Friday, February 11, 2022

பெரியார் - அ.மார்க்ஸ்

பெரியார் தலித்துகள் முஸ்லிம்கள் தமிழ்த் தேசியர்கள் - அ. மார்க்ஸ் - அடையாளம் வெளியீடு - பக்கங்கள் 175 - விலை ரூ 160/

●  பேராசிரியர் அ. மார்க்ஸ், மார்க்சிய சிந்தனையாளர். மனித உரிமை போராளி. மார்க்சியம், பெரியாரியம், பௌத்தம், கல்வி, இலக்கியம் என பல்வேறு தளங்களில் செயல்படுபவர். சென்ற முப்பதாண்டுகளுக்கு முன்பு, பெரியார் குறித்த அவதூறுகளை தமிழ் தேசியர்களில் சிலரும், தலித் எழுத்தாளர்களில் ஒரு சிலரும் முன் வைத்த போது, அவற்றின் பொய்மைகளை உடனுக்குடன் தனது பதில் கட்டுரைகளால்  தோலுரித்தவர். அந்த கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல் !

● மார்க்ஸின் இந்த கட்டுரைகள் பல்வேறு தலைப்புகளில் பல்வேறு காலங்களில் எழுதப்பட்டது. 

பெரியார் தலித்துகளுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரியா | பெரியாரும் தலித்துகளும் | பெரியாரும் அயோத்திதாசரும் | பெரியாரும் முஸ்லிம்களும் | திருமணம் குறித்து பெரியார் | கற்பு குறித்து பெரியார் | பெரியாரும் தமிழ்த் தேசியரும் | என்ற பல கட்டுரைகள்.

●  இந்த கட்டுரைகளில் மார்க்ஸ் மிகவும் சிரத்தையுடன் ஆதாரங்களோடு, அவதூறுகளுக்கான பதிலடியை தந்துள்ளார். இந்த நூலில் முக்கியமாக பெரியார் தலித்கள் பற்றியும், பவுத்தம் பற்றியும், முஸ்லிம்கள் பற்றியும் தரப்பட்ட தகவல்கள் வேறு யாரும் இந்த அளவிற்கு சிரத்தையோடு பகிர்ந்தளிக்க வில்லை. அதனாலேயே இந்த நூல் பெரியாரியத்துக்கான பங்களிப்பாக உள்ளது. 

நூலிலிருந்து சில வரலாற்று தகவல்களை காண்போம் :

●  பெரியார் தமிழகம் முழுவதும் ஆதிதிராவிடர் மாநாடுகள் நடத்தி தலித் பிரச்சினைகளை நோக்கி, மக்களின் கவனத்தை ஈர்த்தார்.

" பறையருக்கு மேலாக இருந்தால் போதும் என நினைக்காதீர்கள் ! தீண்டாமையை கைவிடாமல் உங்கள் சாதி இழிவு ஒழியும் என நினைக்காதீர்கள் ! " .... என பிற்படுத்தப்பட்ட மக்களை பார்த்து கடிந்து கொண்டார் !

●  "  உயர் சாதி எனச் சொல்லிக் கொண்டு எவன் குறுக்கே வந்தாலும், பாம்பை அடிப்பது போல அடியுங்கள் ! " .... என தாழ்த்தப்பட்ட மக்களை ஊக்குவித்தார் ! வெறும் பேச்சோடு நிற்காமல், தீண்டாமைக்கு எதிராக போராடி, சிறைக்கும் சென்றார் !

●  இந்துத்துவாவும் பாஜகவும் ஆர்எஸ்எஸ் போன்ற வலது சாரி, பிற்போக்கு சக்திகளும், கையில் எடுக்க முடியாத ஒரு நெருப்புத் துண்டு - பெரியார் ! யாரை நெருங்கினாலும் பெரியாரை நெருங்க முடியாது ! புத்தரை நெருங்கி, புத்த மதத்தை துரத்தி விட்டார்கள் ! அம்பேத்கரை வணங்கி தங்களவராக்க தொடர் முயற்சியில் உள்ளார்கள் !

●   ஆனால் பெரியாரோ - மக்களிடம் உரையாடி, பேசிப்பேசி, பேசியதை எழுதி, எழுதியதை நூல்களாக்கி, பிரசுரித்து, பத்திரிக்கைகளில் பக்கம் பக்கமாக எழுதி, பாதுகாத்து வைத்து விட்டார் தன் கொள்கைகளை ! 

அதனால் தான் பெரியாரை அவதூறு செய்யவும் இயலவில்லை ! அபகரித்து அழிக்கவும் இயலவில்லை !

●  ' பவுத்தம் ஒரு மதமல்ல, புத்தர் ஒரு கடவுளல்ல ' ..என 15.05.1957 அன்று சென்னை மகாபோதி கழகத்தில் நடந்த - 2501 ம் ஆண்டு புத்தர் விழாவில், பெரியார் ஆற்றிய தலைமையுரை மிகச் சிறப்பான ஒன்று ! புத்தர் பற்றியும் இந்து மத அவலம் பற்றியும் இவ்வளவு எளிமையாக பெரியாரால் மட்டுமே விளக்கம் தர முடியும் !

●  " புத்தர் - மகானோ, ரிஷியோ அல்ல ! இந்த தன்மையையே எதிர்த்தவர் புத்தர் ! அந்த காரணத்தினால்தான் இன்று நாம் அவரை கொண்டாடுகிறோம் ! பவுத்தம் என்பது ஒரு மதமல்ல ! ஒரு மதம் என்றால் கண்டிப்பாக அதற்கு ஒரு கடவுள் இருக்க வேண்டும் ! மோட்சம் நரகம் வேண்டும் ! ஆத்மா, பாவ புண்ணியம் அதற்கான தண்டனை இவையெல்லாம் வேண்டும் ! "...

●  " இன்னும் சிறந்த மதத்திற்கு ஒரு கடவுள் போதாது ! அவற்றிற்கு பொண்டாட்டி, பிள்ளைக்குட்டி, வைப்பாட்டி இவை எல்லாம் வேண்டும் ! இப்படியெல்லாம் இருந்தால்தான் அது மதமாகும் ! ஆனால் புத்தரோ - முதலில், கடவுளைப் பற்றி கவலைப் படவேண்டாம், மனிதனைப் பற்றி கவலைப்படு என்று சொல்லி விட்டார் ! மோட்சம் நரகம் இல்லை, ஒழுக்கம் தான் முக்கியமென்று சொல்லி விட்டார் ! இன்னும் அறிவுதான் முக்கியமென சொல்லி விட்டார் ! புத்தியானவர் அதனால் தான் அவர் புத்தர் ! " ....பெரியாரின் தெளிவான சிந்தனைக்கு இது ஒரு எடுத்துக்காட்டு !

●  நபிகள் நாயகத்திற்கு விழா எடுத்த ஒரே முஸ்லிம் அல்லாத இந்திய அரசியல் தலைவர் - பெரியார் ஒருவர் தான் ! புத்தரைப் பற்றி பேசியது போல முகமது நபியைப் பற்றியும் அவரது கருத்துக்கள் சிறப்பானவை !

"  முகமது நபியை பற்றி யார் எப்படி எடுத்துக் கொண்டாலும், நான் அவரை ஒரு மனிதர் என்றும்  நம்மை போல இயற்கையாக பிறந்தவர் என்றும் கருதித்தான், அவரைப்பற்றிய விஷயங்களை நான் புகழ்கிறேன் ! "..என தனது நிலையை தெளிவுபடுத்தியுள்ளார். 

●  பெரியார் இஸ்லாம் மதக் கொள்கைகளை முழுவதும் ஒப்புக் கொண்டதாகவோ, அவைகளை சுயமரியாதை கொள்கைகள் என்று அவர் எப்போதும் பேசியதில்லை . அந்த மதத்திலுள்ள மூடநம்பிக்கைகளான - சமாதி வணக்கங்கள், சந்தனக்கூடு, கூண்டு உற்சவம், கொடி வணக்கம், அல்லாசாமி பண்டிகை ஆகியவற்றை பலமுறை கண்டித்துள்ளார்.  இந்து மதத்திலுள்ள தீண்டாமை ஒழிய -    '  நீங்கள் 5 மணிக்கு இஸ்லாமிற்கு மாறினால் - 5.30 மணிக்கே உங்களது தீண்டாமை ஒழிந்து விடும் ' .. என்றளவில் பெரியார் பேசி, இஸ்லாமை ஆதரித்தார் !

●  தற்போது கூட பர்தா அணியும் விவகாரம் பெரிதாக வெடித்துள்ளது. இது சம்பந்தமாக பெரியாரின் கருத்துக்களை பாருங்கள். 

"  முகமதிய மதத்தில் கோஷாமுறை, மதச்சின்னம், கடவுள் போன்ற பல கெடுதிகள் இருக்கலாம். அப்படியெல்லாம் கூட நாத்திகர்களுக்கும், பெண்ணுரிமை வாதிகளுக்கும் வேண்டுமானால் இவைகள் வேண்டாத தாக இருக்கலாம் ! ஆனால் தீயர்கள், புலையர்கள், பறையர்கள், நாடோடிகள் என நாயிலும் கேவலமாக இந்து மதத்தால் கருதப்படும் மக்களுக்கு, அதில் என்ன குறைகாண முடியும் ? " ...சாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பே பெரியாரின் செயல் திட்டங்களில் முதன்மையானதும் முக்கியமானதுமாகும் ! அவைகளை சிறப்பாக விளக்கம் நூல் இது !

●  பெரியாரியலுக்கு, பேராசிரியர் மார்க்ஸ் எழுதிய இந்த படைப்பு - 

அணிகலமாகவும் இருக்கிறது !

ஆயுதமாகவும் இருக்கிறது !

பொ. நாகராஜன். சென்னை. 11.02.2022.

********************************************

பேரறிஞர் அண்ணாவைப் பற்றி கவியரசு கண்ணதாசன்

 செம்பொன் மணியாரத்தொடு

          செல்வம் பல தரலாம்

  தம்பிப் படை யாவும் பல

          தங்கத் திரள் தரலாம்

 நம்பித் தமிழ் முறைபாடிடும்

         நலமே நிறை அண்ணன்

தெம்புக்கது குறைவே-அவர்

         திறனுக்கது சிறிதே

- அண்ணா குறித்து கண்ணதாசன் எழுதியது

திராவிடன் - முதல் இதழ்

 'திராவிடன்'

‘திராவிடன்’ தினசரி இதழ் சென்னையி லிருந்து சவுத் இந்தியன் பீபில்ஸ் அசோசியேஷன்ஸ் (தென்னிந்தி மகாஜன சபை) சார்பில் (பிங்கல வருடம் வைகாசி மாதம் 19 ஆம் தேதி) 1917 ஜுன் முதல் வெளிவந்தது.

இவ்விதழின் வெளியிடுவோர் பகுதியில் Printed & published by Rao Bahadur P.Thiagaraya Chetty for the Indian Peoples Association Ltd at the Justice Printing Works. 16A Mount Road, Madras என்று காணப்படுகிறது. 

இப்பத்திரிகை வருவதற்கு முன்னால், நீதிக்கட்சி தோன்றிய 1916 நவம்பர் 20 முதல் ‘ஜஸ்டிஸ்’ என்னும் பெயரில் ஆங்கிலப் பத்திரிகை ஒன்று வெளிவந்து கொண்டிருந்தது. திராவிடன் தோன்றிய நாளிலேயே ‘ஆந்திரப் பிரகாசினி’ என்ற பெயரில் தெலுங்குப் பத்திரிகை ஒன்றும் வெளிவந்தது.

இப்பத்திரிகைகளை நடத்துவதற்கு South Indian Peoples Association  என்னும் பெயரில் கம்பெனி ஒன்று நிறுவப்பட்டு ரூ 100 வீதம் 1000 வாங்கப்பட்டன. அரசியல் விவகாரங்களைத் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் South Indian Liberal Federation-SILF) கவனித்து வந்தது. இதுவே ஜஸ்டிஸ் பத்திரிகையின் பெயரால் ஜஸ்டிஸ் பார்டி என அழைக்கப்பட்டது. தமிழில் நீதிக் கட்சி எனக் கூறப்பட்டது.

திராவிடன் பத்திரிகைக்கு ஆசிரியராக பக்தவத்சலம் பிள்ளை பி.ஏ. அவர்களும், துணை ஆசிரியர்களாக சுவாமி மிருத்ர கோடீஸ் வரரும் பண்டித வில்வபதி செட்டியாரும் நியமிக்கப்பட்டனர். ஆந்திரப் பிரகாசினிக்கு ஆசிரியராக ஏ.சி.பார்த்தசாரதி நாயுடு அவர்களும் துணை ஆசிரியர்களாக பண்டித கானாலா ராகவைய நாயுடுவும் நரசிம்ம ராவ் நாயுடும் நியமிக்கப்பட்டனர்.

‘ஜஸ்டிஸ்’ ஆங்கிலப் பத்திரிகை தொடங்கியபோது கருணாகர மேனனை ஆசிரியராக ஏற்பாடு செய்திருந்தனர். பத்திரிகை வெளிவர ஆறுநாட்கள் இருக்கும் போது பெசண்டு அம்மையார், சர்.பி.இராமசாமி அய்யர், கேசவபிள்ளை ஆகியோர் தூண்டுதலால் அவர் அப்பொறுப்பை ஏற்க மறுத்தார். பத்திரிகைத் தொழிலிலும் ‘புலமை’ உடைய டி.எம்.நாயரே கௌரவ ஆசிரயராக ஆனார். ‘மதராஸ் ஸ்டாண்டர்டு’ ஆசிரியர் பி.என்.இராமன் பிள்ளை துணை ஆசிரியராக ஆனார். பின்னர் சர்.பிட்டி தியாகராய செட்டியாரும், ஏ.இராமசாமி முதலியாரும், எ.ஏ.வி. நாதனும் ஆசிரியராக விளங்கினார்கள்.

திராவிடன் நாளிதழுக்கு அப்பெயர் சூட்டப்பட்ட காரணத்தைப் பிற்காலத்தில் அந்நாளிதழின் ஆசிரியர்களுள் ஒருவராகத் திகழ்ந்த பண்டிதர் எஸ்.எஸ். அருணகிரிநாதர் விவரிக்கிறார்:

‘சுமார் இரண்டு மூன்று நாட்கள் டாக்டர் நாயரும் மற்றத் தலைவர்களும் கூடி யோசித்த பின்னரே தமிழ் நாளிதழுக்குத் ‘திராவிடன்’ என்று பெயர் சூட்டப்பட்டது.

பிராமணரல்லாதாராகிய எல்லா சாதி வகுப்பாரையும் ஒரே குறியீட்டுப்  பெயரால் அழைத்து வரும்படியான வழக்கம் ஏற்பட வேண்டும். அக்குறியீட் டுப் பெயரால் அவர்களுடைய இன உணர்ச்சியை எழுப்பிவிட வேண்டும் என்ற விருப்பமே எல்லாருடைய பேச்சிலும் தெரிவிக்கப் பட்டது. அப்பெயரே ஏற்கப்பட்டது’.

இக்குறிப்பை திரு. குமார சாமி தம் தியாகராயர் பற்றிய நூலில் எழுதி உள்ளார்.

...

‘திராவிடன்’ தான் தோன்றிய தன் நோக்கத்தை முதல் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

‘நமது தேச அபிவிர்த்தியைக் கோரி உழைக்கவும், பிராமண ரல்லாத இந்துக்களுக்கு உள்ள குறைகளை அவ்வப்போது எடுத்துக் காட்டி வரவும் ‘சவுத் இந்தியன் பீபில்ஸ் அசோசியேசன்ஸ் லிமிடெட்’ என்னும்  கம்பெனியரால் ஜஸ்டிஸ் என்னும் ஆங்கில தினசரிப் பத்திரிகை நடத்தப்பட்டு வருகிறதென்பது அனைவரும் அறிந்த விஷயமே. மேற்கூறிய நோக்கங்களோடே நிகழும் 1917 வருடம் ஜுன் மாதம் 1 தேதியிலிருந்து தமிழ் தினசரிப் பத்திரிகை ஒன்றும் மேற்படி கம்பெனியரால் பிரசுரிக்கப்பட்டு வரும் இந்தக் கம்பெனியின் அரிய பெரிய நோக்கங்கள் யாவும் அதனால் பிரசுரிக் கப்பட்ட விஞ்ஞாபனத்தால் நன்கு விளங்கும்.

இத்தமிழ் தினசரிப் பத்திரிகையில் ராஜிய விஷயங்கள், விவசாய சமாசாரங்கள், வித்யா சம்பந்தமான சங்கதிகள், யுத்தங்கள் சம்பந்தமானவும், இதர விஷயங்கள் சம்பந்தமானவுமான சமா சாரங்கள், ஒவ்வொருவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய பொது சங்கதிகள், மனதைக் களிப்பிக்கும் மாண்புள்ள கதைகள் சம்பாஷணைகள் முதலிய பல பல விஷயங்களும் தக்க வித்வான்களால் எழுதப்பட்டு வரும். நமது தமிழ் நாட்டா ரொவ்வருவரும் இதை வாங்கி வாசித்து நமது நோக்கங்களை முன்னுக்குக் கொண்டு வர முயலுவார்களென நம்புகிறோம்.’ (நன்றி: இளந்தமிழன்)

Thursday, February 10, 2022

பிரிட்டனில் பெரியார்


அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகையான ‘#டெய்லி_ஒர்க்கர்’ ஏட்டில் பெரியாரின் சித்திரத்தோடு இடம் பெற்ற கட்டுரை.

பெரியாரையும் முற்போக்குக் கருத்துக்களையும் யாராலும் பிரிக்க முடியாது. இத்தகைய கருத்துக்களுக்கு விதையாய் 1931-32ம் ஆண்டு அவர் மேற்கொண்ட ஐரோப்பிய சுற்றுப் பயணம் அமைந்தது. இப்பயணத்தின் போது சோவியத் ஒன்றியம், ஜெர்மனி, பிரிட்டன், ஸ்பெயின், போர்ச்சுகல் உள்ளிட்ட நாடுகளுக்கு பெரியார் சென்றார். இப்பயணம் பல்வேறு முற்போக்கு இயக்கங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தித் தந்திருந்தது. சோவியத் யூனியனில் அவர் இருந்த மூன்று மாதங்களும் அவருக்கு தொழிற்சாலைகளிலும் பொறியியல் துறையிலும் சோஷலிசம் ஏற்படுத்தியிருந்த சாதனைகளை உணர்த்தியது. இக்காலக் கட்டம் பொருளாதார முறையில் ஏற்பட்ட ‘பெரு மந்தம்‘ எனக் குறிக்கப்பட்ட காலம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெர்மனியில் கம்யூனிஸ்ட் அகிலத்தால் தூண்டப்பட்ட குழு என்னும் ஏகாதிபத்திய எதிர்ப்புக் குழு உலகெங்கிலுமுள்ள, நேரு உள்ளிட்ட, காலனியாதிக்க எதிர்ப்பு தேசியவாதிகளை உற்சாகப்படுத்தியது. மேலும் இப்பயணத்தில் நிர்வாணவாதிகள், சுதந்திர சிந்தனையாளர்கள், நாத்திகவாதிகள், எமிக்ரெ புரட்சியாளர்கள், கம்யூனிஸ்டுகள், சோஷலிசவாதிகள் என பல அமைப்பினரை பெரியார் சந்தித்தார். எவ்வித ஐயமுமின்றி இவை பரபரப்பான நாட்கள்தான்.இத்தருணத்தில் தான் முதன்முறையாக இனச் சிக்கலோடு அவருக்கு பிணைப்பு ஏற்பட்டது.

1932-ஆம் ஆண்டின் கோடைக் காலத்தில் பெரியார் ஈ.வெ.ராமசாமி பிரிட்டனில் இருந்தபோது பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த முதல் கம்யூனிஸ்ட்டான ஷாபுர்ஜி சக்லத்வாலா, பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சியின் துவக்ககால உறுப்பினரான கிளெமன்ஸ் பாமி தத் போன்ற பலரை சந்தித்தார்.இதில் கிளெமன்ஸ் பால்மே தத் என்பவர் இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தைக் கட்ட உதவிய ரஜனி பாமி தத்தின் சகோதரராவார். இவை தவிர பெரியார் பல்வேறு கம்யூனிஸ்ட் முன்னணிகளையும் அதன் உறுப்பினர்களையும் சந்தித்தார்.

ஏகாதிபத்தியத்திற்கு எதிரான குழு, தொழிலாளர் சர்வதேச நிவாரணம், பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சியின் நாளிதழ் அலுவலகம் ஆகியன குறிப்பிடத்தகுந்தவை. பெரியார் பிரிட்டனில் இருந்தபோது, கம்யூனிஸ்ட் தலைவர் சக்லத்வாலாவுடனேயே இருந்தார். மேலும் அங்கேயிருந்தபோது மாபெரும் தொழிலாளர் பேரணியில் உரையாற்றியதோடு பிரிட்டிஷ் தொழிலாளர் தலைவர் ஜார்ஜ் லான்ஸ்பரியை விமர்சனம் செய்தார்.பிரிட்டனில் இருந்தபோதுதான் புகழ்பெற்ற ஸ்காட்ஸ்பரோ வழக்குடன் பெரியாருக்கு பரிச்சயம் ஏற்பட்டது. இவ்வழக்கின் விளைவாகத்தான் ‘டு கில் எ மாக்கிங் பிர்ட்’ (கேலி செய்யும் பறவையை கொல்லுதல்) என்ற பிரபலமான நாவல் 1960இல்வெளிவந்தது.

அது என்ன ஸ்காட்ஸ்பரோ வழக்கு?

1931 மார்ச் மாதம் 25-ஆம் தேதி, ஆப்பிரிக்க-அமெரிக்க இளைஞர்கள் 9 பேர், டென்னிஸ்ஸி (அமெரிக்கா) என்னும் இடத்தில் தொடர் வண்டியில் ஏறினர். விரைவில் அவர்கள் புலம் பெயர்ந்த ஏழைத் தொழிலாளி போல வேடமணிந்து இரண்டு வெள்ளை இனப் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறி கைது செய்யப்பட்டனர். வெள்ளை இன நீதிபதிகளால் நடத்தப்பட்ட இவ்வழக்கு நேர்மையான முறையில் நடத்தப்படவில்லை. ஒருவரைத் தவிர அனைவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சி குறுக்கிட்டு அவ்விளைஞர்களைக் காப்பாற்ற சிறப்பான பங்கை ஆற்றியது.அடா ரைட் என்னும் ராய்(14), ஆன்டி(17) ஆகிய குற்றம்சாட்டப்பட்ட இரு இளைஞர்களின் தாய், கம்யூனிஸ்ட் கட்சியை அணுகி சட்ட ரீதியான போராட்டத்தைத் தொடருமாறு வேண்டினார். ஒரு சர்வதேச பிரச்சார இயக்கம் இதற்காக துவக்கப்பட்டது. இதைப் பற்றி சூஸன் டி.பென்னிபேக்கர் என்பவர் ஆய்வு செய்து ஆய்வுக் கட்டுரை வெளியிட்டார். இந்த இயக்கத்தின் எதிர்பாராத நட்சத்திரமாக அடா ரைட்டின் தாய் விளங்கினார். அதுவரையில் மதக் குழுவில் இருந்த அவர் அரசியல் அனுபவமே இல்லாதவர். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு கணவரை இழந்த அவர் அதுவரையில் தேசத்தின் எல்லைகளைத் தாண்டியதில்லை. ஆனால் இந்த பிரச்சாரத்திற்காக ஐரோப்பா சென்றார்.

பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட்டுகளும் இதற்காக பல்வேறு அமைப்புகளின் ஆதரவைத் திரட்டினர். டெய்லி வொர்க்கர் ஸ்காட்ஸ்பரோ தினம், மே 7,1932-இல் பின்பற்றப்படுவதாக செய்தி வெளியிட்டது. ஆனால் அடா ரைட்டால் எளிதாக பிரிட்டனுக்குள் நுழைய இயலவில்லை. முதலில் பிரிட்டிஷ் வெளியுறவு அதிகாரிகள் அடா ரைட், பிரிட்டனுக்கு உள்ளே நுழையக் கூடாது என்றனர். ஆனால் அவர்களே பின்னர் போராட்டத்தின் அழுத்தத்தினால் அடாவை பிரிட்டனுக்குள் அனுமதிக்க வேண்டியதாயிற்று. ஆனால் அடாவுக்கு பத்து நாள் மட்டுமே விசா தரப்பட்டது.பெரியார் பிரிட்டனில் இந்த பத்து நாட்களும் இருந்தார். ஜூன் 28, 1932 அன்று அடாவின் வருகைக்கு பிறகு ஸ்காட்ஸ்பரோ இளைஞர்களுடனான தொழிலாளர் கூட்டம் லண்டனில் நடைபெற்றது.

டெய்லி வொர்க்கர் நாளிதழ் இது பற்றி 1932, ஜூன் 30 அன்று ‘உற்சாகமூட்டும் காட்சிகள் அரங்கேறியதாக’ தெரிவிக்கின்றது.500 பேர் கலந்துகொண்ட அக்கூட்டத்தில் தாடி வைத்த 53 வயது பெரியாரும் கம்யூனிஸ்ட் தலைவர் சக்லத்வாலாவும் இருந்தனர். மென்மையான குரலில் பேசிய அடா ரைட் “எனது இரண்டு பையன்களையும் இன்னும் ஏழு பையன்களையும் விடுவிக்கப் போராடும்போது உலகெங்கிலுமுள்ள சிறையிலுள்ள வர்க்க கைதிகளுக்காகவும் போராடுகின்றீர்கள்” எனத் தெரிவித்தார். இது கூட்டத்தினரை நெகிழவைத்தது.

இந்தியாவில் தீண்டாமை

சக்லத்வாலா கூட்டத்தில் பேசும்போது, இந்தியாவில் பல ‘ஸ்காட்ஸ்பரோக்கள்’ நடப்பதாகக் கூறினார். ஆப்பிரிக்க-அமெரிக்க தொழிலாளர்களைச் சேர்க்காத அமெரிக்க தொழிற்சங்கங்களை கண்டித்தார். உலகெங்கிலும் கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்களே எந்த இனபேதமும் பார்க்காமல் தொழிலாளர்களை உறுப்பினர்களாக சேர்க்கின்றன என்றும் சக்லத்வாலா கூறினார்.

அமெரிக்கத் தூதரகத்திற்கு தீர்மானத்தைத் தெரிவிக்க ஒரு குழு அமைக்கப்பட்டது. இக்கூட்டத்தில் இஸாபெல் பிரவுன் ஆற்றிய பேச்சு பெரியாரை மிகவும் கவர்ந்தது. இவர் தொழிற் சங்கங்கள் மேற்கொள்ள வேண்டிய நடைமுறை உத்திகளை கோடிட்டுக் காட்டினார்.ஜிம் ஹெட்லி என்னும் நீக்ரோ மீனவர் அமைப்பைச் சேர்ந்தவர் நிதி திரட்டுவதைப் பற்றித் தெரிவித்தார். அதன் பிறகு ஏலம் நடைபெற்றது. வழக்கமாக சிக்கனத்தைக் கடைபிடிக்கும் பெரியார் ஈ.வெ.ரா அன்று அரை பவுண்டுக்கு ஜெர்மனி வெள்ளிச் சங்கிலியை வாங்கினார்.பெரியாரின் இந்த பயணம் முற்போக்கு அமைப்புகளோடு தொடர்பு ஏற்படுத்தியதோடு அவரிடமிருந்த முற்போக்கு சிந்தனையை வலுப்படுத்தியது. அடா ரைட் மற்றும் ஸ்காட்ஸ்பரோ வழக்கின் பரிச்சயம் பெரியாருக்கு உலகை முடமாக்கிக்கொண்டிருக்கும் சமூக ஏற்றத்தாழ்வுகளைப் பற்றிய புரிதலை அதிகமாக்கியது

.தமிழில் : பேரா.ச.இராமசுந்தரம் (நன்றி : தி இந்து ஆங்கிலம்) 22.8.2015

வைக்கம் போராட்டம் - குமரிக்கிழவனாரின் குசும்பு

வைக்கம் போராட்டம் திரிக்கப்பட்ட கட்டுக்கதைகளை ஊடுருவித் துலக்கும் உண்மை வரலாற்றுக் குறிப்புகள்

பொதியவெர்பன் அவர்கள் எழுதிய மறுப்பு.....

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அ.குமரிக்கிழவனார் குமரிக்குசும்பு

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

திருவாங்கூரின் சில ஆவணங்களை  ஆராய்ந்தால் வைக்கம் வீரர் என்று பெரியாரை கொண்டாடுவது சிரிப்பைத்தான் தருகிறது.......

அதன் ஒரிஜினல் வீரர்கள்  டி எஸ் மாதவனும் ஈழவர்களும் புலையர்களும் பணிக்கர்களும் தான்.பெரியார் இரண்டுமுறை கைது செய்யப்பட்டார் பெரியார் ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும்போது இந்த சாலை என்ன மன்னனின் அப்பன் வீட்டு சொத்தா என்று முழங்கினார் அதற்காக மூலம் திருநாளால் ஆறுமாதம் சிறையில் அடைக்கப்பட்டார் பின்னர் சேது இலக்குமி பாயின் அரசாட்சியில் திருவாங்கூருக்கள் வரவே கூடாது என்ற நிபுந்தனையில் விடுவிக்கப்பட்டார்.அதை இறுதி வரை கடைப்பிடித்தார்.........

பெரியார் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைபட்டார் என்று சொல்வது வரை ஏற்று கொள்ளலாம் ஆனார் வைக்கம் வீரர் என்று கொண்டாடுவது மிகைப்படுத்தல் மட்டுமின்றி பதினெட்டாம் நூற்றாண்டில் இறுதியில் இருந்து நடந்து வரும் போரட்டத்தை பதியாமல் வரலாற்று திரிக்க முற்படுவதாகும்.........

பத்தொன்பதாம்  நூற்றாண்டின்  தளவாய் குளம் சம்பவத்தில் தொடங்கி பதியப் படவேண்டிய நூற்றி முப்பது ஆண்டுகால ஈழவர்களின் கோயில் நுழைவுப் போராட்ட வரலாற்றை அப்படியே ஆட்டயம் போடுவதில் இவர்களுக்கு என்ன லாபம் என்று புரியவில்லை.........

டிகே மாதவன் அவர்களும் வீடு வீடாக பிடியரிசி மடிஏந்தி போராட்டத்தை உயிர்ப்புடன் வைத்திருந்த ஈழவப் பெண்களும் 1803 ஆம் ஆண்டு நடந்த தளவாய் குளம் சம்பவத்தின் போது சாகடிக்கப்பட்டவர்களும் தான் உண்மையான வைக்கம் வீரர்கள்.......

குமரிக்கிழவனார்

#வைக்கம்_வீரர்கள்

*குமரிக்கிழவனார் தாமாய்ந்த திருவாங்கூர் ஆவணத் தரப்பு யாதொன்றையுமே முன்வைக்க வில்லை. முப்பதாண்டுக்கால ஈழவர் கோயில் நுழைவுப் போராட்ட வரலாற்றின் குறிப்பு யாதொன்றையும் கூட எடுத்துரைக்கவும் இல்லை. இனியேனும்  அது குறித்து ஆவண ஆதாரங்களுடன் முன்வைப்பாராக!  

அவற்றை மறுதலிப்பதன்று எம்மனோர் நோக்கம். இங்கான பேசுபொருள் வைக்கம் போராட்டமும் அதில் பெரியாரின் வகிபாகமுமே!  அவர் குறிப்பிடும் ஒரிஜினல் வீரர்கள் தரப்புகள், மாற்றுத்தரப்புகள் குறித்தும் காண்போம்.

ஆ .அதியமான் காணத்தவறிய பக்கங்கள்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சட்டகத்துக்குள்ளிருந்து ஆடும் சதுரங்கம்:2

2•மகாத்மாவும் துணைமகாத்மாவும்•••••••

°~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~•

வைக்கம் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியது காந்திவருகை என்பதே அதியமான் தரப்பாகும். அந்தவருகை எதற்காக நிகழ்ந்தது? யாராலவர் யாருக்கு

மாற்றாகத் தருவிக்கப்பட்டார்? என்பதற்கான கேள்விகளுக்கு விடை காண்போம். அதற்கு முன் இன்னும் இரு கேள்விகள்...

பெரியாரைத் தமிழகக் காங்கிரஸ் தலைவர் ஆக்கியது யார்? காந்தியாரை அனைத் திந்தியக் காங்கிரஸ் தலைவர் ஆக்கியது யார் யார்?:

"என்னை இராஜாஜீ அவர்கள்தான் முதலாவதாகக்  கோயம்புத்தூர் ஜில்லா காங்கிரஸ் கட்சி செக்ரட்டரி, பிறகு தமிழ்நாடு காங்கிஸ் கமிட்டித்தலைவர் ஆக்கினார்.

என்னிடம் அவர் முழுநம்பிக்கை வைத்து அவர் நமது தலைவர் நாயக்கர் என்று அழைத்ததோடு, வெகுபேரை

என்னைத் தலைவர் என்று அழைக்கும்படிச் செய்தார்" - ஈவெரா ('விடுதலை' 26-12-1972)

"இராஜாஜீ,காந்தியை ஆதரித்து அவரைத் தன்வயப்படுத்த முயன்று வேலை செய்து வந்தார்.

சென்னைப் பார்ப்பனர்கள் திலகரைப் பிடித்துத் தம்வசப்படுத்தி இராஜாஜீயை ஒழிக்க முயற்சி செய்தார்கள். அமிர்தசரஸ் காங்கிரசில் எங்கள் ஆதரவால் காந்தி வெற்றிபெற்றார். திலகர் தோல்வியடைந்தார் ஒரு ஆண்டுக்குள் அந்தக் கவலையால் திலகர் செத்தார். காந்தி எதிர்ப்பில்லாத ஏக தலைவர் ஆனார்.அவரைச் சர்வாதிகாரி ஆக்கிவிட்டோம். இதற்கு இராஜாஜீக்கு முக்கிய பங்குண்டு."

-ஈ•வெ•ராமசாமி

 ('பெரியார்பார்வை'-இதழ்த்தொகுப்பு).

இத்தொடர்பில் தென்னாட்டுப் பார்ப்பனர்கள் சூழ்ச்சிகளுகளுக்கு இணங்கியாக வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு அவர் எவ்வாறு தம்மனம் ஒப்பாமலே ஆளாக நேர்ந்தது? அவருடைய சூழ்ச்சிகள் யாவை என்பன குறித்து இனிக்காண்போம்:

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

"வைக்கம் சத்தியாக்கிரக சரித்திரம் ஒரு பெரிய சூழ்ச்சிக்கதையாகும் அதற்குத் தென்னாட்டுப் பார்ப்பனத் தலைவர்களும் காந்தியாரும் கொடுத்த தொல்லைகள்

செய்த சூழ்ச்சிகள் அளவிடற்குரியதல்ல. காந்தியாரையே அவரது சர்வ வல்லமை யுள்ள பிடிவாதத்திற்கு விரோதமாக இறங்கிவந்து தனது கருத்துக்களை அவர் இஷ்டத்திற்கு விரோதமாக மாற்றிக் கொள்ளவேண்டிய அவசியத்திற்குக் கொண்டுவந்து விட்டதானது வைக்கம்சத்தியாக் கிரகமாகும்.ஆனால் வைக்கம் சத்தியாக்கிரகத்தைப் பார்ப்பனர்கள் மனமார மாற்றி  எழுதிவிட்டார்கள்"- ந•க•மங்களமுருகேசன்   ('சுயமரியாதை இயக்கம்')

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சட்டகத்துக்குள்ளிருந்தே ஆடும் சதுரங்கம்:3

3•பெரியாருக்கே அந்தப்புகழ்!

°<~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~•

"திருவிதாங்கூரிலே தீண்டாமையை ஒழித்த மாபெரும் போராட்டத்தை நடத்தி வெற்றிபெற்ற பெரியாருக்கே அந்தப்புகழ், பெருமை. ஆனால் அந்தப்புகழ் யாருக்கோ போயிற்று."- திரு•வி•க•(வாழ்க்கைக் குறிப்புகள்).

"அந்தப் போராட்டத்தில் அவர் ஈடுபடுவார் என்று அந்த (திருவிதாங்கூர்) அரசரோ அல்லது ஆட்சியோ எதிர்பார்க்க வில்லை.காரணம் அந்த அரசர் டெல்லிக்குச் செல்கிற நேரத்தில் தந்தை பெரியார்  அவர்கள்வீட்டில் விருந்தினராக இருந்து ஈரோட்டில் தங்கிவிட்டுச் செல்வது வாடிக்கை. எனவே  பெரியார் அவர்கள் அங்கு போகும் போது அரசுமரியாதைகளோடு அதிகாரிகளை அனுப்பி வரவேற்பு கொடுத்த நேரத்தில் நான் இங்கு வந்திருப்பது விருந்துக்காக அல்ல உரிமைப்  போராட்டத்திற்காக எனவே அருள்கூர்ந்து நான் அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவருக்கே உரிய தன்மையோடு  எடுத்துக்கூறியதோடு தன்னுடைய அந்தப் போராட்டஉணர்வை நியாயப்படுத்தி அந்த மக்களை எல்லாம் தட்டியெழுப்பும்படியாகச் செய்தார்களென அங்கு வாழ்ந்தபாமரமக்களுக்குக் கூட அந்த உணர்வை  ஊட்டினார்கள் " - சி•என்•அண்ணாதுரை ('பெரியார் பார்வை').

"சத்தியாக்கிரகத்த தெரிந்தவர்களைக் கூட வசீகரித்துப் போராட இழுக்கும் ஈர்ப்புத்தன்மையுடையனவாக இருந்தன. பெரியார் சொற்பொழிவுகள்  அவற்றில் அவர் திருவாங்கூர் அரசை  வன்மையாகக் கண்டித்துக் காரசாரமாக விமர்சனம் செய்தார்"- கே.ராஜன்  

'(திராவிட இயக்கம்  உரையாடல்கள்)

"திருவிதாங்கூர் திவான் பெரியாருடன் பேசுவதற்கு ஆச்சாரியாரைத் தூது பிடித்தார். ஆச்சாரியார் அந்தச் சந்தர்ப்பம் பெரியாருக்கு வாய்ப்பதை இஷ்டப்படாமல் காந்தியாரையே  தருவிப்பதாக ஒப்புக்கொண்டு

உடனே காந்தியாரை  அழைத்தார்.என்றாலும் சமாதானம் பேசும்போது காந்தியார் பெரியாரையும் தன்கூட இருக்கும்படி செய்துகொண்டார்"

- ந•க•மங்கள முருகேசன்(' சுயமரியாதை இயக்கம்')

காந்தியாரின் வருகை குறித்த அதியமான் தரப்போ போராட்டத்தை அடுத்த நகர்வுக்குச்  செல்ல உதவியது, முடிவை நோக்கி உந்திய முக்கியபயணம் என்பதாக முன் நிறுத்தப்படுகின்றது. ஆனால் காந்தியார் வருகையே

பெரியாருக்கு மக்கள் மத்தியிலிருந்த  செல்வாக்கைக் கண்டஞ்சி ஆச்சாரியார் செய்த சூழ்ச்சி என்பது

அதியமான் அறியாத பக்கமாகும். அது மட்டுமில்லை, மகாத்மாவும் துணை மகாத்மாவும் (ஆச்சாரியார்) ஆடிநின்ற சதுரங்க நகர்வுகள் குறித்தும் ஜெயமோகன் விட்ட புதுக்கரடிகளைக் கட்டவிழ்த்தும் இனிக் காண்போம்.

தொடரும்••••

Sunday, February 6, 2022

பெரியார் பற்றி பாவாணர்

பெரியார் பற்றி பாவாணர் கூறிய அரிய செய்தி...

பெரியார் ஒரு பெரியார். அவர் தொண்டு எழுத்துமாற்றமன்று . செயற்கரிய செய்வதே பெரியார் இயல்பு. பிராமணியத்தைப் போக்குவதும் பகுத்தறிவைப் புகட்டுவதும் மூடப் பழக்கவழக்கங்களை ஒழிப்பதும் தமிழரைத் தன்மானத்தோடு வாழச் செய்வதுமே பெரியாரின் உண்மைத் தொண்டு. விடுதலை, குடியரசு முதலிய கிழமையன்களின் எழுத்து மாற்றம் சிக்கனம் பற்றியதே. இன்று பெரியாரின் படைத்தலைவர் போல் தம்மைக் காட்டிக் கொள்பவர் இளையரும் முளையருமாயிருந்த காலத்தே நான் பெரியாரோடு நெருங்கிய தொடர்பு கொண்டவன். என்றைக்கு இந்தி கட்டாயப் பாடமாக்கும் தொடங்கப்பட்டதோ அன்றைக்கே எனக்குப் பெரியார் தொடர்பு தொடங்கிற்று. நான் தமிழ்நலம் பற்றி ஏதேனும் சொன்னால்,  ' அதெல்லாம் நீங்களே தமிழ்ப்பண்டிதர்களாகச் சேர்ந்து கொண்டு கிளர்ச்சி செய்யுங்கள். நான் உங்களைப் போலப் பண்டிதனல்லேன். படியாத (பாமர) மக்களிடம் சென்று அவர்களுடைய அறியாமையை எடுத்துக்காட்டி என்னாலியன்ற வரை சமுதாயத் தொண்டு செய்பவன்' என்பார். ஒரு முறை என் ஒப்பியன் மொழிநூல் பற்றி ஈரோட்டிலிருந்து 5 பக்கம் தம் கைப்பட எழுதியிருந்தார். அப்பொத்தகமும் 100 படிகள் என்னிடம் விலைக்கு வாங்கினார். சிலமுறை அவர் கூட்டத்திற்குத் தலைமைதாங்கியுமிருக்கிறேன். 

ஒருமுறை நான் காட்டுப்பாடியிலிருக்கும் போது எனக்கு வருவாய் இல்லையென்று தெரிந்து என் வீடு தேடி கொஞ்சம் பணம் கொடுக்கவந்து நான் ஊரில் இல்லாததால் அக்கம் பக்கத்திலுள்ளவரிடம் செய்தியைச் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்.

பின்பு நான் திருச்சிராப்பள்ளி சென்றிருந்த போது நண்பருடன் சேர்ந்து பெரியாரைக் காணச் சென்றேன். அவர் என்னைத் தனியாய்த் தம் மாளிகைக்கு உள்ளே அழைத்து இருநூறு உருபா நன்கொடையாகத் தந்தார். அது ஒரு சிறு தொகையே யாயினும் பிறரிடத்தில் பெறும் ஈராயிரத்திற்குச் சமம் என்பது அவர் சிக்கனத்தை யறிந்த அனைவரும் உணர்வர்.

நான் பெரியாரை மதிப்பதெல்லாம், எவருக்கும் அஞ்சாமையும் எதையும் பொதுமக்களுக்கு எடுத்து விளக்கும் ஆற்றலும் பற்றியே. கோடிக்கணக்கான மக்களொடு கூடிக்கொண்டு கும்பலில் கோவிந்தா போடுவது போல் பேராயத்தார் ஆங்கிலராட்சியை எதிர்த்தது அத்துணை ஆண்மையன்று. கும்பகோணமாயினும் குமரிக்கோட்டக் காசியாயினும், சற்றும் அஞ்சாது பிராமணியத்தைச் சாடுவதிலும் அதன் கொடுமைகளைக் கல்லா மாந்தர்க்கு விளக்கிக் கூறுவதிலும் ஓய்வு சாய்வின்றி இனநலத்தைப் பேணுவதிலும் அவருக்கு ஈடானவர் இதுவரை இருந்ததுமில்லை; இனியிருக்கப் போவதுமில்லை. பிரித்தாணியத்தை யெதிர்த்ததிலும் பிராமணியத்தை யெதிர்த்ததே பேராண்மை. 

கலப்புமணம் , பகுத்தறிவுச் செயல், தன்மான வாழ்வு முதலிய உயிர்நாடிக் கொள்கைகளை  விட்டு விட்டு எழுத்து மாற்றம் ஒன்றையே மேற்கொள்வது பண்டத்தை விட்டு விட்டுப் படிவத்தைப் பற்றுவதேயாகும். 

தனித்தமிழை வெறுப்பவரும் உண்மையான வரலாற்றை ஒப்புக் கொள்ளாதவரும் இந்தியைப் பொதுமொழியாக ஏற்பவருமான வையாபுரிகளுடன் கூடிக்கொள்வதும் தமிழுக்கு மாறான ஆரிய அமைப்பகங்களுடன் ஒத்துழைப்பதும் மூலமும் படியும் என்பதை அசலும் நகலும் என்றெழுதுவதும் பகுத்தறிவுக் கொள்கையின் அல்லது தன்மான வாழ்வின்பாற்பட்டன வாகா. 

பெரியாரின் நடத்தையைப் பின்பற்றாது பெரியார் விழாக்கொண்டாட்டத்தில் ஊர்தொறும் ஊர்வலத்திற் கலந்து கொள்வதும் விடிய விடிய சொற்பொழிவாற்றுவதும் பெரியார் படிமைக்கு மாலையணிவதும் பெயர் விளம்பரத்திற்கே யன்றி வேறெதற்குப் பயனாம்? 

இது காறும் தமிழ்நாட்டில் தமிழர்க்கு மூவேறு  வகையில் வழிகாட்ட மூவேறு பெரியார் தோன்றியுள்ளனர். அவருள் ஒருவர் ஈ.வே. இராமசாமிப் பெரியார். எழுத்து மாற்றத்தையே அவர் தொண்டாகக் காட்டுபவர் அவர் பெருமைக்கு இழுக்கே தேடுபவராவார். தம் சிறு கொள்கைக்கு வெற்றி பெறவே விழாவைப் பெருவியப்பாகக் கொண்டுள்ளனர். 

அறநூற் பெரியாரும் தனித்தமிழ்ப் பெரியாரும் தன்மானப் பெரியாரும் ஆகிய,

முப்பெரும் பெரியார் அகவல்


தமிழகத் தீரே தமிழகத் தீரே

மொழிவர லாறு மொழிவது கேண்மின்

பிராமணி யம்மென்னும் பெருங்கேடு நஞ்சு

நாவலம் முழுவதும் நலங்கெடப் பரவிப் 

பைந்தமிழ் திரவிடப் பழங்குடி மக்கள் 

நைந்தமை தடுக்க நன்மருத்துவராய் 

வள்ளுவர் மறைமலை வன்மறப் பெரியார்

தெள்ளிய மூவர் தென்னகந் தோன்றினர் 

நாற்பொருள் விளக்கும் நடுநிலை யறநூல்

நானிலப் பொதுவாய் நல்கினார் தேவர்

அயற்சொல் களைந்த அருந்தமிழ் நூல்களால்

அடிமையும் மதமும் அளைந்தமை கண்டே

விடுதலை பெறவழி வேறில்லை யென்றே

கடவுள் இலையெனுங் காரங் கலந்து

மடந்தவிர்த் தனர்தன் மானப் பெரியார்

மூவர் குறிக்கோள் முடிபும் ஒன்றே

அடிமை யொழித்த வல்லதை எழுத்தின்

வடிவை யொழித்தல் பெரியார்க் கில்லை

குறுகிய நோக்கிற் கொள்கை பிறழ்ந்து

பண்டம் விட்டுப் படிவம் பற்றித்

தமிழர் ஒற்றுமை தடுத்துப் பகைவரைத் 

தம்மொடு சேர்த்துத் தமிழுணர் விழந்து

பெரியார் பெயரைக் கெடுப்பார் 

தெரியார் தம்மால் தீதுறல் அவர்க்கே.


மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர்.

செந்தமிழ்ச்செல்வி ஏப்பிரல் 1979

Tuesday, February 1, 2022

இது பிராமணாள் ஸ்பெஷ்ல்

பெரியாரின் கோபமும் ஆவேசமும் எனக்குப் புரிந்தது"-எழுத்தாளர் #_சாரு_நிவேதிதா..

பெரியார்மீது எனக்குக் கொஞ்சம் மனஸ்தாபம் இருந்தது. மக்களிடையே சமத்துவத்தை ஏற்படுத்துவதற்காக தன் வாழ்நாள் முழுவதும் அவர் நடத்திய போராட்டத்தில் கலாச்சாரம் சம்பந்தப்பட்ட பல செழுமையான பகுதிகளும் அடித்துக் கொண்டு போய் விட்டனவே என்பதுதான் என் மனஸ்தாபத்திற்குக் காரணம். உதாரணமாக, பிராமணீயத்தை எதிர்ப்பதற்காக சமஸ்கிருத மொழியை எதிர்த்தார். அதனால் காளிதாசன் எழுதிய அதி அற்புத காவியங்களை நாம் படிக்க முடியாமல் போயிற்று. வருணபேதத்தை முன்னிறுத்துகின்றன என்பதால் புராணங்களையும் இதிகாசங்களையும் எதிர்த்தார். அதனால் உலக இலக்கியங்களிலேயே தலைசிறந்த காவியம் என்று உலக எழுத்தாளர்களால் போற்றப்படும் மகாபாரதத்தைப் படிக்காமல் விட்டோம். இப்படியெல்லாம் இவ்வளவு காலம் நினைத்துக் கொண்டிருந்தேன். அதனால் சமஸ்கிருதத்தில் உள்ள முக்கிய நூல்களை நானே படிக்க ஆரம்பித்தேன். அப்போதுதான் பெரியாரின் கோபமும் ஆவேசமும் எனக்குப் புரிந்தது. 

முக்கியமாக வேதத்தைப் படித்தபோது. ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களே இந்து மதத்தின் பெரிய புனித நூல்களாகக் கருதப்படுபவை. வேதம் படித்தவனே அறிஞனாகக் கருதப்படுகிறான். மேலும், சூத்திரனோ அல்லது நான்கு வருணங்களுக்கு அப்பாற்பட்ட விளிம்பு நிலையில் தள்ளப்பட்டு, இழி தொழிலைச் செய்ய நிர்பந்திக்கப்பட்ட அடிமை மக்களோ வேதத்தைக் கேட்டாலே போதும், அவர்கள் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றச் சொல்கிறது மனு தர்மம். 

வேதத்தை முற்றாக அறிந்தவன், வேதாந்தி என அழைக்கப்பட்டான். வேதத்தில் இல்லாததே இல்லையென்று இன்றளவும் கருதப்படுகிறது. 

நான்கு வேதங்களையும் ஆரம்பத்திலிருந்து முடிவு வரையும், பின்னர் முடிவிலிருந்து ஆரம்பம் வரை தலை கீழாகவும் ஓதத்தெரிந்தவர்கள் கனபாடிகள் என்று அழைக்கப்படுகின்றனர். 

இக்காரணங்களால் வேதத்தை நான் மிகுந்த மரியாதையுடனேயே வாசிக்க ஆரம்பித்தேன். பிறகுதான் தெரிந்தது... தெருவில் நடக்கும்போது காலில் அசிங்கத்தை மிதித்து விட்டேன் என்று. 

ஆம்! வேதத்தில் அவ்வளவு அசிங்கமும் ஆபாசமும் உள்ளன.

இந்துக்களில் அவர்கள் எந்த சாதியைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவர்கள் வீட்டில் எந்த சுப காரியங்கள் நடந்தாலும் அங்கே தவறாமல் அழைக்கப்படுபவர்கள் புரோகிதர்கள். 

`வாத்தியார்’ என்று பார்ப்பனர்களின் பேச்சு மொழியால் அழைக்கப் படும் அப்புரோகிதர்கள் அந்த சுபகாரியத்தின்போது ஹோமம் வளர்த்து பல மந்திரங்களை மணிக்கணக்கில் ஓதுவார்கள். அந்த மந்திரங்களின் அர்த்தத்தைக் கேட்டால் நீங்கள் எல்லோரும் பயந்து ஓடி விடுவீர்கள். ஆம்!

ஒரு சுப தினத்தின்போது `என்னை எதிர்ப்பவர்கள் நாசமாகப் போக; அவர்களின் கண்களைத் தோண்டி எடுக்க! புல் பூண்டு இல்லாமல் அவர்கள் வம்சம் அழிந்து போக!’ என்ற ரீதியில் மணிக்கணக்கில் ஒருவர் சாபம் விட்டால், அவ்வார்த்தைகள் அந்தச் சூழலை எவ்வளவு அரு வருப்பாக மாற்றும்? 

வேதம் முழுக்கவும் இம்மாதிரி அருவருப்பான வசைகளே நிறைந்திருக்கின்றன. இடையிடையே கவித்துவம் நிரம்பிய சில அற்புதமான பகுதிகளும் உண்டு. 

உதாரணமாக: `நான் தேனைவிட தேனாயுள்ளேன். மதுரத்தைவிட மதுவாயுள்ளேன். நீ என்னையே தேன் மிகும் சாகையாக விரும்பு’ `எனது சலனம் தேன் மயம். என் கமனம் தேன்மயம். நான் மொழியால் தேன் மயமாய் மொழிகிறேன். நான் தேன் தோற்றமாக வேண்டும்’ (அதர்வண வேதம்; காண்டம் : 1,34 தேன் மயம்)

ஆனால் இந்தக் கவித்துவத்தையும் மீறி வேதம் முழுக்கவும் நிரம்பியிருப்பது: துவேஷம், எதிரிகள் மீதான துவேஷம். 

எதிரிகள் யார் என்று பார்த்தால் பார்ப்பனர்களுக்கு அடிமையாகத் தங்களை ஒப்புக்கொடுக்காதவர்கள். அவர்கள் மீதான சாபத்தைப் பாருங்கள். 

`இந்திரன் தனது வச்சிராயுதத்தால் அவர்களது சிரங்களைத் துண்டித்திடுக’ `எங்கள் பசுவை நீ இம்சித்தால் நாங்கள் உன்னைக் குத்திக் கொல்வோம்’ (அத்தியாயம்:சம்ஹாரம்).

`எங்கள் எதிரிகளை ருத்திரன் நாசம் செய்க’

`சாபத்தால் சபிப்பவள், தன் மக்களையே புசிப்பாளாக’

`தனது மகனையும் சகோதரியையும் பெண்ணையுமே புசித்திடுக’

`அக்னியே! எங்களைத் துவேஷிப்பவனை உனது சுடரால் எரித்து விடு’

`இம்சை செய்பவனே! உங்களது புன்மைகள் மறுபடியும் பின்புறமே வீழ்க! உங்கள் தோழனைப் புசியுங்கள்;

உங்களது மாமிசத்தைப் புசியுங்கள்’

`இந்திரா’ சத்துரு சேனையை மயக்கம் செய்க. அதன் கண்களைப் பிடுங்கு’`அவனைக் கொல்லு; அவனது விலா எலும்புகளை நொறுக்கு. அவன் சீவனற்றவனாகுக. அவன் சுவாசம் நீங்குக இந்திரா! இதோ பிழிந்த சோமன். மதத்துக்கு இதனைப் பருகு. விரிந்து விசாலமாயுள்ள உனதுவயிற்றில் அச்சோமனைப் பொழிந்து கொள். எங்கள் எதிரிகளைக் கொன்று அவர்களின் பசுக்களைப் பாழாக்கு’

இப்போது புரிகிறதா, சில சாமியார்கள் கொலை, கொள்ளைகளில் ஈடுபடுவது ஒன்றும் சாத்திரங்களுக்கு விரோதமானதல்ல என்பதும், வேதங்களைப் பின்பற்றியே அவர்கள் அக்காரியங்களில் ஈடுபடுகின்றனர் என்பதும்? 

ஆனால் என்ன செய்வது? 3000 ஆண்டு-களுக்கு முன்பு இப்போது இருப்பதுபோல நீதிமன்றங்கள் இல்லை என்பதை சாமியார்கள் மறந்து விடுகின்றனர்.

 மேலே கூறியுள்ள சுலோகங்கள் அனைத்தும் அதர்வண வேதத்தில் உள்ளவை. 

இப்படியே அந்த வேதத்தில் 20 காண்டங்கள் உள்ளன. 

எதிரிகளும் தங்களுக்கு அடிமை-யாக மறுப்பவர்களும் அழிய வேண்டும் என்ற `அரிய’ கருத்துக்கு அடுத்தபடியாக வேதங்களில் தெரியும் மற்றொரு `உன்னத’ குணாம்சம்; சுய நலம். 

நானும் என் இனத்தைச் சார்ந்தவர்களும் மட்டுமே நன்றாக இருக்க வேண்டும் என்ற சுயநலம்.

இந்த சுயநலத்திற்காக தேவர்களுக்கு வேள்வி வளர்த்து அதில் நெய்யையும் குதிரைகளையும் போட்டு எரித்து, சொர்க்கத்திலிருக்கும் அவர்களை பூலோகத்துக்கு வரவழைத்து, சோம பானம் என்ற லஞ்சத்தைப் படையல் செய்து எதிரிகளை அழித்து விட்டு, எங்களை மட்டும் வாழவை என்று அவர்களை வேண்டுவதே வேதம்! 

வேத மந்திரங்கள் முழக்கவும் இத்தகைய சுய நலத்தையும் துவேஷத்தையும்தான் முழங்குகின்றன. 

இன்றைய சாமியார்கள் ரவுடிகளுக்குப் பணம் கொடுத்து தங்கள் எதிரிகளைக் கொலை செய்கிறார்களே, அதே கதை தான் வேதங்கள் முழுக்கவும் விரவிக் கிடக்கிறது.

`ஜயித்த பொருள் நம்முடையது. தோன்றுவது நம்முடையது. ருதம் நம்முடையது. தேஜ° நம்முடையது. பிரம்மம் நம்முடையது. சுவர்க்கம் நம்முடையது. யக்ஞம் நம்முடையது. பசுக்கள் நம்முடையது’ 

அதர்வண வேதத்தில் ஜயகோஷம் என்ற அத்தியாயம்.

 `நான் சொல்வதை ஜயிக்க வேண்டும். நான் செல்வம் மிகுந்தவனாக வேண்டும்; நீ என்னில் செல்வத்தை அளி’

அதர்வண வேதம் செல்வம் என்ற அத்தியாயம். 

`அடுத்தவன் அழிய வேண்டும்; நான் மட்டும் நன்றாக இருக்க வேண்டும்’ என்ற `உயரிய’ கருத்தை வலியுறுத்தும் வேத மந்திரங்களை இங்கே மேற்கோள் காட்டுவது மிகவும் சிரமமானது. 

ஏனென்றால் எல்லா மந்திரங்களுமே அப்படித்தான் உள்ளன. 

நான்கு வேதங்களில் அதர்வண வேதம் மட்டும் சிறிது பரவாயில்லை என்று கூறலாம். ஏனென்றால், அதிக காமம் பற்றிய சில கவித்துவமான பகுதிகள் உள்ளன.

 ரிக் வேதமோ முழுக்க முழுக்க துதிப்பாடல்கள் `இந்திரனே இங்கு வா, சோமத்தைப் பருகு. தலைவனான நீ, வழிபடும் மற்றவர்களையெல்லாம் கடந்து எங்களிடம் துரிதமாகவும் எங்களுக்கு மிக்க உணவை அளிக்கவும்’ இப்படி ரிக் வேதத்தில் உள்ள மொத்த மந்திரங்களின் எண்ணிக்கை 10,552. 

விஞ்ஞான வளர்ச்சியுற்ற இன்றைய கால கட்டத்தில் இத்தகைய வெற்றுச்சொற்களுக்கு எந்த அர்த்தமுமே இருக்க முடியாது.

 நாகரிக வளர்ச்சியில் மிகவும் பின்தங்கியிருந்த ஓர் இனம் (clan) எதிரிகளிடமிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காக இயற்கையையும் வானுலகில் வசிப்பதாக அவர்கள் நம்பிய தேவர்களையும் துணைக்கு அழைத்த பிரார்த்தனைப் பாடல்களே வேதங்கள். 

அந்நியர்களைக் குறித்த இவர்களது பயமே சுயநலமாகவும் துவேஷமாகவும் மாறியுள்ளது. 

ஆனால், தமிழினப் பாரம்பரியமோ `இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்’ என்கிறது. நமக்குத் தீமை புரிந்த ஒருவனைத் தண்டிக்கும் வழி என்னவென்றால், அவன் வெட்கப்படும் விதத்தில் அவனுக்கு நன்மை புரிவதே. இதுவும் 2000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டதுதான்.

இப்படிப்பட்ட சிந்தனையின் ஒரு கீற்றைக் கூட நான்கு வேதங்களிலும் காண முடியவில்லை. 

எனவே `யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற சீரிய தமிழ்மரபுக்கு `இந்திரனே! நான் அளிக்கும் சாராயத்தைக் குடித்து விட்டு என் எதிரியின் கண்களைத் தோண்டு’ என்று உபதேசிக்கும் வேதங்கள் நான்கும் முற்றிலும் மாறுபட்டது. 

எனவே, வேதங்களைப் பற்றிய `ஜீபூம்பா’ கருத்துகள் அனைத்தும் பொய்யானவை; தவறானவை.



----------- நன்றி--"ராஜமுத்திரை" - 22-3-2006