Friday, November 10, 2023

'நிர்வாணம்' குறித்து பெரியார்

 நிர்வாணம் என்பது என்ன? பெரியாரின் விளக்கம் ஆக முக்கியமான ஒன்று

- பேரா. அ. மார்க்ஸ்

(தந்தை பெரியார் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டிருந்தபோது நிர்வாண சங்கம் ஒன்றில் பங்கேற்ற  முழு நிர்வாணப் புகைப்படம் ஒன்று உண்டு. அது குறித்து அல்ல இந்தப் பதிவு.  இது ”நிர்வாணம்” என்கிற தத்துவார்த்தக் கோட்பாடு குறித்த பெரியாரிய விளக்கம்.)

பெரியார் ஈ.வெ.ரா அவர்களை எல்லோரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு கடவுள் மறுப்பாளர் (Atheist) என்று மட்டுமே நினைத்துக் கொண்டுள்ளனர். அது மிகவும் தவறு. அது அவரைச் சுருக்கிப் பார்ப்பது.          அவர் கடவுள் மறுப்பாளரும்தான். ஆனால் அவரின் பரிமாணங்கள் இன்னும் பல. கற்பு, தேசியம், ஒழுக்கம், சாதி, மதம், கடவுள் எனப் புனிதமாகக் கட்டமைக்கபட்ட அனைத்தையும் எதிர்த்தவர். பல்லாயிரக் கணக்கான மக்கள் என்ன நினைப்பார்களோ என எண்ணாமல் அவற்றை விமர்சித்தவர். 

தன்னை அவர் ஒரு “நிர்வாணமான” சிந்தனையாளன் என்றார். இந்திய அவைதிக மதங்களான பௌத்தம், சமணம் முதலானவை முன்வைத்த “நிர்வாணம்” எனும் கருத்தை அவர் , 

"ஏற்கனவே சமூகம் நம் சிந்தனையிலும், நம்பிக்கைகளிலும் திணித்துள்ள அபத்தங்களை நீக்கி நிர்வாணம் ஆக்கிக் கொள்வது” 

எனும் கருத்தில் மொழிந்தார். அதாவது “நிர்வாணமான சிந்தனை” உடன் ஒவ்வொன்றையும் அணுக வேண்டும் என்றார். அதாவது சமூகம் நம் மீது திணித்துள்ள (மூட) நம்பிக்கைகளை ஒதுக்கிவிட்டு ஒவ்வொன்றையும் (எடுத்துக்காட்டாகக் ‘கற்பு’) உன் சுய சிந்தனையுடன் அணுக வேண்டும் என்றார்.

”பற்றறுத்தல்” – என்பதற்கும் அவர் புதிய பொருளை முன்மொழிந்தார்: மூன்று பற்றுக்களை நாம் விட்டொழிக்க வேண்டும் என்றார். அவை : 

”தேசாபிமானம், பாஷாபிமானம், மதாபிமானம்” – 

அதாவது தேசப்பற்று, மொழிப்பற்று, மதப் பற்று – இவற்றை விட்டொழிக்க வேண்டும் என்றார். மொத்தத்தில் அவர் எந்தப் பற்றையுமே ஏற்கவில்லை.

தேசம் என்பதை அவர் ஒரு “கற்பிதம்” என்றார். Nation என்பதை ஆண்டர்சன் போன்ற நவீன சிந்தனையாளர்கள் சில ஆண்டுகளுக்கு முன் “Imagined Community” எனச் சொன்னதை அறிவோம். ஒரு முக்கியமான கருத்தாக்கமாக இன்றளவும் உலகெங்கும் கருதப்படுகிறது. ”தேசம் ஒரு கற்பிதம்” என்பதன் ஊடாகப் பெரியார் அதை ஒரு நூற்றாண்டுக்கு முன்பே சொன்னார். “நான் ஒரு தேசத் துரோகி” என்றும் சொல்லிக் கொண்டார். 

இந்த நாட்டுக்கு “காந்தி தேசம்” என்று பெயர் வைக்க வேண்டும் எனச் சொன்னர். ஆம். காந்தியை மிகச் சரியாக மதிப்பிட்டார்.

காலமெல்லாம் ”பகுத்தறிவு” பற்றிப் பேசி வந்த அவர் 

அதையும் de-construct பண்ணத் தயங்கவில்லை. 

‘'பகுத்தறிவு, ஒழுக்கம், தியாகம், பொது நன்மை, பொது நோக்கு… எல்லாமே வெங்காயங்கள்தான்” - -என்றும் அவர் கூறியது உண்டு. 

தமிழை அவர் ”காட்டுமிராண்டி மொழி” என்றதை நீங்கள் அறிவீர்கள். 

காலமெல்லாம் பகுத்தறிவு குறித்துப் பேசிய அவர்தான்: “ இந்தப் பகுத்தறிவை வைத்துக் கொண்டு மனிதன் என்ன பண்ணினான்?” – என்றும் கேட்டார்.

“தன் பிள்ளை குட்டி, பேத்தி, பிதுர் ஆகிய பிந்திய சந்ததிகளைப் பற்றிய முட்டாள்தனமான கவலை பகுத்தறிவுள்ள மனிதனுக்குத்தான் இருக்கிறதே ஒழிய பகுத்தறிவு இல்லாதவைகளுக்கு இல்லை…. பகுத்தறிவில்லாத எந்த ஜீவராசியும் தன் இனத்தை வருத்தி வாழ்வதில்லை. தன் இனத்தின் உழைப்பில் வாழ்வதில்லை (அதாவது சுரண்டுவது இல்லை), தன் இனத்தின் மீது சவாரி செய்வது இல்லை.”

--- தோழர்களே! பெரியார் நாம் நினைப்பதுபோல அத்தனை எளிதானவர் இல்லை. அவர் ஒரு Philosopher, அதே நேரத்தில் களத்தில் இருந்தவர்.

No comments:

Post a Comment