Wednesday, January 24, 2024

வைகோவின் சிறையில் விரிந்த மடல்கள் - 6

வைகோவின் சிறையில் விரிந்த மடல்கள் -6

தலைவர் வைகோ அவர்கள் பொடா சிறைக்காவலில் இருந்த போது நடுவண் அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்கள் சந்தித்தார். அது குறித்து, வைகோ அவர்கள் தனது மடலில்,

"வேலூர்ச் சிறைவாசம் தொடங்கி விட்டது அல்லவா? இடையில் உள்ள சில அனுபவங்கள், நேர்காணல் சந்திப்புகளைத் தற்சமயம் விட்டு வைத்து, தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைப்பாளரும், நடுவண் அரசின் பாதுகாப்புத் துறை அமைச்சருமான மாண்புமிகு ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்கள் என்னைச் சிறையில் சந்தித்த நிகழ்ச்சியைக் கூற விரும்புகிறேன்.

ஈழத்தமிழர் உரிமைப் போருக்கு எந்நாளும் தோள் கொடுக்கும் மாண்புமிகு ஜார்ஜ் பெர்னாண்டஸ் என்னைச் சந்திக்கக் காலை 11 மணி அளவில் வந்தார்.

 'பொடா' மசோதா குறித்துத் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நான் தெரிவித்த எதிர்ப்புக் கருத்துகளை நினைவூட்டினேன். இதே உணர்வினால் தான்  'பொடா' விவாதத்தில் ஜார்ஜ் பெர்னாண்டஸ் பங்கேற்று உரையாற்றவில்லை என்பதை அவர் என்னிடம் பகிர்ந்து கொண்டதையும் நினைவு கூர்ந்தேன்.

அரசியல் பழி வாங்கவும், வஞ்சம் தீர்க்கவும் எதிர்க்கட்சியினரை மிரட்டிப் பார்க்கிற 'பொடா'வினை 'ஜெ' அரசாங்கம் ஏவி இருக்கிறது.

இந்நிலையில் என்னைச் சிறையில் இருந்து விடுவிப்பது குறித்து மத்திய அரசின் சார்பில் மாநில அரசாங்கத் திடம் பேசவேண்டாம். எந்தக் காரணத்தினை முன்னிட்டும் பிரதமர் அவர்களோ, துணைப் பிரதமர் அவர்களோ தமிழ்நாடு முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதாவிடம் இது குறித்து ஒரு வார்த்தை கூடப் பேசுவதை நான் துளியும் விரும்ப வில்லை. சிறையில் இருந்து வெளியேற மத்திய அரசின் துணையை நான் நாடுவதாகத் தமிழக முதல்வர் நினைப்பதற்குக் கிஞ்சிற்றும் இடம் தரலாகாது.

மத்திய அரசின் தயவு பல விஷயங் களில் அவருக்குத் தேவைப்படுகிறது. எனவே, பேரத்துக்கு முயல இடம் தரலாகாது அரசியல் போர்க்களத்தில்! தமிழக முதல்வர் ஏவி விட்டுள்ள அடக்குமுறைத் தாக்குதலை வைகோ தானே சந்தித்துக் கொள்வான்.

ம.தி.மு.க. தலைவணங்காமல் போரிடும். 

தமிழக அரசு ஒரு பாசிச அரசு என்பதும் வெட்ட வெளிச்சம் ஆகி விட்டது. ஆகையால் மத்திய அரசு இதில் விலகியே நிற்கட்டும். அதுதான் எங்கள் மாநிலத் தன் ஆட்சிக் கொள்கைக்கும் ஏற்றது. இந்த எனது கருத்துகளைப் பிரதமர் அவர்களுக் கும், துணைப்பிரதமர் அவர்களிடமும் தெரிவித்து விடுங்கள்" என்றேன்.

 'உறுதியாகச் சொல்லி விடுகிறேன்' என்றார் ஜார்ஜ் பெர்னாண்டஸ்.

விடை பெற இருந்த வேளையில், 'உங்கள் பயணத் திட்டம் எப்படி?" என்று நான் கேட்டதற்கு, "மாலை 4 மணிக்குச் சென்னை தமிழக அரசு தலைமைச் செயலகத்தில் தமிழக முதல் அமைச்சரைச் சந்திக்க இருக்கிறேன்" என்றார். 

எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. சந்தித்தால், 'வைகோவுக்காக ஜார்ஜ் பெர்னாண்டஸ் தது' என்று அல்லவா செய்தி போடுவார்கள்?" என்றேன்.

 "உங்களைப் பற்றி ஒரு வார்த்தை கூடப் பேச மாட்டேன் என்பது உங்களுக்குத் தெரியாதா? நான் ஏன் பேசப் போகிறேன்?" என்றார்.

எனக்குத் தெரியும். "யூகங்களும் ஆரூடங்களுமே பெரும் அளவில் உண்மைச் செய்திகள் ஆக்கப்படும் காலத்தில் அல்லவா வாழ்கிறோம்? சூழ்நிலையின் அடிப்படையில் 'தூது' என்ற செய்தி வெளிவந்தால் எங்கள் இயக்கத்தின் நன்மதிப்புக்கு உகந்தது அல்ல. நீங்கள் இச்சந்திப்பை தவிர்ப்பது தானே நல்லது' என்றேன். அவர் புன்முறுவல் பூத்தவாறு, 'உங்கள் விருப்பப்படியே' என்றார்.

சிறைவாசலில் செய்தியாளர்களிடம், வைகோ வைராக்கியத்துடன் இருக்கிறார். அவர் புரட்சிக்காரர் என்றார் பெர்னாண்டஸ்.

முதல்வரைச் சந்திக்காமல் சென்னையில் இரண்டு மணி நேரம் இருந்து விட்டு டில்லிக்குப் பறந்தார் இராணுவ அமைச்சர். எத்தனையோ பேருக்குப் பேட்டிக்கு நேரம் ஒதுக்கிப் பின்னர் ரத்து செய்கிற முதல்வர் அன்று கோட்டையில் வந்து இருந்து கோபக்காய்ச்சலுடந்தான் தோட்டத்துக்குப் போயிருப்பார்' என்று எழுதியுள்ளார்.

No comments:

Post a Comment