Thursday, November 4, 2021

ஆந்திராவில் இராவண விழா - கொளத்தூர் மணி உரை

 ஆந்திராவில் ‘இராவண விழா’


கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார் 


ஆந்திர மாநிலம் விசாகப் பட்டினத்தில் அகில இந்திய தலித் உரிமைகள் அமைப்பு ஆண்டுதோறும் இராவணன் விழாவை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு ‘இராவண விழா’ அக்டோபர் 9ஆம் தேதி விசாகப்பட்டினத்திலுள்ள ‘அம்பேத்கர் பவனில்’ எழுச்சி யுடன் நடந்தது. திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்பு விருந் தினராகப் பங்கேற்று, தமிழ் நாட்டில் பெரியார் நடத்திய இராமாயண எதிர்ப்பு இயக்கங்களின் வரலாறுகளையும் ‘இராமன்’ எரிப்புப் போராட்டம் மற்றும் ‘இராமலீலா’வுக்கு எதிராக நடத்திய ‘இராவண லீலா’ நிகழ்வுகளையும் விவரித்து விரிவாக ஆங்கிலத்தில் பேசினார். கழகத் தலைவர் உரையை தெலுங்கு மொழியில் பேராசிரியர் பிரக்ஞா மொழி பெயர்த்துக் கூறியபோது கூட்டத்தினர் பலத்த கரவொலி எழுப்பி வரவேற்றனர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரையின் சுருக்கம்.


“இராம லீலா நடைபெறும் தருணத்தில் இராவணனின் மேன்மையைக் குறித்து பேச இங்கு கூடியிருக்கும் நம்மிடையே மூன்று கேள்விகள் எழுகின்றன. முதலாவதாக, இராமாயணம் என்பது வெறுமனே ஒரு கற்பனைக் கதை மட்டுமே என்பதை புரிந்து ஏற்றுக்கொள்ளும் நாம் அதற்கு இந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய தேவை என்ன? இரண்டாவதாக, இந்து மதத்தில் உள்ள நூற்றுக்கணக்கான கடவுள்களில் இராமனும் ஒரு கடவுள். அவ்வளவுதான். அப்படியிருக்க இராமனை மட்டும் நாம் இவ்வளவு தீவிரமாக எதிர்க்கவும் விமர்ச்சிக்கவும் தேவை என்ன?


இறுதியாக, இராமாயணம் ஒரு கதை என்ற அளவில், அக்கதையின் ஒரு பாத்திரமாக உள்ள இராவணனை நாம் கொண்டாட வேண்டிய தேவை என்ன? இது குறித்து பெரியாரின் சிந்தனைகளை நான் இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஏனெனில் தமிழகத்தில் இராமாயண எதிர்ப்பு இயக்கத்திற்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. இராவணனைத் தங்கள் இனத்தைச் சேர்ந்தவனாக கொண்டாடும் மரபு உள்ளது. இவற்றிற்கு காரணமாக இருந்தது பெரியாரும், பெரியார் இயக்கமுமே. திராவிட மக்களின் மாண்பையும் பகுத்தறிவையும் முடமாக்கி அவர்களை மனிதத் தன்மையற்றவர்களாக ஆக்க ஆரியர்கள் பயன்படுத்திய கருவிகளில் முதன்மையான பிரச்சாரக் கதைகளாக இராமாயணமும் மகாபாரதமும் இருப்பதாக பெரியார் கருதினார். இராமாயணம் ஒரு கதையாக இருந்த போதும் நாம் அதை ஏன் எதிர்க்க வேண்டும் என்பதை அவர் குறிப்பாக விளக்குகிறார். இராமாயணம் மனு தர்மத்தை வலியுறுத்துகிறது. நம் மக்கள் அதனை பின்பற்றத்தகுந்த அளவில் அதில் எவ்வித தெய்வீகத் தன்மையோ, நீதியோ, கற்க வேண்டிய பாடமோ இல்லை. உண்மையில் இராமாயணம் என்பது ஆரிய பார்ப்பனர்கள் மேலானவர்கள் என்பதை நிரூபிக்க மட்டுமே உருவாக்கப்பட்டக் கதையாகும். அக்கதை நெடுகிலும் திராவிடர்களுக்கு எதிரான ஆத்திரமும் பழி உணர்ச்சியும் அழுத்தமாக உள்ளது. பல முக்கிய வரலாற்று உண்மைகளை இழிவுப்படுத்தி, ஆரிய – திராவிடப் போரை தங்களது சொந்த கற்பனைகளுடன் அது விளக்குகிறது. திராவிடர்கள் இராட்சதர்கள், அரக்கர்கள், அசுரர்கள், குரங்குகள் என்றே அழைக்கப்பட்டுள்ளனர். திராவிட மக்கள், தாங்கள் எவ்வாறு இழிவுப்படுத்தப்பட்டுள்ளனர் என்பதை அவர்கள் உணருமாறு செய்ய வேண்டியது மிக முக்கியமானது என்று பெரியார் கருதினார். மேலும் இராமன் ஒரு சூழ்ச்சி மிகுந்த நேர்மையற்ற ஒருவனாக, நம் சொந்த மக்களை அழிக்க நம்மவர்களான குகன், சுக்ரீவன், அனுமான், விபீடணன் போன்றவர்களை பயன்படுத்தியவனாக, அதாவது நம்  கையைக் கொண்டு நம் கண்ணைக் குத்துவதில் தேர்ந்தவனாகவே பெரியார் பார்க்கிறார். இந்தக் காரணங்களுக்காகவே இவற்றிற்கு எதிரான ஒரு கலகமாக பெரியார் இராவணனை முன்னிறுத்தத் தொடங்கினார்.


பெரியார் இராமனின் சூழ்ச்சி பாங்கையும் இராவணனின் உண்மையான வீரத்தையும் விளக்குகிறார். திராவிடர்களின் ஆயுதம் வேல். ஆரியர்களின் ஆயுதம் வில்லும் அம்பும். அதனால்தான் ஆரியர்கள் வேல், வேலாயுதம் எனும் பெயர்களை வைப்பதில்லை. தண்டபாணி, கோதண்டராமன் போன்ற பெயர்களை தான் வைப்பார்கள். வில் அம்பு என்பது எதிரியை மறைந்து இருந்து கொல்லும் வல்லமைக் கொண்டது. அந்த வகையில்தான் இராமன் வாலியை மறைந்திருந்து கொன்றான். இராமனுக்கும் வாலிக்கும் எந்த பகையும் இல்லை. ஆனால் நமது ஆயுதமான வேல் நேருக்கு நேர் நின்று எதிரிக்கு அருகில் சென்று அவனைக் கொல்லக் கூடியது. இதுதான் திராவிட போர் முறைக்கும் ஆரிய போர் முறைக்கும் உள்ள வேறுபாடு. அதே போல, தமிழர் போர் மரபில் ஒரு வழக்கம் உண்டு. எடுத்த உடனேயே நேரடியாக போரை தொடுத்துவிட மாட்டார்கள். முதலில் சென்று எதிரி நாட்டில் உள்ள ஆடு மாடுகளை கவர்ந்து வருவார்கள். அது ஒரு எச்சரிக்கை. இதற்கு ஆநிரை கவர்தல் என்று பெயர். இந்த வகையில்தான் இராவணன் சீதையைத் தூக்கிச் சென்றான். தனது எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தாடகையைக் கொன்று, தனது காதலை தெரிவித்த சூர்ப்பனகையின் மூக்கை அறுத்து அவமானப் படுத்திய இராமனுக்குப் பாடம் புகட்ட இராவணன் விரும்பினான். இராமன் ஒரு மன்னனின் மகனாக இருந்த போதும் அச்சமயத்தில் அவன் ஏதுவுமற்றவனாகவே இருந்தான். அதனால் அவனது மனைவியான சீதையை இராவணன் தூக்கிச் சென்றான்.


சென்றாலும், அவளை அசோக வனத்தில் மிகுந்த பாதுகாப்பாக, பெண் காவலர்கள் துணையுடன் வைத்திருந்தான். அதிலும், தனது அரச குடும்பத்திலிருந்து ஒருத்தியை, தனது சொந்த தம்பி மகளான திரிசடையை அவளுக்கு ஏவல் புரிய அனுப்பி வைத்தான். ஆக ஆநிரை கவர்தல் என்ற முறையிலேயே சீதையை இராவணன் கவர்ந்து சென்றான்


அது போல போர்க்களத்தில் இராவணன் மரணத் தருவாயில் இருக்கும் போது இராமன், இராவணன் அருகில் சென்று ஆட்சித் திறன் நுணுக்கங்களை கேட்டறியுமாறு இலட்சுமணனிடம் கூறினான் என்று வால்மீகி இராமாயணம் கூறுகிறது. இதைதான் பெரியார் சொல்கிறார். இராமாயணம் ஒரு கதையாக இருந்த போதும் திராவிடர்களின் மகிமையை அவர்களால் முழுமையாக மறைக்க முடியவில்லை என்கிறார்.


காங்கிரசில் இருந்த போதே பெரியார் தனது இராமாயண எதிர்ப்பைத் தொடங்கிவிட்டார் என்றுதான் கூற வேண்டும். பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கியது 1925-ஆம் ஆண்டில்தான். ஆனால் அவர் காங்கிரசில் இருந்த போதே, 1922-ஆம் ஆண்டு திருப்பூரில் நடைபெற்ற காங்கிரசு மாநாட்டில், தாழ்த்தப்பட்ட மக்களின் கோயில் நுழைவை வலியுறுத்திய தீர்மானத்தை முன்மொழிந்தார். அதனை கடுமையாக எதிர்த்தும் மறுத்தும் வைத்தியநாத அய்யர் என்ற ஒருவர் பேசிய போது, இராமாயணம், மனு சாஸ்திரம் போன்ற புனித நூல்கள் கூட இவற்றைத் தவறு என்றுக் கூறுவதாகக் குறிப்பிடுகிறார். உடனே பெரியார், “நான் மனித உரிமைகளின் அடிப்படையில் இந்தத் தீர்மானத்தை முன்மொழிகிறேன். அப்படியான மனித உரிமைகளை இந்த நூல்கள் மறுக்குமாயின், அந்த இராமாயணத்தையும் மனு சாஸ்திரத்தையும் எரித்து விட வேண்டியதுதான்” என்று மிக எளிமையாக, ஆனால் வலுவாக தனது எதிர்ப்பைப் பதிவு செய்கிறார்.


1926-ஆம் ஆண்டு தனது வார இதழான ’குடி அரசில்’ இராமாயண ஆராய்ச்சி என்ற தலைப்பில் பேராசிரியர் இ.மு.சுப்ரமணியப் பிள்ளை என்பவர் எழுதிய கட்டுரைத் தொடரை வெளியிடுகிறார்.


தொடர்ந்து இராமாயணத்தை விமர்சித்து பல வாதங்களை பெரியார் முன் வைக்கிறார். ஆரியர்களின் நாயகர்களான இராமனும் கிருஷ்ணனும் நமது நாயகர்களாக, ஆரியர்களால் உள்வாங்கப்பட்ட மன்னர்களாக இருக்கலாம் என்கிறார் பெரியார். வர்ணாசிரமம் என்பது மனிதர்களை வர்ணம் எனப்படும் நிறத்தின் அடிப்படையில் படிநிலைப்படுத்துவது. அப்படி பார்த்தால் இராமனும் கிருஷ்ணனும் ஆரியர்களின் நிறத்தில் இல்லை. அவர்கள் கருப்பர்கள். ஆசிரமம் என்பது வாழ்வின் நான்கு நிலைகளான பிரம்மச்சரியம், கிரகஸ்தம், வனப்பிரஸ்தம், சன்னியாசம். ஆனால் இராமனும் கிருஷ்ணனும் கிரகஸ்த நிலையிலேயே மரணம் அடைந்து விடுகின்றனர். அவர்கள் வனப்பிரஸ்தத்திற்கும் செல்லவில்லை.


சன்னியாசியாகவும் ஆகவில்லை. எனவே ஏன் அவர்கள் ஆரியர்களால் வெல்லப்பட முடியாத நமது மன்னர்களாக இருக்கக் கூடாது என்று பெரியார் கேள்வி எழுப்பினார்.


இட ஒதுக்கீட்டால் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். ஆன நமது அதிகாரிகளைப் பார்ப்பனப் பெண்கள் மணந்துகொள்வதின் வழியே அவர்கள் பார்ப்பனர்களுக்கு மட்டுமே பயன்படக் கூடியவர்களாய் மாற்றப்படுவதில்லையா?


ஜவகர்லால் நேரு உட்பட பலரும் மகாபாரதம் என்பது ஆரியர்களுக்குள் நடந்த போர் என்றும் இராமாயணம் என்பது ஆரியர்களுக்கும் திராவிடர்களுக்கும் நடந்த போர் என்றும் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில் பெரியார் இராமாயணத்தை மிகக் கடுமையாக எதிர்த்ததற்கு காரணம் உள்ளது. தமிழ் நாட்டுப் பார்ப்பனர்களின் நாயகராக இன்றளவிலும் போற்றப்படும் இராஜகோபாலாச்சாரியார், “பார்ப்பனர்களுக்கு சிக்கல் வந்தால் இராமாயணத்தை புரட்டிப் பாருங்கள், வழி கிடைக்கும்” என்று பலமுறை குறிப்பிட்டுள்ளார். அந்த அளவுக்கு


பார்ப்பனர்களுக்கான நூலாக அது இருப்பதால்தான் நான் அதனை ஆராய முற்படுகிறேன் என்கிறார் பெரியார். தங்கள் மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்ள பார்ப்பனர்கள் இராமாயணத்தைப் பயன்படுத்தினால் அவர்களின் மேலாதிக்கத்தை தகர்க்க நான் இராமாயணத்தை விமர்சிக்கிறேன் என்றார் பெரியார்.


அதன் தொடர்ச்சியாக குழந்தைகளுக்கு இராவணன், இரணியன், மேகநாதன் என்று ஆரியர்களால் அரக்கர்கள் என்று அறிமுகப்படுத்தப்பட்டவர்களின் பெயர்களை குழந்தைகளுக்குச் சூட்டத் தொடங்குகிறார். தொடர்ந்து ஆரிய எதிர்ப்பின் அடையாளமாக புத்தரின் பெயர்களான கவுதமன், ராகுலன், சித்தார்த்தன் போன்ற பெயர்களையும் சூட்டுகிறார். இன்று வரை அந்த மரபு தமிழ்நாட்டில் தொடர்கிறது.


நான் முன்பே குறிப்பிட்டதைப் போல இராமாயணம் குறித்து பெரியார் தொடர்ந்து எழுதுகிறார். இராமாயண குறிப்புகள், வால்மீகி இராமாயண சம்பாஷணைகள் என்று ஆய்வு நூல்கள் வெளிவருகின்றன. இந்தப் பிரச்சாரங்களினால் ஈர்க்கப்பட்டு, சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்த பேரா. பூர்ணலிங்கம் பிள்ளை என்பவர் 1928-ஆம் ஆண்டு ‘சுயஎயயே – வாந பசநயவ’ என்ற ஆங்கில நூலை எழுதி வெளியிடுகிறார். பின்னர் அது தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டது.


இதற்கிடையே பல முறை இராமாயணம் எரிக்கப்பட வேண்டிய ஒரு நூல் என்பதை பெரியார் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார்.


இந்த குரல் வலுக்க வலுக்க, இதற்கு எதிர்ப்பும் எழுகிறது. 1943-ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கும் நாவலர் சோமசுந்தர பாரதியார், பேராசிரியர் இரா. பி. சேதுப் பிள்ளை போன்ற புகழ்பெற்ற தமிழ் அறிஞர்களுக்கும் இடையே “எரிக்கப்பட வேண்டியதா இராமாயணம்” என்ற தலைப்பில் பல விவாதங்கள் நடந்தன. சுயமரியாதை இயக்கத்தின் சார்பில் வாதிட்டவர் பின்னர் தமிழக முதல்வரான சி. என். அண்ணதுரை ( அண்ணா ) யாவார்.


1944-ஆம் ஆண்டு “இராமாயண பாத்திரங்கள்” என்ற தலைப்பில் இராமனின் உண்மை முகத்தைத் தோலுரித்தும், இராவணனின் மேன்மையை விளக்கியும் நூல் ஒன்றினை பெரியார் எழுதி வெளியிடுகிறார். இதில் சிறப்பு என்னவெனில், இந்த நூலில் மேற்கோள் காட்டப்பட்டவை அனைத்தும் வால்மீகி இராமாயணத்தில் இருந்து எடுக்கப்பட்டவை மட்டுமே. ஆரியர்கள் போற்றும் நூலிலிருந்தே அவர்களுக்கு எதிரான வாதங்களை முன் வைத்தார்.


1944-ஆம் ஆண்டு கான்பூரில் நடைபெற்ற அகில இந்திய பிறப்படுத்தப்பட் டோர் மாநாட்டில் பங்கேற்ற பெரியார் இராமாயணத்தை விமர்சித்து நீண்ட உரை ஆற்றுகிறார். அவரது உரை முடிந்த உடன் கூடியிருந்த மக்கள், “இராவணாக்கி ஜே“ என்று முழக்கமிடுகின்றனர்.


இந்தத் தொடர் பிரச்சாரங்களினால், தமிழ் நாட்டில் சாதாரண மக்களிடம் கூட இராவணன் என்ற பெயருக்கான பிம்பம் முற்றிலுமாக மாறுகிறது. சுய மரியாதை இயக்ககத்தின் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், இராவணனின் மேன்மையைப் போற்றி பா ஒன்றை படைக்கிறார். அதனால் ஈர்க்கப்பட்ட புலவர் குழந்தை 1946- ஆம் ஆண்டு இராவணனை காவியத் தலைவனைக் கொண்டு “இராவண காவியம்” என்ற ஓர் காப்பியத்தைப் படைக்கிறார். 12-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு தமிழில் வெளியான காப்பிய வகை நூல் இது மட்டுமே.


இந்த நூல் 1948-ஆம் ஆண்டு தடை செய்யப்படுகிறது. அதே ஆண்டு ஈரோட்டில் நடைபெற்ற திராவிடர் கழகத்தின் 19-ஆவது மாநில மாநாட்டில் இராமாயண எதிர்ப்பு இயக்கத்தைத் தொடங்குவதான அறிவிப்பு ஒரு தீர்மானமாக நிறைவேற்றப்படுகிறது.


1954-ஆம் ஆண்டு இராமனை கேலி செய்து “இராமாயணம்” என்ற தலைப்பிலான நாடகம் ஒன்றை எம். ஆர். இராதா மேடையேற்றுகிறார். இந்த நாடகத்தில் வால்மீகி இராமாயணத்தின் வரிகளை நேரடியாக மேடையிலேயே வாசித்து, அந்த வரிகளுக்கு ஏற்ப இராமன் ஒரு கையில் சோமபானமும் மறு கையில் மாமிசத்தையும் உண்டவாறு மேடையில் நுழைவார். பின்னர், பரத்வாஜரின் ஆசிரமத்திற்கு விருந்துண்ண சென்ற இராமனுக்கு பரத்வாஜர் கொழுத்த இளம் பசுங்கன்றின் மாமிசத்தை சமைக்கச் செய்வார். இதனை விளக்கும் வரிகளும் வால்மீகி இராமாயணத்தில் இருந்து வாசிக்கப்படும். இராமன் மாட்டுக்கறி உண்ணும் காட்சி மேடையில் அரங்கேறும். அவர் அந்த நாடகத்திற்கு இட்டத் தலைப்பு இராமாயணமாக இருந்த போதும், அதைத் தாங்கிக் கொள்ள இயலாதவர்கள் அதனை “கீமாயணம்” என்று விமர்சித்தனர்.


இந்நாடகத்திற்கு மக்கள் பெருங்கூட்டமாக எழுச்சியுடன் வந்ததைத் தொடர்ந்து இந்நாடகத்திற்கெனவே “தமிழ்நாடு நாடகக் கட்டுப்பாடு சட்டம் – 1954“ என்ற ஒரு புதிய சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றியது. இந்நாடகத்திற்காகவே எம். ஆர். இராதா அவர்கள் 54 முறை கைது செய்யப்பட்டுள்ளார். அப்படி அவர் கைது செய்யப்படும் பல நேரங்களில், ஒரு கையில் சோமபானம் கொண்ட மொந்தையையும், மறு கையில் மாமிசத்தையும் ஏந்தியவாறு, இராமன் வேடத்திலேயே எம். ஆர். இராதா செல்வார். “இராமன் செல்ல வேண்டிய இடத்திற்குதான் செல்கிறான்” என்று கூறியவாறே அவர் காவலர்களுடன் செல்வார். அரசின் இந்த ஒடுக்குமுறையைக் கண்டு வெகுண்ட பெரியார், தனது அனைத்து நிகழ்ச்சி களையும் இரத்து செய்து விட்டு சென்னையில் ஒரு மாதம் முழுவதும் இராமாயண எதிர்ப்புப் பிரச்சாரத்தை மட்டுமே மேற்கொண்டார். இந்த நிலையில் 1954-ஆம் ஆண்டு இராஜ கோபாலச்சாரி “சக்கரவர்த்தி திருமகன்” என்றதலைப்பில் தொடர் ஒன்றை எழுதத் தொடங்குகிறார். அவர் பதவியை இழக்கும் போதெல்லாம் இவ்வாறு ஏதாவது எழுதுவது வழக்கம். 1939-ஆம் ஆண்டு இதே போன்று முதலமைச்சர் பதவியை இழந்தபோது ’வியாசர் விருந்து’ என்று மகாபாரதத்தைக் குறித்து எழுதினார்.


 


பின்னர் 1954-இல் சக்கரவர்த்தித் திருமகன் என்று இராமாயணத்தைப் பற்றி எழுதத் தொடங்குகிறார். இதற்கு எதிர்வினையாக (பின்னர் தமிழத்தின் முதல்வரான) கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் “சக்கரவர்த்தியின் திருமகன்” என்ற தலைப்பில் கிண்டலாக எழுதத் தொடங்குகிறார். இராஜகோபாலாச்சாரியின் தந்தையின் பெயர் சக்கரவர்த்தி ஆகும். ஆக, இராமனையும் இராஜ கோபாலாச்சாரியையும் ஒரு சேர குறிக்கும் வகையில் அந்தத் தலைப்பை அவர் வைத்தார். பின்னர் கருணாநிதி “பரதாயணம்” என்றத் தலைப்பில் மற்றொரு தொடரையும் எழுதினார். நாளுக்கு நாள் இராமாயண எதிர்ப்புப் பிரச்சாரம் வலுபெற்று வந்த நிலையில் 1956-ஆம் ஆண்டு புத்தரின் 2500-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, இராமர் பட எரிப்புப் போராட்டத்தைப் பெரியார் அறிவித்தார். பெரியார் ஒரு நாத்திகராக அறியப்படுகிறார். அது உண்மைதான். அவர் கடவுள் மறுப்பாளர்தான்.


ஆனால் பெரியார் வெறுமனே நாத்திகர் மட்டுமல்ல. அவரது முதன்மைக் கொள்கை ஜாதி ஒழிப்பே. “நான் ஜாதியை ஒழிக்க வேண்டும் என்றேன். அவர்கள் அது மதத்துடன் இணைந்தது என்றார்கள். அப்படி ஆண்ட மதத்தை ஒழிக்க வேண்டும் என்றேன். அது வேதங் களினால் உருவாக்கப்பட்டது என்றார்கள். நான் வேதங்களை ஒழிக்க வேண்டும் என்றேன். அது கடவுளால் அளிக்கப்பட்டது என்றார்கள். எனவே நான் கடவுளை கேள்விக்கு உள்ளாக்க வேண்டி வந்தது. கடவுளை அழித்தால்தான் ஜாதி ஒழியு மெனில் அந்த கடவுளை நான் அழிப்பேன்” என்கிறார் பெரியார்.


 


“இந்நாட்டில் மதம் என்பது மக்களை முட்டாளாக்கி, அவர்களை அடிமைப்படுத்தவே உதவுகிறது. எனவே நான் இந்த இந்து மதத்தை ஒழிப் பதையே என் குறிக்கோளாகக் கொண்டுள்ளேன்” என்கிறார் பெரியார். இந்த அடிப்படையிலேயே பெரியார் இராமர் எரிப்புப் போராட்டத்தை அறிவிக்கிறார். வெறுமனே நாத்திகப் போராட்டமாக அல்ல. இதற்கு 3 ஆண்டுகளுக்கு முன்னர்தான், இதே போன்றதொரு புத்தர் பிறந்த நாளில், விநாயகர் சிலை உடைப்புப் போராட்டத்தை அறிவித்து அதை செய்தும் காட்டியிருந்தார் பெரியார். எனவே இராமர் பட எரிப்புப் போராட்ட அறிவிப்பு பெரும் கொந்தளிப்பையும் எழுச்சியையும் ஏற்படுத்தியது. ஏறத்தாழ 6000 பேர் இந்தப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.


1959-ஆம் ஆண்டு குடி அரசுக் கட்சி (Republican Party) வட இந்தியாவில் பல இடங்களில் பெரியாரின் கூட்டங்களை நடத்தியது. இவற்றின் இறுதிக்கூட்டம் கான்பூரில் நடைபெற்றது. ஏற்கனவே 1957-ஆம் ஆண்டு பெரியார் எழுதிய “இராமாயண குறிப்புகள்” நூல் “சுயஅயலயயே – ய கூசரந சுநயனேைப” என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிப் பெயர்த்து வெளியிடப்பட்டிருந்தது. அந்த ஆங்கில நூலினை லாலாபாய் சிங் யாதவ் என்பவர் “சச்சி இராமாயண்” என்ற தலைப்பில் இந்தியில் மொழிப் பெயர்த்து அம்மாநாட்டில் வெளியிடுகிறார். அந்த மாநாட்டிலேயே 3000 படிகள் விற்றுத் தீர்ந்தது. 1970-ஆம் ஆண்டு இந்நூல் உத்தர பிரதேசத்திலும் தில்லியிலும் தடை செய்தனர்.


பெரியார் இறந்து 3 ஆண்டுகளுக்குப் பிறகு 1976-ஆம் ஆண்டு பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17 அன்று இந்நூல் மீதான தடை உச்ச நீதிமன்றத்தால் இரத்துசெய்யப்பட்டது.


பெரியார் தொடர்ந்து இராமாயணத்தை விமர்சிப்பதைக் கண்டித்து பெரியார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் நாட்டு சட்டமன்றத்தில் காங்கிரசு கட்சியினர் கண்டனம் எழுப்புகின்றனர். இதனைத் தொடர்ந்து இராமாயண எதிர்ப்புப் பிரச்சாரத்திற்கு தடை விதிக்க அரசு முடிவு செய்கிறது. இதனை அறிந்த பெரியார், “நீங்கள் எங்கள் பிரச்சாரத்தைத் தடை செய்வீர் களானால், உண்மையில் அரசியல் சட்டத்திற்கு எதிராக உள்ள இராமாயணத்தைதான் நீங்கள் தடை செய்ய வேண்டும். அரசியல் சட்டம் அனைவருக்கு சம உரிமையும் வாய்ப்பும் வழங்க வேண்டும் என்று கூறுகிறது.


ஆனால் இராமாயணமோ சமத்துவத்திற்கு முற்றிலும் எதிரானதாக உள்ளது. எனவே இராமாயணத்தை தடை செய்யாமல், இராமாயணத்தை நான் விமர்சிப்பதற்காக நடவடிக்கை எடுப்பீர்களானால்… இதோ நான் அதை எரிக்கவே போகிறேன்” என்று அறிவிக்கிறார். 1966ஆம் ஆண்டு மைலாப்பூரில் அய்யாயிரம் பேருக்கு மேலாக கலந்துகொண்ட நிகழ்வில் இராமாயண எரிப்புப் போராட்டம் நடைபெற்றது.


1971ஆம் ஆண்டு பெரியார், தமிழகத்தின் முக்கிய நகரமான சேலத்தில் மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் ஒன்றை நடத்தினார். அந்த ஊர்வலத்தில், வால்மீகி இராமாயணத்தில் கூறியபடி, ‘அசுவமேதயாகம்’ என்ற (குதிரைகளுடன் தசரதன் மனைவியர் உறவுகொண்டு இராமன் பிறந்தான் என்று வால்மீகி இராமாயணம் கூறுகிறது) முறையில் இராமன் பிறந்ததையும், இந்து கடவுள்களின் புராணங்கள் கூறும் ஆபாச பிறப்புகளையும் படங்களாக சித்தரித்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன.


அப்போது சில ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் (ஹிந்து மிஷன் ) ஊர்வலத்தின்மீது செருப்பு வீசினர். உடனே பெரியார் தொண்டர்கள் அந்த செருப்பை வீசியவர் மீது திருப்பி வீசாமல், ஊர்வலத்தில் எடுத்து வரப்பட்ட இராமன் படத்தின் மீது அடித்துக் கொண்டே ஊர்வலத்தில் வந்தனர். மாநாட்டின் இறுதியில் இராமனின் 10 அடி உயர உருவ பொம்மை எரிக்கப்பட்டது. அந்த நிகழ்வு இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தது.


அதே 1971-ஆம் ஆண்டு பெரியார் ஓர் அறிவிப்பை வெளியிடுகிறார். “15 நாட்களுக்குள் இராமாயணத்தை தடை செய்யவில்லை எனில், எங்கள் ஆட்கள் குடிகார இராமனாகவும் விபச்சாரி சீதையாகவும் வேடமிட்டு மாநிலமெங்கும் சென்று சூத்திர சம்பூகன் எவ்வாறு வஞ்சகமாக கொல்லப்பட்டான் என்பதை நடித்துக் காட்டுவார்கள்” என்று அறிவித்தார்.


இதே போன்றதொரு போர்க் குணத்துடன் இருந்தவர்தான் பெரியார். அவரைத் தொடர்ந்து திராவிடர் கழகத்திற்கு தலைமையேற்ற மணியம்மை யார் அவர்கள். 1974ஆம் ஆண்டு மணியம்மையார் அவர்கள் பிரதமர் இந்திரா காந்தி அவர்களுக்கு ஓர் கடிதம் எழுதினார். “இராம லீலா என்ற பெயரில் எங்கள் திராவிடர் மன்னர்களான இராவணன் மற்றும் இந்திரஜித் ஆகியோரின் உருவ பொம்மைகள் எரிக்கப்படுகின்றன. இதனை உடனே தடை செய்ய வேண்டும். ஏனெனில் இது திராவிடர்களாகிய எங்களை இழிவுப்படுத்துவதாகவும் எங்களை இரண்டாம்தர குடிமக்களாக சிறுமைப் படுத்துவதாக வும் உள்ளது” என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடு கிறார். ஆனால் அந்த ஆண்டு அக்டோபர் 18-ஆம் நாள் இராம லீலா இந்தியாவெங்கும் கொண்டாடப் படுகிறது. இதற்கு எதிர்வினையாக, அதே ஆண்டு டிசம்பர் 24-ஆம் நாள், பெரியாரின் முதல் நினைவு நாள் அன்று நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் “இராவண லீலா” என்ற பெயரில் இராமன், இலட்சுமணன் மற்றும் சீதையின் பொம்மைகள் எரிக்கப்பட்டன. அதற்காக திராவிடர் கழகத்தின் முன்னணி பொறுப்பாளர்கள் பலர் கைது செய்யப்பட்டனர்.


அதன் பின்னர் 1996-ஆம் ஆண்டு திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து வந்து தொடங்கப்பட்ட பெரியார் திராவிடர் கழகம் என்ற பெரியார் இயக்கம் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் இராவண லீலாநடத்தியது. எதிர் வரும் அக்டோபர் 12 அன்று, தோழர் இராமகிருட்டிணன் தலைமையிலான பெரியார் இயக்கமான தந்தை பெரியார் திராவிடர் கழகம், சென்னை சமஸ்கிருத கல்லூரியின் வாசலில் இராவண லீலா நடத்த உள்ளது. இராமன், இலட்சு மணன் மற்றும் சீதையின் பொம்மைகள் எரிக்கப்பட உள்ளன. அதுவும் ஆரியர்களின் அடையாளமாக உள்ள சமஸ்கிருதக் கல்லூரியின் வாசலில்.


தற்போதைய காலக்கட்டத்தில் இராமனின் உண்மை முகத்தைக் காட்டவும் இராவணனைப் போற்றவும் நமக்கு முன்னெப்போதையும் விட அதிக காரணம் உள்ளது. இவை இரண்டுமே கற்பனை கதாபாத்திரங்கள் என்பதை நாம் அறிவோம். இராமாயணம் என்பது நாம் சிறு வயதில் படித்த கற்பனை தேவதைக் கதைகளை போன்ற ஒன்றேயன்றி வேறு இல்லை என்பதையும் நாம் அறிவோம். ஆனால் நாம் இராவணனை போற்ற வேண்டிய காரணம் என்ன?


இராமாயணத்தை நமக்கு சொல்பவர்கள் நமது சிந்தனையில் எதனை திணிக்க விரும்புகிறார்கள்? ஒரு காலத்தில் இராமனின் படங்கள் அவனது துறவு கோலத்தைக் குறிப்பதாக இருக்கும். காவியுடைஅணிந்து மனைவி சீதையுடனும் தம்பி இலட்சுமணனுடனும் காட்டுக்குச் செல்லும் இராமனின் படங்களையே நாம் அதிகமாக பார்த்திருப்போம்.


அதற்கடுத்தக் காலக்கட்டத்தில் இராமன் பட்டாபிஷேகப் படங்கள் அதிகமாக வெளியாயின.


தற்போது இந்துத்துவ அமைப்புகள் பெரும்பாலும் பயன்படுத்தும் இராமனின் படங்கள் போர்வீரன் கோலத்தில் கையில் வில்லேந்தியவையாக உள்ளன.


இப்போது கடவுளாக அல்லாமல் போர் வீரனாக இராமன் முன்னிறுத்தப்படுகின்றான்.


ஒரு காலத்தில் இந்து மதம் பக்தியை போதித்தது. அதற்கு துறவு இராமன் பயன்பட்டான். அதற்கடுத்தக் காலக்கட்டத்தில் ஆரியர்கள் வெற்றி பெற்றவர்கள் என்பதையும் திராவிடர்கள் தோற்றவர்கள் என்பதை யும் குறிக்க பட்டாபிஷேக இராமனின் படங்கள் பயன்பட்டன. தற்போது தனது எதிரிகளை அழித்தொழிக்கு போர் வீரனாக அவனை முன்னிறுத்துகின்றனர்.


யார் அவனது எதிரிகள்? : இராட்சர்கள் – யார் இக்காலத்திய இராட்சர்கள்? இசுலாமியர்கள், சூத்திரர்கள் மற்றும் தலித்துகள். எல்லா முஸ்லிம்களும், எல்லா சூத்திரர்களும் எல்லா தலித்துகளுமா? இல்லை. எதிர்த்து நிற்கும் முஸ்லிம்கள், சூத்திரர்கள் மற்றும் தலித்துகள். அனுமான்களும் உள்ளனர். அடிபணியும் சூத்திரர் களும் தலித்துகளும் முஸ்லிம்களும். அனுமன் எவ்வாறு இராமனின் காலடியில் உள்ளானோ அவ்வாறோ நமக்கு நமது இடத்தை காட்ட அவர்கள் விரும்புகிறார்கள். அப்துல் கலாம் போன்று பார்ப்பனிய மேலாதிக்கத்திற்கு அடிபணிந்து செல்பவர்களை அவர்கள் போற்றுகிறார்கள். பார்ப்பனிய மேலாதிக்கத்தை எதிர்ப்பவர்கள் அனைவரையும் அவர்கள் இராட்சசர்களாக, அரக்கர்களாக, தேச விரோதிகளாக முன்னிறுத்து கிறார்கள். அதிலும் பி.ஜே.பி அரசு பதவியேற்றப் பிறகு இது மிகுதியாக அதிகரித்துள்ளது.


தற்போதைய மோடி அரசு பதவியேற்ற பிறகு எவ்வளவு முனைப்புடன் சமஸ்கிருதத்தைத் திணிக்கிறது என்பதை நாம் பார்த்து வருகிறோம்.


ஆசிரியர் தின விழாவை குரு உத்சவ் என்பதும் பள்ளிகளில் குரு பூஜைகள் நடத்தச் சொல்வதும் நடக்கிறது. இது ஓர் எடுத்துக் காட்டு மட்டுமே.


இவ்வாறு பல வழிகளில் சமஸ்கிருதம் திணிக்கப்படும்


அதே வேளையில், இந்த இந்துத்துவ அரசு ஆரியர்கள் மேலானவர்கள் என்றும் திராவிடர்கள் கீழானவர்கள் என்றும் தொடர்ந்து மறைமுகமாகவும் நேரடியாகவும் வலியுறுத்தி வருகிறது.


இந்த நிலையில் இராவணனை நாம் உயர்த்திப் பிடிக்க வேண்டிய தேவை முன்னெப்போதையும் விட தற்போது அதிகரித்துள்ளது. அது இராவணன் என்ற ஒரு கதா பாத்திரத்திற்காக அல்ல. மாறாக, திராவிடர்  களாகிய நமது சுயமரியாதையை நிறுவுவதற்காக.


இராவணன், மகிசாசுரன் என்ற திராவிடர் இன பாத்திரங்களை கொடூரமானவர்களாக சித்தரித்து அதன் மூலம் நமது சுயமரியாதைக்கு அவர்கள் இழுக்குத் இழைப்பதற்கு எதிராக… நமது வளமான திராவிட மரபை நினைவுகூரும் விதமாக… நாம் இதனைச் செய்ய வேண்டிய தேவை உள்ளது.


ஓணம் பண்டிகைக்கு மாற்றாக வாமன ஜெயந்தியை பா.ஜ.க முன்னிறுத்திய போது, கேரளாவின் முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் இருவருமே அதனை எதிர்த்து “நாங்கள் எங்கள் திராவிட மரபை (னுசயஎனையைே டுநபயஉல) விட்டுக் கொடுக்க மாட்டோம். வாமன ஜெயந்தி என்று இதற்கு பெயர் சூட்ட முனைவதை கடுமையாக எதிர்க்கிறோம்” என்று அறிக்கை வெளியிட்டனர். இத்தகைய ஒன்றிணைந்த செயல்பாட்டினையே நாமும் மேற் கொள்ள வேண்டும் என்று கூறி விடைபெறுகிறேன்.


விழா நிகழ்ச்சி : ‘இராவணாடே மகாநீயுடு’ என்ற பெயரில் நடத்தப்பட்ட இராவண விழாவுக்கு அகில இந்திய தலித் உரிமைக்கான அமைப்பின் மாவட்ட தலைவர் கே. வெங்கட்டரமணா தலைமை தாங்கினார். ஆந்திர பல்கலைக்கழக மானுடவியல் துறைத்தலைவரும், மிகச் சிறந்த கருத்தாளர் பேச்சாளருமான முனைவர் பி.டி சத்யபால், விசாகப்பட்டினம் எஃகு தொழிற்சாலை துணை மேலாளர் முனைவர் மாதுரி சிறீனிவாசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெண்கள் முன்னணி அமைப்பான ‘அய்த்வா’வின் ஆந்திர மாநில தலைவர் வி. பிரபாவதி, ஆந்திர மனித உரிமைக் கழக மாவட்ட தலைவர் கே. சிறீதர மூர்த்தி, ‘முல்னிவாஸ்சங்’ (மண்ணின் மைந்தர்கள் சங்கம்) அமைப்பைச் சார்ந்த இரவி சித்தார்த், கல்யாண் ராவ், நாத்திகர் மய்யத்தைச் சார்ந்த இலாசரஸ் ஆகியோர் நிகழ்வில் உரை யாற்றினர்.


– நமது செய்தியாளர்


பெரியார் முழக்கம் 27102016 இதழ்

No comments:

Post a Comment