சேரமா தேவி குருக்குலம்
- தந்தை பெரியார்
பெரியோர்களே! தாய்மார்களே!
அந்தக் காலத்து எங்கள் சக்திக்கு ஒரு சிறு உதாரணம் சொல்லுகிறேன் - கேளுங்கள்! நான் காங்கிரசுக் காரியதரிசியாயும், தலைவனாயும் இருந்த காலங்களில் தமிழ்நாட்டு வாலிபர்களை தேசிய வீரர்களாக்கவென்று வி.வி.எஸ். அய்யர் என்னும் ஒரு தேசியப் பார்ப்பனர் காங்கிரசை 10,000 ரூபா கேட்டபோது, அதற்கு நானே பிரதானமாய் இருந்து ரூபா அனுமதித்தேன்.
அந்தப் பணம், குருகுலம் என்று ஒரு ஆசிரமம் வைத்து, அதில் பார்ப்பனப் பிள்ளைகளை வீட்டிற்குள் வைத்தும், பார்ப்பனரல்லாத பிள்ளைகளை வெளியில் வைத்தும் சாப்பாடுபோட்டு வருணாசிரம தருமம் கற்றுக் கொடுக்கப் பயன்பட்டதுடன், அதன்பேரால் தமிழ் மக்களிடம் மற்றும் 20, 30 ஆயிரம் ரூபா வசூல் செய்யப்பட்டது.
அதற்குத் தமிழ்நாடும், நவசக்தியும் ஆதரவு அளித்தன.
இந்தச் சூழ்ச்சியான அக்கிரமம் சகிக்காமல் நான், முதலியார் அவர்களிடம் மாயவரத்தில் வருத்தத்தைத் தெரிவித்துக்கொண்டேன்.
அப்போது அவர்கள் டாக்டர் நாயுடு அவர்கள் பேரில் புகார் சொல்லி, நாயுடு அவர்கள் 'தமிழ்நாடு' பத்திரிகையில் ஆதரிப்பதால் நான் ஆதரிக்கவேண்டியிருக்கின்றது என்றார். இருவரும் நாயுடு அவர்களிடம் தெரிவித்துக் கொண்டோம். அவ்வளவுதான் சங்கதி.
உடனே டாக்டர், குருகுலத்தின்மீது போர்தொடுத்தார். தமிழ்நாட்டுப் பார்ப்பனர் கள் தோழர்கள் இராசகோபாலச்சாரியார், சீனிவாச அய்யங்கார் உள்பட எல்லோரும் நாயுடு அவர்களுக்கு விரோதமாய் எவ்வளவோ தொல்லைகள் விளைவித்தும் பயன்படாமல், கடைசியில் குருகுலம் அடியோடு அழிந்தும் அதில் இப்போது படைக்கள்ளியும், நெருஞ்சில் முள்ளும் வளரும்படி, பாம்பும் பூச்சியும் வாழும்படி ஆகிவிட்டது.
(ஈரோட்டில், 26.11.1933இல் சொற்பொழிவு, புரட்சி 3.12.1933)
No comments:
Post a Comment