Tuesday, May 17, 2022

தமிழ் நாடு அரசு வெளியிட்ட முக்கியமான தொல்லியல் முடிவுகள்

 தமிழ்நாடு அரசு  மூன்று முக்கியமான தொல்லியல் முடிவுகளை வெளியிட்டது.

- சிவகளை மாணிக்கம்

1. கீழடிக்கு அருகே அகரம் அகழாய்வுத் தளத்தில் சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகளை  பைட்டோலித் முறையில் பகுப்பாய்வு செய்ததில், அங்கே நெற்பயிர்கள் பயிரிடப்பட்டிருப்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.

 *2. சிவகளை வாழ்விடப் பகுதியில் சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகளை ஆய்வு செய்ததில், அங்கே நீர் சென்றிருக்கக்கூடிய செங்கல் வடிகாலில் நன்னீர் சென்றிருப்பதும்* *தேக்கிவைக்கப்பட்ட நீர்நிலையிலிருந்து இந்த நீர் கொண்டு வரப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.* 

3. மூன்றாவதாக, தமிழ்நாட்டில்  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மயிலாடும்பாறை என்ற இடத்தில் ஈமச்சின்னங்கள் அமைந்துள்ள பகுதிகளிலும் வாழ்விடப் பகுதியிலும் அகழாய்வுகள் மாநிலத் தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்டன.  இந்தத் தொல்லியல் மேட்டின் வாழ்விடப் பகுதியில் நடத்தப்பட்ட ஆய்வில், 104 செ.மீ. ஆழத்திலும் 130 செ.மீ. ஆழத்திலும் பல இரும்புப் பொருட்கள் கிடைத்தன. 

இந்த இரண்டு அடுக்குகளிலும் இருந்து பல கரிமப் பொருட்களும் கிடைத்தன. இதிலிருந்து இரண்டு கரிம மாதிரிகள் அமெரிக்காவிலுள்ள ப்ளோரிடா மாநிலத்தின் பீட்டா பகுப்பாய்வுக் கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அங்கு AMS (Accelerator Mass Spectrometry) என்ற முறையில் காலக் கணக்கீடு செய்யப்பட்டு, அதன் முடிவுகள் தற்போது பெறப்பட்டுள்ளன.

அதன்படி, ஒரு கரிமப் பொருளின் சராசரி மைய அளவீட்டுக் காலம் கி.மு. 1615 என்றும் மற்றொரு கரிமப் பொருளின் சராசரி மைய அளவீட்டுக் காலம் கி.மு. 2172 என்றும் தெரியவந்துள்ளது.

இதன்மூலம், தமிழ்நாட்டில் இரும்பின் பயன்பாடு 4200 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்துவந்தது உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக மாநில தொல்லியல் துறை தெரிவிக்கிறது.

இந்தியாவில் இதுவரை இரும்புக்காலப் பண்பாடு நிலவிய கங்கைச் சமவெளி, கர்நாடக மாநிலம் உள்ளிட்ட 28 இடங்களில் ஏஎம்எஸ் காலக் கணக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்த 28 முடிவுகளிலும் தற்போது கிடைத்துள்ள மயிலாடும்பாறையில் கிடைத்துள்ள ஆண்டுக் கணிப்பே காலத்தால் முந்தியது என்கிறது மாநிலத் தொல்லியல் துறை.

விரிவான கட்டுரை: https://www.bbc.com/tamil/india-61395155

No comments:

Post a Comment