Thursday, June 23, 2022

தந்தை பெரியார் - கி.ஆ.பெ.விசுவநாதம்

 தந்தை பெரியாருடனான சந்திப்பு - கி.ஆ.பெ.விசுவநாதம்.....

1938 இந்தி எதிர்ப்புப் போரில் பெரியார் சிறையில் அடைக்கப்பட்ட நிகழ்வை இங்கே விவரிக்கிறார் முத்தமிழ்க் காவலர். படியுங்கள்...

‘ 1938 இல் காங்கிரஸ் ஆட்சியில் நடந்த இந்தி எதிர்ப்பு இயக்கத்தின் போது பெரியாரைக் கைது செய்து அவர் மீது குற்றத்தைச் சாட்டி தண்டித்து, பல்லாரி சிறையில் அடைக்க சென்னை முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் கோர்டு உத்திரவிட்டது. 

அப்போது அவருக்காக எதிர் வழக்காடிய பாரிஸ்டர் பன்னீர்ச்செல்வம் அவர்கள் குற்றவாளிக் கூண்டில் நிற்கும் பெரியாரைக் கட்டிப்பிடித்துக் கண்ணீர் உகுத்து அழ ஆரம்பித்துவிட்டார். அவர்கள் இருவரையும் போலீசார் பெரும்பாடுபட்டே பிரித்தார்கள்’.

‘பின் பல்லாரி சிறையில் நானும் (கி.ஆ.பெ.) அவரும் (சர். ஏ.டி.பன்னீர்ச்செல்வம்) மட்டுமே போய்ப் பெரியாரைப் பார்த்து வந்தோம்’. 

‘எங்களுக்குப் பல அரசியல் கருத்துக்களையும், நாட்டில் நாங்கள் செய்ய வேண்டிய பணிகளையும் மிகத் தெளிவாகவும், பொறுமை யாகவும் கூறி எங்களைப் பெரியார் வழி அனுப்பி வைத்தது எங்களைக் கலக்கமடையச் செய்தது’.

‘அவர் சிறையில் இருக்கும் போதுதான் சென்னை ஐலண்டு கிரவுண்டில் ஜஸ்டிஸ் கட்சி மகாநாடு நடந்தது. அவர் பல்லாரி சிறை யில் இருந்ததால் அவர் படத்தையே தலைமையாக வைத்து மகாநாட்டை நடத்தினோம்’.

‘அப்போது ஆந்திர, கேரள, கர்நாடக, தமிழகம் ஆகிய நான்கு மாநிலங்களுக்கும் பொதுச் செயலாளராகப் பணிபுரிந்தேன்’.

‘தலைவர் பெரியார் பல்லாரி சிறையில் இருந்ததால் அவரது தலைமை உரையின் முற்பகுதியை சர் ஏ.டி. பன்னீர் செல்வமும், பிற்பகுதியை நானும் படிக்கும் வாய்ப்பைப் பெற்றோம்’.

‘பெரியார் கட்டளைப் படி அவரது பணிகளை சட்டசபைக்கு உள்ளே ஏ.டி. பன்னீர்செல்வமும், சட்டசபைக்கு வெளியே நானும்செய்து வந்தோம்’ என்று உருக்கமாக நிகழ்வுகளை தொகுத்து எழுதுகிறார் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.

No comments:

Post a Comment