காரல் மார்க்சு 200வது பிறந்த ஆண்டு
சில குறிப்புகள்: இளம் தோழர்களுக்கு
க.முகிலன்
காரல் மார்க்சு 1818ஆம் ஆண்டு மே 5ஆம் நாள் செருமனி (பிரஷ்யா) நாட்டில் டிரியர் எனும் சிறிய நகரத்தில் பிறந்தார்.
காரல் மார்க்சு தன் பள்ளிப்படிப்பின் இறுதித் தேர்வில், எதிர்காலப் பணியைத் தேர்வு செய்வது குறித்து ஒரு இளைஞனின் சிந்தனைகள் எனும் தலைப்பில் எழுதிய கட்டுரையில், மனித குலத்தின் பெருமைக்காகப் பாடுபடக்கூடிய ஒரு வேலையைத் தீர்மானித்துக் கொண் டால், எவ்வளவு சுமைகளும் நம்மை வளைத்துவிடாது. ஏனெனில் அவை யெல்லாம் அனைவருக்குமான தியாகங்கள். நமக்குக் கிடைக்கப் போகிற மகிழ்ச்சியோ எல்லையற்றது; கஞ்சத் தனமில்லாதது; அகங்கார மற்றது. நமது மகிழ்ச்சி கோடானுகோடி மக்களுக்குச் சொந்தமானது. நமது சாதனைகள் நீடித்து நிற்கும்; என்றும் செயல்பட்டுக் கொண்டிருக்கும்.
உன்னதமான மனிதர்கள் வடிக்கும் கண்ணீரால் நமது சாம்பல் கழுவப்படும் என்று எழுதினார். ஆழ்ந்த கருத்துகளைக் கவிதை நடையில் எழுதும் ஆற்றல் காரல் மார்க்சுக்குப் பள்ளிப் பருவத்திலேயே அமைந்துவிட்டது. மார்க்சு எழுதிய இக்கட்டுரையும் மற்றும் ஆறு கட்டுரைகளும் இன்றும் பாதுகாப்பாக வைக்கப் பட்டுள்ளன.
டெமாக்ரிடஸ் மற்றும் எபிகூரசு ஆகியோரின் இயற்கை பற்றிய தத்துவத்தில் வேறுபாடு எனும் தலைப்பில், மார்க்சு தன் முனைவர் பட்டத்துக்கான ஆய்வுக் கட்டுரையை எழுதினார். டெமாக்ரிடஸ், எபி கூரசு இருவருமே நாத்திகர்கள். ஆயினும் டெமாக்ரிடசைவிட எபிகூரசின் ஆய்வும், தத்துவமும் உயர்ந்தவை என்பது மார்க்சின் மதிப்பீடாகும். இக்கட்டுரையில் எபிகூரசை, கீழ்க்குறித்துள்ள லுக்ரிடசின் புகழ் மொழிகளை மேற்கோள் காட்டி மார்க்சு பாராட்டியுள்ளார்.
பிணம் போல் கனத்த மதத்தின் சுமை தாங்காமல் மனிதக் கண்ணுக்கும் புலப்படாதபடி மனித வாழ்வு முட்டிபோட்டு ஊர்ந்தது. முரண்டு பிடித்த தனது ஊனக் கண்களை கிரேக்கத்தின் ஒரு மனிதன் உயர்த்தினான். முதலில் முதுகெலும்பை நிமிர்த்தினான். துணிவோடு எதிர்கொண்டான். கடவுள்கள் பற்றிய கதைகள் அவனை நொறுக்கவில்லை. வானத்தின் மின்னல் ஒளியும் இடியும் அவனை அசைக்கவில்லை. அவனது காலடி யில் மதம் வீழ்ந்து நசுங்கியது. அவனது வெற்றியால் நாமெல்லாம் வானமளவுக்கு உயர்ந்தோம்.
1841 ஏப்பிரல் 15 அன்று ஜெனா பல்கலைக்கழகம் காரல் மார்க்சுக்கு முனைவர் பட்டம் வழங்கியது. அப்போது மார்க்சுக்கு அகவை 23.ரைன்லாந்து பகுதியின் தலைநகரான கொலோனில் 1842இல் ரைனிஷி ஷெய்டுங் என்ற நாளேடு தொடங் கப்பட்டது. 1842 மே மாதம் அதில் பத்திரிகைச் சுதந்தரம் பற்றி மார்க்சு நீண்ட கட்டுரை எழுதினார். அக்கட்டுரையில், வாழ்வதற்கும் எழுதுவதற்கும் மனிதன் சம்பாதிக்க வேண்டும் என்பது உண்மையே. ஆனால் சம்பாதிப் பதற்காகவே அவன் வாழவோ, எழுதவோ கூடாது. எழுத்தாளனுக்கு அவனது எழுத்து ஒரு கருவி அல்ல. அது தன்னளவிலே முடிந்த ஒரு இலக்கு. தேவைப்பட்டால், எழுத்து உயிர்த்திருப்பதற்காகத் தனது உயிரையும் தியாகம் செய்வான் என்று எழுதினார். அதன்படியே தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்தார்.
1842இல் அந்நாளேட்டின் ஆசிரியரானார். பிரடெரிக் எங்கெல்சு இங்கிலாந்தில் இந்நாளேட்டின் நிருபராக இருந்து செய்திகளையும் கட்டுரைகளையும் அனுப்பி வந்தார். மார்க்சும், எங்கெல்சும் நேரில் சந்திப்பதற்கு முன்பே, இந்த நாளேட்டின் மூலம் இருவரும் அறிமுக மாகியிருந்தனர். ரைனிஷி ஷெய்டுங் நாளேட்டிற்கு நான்கு மாதங்களே மார்க்சு ஆசிரியராக இருந்தார். அரசின் செயல்பாடுகளைக் கடுமையாகத் திறனாய்வு செய்ததால், அரசு இந்நாளேட்டை வெளியிடுவதற்குத் தடை விதித்துவிட்டது.
1843 சூன் 19 அன்று காரல்மார்க்சும் ஜென்னியும் திருமணம் செய்து கொண்டனர். ஏழு ஆண்டுகளுக்கு மேலான இவர்களின் காதல் திருமணத்தில் முடிந்தது. அப்போது மார்க்சின் அகவை 25. ஜென்னியின் அகவை 29.பிரஷ்யாவில் (செருமனி) இருந்து கொண்டு பத்திரிகை நடத்த முடியாது என்பதால், பாரிசு நகரிலிருந்து அர்னால்டு ரூகே என்பவருடன் இணைந்து புதிய பத்திரிகை நடத்துவதற்காக, மார்க்சும் ஜென்னியும் 1843 அக்டோபரில் பாரிசில் குடியேறினர்.
1844 சனவரியில் ஜெர்மன்-பிரெஞ்சு வருடாந்திர ஏடு என்ற பெயரில் இரட்டை இதழாக வெளிவந்தது. இதன் ஆசிரியர்கள் அர்னால்டு ரூகே - காரல் மார்க்சு என அட்டையில் குறிக்கப்பட்டிருந்தது. இம்முதல் இதழே இறுதி இதழாகவும் அமைந்துவிட்டது.
பிரஷ்ய அரசு (ஜெர்மன்) தனது நாட்டுக்குள் இப்பத்திரிகை நுழையத் தடை விதித்தது. மேலும் மார்க்சு தன் சொந்த நாடான பிரஷ்யாவுக்குள் நுழைந்தால் கைது செய்ய ஆணை பிறப்பித்தது.
ஜெர்மன்-பிரெஞ்சு வருடாந்திர ஏடு இதழில் மார்க்சு, ஹெகலின் உரிமையின் தத்துவம் பற்றிய விமர்சனத்திற்குப் பங்களிப்பு: ஓர் அறிமுகம் என்ற கட்டுரையை எழுதியிருந்தார். 13 பக்கங்கள் கொண்ட அக்கட்டுரையில் தான் மார்க்சின் புகழ்பெற்ற - மதம் மக்களுக்கு அபின் எனும் சொற்கோவை இடம்பெற்றுள்ளது. அதன் முழுமையான பத்தி கீழே தரப்பட்டுள்ளது.
மதத்திற்கு எதிரான போராட்டம் என்பது அந்த மதம் எனும் ஆன்மீக வாசனையைக் கொண்டுள்ள உலகத்திற்கு எதிரான மறைமுகப் போராட்டமே! மத ரீதியான துன்பம் என்பது உண்மையான துன்பத்தின் வெளிப்பாடே - உண்மையான துன்பத்துக்கு எதிரான கண்டனமே. மதம் என்பது; ஒடுக்கப்பட்ட சீவனின் பெருமூச்சு; இதயமற்ற உலகின் இதயம்; ஆன்மநேய மற்ற சூழல்களின் ஆன்மநேயம். அது மக்களின் அபின். மக்களின் கற்பிதமான இன்பம் என்கிற மதத்தை ஒழிக்க உண்மையான இன்பத்தைக் கொண்டுவர வேண்டியுள்ளது. நடப்புச் சூழல்கள் பற்றிய மாயைகளைக் கைவிடச் செய்ய, அந்த மாயைகளைத் தாங்கி நிற்கும் சூழல்களைக் கைவிடச் செய்ய வேண்டியுள்ளது. ஆகவே மதம் மீதான விமர்சனம் என்பது மதம் எனும் ஒளி வட்டத்தைக் கொண்ட கண்ணீர் வாழ்வு பற்றிய முதல் விமர்சனமாகும்.
மதம் நீடித்திருப்பதற்கான அடிப்படைச் சூழலை மாற்றாமல், மதத்தை ஒழிக்க முடியாது என்கிற இம் மாபெரும் கருத்தை, மார்க்சு தன் 26ஆம் அகவையில் கண்டறிந்தார் என்பது பெருவியப்புக்குரியதாகும்.
மேலும், இதே கட்டுரையில் மார்க்சின் மற்றொரு புகழ்பெற்ற மேற்கோளும் இடம்பெற்றுள்ளது: ஒரு பௌதிக சக்தியானது இன்னொரு பௌதிக சக்தியா லேயே தூக்கி எறியப்படும். ஆனால் சித்தாந்தமும் கூட ஒரு பௌதிகச் சக்தியாக மாறும் - எப்போது எனில், அது மக்கள் திரளைக் கவ்விப் பிடிக்கும் போது. தத்து வத்துக்கும் நடைமுறைக்கும் இடையிலான தொடர்பையும், தத்துவம் மனிதர்களின் வழியாக மாபெரும் பௌதிகச் சக்தியாக மாறும் என்கிற பேருண்மையையும் மார்க்சு இதில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மார்க்சைவிட 14 ஆண்டுகள் மூத்தவரான பாயர் பாக் என்பவர், 1841இல் கிறிஸ்துவத்தின் சாரம் என்கிற நூலை வெளியிட்டார். பொருள் முதல்வாத அடிப்படையில் பாயர்பாக் அந்நூலில் மதத்தை விமர்சனம் செய்திருந்தார். இந்நூலை மார்க்சு வரவேற்றார். ஆயினும் பாயர்பாக் தர்க்க அடிப்படையில்-சிந்தனை அடிப்படையில் மட்டுமே மதத்தை விமர்சனம் செய்திருப்பதை மார்க்சு உணர்ந்தார். பாயர்பாக்கின் தத்துவம் நடைமுறையிலிருந்து விலகி கற்பனை உலகில் நிற்பதால் பயன்படாது என்று எண்ணினார்.
1844இல் பாரிசில் இருந்தபோது பாயர் பாக்கின் நூல் பற்றிய தன் கருத்துகளைக் குறிப்பேட்டில் இரத்தினச் சுருக்கமாய் எழுதினார். இதுவே பாயர்பாக் பற்றிய சூத்திரங்கள் எனப்படுகிறது. இதன் 11வது சூத்திரத்தில் தத்துவ ஞானிகள் பல வகையிலும் உலகை விளக்கி இருக்கிறார்கள். நாம் செய்ய வேண்டியது என்னவோ அதை மாற்றுவதுதான் என்று எழுதி இருந்தார். இக்குறிப்பேட்டை மார்க்சு இறந்தபிறகே எங்கெல்சு கண்டெடுத்தார்; 1888இல் இதை நூலாக வெளியிட்டார். மார்க்சின் கல்லறையில் இந்தச் சொற்றொடர் மட்டும் பொறிக்கப்பட்டுள்ளது.
பிரஷ்ய அரசின் நெருக்குதல் காரணமாக 1845ஆம் ஆண்டு மார்க்சு குடும்பம் பாரிசிலிருந்து வெளியேற வேண்டும் என்று பிரான்சு அரசு ஆணையிட்டது. அதனால் மார்க்சு குடும்பம் பெல்ஜியத்தின் தலை நகரான பிரஸ்ஸெல்ஸ் நகரில் குடியேறியது. நடப்பு அரசியல் பற்றி மார்க்சு எழுத்து வடிவில் ஏதும் வெளி யிடக் கூடாது என்கிற நிபந்தனையின் பேரில்தான் அந்நாட்டில் அவர் தங்க அனுமதிக்கப்பட்டார்.
இவ்வுலகம் கடவுளால் படைக்கப்பட்டது. கடவுளால் படைக்கப்பட்ட பொருள்களும் உயிரினங்களும் அவை தோன்றிய காலம் முதலாக மாறாமல் நிலைபெற்று இருக்கின்றன என்று மதவாதிகளும் கருத்து முதல் வாதிகளும் கூறிவந்தனர். இதை மறுத்து செருமானிய தத்துவ அறிஞரான ஹெகல் (1770-1830) இவ்வுலகிலும் - இப்பேரண்டத்திலும் உள்ள எல்லாப் பொருள்களும் இயங்கிக் கொண்டும் மாறிக்கொண்டும் இருக்கின்றன. பொருள்களின் இயக்கத்திற்கு அப்பொருள்களுக்குள் பொதிந்துள்ள எதிரெதிர் ஆற்றல்களே - முரண்பாடே காரணம். உலகில் எந்தவொரு பொருளும் தனித்து இருப்பதில்லை. எல்லாப் பொருள்களும் ஒன்றையொன்று சார்ந்து நின்று இயங்குகின்றன என்று அறிவியல் அடிப்படையில் ஆராய்ந்து அறிவித்தார். இந்தக் கோட்பாடுதான் இயக்கவியல் எனப்படுகிறது. இதுவே மார்க்சியத்தின் அடிப்படையாகும். எனவேதான் ஹெகல் இயக்கவிலின் தந்தை எனப்படுகிறார்.
ஹெகலின் கோட்பாட்டை மார்க்சு, எங்கெல்சு உள்ளிட்ட எண்ணற்ற இளைஞர்கள் தீவிரமாக ஆதரித்தனர். இவர்கள் இளம் ஹெகலியர் என அழைக்கப்பட்டனர். ஆனால் மார்க்சின் ஆய்வுநோக்கு விரிவடைந்தபின், உயர்ந்த படைப்புகளை உருவாக்குவதற்கு அடிப்படையாக இருப்பது மனிதனின் சிந்தனையே என்கிற ஹெகலின் முடிவை மார்க்சு எதிர்த்தார். ஹெகல் இயக்கவியலைத் தலைகீழாக நிறுத்தியுள்ளார். அதை நேராக மாற்றுவதே நம் வேலை என்று மார்க்சு கூறினார்.
ஆனால் மற்ற இளம் ஹெகலியர்கள், ஹெகல் கூறியுள்ளதே சரி என்று கூறி, ஹெகலைத் தலை மேல் வைத்துக் கொண்டாடினர். எனவே இளம் ஹெகலியரின் தத்துவ நிலைபாடுகளுக்கு எதிராக 1845 நவம்பரில் மார்க்சும் எங்கெல்சும் இணைந்து, ஜெர்மானிய சித்தாந்தம் என்ற நூலை எழுதினர். ஆனால் எங்கெல்சின் இறப்புக்குப் பின்னரே, இந் நூலின் சில பகுதிகள் வெளிவந்தன. முழுமையான வடிவில் நூலாக 1930களில் சோவியத் கம்யூனிஸ்டு கட்சியால் வெளியிடப்பட்டது. இந்த நூலில் தான் மார்க்சியத்தின் பிழிவான வரிகளாகத் திகழும் உணர்வு வாழ்நிலையைத் தீர்மானிப்பதில்லை. வாழ்நிலை தான் உணர்வைத் தீர்மானிக்கிறது எனும் வரிகள் இடம்பெற்றன.
சிந்தனையாளன் சூன் 2017
No comments:
Post a Comment