Wednesday, January 24, 2024

 வைகோவின் சிறையில் விரிந்த மடல்கள் - 3

நவம்பர் 16ஆம் நாள் முதல் தலைவர் வைகோ 'பொடா' சட்டத்தின் 21ஆவது பிரிவினை எதிர்த்து, உச்சநீதிமன்றத்துக்குச் சிறையில் இருந்து 'ரிட்' மனு தாக்கல் செய்த செய்தி வலம் வரத் தொடங்கியது.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 32ஆவது பிரிவின் கீழ் உச்சநீதிமன்றத்துக்கு நேரடியாகச் சிறையில் இருந்து இந்த 'ரிட்' மனுவை நவம்பர் 8 ஆம் நாள் அனுப்பி வைத்தார் வைகோ.

இச்செய்தியை வெளியிட்ட 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஏடு, 'பொடா' மசோதாவை ஆதரித்து நாடாளுமன்றத்தில் "தொண்டை வலிக்கப் பேசிய" வைகோ இன்று அதனை எதிர்த்து 'ரிட்' மனு தாக்கல் செய்து உள்ளார் எனக் குறிப்பிட்டு உள்ளது.

இது குறித்து வைகோ அவர்கள் தனது மடலில்,

'நான் 'பொடா' மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்கவில்லை; பேசவே இல்லை' என்ற அடிப்படை உண்மையைக் கூட அறிந்து கொள்ளாமல், அறிய முயற்சி செய்யாமல் நம் மீது ஏற்கெனவே ஏற்படுத்திக் கொண்டுவிட்ட ஒருதலைப்பட்சமான எண்ணங்களை இதனை எழுதிய நண்பர் பொரிந்து தள்ளி உள்ளார் என்று எழுதியுள்ளார்.

பொடா சட்ட விவாதத்தின் போது உண்மையில் நடந்தது என்பது குறித்து வைகோ அவர்கள் பின் வருமாறு கூறுகிறார்:

ஆண்டுக்கணக்கில் சிறையில் பூட்டப்பட்டாலும், உயிருக்கே இறுதி நேரிடும் எனத் தெரிந்தாலும், அடக்குமுறைக்கு வைகோ அடிபணியமாட்டான் என்பதை

நம்மை எதிர்க்கின்ற நாகரிகமான மாற்றார்கூட மறுக்கமாட்டார்கள்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 'பொடா' மசோதா குறித்த விவாதம் நடைபெற்றபோது நிகழ்ந்தவற்றை நான் தெரிவிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுவிட்டதால் அதனைச் சொல்லத்தானே வேண்டும்.

பிரதமர் இல்லத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டம் ஒரு மாலை வேளையில் பிரதமர் இல்லத்தில் நடைபெற்றது. 'பொடா மசோதா' தான் நிகழ்ச்சி நிரல், இந்தப் பொடா மசோதாவினை அதன் பிரிவுகள் வாரியாக ஒருமுறைக்குப் பலமுறை ஊன்றிப்படித்து என்னை ஆயத்தப்படுத்திக் கொண்டு இருந்தேன். இந்த விவாதத்தில், மசோதாவைக் கடுமையாக எதிர்த்தவர்கள் இருவர். அவ்விருவரும்

தமிழகத்தினர்; திராவிட இயக்கத்தினர்! ஆம். அண்ணன் முரசொலிமாறனும், நானும்தான் எதிர்த்தவர்கள்.இவன்

மசோதாவின் பிரிவுகளை விவரித்து அன்று நீண்டநேரம் நான் பேசினேன்!

"பிரதமர் வாஜ்பாய் அவர்களே! உங்கள் ஆட்சியில் அடிப்படை வாழ்வு உரிமைகளை நசுக்கும் 'பொடா' மசோதாவினைச் சட்டம் ஆக்க முனைவது எவ்வளவு வேதனைக்கு உரியது என்பதை அருள்கூர்ந்து எண்ணிப் பார்க்க வேண்டுகிறேன். நானும் 'மிசா' கொட்டடியை ஓராண்டுச் சந்தித்தவன் என்பதால் சொல்கிறேன்.

இம்மசோதாவினை நாடாளுமன்றத்தில்

நிறைவேற்ற முனையாமல் தவிர்ப்பதே சாலச் சிறந்தது ஆகும்.

எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்தைப் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவு நிறுவனம் வழியாக ஏவிவிடும் பேரபாயத்தினைத் தடுத்திட, அசாதாரணமான சூழ்நிலையில் இந்த அசாதாரணமான மசோதாவைக் கொண்டு வருவதைத் தவிர வேறு வழி இல்லை என்று நீங்கள் எடுத்து வைத்த வாதத்தினையே வலுவாகப் பற்றிக் கொண்டு நிறைவேற்ற

முனைவீர்களானால், அருள் கூர்ந்து இந்த மசோதாவில் உள்ள, மக்கள் ஆட்சித் தத்துவத்துக்குத் தீங்கு விளைவிக்க வாய்ப்புத் தரும் பிரிவுகளை நீக்க முன்வரவேண்டும்.

இந்த மசோதாவின் எட்டாவது பிரிவு செய்தியாளர்களை அச்சுறுத்தவும்,சிறையில் அடைக்கவும் பயன்படுத்தப்படும் வாய்ப்பு உள்ள மிகத் தீங்கான பிரிவு ஆகும். இதனால் 'மக்கள் ஆட்சி' என்ற மாளிகையினைத் தாங்கி நிற்கும் ஒரு தூணையே தகர்க்கும் நிலை ஏற்பட்டுவிடும். நம்மீது எதிர்க்கட்சிகள் வீசும் கண்டனக் கணைகளுக்கு நாம் தக்க பதில் தரவும் இயலாது. எனவே இப்பிரிவினை நீக்க வேண்டும்.

இம்மசோதாவின் '21'ஆவது பிரிவு பேச்சு உரிமைக்கும், கருத்து உரிமைக்கும் வேட்டு வைக்கிறது. மூன்று பேர் ஓரிடத்தில் கூடிப் பேசினாலே அதனைக் கூட்டத்தில் பேசிய பேச்சு எனக் குற்றம் சுமத்திக் கைது செய்து சிறையில் அடைக்கும் அதிகாரத்தைத் தருகிறது. இப்பிரிவினை அகற்ற வேண்டும். (இப்பிரிவின் கீழ்தான் நானும், நம்மவர் எண்மரும் கைது செய்யப்பட்டுச் சிறையில் இருக்கிறோம்).

முரசொலி மாறனும், நானும் எதிர்ப்புத் தெரிவித்த செய்திகள் வெளிவந்தன.

'21'ஆவது பிரிவினை அன்றே நான் எதிர்த்ததாக டில்லியில் வெளியாகும் 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஏடு - நான் கைது செய்யப்படுவதற்கு ஓரிரு நாள்களுக்கு முன்னர்ச் செய்தி வெளியிட்டது.

இக்கூட்டம் நடைபெற்ற மறுநாள் உள்துறை அமைச்சர் அத்வானி அவர்கள் தன் அறைக்கு என்னை அழைத்து, 'செய்தியாளர்கள் குறித்த பிரிவினை மட்டும் நீக்கி விடலாம். நீங்கள் கூறிய மற்றப் பிரிவுகளை நீக்கினால் இம்மசோதா கொண்டுவந்த

நோக்கமே நிறைவேறாது' எனக் கூறினார். எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைச் சந்திக்க இம்மசோதாவைச் சட்டம் ஆக்குவதைத் தவிர வேறு வழி இல்லை" எனஅரசு முடிவு எடுத்தது.

பல அரசியல் கட்சிகள் இணைந்து உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பெரும்பான்மை முடிவினை மன இறுக்கத்துடன் ஏற்க வேண்டியது ஆயிற்று. இதன்

பின்னர் 'பொடா' மசோதா நாடாளுமன்ற மக்கள் அவையில் விவாதத்துக்கு வந்தது.

இந்த விவாதத்தில் என்னைப் பங்கேற்குமாறு சட்ட அமைச்சர் அருண் ஜெட்லியும், பாரதீய ஜனதா கட்சிக் கொறடா விஜயகுமார் மல்கோத்ராவும் வேண்டியபோது,

'இம்மசோதாவில் எனக்கு உடன்பாடு இல்லை. எனவே நான் ஆதரித்துப் பேச விரும்பவில்லை - கூட்டணியின் நெறிக்காக வேறு வழி இன்றி வாக்கு அளிக்கிறோம்’ என்றேன்.

இம்மசோதா மக்கள் அவையில் நிறைவேறி, பின்னர் மாநிலங்கள் அவையில் தோற்கடிக்கப்பட்டது. அதன் பின்னர் இரு அவைகளின் கூட்டுக்கூட்டம் மய்ய மண்டபத்தில் நடைபெற்றது (Joint Session). அங்கு நடைபெற்ற இந்த விவாதம்

முழுவதும் நேரடியாக நாடு முழுவதும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.

பரபரப்பாக, அனல் பறக்க விவாதம் நடந்தது. சட்ட அமைச்சர் அருண்ஜெட்லி இருமுறை நான் அமர்ந்து இருந்த இடத்துக்கு வந்து, 'இம்மசோதாவை நீங்கள்

கட்டாயம் ஆதரித்துப் பேசவேண்டும்' என்று கூறியபோது, 'உறுதியாக இயலாது. என் கருத்துக்கும் உணர்வுக்கும் முற்றிலும் மாறானது' என்றேன்.

தமிழகத்தைச் சேர்ந்த என் மீது பற்றுக் கொண்ட ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்னிடத்தில், 'முக்கியமான எத்தனையோ விவாதங்களில் நாடாளுமன்றத்தில்

நீங்கள் பேசுகிறீர்கள். மக்களுக்குத் தெரியவில்லை. இதில் பேசினால்

கோடிக்கணக்கான மக்கள் தொலைக்காட்சி வழியாகக் கேட்க வாய்ப்பு ஆகுமே? மசோதா மீதான உங்கள் எதிர்ப்புக் கருத்துகளை உள்ளடக்கியே 'கொஞ்சம் உல்டா

செய்து திறமையாக நீங்கள் பேசிவிடலாமே' என நல்ல எண்ணத்துடன் கூறினார்.

அவரிடம் நான், 'பொடாவை ஆதரித்து ஒரு வரி பேசியதாகக் கூடப் பதிவு செய்ய விரும்பவில்லை' என்றேன்.

நிலைமை இப்படி இருக்க, நான் பொடாவில் கைது செய்யப்பட்டபின்

நாடாளுமன்றம் கூடியபோது மார்க்சிஸ்ட் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி 'பொடாவை ஆதரித்து வைகோ நாடாளுமன்றத்தில் தீவிரமாகப்பே சினார். இப்போது அவரே பலியாகி விட்டார்' எனப் பேசினார். 

மறுநாள் வேலூர்ச் சிறையில் இருந்து சோம்நாத் சட்டர்ஜி அவர்களுக்கு 'நான் மக்கள் அவை விவாதத்திலோ, கூட்டுக் கூட்ட விவாதத்திலோ பங்கு பெறவில்லை; பொடாவை

ஆதரித்துப் பேசவில்லை' என நீண்ட தந்தி கொடுத்தேன் என்று விரிவாக எழுதினார் வைகோ.

No comments:

Post a Comment