Friday, December 27, 2024

பெரியார், அம்பேத்கர் படங்களை நாடாளுமன்ற மைய மண்டபத்தில் திறக்க வைகோ வலியுறுத்தல்

அண்ணல் அம்பேத்கர் படத்தையும் தந்தை பெரியார் படத்தையும் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் திறக்க வலியுறுத்தி வைகோ 1985 இல் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை.....

*சாதியை ஒழித்தாலொழிய தாழ்த்தப்பட்டோருக்கு விடிவு இல்லை!*

இங்கே அறிவார்ந்த நண்பர்கள் நிகழ்த்திய உரைகளை நான் மிக உன்னிப்பாகக் கவனித்து வந்தேன். எனது நண்பர் திரு. கல்பநாத் ராய் போல சிலர் பேசுகையில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் மற்றும் பழங்குடிப் பிரிவினருக்கும் இழைக்கப்படும் அநீதிகள் குறித்து இடி முழக்கமிட்டனர். பலர் பல யோசனைகளைத் தெரிவித்தனர்.

சிலருக்கு வேலைகள் கொடுப்பதன் மூலமோ சிலருக்கு சில சலுகைகளை அளிப்பதன் மூலமோ சில பதவிகளை நிரப்புவதன் மூலமோ இந்தப் பிரச்சனையை தீர்த்து வைத்து விட முடியுமா? பல நூற்றாண்டு காலமாக தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்டுவந்துள்ள கேடுகளை, அவ மதிப்புகளை, இழிவூட்டங்களை, களைந்தெறிந்து விடமுடியுமா ? முடியாது அய்யா முடியாது!

இதனால் எல்லாம் இந்த மக்களை தற்போதைய நிலையிலிருந்து உயர்த்தி விட முடியுமா? அல்லது நமது சமூகத்திலிருந்து வரும் இந்தச் சாபக் கேட்டை அகற்றிவிட முடியுமா? முடியாது. 

ஏனெனில் நமது முறையில் அதாவது சாதிஅமைப்பு ஆழ வேரூன்றியுள்ளது. நமது சாதி அமைப்பு முறையின் அடித்தளமே அதுதான். இந்த அஸ்திவாரத்தின் மீதுதான் இந்து சமூகம், சொல்லப் போனால் இந்திய சமூகமே எழுப்பப்பட்டுள்ளது. இந்த கொடிய அமைப்பின் இந்த அஸ்தி வாரத்தை தகர்த்து அழித்து ஒழிக்கும் நாள் வந்தால் ஒழிய இந்தத் துர்ப் பாக்கியசாலிகளுக்கு விடிவு ஒருக்காலும் ஏற்படாது. நம்முடைய இரத்தத்திலே சாதி உணர்வு ஊறிப் போயிருக்கிறது. 

எந்த ஒரு இந்தியனையும் சுரண்டிப்பாருங்கள்; அங்கு சாதி உணர்வை காண முடியும். இதுதான் அடிப்படையான பிரச்சனையாகும். வரலாற்றை விரிக்கப்புகின் எனது சகாக்கள் என்னை மன்னித்தருள வேண்டும். கைபர் கணவாய், போலன் கணவாய் வழியாக ஆரியர்கள் அடி எடுத்து வைத்த பிறகே இந்த சச்சரவு சமூகத்திற்குள் ஊடுருவியது.

எனது நண்பர் திரு. தரம்சந்தர் பிரசாந்த் ரிக் வேதத்திலிருந்தும், மற்ற வேதங்களிலிருந்தும். மேற்கோள்கள் காட்டினார். ஆனால் இந்த சதுர்வர்ணத்தையும் வர்ணாசிரம முறையையும் தோற்றுவித்தவையே இந்த நான்கு வேதங்கள்தான். சாதி அமைப்பு முறைக்கு சட்ட சம்மதம் வழங்கியதும் இதுவே.

சிருஷ்டி கர்த்தாவின் வாயிலிருந்து தோன்றியவன் பிராமணன்; கைகளி லிருந்து தோன்றியவன் சத்திரியன்; தொடைகளிலிருந்து தோன்றியவன் வைசியன். பாதத்திலிருந்து தோன்றியவன் சூத்திரன் என்றுதான் ரிக்வேதம் சொல்கிறது. ஆனால் எனது நண்பரோ ரிக்வேதத்தின்படி தீண்டாமையே கிடையாது என்கிறார்.

*சூத்திரர் யார்?*

அய்யா, டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் எழுதிய நூல் ஒன்று இதோ என் கையில் உள்ளது. அந்த நூலின் தலைப்பு ‘சூத்திரர்கள் யார்?’ என்பதாகும். விஷ்ணு சுருதியிலிருந்து அவர் இந்த மேற்கோளை காட்டுகிறார்.

உயர்சாதிக்காரன் ஒருவனுக்கு கீழ் சாதிக்காரன் ஒருவன் தன்னுடைய எந்த உறுப்பினால் துன்பம் விளைவிக்கிறானோ அல்லது அவமதிப்பு இழைக்கிறானோ அந்த உறுப்பை அவன் இழக்கும்படி மன்னன் செய்வான்.

உயர் சாதிக்காரன் அமரும் அதே இருக்கையில் அவன் அமருவானாகில் அவனது பின்புறத்தில் சூடு போடவேண்டும்.

(உயர் சாதிக்காரன் மீது) அவன் காரித்துப்பினால் இரு உதடுகளையும் அவன் இழக்க வேண்டும்.

(உயர் சாதிக்காரன் மீது) அவன் காற்று பிரிந்தால் அவன் பின்புறத்தை இழக்க வேண்டும். 

அவன் வடமொழி பயன்படுத்தினால் நாக்கை இழக்க நேரிடும். இழி பிறவிக் காரன் ஒருவன் மிக உயர்சாதிக்காரன் ஒருவனுக்கு அவனது கடமை சம்மந்தமாக உத்தரவிட்டால் அவனது வாயில் கொதிக்கும் எண்ணையை ஊற்றுமாறு அரசன் ஆணையிடுவானாக.

சூத்திரன் ஒருவன் மேல் சாதிக்காரனின் பெயரையோ அல்லது சாதிப் பெயரையோ சொன்னால், 10 அங்குலம் நீளமுள்ள பழுக்கக் காய்ச்சிய இரும்பு ஊசியை அவன் வாயில் நுழைக்க வேண்டும்.

அது மேலும் கூறுவதாவது:

சூத்திரன் நான்காவது சாதியைச் சேர்ந்தவன். அந்தச் சாதிக்கு ஒரு பிறவி தான் உண்டு. அவன் உயர்சாதிக்காரனுக்கு பணி விடை புரியவேண்டும். அவர்களிடமிருந்து அவன் ஜீவனோ பாயத்தைப் பெறவேண்டும். 

அவர்கள் கழற்றி எறிந்த காலணி களையே அவன் பயன்படுத்த வேண்டும். அவர்கள் சாப்பிட்ட மிச்சத்தை அவன் பயன் படுத்த வேண்டும். 

இருபிறவியினனான ஒருவனை ஒரு சூத்திரன் வேண்டுமென்றே வைதாலோ அல்லது அடித்துத் தாக்கினாலோ அவன் எந்த உறுப்பை பயன் படுத்தி இந்த குற்றத்தை இழைக்கிறானோ அந்த உறுப்பை இழக்க வேண்டும்.

அமரும்போதோ அல்லது படுக்கும்போதோ, உரையாடும் போதோ அல்லது காலையிலோ அவன் இருபிறவியினனான ஒருவனுக்கு சமமான நிலையை மேற்கொண்டால் அவன் கசையடி பெறவேண்டும்.

இவர்கள்தான் சூத்திரர்கள்; இவைதான் வேதங்கள்; இதுதான் மனு-ஸ்மிருதி. திருமுறை நூல்கள் சாதி அமைப்பு முறைக்கு சட்ட சம்மதம் தருபவை இந்த வேதங்களும், இந்த ஸ்மிருதிகளும்தான். 

இவற்றை நாம் ஆழக்குழி தோண்டிப் புதைத்தாலொழிய, இவற்றை சுட் டெரித்தாலொழிய இந்த நாட்டில் ஒரு கலாச் சாரப் புரட்சி ஏற்பட்டாலொழிய இந்த தீமைகளை ஒரு போதும் களைந்தெறிய முடியாது. நமது சமூகத்தி லிருந்து இவற்றை ஒழிக்க முடியாது.

*மாவீரன் சிவாஜி முடிசூட்டு விழா*

இந்த சாதி அமைப்பு முறை மக்களை எந்த அளவுக்குப் பாதித்திருக்கிறது தனது போர்வாளின் வலிமையால் மாபெரும் முகலாய சாம்ராஜ்யத்தின் ஆவலாதிகளைத் தூள் தூளாகத் தகர்த் தெறிந்த வல்லமை படைத்த போர் வீரனான சத்ரபதி சிவாஜிக்கு என்ன நடந்தது என்பது ஒரு சுவையான அனுபவமாகும். சிவாஜி என்ற பெயரைக் கேட்டாலே, அவுரங்கசீப்புக்கு சிம்ம சொப்பனம். ஆனால் என்ன நடந்தது?

அவன் முடி சூட்டு விழா நடத்திக் கொள்ள விரும்பிய போது முதலில் அவன் அனுமதிக்கப்படவில்லை என்று அம்பேத்கர் கூறுகிறார். அவனுடைய அமைச்சர்களான பிராமணர்கள் கூட அதை ஆட்சேபித்தார்கள். ஆமாம் அவன் முடி சூட்டு விழா நடத்திக் கொள்ள விரும்பியது எதற்காக?

பின்வருமாறு கூறுகிறார்:

“செருக்கு உணர்வு மிகுந்தவர்களான தக்காணப் பிரபுக்கள் போர்க் களங்களில் சிவாஜியைப் பின்பற்றிப் போன போதிலுங்கூட, தனிப்பட்ட வாழ்க்கையில் அவனுக்கு முக்கியத்துவம் அளித்து சிறப்பிக்கத் தயாரா யில்லை. அரசாங்க விருந்து உபசாரங்களின் போது மொகைத்துகள், நிம்பல்கர்கள், சாவந்துகள், கோர்பாடேக்கள் ஆகியோருக்கு ஒதுக்கப் பட்ட இருக்கைகளைவிட, உயரமான இருக்கையில் ஒரு போஸ்லே அமருவது அவர்களுக்கு கிஞ்சித்தும் பிடிக்கவில்லை. எனவே சமூகத்தில் ஒரு உயர் அந்தஸ்து பெற வேண்டியே அவன் முடி சூட்டு விழா நடத்திக் கொள்ள விரும்பினான். ஆனால் அவனுக்கு ‘உபநயனம்’ ஆகவில்லை என்ற காரணத்திற்காக, அவன் பூணூல் தரிக்கவில்லை என்பதற்காக அவர்கள் இதை ஆட்சேபித்தார்கள்.

அவனுடைய வாளும் கேடயமும்தான் அவனுக்கு கீர்த்தியை ஈட்டித் தந்தன. பின்னர், அவன் காசியிலிருந்த காகபட்டர் என்ற வைதீகரை அழைத்துவர தூதுவர்களை அனுப்பி வைத்தான். அங்கிருந்து காகபட்டர் வரவழைக்கப்பட்டார். உயர் சாதிக்காரர்கள் மீது தங்கம் மழையென சொரியப்பட்டது. அவர்களது கால்களை அவன் கழுவியாக வேண்டியிருந்தது. அதற்குப் பிறகே முடிசூட்டுவிழா நடைபெற்றது. அதற்குப் பிறகுகூட தேர் மீது ஏறப்போகும் போது அவன் அனுமதிக்கப் படவில்லை".

இது நடந்த விஷயமாகும்.

*ஜெகஜீவன்ராமும், சிலை திறப்பும்*

சுதந்திரத்திற்குப் பிறகும் இதேதான் நடந்துள்ளது. மகாத்மா காந்தியின் சீடரும், பண்டிட் ஜவகர்லால் நேருவின் தோழருமான திரு. ஜகஜீவன்ராம், சம்பூர்ணானந்தின் சிலையைத் திறந்து வைத்தபோது நடந்தது என்ன? அவர் ஒரு பொத்தானைத்தான் அமுக்கினார். ஆனால் இதைக் கூட மேல் சாதிக் காரர்களால் சகித்துக் கொள்ளமுடியவில்லை. ஜீரணித்துக் கொள்ள முடிய வில்லை.

கல்பநாத்ராய் : இது முற்றிலும் தவறான குற்றச்சாட்டாகும்.நீங்கள் ஒரு தவறான குற்றச்சாட்டை சொல்கிறீர்கள்.

வை. கோபால்சாமி : இது ஒன்றும் தவறான குற்றச்சாட்டல்ல. கங்கையி லிருந்து தண்ணீர் கொண்டு வந்து அந்தச் சிலைமீது தெளித்திருக்கிறார்கள். இதுதான் வரலாறு. நடந்தது இதுதான். பத்திரிகைகளிலே இது ஆயிரம் தடவை வெளியாகியுள்ளது.

கல்பநாத்ராய்: பத்திரிகைச் செய்திகள் ஆதாரபூர்வமானவையல்ல. நீங்கள் இம்மாதிரி எல்லாம் சொல்லக் கூடாது.

வை. கோபால்சாமி : நடந்ததுதான் இது. இப்படிச் சொன்னது பற்றி கல்பநாத்ராய் உணர்ச்சி வசப்படுகிறார். ஒரு சிறிய கேள்வியை கேட்க விரும்புகிறேன்.

*தாழ்த்தப்பட்டவர்களை அர்ச்சகர் ஆக விட்டீர்களா?*

தாழ்த்தப்பட்ட பிரிவிலோ அல்லது பழங்குடிமக்கள் பிரிவிலோ பிறந்து விட்ட ஒருவன்  ஐ. ஏ.எஸ். அதிகாரி ஆகமுடியும்; ஒரு கலெக்டராக ஆக முடியும்; இராணுவ தளபதி ஆக முடியும். பிரதம மந்திரியாகவோ, அல்லது இந்தியக்குடியரசு தலைவராகவோ ஆகலாம். 

ஆனால் நான் கேட்கும் ஒரு சாதாரண கேள்வி என்ன வென்றால் அவன் அர்ச்சகனாகவோ, அல்லது புரோகிதனாகவோ ஆகமுடியுமா என்பதுதான். முடியாது. தாழ்த்தப்பட்ட வகுப்பினர் அல்லது பழங்குடிப் பிரிவினர்கூட ஒரு அர்ச்சகராக முடியும் என்று நாங்கள் சட்டம் நிறைவேற்றிய போது...

(கல்பநாத்ராய் குறுக்கிடுகிறார்)

கல்பநாத்ராய் அவர்களே, உங்களுக்கு ஒன்றும் தெரியாது...

கல்பநாத்ராய் : மக்கள் ஜகஜீவன்ராமின் பாதங்களைத் தொட்டு வணங்குகிறார்கள். அது குறித்து அவர் அக்கறை  காட்டுகிறார்.

வை. கோபால்சாமி: துணைத் தலைவர் அவர்களே! அவர் தமது அறியாமையைத்தான் வெளிபடுத்திக் கொள்கிறார்.

தாழ்த்தப்பட்ட மக்களும் பழங்குடிப்பிரிவு மக்களும் கூட அர்ச்சகர்கள் ஆகலாம் என்று நாங்கள் ஒரு சட்டத்தை நிறைவேற்றிய போது இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. உச்ச நீதிமன்றம் அந்தச் சட்டம் செல்லாது என்று சொல்லிவிட்டது. இம்மாதிரி நடந்துள்ளது.

'இந்தச் சட்டம் ஆகமங்களுக்கு முரணானதாகும் என்ற அடிப்படையில் உச்சநீதிமன்றம் இது செல்லத்தக்கதல்ல என்று கூறிவிட்டது' என்பதை எனது நண்பர் திரு. கல்பநாத்ராய்க்குத் தெரிவிக்கிறேன். 

எனவே அவன் கடவுளின் கர்ப்பக் கிருகத்துக்குள் நுழையமுடியாது. கடவுளை நெருங்க முடியாது. அதாவது சர்வ வல்லமை வாய்ந்த கடவுளுங்கூட தீண்டாமையை அனுசரிப்பதாக உச்ச நீதிமன்றம் கருதுகிறது. ஆகமங்களின்படி அவன் ஒரு அர்ச்சகனாக முடியாது.

துணை அவைத்தலைவர்: பூர்வோத்திரம் பற்றி நீங்கள் நீண்டநேரம் பேசி விட்டீர்கள் என்று நினைக்கிறேன். இனி நீங்கள் விஷயத்துக்கு வரலாம்.

வை. கோபால்சாமி : இது நமது சமுதாயத்தின் அடிப்படையான பிரச்சினையாகும். நாங்கள் முன்னோடிகளாக விளங்குகிறோம். தென்னிந்தியாவில் சூத்திரர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, இந்தப் பிரச்சினையை தாங்களே முன் வந்து எடுத்துக் கொண்டதால், டாக்டர் அம்பேத்கர் எங்களைப் பாராட்டினார்.

அவர்கள் ஒரு இயக்கத்தை தொடங்குகிறார்கள், ‘யாரும் உங்களை காப்பாற்ற வரமாட்டார்கள்’ என்று அவர் சொன்னார். ‘நீங்கள்தான் உங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்’ என்றார். அதைத்தான் தென் னிந்தியாவில் பின்பற்றி வருகிறோம்.

*சமுகநீதியின் மாபெரும் பாதுகாவலர் பெரியார்*

கல்பநாத்ராய் அவர்களே! உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? கேரளத்தைச் சேர்ந்த வைக்கத்தில் தெருக்களில், நடமாடக்கூட மக்கள் அனுமதிக்கப் படாத சமயத்தில் இந்நாட்டிலேயே சமூக நீதியின் மாபெரும் பாதுகாவல ரான பெரியார் அங்கு போக வேண்டியிருந்தது.

அப்போது அவர் ஒரு காங்கிரஸ்வாதி, ஒரு காங்கிரஸ் தலைவர். காந்திஜி தமிழ்நாட்டுக்கு வரும்போதெல்லாம், பெரியார் ராமசாமியின் பங்களாவில் தங்குவது வழக்கம். ஆனால் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே சாதி தீமைகளைக் கண்ணுற்றபோது அதிர்ச்சியடைந்து காங்கிரஸில் இருந்து பெரியார் வெளியேறினார். அவர் வைக்கத்திற்குச் சென்றார்.

கல்பநாத்ராய் : அப்போது அவர் எந்தக் கட்சியில் சேர்ந்தார்?

வை. கோபால்சாமி: அவரே சொந்தமாக சுயமரியாதை இயக்கத்தைத் துவக்கினார். நாங்கள் முன்னோடிகளாக விளங்கினோம். அது எங்கள் மக்களின் இலட்சியக் கோட்பாடாகும்- (கல்பநாத்ராய் குறுக்கிடுகிறார்). 

கல்பநாத்ராய் அவர்களே; உங்களுக்கு வரலாறு தெரியாது; எதுவுமே தெரியாது. நீங்கள் வேண்டும் என்றே குறுக்கிடுகிறீர்கள். உங்களுக்கு அரசியல் தெரியாது......

கல்பநாத்ராய்: அய்யா, எனக்கு அரசியல் தெரியாது; வரலாறு தெரியாது என்று அவர் சொல்கிறார். அவருக்கு ஒரு விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன். பெரியாரின் மிகப் பெரிய சீடரான திரு. கருணாநிதியை தமிழ் நாட்டு மக்கள் ஒரேயடியாக நிராகரித்து விட்டிருக்கிறார்கள். இதை அவர் தெரிந்து கொள்ள வேண்டும்.

வை. கோபால்சாமி: தன்மானமுள்ள தமிழ்நாட்டு மக்களின் முடிசூடா மன்னர் கருணாநிதி. உங்களுடைய காங்கிரஸ், வரலாற்றின் குப்பைத் தொட்டியிலே வீசி எறியப்படும்.

பெரியார் தேர்தலில் போட்டியிடவில்லை. நான் பெரியாரைப் பற்றிச் சொல்லும் போது மக்களை பாதுகாப்பதற்காக பெரியார் வைக்கத்திற்குப் போக வேண்டியிருந்தது என்பது உங்களுக்குக் தெரியுமா? கேரளாவில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் அவருக்கு அழைப்பு விடுத்தார்கள்.

*இட ஒதுக்கீடு இன்றும் நீடிக்கப்படவேண்டும்*

இட ஒதுக்கீடு கொள்கைக்கு எதிராக ஒரு வலுவான சக்தி செயல்பட்டு வருகிறது. அவர்கள் தகுதி திறமை பற்றி பேசுகிறார்கள். பொருளாதார தகுதி அடிப்படை பற்றி பேசுகிறார்கள். சில சுயநலசக்திகளால் தூண்டிவிடப் பட்ட சக்தி அது; நேற்று கூட குஜராத் மாநில அரசு இந்த சுயநலசக்திகளின் நிர்ப்பந்தங்களுக்கு பணிந்து விட்டிருக்கிறது. அவர்கள் தகுதி திறமை பற்றி பேசுகிறார்கள். பொருளாதார தகுதி - அடிப்படைப் பற்றி பேசுகிறார்கள்.

சில சாலைகளில் மேல்சாதிக்காரர்கள் மட்டுந்தான் போகலாம்; கீழ்சாதிக் காரர்கள்-சூத்திரர்கள் போகக் கூடாது என்பதாக, பல நூற்றாண்டு காலமாக ஒரு ஒதுக்கீடுமுறை இருந்து வந்திருக்கிறதே; அதை நாம் மறந்துவிட முடியுமா? பன்றிகளும் கழுதைகளும் கூட இந்த சாலைகளிலும் தெருக்களிலும் போகலாமாம்.

ஆனால் இந்த மக்களை மட்டும் நுழைய அனுமதிப்பதில்லை! அவை மேல் சாதிக்காரர்களுக்காக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தன. பல நூற்றாண்டு காலமாக அனுசரிக்கப்பட்டு வந்திருப்பது இந்த இட ஒதுக்கீடு கொள்கைதான். சமத்துவம் என்பது இருக்கவேண்டியதுதான். ஆனால் சமமாயிருப்பவர்களுக்கு இடையில்தான் சமத்துவம் இருக்க முடியும். பல நூற்றாண்டு காலமாக மக்கள் சமமாக நடத்தப்படவில்லை. அதனால்தான் இடஒதுக்கீடு கொள்கை நீடிக்க வேண்டும்.

அவைத் துணைத்தலைவர்: தயவுசெய்து பேச்சை முடித்துக் கொள்ளுங்கள்.

வை. கோபால்சாமி : இந்த கமிஷனின் பரிந்துரைகளை அமல்படுத்துவதன் மூலம் சாதி முறையின் சாபக்கேடுகளை களைந்தெறிந்து விடுவது சாத்தியம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இந்த அரசாங்கம் என்ன செய்து கொண்டி ருக்கிறது? இப்போது தொலைக்காட்சியில் பிரதமரைத் தான் முன்னிலை படுத்திக் காட்டிக்கொண்டிருக்கிறீர்கள். இந்த அரசாங்கத்தைத்தான் தொலைக் காட்சி, வானொலி முதலியவற்றில் முன்னிலை படுத்திக் காட்டி வருகிறீர்கள். நமது மக்கள் தொகையில் 75 பேர், இந்த பிரச்சார சாதனங்களின் செல்வாக்கிற்கு உட்படுத்தப்படுகிறார்கள்.

அப்படியிருக்கும் போது சாதி அமைப்பு முறையின் சாபக் கேடுகளை களைந் தெறிய, தொலைக் காட்சி, வானொலி முதலிய சாதனங்களில் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள்; இது வரையில் எதுவும் செய்யவில்லை; இனி செய்யப் போவதுமில்லை.

சாதி அமைப்பு முறையில் உள்ள தீங்குகள் பற்றி போதிக்க, பாடத் திட்டத் தில் என்ன ஏற்பாடு செய்திருக்கிறீர்கள்? இதெல்லாம் செய்தாலொழிய, இந்த சாபக்கேட்டை உங்களால் ஒழிக்க முடியாது. சாதி அமைப்பு முறை அப்படிப்பட்டதாகும் என்பதால்தான் நான் இதைச் சொல்லுகிறேன். சமுதாயத்தில் விழிப்பு உணர்வை ஏற்படுத்தியாக வேண்டும்.

இந்த சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்த நீங்கள் இந்தப் பிரச்சார சாதனங்கள் மூலம் என்ன செய்திருக்கிறீர்கள்? ஒவ்வொரு நாள் காலையிலும் மாலையிலும் தொலைக்காட்சி மூலமும் வானொலி மூலமும் இந்த அரசாங்கத்தையும், இந்தப் பிரதமரையும் முன்னிலை படுத்திக்காட்டுவதுடன் மட்டும் நின்று விடுகிறீர்கள். சாதி அமைப்பு முறையிலுள்ள சாபக்கேடுகளை அகற்ற இந்தப் பிரச்சார சாதனங்கள் பயன் படுத்தப்படுவதில்லை.

அவைத் துணைத்தலைவர் : தயவு செய்து உரையை முடித்துக் கொள்ள முயலுங்கள். 

கல்பநாத்ராய் : கோபால்சாமி அவர்களே, பிரதமர் எந்த ஒரு சாதியையும் சேர்ந்தவர் அல்ல.

வை.கோபால்சாமி: அது எனக்குத் தெரியும். அவரை நான் குறை கூற வில்லை.

அவைத் துணைத்தலைவர் : தயவு செய்து முடித்துக் கொள்ள முயலுங்கள்.

வை. கோபால்சாமி: பிரதமருக்கு சாதி இல்லை என்பது எனக்குத் தெரியும். அவர் ஒரு காஸ்மாபாலிடன். அவர் ஒரு இந்து அல்ல; ஒரு பார்சி அல்ல; ஒரு கிறிஸ்தவர் அல்ல. அது எனக்குத் தெரியும். 

எங்களுடைய கண்ணோட்டம் விசாலமானது. ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பதுதான் எங்கள் கண்ணோட்டம். பிறப்பில் அனைவரும் சமமே என்பதுதான் இதன் அர்த்தமாகும். எங்களது திருவள்ளுவர் பெருமானின் வாக்கு அது. அதுதான் எங்கள் கண்ணோட்டம்.

ஆனால் வடபுலத்தார் தமது பண்பாட்டு ஆக்கிரமிப்புகளின் மூலம் எம்மீது படை எடுத்த போது எமது பண்பாடு சிதைக்கப்பட்டது. எனவே இப்போது அரசாங்கத்துக்கு நான் கூறும் யோசனை இது தான்.

மத்திய மண்டபத்தில் பெரியார் திருஉருவப்படத்தையும் அம்பேத்கர் திரு உருவப்படத்தையும், நீங்கள் திறந்து வைக்க வேண்டும். இந்த நாட்டில் சமுக நீதியின் உண்மையான பாதுகாவலர்கள் அவர்கள். 

நமது சமூகத்தின் புற்று நோயாக விளங்கும் சாதி அமைப்பு முறையை அதன் அடிவேரிலேயே தாக்கினாலொழிய ... (குறுக்கீடுகள்)

கல்பநாத்ராய் அவர்களே, நீங்கள் பாட்டுக்கு சிரித்துக் கொண்டிருக்கிறீர் கள். ஆனால் இந்த உலகம் பூராவும் உங்களைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருக்கிறது!

சாதி அமைப்பு முறையின் அடிவேரையே அழித்தொழித்தால் ஒழிய, தாழ்த்தப்பட்ட மக்களையும், பழங்குடிப் பிரிவினரையும் மேல் நிலைக்கு ஒரு நாளும் கொண்டு வர முடியாது என்பதைச் சொல்லிக் கொள்கிறேன்.

(5.12.85-இல் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடிப் பிரிவினர் கமிஷனின் அறிக்கையின் மீது நடைபெற்ற விவாதத்தில்)

குமரிக்கடல் வள்ளுவர் சிலை - வைகோ பேச்சு

குமரிக் கடல் வள்ளுவர் சிலை (1.1.2000)

நானில மக்களுக்கெல்லாம் நல்வழி காட்டும் நுழைவாயில்! திறப்பு விழாவில் வைகோ பெருமிதம்!.....

குழும் தென்கடல் ஆடும் குமரி தொடரும் வடபால் அடல்சேர் வங்கம் ஆழும் கடல்கள் கிழக்கும் மேற்கரம் அறிவும் திறனும் செறிந்த தாயகமாம் தமிழ்த் திருநாட்டில் அறத்துப்பாலும் பொருட்பாலும் இன்பத்துப்பாலும் இணைத்திட்ட திருக்குறனைப் போல் அரபிக் கடலும் வங்கக் கிடலும் இந்துமாக் கடலும் அலைக்கரம் உயர்த்தி ஆர்ப்பரிக்கின்ற கன்னியாகுமரியில்,அணுவைத் துளைத் தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறளை வையகத்திற்கு வழங்கிய செந்தாப் புலவராம் திருவள்ளுவரின் புகழைத் திக்கெட்டும் பரவச் செய்ய திருவுருவச் சிலைதனை நிறுவி திறந்து வைத்து. இந்த விண்ணும் மண்ணும் அலைமாகடலும் உள்ளவரை அழியாப் புகழைக் குவித்துவிட்ட தன்னிகரில்லாத தலைவர், சங்கத் தமிழை, குறளோவியத்தை எண்ணற்ற காவியங்களை அணிமணிகளாக அன்னைத் தமிழுக்குச் சூட்டிய முத்தமிழறிஞர் பூம்புகார் கண்ட கலைத்தச்சன்; தந்தை பெரியாரின் தகைசால் மாணாக்கர் மூண்டு பகையெழுத்தாலும் நெஞ்சுரத்தால் தம்பிமார் படையை நடத்துகின்ற வல்லமையால் அறிஞர் அண்ணாவின் நெஞ்சமெல்லாம் நிறைந்திட்ட ஆற்றலின் ஜீய ஊற்று - அரசியலில் என்னை வளர்த்து ஆளாக்கிய ஆருயிர் அண்ணன் தமிழகத்தின் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்களே!

உலகிலே வாழுகின்ற தமிழர்களின் உள்ளத்திலேயெல்லாம் இன்பத் தேனை அள்ளி வழங்குகின்ற இந்தச் சீர்மிகு விழாவினுடைய தலைவர் பைந்தமிழுக்கோர் தேர்ப்பாகன் - தன்மான இயக்கத்தினுடைய முன்னணித் தலைவர் ஆருயிர் அண்ணன் மாண்புமிகு பேராசிரியர் அவர்களே!

தமிழர் வாழும் பிற நடுகளிலேயிருந்து வருகை தந்துள்ள மாட்சிமை தங்கிய அமைச்சர் பெருமக்களே! மாண்புமிகு அமைச்சர் பெருமக்களே! மதிப்பு வாய்ந்த அரசியல் கட்சித் தலைவர்களே! உலகின் நாலா திசைகளிலேயிருந்தும் வருகை தந்துள்ள தமிழ் அறிஞர்களே! ஆன்றவிந்தடங்கிய கொள்கைச் சான்றோர்களே! பெருஞ்சிறப்பான சிலை வடித்த சிற்பி மதிப்புமிக்க கணபதி ஸ்தபதி அவர்களே! அவரோடு இணைந்து பணியாற்றிய மதிப்பு வாய்ந்த சிற்பிகள! அன்புத் தாய்மார்களே! அருமைப் பெரியோர்களே! செந்தமிழ் நாட்டுச் செல்வங்களே! வணக்கம்.

மலர்ந்திடும் புத்தாயிரம் நல்லாயிரமாகத் திகழ்ந்திட மனித குலத்திற்கே வழிகாட்டிய மாமறை தந்த திருவள்ளுவரின் திருவுருவச் சிலையை அண்ணன் டாக்டர் கலைஞர் அவர்கள் தனது திருக்கரங்களால் திறந்து வைத்திருக்கின்றார். ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னால் செப்டம்பர் திங்கள் 20 ஆம் நாள் இதே கன்னியாகுமரி கடற்கரையில் சிலைக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்ற வேளையில் அண்ணன் பேராசிரியர் அவர்கள் தலைமையேற்ற அவ்விழாவிலே கலைஞர் அவர்கள் பேசுகிறபோது கூறிய சொற்கள் இன்னமும் என்னுடைய செவிகளிலே சிங்காரம் செய்து கொண்டிருக்கின்றன. இரவு நேரங்களிலே பாறையின் மீது படுகின்ற உளியின் ஓசை எனது செவிகளிலே விழும்.

விவேகானந்தருடைய நினைவாலய மண்டபம் எழுப்பப்படுகின்ற நிகழ்ச்சி என் இதயத்திலேபடும்.

திருவள்ளுவருக்குச் சிலையமைக்க வேண்டுமென்று இந்த அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் நேரத்தில் என் மனக் கண்ணிவே எண்ணிப் பார்க்கின்றேன்; கனவு காண்கின்றேன். தமிழகத்தின் கோடானு கோடி மக்கள் நேரிலும் தொவைக்காட்சி வாயிலாகவும் காணுகின்ற அந்தத் திருநாளை எதிர்நோக்குகின்றேன். அந்த நாள் வராதா என்று நான் கனவு காண்கிறேன் என்று பேசினீர்களே, அண்ணன் கலைஞர் அவர்களே! அந்தத் திருநாள் வாய்த்திருக்கிறது. காணவும் கண்டு மகிழவும் - ஏன் அந்த விழாவிலே பங்கேற்று உரையாற்றவுமான வாய்ப்பு கிடைத்ததையெண்ணி பிறவிப் பெரும்பயனாகக் கருதி நான் நன்றி தெரிவிக்கின்றேன்.

The dawn of the new Millennium. இது புத்தாயிரத்தினுடைய முதல் நாள். உலகிலே பல்வேறு பகுதிகளிலே இந்தத் திருநாளைக் கொண்டாடுகிறார்கள். ஆனால், 2000 ஆண்டின் தலைநாளாகிய ஜனவரி முதல் நாளில் இந்தச் சிலைதனை இங்கே நீங்கள் திறந்து வைத்திருக்கின்றீர்கள். இந்த நாளில் உலகத்தில் ஆறு கண்டங்களில் பூமிப் பந்திலே நடந்த - நடந்து முடிந்த - நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற எந்தவொரு விழாவும் இதற்கு நிகரான விழா இல்லை என்பதனை எண்ணிப் பார்க்கின்றேன். 

உலகில் எந்தக் கவிஞனுக்கும். இப்படிப்பட்ட சிலை எழுப்பப்பட்டதில்லை. அலைகடல் மீது எழுப்பப்பட்டதில்லை; எந்த நாட்டிலும் எழுப்பப்பட்டதில்லை. 

ஒரு வீரனை இன்னொரு வீரன்தான் மதிக்க முடியும். ஒரு கவிஞனை இன்னொரு கவிஞன்தான் மதிக்க முடியும்; அந்தக் கவிஞனுடைய ஆற்றலை இன்னொரு கவிஞள்தான் உய்த்து உணர முடியும். 

எங்கள் தமிழகத்தின் கொற்றவனே ஒரு கவிஞன் என்ற காரணத்தினால் டாக்டர் கலைஞர் அவர்களே இந்தச் சிலையை நீங்கள் திறந்து வைத்திருக்கின்றீர்கள்.

*வரலாற்றில் நிலைப்பீர்!*

திருவள்ளுவருக்கு பழமையான நாட்களிலே பத்துப் பேர் உரை எழுதியிருக்கிறார்கள். தருமர், மணக்குடவர், தாமத்தர், நச்சர், பருதியார், திருமலையார், மல்லர், பரிப்பெருமாள், காளிங்கர், பரிமேலழகர் எனப் பத்துப் பேர் உரையெழுதியிருக்கிறார்கள். 

நீங்கள் உரை எழுதினீர்கள். உயிரோவியமாக குறளோவியம் தீட்டினீர்கள். வான்புகழ் வள்ளுவனுக்குக் கோட்டம் அமைத்தீர்கள். இன்று சிலை நிறுவப்பட்டதைத் திறந்து வைத்திருக்கின்றீர்கள்.

இன்னும் ஆயிரமாயிரம் ஆண்டுகள் வரும். அந்த வரப்போகின்ற நூறு நூறு ஆண்டுகளில் இந்த நாளை நினைவிலே வைக்கும் தமிழ்க்குலம். இந்த நாளும் நிகழ்ச்சியும் திறந்து வைத்த நீங்களும் வரலாற்றினுடைய பொன்னெழுத்துக்களிலே நிலைத்திருப்பீர்கள்.

உலகம் பல்வேறு நிகழ்ச்சிகளைக் கண்டிருக்கின்றது. 

பெத்லகத்திலே கிறிஸ்துநாதர் பிறப்பதற்கு முன்பு பல்வேறு அம்சங்கள் அதிசயங்களாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கின்றன.

பல நாடுகளிலேயிருந்து பந்தய மைதானத்திலே விளையாட்டுப் போட்டிகளிலே பங்கேற்க வருகின்றவர்கள் பூஜித்த கிரேக்கக் கடவுள் ஜீயஸின் சிலை ஒலிம்பியாவிலே அமைக்கப்பட்டது.

அதிசயங்கள் ஏழு எனக் குறிப்பிடப்பட்ட அந்த வேளையில் பாபிலோனிலே தொங்கும் தோட்டம்; ஏசியா மைனரில் கொற்றவை போல் கோபம் கொள்ளக் கூடிய தேவதை என்று கிரேக்கப் புராணம் வர்ணித்த ஆர்டிமிசுடைய அழகான ஆலயம்; பாபிலோன் பேரரசனான ரெட்டான் ஆபெலுடைய நினைவாகக் கட்டப்பட்ட அழகான கல்லறை; வருகிற கப்பல்களுக்கெல்லாம் வழிகாட்ட அலெக்சாண்டிரியாவில் உயர்த்தப்பட்ட கலங்கரை விளக்கம்; ஓ! சூரியக் கடவுளே உனக்காக நாங்கள் வெண்கலத்திலே சிலை வடிக்கின்றோம். பகை மறந்து அமைதி நிலவட்டும் என்று கிரேக்கர்கள் ரோட்ஸ் தீவிலே 86 அடி உயரத்திலே எழுப்பிய The Colossus of Rhodes' என்று அழைக்கப்பட்ட அந்த வெண்கலச் சிலை; இவற்றில் பல அதிசயங்கள் அழிந்துவிட்டன.

என்றாலும் இன்றைக்கும் அழியாமல் விண்ணளாவப் பிரமாதமாக எழுந்து நிற்கின்ற - எகிப்து தேசத்தில் நைல் நதியின் மேற்குக் கரையிலே நிர்மாணிக்கப்பட்ட பிரமிடுகள்.

இன்றைக்கு ஏறத்தாழ 202 ஆண்டுகளுக்கு முன்னால் அந்தப் பிரமிடுகளுக்கு முன்னாலே நெப்போலியன் பெரும் பிரெஞ்சு நாட்டுப் படையுடன் வந்து நின்றான். தன் படை வீரர்களைப் பார்த்துச் சொன்னான். எதிரே உயர்ந்து நிற்கக்கூடிய பிரமிடுகளைக் காட்டிச் சொன்னாள், "From the top of these Pyramides 40 centuries are looking at us" "இந்த பிரமிடுகள் உயரத்திலேயிருந்து 40 நூற்றாண்டுகள் நம்மைப் கொண்டிருக்கின்றன" என்று நெப்போலியன் சொன்னான்.

இதோ திருவள்ளுவர் சிலை எழுந்து நிற்கிறது. இந்தச் சிலை 100 நூற்றாண்டுகளின் தமிழர்களின் தம் சிந்தனைச் செல்வமாக - தமிழர்தம் வரலாற்றுச் சின்னமாக இதோ எழுந்து நிற்கிறதே. "From the Thiruvalluvar statue 100 centuries are looking at us" இந்தச் சிலையைப் பார்க்கின்றபோது 100 நூற்றாண்டுகள் நம்மை உற்று நோக்கிக் கொண்டிருக்கின்றன.

ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் - ஏறத்தாழ 10000 ஆண்டுக்கால வரலாற்றுக்குச் சொந்தக்காரர்கள் தமிழர்கள் 7000 ஆண்டுகளுக்கு முன்னாலே எழுந்த முதற்சங்கம்; ஏறத்தாழ 3000 ஆண்டுகளுக்கு முன்னாலே தொல்காப்பியனைத் தந்த கபாடபுரம் தந்த இடைச் சங்கம்; இதோ எதிரே தெரியக்கூடிய ஆழ்கடலுக்கு உள்ளே உறங்கிக் கிடக்கின்ற பரந்து கிடக்கக் கூடிய குமரிக் கண்டம் என்று அழைக்கப்படுகின்ற பழந்தமிழ்நாடு - அங்கு பாய்ந்து ஓடிய பஃறுளியாறு, உயர்ந்து ஓங்கிய குமரி மலை. அங்கு வாழ்ந்த தமிழினம் அவர்களுடைய எண்ணத்தை அவர்களுடைய வாழ்க்கை முறையை வாழ்க்கைச் சட்டத்தை வள்ளுவர் திருக்குறளாகச் சொன்னார்.

சிந்தனையாளர்கள் பலர் உலகத்திலே தோன்றியிருக்கிறார்கள்.

நாகரிகம் பழைமையாக எங்கெல்லாம் வளர்ந்ததோ அங்கெல்லாம் சிந்தனையாளர்கள் தோன்றியிருக்கிறார்கள்.

கிரேக்கத்தில், ரோமாபுரியில், சீனத்தில் எகிப்தில் என எத்தனையோ சிந்தனையாளர்களை பிளாட்டோ அரிஸ்டாடில் கன்பூஷியஸ் என வரிசைப்படுத்துவார்கள்.

சிந்தனையாளருக்கும் எட்டாத கருத்துக்களை ஆனால் எந்த அவர்கள் அறியாத உணர்வுகளை தந்தவர் நம்முடைய திருவள்ளுவர்.

 விண்ணையும் மண்ணையும் திருமால் அளந்ததாக மாபலி சக்கரவர்த்தியின் புராணத்திலே சொல்லுவார்கள்.

"மாலும் குறளாய் வளர்ந்து இரண்டு மானடியால் ஓர்ந்தளந்தான் வள்ளுவர் தாம் குறள் வெண்பாவடியால் உலகளந்தார் தம் எண்ணத்தையெல்லாம் அளந்தார் ஓர்ந்து"

கோடானு கோடி மக்களுடைய உணர்வுகளை எண்ணி உணரக் கூடிய ஆற்றல் வள்ளுவருக்கு இருந்தது.

ஒரு சிந்தனையாளருடைய சிறப்பு ஒரு நூற்றாண்டில் உருவாகிறது. அது

அடுத்த நூற்றாண்டில் மறைந்து விடுகிறது. ஒரு சிந்தனை மறைந்து விடுகிறது. மாறி விடுகிறது. உலகம் பல சிந்தனைகளைப் பார்த்திருக்கின்றது. கருத்தோட்டங்களைப் பார்த்திருக்கிறது. ஆனால், திருவள்ளுவருடைய எண்ணம் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள்

கடந்தும் நிற்கின்றதென்றால், கண்ணுக்கு விருந்தாக மட்டுமல்ல. எண்ணத்தையும் பண்படுத்துவதற்காக அவருக்கு இந்தச் சிலை அமைக்கப்பட்டிருக்கின்றது.

*மனதையும் பண்படுத்தும் சிலை இது !*

சந்திர மண்டலத்திலிருந்து பார்த்தாலும் கூட ஒரு கோடு போல காட்சியளிக்கிறது என்று சீனத்து பெருஞ்சுவரை வர்ணித்தார்கள்.

காலத்தின் கன்னத்திலே வடிந்த கண்ணீர்த் துளி என்று கவியரசர் தாகூரால் பாராட்டப்பட்ட தாஜ்மகால் யமுனைக் கரையில் சிறப்பான அதிசயமாகத் திகழுகிறது. 

சுதந்திர தேவியினுடைய சிலை வடித்த கஸ்டாஃப் ஈஃபல் தான் பாரீஸ் நகரத்தினுடைய ஈஃபல் டவரினைக் கூட அமைத்தான்; அந்த கோபுரம் கண்ணுக்கு விருந்தாக இருக்கலாம். ஆனால் கருத்தைப் பண்படுத்தும் விதமாக அண்ணன் கலைஞர் அவர்களே, நீங்கள் நிறுவியிருக்கக்கூடிய சிலை - திருவள்ளுவர் சிலை இங்கே எழுந்திருக்கின்றது. எழுந்து நிற்கின்றது இந்தச் சிலை.

வருகின்றவர்களுடைய உள்ளத்தைப் பண்படுத்துகிற இடமாக இங்கே பாறைகள் பல உண்டு.

"குமரிப் பாதம் கொற்கையில் வணங்கி " என்று சீத்தலைச் சாத்தனார் மணிமேகலைக் காப்பியத்தில் சொன்னார்.

அப்படிப்பட்ட பாறைகளில் ஒன்றில்தான் விவேகானந்தர் தவமிருந்ததாகச் சொன்னார்கள். சிகாகோ நகரத்திலே பல்வேறு சமய நம்பிக்கை கொண்டவர்கள் கூடியிருந்த இடத்தில் மத நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தக் கூடிய கருத்தை 'சகோதர சகோதரிகளே' என்று சொல்லி உரையைத் தொடங்கிய விவேகானந்தருக்கு இங்கே மண்டபம் அமைக்கப்பட்டிருக்கின்றது.

இந்த நாளிலே விழாவின் மூலம் நாட்டு மக்களுக்கு, தமிழர்களுக்கு தமிழ்ச் சமுதாயத்திற்கு, உலகத்திற்கு சொல்லப்படுகின்ற கருத்து என்ன?

"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்றான் வள்ளுவன். 

இங்கே உரையாற்றிய பலரும் அதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். அந்த உணர்வுகளை வளர்ப்பதற்குப் பயன்படட்டும் இந்தச் சிலை திறப்பு விழா.

தமிழர்களின் சிந்தனைக்கு நிகரானது உலகில் எதுவும் இல்லை என்று பெருமைக்காக சொல்லவில்லை உண்மையைத்தான் எடுத்து வைக்கிறோம்.

"மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்

ஆகுல நீர பிற"

என்ற அறன் வலியுறுத்தவை.

"அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்

புன்கண்நீர் பூசல் தரும்"

என்ற பன்புடைமையை,

"கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த

ஒன்று நன்று உள்ளக்கெடும்"

 என்கின்ற செய்நன்றியறிதலை,

 "சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்து ஒருபால் கோடாமை சான்றோர்க்கு அணி"

என்ற நடுவுநிலைமையை 

"விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா வேண்டற்பா ற்றுன்று"

என்கின்ற விருந்தோம்பலை.

"ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார் போற்றலுள் எல்லாம் தலை"

என்கின்ற பெரியோரை பிழையாமையை

 "ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின்"

என்ற ஈகையை,

"உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன்"

என்கின்ற வாய்மையை

"தொட்டனைத்தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு"

எனும் கல்வியை,

"தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும்"

என்கின்ற தீவினையச்சத்தை,

பெயக்கண்டும் நஞ்சுஉண்டு அமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர்

எனும் கண்ணோட்டத்தை,

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை"

என்ற பொறையுடைமையை,

"இன்னா செய்தார்க்கும் இனியவை செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு"

என்ற சான்றாண்மையை,

 "அழிவந்த செய்யினும் அன்புஅறார் அன்பின் வழிவந்த கேண்மை யவர்"

என்கின்ற பழைமையை,

"உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு" 

என்கின்ற நட்பை,

"ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை"

என்ற வினைத் தூய்மையை,

''கூற்றுஉடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும் ஆற்றல் அதுவே படை"

என்ற படை மாட்சியை,

"மயிர்நீப்பின் வாழாக் கவரிமான் அன்னார் உயிர்நீப்பர் மானம் வரின்''

என்ற மான உணர்வை,

"தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலில் தோன்றாமை நன்று"

என்கின்ற புகழை,

"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு"

என்கின்ற அறிவுடைமையை,

நந்தமிழ் மக்கள் -ஏன்? இந்திய மக்கள் - ஏன்? நானிலத்திலே வாழ்கின்ற அனைத்து மக்களும் பின்பற்றி வாழ்வதற்கு வழிகாட்டும் நுழைவாயிலாகட்டும் இந்தத் திருவள்ளுவர் சிலை என்ற உறுதியினை இந்த திறப்பு விழாவில் மேற்கொள்வோம்.

அமைதி நிலவுகிற - நிசப்தம் நிலவுகிற இந்த நேரத்தில் எண்ணிப் பார்க்கிறேன். இந்த உப்புக் கடல் சூழ்ந்த உருண்ட உலகத்தில் வந்து போகின்ற எல்லா நாளும் சிறப்பான நாட்கள் அல்ல.

அலைகளின் ஓசை எழுகிறது. அலைக்கரங்கள் உயர்த்தப்படுகின்றபோது அந்த ஓசை எழுவது பாறைகளிலே சீறி மோதி அடிக்கின்ற அந்த சப்தம் செவியிலே கேட்கிறது. கேட்கும். 

மௌனமான இரவுகளில் மக்கள் அயர்ந்து தூங்குகின்ற இராத்திரி வேளைகளில் - இந்தக் கன்னியாகுமரி கடல் அலைகளின் ஓசை பாறைகளில் மோதிக் கொண்டே இருக்கும். 

அந்த அலைகள் எழுப்புகின்ற ஓசையில் நம்முடைய உள்ளத்தில் அந்த அலை எழுப்புகின்ற ஒலி குறள் - குறள் - குறள் என்றே ஒலிக்கும் வள்ளுவர் - வள்ளுவர் - வள்ளுவர் என்றே ஒலிக்கும். கலைஞர் - கலைஞர் - கலைஞர் என்றே ஒலிக்கும். 

அந்த ஒலியிலே பழந்தமிழர் வாழ்த்தொலி கலந்து இருப்பதைக் கேட்கிறோம். அந்த ஒலியியே தமிழ்த் தாயின் அருள் மழை ஒலி இணைத்திருப்பதைக் கேட்கின்றேன். பேரறிஞர் அண்ணா அவர்களின் வாழ்த்தொலி இணைந்திருப்பதைக் கேட்கின்றேன்.

வளரட்டும் வள்ளுவம்! உயர்வடையட்டும் தமிழகம்!

இவ்வாறு பேசினார் வைகோ.

திருக்குறள் நூலை மலம் என்று சொன்னாரா பெரியார் ?- வாலாசா வல்லவன்

திருக்குறள் நூலை மலம் என்று சொன்னாரா பெரியார் ?- வாலாசா வல்லவன்

பெ.ம.வின் அடிபொடி கதிர்நிலவன் பெரியார் திருக்குறளை மலம் என்று சொன்னார் இதோ பார் ஆதாரம் என்று காட்டுவதற்காக ஒரே ஒரு பத்தியை மட்டும் எடுத்துப் பதிவிட்டிருந்தார். முழுமையாக பதிவிடும்படி கேட்டேன் அவர் பதியவில்லை.

ஆனைமுத்து அய்யா தொகுத்த பெரியார் சிந்தனைகள் நூலிருந்து முழுமையாக பதிவிட்டுள்ளேன்.

குறளும் - நானும்

பேரன்பு படைத்த தலைவர் அவர்களே! தாய்மார்களே! தோழர்களே! வணக்கம். 

வள்ளுவர் குறளையும், அந்தப்படியே, அப்போது பகுத்தறிவுக்கு ஏற்றதல்ல என்று கண்டித்து வந்தேன். எல்லாவற்றையும் குறை சொல்லும் போது, பலர் என்னிடம், “எல்லாம் போய்விட்டால், நமக்கு எதுதான் நூல்!' என்று கேட்பார்கள். நான், ' இங்கே இருக்கிற மலத்தினால் கெட்ட நாற்றம் வீசுகிறது; அதை எடுத்துவிடு என்று கூறினால் 

அந்த இடத்தில் என்ன வைப்பது என்றா கேட்பது?' என்று பதில் கூறுவேன். 

ஏறக்குறைய மத சம்பந்தமான காரியங்களில் மக்களுக்கு நம்பிக்கையே இருக்கக் கூடாது என்று கருதி அந்தப்படியாகவே பிரச்சாரம் புரிந்து வந்தேன். பிறகு நாளாக ஆக நல்ல அறிவாளிகளோடு - அறிவாளி என்றால் பண்டிதர்களோடு அல்ல, பொது அறிவுள்ள மக்களோடு, திராவிட உணர்ச்சி மிக்கவர்களோடு - நம் உணர்ச்சியுள்ள அறிவாளிகளோடு பழகியபோது குறளின் மேன்மை பற்றி அவர்கள் எடுத்துக் கூறினார்கள். நான், ' இப்படிச் சொல்லப்பட்டிருக்கிறதே, இந்த இடத்தில் இப்படி யிருக்கிறதே!' என்று கேட்டேன். ' அது பரிமேலழகரின் உரை; அது குறளாசிரியர் கருத்தல்ல' என்று எடுத்துக் கூறி உண்மை உரையினைச் சொன்னார்கள். அந்தக் காலத்தில் பரிமேலழகர் உரை தான் சிறந்த உரை என்று கொண்டாடப்பட்டது. அவர் மனுதர்ம சாஸ்திரப்படி குறளுக்கு உரை எழுதிவிட்டார். பின்னர் வந்த அறிவாளிகள் அதைக் கண்டித்து, குறளின் உண்மைக் கருத்தை எடுத்துக் காட்டினார்கள். 

அதிலிருந்துதான் நான் குறளைப் பற்றிப் பேசுகிறேன். அதுவும் அதையே ஆதாரமாக (Authority) எடுத்துக் கொண்டல்ல; ‘ நான் சொல்லுகிற கருத்து- அதிலும் இருக்கிறது பார்!' என்று கூறிவந்தேன். 

சிறிது குறை இருந்தாலும் இப்போதைக்கு இது இருக்கட்டும் என்று கருதினேன். 

புராணக் கருத்துக்களிலும், மூட நம்பிக்கைகளிலும் மூழ்கிக் கிடக்கும் நம் மக்க ளுக்குப் பகுத்தறிவு வளர்ந்தபின், மூடக் கருத்துக்கள் ஆட்டம் கண்ட பின் தான் குறளின் பொருளை உணரும் அறிவு மக்களுக்கு உண்டாகும் என்று கருதி, முதலில் மூடக் கருத்து களை அகற்றும் பணியில் பிரச்சாரம் புரிந்து வந்தேன். இன்று மக்களுக்குக் கொஞ்சம் அறிவுத் தெளிவு-பகுத்தறிவுத் தன்மை வளர்ந்து இருக்கிறதால் இன்று குறளைப் பற்றிப் பேசுகிறேன். 

‘குறளில் இப்படியிருக்கிறதே! நீ ஏன் இப்படி நடக்கிறாய்?' என்று கேட்காதீர்கள். நான் சொல்லுவது அதில் இருக்கிறது என்ற அளவில்தான் - நான் குறளை ஆதரிக்கிறேன் ; அதை அப்படியே முழுவதையும் ஒத்துக் கொள்ளமாட்டேன். 

உதாரணமாக, மாமிச உணவு உண்பதை வள்ளுவர் மிக வன்மையாகக் கண்டிக் கிறார்; கொல்லாமையின் உயர்வு குறித்து வெகுவாக எழுதியிருக்கிறார். குறளிலேயே அப்படிச் சொல்லப்பட்டிருக்கிறதே என்பதற்காக நான் மாமிச உணவு உட்கொள்ளாமல் இருக்கமுடியுமா? மக்களுக்கும் எல்லா நடவடிக்கைகளுக்கும் குறள் தான் ஆதாரம் என்று சொல்லவில்லை. 

குறளிலிருந்து உங்களுக்கு வேண்டியதை ஏற்றுக் கொள்ளுங்கள். வேண்டாததைத் தள்ளிவிடுங்கள் என்றுதான் கூறுகிறேன். 

ஒரு கடையில் எல்லா சாமான்களும் கிடைக்கும் என்றால், அந்தக் கடையில் உள்ள எல்லா சாமான்களையும் நாம் வாங்கிக்கொண்டு வருவோமா? நமக்குத் தேவையான சாமான்களை மாத்திரந்தான் வாங்கிவருவோம். அது போலவே, குறளில் வேண்டியதை எடுத்துக் கொண்டு வேண்டாததை விட்டு விடுங்கள் என்று கூறுகிறேன். 

குறளில் ஏதோ சில குறைகள் இருக்கலாம் ; இருக்க முடியும். ஏனென்றால், அது 1950-வது வருடத்திய (இன்றைய) மாடல் அல்ல. 2000 வருடத்திற்கு முந்திய சங்கதி. திருவள்ளுவர் திரிகால முணர்ந்த முனிபுங்கவரென்றோ, ஞானியென்றோ நாம் கொள்ள வில்லை. 2000 வருடங்களுக்கு முன்னர் ஒருவன் எவ்வளவு அறிவாளியாய் இருந்தாலும் எலக்ட்ரிக் லைட், ஒலிபெருக்கி, மோட்டார் முதலியவைகளைக் கண்டிருப்பானா ! மதவாதிகள் வேண்டுமானால், எல்லாக் காலத்தையும், முக்காலத்தையும் உணர்ந்த மகான் இவர்' என்று பலரை விளம்பரப்படுத்தலாம். ஆனால், அது பகுத்தறிவுக்கு ஒவ்வாதது. நாம் திருவள்ளுவரை மகான் என்றோ அவதார புருஷரென்றோ ஒத்துக்கொள்ளமாட்டோம். 

திருவள்ளுவர் நல்ல அறிவாளி, ஆராய்ச்சிக்காரர். அந்தக் காலத்தில் மக்களிடம் பரவி இருந்த மூட எண்ணங்களோடு போராடிய அறிஞர் என்ற அளவில்தான் ஒத்துக் கொள்ள முடியும். 

அந்தப்படியிருக்க, 2000 ஆண்டுகளுக்கு முன்னதாகத் திருவள்ளுவர் சொன்னவை எல்லாம் அப்படியே இன்றைக்கும் ஏற்றதாக இருக்க முடியுமா? இன்றைய நிலைக்கு நான் பேசும் கொள்கைகள் சரி; என் திட்டங்கள் சரி என்றால் எனக்குப் பிறகும், இன்னும் 100, 200, 1000 வருடங்களுக்குப் பிறகும் என் கொள்கைகள் - நான் வகுத்த திட்டங்கள் கொஞ்சங்கூட மாற்றப்படாமல் அப்படியே இருக்கவேண்டும் என்பது என்ன நியாயம்? அந்தப்படி இருக்க முடியுமா? 

காலத்திற்கு ஏற்ற முறையில்தான் எண்ணங்களின் விரிவும், கொள்கை, திட்டங் களும் இருக்க முடியும். போர் முறை பற்றித் திருவள்ளுவர்-வில், வாள், வேல், கேடயம் என்ற ஆயுதங்களை வைத்துத்தானே எழுதியிருக்கிறார்? இன்று எழுதப்பட்டால் அணு குண்டைப் பற்றி எழுதுவார்கள் ; நாளைக்கு வேறொன்று. இந்தப் படியாகத்தானே மாறிக் கொண்டே போகும்! அப்படியிருக்க, எதையும் மாற்றக்கூடாது என்பது என்ன நியாயம்? ஆரியக் கருத்துகள், தத்துவங்கள் நம் நாட்டில் நுழையாதிருந்தால், நமக்குக் குறளே ஆதாரமாக- குறளே நம்முடைய மதமாக இருந்திருக்கும். ஆரியர்கள் திருவள்ளுவரை முதலிலேயே-பிறப்பிலேயே இழிந்தவராக ஆக்கிவிட்டார்கள். 

இந்து மதத்தில் எந்தக் காரியங்களைச் செய்தவராக இருந்தாலும், அதிசயமான அற்புதமான-நடைமுறைக்கு ஒவ்வாத கருத்துக்களை அவர்களின் பிறவியில்-வரலாற்றில் புகுத்துவார்கள். இவன் குதிரைக்குப் பிறந்தான்; இவன் குரங்குக்குப் பிறந்தான்; இவன் யானைக்குப் பிறந்தான்; இவன் செத்துப்போனவனை உயிர் மீட்டு எழச்செய்தான்; இவன் மண்ணைச் சர்க்கரையாக்கினான் ; குருடனுக்குக் கண் கொடுத்தான்- என்பது போன்ற அதிசயங்களைப் புகுத்தி விடுவார்கள். ஏனென்றால், அப்போது தான் அதிலிருக்கும் குற்றங் குறைகள் பற்றி-ஆபாசங்கள் பற்றி யாரும் கேள்விகள் கேட்க மாட்டார்கள் என்ற கருத்தோடு ! 

ஆனால், குறளில் அப்படிப்பட்ட அதிசயம் ஒன்றையுங் கூறாவிட்டாலும் திருவள்ளுவரைத் தெய்வீகப் பிறவியாக ஆக்காவிட்டாலும் - அவருடைய பிறப்புப்பற்றி இழித்துக் கூறிவிட்டார்கள். 

வள்ளுவரின் தாயை ஒரு விபச்சாரியாகக் கற்பனை செய்து விட்டான். வள்ளுவர் பிறப்பைப்பற்றி எழுதும் போது பறைச்சிக்கும் பார்ப்பானுக்கும் வள்ளுவர் பிறந்தார் என்று எழுதுகிறான். இதில் புத்திசாலித்தனம் என்ன வென்றால் - குறளைப் போன்ற நீதி நெறிகளை, மக்களின் உயர் ஒழுக்கத்திற்கு வேண்டிய பண்புகளைப் போதிக்கத்தக்க தகுதியும் அறிவும் வள்ளுவருக்கு வந்ததற்குக் காரணமே, அவர் பார்ப்பனருக்குப் பிறந்த தால்தான் ஆகும் என்ற கருத்தில் இந்தக் கதையை எழுதியிருக்கிறார்கள். இந்தப்படி பறைச்சியுடன் பார்ப்பான் கூடினான் என்பது, பார்ப்பனர்களுக்கு தர்மப்படி எவ்வளவு கேவலம் என்பதை மறந்துவிட்டார்கள். அக்காலத்தில் அறிவாளிப் பார்ப்பான் எவ்வளவு அயோக்கியத்தனமாக நடந்திருக்கிறான் என்பதைக் காட்டுகிறது. இந்தப்படியாக முதல் எடுத்தவுடனேயே குறளையும், அதன் ஆசிரியரையும் இழிவு படுத்தி விட்டார்கள். 

நாட்டில் புராணங்களைப்பற்றியும், இராமன்-சீதை தொடர்புபற்றியும், கந்தன் வள்ளி காதல் லீலைகள் பற்றியும், கிருஷ்ணனின் பிள்ளை விளையாட்டு, கோபிகள் லீலைகள் பற்றியும் எல்லோருக்கும் - பாமரர்கள், பாட்டாளிகள், படிக்காதவர்கள், கூலிகள் முதற் கொண்டு பெரிய, பெரிய சீமான்கள் வரை தெரியும்; தெரிந்திருப்பார்கள். ஆனால், குறள் பற்றிப் பெரிய பணக்காரர்களுக்கும் தெரியாது; தெரிய வாய்ப்பும் இல்லை. இந்தப்படியாகக் குறளை எந்தெந்த வழியாக மங்கும்படி செய்ய முடியுமோ-மக்கள் மனத்தில் குறளின் கருத்துக்கள் புகமுடியாது செய்ய முடியுமோ அவ்வளவுக்கு ஆரியர்கள் செய்து விட்டார்கள். 

நான், ஆரியக் கருத்துக்களெல்லாம் - அதன் தத்துவங்கள், கொள்கைகள் ஆகியவை களெல்லாம் ஒரு கூட்டத்தின் உயர்வுக்கும், வேறொரு கூட்டம் வேதனைப் படவுமான முறையில் அமைக்கப்பட்டிருக்கின்றன என்று கூறி- அவைகளை, ஆரியக் கருத்துக்களை அவைகளுக்கு ஆதாரமாய் இருக்கின்ற மதம், கடவுள் தன்மை, புராணங்கள் போன்ற வைகளை ஒழிக்க வேண்டும் என்றும் பிரச்சாரம் புரிந்து வருவதால் எனக்கு வள்ளுவர் உள்ளமும், அவர் நூலின் உண்மைக் கருத்தும் தெளிவாகத் தெரிகின்றது. 

ஆகவேதான், நாம் வள்ளுவரை, அவர் இயற்றிய திருக்குறளைப் போற்றுகிறோம். 

வள்ளுவர் யார், எந்தக் குலத்தைச் சோந்தவர் என்று நிச்சயமாய்க்கூற முடியாது. வள்ளுவர் ஆரியத்தை எதிர்ப்பவர்; ஆரியக் கருத்துக்களைக் கண்டிப்பவர் ; அவைகளை வெறுப்பவர் என்று தான் நமக்குத் தெரிகிறது. அத்தோடு, வள்ளுவர் எந்த மதத்தையும் சார்ந்தவராகத் தெரியவில்லை. சாதாரணமாக சைவ, வைணவ, சமணர்கள் விவாதங்களில் - சமணர்கள் தான் வெல்லுவார்கள். பெரிய புராணம் எழுந்ததே சமணர்களை ஒழிப்பதற் காகத்தான். ஆரியக் கருத்துக்களை சமணர்கள் ஏற்கவில்லை என்பதற்காக அவர்கள் வெறுக்கப்பட்டார்கள். அதன் விளைவாகப் பலப் பல தொல்லைகளுக்கு ஆளாக்கப் பட்டார்கள் சமணர்கள். இன்றுங்கூட மதுரையில் 8000 சமணர்களை கழுவேற்றின திருவிழா கொண்டாடப்படுகிறது. 

அவ்வளவு தூரம் ஆரியக் கருத்துக்களை எதிர்த்து, அதற்காக இன்னல்கள் பல பட்டிருக்கும் சமணர்களும்- திருக்குறளை ஆகரிக்கிறார்கள். சைவ சமயத்தவரும், வைணவ மதத்தாருங்கூட திருக்குறளை மாபெரும் நூல் என்று ஒத்துக் கொள்ளுகின்றனர். இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்களும், கிறிஸ்துவ மதத்தின் கீழிருப்பவர்களும் திருக்குறளைப் போற்றுகிறார்கள். இந்தப்படி எல்லோரும் போற்றுவதால்தான் திருக்குறள் ஒரு மதத்தைத் தழுவியோ, ஒரு மதத்தின் உயர்வுக்காகவோ எழுதப்பட்ட நூல் என்றில்லாமல், மக்களின் வாழ்க்கைக்கு, மக்கள் தங்களுடைய வாழ்க்கையிலே கையாள வேண்டிய வழி வகைகள் பற்றி எழுதப்பட்ட நூல் என்று ஆகிறது. குறளாசிரியர் காலத்தில் - இந்து மதம்' என்பது இல்லை. இந்து மதம் என்று இருந்திருந்தால் திருக்குறளில் ஒரு இடத்திலாவது ‘ இந்து' என்ற சொல்லைக் குறிப்பிட்டிருக்கலாம். ஆனால், 1330 பாட்டுக்களிலும் ஒரு இடத்திலாவது 'இந்து' என்ற சொல் காணப்படவே இல்லை. 

அது மட்டுமல்ல, குறளாசிரியர் கடவுளையும், மோட்ச நரகத்தையும் ஒத்துக் கொள்ள வில்லை . குறளில் நீங்கள் அறம், பொருள், இன்பம் என்ற அளவில் தான் காணமுடியுமே தவிர-' வீடு' - மோட்சம்' பற்றி அவர்கூறி இருப்பதாக இல்லை . அறம், பொருள், இன்பம் என்றுதான் முப் பிரிவுகளைக் கூறுகிறார், மோட்ச சாம்ராஜ்யத்தை விட்டு விட்டு. 

திருவள்ளுவர் கடவுளைப்பற்றிக் கவலைப்படவில்லை என்று கூறினேன். திருக் குறளின் முதல் அத்தியாயத்தில், ' கடவுள் வாழ்த்து' என்று ஒரு அதிகாரம் இருக்கிறது. அதில் உருவ வணக்கக் கொள்கைகள் இடம் பெறவில்லை. மேலும், இந்து மதக் கடவுள் களைப் பற்றிய ' புகழாரம் ' அந்தப் பத்துப் பாட்டுக்களிலும் கிடையாது. 

சிலர் கூறுகிறார்கள், ' குறளில் முதல் அத்தியாயத்தில் இருக்கும் கடவுள் வாழ்த்துப் பாக்கள் இடைச் செருகல்' என்று ; சிலர், ' அப்படியெல்லாம் இல்லை; வள்ளுவர் பாடியது தான்' என்று கூறுகிறார்கள். நம்மைப் பொறுத்த வரையில் கடவுள் வாழ்த்துப் பாக்களை வள்ளுவரே பாடினதாக வைத்துக்கொண்டாலும் ஒன்றும் கெட்டுப் போய்விடவில்லை. இன்றைக்கு நமக்கு இருக்கின்ற கடவுள்களைப் போன்ற கடவுள்களுக்கா வள்ளுவர் வாழ்த்துக் கூறினார்? இல்லை. கடவுள் வாழ்த்துக் கூறப்படும் பத்துப் பாட்டிலும், ஒரு பாட்டிலாவது வள்ளுவர் 'கடவுள்' என்ற சொல்லைக் கையாளவில்லை. திராவிட மக்களுக்கு * எல்லாம் வல்ல,' ' எங்கும் நிறைந்த' என்பதாகக் கடவுளைக் குறிக்க 'கடவுள்' என்ற ஒரு சொல்லைத் தவிர வேறு சொல் கிடையவே கிடையாது. அந்தச் சொல்லையே வள்ளுவர் தமது குறளில் கையாளவில்லை! கடவுள் வாழ்த்து என்ற அதிகாரத்தில் கையாளவில்லை என்பதோடு மாத்திரமல்ல. குறள் முழுவதிலுமே-1330 பாடல்களிலுமே ஒரு இடத்தி லாவது வள்ளுவர் கடவுள்' என்ற சொல்லைக் குறிப்பிடவில்லை. தமிழ் மொழியில் உள்ள நல்ல சொற்களையெல்லாம் - உயர்ந்த சொற்களையெல்லாம் தமது நூலில் பயன்படுத்திய வள்ளுவர், ' கடவுள் ' என்ற சொல்லை மட்டும் பயன் படுத்தவில்லை. 

இரண்டாவது, 'கடவுள் வாழ்த்து' என்பதே கேலிக்குரியது; மிகவும் தவறான சங்கதியாகும். 'சர்வ வல்லமை'யும் படைத்த- நம்மையெல்லாம் காக்கும் கடவுளுக்கு கடவுள் வாழ்த்து' என்று நாம் போய் வாழ்த்துக் கூறுவதா? வள்ளுவரை நாம் மாபெரும் அறிவாளி, ஆராய்ச்சிக்காரர் என்று கூறுகிறோம். அதற்குத் தக்க ஆதாரங்களும் இருக் கின்றன. அவர் போய் இந்தப்படி 'கடவுள்' என்று நாம் கருதுவதற்கு வாழ்த்துப் பாடல் வாசிப்பாரா? 

வள்ளுவர் கடவுள் வாழ்த்துப் பாடியிருப்பதெல்லாம் ஒவ்வொரு நற்குணங்களை வைத்து, அந்தப்படியாக நடக்கவேண்டும் என்பதற்காகவே பத்துப் பாட்டிலும் பத்து விதமான குணங்களைக் கூறினார். சர்வ வல்லமையுடைய சர்வேசுவரனைப் பற்றிப் பாடுவ தென்றால் இரண்டு, மூன்று பாட்டுக்களோடு குறளை நிறுத்தியிருப்பார். அதை விட்டு அவ்வளவு பாட்டுக்கள் - அவைகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு நற்குணத்தைப் போதிக் கிறார் என்றால் என்ன பொருள்? மனிதன் எப்படியிருக்க வேண்டும் என்பதைக் காட்டுவ தற்காகத்தான்-வாழ்வின் வகையை, நிலையை உணர்த்துவதற்காகத்தான் எட்டு, ஒன்பது கருத்துக்களை வைத்து வள்ளுவர் கடவுள் வாழ்த்துக் கூறியிருக்கிறார். 

[ விடுதலை 30-5-1950)

Saturday, December 21, 2024

பெரியார் எனும் சுய மரியாதையின் அடையாளம் : அ. மார்க்ஸ்

 பெரியார் 5

1969 -1970  ஆம் ஆண்டுகளில் நான் சென்னை மாநிலக் கல்லூரியில் முதுகலைக் கல்வி படித்துக் கொண்டிருந்த போது கல்லூரி மற்றும் விடுதி வளாகங்களில் தந்தை பெரியார் உரை ஆற்றினார். கல்லூரி வளாகத்தில் பேசும்போது மாணவர்களுக்கான முதல் வரிசையில் அமர்ந்து அவரது உரையைக் கேட்கும் பேறு பெற்றவன் நான். 

கல்லூரியில் உரையாற்ற வந்தபோது அவர் தனது மூத்திரப் பையையும் சுமந்து வந்தார். அமர்ந்தவாரே பேசத் தொடங்கிய அவர், “பிள்ளைகளே! முதலில் ஒன்றைச் சொல்ல வேண்டும். எனக்கு ரொம்பவும் உடல் நலமில்லை. திடீர் திடீர் என தாங்க முடியாத வலி வந்து என்னை அறியாமல் கத்தி விடுகிறேன். இன்று நான் பேசும்போது திடீரென அப்படிச் சத்தம் போட்டால் பயப்படாதீங்க…”- என்று கூறி அவர் தன் உரையைத்  தொடங்கியது இன்று என் நினைவுக்கு வருகிறது. அன்று நல்ல வேளையாக அப்படி ஏதும் நடந்துவிடவில்லை. ஆனால் இப்போது அந்தக் காட்சியும் நினைவும் கண்முன் தோன்றி கண்களில் நீர் கசிகிறது. நான் என் நினைவில் இருந்துதான் இதைச் சொல்கிறேன். அப்போது இன்றைப்போல கைபேசிகள் எல்லாம் கிடையாது. 

அடுத்த சில ஆண்டுகளில் அவர் நம்மை விட்டுப் பிரிந்தார்.

அவரது கருத்துக்கள் அத்தனை எளிதாக எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியவை அல்ல. ’கடவுள் இல்லை’ என்பதையும், ‘தாலி’ ஒரு ஆணாதிக்க அடிமைச் சின்னம் என்பதையும் அத்தனை எளிதாக மக்கள் ஏற்றுக்கொள்ள இயலாது. ஆனாலும், அவற்றை ஏற்றுக் கொண்டவர்களும் அப்போது இருந்தனர். அதை ஏற்றுக் கொள்ளாதவர்கள் ஆனபோதிலும் அவரை நேசித்தவர்களும் இருந்தனர். 

தஞ்சை மாவட்டம் ஒன்றில் என் இளமைக்காலம் கழிந்தது. அப்போது நான் படித்த ஒரத்தநாடு அரசுப் பள்ளிக்கு அருகில் நடந்த திராவிடர் கழகக் கூட்டம் ஒன்று இப்போது என் நினைவுக்கு வருகிறது. சுற்று வட்டாரத்தில் உள்ள மிகச் சாதாரணமான எளிய மக்கள் கட்டுச் சோறு கட்டிக் கொண்டு. மாட்டு வண்டிகளில் வந்து இரண்டு நாட்கள் அங்கேயே தங்கி அங்கு பேசப்பட்ட உரைகளைத் தரையில் அமர்ந்து கேட்டுச் சென்ற காட்சியின் நினைவுகள் நிழலாடுகின்றன. 

தனது அரசியலை ஏற்ற மக்களுக்கு அப்படி அவர் என்ன சொன்னார். கடவுளை நம்பாதே என்றார். சுய மரியாதையை இழக்காதே என்றார். 

ஒருமுறை ’பகுத்தறிவுக் கல்வி’ எனச் சொல்கிறீர்களே அதென்ன? - என்கிற கேள்வி முன் வைக்கப்பட்டபோது அவர் சொன்ன பதில் இதுதான்:

“பகுத்தறிவுப் பள்ளிகளை’ வைத்து ’நிர்வாணமான’ சிந்தனா சக்தி தரும் படிப்பைக் கொடுத்து மக்களை எதைப்பற்றியும் எந்தப் பற்றுமற்ற வகையில் செல்லும் வரை சிந்தித்து முடிவுக்கு வரக் கற்பிப்போமே ஆனால்…..” 

என்று போகிறது அவரது கூற்று.

’பகுத்தறிவு’, ‘நிர்வாணம்’ ’பற்றறுப்பு’ ஆகியன பெரியாரியத்தில் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க இயலாதவை. இந்தச் சமூகம் மக்கள் மீது ஏராளமான மூட நம்பிக்கைகளைப் பதிய வைத்துள்ளது. அவற்றின் மீதான நம்பிக்கைகளையும் பற்றுகளையும் துடைத்தெறிந்து நாம் நம்மை, நம் சிந்தனை வெளியை நிர்வாணம் ஆக்கிக் கொள்ள வேண்டும் என்பதுதான். புத்தருக்கு மிக நெருக்கமானவர் பெரியார். ‘நிர்வாணம்’ எனும் கருத்தாக்கம் புத்தர் நமக்களித்த பெரும் கொடை. ஆழமான ஒரு சிந்தனை. 

கல்வி என்பது ”எந்தப் பற்றும்’ இல்லதவர்களாக மனிதர்களை ஆக்க வேண்டும்” - எனப் பெரியார் சொல்வது மிக மிக ஆழமான ஒரு கருத்து. எதெல்லாம் உன்னதமானவை என நம் சாத்திரங்களிலும், பொதுப் புத்தியிலும் முன்வைக்கப் படுகின்றனவோ அவை எல்லாவற்றில் இருந்தும் விடுதலை பெறுவதே நிர்வாணம். ஆம். கல்வி என்பது ஒரு வகையில் சமூக ‘உண்மைகளில்’ இருந்து விடுதலை பெறுவதே. அதாவது சமுகம் நம் மீது பதித்துள்ள பொய்யான மூட நம்பிக்கைகளிலிருந்து விடுதலை பெறுவதே.  பகுத்தறிவில்லாத எந்த ஜீவராசியும் தன் இனத்தை வருத்தி வாழ்வதில்லை. தன் இனத்தின் ஒரு சார்ரின் உழைப்பில் வாழ்வதில்லை. அதாவது உழைப்பைச் சுரண்டுவது இல்லை என்பதுதான்.

“ஒழுக்கம்” என்பதையும் கூடப் பெரியார் ஒரு "சூழ்ச்சியான கற்பிதம்” என்பார். 

'ஒழுக்கம்’ என்பதன் சமூக வரையறை எல்லோருக்கும் ஒன்றாக இல்லை என்பதை அவர் சுட்டிக்காட்டுவார்.  “தாசிக்கு ஒழுக்கம் ஒரு புருஷனையே நம்பி ஒருவனிடத்திலேயே காதலாய் இருக்கக் கூடாது என்பது. குலஸ்திரீ என்பவளுக்கு ஒழுக்கம் அயோக்கியன் ஆனாலும்,  குஷ்டரோகியானாலும் அவனைத் தவிர வேறு யாரையும் மனசால் கூட சிந்திக்கக் கூடாது என்பது...” என இப்படிப் பெரியார் சமூகப் பொதுப்  புத்தியில் நிலவும் மதிப்பீடுகள் குறித்து அவர் நிறையச் சொல்லுவார். முதலாளிக்கு ஒழுக்கம் தொழிலாளியைச் சுரண்டி பெரிய அளவில் லாபம் சம்பாதிப்பது. தொழிலாளிக்கு ஒழுக்கம் முதலாளிக்கு துரோகம் செய்யாமல் இருப்பது. பசுவை இரட்சிக்க வேண்டும் என்பது ஒருவர் நம்பிக்கை ஆனால்  இன்னொருவருக்கு பசுவைப் புசிக்கலாம் என்பதும் ஏற்புடைய ஒன்றுதான். கற்பு முறை ஒழிந்தால்தான் பெண்களுக்கு விடுதலை என்பார் பெரியார். இப்படிச் சமூகத்தில் நிலவும் நம்பிக்கைகள், வழமைகள், பொதுக் கருத்துக்கள், சாத்திரங்கள் என எல்லாவற்றைக் குறித்தும் ஆழமான சிந்தனைகளை முன்வைத்தவர் பெரியார்.

இரண்டு

ஒன்றை நாம் புரிந்துகொள்வது அவசியம். இப்படியெல்லாம் சொல்வதன் ஊடாகப் பெரியார் கல்விக்கு எதிரானவர் என்பதாகக் கருத வேண்டியதில்லை. இன்றைய கல்வி முறையில் உள்ள சிக்கல்கள், அவை மக்களுக்கான விடுதலைக் கல்வியாக அமையவில்லை என்பதை எல்லாம் இப்படிச் சுட்டிக்காட்டிய அதே நேரத்தில் அடித்தள மக்களின் கல்விமுறை, இட ஒதுக்கீடு, வேலை வாய்ப்பு ஆகியவற்றில் அக்கறை உள்ளவராகவும். அடித்தள மக்களின் கல்வி உரிமைக்காகவும், இட ஒதுக்கீடு முதலியவற்றிற்காகவும் களத்தில் நின்றவராகவும் அவர் இருந்தார் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. இந்தக் கல்வி முறையின் போதாமையைச் சுட்டிக் காட்டுவதே அவர் நோக்கம். கல்வியின் ஆக முக்கியமான நோக்கம் கற்பவர்களைச் சுய மரியாதை உள்ளவர்களாக ஆக்குவது. அதற்கு இன்றைய கல்வி முறை பயனற்றதாக மட்டும் அல்ல அதற்கு எதிராகவும் உள்ளதைச் சுட்டிக் காட்டத்தான். 

கடவுள் நம்பிக்கை குறித்த அவரது கருத்தும் நுணுக்கமான ஒன்று. 

“நான் ஒரு நாத்திகனல்ல. தாராள எண்ணமுடையவன். நான் ஒரு தேசியவாதியுமல்ல. தேசாபிமானியுமல்ல. ஆனால் தீவிர ஜீவரஷா எண்ணமுடையவன். எனக்கு சாதி என்பதோ, சாதி என்பதன் பெயரால் கற்பிக்கப்படும் உயர்வு தாழ்வுகளோ கிடையாது.”  - இது பெரியார் தன்னைப்பற்றி சொல்லிக் கொண்டது.

பெரியாரை ஆக இறுக்கமான ஒரு நாத்திகர் என நம்பிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒருவேளை அவரது இந்தக் கூற்று அதிர்ச்சியாக இருக்கக் கூடும். இது ஏதோ அவர் விளையாட்டாய்ச் சொன்னதல்ல. படு ‘சீரியசாகச்’ சொன்னது. 

கடவுள் இருக்கா இல்லையா என்பதெல்லாம் ஒரு வெட்டி வாதம். அதற்கு முடிவே கிடையாது. இருப்பதாக நம்புகிறவன் இல்லை எனச் சொல்பவனையும், இல்லை என்பவன் இருக்கிறது எனச் சொல்பவனையும் ஒருவனை ஒருவன் முட்டாள் எனச் சொல்லிக் கொண்டே காலம் கழிப்பதுதான்  என்பதே பெரியாரின் கருத்து. 

ஒருவர் கேட்டார்: 

’உங்கள் முன் கடவுள் தோன்றி இப்போது என்ன சொல்கிறாய் எனக் கேட்டால் என்ன பண்ணுவீர்கள்?’ 

பெரியார் சொன்ன பதில்: “அப்படி கடவுளே என் முன்னால் வந்து நின்றால் அவரை கும்பிட்டுட்டுப் போறேன்..”

பெரியார் லேசுப்பட்டவர் அல்ல. “மக்களுக்கு ஆத்திகம் நாத்திகம் என்பதற்குப் பொருள் தெரிவதே இல்லை. நாத்திகன் என்று சொன்னால் கடவுள் இல்லை என்று சொல்கிறவன் அல்ல. இருக்கிறது என்று நான் ஒப்புக்கொள்ளவும் இல்லை. புராண, இதிகாச, வேத, சாஸ்திரங்களை ஒப்புக் கொள்ளாதவர் களையே பார்ப்பனர் நாத்திகர் என்று குறிப்பிடுகின்றனர்” – என்பதுதான் இது குறித்த பெரியாரின் விளக்கம். 

“சமூக சீர்திருத்தம் என்றால் ஏதோ அங்கும் இங்கும் ஆடிப்போன, சுவண்டுபோன, இடிந்துபோன, பாகங்களைச் சுரண்டி, கூறுகுத்தி, சந்துபொந்துகளை அடைத்துப் பூசி மெழுகுவதுதான் என்று அநேகர் நினைத்திருக்கிறார்கள். ஆனால் நம்மைப் பொருத்தவரை நாம் அம்மாதிரித் துறையில் உழைக்கும் ஒரு சமுதாய சீர்திருத்தக்காரன் அல்லன் என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கிறோம். மற்றபடி நாம் யார் என்றால், என்ன காரணத்தினால் மக்கள் சமுதாயம் சீர்திருத்தப்பட வேண்டிய நிலைக்கு வந்தது என்பதை உணர்ந்து, உணர்ந்தபடி மறுபடி அந்நிலை ஏற்படாமலிருப்பதற்கு நம்மால் இயன்றதைச் செய்யும் முறையில் அடியோடு பேர்த்து, அஸ்திவாரத்தையே புதுப்பிப்பது என்கிறதான தொண்டை ஏற்றுக் கொண்டிருக்கிற படியால், சமுதாய சீர்திருத்தம் என்பதைப் பற்றி மற்ற மக்கள் அநேகர் நினைத்திருந்ததற்கு நாம் மாறுபட்ட கொள்கைகளையும், திட்டத்தையும், செய்கையையும் உடையவராய்க் காணப்பட வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

இதனாலேயேதான் பலவற்றில் மக்கள் உண்டு என்பதை இல்லை என்றும், சரி என்பதைத் தப்பு என்றும், தேவை என்பதை தேவையில்லை என்றும், கெட்டது என்பதை நல்லது என்றும், காப்பாற்றப்பட வேண்டியது என்பதை ஒழிக்க வேண்டும் என்றும், பலவாறாக மாறுபட்ட அபிப்பிராயங்களைக் கூறுபவராக, செய்பவராக காணப்பட வேண்டிய நிலையில் இருக்கின்றோம்.”

அத்தோடு நிறுத்தவில்லை. பெரியார் தொடர்வார்: 

”ஆனால் நம்போன்ற இப்படிப்பட்டவர்கள் பழிக்கப்படாமலும் குற்றம் சொல்லப்படாமலும் இருப்பதும் உலகில் நல்ல பெயர் சம்பாதிப்பதும், மதிக்கப்படுவதும், அருமை என்பது மாத்திரம் (எனக்கு) நன்றாகத் தெரியும்.”

பகுத்தறிவுக் கல்வி எனச் சொல்கிறீர்களே அதென்ன? - என்கிற கேள்விக்குப் பெரியார் சொன்ன பதில்: “இந்த நாட்டில் இன்று கல்வி என்னும் பெயரால் பலகோடிக் கணக்கான ரூபாய்களைச் செலவு செய்து பல்கலைகழகம், கல்லூரி, உயர்தரப்ப பள்ளி என்பதாகப் பல்லாயிரக் கணக்கான பள்ளிகளை வைத்து கல்வி கற்பிப்பதைவிட, பகுத்தறிவுப் பள்ளிகளை’ மாத்திரம் வைத்து நிர்வாணமான சிந்தனா சக்தி தரும் படிப்பைக் கொடுத்து மக்களை எதைப்பற்றியும் எந்தப் பற்றுமற்ற வகையில் செல்லும் வரை சிந்தித்து முடிவுக்கு வரக் கற்பிப்போமேயானால்...” - என்பதாகப் பெரியாரின் ‘பகுத்தறிவுப் பள்ளியின்’ வரையறை செல்கிறது. பெரியாரின்  ‘நிர்வாணம்’ எனும் கருத்தாக்கத்தை இப்படி நாம் பல்வேறு திசைகளின் ஊடாக நாம் புரிந்து கொள்ள வேண்டும். 

இரண்டு அம்சங்களை நாம் இதில் கவனிக்க வேண்டும்:

1. கல்வி ஒருவருக்கு நிர்வாணமான சிந்தனா சக்தியை அளிக்க வல்லதாக இருக்க வேண்டும்.

2. கற்பவரை அது எந்தப் பற்றுமற்ற நிலையிலிருந்து சிந்திக்கத் தக்கவராக ஆக்க வேண்டும்.

எனவே கல்வியின் நோக்கம் ஏதொன்றையும் திணிப்பது என்பதைக் காட்டிலும், ஏற்கனவே இந்தச் சமூகத்தால் திணிக்கப்பட்டவற்றிலிருந்து ஒருவரை மீட்டு நிர்வாணமாக்குவதே. எத்தகைய முன்முடிவுகளும் பற்றுகளுமின்றி ஒன்றை அணுகும்போதே சரியான முடிவுக்கு வர இயலும். எனவே முன்முடிவுகளைத் துறந்து நம்மை  நிர்வாணமாக்கிக் கொள்வது கற்றலின் முதற் படி.

மொத்தத்தில் அவர் சொல்வது இதுதான். இந்தச் சமூகம், உன் பெற்றோர் உட்பட, உனக்குச் சொல்லி வைப்பதை எல்லாம் காதில் வேண்டுமானால் வாங்கிக் கொள்ளலாம். ஆனால் அப்படியே புத்தியில் ஏற்காதே என்பதுதான். 

மூன்று

இப்படி ஒரு சுய சிந்தனையாளனாக நம் முன் வாழ்ந்து மறைந்தவர் பெரியார், மக்களுக்கு, குறிப்பாகத் தமிழ் மக்களுக்குச் சுய மரியாதையையும், சுய சிந்தனையையும் ஊட்டுவதைத் தன் வாழ்நாள் பணியாக முன்வைத்து நீண்ட காலம் நம்மோடு வாழ்ந்து தனது 94 வது வயதில் மறைந்தவர் அவர். தனது கருத்துக்களை அவ்வப்போது எழுத்தாக்கி இன்றளவும் நமக்குத் தந்து சென்றுள்ளவர். இன்று உலகளவிலும், இந்திய தமிழ்ச் சூழல்களிலும் பல்வேறு மட்டங்களில் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக மிகப் பெரிய அளவில் அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. .

பெரியார் உயிருடன் இருந்த போதும் பல்வேறு எதிர்ப்புகளையும் எதிர்கொண்டுதான் வாழ்ந்தார். அவர் மறைந்தபின்னும் இப்படியான எதிர்ப்புகளையும் அவதூறுகளையும் எதிர்கொள்பவையாகவே அவரது கருத்துக்கள் உள்ளன.

பெரியார் குறித்து ஏராளமாகப்பேசலாம். சுயமரியாதையுடன் வாழ வேண்டும் எனும் கருத்துடைய யாரும் இதை எளிதாகப் புரிந்துகொள்வார்கள். பெரியாரைக் கொண்டாடுவார்கள்.


(இப்போதைக்கு முற்றும். தேவையானால் இன்னும் இன்னும் தொடரும்)