Wednesday, October 11, 2023

மெக்காலே : பழமைவாதக் கல்வியின் பகைவன்

மெக்காலே: பழமைவாதக் கல்வியின் பகைவன் - முனைவர் இரா. சுப்பிரமணி - சாளரம் வெளியீடு - முதல் பதிப்பு 2023 - பக்கங்கள் 160 - விலை ரூ 180/

*  சமஸ்கிருதமே இந்திய மொழிகளுக்கெல்லாம் தாய் என்ற போலி பிம்பத்தை 1856ம் ஆண்டு உடைத்தெறிந்தவர் - கால்டுவெல் ! 

அவரது சிறப்பான ஆய்வு நூலான ' திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் ' உலகின் கண்களைத் திறந்து வைத்தது ! 

*  சமஸ்கிருதத்தையும், குருகுலத்தையும், வர்ணாசிரத்தையும் நம்பி, உயர் ஜாதி பிள்ளைகளுக்கு மட்டுமே கல்வி என்ற நடைமுறைக்கு 1835ம் ஆண்டு சமாதி கட்டியவர் - மெக்காலே ! 

அவரது ' ஆங்கில வழிக் கல்வி திட்ட முறை ' இந்தியர்களின் கல்விக் கண்ணை திறந்து வைத்தது !

*  யார் இந்த மெக்காலே ?

மெக்காலே அறிமுகப் படுத்திய ஆங்கில வழிக் கல்வி முறை நல்லதை செய்ததா ? அது  குமாஸ்தாக்களை உருவாக்குகின்ற கல்வி முறையா ? இந்தியாவின் அறிவுப் பாரம்பரியத்தை சிதைத்ததா ? அன்றைய இந்தியாவில் கல்வி நிலை என்ன ? ....போன்ற கேள்விகளுக்கு நிறைய நூல்களை ஆராய்ந்து விடை தந்துள்ளார் முனைவர் இரா. சுப்பிரமணி ! 

*  " மெக்காலே என்னும் ஆங்கில அதிகாரியை கொண்டாட வேண்டும் என்ற நோக்கில் இந்நூல் உருவாக்கப்படவில்லை. இந்திய தேசத்தின் கல்வி வரலாறு என்பது விருப்பு வெறுப்பற்ற நிலையில் வாசிக்கப்பட வேண்டும் என்பதாக எடுத்துரைக்கவே இந்த நூல் வெளி வந்துள்ளது ! ..." என்று தனது முன்னுரையில் குறிப்பிடுகின்றார் நூலாசிரியர் ! 

*  முதலில் ' யார் இந்த மெக்காலே ? ' என்ற கேள்விக்கு ஒரு சுருக்கமான அறிமுகம் இதோ : 

*  தாமஸ் பாபிங்டன் மெக்காலே ( 1800 - 1859 ).

மெக்காலே இங்கிலாந்தில் பிறந்தவர். பள்ளியில் சிறந்த மாணவர். 1818ல் கல்லூரிப் படிப்பு. சட்டம் பயின்றார். 1826ல் வழக்கறிஞரானார். சிறந்த கட்டுரைகளை எழுதியுள்ளார். 1830ல் நாடாளுமன்ற உறுப்பினரானார். அடிமைத்தனம், மூடநம்பிக்கை போன்றவற்றை தீவிரமாக எதிர்த்தார். மனிதாபிமான மிக்கவர் !

*  கிழக்கிந்திய கம்பெனியில் பணியாற்ற இந்தியாவுக்கு 1834ல் சென்று ,1838ல் இங்கிலாந்துக்கு திரும்பினார். உலகின் புகழ்பெற்ற நூலான ' இங்கிலாந்தின் வரலாறு ' நான்கு பாகங்களை எழுதி வெளியிட்டார். 1852ல் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தேர்வானார். 

1859ம் ஆண்டு டிசம்பர் 28ம் தேதி மரணமடைந்தார் ! 

*  இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனியை நிர்வகிக்கும் பொறுப்பில் ஆண்டு 1834 முதல் 1838 வரை இருந்தார். அப்போது அவருக்கு தரப்பட்ட முக்கியமான இரண்டு பணிகளை செய்து முடித்தார்.

1) இந்தியத் தண்டனைச் சட்டத்தை உருவாக்கியது !

2) இந்திய மக்களுக்கு எந்த மொழியில் கல்வி பயிற்றுவிப்பது என்ற நீண்ட விவாதத்திற்கு முற்றுப் புள்ளி வைத்த - ஆங்கில வழிக் கல்வியை சட்ட பூர்வமாக அறிமுகப்படுத்தியது ! 

*  மெக்காலேயின் ஆங்கில வழிக் கல்விமுறையை பரிந்துரைத்த 13 பக்க கல்விக்

 குறிப்பு, இந்தியாவின் கவர்னர் ஜெனரல் வில்லியம் பெண்டிங் பிரபுவிடம் 02.02.1835 அன்று சமர்பிக்கப்பட்டது . அதை ஆங்கிலேய அரசு 07.03.1835 அன்று ஏற்றுக் கொண்டது ! 

*  ஏறத்தாழ இருநூறு ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியாவில் கல்வி என்ற பெயரால் நடந்த வெட்கக் கேட்டை , மெக்காலே தனது 13 பக்க கல்விக் குறிப்பில் எழுதப்பட்டதிலிருந்து சில தகவல்கள் : 

*  " இங்கிலாந்திலுள்ள ஒரு இலாடக்காரன் கூட ஒப்புக் கொள்ள வெட்கும்படியான மருத்துவ முறைகளும் ; இங்கிலாந்திலுள்ள பாடசாலைகளில் படிக்கும் சின்னஞ்சிறிய சிறுமியருக்கும் நகைப்பை உண்டாக்கும் விபரீதமான வான சாஸ்திரங்களும் ;  முப்பதடி உயரமுள்ள அரசர்கள் அறுபதாயிரம் வருஷம் ஆண்ட வரலாறுகளைக் கொண்ட சரித்திரமும் ; பாற் கடலும், நெய் கடலும் கொண்ட பூகோள சாஸ்திரமும் இங்குக் காணப்படுகின்றன ! " ....

*  மெக்காலே மேலும் சொல்வதைக் கேளுங்கள் :

" இப்படி பலவிதமான முரண்பாடுகளுடன் இந்தியாவில் நிலவி வந்த சமஸ்கிருதக் கல்வி முறை என்பது திட்ட மிட்டு, இந்தியாவை இருளில் வைக்க சிறப்பாகத் திட்டமிட்ட முறையாகும் ( The Sanskrit system of Education would be the best calculated to keep the country in darkness ) " ....மெக்காலேயை சங்கிகள் வெறுப்பதற்கு இது தானே காரணம் ! 

*  மெக்காலேயின் கல்வித் திட்ட நிலைப்பாட்டில் சில கூறுகள் : 

1)  ஆங்கில வழிக் கல்வியை பயிற்று மொழியாக கொள்ள வேண்டும்.

2)  ஆங்கில பள்ளிகளில் தாய் மொழியும் கற்பிக்கப் படவேண்டும்.

3)  இந்து, முஸ்லிம் சமூகப் பிள்ளைகள் ஒன்றாக கல்வி கற்க வேண்டும்.

4)  இந்து பண்டிகையின் போது இஸ்லாமிய பிள்ளைகளுக்கும், இஸ்லாமிய பண்டிகையின் போது இந்து பிள்ளைகளுக்கும் விடுப்பு அளிக்க வேண்டும்.

5)  ஆங்கிலேயர் பிள்ளைகளும் இந்தியர்களின் பிள்ளைகளும் ஒரே பள்ளியில் படிக்க வேண்டும்.

6)  நிற பேதம், சாதி பேதம், சமய பேதம் கல்வி கூடங்களில் இருக்கக் கூடாது.

7)  30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதம் இருக்க வேண்டும்.

8)  ஆசிரியர்கள் மாணவர்களை அடிப்பதை தடுக்க வேண்டும்.

9) ‌ ஆசிரியர்களுக்கு நல்ல ஊதியம் வழங்க வேண்டும்.

10) மாணவர்களை மையப்படுத்தியே பள்ளிகளும், கல்வியும், பாடங்களும், கற்பித்தலும் அமைய வேண்டும்.

*  பிராமணர்களின் குருகுல கல்விக்கும், சமஸ்கிருத கல்விக்கும் முடிவுரை கட்டினார் என்பதாலேயே மெக்காலேயை சனாதனிகளும், சாதி வெறியர்களும், சமத்துவத்தை எதிர்ப்பவர்களும், கடுமையாக தொடர்ந்து விமர்ச்சிக்கின்றார்கள் ! 

*  மெக்காலே என்ற அந்த ஆங்கிலேயனின் தீர்க்கமான அறிவின் வெளிச்சத்தின் காரணமாக இந்தியாவில் மத நீக்கல் கல்வி அமலானது ! 

ஒருவேளை அப்படி நடக்காமல் இருந்தால், இந்தியா ஓரு மத வழிப்பட்ட நாடாக மாறி, இன்றைய ஆப்கானிஸ்தான் போல மாறி இருக்கும் என்று சமூகவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள் ! 

*  இந்த சிறந்த ஆய்வு நூலை எழுதி நமக்கு வழங்கியுள்ள முனைவர் இரா. சுப்பிரமணி அவர்களை பகுத்தறிவு உலகம் பாராட்ட கடமைப்பட்டுள்ளது ! 

தொட்டாலே தீட்டு என்று தூரத்தில் நிறுத்தியது - வர்ணாசிரமம் ! 

பட்டாலே நூலை அணிந்த பார்ப்பனரை உயர்த்தியது - 

சனாதனம் ! 

மூக்காலே முணுமுணுக்கும் சமஸ்கிருதம் ஆதிக்கத்தின் மொழியானது - ஆரியர்களால்!

மெக்காலே முன்னெடுத்த ஆங்கிலம் அனைவரின் மொழியானது - ஆங்கிலேயர்களால் !

பொ. நாகராஜன்,

பெரியாரிய ஆய்வாளர்,

சென்னை - 09.10.2023

********************************************

No comments:

Post a Comment