மாவோவின் நெடும்பயணம் - 2
சீன வரலாற்றில் விவசாயிகள் கிளர்ச்சி ஒரு பெரும் பங்கை வகிக்கிறது. பெரும்பாலான பேரரசர்கள், தம் மக்களிடமிருந்து வரி வசூல் கெடுபிடி, கட்டாய ராணுவ சேவை, கட்டாய உழைப்பு ஆகிய நடவடிக்கைகள் காரணமாக விவசாயிகள் கிளர்ச்சியும் கலமும் நடைபெற்றன.
இத்தகைய விவசாயிகள் எழுச்சி முதன் முதலில் ஷேண்டங் மகாணத்தில் கி.பி.18 ஆம் ஆண்டில் தொடங்கிய சிவப்பு புருவங்கள் ஆகும். புரட்சியாளர்களின் குழுக்கள் தங்கள் புருவங்களில், புரட்சியின் அடையாளக் குறியீடாக, சிவப்பு வண்ணத்தை தீட்டுக் கொண்டு, அரசு அதிகாரிகளையும் நிலப் பிரபுக்களையும் கொன்று குவித்தனர். இக் கிளர்ச்சி கி.பி.25 ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்தது.
பின்பு கி.பி.184 இல் 'மஞ்சள் தலைப்பாகைகள்' கிளர்ச்சி தொடங்கியது. ஒரு குறிப்பிட்ட மதம், சித்தாந்தத் தலைமை உருவானது.
கி.பி. 589 இல் சூய் அரசகுலம், டாங் அரசகுலம் ஆட்சிக்கு வந்தது. பண்ணை நிலங்களின் சமமான விநியோகத்தையும், விவசாயிகளின் உடைமையும் பாதுகாத்தது. கி.பி. 860 இல் செக்கியாங் மகாணத்தில் பஞ்சம் ஏற்படுத்திய பேரழிவு மீண்டும் ஒரு விவசாயிகள், படிப்பாளிகள் கிளர்ச்சியை தோற்றுவித்தது. கி.பி. 960 இல் சுங் அரசகுலம் நிறுவப்படும் வரை இது தொடர்ந்தது. கி.பி. 1280 இல் மங்கோலியர் படையெடுப்பு நடைபெற்றது. பின் வாரிசு வகையில் துறவியான சூ யுவான் - சாங் என்ற விவசாயியால் மங்கோலியர்கள் தூக்கி எறியப்பட்டனர். அத்துறவி மிங் அரச குலத்தின் முதல் பேரரசன்.
சீனாவின் வடக்கில் மஞ்சுக்களின் படையெடுப்பு, ரகசியக் குழுக்களின் நடவடிக்கைகள் ஆகியவற்றோடு விவசாயிகள் எழுச்சியும் சேர்ந்து மிங் வம்சத்தை முடிவுக்கு கொண்டு வந்தன.
மஞ்சு அல்லது சிங் வம்சம் தொடக்கத்தில் புகழ்மிக்க ஒன்றாக விளங்கியது. சி யென்- லுங் காலத்தில், 18 ஆம் நூற்றாண்டில் மிகப் புகழ் பெற்று விளங்கியது.
பதினெட்டாம், பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் 'வெண்தாமரை', 'சொர்க்கத்தின் சட்ட சங்கம்' போன்ற ரகசியக் குழுக்கள் செயல்பட்டன. இதில் முதன்மையானது 'டாய்பிங்' எழுச்சியாகும்.
டாய்பிங்குகள் , பல அம்சங்களில் காலத்துக்கு முந்தியவர்களாக இருந்தார்கள். நிலங்களையும், உணவையும், உடையையும் தங்களுக்குள் நியாயமாகப் பகிர்ந்து கொண்டார்கள்.
அபின், புகைப்பிடித்தல், காலங்காலமாக இருந்து வந்த பழக்கமான பெண்களின் பாதங்களை கட்டி வைப்பது போன்றவற்றிக்கு எதிராக இருந்தார்கள். பெண் விடுதலை, விதவை மறுமணம் ஆகியவற்றிற்கும் குரல் கொடுத்தனர்.
சொத்தில் மீதுள்ள எல்லாப் பற்றுக்களையும் துறந்தார்கள்.
ஒரு நூற்றாண்டுக்குப் பின்னர் பொதுவுடமையாளர்கள் செய்தது போல பெரும் நகர்ப்புற மையங்களின் எதிர்ப்பைப் புறக்கணித்து கிராமப் புறங்களில் தங்களது ஆதரவைக் கட்டியமைத்தார்கள்.
"உலகின் நிலம் உலகின் மக்களால் பொதுவில் உழப்பட வேண்டும்" என்று டாய்பிங்கின் பாடநூல் ஒன்று கூறியது.
"இங்கே நமக்குப் பற்றாக்குறையிருந்தால் மக்கள் வேறு பகுதிக்குக் குடிபெயர்க்கப்பட வேண்டும். இதேபோல பிற இடங்களில் இப்படிச் செய்தால் ஒரு பகுதியின் உபரி இன்னொரு இடத்தின் பஞ்சத்தைப் போக்கலாம். சொர்க்கத்திலிருக்கும் தந்தையாகிய கடவுளால் வழங்கப்பட்ட மகிழ்ச்சியை உலகம் முழுவதும் அனுபவிக்க வேண்டும்.
நிலம் உணவு, உடை மற்றும் பணம் அனைத்தும் பொதுவில் வைக்கப்பட்டு பயன்படுத்தப்பட வேண்டும்; அதனால் சமத்துவமின்மை என்பது எங்கும் இருக்காது; யாரும் உணவோ, கதகதப்பான ஆடையோ இன்றி எங்கும் இருக்கமாட்டார்."
ஒரு கட்டத்தில் சீனாவின் தென்பாதியை 'டாய்பிங்குகள்' வசப்படுத்தியிருந்தனர். 1853இல் அவர்கள் தங்கள் தலைநகரத்தை 'நான்கிங்'கில் நிறுவினார்கள். ஆனால் அவர்களிடம் பயிற்சி பெற்ற நிர்வாகிகள் இல்லாததால் தாங்கள் ஆட்சிசெய்த கிராமப்புறங்களுக்கு எந்த முறைப்படுத்தப்பட்ட அமைப்பையும் உருவாக்கித் தர முடியவில்லை. மேலும் அவர்கள் தங்களது தீவிர நம்பிக்கைகள், விநோதமான பழக்க வழக்கங்கள் மற்றும் ஒரு அந்நிய நம்பிக்கையைப் பின்பற்றியமை காரணமாகப் பல கற்றறிந்த சீனர்களைத் துரத்தி விட்டிருந்தனர்.
அவர்களது வளர்ந்து வந்த மூர்க்கம் மற்றும் ஒரு தெய்வீக லட்சியத்தின் நம்பிக்கை ஆகியவையும் அவர்களை சாங்காய், கான்டோன் மற்றும் பிற உடன்படிக்கைப் பகுதிகளில் வலுவாகக் காலூன்றியிருந்த மேலைநாட்டு சக்திகளிடமிருந்து அந்தியப்படுத்தியிருந்தது.
சீனாவிலிருந்த பல மேலை நாட்டினர், டாய்பிங் இயக்கம் வாழ்க்கையின் மீதான நவீனப் பார்வையைக் கொண்டிருந்த அடையாளங்களைக் காட்டியதால் அதனை ஆரம்பத்தில் ஆதரித் திருந்தாலும், இறுதியில் அவர்களின் கலகத்தை நகக்குவதில் பேரரசின் உதவிக்கு வந்தனர். 'அரசப் பொறியாளர்கள்' (ராயல் என்ஜினியர்கள்) தலைவர் சார்லஸ் கோர்டான் என்பவர் டாய்பிங் படைகளின் இறுதித் தோல்விக்கு ஒரு முக்கியப் பங்காற்றினார்!
டாய்பிங்குகள், ஒரு நூற்றாண்டுக்குப் பின் வந்த பொதுவுடைமையாளர் களை தெய்வீகச் சாயலில் இளம் காட்டியிருந்தனர். அவர்களும் அதே இக்கட்டான நிலைமையைச் சந்தித்தனர்.
1852இல் டாய்பிங்குகள் மஞ்கு பேரரசனை பதவியிறக்குவதற்கு வூகானிலிருந்து வடக்கு நோக்கி அணி வகுத்து இருக்க முடியும். ஆனால் வாய்ப்பை தவற விட்டார்கள்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் நடைபெற்ற குத்துசண்டையர் கலகம் தோல்வி அடைந்தது. சிங் வம்சம் முடிவுற்றது.
1898 இல் ஷாண்டுங் மாகாணத்தில் ஒரு ரகசிய குழுவாக குத்துச்சண்டை யர் கலகம் தோன்றியது.
குத்துச் சண்டையர் கலகம், மஞ்சூ எதிர்ப்பு மற்றும் அந்நிய எதிர்ப்பு என்பதாகத்தான் தொடங்கியது.
ஆனால் புகழ்பெற்ற டாவேஜர் ஜு சி என்ற பேரரசி கலகத்தின் பேரரசு எதிர்ப்பு சக்திகளை மழுங்கச் செய்வதில் வெற்றியடைந்தார். பின்னர் அச்சக்திகள் தேசியவாத, அந்நிய எதிர்ப்பு சக்திகளாக மட்டுமே ஆயின.
இவ்விதமாக அது 1900ஆம் ஆண்டில் பீகிங்கில் புகழ்பெற்ற அந்நியத் தூதரகங்களின் முற்றுகையின்போது சிகரத்தை அடைந்தது. அந்த முற்றுகை ஐரோப்பாவில் இருந்து அனுப்பப்பட்ட ஒரு வலிமை வாய்ந்த சர்வதேசப் படையினால் தான் அகற்றப்பட்டது.
'குத்துச்சண்டையர் கலகம்' தோல்வி யடைந்தது. ஆனால் குத்துச்சண்டையர் கள்தான் நவீன சீனாவின் தேசியவாதத்தை உண்மையில் தோற்றுவித்தவர்கள். சீனக் கருத்துக்களில் இந்தக் கலகம் ஒரு தொடர்ந்து வளர்ந்த செல்வாக்கைப் பெற்றிருந்தது.
அது 'கோமின்டாங்' தேசியக்கட்சியின் நிறுவனராகிய சன் யாட்-சென்னின் கீழ் இருந்த தீவிரப் புரட்சிகரக் குழுக்களின் நிலைமையைப் பெரிதும் பலப்படுத்தியது. மஞ்சூ வம்சத்தைத் தூக்கியெறிந்த 1911-12-ன் புரட்சிக்குக் கட்டியங் கூறுவதாக குத்துச்சண்டையர் கலகம் அமைந்தது.
விவசாயிகளைத் தமது முதன்மையான ஆதரவாளர்களாகக்ப்கொண்டு ஒன்று அல்லது பல தளப்பிரதேசங்களிலிருந்து நீண்ட இராணுவப் போராட்டத்தின் பாரம்பரிய விவசாயிகள் கிளர்ச்சியின் ஒரு உருமாதிரியை (வரைபடத்தை) இந்த சீனாவின் சுருக்கமான வரலாறு எடுத்துக்காட்டுவதாக பொதுவுடைமையரல்லாத 'மாசேதுங்கின் வாழ்க்கை வரலாற்று ஆசிரியர் ஜெரோம் செ-யென்' குறிப்பிடுகிறார்.
நெடும் பயணத்திலிருந்த மாவோவும் பொதுவுடைமைத் தலைமையிலிருந்த அவரது கூட்டாளிகளும் விவசாயிகளின் முந்தைய யுத்தங்களின் கதாநாயகர்களின் ஆழ்ந்த செல்வாக்குக்கு ஆட்பட்டிருந்தனர்.
மாவோ தனது படைப்புகளிலும் உரைகளிலும் பற்பல குறிப்புகளைத் தருகிறார்.
உதாரணமாக, வடக்கு சங் வம்சத்தின் இறுதிப்பகுதியில் ஒரு விவசாயிகள் எழுச்சியைத் தலைமைதாங்கி நடத்திய 'லி குவெயின்' பற்றிக் குறிப்பிடுகிறார். லி குவெயின் வீரச் செயல்கள் 'நீர் எல்லை' என்ற புகழ்பெற்ற சீன நாவலில் வர்ணிக்கப்பட்டிருந்தன. அந்நாவல் 'மனிதர்கள் யாவரும் சகோதரர்களே' என்ற தலைப்பில் 'பேர்ல் பக் 'அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.
'நெடும் பயணம்' முழுவதும் மாவோ தன்னோடு எடுத்துச்சென்று படித்த
ஒரு சில நூல்களில் இதுவும் ஒன்றாக இருந்தது.
சீனாவில் உயர்நிலையை அடைவதற்காக பொதுவுடைமையாளர்கள் போராடிக் கொண்டிருந்த சமயம், முன்னர் நடந்த பல புரட்சிகளின் காலக்கட்டத்தைப் போலவே சீன விவசாயிகளின் நிலைமை மோசமாக இருந்தது.
ஒரு சீன விவசாயப் பண்ணை சராசரி அளவு 3.3 ஏக்கர்களாக இருந்தது. அதிலிருந்து ஒரு வயது விவசாயி ஆண்டு ஒன்றுக்கு 65 யுவான்கள் (அல்லது 16 அமெரிக்க டாலர்கள்)தான் வருவாய் ஈட்ட முடிந்தது. நிலப்பிரபு வழக்கமாக இதில் பாதியை எடுத்துக்கொண்டான் மீதிப் பாதி அந்த விவசாயிக்கும் அவனது குடும்பத்திற்கும் வாழ்க்கைச் செலவிற்கும் போதுமான இல்லை. அவன் மந்தமான விளைச்சல் காலங்களில் ஈட்டிக்காரர்களிடம் கடன் வாங்கவும் ஆண்டுக்கு முப்பது சதவீதமும், மேலாகவும் வட்டி செலுத்தவும் நிர்ப்பந்திக்கப்பட்டான்''
1920களில் பயிர்செய்யும் நிலப்பரப்பின் அளவில் ஒரு சீரான வீழ்ச்சி ஏற்பட்டு வந்தது. மேலும் சொந்தமாகப் பயிரிடும் நிலங்களின் குறைந்தது. 1918இல் பண்ணை மக்கள் தொகையில் ஏறத்தாழ முப்பது சதவீதத்தினர் குத்தகைதாரர்களாக இருந்ததாக மதிப்பிடப்பட்டது.
ஆனால் ஒரு பத்தாண்டுக் காலத்திற்குப் பின்பு இந்த விகிதாச்சாரம் பாதிக்கும் மேலே உயர்ந்ததாக கருதப்பட்டது.
புகழ்பெற்ற ஆங்கில பொருளாதார நிபுணர் ஆர். எச். டானி 'சீனாவில் நிலமும் உழைப்பும்' என்ற தனது நூலில் ஹுனான் மாகாணத்தில் கிராமப்புற மக்கள் தொகை எண்பது சதவீதம் அளவுக்கு குத்தகை விவசாயிகளாக இருந்தனர் என்றும் குவான்டாங் மற்றும் ஃபுகியான் பகுதிகளில் இந்த சதவீதம் மூன்றில் இரண்டு பங்காக இருந்தது என்றும் முடிவு செய்துள்ளார்.
1934இல் வெளியிடப்பட்ட சர்வதேச சங்கத்தின் கணக்கெடுப்பு ஒன்றிலும் இதேபோன்ற முடிவுகள் காணப்பட்டன.
இந்த ஏழைக் குத்தகை விவசாயிகள் முன் நூற்றாண்டுகளில் போலவே, மைய அரசாலும், மாகாண அல்லது பிராந்திய யுத்தப் பிரபுக்களின் அளவுக்கதிகமான வரிவிதிப்பாலும் கடின உழைப்பாலும் துன்புற்று வந்தனர்.
சுழற்சியின் அடுத்த தவணைக்குப் பொருத்தமாக நிலைமைகள் தெளிவாகவே கனிந்திருந்தன. சீனப் பொதுவுடைமைக் கட்சியின் யுத்த தந்திரத்தில் ஒரு பாதுகாக்கும் அம்சமாக அவர்களது துயரங்களைப் பயன்படுத்தி விவசாயிகளைத் திரட்டுவதற்கான திறமை இருந்தது.
"விவசாயிகளின் நிலத்திற்கான போராட்டம் சீனாவில் ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் நிலப்பிரபுத்துவ எதிர்ப்புப் போராட்டத்திலும் அடிப்படை அம்சமாக இருக்கிறது. சீனாவின் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி அதன் சாராம்சத்தில் ஒரு விவசாயப் புரட்சியேயாகும்.
எனவே முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியில் சீனப் பாட்டாளி வர்க்கத்தின் அடிப்படைக் கடமை விவசாயிகளின் போராட்டத்திற்குத் தலைமையளிப்பதாகும்” என்று மாவோ அறிவித்தார்.(3)
No comments:
Post a Comment