தமிழின் தொன்மையும் – தமிழர்தம் பெருமையும்
பழ. நெடுமாறன்
உலகத்தில் மிகத் தொன்மையான மொழிகளாக எகிப்தியம். ஈப்ரு, அரேபியம், சுமேரியம், இலத்தீன், கிரேக்கம், சீனம், சமற்கிருதம் மற்றும் தமிழ் ஆகியவை கருதப்படுகின்றன. இவற்றில் தோன்றிய காலத்திலிருந்து இன்றுவரை சீரிளமைத் திறன் சிறிதும் குன்றாது வளர்மொழியாகத் திகழ்வது நமது தமிழ்மொழி மட்டுமே.
கி.மு. 5000ஆண்டுகளுக்கு முன்பு நைல் நதிக்கரையில் தோன்றி வளர்ந்த நாகரிகத்தின் சின்னமாக எகிப்திய மொழி விளங்கியது. எகிப்து முதல் சிரியா வரை இம்மொழி பேசப்பட்டு வாழ்ந்தது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக எழுப்பப்பட்ட பண்டைய வரலாற்றுச் சின்னங்களாகத் திகழும் பிரமிட் கோபுரங்களில் எழுதப்பட்ட பெருமைக்குரியது எகிப்திய மொழியாகும். கி.பி. 16ஆவது நூற்றாண்டுவரை இம்மொழி வாழ்ந்து மறைந்தது.
கி.மு. 13ஆம் நூற்றாண்டிலிருந்து பேசப்பட்டுப் பல தொல்லிலக்கியங்களைப் படைத்த மொழி ஈப்ரு மொழியாகும். 4000ஆம் ஆண்டு காலமாக வாழ்ந்த இந்த மொழி கி.பி. 2ஆவது நூற்றாண்டில் வழக்கிழந்தது. இதைப் பேசிய யூத மக்கள் ரோமானியப் படையெடுப்பின் விளைவாகத் தாங்கள் வாழ்ந்த மண்ணான பாலத்தீனத்திலிருந்து வெளியேறி உலகெங்கும் சிதறி வாழ்ந்தனர். கி.பி. 20ஆம் நூற்றாண்டின் முன் பகுதி இறுதியில் மூண்டெழுந்த இரண்டாம் உலகப் போரின் போது ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்த 50 இலட்சத்திற்கும் மேற்பட்ட யூத மக்கள் செர்மானிய நாசி இன வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டனர். அதற்குப் பின் தங்களின் தாயகத்தை மீட்பது ஒன்றே இன மீட்சிக்கான வழி என்பதை உணர்ந்து பெரும் போராட்டத்திற்கு இடையில் இசுரேல் நாட்டை அமைத்தனர். தங்களின் தாய்மொழியான ஈப்ரு மொழியை மீட்டுருவாக்கம் செய்தாலொழிய தங்களுக்கு எதிர்காலம் இல்லை என்பதை அறிந்து இன்று அதற்கான பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கி.மு. 8ஆம் நூற்றாண்டு முதல் அதாவது, நபிகள் நாயகத்தின் காலத்திற்கு முன்பே வேர் விட்டு வளர்ந்திருந்த மொழி அரேபிய மொழியாகும். இசுலாம் சமயம் பரவிய இடங்களில் எங்கும் இம்மொழி பரவியது. காலத்திற்கு ஏற்ற மாற்றங்களுடன் இன்றும் வாழ்கிறது.
4000 ஆம் ஆண்டுகளுக்கு முன்பே வியக்கத்தக்க வளர்ச்சியைக் கண்ட சுமேரிய நாகரிக மக்கள் பேசிய மொழி சுமேரியமாகும். மத்திய ஆசியாவில் சிறந்த நாகரிகத்தை நிலை நிறுத்திய மிகப் பழமையான மொழியாகும். சிந்து நாகரிக மக்களுடன் உறவாடிய மொழி இம்மொழி என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனாலும், இந்த மொழி இன்று வழக்கற்றுப் போனது.
தமிழ்மொழியோடு ஒப்பிடத்தக்க மிகப் பழமையான மொழி கிரேக்கமாகும். கிரேக்க நாகரிகம் மிகத் தொன்மை வாய்ந்ததாகும். பழந்தமிழரோடு மிக நெருக்கமான உறவு கொண்டிருந்தது இம்மொழியாகும். தொல் வரலாற்றுச் சின்னங்களையும் இலக்கியங்களையும் படைத்த இம்மொழி இன்று வழக்கற்றுப் போனது.
இயேசுபிரான் பிறப்பதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே பிறந்து வளர்ந்த மொழி இலத்தீன் மொழியாகும். ரோமப் பேரரசின் காலத்தில் ஐரோப்பாவெங்கும் இம்மொழி பரவி வளர்ந்தது. பண்டைய இம்மொழி பிரெஞ்சு, ஸ்பானிசு, இத்தாலியம், போர்த்துகீசியம் போன்ற பல கிளை மொழிகளைத் தோற்றுவித்தது. கி.மு. 6ஆம் நூற்றாண்டிலேயே கல்வெட்டுகளைத் தோற்றுவித்த இம்மொழி இன்று வழக்கிலில்லை.
கி.மு. 4000 ஆண்டுகளுக்கு முன்பே வழக்கிலிருந்த சீன மொழி இன்று எழுத்துருவில் மட்டும் வாழ்கிறது. ஆனால் பேச்சு வழக்கில் பல்வேறு கிளைமொழிகளாகத் திரிந்துள்ளது. சிறந்த இலக்கியங்களைப் படைத்த இம்மொழி ஆசிய நாட்டு மொழிகளுக்குள் முதன்மையான மொழியாக விளங்கியது. இன்று இம்மொழி வாழ்ந்தாலும் எழுத்து மொழிக்கும், பேச்சு மொழிக்கும் இடையே அகன்ற இடைவெளி காணப்படுகிறது. ஒரு பகுதியில் வாழும் சீனன் பேசும் மொழியை மற்றொரு பகுதியில் வாழும் சீனன் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு இம்மொழி அறவே திரிந்துவிட்டது.
சிந்துவெளி நாகரிகம் மறைந்து 1500 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவிற்குள் நாடோடிகளாக நுழைந்த ஆரிய இனத்தின் பேச்சு மொழி சமற்கிருதம் அதற்கு எழுத்துக் கிடையாது. ஆரியர்களின் ரிக் வேதம் எழுதாக் கிளவியாக விளங்கியது. சிந்து நாகரிக மக்களிடமிருந்து தங்கள் மொழிக்கு எழுத்துக்களைக் கற்றுக்கொண்டனர். இந்திய நாட்டில் பேசப்படும் பல மொழிகளுடன் இரண்டறக் கலந்து பல திரிபு மொழிகளை உருவாக்கியது. தற்போது இதை பேச்சுமொழி எனக் கூறுவது மிகக் கடினமாகும். 2011ஆம் ஆண்டு இந்திய அரசு மேற்கொண்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் சமற்கிருதம் பேச, எழுதத் தெரிந்தவர்களின் எண்ணிக்கை 25,000பேர்களுக்குட்பட்டதே. வேதங்கள், உபநிடதங்கள், பிராமணங்கள், இதிகாசங்கள் ஆகியவற்றைக் கொண்ட இம்மொழி இந்துக் கோயில்களில் வழிபடும் மொழியாகத் திகழ்கிறதே தவிர, மக்களின் பேச்சு மொழியாகத் திகழவில்லை.
பழமைக்கும் முந்திய பழமை வாய்ந்ததாகவும், புதுமைக்குப் பிந்திய புதுமையாகவும், நாளும் வளர்மொழியாகவும் திகழும் பெருமை தமிழ்மொழிக்கு மட்டுமே உண்டு. கி.மு. 10ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இலக்கிய, இலக்கணங்களைக் கண்ட மொழி. எகிப்தியம், சுமேரியம், கிரேக்கம் போன்ற மொழிகளின் வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட தொல் வரலாற்றினைக் கொண்டதோடு இன்றுவரை வாழும் மொழி தமிழ்மொழி மட்டுமே. எத்தனையோ நூற்றாண்டு காலத்திற்கு முன்பிருந்து வாழ்ந்துவரும் தமிழ்மொழி இன்றும் அதிகமான மாற்றமின்றிப் பேசவும், எழுதவும் படுகிறது.
சாக்ரடீஸ் பேசிய கிரேக்கம், ஜீலியஸ் சீசர் பேசிய இலத்தீன், பாணிணி, காளிதாசன் பேசிய சமற்கிருதம், கன்பூசியஸ் பேசிய சீனம் ஆகியவை இன்று திரிந்து மாற்று வடிவங்கள் கொண்டும் வழக்கற்றும் போய்விட்டன. ஆனால், தொல்காப்பியரும், திருவள்ளுவரும் பேசிய, எழுதிய தமிழில்தான் இன்று நாமும் பேசிக்கொண்டிருக்கிறோம். எழுத்து வடிவங்கள் காலத்திற்கேற்ற மாற்றங்கள் கொண்டிருக்கின்றனவே தவிர, நம்முடைய இலக்கியப் படைப்புகள் புதிய புதிய துறைகளில் தொடர்கின்றன.
தொல்காப்பிய நூற்பாக்களில் 343க்கும் மேற்பட்ட இடங்களில் அதற்கு முந்திய காலத்தில் வாழ்ந்த புலவர்களின் படைப்புகள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. என்ப, என்பனார் போன்ற சொற்கள் அவருக்கு முற்பட்ட பல நூற்றாண்டுகளில் வாழ்ந்த புலவர்கள் படைத்த இலக்கிய, இலக்கணங்களைச் சுட்டிக்காட்டுகின்றன. தமிழ் தோன்றிய காலத்தை எவராலும் திட்டமிட்டு வரையறுத்துக் கூற முடியாத மிகத் தொன்மை வாய்ந்ததாகும்.
சங்க இலக்கியங்கள் என சுட்டப்படும் பழந்தமிழ் இலக்கியங்கள் கி.மு. 6ஆம் நூற்றாண்டை ஒட்டியவை என்பதை அண்மையில் வைகைக் கரையில் நிகழ்த்தப்பட்ட கீழடி தொல்லாய்வு எடுத்துக்காட்டி நிறுவியுள்ளது.
சிந்து நாகரிகம் – தமிழர் நாகரிகம் ஒர்மை
19ஆம் நூற்றாண்டின் தொடக்கக் கட்டத்தில் சிந்து சமவெளி நாகரிகம் இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் கண்டறியப்பட்டது. இந்த நாகரிகத்தின் தொன்மைத் தடயங்கள் குறித்த உலக அறிஞர்களின் ஆய்வுகள் இன்னமும் தொடர்கின்றன. ஆனால், சிந்துவெளி நாகரிகத்திற்கும், இந்தியாவின் தென்பகுதியில் நிலவும் தமிழர் நாகரிகத்திற்கும் இடையே நிலவும் மிக நெருக்கமான ஒப்புவமைகள், உறவுகள் குறித்து இரு பகுதிகளிலும் கிடைத்துள்ள தொல்லியல் தடயங்கள், பானைக் குறியீடுகள், கல்வெட்டுகள், பழந்தமிழ் இலக்கியங்கள் சான்று கூறுகின்றன.
இந்தியாவின் வடமேற்கில் சிந்து மாநிலம், குசராத் மாநிலம், மராட்டிய மாநிலம் வரை சிந்து நாகரிகத் தொல் தடயங்களும், இந்தியாவின் தென்பகுதியில் ஆதிச்சநல்லூர், கொற்கை, கீழடி போன்ற இடங்களில் கண்டறியப்பட்ட தொல் தடயங்களுக்குமிடையே காணப்படும் ஓர்மை இரு நாகரிகங்களுக்கும் இடையே உள்ள தூரத்தை மிகவும் குறைத்துள்ளன.
அரப்பா, மொகஞ்சதாரோ, லோத்தல், தோலாவீரா (குசராத்), காளிபங்கன் (இராசசுத்தான்), தைமாபாத் (மராட்டியம்) போன்ற இடங்களில் கிடைத்தத் தொல்லியல் தடயங்களும், தமிழ்நாட்டில் செம்பியன் கண்டியூர், சூலூர், சானூர், யாழ்ப்பாணம் - ஆனைக்கொட்டா ஆகிய இடங்களில் கிடைத்த சிந்துவெளி முத்திரைகளைக் கொண்ட தடயங்களும் ஓர்மையைக் காட்டுகின்றன.
1.சிந்து நாகரிகப் பகுதிகளிலும் தமிழகத்தின் தொல்லியல் பகுதிகளிலும் குதிரையின் எலும்புகள் கண்டறியப்படவில்லை. ஆரியர்கள் இந்தியாவிற்கு வந்த பிறகே குதிரைகள் அறிமுகமாயின. எனவே ஆரியர் வருகைக்கு முற்பட்ட நாகரிகங்களாக இந்த இரு பகுதி நாகரிகங்களும் அமைந்துள்ளன.
2. ஏறு தழுவுதல் – காளை மாடுகளைப் பிடித்தலைக் குறிக்கும் சிந்துவெளி முத்திரைகள், தமிழ்நாட்டில் இன்னமும் தொடரும் இவ்விளையாட்டு (சல்லிக்கட்டு)
3.சேவல் சண்டையை குறிக்கும் சிந்துவெளி முத்திரை. இன்றைய பாகித்தானில் உள்ள சிந்து மாநில கிராமங்களில் தொடரும் சேவல் சண்டை.
தமிழ்நாட்டின் கிராமங்களில் அன்று முதல் இன்றுவரை தொடரும் சேவல் சண்டை, மாண்ட சேவலுக்கு எழுப்பப்பட்ட நடுகல் (அரசிலாபுரம்)
ஆந்திரா, தெலுங்கானா, குடகு ஆகிய மாநிலங்களில் சேவல் சண்டை தொடர்கிறது.
4.தாய்த் தெய்வ வழிபாட்டைக் குறிக்கும் சுடுமண் சிலைகள் சிந்து நாகரிகத்திலும், ஆதிச்ச நல்லூர், கீழடி போன்றவற்றிலும் கண்டறியப்பட்டுள்ளன.
5.பகடைக் காய் ஆட்டத்தைக் குறிக்கும் பகடைக்காய்கள் சிந்துசமவெளியிலும், கீழடியிலும் கிடைத்துள்ளன.
6.சிந்து நாகரிகப் பகுதிகளிலும் தென்னாட்டிலும் உள்ள இடப்பெயர்களில் ஒற்றுமை காணப்படுகிறது.
7.இமயம் என்ற சொல் சங்க இலக்கியங்களில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் குறிப்பிடப்படுகிறது. பனி சூழ்ந்த மலை முகடுகளின் கம்பீரத்தை இப்பாடல்கள் வருணிக்கின்றன. இமயமலையின் மிக உயர்ந்த பனி மூடியப் பகுதிகளில் வாழும் அடர்த்தியான மயிர்களைக் கொண்ட கவரிமா. அது உண்ணும் நரந்தை என்னும் புல் பற்றிய குறிப்புகளை சங்கப் புலவர்கள் துல்லியமாக அறிந்து பாடியுள்ளனர். வாழையடி வாழையாக வரும் தமிழ் இனத்தின் மீள் நினைவாக இது அமைந்துள்ளது.
8.தமிழ்நாட்டில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐவகை நிலங்கள் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் பாலைவனம் தமிழ்நாட்டில் எங்கும் இல்லை. “முல்லையும், குறிஞ்சியும் முறைமையில் திரிந்து பாலையாகுமே” என சிலம்புப் பாடுகிறது. மழை பொழியாமல் போனால் முல்லை நிலமும், குறிஞ்சி நிலமும் வறண்டு பாலையாகக் காட்சித் தரும். பின்னர் மழை பொழியுமானால் அவை செழித்து குலுங்கும்.
வறண்ட மணலைத் தவிர, வேறு எதுவும் பசுமையாக இல்லாத பாலைவனத்தில் வாழும் விலங்கு ஒட்டகமாகும். பாலையே இல்லாத தமிழ்நாட்டில் ஒட்டகத்தைப் பற்றிய குறிப்புகள் தொல்காப்பியத்திலும், சங்க இலக்கியத்திலும் ஏராளமாகக் காணப்படுகின்றன. தமிழ்நாட்டில் இல்லாத இந்த விலங்கு குறித்து சங்கப் புலவர்கள் பாடியது எப்படி?
9. இந்தியாவில் குசராத் பகுதியில் மட்டுமே சிங்கம் உள்ளது. நர்மதை ஆற்றைக் கடந்து சிங்கம் ஒருபோதும் தென்னாட்டிற்கு வரவில்லை. தமிழ்நாட்டில் சிங்கம் அறவே இல்லை. ஆனால் சங்க இலக்கியங்களில் சிங்கத்தைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.
மேற்கண்டவை அனைத்துமே வாழையடி வாழையாக வந்த தமிழரின் மீள் நினைவுகள் என சிந்துவெளி ஆய்வாளர் ஆர். பாலகிருஷ்ணன் எழுதியுள்ளார்.
வைகைக் கரையிலும், தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் தொல்லாய்வுத் தொடர்ந்து நடத்தப்படுமானால், இரு நாகரிகங்களும் ஒன்றுக்கொன்று மிக நெருக்கமானவை என்பதும், இரண்டுமே நகர்ப்புற நாகரிகங்கள் என்பதும் இவைகளுக்கு இடையே உள்ள கால இடைவெளி மிகமிகக் குறைந்து போகும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
தமிழர் தொன்மை
உலகின் மூத்த மொழியான தமிழ்மொழியை பேசும் மக்கள் இன்று உலகம் முழுவதிலும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வாழ்கிறார்கள். இந்தியாவில் தமிழ்நாட்டிற்கு வெளியே தென்மாநிலங்களிலும் மராட்டியம் போன்ற மாநிலத்திலும் அதிக எண்ணிக்கையிலும் பிற மாநிலங்களில் கூடியும் குறைத்தும் பரவி வாழ்கிறார்கள்.
இலங்கை, மியான்மர், மலேசியா, சிங்கப்பூர், மொரீசியசு, ரீயூனியன், கயானா போன்ற நாடுகளில் பெருமளவிலும் மற்றும் உலக நாடுகள் பலவற்றிலும் தமிழர்கள் பரவி வாழ்கிறார்கள். உலகில் ஆங்கிலேயருக்கு அடுத்தபடி பல நாடுகளில் அதிகமாக வாழ்பவர்கள் தமிழர்களே. எனவே இன்று தமிழ் உலகத்தில் முதன்மை வாய்ந்த மொழிகளில் ஒன்றாக ஆகியுள்ளது.
இந்தியாவில் தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஆட்சிப் பொறுப்பு தமிழர்கள் கையில் உள்ளது. இந்திய ஒன்றியத்தின் குடியரசுத் தலைவர்களாகவும், நடுவண் அமைச்சர்களாகவும் பல்வேறு மாநிலங்களில் சட்டமன்ற உறுப்பினர்களாகவும் உயர் அதிகாரிகளாகவும் முப்படைத் தளபதிகளாகவும் தமிழர்கள் விளங்குகிறார்கள்.
இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, மொரீசியசு, ரீயூனியன், கயானா போன்ற நாடுகளில் தமிழர்கள் அமைச்சர்களாகவும், உயர் பொறுப்புகளிலும் அமர்ந்திருக்கிறார்கள். சிங்கப்பூரில் ஒரு தமிழர் குடியரசுத் தலைவராகவும், மொரீசியசு, கயானா போன்ற நாடுகளில் தலைமையமைச்சர்களாகவும் தமிழர்கள் பதவி வகித்துள்ளனர்.
ஆனாலும்கூட வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் சிறிதுசிறிதாக தங்களின் தாய்மொழியையும், பண்பாட்டு அடையாளத்தையும் இழக்க விரும்பாத தவிப்பில் வாழ்கிறார்கள் என்பதை தமிழ்நாட்டுத் தமிழர்கள் உணரவேண்டும். மொழி, பண்பாடு, இலக்கியம், கலை, வரலாறு, சமுதாய மரபு, பழக்கவழக்கங்கள் ஆகியவற்றால் உலகத் தமிழர்கள் ஒன்றிணைந்து பிணைக்கப் பட்டிருக்கிறார்கள். ஆனால், தாய்த் தமிழகத்துடனும், தமிழுடனும் உள்ள தொடர்புகளும், உறவுகளும் சிறிதுசிறிதாக அறுந்துகொண்டிருக்கும் நிலையில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்கள் நடுவில் தமிழ்ப் பண்பாட்டு மறுமலர்ச்சியை ஏற்படுத்தவும், அவர்களை மொழி, பண்பாட்டு அடிப்படையில் ஒருங்கிணைக்கவும் செயலாற்றவேண்டிய பெரும் கடமை தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு மட்டுமே உண்டு.
உலகளாவிய சிந்தனைக்குச் சொந்தக்காரர்கள் நாம் என்பதை மறந்துவிடக் கூடாது. “யாதும் ஊரே! யாவரும் கேளிர்!” என உலக மாந்தருடன் உறவு கொண்டாடியவன் சங்கப் புலவன் கணியன்பூங்குன்றனாவான். சங்கப் பாடல்களில் 200க்கும் மேற்பட்ட பாடல்களில் உலகு, உலகம் எனும் சொற்கள் நிறைந்துள்ளன. உலகக் கண்ணோட்டத்துடனும், உலக நாடுகளில் வாழும் பிற இன மக்களைத் தனது உறவினர்களாகக் கருதி சொந்தம் கொண்டாடிய பெருமை தமிழினத்திற்கு மட்டுமே உண்டு.
பண்டைய ரோமானியர்கள் பிற இனத்தவரை அடிமைகளாகவும், கிரேக்கர்கள் பிற இனத்தவரை மிலேச்சர்களாகவும், சீனர்கள் பிற இனத்தவர்களை பிசாசுகளாகவும், ஆரியர்கள் பிற இனத்தவரை அசுரர்களாகவும் கருதி இழிவுபடுத்தினர்.
விரிந்து பரந்த கண்ணோட்டத்துடனும், உறவு நிறைந்த உள்ளத்துடன் வாழ்ந்த தமிழினம் 2009ஆம் ஆண்டில் இலங்கையில் சிங்கள வெறியர்களால் பல்லாயிரக்கணக்கில் படுகொலை செய்யப்பட்ட வேளையில் உலகத் தமிழர்கள் பதறித்துடித்தனர். ஆனால் உலக நாடுகளில் எதுவும் நமது இரத்தத்தின் இரத்தமான ஈழத் தமிழர்களைக் காப்பாற்ற முன்வரவில்லை.
தமிழ்நாட்டுத் தமிழர்கள் மட்டும் சாதி, மத கட்சி வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட்டு நின்றிருந்தோமானால், நமது குரலுக்கு இந்திய அரசு செவி சாய்த்துத் தீரவேண்டிய கட்டாயத்திற்குள்ளாயிருக்கும். ஆனால் நமது ஒற்றுமைக் குறைவிற்காக நமக்குத் தண்டனை விதிக்கப்பட்டால் அது சரியானதாக இருந்திருக்கும். ஆனால் நாம் செய்த தவறுக்காக ஈழத் தமிழர்கள் தண்டிக்கப்பட்டனர். உலக நாடுகளில் பரவி வாழும் தமிழர்கள் தாய்த் தமிழகத்தையே நம்பியிருக்கிறார்கள் என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. நம்முடைய ஒற்றுமை நம்மையும் காக்கும்; உலகத் தமிழர்களையும் காக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்.
(19.10.22 அன்று காலை 11 மணிக்கு வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் பழ. நெடுமாறன் ஆற்றிய உரையின் எழுத்து வடிவாக்கம்)
No comments:
Post a Comment