Thursday, January 25, 2024

இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்ட வரலாறு- 2

இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்ட வரலாறு- 2

தீக்குளித்த தியாகிகள்:

தமிழக வரலாற்றிலேயே- ஏன், உலக வரலாற்றிலேயே- இந்நாள் வரை கேட்டறியாத கண்டறியாத தியாக நிகழ்ச்சி 1965 சனவரி 26ஆம் நாள் நடந்தது.

சின்னச்சாமி:

திருச்சி மாவட்டம் கீழப் பழுவூர் என்ற சிற்றூரைச் சேர்ந்த சின்னச்சாமி என்ற தமிழ்மகன், அன்னை தமிழைக் காக்கத் தனக்குத்தானே தீயிட்டுக் கொண்டு உயிர் துறந்தார். தீக்குளித்த சின்னசாமிக்கு வயது 27. திருமணமானவர். திராவிடச் செல்வி என்ற அருமை மகள் உண்டு. கழகத்தின் பல போராட்டங்களில் பங்கெடுத்துக் கொண்டவர். கழக வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டு உழைத்தவர்.

இந்தி மொழி ஆட்சி மொழியாவதைக் கண்டு சகிக்காமல் தன் உடம்பில் பெட்ரோல் ஊற்றித் தீயிட்டுக் கொண்டு மடிந்தார். இப்படி இதற்கு முன்பு தாய் மொழிக்காகத் தன்னைத் தானே சாம்பலாக்கிக் கொண்டவர் வேறு யாரும் இலர். மொழிப்போரில் இப்படி தன்னைத் தானே தூக்கி நெருப்பில் போட்டுக் கொண்ட முதல் மனிதன்- முதல் வீரன்- முதல் தியாகி -சின்னச்சாமி ஆவார்.

சிவலிங்கம்:

கழகம் அறிவித்த துக்க நாளான சனவரி 26-ஆம் நாள் காலை, சிவலிங்கம் தன் உடலில் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு, தீயிட்டுக் கொண்டார். தீயில் கருகி அவர் மாண்ட கோரக் காட்சியைக் கண்ட ஆண்களும் பெண்களும் ஓ வெனத் கதறி அழுதார்கள்.

இவர் சென்னை கோடம்பாக்கம் விசுவநாதபுரத்தைச் சேர்ந்தவர். தி.மு.கழகத்தின் தீவிர உறுப்பினர். சென்னை மாநகராட்சியில் ஏவலராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

அரங்கநாதன்:

இந்தியின் ஆதிக்கத்தால் மனம் வெதும்பிய விருகம்பாக்கம் அரங்கநாதன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீயிட்டு மடித்தார்.

வீரப்பன்:

கடந்த சில நாட்களாக நடந்து வந்த கொடுமைகளைக் கண்டு மனங்கலங்கிய வீரப்பன். பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீயில் கருகிச் செத்தார். திருச்சி மாவட்டம் ஐயம்பாளையம் என்னும் கிராமத்துப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றியவர் அவர்.

முத்து:

விவசாயியான முத்து, தி.மு.க.வின் அனுதாபி. இந்தியை எதிர்க்கத் தன் உடலில் தீயிட்டுக் கொண்டார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிப்போய்த் தீயை அணைத்தனர். மருத்துவ மனைக்குத் தூக்கிச் சென்றும் அவர் பிழைக்கவில்லை-மாண்டு போனார்.

கோவை மாவட்டம் சத்தியமங்கலம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் அவர்.

மாயவரம் ஏ.வி.சி .சுல்லூரி மாணவரான சாரங்கபாணி, கல்லூரித்திடலில் தன்மீது மண்ணெண்ணெய் ஊற்றித் தீயிட்டுக் கொண்டு, "இந்தி ஒழிக! தமிழ் வாழ்க!" என்ற முழக்க மிட்டவாறு சுருண்டு விழுந்தார். அந்த முழக்கத்தைக் கேட்ட மாணவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயன்றனர். குற்றுயிராக இருந்த அவரை மருத்துவமனையில் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். "தமிழ்த் தாய்க்கு என் உயிரைத் தந்து விட்டேன்!" என்று முணுமுணுத்தவாறு அவர் உயிர் பிரிந்தது.

சிதம்பரத்தில் மாணவர் பலி!

அண்ணா மலை நகரில் நாலாயிரத்துக்கு மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் ஊர்வலம் சென்றார்கள். போலீசார் சுட்டதில் இராசேந்திரன் என்று கல்லூரி மாணவனின் நெஞ்சிலே குண்டு பாய்ந்தது. அவன் துடிதுடித்து இரத்த வெள்ளத்தில் விழுந்து அங்கேயே உயிரை விட்டான்.

(கே.ஜி.இராதாமணாளன் எழுதிய 'திராவிட இயக்க வரலாறு' என்னும் நூலில் இருந்து)

No comments:

Post a Comment