில நண்பர்கள் முன் வந்திருக்கிறார்கள். 

பாரதியாரின் நூல்களை அச்சிட்டு வெளியிடுவதற்கு நிதி சேர்க்குமாறு அங்கங்கே சில இடங்களில் பஞ்சாயத்துக்கள் (கமிட்டி) ஏற்பட்டிருப்பதாகவும் அறிகின்றேன். எனவே இந்த வி­யத்தில் எனக்கு உதவி செய்ய விரும்புவோரெல்லாம் அடியிற் கண்ட  எனது விலாசத்திற்குத் தங்கள் உதவிகளைத் தாமதமின்றி அனுப்புபவர்கள் தங்களால் இயன்ற சிறு தொகையை அனுப்பினால், புஸ்தகம் வெளியானவுடன், அந்தத் தொகைக்குரிய புஸ்தகங்களை அனுப்ப சித்தமாயிருக்கின்றேன்.

 (பாரதியார் பாடல்கள் அடங்கிய முதல் தொகுதி நவம்பர் மாத இறுதிக்குள் வெளிவரும்). 

இவ்வி­யத்தில் எனக்கு எவ்வளவு சிறிய உதவி செய்பவர்களும், எனது குடும்பத்திற்கு உதவி செய்தவர்கள் மட்டுமல்ல, ‘தமிழ் நாட்டிற்குப் புத்துயிர் அளிக்கக் கூடிய’ பாரதியாரின் அரிய பாடல்களும், பிறவும் உலகத்தில் வெளிவரச் செய்யும் பெரு முயற்சிக்குத் துணை புரிபவர்களும் ஆவார்கள். தாய் வாழ்க! வந்தே மாதரம்!

இங்ஙனம்

செல்லம்மாள்,

67, துளசிங்க பெருமாள் தெரு ( நவசக்தி, 30.9.1921)

(கவிதா மண்டலம், ஜனவரி 2011)

No comments:

Post a Comment