Wednesday, December 1, 2021

மலேசியத் திராவிடர் கழக 70 ஆம் ஆண்டு பேராளர் மாநாடு

 இந்த மலேசியத் திராவிடர் கழக 70 ஆம் ஆண்டு பேராளர் மாநாடு மீண்டும் தனிச்சிறப்பைப் பெற்றிருக்கிறது. 1946 இல் தொடங்கப்பட்ட மலேசியத் திராவிடர் கழகத்தில் 1965 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற பேராளர் மாநாடுகளில், தேசியத் தலைவர்களாக இருந்தவர்கள், 

நா.பள்ளிகொண்டான்,

பழ. அம்பலவாணர்,

ஈப்போ ரெ.ரா.அய்யாறு,

கோடையிடி ஜி.குமாரசாமி,

கா.பா.சாமி,

கோலக்கிள்ளான் ஆ.சுப்பையா,

ப.மணியரசு,

மீண்டும் ஜி.குமாரசாமி,

1965 இல் ஈப்போ இரா.சு.மணியம் அவர்கள் வரை 

தங்கள் பதவி காலம் முடிந்தவுடன் அவர்கள் பதவி விலகி அடுத்தவர்களுக்கு வழிவிட்டார்கள். 

2010 இல் தலைமைப் பொறுப்பிற்கு வந்த தேசியத்தலைவர் பி.எஸ்.மணியம் அவர்கள் இரண்டு முறை மட்டும் இப்பொறுப்பில் இருக்க விரும்புவதாகவும் அதற்குள்ளாக கட்டிடத்தை மீட்டுத் தருவதாகவும் உறுதி அளித்தார். அந்த வகையில் கட்டிட மீட்புப் பணியை முழுமையாக செய்து,  தற்போது தமது தலைமைப் பதவியையும் வருங்காலத் தலைமுறையினர்களுக்கு பெருந்தன்மையோடு விட்டுக் கொடுத்துள்ளார். அத்தகைய ஒரு சிறப்பை இந்த மாநாட்டிற்கு தேசியத் தலைவர் பி.எஸ்.மணியம் அவர்கள் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள்.

1929 இறுதியில் பெரியார் மலாயா நாட்டிற்கு வந்து சென்ற பின் நம் நாட்டின் பல பகுதிகளில் திராவிட இயக்கங்கள் தொடங்கப்பட்டன என்றாலும், செந்தூல் பகுதியிலுள்ள மூங்கில்குத்து கம்பம் பகுதியில் தொடங்கப்பட்ட குடிஅரசு வாசக சாலை முதன்மையானது. கோலாலம்பூரில் இயங்கிவந்த சிலாங்கூர் சுயமரியாதை சங்கம், கோலாலம்பூர் பகுத்தறிவுச் சங்கம், தமிழர் சீர்திருத்த சங்கம் ஆகிய இயக்கங்கள் ஒன்றாக இணைந்து செயல்பட முன்வந்த போது, தந்தை பெரியாரின் கருத்துரையின் பேரில் கோலாலம்பூர் திராவிடர் கழகம் என்ற பெயரில் 4.8.1946 இல் ஒன்றிணைக்கப்பட்டது. தந்தை பெரியார் அவர்கள் அப்போது தமிழர் சீர்திருத்த சங்கத்தின் தலைவராக இருந்த ஆ. அங்கமுத்து மற்றும் பொதுச்செயலாளர் அ.மருதமுத்து அவர்களுக்கு எழுதிய மடல் இது.

மலாயா நாடு முழுவதும் உள்ள திராவிடர் கழகத் தோழர்களை ஒருங்கிணைக்கும் வகையில் கோலாலம்பூர் திராவிடர் கழகத்தார் எடுத்த முன் முயற்சியில் 1947 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 15, 16, 17 ஆகிய நாட்களில் கோலாலம்பூர் பிரின்ஸ் ஆப் வேல்ஸ் ஆங்கிலப் பாடசாலையிலும், நகர மண்டபத்திலும் பந்திங் நா. பள்ளிகொண்டான் தலைமையிலும் ஈப்போ ரெ.ரா. அய்யாறு தலைமையிலும் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அதன் பயனாக அகில மாலாயா மத்திய திராவிடர் கழகம் தோற்றுவிக்கப்பட்டது.

1929 இல் பினாங்கில் ஐக்கிய இந்தியர் பசனைக்குழு என்ற குழு ஏற்படுத்தப்பட்டு ஏற்கனவே இருந்த ஐக்கிய இந்தியர் சங்கத்தின் கீழ் செயல்பட்டது.  திரு. ஏ.என்.இராமசாமி அவர்கள் பினாங்கில் முதன் முதலாக சுயமரியாதை சங்கம் ஏற்படுத்துவதற்கு முயற்சி எடுத்தவர். இவ்வியக்கம் சீர்திருத்தக் கருத்தக் கருத்துக்களையும் புராண எதிர்ப்புப் பாடல்களையும் பாடி பரப்புரை செய்து வந்தது.

இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்த நிலையில் ஈப்போ நகரில் கழகத் தலைவர்கள் ரெ.ரா. அய்யாறு அவர்கள் தலைமையில் 1950 இல் மீண்டும் புத்துயிர் பெற்றது.

ஈப்போ ஸ்டார் அச்சக உரிமையாளரும் ம.தி.க. தேசியப் பொருளாளராகவும் இருந்த திரு. த.வ.மு. மகாலிங்கம் அவர்கள் தம் முயற்சியில் இனமணி என்ற இதழைத் தொடங்கினார்.

இதன் பின்னர் கழக அதிகாரப் பூர்வ ஏடாக இரா. மணிமாறன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு கொள்கை முரசு 1969 இல் தொடங்கப்பட்டது. இதற்கான வெளியீட்டுக் குழுவில் கே.ஆர்.இராமசாமி அவர்கள் தலைவராகவும், அ.மருதமுத்து, ஆர்.எஸ்.பரசுராமன், திரு.ப.செழியன், திரு.ரெ.செந்தூர் வாசன் போன்றோர் உறுப்பினர்களாகவும் இருந்து பணியாற்றினர். 

இத்தகை நெடிய வரலாற்றுக்குச் சொந்தமான மலேசியத் திராவிடர்க் கழகத்தில் முதல் துணைத் தலைவராக 1947 இல் து. இலட்சுமணன் இருந்திருக்கிறார். இவர் 1938 இல் தமிழ் நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்புப் போரில் கலந்து கொண்டு ஏழரை மாதம் சிறை தண்டனை பெற்றவர். மலேசியாவிலிருந்து இருவரும் சிங்கப்பூரிலிருந்து மூவரும் சிறைதண்டனை பெற்றனர்.

1948 முதல் 1950 வரை துணைத் தலைவராக தமிழ்த் தாத்தா ச.சா.சின்னப்பனார் இருந்திருக்கிறார். சிறந்த தமிழ்ப் புலவர். மலாயாப் பெரியார் அ.சி.சுப்பையா அவர்கள் எழுதிய சுந்தரமூர்த்தி நாயனார் கிரிமினல் கேஸ் என்ற நூலுக்கு சாற்றுக் கவி வழங்கியவர். கழகத் தோழர்களுக்கு திருக்குறள் வகுப்பு நடத்தியவர். தமிழறிஞர் சி.வீ.குப்புசாமி அவர்களுக்கு யாப்பு இலக்கணம் கற்றுத் தந்தவர்.

ச.பாபு, நா.மு. காசீம், இரா. தேவராசன் போன்றவர்களும் துணைத்தலைவர்களாக அப்பதவிக்கு அழகு சேர்த்திருக்கிறார்கள்.

திருச்சுடர் கே.ஆர்.இராமசாமி அவர்களை பொதுச் செயலாளர் பதவிக்கு அறிமுகப்படுத்திய கோலக் கிள்ளான் ஆ.சுப்பையா அவர்களும் முதலில் துணைத் தலைவராக 1955‡56 ஆண்டுகளில் இருந்திருக்கிறார்.

கா.பா.சாமி அவர்கள் துணைத் தலைவராக இருந்திருக்கிறார். 

முன்னாள் தேசியத் தலைவர் கோடையிடி திரு. ஜி. குமாரசாமி அவர்களும் துணைத்தலைவராக இருந்திருக்கிறார். 

திராவடமணி மு. நல்லதம்பி, முத்துசின்னையா, பாண்டுரங்கன் போன்றோரும் துணைத் தலைவர்களாக பணி செய்திருக்கிறார்கள்.

No comments:

Post a Comment