Saturday, December 2, 2023

ஸ்டெர்லைட் எதிர்ப்பு - திருமுருகன் காந்தி

 ‘‘ஸ்டெர்லைட் எதிர்ப்பு என்பது ஒரு சர்வதேசப் பிரச்னை. தூத்துக்குடியில் நடந்த படுகொலை ஒரு சர்வதேசக் குற்றம்’’ என்கிறார் மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி. ஐரோப்பிய நாடுகளின் அரசியல் கட்சிகளிடமும், அங்கிருக்கும் அமைப்புகளிடமும் தொடர்ந்து பேசி, கோரிக்கைகளை முன்வைத்து இதை ஒரு சர்வதேசப் பிரச்னையாகக் கொண்டுசெல்லும் வேலைகளில் இறங்கியுள்ளது மே 17 இயக்கம். இதற்காக ஜெர்மனியில் இருக்கும் திருமுருகன் காந்தியைத் தொடர்புகொண்டு பேசினோம்.

‘‘வேதாந்தா என்பது ஐரோப்பிய ஒன்றியத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஒரு நிறுவனம். இப்படிப் பதிவு செய்தால், சில முக்கியமான சுற்றுச்சூழல் மற்றும் மனித உரிமை விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டியது அவசியம். ஆனால், வேதாந்தா அதைப் பல நாடுகளிலும் மீறியுள்ளது. ஜெர்மனியில் இருக்கும் ‘டை லிங்க்’ (Die Linke) எனும் முக்கிய அரசியல் கட்சியின் உறுப்பினர் களைச் சந்தித்து ஸ்டெர்லைட் விஷயம் குறித்து எடுத்துரைத்தோம். இந்தப் பிரச்னைகளைக் கேட்டு அவர்கள் அதிர்ச்சியடைந்துவிட்டார்கள். உல்லா ஜெல்பெக் (Ulla Jelpke) எனும் ஜெர்மானிய நாடாளுமன்ற உறுப்பினரிடமும் இந்தப் பிரச்னை குறித்து எடுத்துரைத்தோம். இன்னும், ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த பல அமைப்புகளிடமும் இந்தப் பிரச்னையைத் தொடர்ந்து கொண்டு செல்கிறோம். இதையெல்லாம் செய்வதற்கு முக்கியக் காரணம், ஸ்டெர்லைட் படுகொலை குறித்து ஐரோப்பிய நாடுகளின் நாடாளுமன்றங்களிலும், பிரிட்டன் பாராளுமன்றத்திலும் விவாதிக்க வேண்டும் என்பதுதான்’’ என்றார் அவர்.

ஸ்டெர்லைட் பிரச்னையைப் புரிந்து கொள்வதற்கு, நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய சம்பவம் இது...

 2012 ஆகஸ்ட் 16-ம் தேதி. தென்னாப்பிரிக்காவின் மரிக்கானா எனும் சிறு நகரம். அந்தப் பகுதியில் தங்கம், வைரம், பிளாட்டினம் உள்பட பல சுரங்கங்களும், உருக்காலைகளும் இயங்குகின்றன. அவற்றில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சரியான சம்பளம் இல்லை. சூழலுக்கும் உயிருக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் இந்தச் சுரங்கங்களில் சரியான பாதுகாப்பு வசதிகள் இல்லை. எனவே, தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சுரங்கத் தொழிலாளர்களும், அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்களும் போராடுகிறார்கள். அது லொன்மின் எனும் பிரிட்டிஷ் கம்பெனிக்கு எதிரான போராட்டம். ‘நிறுவனம் இறங்கி வந்து எங்களிடம் பேச வேண்டும். எங்கள் கோரிக்கைகளை ஏற்க வேண்டும்’ என்பதுதான் அவர்களின் குரல். 

ஆகஸ்ட் முதல் வாரத்திலிருந்து போராட்டம் நடந்து வருகிறது. குறிப்பிட்ட அந்த 16-ம் தேதி, மக்கள் கூட்டம் கூட்டமாக உட்கார்ந்தபடி போராட்டப் பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தனர். அப்போது, அந்தப் பாடல்களுக்கு நடுவே துப்பாக்கிக் குண்டுகளின் சத்தம் கேட்கிறது. போராட்டம் உக்கிரமாகிறது. மக்களை அணி பிரிக்கிறது காவல்துறை. சிறு சிறு கும்பலாக அவர்களை ஒதுக்கி துப்பாக்கிச்சூடு நடத்துகிறது. பலரைக் குறிவைத்துக் கொல்கிறது. போராட்டத்தை முன்னின்று நடத்திய மெக்சினேனி நொகி என்பவரின் முகத்திலும் கழுத்திலும் 14 குண்டுகள் பாய்ந்தன. மொத்தம் 34 பேர் கொல்லப்பட்டனர். 112 பேர் குண்டு பாய்ந்து படுகாயமடைந்தனர்.

சமூக விரோதிகள்’ புகுந்தது காவல்துறையைத் தாக்கினர்... பொதுச் சொத்தை சேதப்படுத்தினர்... என தூத்துக்குடியில் சொல்லப்பட்ட அத்தனை கதைகளும் தென்னாப்பிரிக்கா விலும் சொல்லப்பட்டன. ஆனால், சம்பவம் முடிந்த சில நாள்களில் சில வீடியோக்கள் வெளியாகின. போலீஸாரின் அத்துமீறல்களை அவை அம்பலப்படுத்தின. லொன்மின் நிறுவனத்துக்கு எதிரான போராட்டத்தைத் தொடர்ந்து ஆங்கிலோ அமெரிக்கன் கோல்டு, ஆங்கிலோ அமெரிக்கன் பிளாட்டினம், ஆங்கிலோ கோல்டு ஆஷாந்தி எனப் பல நிறுவனங்களை எதிர்த்துப் போராட்டம் பரவியது. ஆங்கிலோ அமெரிக்கன் கம்பெனிக்கு எதிரான போராட்டத்திலும் ஒரு பெண் உள்பட சிலர் படுகொலை செய்யப்பட்டனர். 

2012-ம் ஆண்டு முழுக்கவே தென்னாப்பிரிக்காவில் இதுபோன்ற போராட்டங்களும் உயிரிழப்புகளும் அதிகம் நிகழ்ந்தன. ஆப்பிரிக்க தேசிய இளைஞர் காங்கிரஸ் இந்த சம்பவங்களை இப்படிக் குறிப்பிடுகிறது... ‘பெரு நிறுவனங்களின் பொறுப்பற்ற, உணர்வற்ற, மனிதநேயமற்ற தன்மையைத்தான் இந்த நிகழ்வுகள் காட்டுகின்றன. இந்த நிறுவனங்கள் தொழிலாளர்களின் ரத்தத்தையும் வியர்வையையும் கண்ணீரையும் உறிஞ்சி மிகப் பெரிய லாபம் ஈட்டியுள்ளன. அவர்களின் இந்த வளர்ச்சிக்கு உதவிய தொழிலாளர்களின் உயிரை, அதிகார பலத்தைக் கொண்டு ஈவு இரக்கமற்று பறித்திருக்கின்றன. இந்த நிறுவனங்கள் இந்த தேசத்தின் அவமானம்.’

இங்கு சில விஷயங்களைக் கவனிக்கவேண்டியது அவசியம். ஆங்கிலோ அமெரிக்க நிறுவனத்தின் 21 சதவிகித பங்குகள், ஸ்டெர்லைட் நிறுவனத்தை நடத்தும் வேதாந்தா குழுமத்தின் அதிபர் அனில் அகர்வாலிடம் இருக்கின்றன. மிக முக்கியமான விஷயம்... ஆங்கிலோ அமெரிக்கன் கம்பெனியின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த ஸ்ரீனிவாசன் வேங்கடகிருஷ்ணன், இந்த ஏப்ரல் மாதம் முதல் வேதாந்தா நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிறுவனங்களால் தென்னாப்பிரிக்காவில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகளுக்கும் தூத்துக்குடி படுகொலைகளுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

வேதாந்தா குழுமத்துக்கு எதிராக ஜாம்பியா, ஆஸ்திரேலியா, அயர்லாந்து உள்பட உலகின் பல நாடுகளிலும் தொடர்ந்து போராட்டங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. இந்தியாவிலும் சட்டீஸ்கர், ஒடிஷா, கோவா உள்பட பல இடங்களிலும் போராட்டங்கள் நடக்கின்றன.

இந்தப் பிரச்னையை ஐரோப்பாவுக்குக் கொண்டுசெல்ல வேண்டிய அவசியம் என்ன’ என்ற கேள்விக்கும் தெளிவான பதில் வைத்திருக்கிறார் திருமுருகன் காந்தி. ‘‘உலக அளவில் வேதாந்தா நிறுவனம் கனிம வளங்களை எடுப்பதில் மிகப் பெரிய நிறுவனமாக இருக்கிறது. அவர்களை எதிர்க்க பெரிய பலம் வேண்டும். இந்தியாவின் அத்தனை அதிகார மட்டங்களும் வேதாந்தாவுக்கு ஆதரவாகத்தான் செயல் படுகின்றன. அதனால், நமக்கு நீதி கிடைக்குமா என்ற கேள்வி எழுகிறது. எனவே, இந்தப் பிரச்னையில் சர்வதேச கவனத்தை ஈர்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது. 

மேலும், வேதாந்தா பிரச்னை இந்தியாவில் இதோடு முடிந்துவிடாது. ‘நிலங்களுக்கு அடியில் இருக்கும் வளங்களைச் சுரண்டி எடுப்பதுதான் எங்கள் நோக்கம்’ என்பதை ஒரு பேட்டியில் அனில் அகர்வால் வெளிப்படையாகக் கூறியுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்னர் ‘கெய்ர்ன் லங்கா’ (CAIRN Lanka) எனும் நிறுவனத்தை வாங்கி, இலங்கையில் எண்ணெய் எடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது அந்த நிறுவனம். இதேபோல இந்தியாவிலும் ‘கெய்ர்ன் இந்தியா’ (CAIRN India) என்ற நிறுவனம் 2007 முதல் இயங்கி வருகிறது. காவிரி டெல்டா மாவட்டப் பகுதிகளில் எண்ணெய் மற்றும் எரிவாயுக்களை எடுக்கும் திட்டங்கள், தமிழக கடற்கரைப் பகுதிகளில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைப்பது போன்றவற்றின் பின்னணியில் வேதாந்தாவின் கைகள் இருக்கலாம். தூத்துக்குடியில் திட்டமிட்ட ஒரு படுகொலையை நிகழ்த்தி விட்டு வேதாந்தா நிறுவனம் தப்பிவிட முடியாது. அவர்களை உலகின் மனச்சாட்சிக்கு முன் நாம் நிறுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது’’ என்று கோபத்துடன் சொல்லி முடிக்கிறார் திருமுருகன் காந்தி. 

- இரா.கலைச்செல்வன்

ஜூனியர்  விகடன்

No comments:

Post a Comment