Thursday, July 28, 2022

உண்ணாவிரதத்தை எதிர்த்த பெரியார்

பட்டினியில் எனக்கு நம்பிக்கையில்லை

தந்தை பெரியார்

மற்றும் தோழர் ஜெகதீசனின் பட்டினியைப் பற்றி சிலர் பேசினார்கள். இம்மாதிரி பட்டினியைப் பற்றி எனது அபிப்பிராயம் உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். பட்டினியில் எந்த விதமான ஆத்மார்த்தம் என்பதோ தெய்வீகம் என்பதோ ஆன தத்துவம் இருக்கிறது என்பதை நான் என்றும் நம்பினதில்லை.

அதனால் எதிரியை மனம் இளகச்செய்து விடலாம் என்பதிலும் எனக்கு நம்பிக்கை இல்லை. எவ்வித பட்டினியையும் நான் ஆதரித்து அதனால் எந்தக் காரியத்தையும் சாதித்துக் கொள்ளலாம் என்பதாக நான் ஆசைப்பட்டதில்லை. 

தோழர் ஸ்டாலின் தான் தப்பு என்று காரியத்தை ஒழிக்க சரி என்ற பட்ட காரியத்தைச் செய்ய வேண்டுமென்று கருதி அதற்காக ஜீவன்களுக்கு மிக்க அருமையான உயிரைக் கொடுக்க முன் வந்த வீரத்தை மதிக்க வேண்டியது என்பதை மறுக்க முடியாது.

 அன்றியும் தோழர் ஸ்டாலினின் பட்டினியானது காந்தியாரின் பட்டினித் தத்துவத்தை வெளியாக்கவும் தோழர் காந்தியாரின் இனி இம்மாதிரி பட்டினி காரணங்களால் மக்கள் ஏமாந்து போய்விட மாட்டார்கள் என்பதையும் விளக்கவும் அதாவது தோழர் ஸ்டாலின் பட்டினியை காந்தியாரும் காந்தி பக்தர்களும் எப்படி கருதுகிறார்களோ அதுபோலவே இனிமேல் ஏதாவது ஒரு காரியத்துக்கு காந்தியாரும் மற்றவர்களும் பட்டினி இருந்தால் அப்படியே கருதும்படி செய்யவும் இப்பட்டினி பயன்படுவதால் இது ஒரு நல்ல சம்பவம் என்று சொல்ல பின்வாங்கவில்லை.

காந்தியார் விஷமத்தனம்

ஆனால் காந்தியார் தான் பட்டினி இருந்த காலத்தில் அதற்கு அவர் சொல்லிக்கொண்ட காரணங்களும் அதற்காக மற்ற மக்கள் கீழ்ப்படிய வேண்டுமென்று கட்டாயப்படுத்திய செய்கைகளும் உலகம் அறிந்திருந்தும் தோழர் ஸ்டாலின் பட்டினியைப்பற்றி மிக்க விஷமத்தனமாக கொடுத்த அபிப்பிராயத்தை கண்டிக்காமல் இருக்க முடியவில்லை. 

இதிலிருந்தாவது பொது ஜனங்களுக்கு காந்தியாரின் உண்மையான நிலை தெரிய சந்தர்ப்பம் ஏற்பட்டதே என்பதற்காகவும் இந்த பட்டினி வரவேற்கத்தக்கதாகின்றது என்கின்றேன்.

மக்கள் உலகில் இறப்பது இயற்கையானாலும் ஒவ்வொரு மனிதனும் கட்டாயம் இறந்தே தீர வேண்டியது முடிவே ஆனாலும் தானாகவே பட்டினி கிடப்பதன் மூலம் சாகத் துணிவது என்பது பொது மக்கள் கவனத்தை இழுக்க மிக்க பயன்படத்தக்கதாய் இருக்கிறது என்பதை எவரும் மறுக்க முடியாது.

இப்படிப்பட்ட நிலையில் இக்காரியத்துக்காக மனிதத் தன்மைப்படி பரிதாபப்படா விட்டாலும் இதை குறை கூறுவதும் குற்றம் சொல்வதும் சிறிதும் யோக்கியமான காரியம் ஆகாது என்பதை நான் எடுத்துச் சொல்ல வேண்டிய தில்லை.

கடற்கரை சொற்பொழிவு 10.7.1938 குடி அரசு.

No comments:

Post a Comment