Wednesday, June 1, 2022

பெரியார் தமிழ் இனத்தின் பகைவரா?

பெரியார் தமிழினத்தின் பகைவரா ? - வாலாசா வல்லவன் - நிமிர் வெளியீடு - முதற் பதிப்பு பிப்ரவரி 2022 - பக்கங்கள் 172 - விலை ₹ 160/

●  தமிழினத்திற்காக தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர் பெரியார். இன எதிரிகளை அடையாளம் கண்டு அவர்களைப் பற்றி விளக்கம் சொன்னவரும் அவரே ! அவர்களை விலக்கி வைத்தவரும் அவரே ! 

●  தன் வாழ்நாள் காலத்திலேயே எதிரிகளுக்கு அன்றாடம் தனது பேச்சுகளாலும் எழுத்துக்களாலும்  பதிலடி தந்தவர் ! அவைகளை எல்லாம் தனது குடிஅரசு, விடுதலை, உண்மை இதழ்களில் பதிவிட்டு ஆவணம் செய்து விட்டார் ! இந்தியாவிலேயே வேறு எந்த தலைவரும் செய்யாத வரலாற்று சாதனை இது !

●  பெரியாரை ஆதாரமற்ற முறையில் குற்றம் சாட்டி அவதூறுகளை அள்ளி வீசி திருத்தணியை சேர்ந்த ஒருவர், ' தமிழரின் இனப்பகை ஈ.வே.ரா ' என ஈனத்தனமான நூல் ஒன்றை எழுதி வெளியிட்டிருக்கின்றார். அந்த நூலுக்கு பதிலடி தருவதற்கென்றே இந்த நூலை படைத்துள்ளார் வாலாசா வல்லவன். பெரியாரின் எழுத்துக்களையே தனது ஆதாரமாக எடுத்து வைக்கின்றார் !

●  வாலாசா வல்லவன் தனது முன்னுரையில், " பொய்களுக்கு வரலாற்று ஆவணங்கள் அடிப்படையில் மறுப்பு தெரிவிப்பதே இந்நூலின் நோக்கமாகும் ! ம.பொ.சி மட்டும் தான் சென்னையை மீட்டுக் கொடுத்தவர், ம.பொ.சி இல்லை என்றால் சென்னை, தமிழருக்கு கிடைத்திருக்காது என்ற பொய்யை ஆதார பூர்வமாக மறுப்பது இந்த நூல் ! வடக்கெல்லைப் போராட்டத்தில் ரயில் மறியலில் ஈடுபட்ட திமுகவினர் பத்து பேரை முதலமைச்சர் ராஜாஜி சுட்டுக் கொன்றதையும் அதை ம.பொ.சி ஏன் என்று கேட்காததையும் இந்நூல் விவரிக்கின்றது " ...என பல தகவல்களை தருகின்றார் ! 

●  நூலின் உள்ளடக்கமாக வாலாசா வல்லவன் எழுதிய ஏழு கட்டுரைகளின் விவரங்கள் இதோ :

பெரியார் தமிழினத்தின் பகைவரா ? | நீதிக்கட்சி ஆட்சியில் ஆதி திராவிடர்கள் பெற்ற நன்மைகள் | இராசாசி தெலுங்கு பார்ப்பனரே | ம.பொ.சி. தமிழ்த் தேசியத்தை விரும்பினாரா ? | நீதிக்கட்சி பார்ப்பன எதிர்ப்பில் போலியானதா ? | சென்னை மீட்பின் உண்மை வரலாறு | தமிழர்களை சுட்டுக் கொன்றவர் இராசாசி ! அதை ஏன் என்று கேட்காதவர் ம.பொ.சி. |

●  பெரியார் தமிழினத்தின் பகைவரா ? என்ற கட்டுரை வாலாசா வல்லவனின் சிந்தனையாளன் இதழில் நவம்பர் 2015ல் வெளியானது. பெரியாரை அவமானப் படுத்த வேண்டும் என்ற நோக்கோடு, " வடக்கே இருந்த நால் வருணத்தையும் சூத்திரப் பட்டத்தையும், பெரியார் கொண்டு வந்து தமிழர் மேல் சுமத்துகிறார் " ..என்ற குற்றச்சாட்டை வைத்தவருக்கு, அது எவ்வளவு பச்சையான பொய்யும் வரலாற்று திரிபும் என்பதை ஆசிரியர் விளக்குகிறார் !

●  ஆந்திரா எல்லை பிரச்சினை குறித்து திராவிடர் கழக மத்திய நிர்வாக குழு 11.01.1953ல் நிறைவேற்றிய தீர்மானங்கள் முழுவதையும் வெளியிட்டு, அதில் தமிழினத்தின் நலனை பெரியார் எவ்வாறெல்லாம் பாதுகாக்க பாடுபட்டார் என்று பட்டியலிடுகின்றார் ! 

●  ஆந்திரா அன்றைய மதராஸ் மாகாணத்திலிருந்து பிரிந்த  பின்னும், தனக்கென்று ஒரு தலை நகரை உருவாக்கும் வரை, ஆந்திராவுக்கும் சென்னையே தலைநகராக இருக்கட்டும் என்ற கோரிக்கையை அடியோடு எதிர்த்தார் - பெரியார் ! 

●  அதற்கு பெரியார் தந்த உதாரணம் இன்றும் பேசப்படுகிறது - " ஒரு வீட்டில் பாகப் பிரிவினை எல்லாம் செய்யப்பட்ட பிறகு, சமையல் மட்டும் கொஞ்ச நாளைக்கு இங்கே செய்து கொள்ளப் போகிறோம் என்பது என்ன நியாயம் ? ".. இந்த கேள்விக்கு பதில் கிடைக்காததால், அந்த யோசனை கைவிடப்பட்டது ! இதை சொன்ன பெரியார்தான் தமிழினத்தின் பகைவரா ?

●  வாலாசா வல்லவன் எழுதிய இந்த நூல் சிறியதாக இருந்தாலும், வரலாற்று ஆதாரங்களோடு பெரியாரின் கொள்கைகளை விளக்கும் ஆவணமாக வெளிவந்துள்ளது !

நூலைப் படித்து, அறிந்து, ஆராயும் போது -

பெரியார் தமிழினத்தின் பகைவரா ? என்ற கேள்விக்கு 

பெரியார் தமிழினத்தின் தலைவர் ! என்ற பதிலே கிடைக்கும் !

வாலாசா வல்லவனுக்கு நன்றியும் வாழ்த்துகளும் !

பொ. நாகராஜன்,

பெரியாரிய ஆய்வாளர், சென்னை. 01.06.2022.

********************************************

No comments:

Post a Comment