Thursday, September 17, 2015

வெளிநாடுகளில் பெரியார்.....10

வெளிநாடுகளில் பெரியார்
தந்தை பெரியார் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் வடநாட்டிலும் சென்று பல ஊர்களில் தன்மானக் கொள்கைகளை விளக்கிப் பேசினார். பல வெளிநாடு களுக்கும் சென்றார். ஆங்காங்குள்ள புதுக் கொள்கைகளையும், புரட்சிக் கருத்துக்களையும், அறிந்துகொண்டார். தன்னுடைய இயக்கத்தைப் பற்றியும் அதன் கொள்கைச் சிறப்புகளையும் அந்த வெளிநாட்டினர் அறியச் செய்தார்.
தந்தை பெரியார் ஜெர்மனிக்குச் சென்றார். அங்கு பொதுவுடமைக் கொள்கையுள்ள பல சங்கத்தினரைச் சந்தித்தார். அதுபோலவே ஸ்பெயின் நாட்டிலும் பொதுவுடைமைக் கருத்துகள் பரவி வருவதை அறிந்தார்.
தந்தை பெரியார் ரஷ்யவிற்குச் சென்றபோது அங்கு பொதுவுடைமை ஆட்சி நடந்தது. பொதுவுடைமை அரசாங்கம் அவரைச் சிறப்பு விருந்தினராக வரவேற்றது. பல நகரங்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும், அழைத்துச் சென்றது. பொதுவுடைமைக் கொள்கையால் ரஷ்யா புதுவாழ்வு பெற்றிருந்தது.
மக்கள் எல்லாரும் சமத்துவமாக புதிய வாழ்வு பெற்று, மகிழ்ச்சியாக இருந்தார்கள். குறுகிய காலத்தில் அந்த நாடு பெரிய வளர்ச்சிப் பெற்றிருந்தது. அங்கு பல கூட்டங்களில் பெரியார் பேசினார். தமிழ்நாட்டில் தன்மான இயக்கம் பரவி வருவதை ரஷ்ய மக்களுக்குக் கூறினார். அவர்கள் பெரியாருடைய பொது நலக் கொள்கைகளைப் பெரிதும் பாராட்டினர்.
பெரியார் இங்கிலாந்துக்குச் சென்றார். அங்கு அப்போது தொழிற்கட்சி ஆட்சி நடத்தியது. அவர்கள் பெரியாருக்கு நல்ல வரவேற்பளித்தனர். தொழிற் கட்சியின் கூட்டம் ஒன்று நடந்தது. ஐம்பதாயிரம் தொழிலாளர்கள் கூடியிருந் தார்கள். தொழிற்கட்சித் தலைவர் ஒருவர் அங்கு அந்தக் கூட்டத்தில் பேசினார். அவர் தொழிற்கட்சி ஆட்சியில் தொழிலாளர் அடைந்த சிறப்புகளை விளக்கிப் பேசினார். பெரியார் அந்தக் கூட்டத்தில் பேசும்போது, அவர்களைக் கண்டித்துப் பேசினார். ஏனெனில் அப்போது இங்கிலாந்து அரசாங்கம்தான் இந்தியாவை ஆண்டு கொண்டிருந்தது. இங்கிலாந்தில் தொழிலாளர்களுக்கு நன்மை செய்ததாகச் சொல்லுகிறீர்கள். உங்கள் ஆட்சியில் இந்தியாவில் உள்ள தொழி லாளர்கள் மோசமான நிலையை நீக்க என்ன செய்தீர்கள்? அங்குள்ள தொழிஐ லாளர்கள் உங்களுக்கு மனிதர்களாகத் தெரியவில்லையா? இந்தியச் சுரங்கங் களில் பத்துமணி நேர வேலைக்கு எட்டணா கூலி கொடுக்கப்படுகிறது. அதே வேலைக்கு நாற்பதாயிரம் பெண்களுக்கு அஞ்சணாதான் கொடுக்கப்படுகி றது. இந்தக் கொடுமையை எல்லாம் நீக்க முன்வராத கட்சி தொழிற்கட்சிதானா?
இங்கிலாந்துத் தொழிலாளர்களே மனிதனுக்கு மனிதன் வேறுபாடு காணும் இந்தக் கட்சிகளை நம்பாதீர்கள். உலகத் தொழிலாளர்கள் எல்லோரும் சமம் என்ற நிலை வந்தால்தான் உண்மையான விடுதலை கிடைக்கும் என்று பேசினார். வெள்ளைக்காரர்கள் அயர்ந்துபோனார்கள்.
இலங்கையில் இருந்த பெரிய தலைவர்கள் எல்லாம் பெரியாருக்குச் சிறந்த வரவேற்பு அளித்தனர். ஒவ்வொரு கூட்டத்திலும் தன்மானக் கருத்துக்களையும், பொதுவுடைமைக் கருத்துக்களையும் விளக்கிப் பேசினார். தொழிலாளர் நலம் குறித்தும் பேசினார்.
மலேயாவிற்குப் பெரியார் இரண்டு முறை போயிருக்கிறார். அங்குள்ள தமிழர்கள் பெரியாருக்கு மிகப்பெரிய ஆதரவு கொடுத்தனர். இன்றைக்கும் மலேயாவில் ஏராளமான தன்மான இயக்கத்தவர் இருந்து வருகிறார்கள். அந்தக் காலத்தில் ஒருவர் பேசும்பொழுது இடையில் ஏதாவது கேள்வி கேட்டால் பேச்சாளர்களுக்குக் கோபம் வரும். பெரியார் பேசும் கூட்டங்களில் கேள்வி கேட்பதே ஒரு சிறப்பாக இருக்கும். கேள்வி கேட்கக் கேட்க பெரியார் விறு விறுப்பாகப் பேசுவார்.
ஒரு கூட்டத்தில், ‘சாமியைக் கல் என்கிறீர்களே இது சரியா?’ என்று ஒருவர் கேட்டார். ‘வாருங்கள் போய்ப் பார்ப்போம். அது கல்தான் என்பதைக் காட்டுகிறேன்என்றார் பெரியார்.
அதற்கு அந்த மனிதர், ‘அந்தக்கல் மந்திரம் செபித்து சக்தி வரப்பெற்றதுஎன்று கூறினார். அதற்குப் பெரியார், ‘அந்த மந்திரத்தைச் செபித்து வாடிக் கொண்டிருக்கும் ஒரு ஏழை மனிதனுக்கு சக்தி வரச் செய்யுங்களேன். அவனாவது நன்றாக இருப்பானே!’ என்று கேட்டார்.
இன்னொரு கூட்டத்தில், ‘சாமியை வணங்கக் கூடாது என்கிறீர்கள். அப்படியானால் எதை வணங்குவது?’ என்று ஒருவர் கேட்டார்.
வணங்குவது, அடிமைத்தனத்தின் அடையாளம். எதையும் வணங்க வேண்டாம். சுதந்திரமாக வாழுங்கள்என்று பதில் அளித்தார்.
பெரியார் பர்மிய நாட்டில் நடந்த உலக புத்த மத மாநாட்டிற்குச் சென்றி ருந்தார். அங்குள்ள தொழிலாளத் தோழர்கள் மிகப் பெரிய வரவேற்புக் கொடுத்துச் சிறப்பித்தார்கள்.
பர்மா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் தொழிலாளர்கள் அங்கே தன்மானக் கொள்கைகளைப் பரப்பி வந்தார்கள். இந்நூலாசிரியர்  (நாரா.நாச்சியப்பன்) அப்போது பர்மாவின் தலைநகரான இரங்கூனில் வசித்து வந்தார். இந்நூலாசிரியரே அந்த இயக்கத்தின் செயலாளராக இருந்தார். ‘பொன்னிஎன்ற தமிழ் இலக்கிய இதழின் துணை ஆசிரியராக இருந்தபோது பெரியார் இந்நூலாசிரியரை அறிந்திருந்தார். நூலாசிரியரின் அன்பு வேண்டுகோளுக்கு இணங்கிப் பெரியார் அந்த வரவேற்பைப் பெருமையோடு ஏற்றுக் கொண்டார்.

தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் சிறிதும் ஓய்வில்லாமல் சென்று புதுக்கருத்துக்களை விதைத்தவர் பெரியார். பட்டிதொட்டி எங்கும் பெரியார் ஏற்படுத்திய விழிப்புணர்ச்சி தமிழ் மக்கள் முன்னேற்றத்திற்கு அடிப்படை யாகும். இன்று தமிழ்நாட்டில் பெரும்பாலான மக்கள் பழைய பழக்க வழக்கங்களை விட்டுவிட்டார்கள். எதையும் அறிவோடு சிந்திக்கிறார்கள். மக்கள் யாவரும் ஒரே நிலையினர் என்ற கருத்து நிலவுகிறது. இதற்கெல்லாம் பெரியாரின் ஓயாத உழைப்புதான் காரணமாகும்.

மணியம்மையார்....11

மணியம்மையார்
அன்னை நாகம்மையார் இருந்தவரை பெரியார் தன்னைப் பற்றிக் கவலைப்படாமல் இருந்தார். திராவிடர் கழகத்தைப் பற்றியும், நாட்டைப் பற்றியுமே அவருடைய கவலையயல்லாம் இருந்தது. 1933 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் நாள் அம்மையார் மறைந்தார். அன்னையார் தன்னைப் பற்றியோ, தன் உடல் நலத்தைப் பற்றியோ சிறிதும் சிந்திக்கவில்லை. கணவர் நலமே தன் நலமெனக் கருதி வாழ்ந்து வந்தார். கணவர் விருப்பமே தன் குறிக்கோளாகக் கொண்டிருந்தார்.
படிப்பில்லாத அம்மையார் பெரியாரின் துணையாய் ஆனபின் அவரு டைய கொள்கையே தன் கொள்கையாக ஏற்றுக் கொண்டார். பெரியாருக்குத் தொண்டு செய்வதே தனது வாழ்க்கைத் திட்டமாக அன்னையார் கொண்டி ருந்தார்.
ஏறத்தாழ ஓராண்டு காலம் பெரியார் வெளிநாடுகளில் பயணம் செய்தார். அந்தக் காலத்தில் அம்மையார் வீட்டில் தனியே இருந்தார். கணவருக்காக உழைக்க முடியாமலும், கணவர் அருகில் இல்லாமலும் அம்மையார் உடல் நோயுற்றது. அந்த நோயே வளர்ந்து அவர் உடலைத் தளரச் செய்தது. இறுதியில் இறந்து போனார்.
அன்னை நாகம்மையார் இறந்த போது, பெரியாருக்கு வயது 54. முதுமைப் பருவம் தொடங்கிவிட்டது. தொடர்ந்து கூட்டங்களுக்குப் போவதும், கொள்கை விளக்கங்கள் பேசுவதுமாக உழைத்துக் கொண்டிருந்த பெரியாருக்கு, அவர் உடல் நலத்தைக் கவனிக்க நேரமில்லாமல் இருந்தது.
அவருடைய நிலையை அறிந்து, அவருக்குத் தொண்டுபுரிய முன்வந்தார் ஒரு பெண்மணி. அவர்தான் மணியம்மையார்.
மணியம்மையாருக்கு இளம் வயது. ஆயினும் நாட்டுத் தொண்டாற்றும் பெரியாருக்குத் தொண்டு செய்யும் பணியினை ஏற்றுக் கொண்டார்.
திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றோ, மற்ற பெண்களைப் போல் இல்லற வாழ்வு நடத்த வேண்டும் என்றோ அவர் நினைக்கவில்லை. கொள்கைக்காக வாழும் பெரியாருக்காக வாழ்வதே தம் கொள்கையாகக் கொண்டுவிட்டார்.
1949 ஆம் ஆண்டு, தம் எழுபத்தோராம் வயதில் பெரியார் எதிர்காலத்தைப் பற்றி எண்ணினார். தந்தையார் ஈட்டிய ஏராளமான சொத்துகள் இருந்தன. திராவிடர் கழகத்திற்காக அவர் சேர்த்துவைத்த சொத்துகளும் பணமும் நிறைய இருந்தன. இவை யாவும் வீண்போகாமல் இருப்பதற்கு ஓர் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று எண்ணினார்.
அவருக்கு மிக மிக உண்மையாக இருந்தவர் மணியம்மையார். அவர் நலம் பேணுவதில் கண்ணும் கருத்துமாக இருந்தவர் மணியம்மையார்.
மணியம்மையாருக்கு பண ஆசையோ, நகை ஆசையோ, துணி ஆசையோ வேறு எந்தவிதமான ஆசைகளோ கிடையாது. பெரியாருக்குத் தொண்டு செய்யும் கடமை ஒன்றிலேயே கண்ணும் கருத்துமாய் இருந்தார்.
யாரையும் எளிதில் நம்பாத பெரியார், தமது நம்பிக்கைக்கு உரிய ஒருவராக முற்றிலும் நம்பியது மணியம்மையார் ஒருவரைத்Vன். தனக்குப் பிறகு தன் சொத்துக்களைக் காப்பாற்றும் பொறுப்பையும், தன் கொள்கைகளை வளர்க்கும் பொறுப்பையும் அந்த இளம் பெண்ணான மணியம்மையாரிடம் ஒப்படைக்க முடிவு செய்தார்.
மணியம்மையாரைத் தன் வாரிசு ஆக்க விரும்பினார். இந்திய நாட்டுச் சட்டப்படி ஓர் ஆண் பிள்ளையைத் தான் தத்து எடுத்துக்கொள்ள முடியும். பெண் பிள்ளையைத் தத்து எடுக்க முடியாது.
மணியம்மையை தன் வாரிசு ஆக்க வேண்டும் என்றால், அவரைத் திருமணம் செய்து கொண்டு, மனைவி என்ற நிலையில் வைப்பது ஒன்றுதான் சட்டப்படி இயன்றதாய் இருந்தது.
வேறு வழியில்லாததால், மணியம்மையைத் தன் வாரிசு ஆக்குவதற்காக 1949 ஆம் ஆண்டு சூலை மாதம் ஒன்பதாம் நாள் சட்டப்படி அவர் பதிவுத் திருமணம் செய்து கொண்டார்.
ஏழையாக வாழத் தொடங்கிய வெங்கட்ட (நாயக்கர்) உழைத்து உழைத்து உருவாக்கிய பெரும் சொத்துக்களும், வாழ்நாள் முழுவதும் தாம் பாடுபட்டு உருவாக்கிய கழகமும், பிற்காலத்தில் பேணிக் காக்கப்படுவதற்காக, பெரியார் இந்தத் திருமணம் செய்து கொள்ள வேண்டியதாயிற்று.

பெரியார் எண்ணியவாறே, அவருக்குப் பிறகு தன் பொறுப்பை, கடமை யுணர்வோடு ஒழுங்காகச் செய்துவந்தார் மணியம்மையார்.

பெருமைக்குரிய பெரியார்....12

பெருமைக்குரிய பெரியார்
இதுவரை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றைச் சுருக்கமாகப் படித்தோம். இதிலிருந்து நாம் தெரிந்த கொள்வது என்ன?
பெரியார் பல போராட்டங்களை நடத்தினார். சங்கிலத் தொடர்போல் அவர் நடத்திய போராட்டங்கள் அமைந்தன.
வகுப்புரிமைப் போராட்டம், இந்தி எதிர்ப்புப் போராட்டம், அரசியல் சட்ட எரிப்புப் போராட்டம், பிள்ளையார் சிலை உடைப்புப் போராட்டம், இராமர் படம் எரிப்புப் போராட்டம், நீதிமன்றக் கண்டனப் போராட்டம், கம்பராமாயணத்தைக் கொளுத்தும் போராட்டம், பிராமணாள் ஓட்டல் என்ற பெயரை அகற்றும் போராட்டம், இப்படித் தம் வாழ்நாள் முழுவதும் போராடிப் போராடி வெற்றி பெற்றார்.
இவற்றிலிருந்து நாம் அறிவது என்ன? பெரியார் தமிழ் மக்களின் இழிவைத் துடைத்து ஏற்றம் தரவே இந்தப் போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தினார். இங்கு யாரும் இந்த முயற்சியைச் செய்யாததால் நான் என் கடமையாக ஏற்றுக் கொண்டு செய்தேன் என்று பெரியார் குறிப்பிட்டுள்ளார்.
தீண்டாமை ஒழிய வேண்டும், தாழ்த்தப்பட்டோர் மக்களாக நடத்தப்பட வேண்டும்.
மக்கள் எல்லாரும் சமமாக வாழ வேண்டும்.
ஒருவரையயாருவர் ஏமாற்றியோ, சுரண்டியோ வாழக்கூடாது.
சட்டமன்றம், நீதிமன்றம் ஆகியவை மக்கள் நல்வாழ்வுக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மக்களை மோசம் செய்பவர்களுக்கத் துணையாய் இருக்கக் கூடாது.
இப்படிப்பட்ட நல்ல எண்ணங்கள் படைத்தவர் பெரியார்.
தந்தை பெரியாரை நாம் இழந்த நாள் 24.12.1973.
டில்லியிலும் உத்தரப்பிரதேசத்திலும், பீகாரிலும், மகாராஷ்டிராவிலும், வங்காளத்திலும், குஜராத்திலும், ஆந்திராவிலும், கேரளாவிலும் இப்படி மற்ற மாநிலங்கள் அனைத்திலும் உள்ள தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் பெரியாரை நன்றியோடு நினைக்கிறார்கள். அவர் தங்களுக்காகப் போராடி யதை எண்ணி அவரைப் பெருமைப்படுத்துகிறார்கள்.
உத்தரப் பிரதேசத்தில் இன்று உள்ள அரசுபெரியார் சதுக்கம்என்ற ஓர் இடத்தில், தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் போராடிய அய்ந்து பெரும்  தலைவர்களுக்குச் சிலை வைத்துப் பெருமைப்படுத்தியது. அதில் நம் பெரியாரும் ஒருவர்.
இன்று தம் தமிழர் தலைவராக விளங்கும் தளபதி வீரமணி அவர்கள், ஆயிரக்கணக்கான திராவிடர் கழகத்தினருடன் சென்று, அந்த விழாவில் கலந்து கொண்டு, அந்த மக்களின் நன்றி உணர்வைக் கண்டு பூரித்துப்போய்விட்டார்.
இப்படி நாடெல்லாம் போற்றும் பெரியாரை நாமும் போற்றுவோம்.
அவர் காட்டிய வழியில் நின்று, கடவுள், மதம், சாதி, வேதம், புராணம், சாஸ்திரம் ஆகிய தீமைகளை ஒழித்துக் கட்டுவோம். அறிவு வழி நடப்போம்.
மக்கள் யாவரும் சமம் என்ற எண்ணத்தோடு யாவரும் ஒன்றாக ஒற்றுமையாக நன்றாக வாழுவோம்!

வாழ்க பெரியார்! வாழ்க மாந்தர் நேயம்! வாழ்க தமிழ்நாடு!

Saturday, August 22, 2015

மலாயா தமிழ் முன்னோடிகளும் பெரியார் வருகையும் நூல் வெளியீடு/ கிள்ளான் 02.08.2015

த.பரமசிவம் உரையாற்றுகிறார்

மக்கள் ஓசை ஆசிரியர் எம்.இராஜன் உரையாற்றுகிறார்

சொல்லின் செல்வர் முனைவர் ரெத்ன வெங்கடேசன்

டத்தோ தீபாகரன் அவர்களுக்கு சிறப்பு செய்கிறார் த.பரமசிவம்

மக்கள் ஓசை ஆசிரியர் நூலை பெறுகிறார்



ம.தி.க. அமைப்புச் செயலாளர் கா.நா.கோபால் அவர்கள் பெரியார் பெருந்தொண்டர் திரு.கருப்பையா அவர்களுக்குச் சிறப்பு செய்கிறார்

சொல்லின் செல்வர் அவர்களுக்கு சிறப்பு செய்கிறார் கவி




எழுத்தாளர் முருகன் நூலை பெறுகிறார்