Thursday, October 12, 2023

இந்து சமய அறநிலையத் துறை - ஓர் அடிப்படைப் புரிதல்

 இந்துசமய அறநிலையத்துறை 

- அடிப்படை புரிதல்

முதலில் இந்து சமய  அறநிலயத்துறையின் தர்கத்தை (logic) புரிந்து கொள்வோம். 

அறநிலயத்துறையின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள எல்லா கோவில்களும் இல்லை.

பண்டைய காலம் முதல் இன்று வரை 

1) ஒரு தனியாரால் கட்டப்பட்ட கோவில்கள் எதுவும் அறநிலயத்துறையின் கீழ் வருவதில்லை

 (உதா: உங்கள் தெரு முக்கில் உள்ள பிள்ளையார் கோவில், சிலரின் முயற்ச்சியால் உருவான சாய்பாபா கோவில்கள், உங்கள் ஊரில் உள்ள குலதெய்வ கோவில், இப்படி). 

2) அதே போல் ஒரு குழுவால், மடத்தால் கட்டப்பட்ட கோவில்களும் வருவதில்லை. (உதா: காஞ்சி மடம், மதுரை ஆதீனம் இப்படி).

3) எந்தெந்த கோவில்கள் எல்லாம் மன்னராட்சியில் அரசர்களால் கட்டப்பட்டு, அரசால் பராமரிக்கப்பட்டதோ அவைகள் மட்டுமே அந்த மன்னராட்ச்சி முடிந்து மக்களாட்சியிலும் அரசின் வசம் உள்ளது. 

தமிழகம் முழுக்க இலட்சக்கணக்கான கோவில்கள் இருக்கும். அதில் அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்கள் வெறும் 38ஆயிரத்து  சொச்சம் தான்.

இதே தர்கத்தின் அடிப்படையில் தான் வக்ஃபு வாரியங்களும் அரசால் நடத்தப்படுகின்றன.

வக்ப்பு வாரியங்கள் இந்தியா முழுவதும் அந்தந்த மாநில அரசால் அமைக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு, மேலான்மை செய்யப்பட்டு வரப்படுகின்றன.

இஸ்லாமிய மன்னர்களால் கட்டப்பட்ட மசூதிகளையும், அது சார்ந்த சொத்துக்களையும் மேலான்மை செய்வது அந்த வக்ஃபு வாரியங்கள் தான்.

ஆங்கிலேய ஆட்சிகாலத்தில் மன்னராட்சி இல்லை என்பதாலும், ஆங்கிலேய ஆட்சிகாலத்தில் அரசால் இங்கே சர்ச்சுகள் கட்டப்படவில்லை என்பதாலும் (பல மிசினரிகள் இங்கே வந்து அவரவர்கள் செலவில் கட்டப்பட்டவை, நமது மடங்கள் அவர்கள் செலவில் கட்டிய கோவில்கள் போல) சர்ச்சுகளுக்கு இப்படி அரசாங்க அமைப்பு இல்லை.

அறநிலையத்துறையின் கீழ் 17 சமண கோவில்களும் உள்ளன என்பது உபரி தகவல்.

++++++++++++++++++++++++++++++

"கோவில்களில் பக்தர்கள் கடவுளுக்கு காணிக்கை செலுத்துகிறார்கள். அது அந்த கடவுளுக்கு சொந்தம். அதை அரசு எடுத்து கண்டபடி செலவு செய்வதா??"

இது அறநிலையத்துறையின் மேல் ஒரு சில பிற்போக்குவாதிகளால் வைக்கப்படும் ஒரு கேள்வி.

கோவில்களில் இருந்து வரும் வருமானத்தில் ஒரு ரூபாய் கூட அறநிலயத்துறைக்கு அப்பால், வேறு எதற்கும் செலவு செய்யப்படுவதில்லை.

இன்னும் சொல்லப்போனால் ஒரு கோவிலின் வருமானம் கூட மற்றொரு கோவிலுக்கு செல்லாது. 

*Common good fund*  என்று ஒரு பொது fund உருவாக்கப்பட்டு,  அதிக வருவாய் உள்ள கோவில்களில் இருந்து ஒரு தொகை இதற்கு மாற்றப்படுகிறது. 

அந்த தொகையில் இருந்து தான் குறைந்த வருவாய் உள்ள கோவில்களுக்கான செலவுகள் திட்டமிடப்படுகின்றன. 

அதிக வருவாய், குறைந்த வருவாய் என எப்படி கணக்கெடுக்கிறார்கள்?

ஆண்டு வருமானம் 

1) 10,000 ரூபாய்க்கும் குறைவு,

2) 10 ஆயிரம் - 2.5 லட்சம்

3) 2.5 லட்சம் - 10 லட்சம்

4) 10 லட்சத்துக்கும் மேல்

இதில் (4) இல் வரும் கோவில்களின் எண்ணிக்கை 331 மட்டுமே. 

இந்த 331 கோவில்களின் வருமானத்தில் ஒரு சதவிகிதம் அந்த common good fundக்கு மாற்றப்பட்டு அதன் மூலம் மீதமுள்ள மூன்று categoryயிலும் வரும் 38,300+ கோவில்கள் பராமரிக்கப்படுகின்றன.

கோவில்களின் வருமானத்தில் 'assessible income' என்ற ஒரு குறப்பிட்ட தொகைக்கு 14% வருமான வரி உண்டு.

 அந்த வரி மட்டுமே அரசாங்கத்திற்கு போகிறது. 

அந்த வரியும் கூட அறநிலைய அதிகாரிகளுக்கு சம்பளம் போன்ற அறநிலையத்துறை சார்ந்த administrative செலவுகளுக்குத்தான் செலவு செய்யப்படுகின்றது. 

எனவே கோவில் வருமானங்களை, அரசு ஏன் எடுத்துக்கொள்கிறது என்ற கேள்வி திட்டமிட்டு பரப்பப்படும் வதந்தி....

Wednesday, October 11, 2023

குத்தூசி குருசாமி நினைவு நாள்

குத்தூசி குருசாமி நினைவு நாள் 11.10.2023

குத்தூசி குருசாமி

பட்டுக்கோட்டைக்கு அருகிலுள்ள குருவிக்கரம்பை கிராமத்தில் 1906 ஏப்ரல் 23இல் பிறந்தார்.

 முதன்முதலாக பெரியாரைச் சந்தித்தபோது அவருக்கு வயது 23. பெரியாரின் குடியரசு இதழில் ‘குத்தூசி’ என்ற பெயரில் சமூக சீர்திருத்த, பகுத்தறிவு சார்ந்த கட்டுரைகளை எழுதத் தொடங்கினார். 1929இல் தன்னைப் போன்றே பகுத்தறிவுச் சிந்தனை கொண்ட குஞ்சிதம் அம்மையாரை பெரியாரின் தலைமையில் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டார். 

தமிழ்நாட்டில் பெரியார் நடத்திவைத்த முதல் சீர்திருத்தத் திருமணம் குத்தூசி குருசாமி - குஞ்சிதம் அம்மையார் திருமணம்தான். 

அக்காலத்தில் பல எதிர்ப்புகளுக்கு இடையேதான் அது நடைபெற்றது.

பெரியார் தலைமையில் சுயமரியாதை இயக்கம் வேர்விட்ட காலத்தில், அவருடன் அறிமுகமாகி, இறுதிவரையில் அவரோடு இணைந்து பயணித்தவர் குத்தூசி குருசாமி.

எழுத்துச் சீர்திருத்தத்தின் முன்னோடி

தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் குறித்து முதன்முதலாகப் பேசியவர் குருசாமி. பெரியாருடன் இதுபற்றி விவாதித்து, புதிய தமிழ் எழுத்து வடிவங்களைக் குடியரசில் முதன்முதலாகப் பயன்படுத்தவும் செய்தார். “இது தமிழ் மொழியின் எழுத்து வடிவத்தை மேலும் செழுமைப்படுத்து

வதுடன், தமிழை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும்” என்றார். கம்யூனிஸ்ட் இயக்க முன்னோடியான சிங்காரவேலர் 1923இல் விவசாயத் தொழிலாளர் இயக்கத்தைக் கட்டமைத்து, 

இந்தியாவிலேயே முதன்முதலாக சென்னையில் மே தினத்தை நடத்தியபோது அதில் குருசாமியும் பங்கேற்றார். அப்போது அவர் பதின்பருவ இளைஞர். இடதுசாரி இயக்கத் தலைவர்களுடன் குருசாமி தனது கடைசிக் காலம் வரையில், நெருக்கமான உறவைப் பேணினார்.

1949இல் இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் தடை செய்யப்பட்ட காலத்தில், பல தலைவர்களுக்குத் தன் வீட்டில் அடைக்கலம் அளித்தார். கைது செய்யப்பட்ட கம்யூனிஸ்ட் தலைவர்கள் பலரைச் சிறைக்குச் சென்று சந்தித்தார் குருசாமி. அதற்கு நன்றி தெரிவித்து அவர்கள் எழுதிய கடிதங்களே, கம்யூனிஸ்ட் இயக்கத்தினர் மீது அவர் வைத்திருந்த அன்புக்குச் சான்று.

1952இல் முதன்முதலாக நடந்த பொதுத்தேர்தலில், தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சிகளை ஆதரித்துப் பிரச்சாரம் செய்தார் பெரியார். அந்தத் தேர்தலில் இடதுசாரிகள் வெற்றிபெற்றபோதும், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு ராஜாஜி ஆட்சியமைத்தார். இதனைக் கண்டித்து ‘கொல்லைப்புற வழியில் ஆச்சாரியார்’ என்று விடுதலையில் எழுதினார் குருசாமி. 

இன்று அரசியல்வாதிகள் சரளமாகப் பயன்படுத்துகிற இந்தச் சொல், முதன்முதலாக அப்போதுதான் அச்சில் பயன்படுத்தப்பட்டது.

‘குடியரசு’, ‘விடுதலை’ ,‘அறிவுப் பாதை’ மற்றும் ‘புதுவை முரசு’ பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதினார் குருசாமி.

பாரதிதாசனுடனான நட்பின் காரணமாக அவரின் முதல் கவிதைத் தொகுதியைப் பிரசுரிக்கும் பொறுப்பையும் ஏற்றார். 

குருசாமியின் மனைவி குஞ்சிதம் தான் பாரதிதாசனின் முதல் கவிதைத் தொகுப்பை வெளியிட்டவர்.

குருசாமி, ஆங்கிலத்தில் இருந்து பல்வேறு நூல்களையும், கட்டுரைகளையும் தமிழில் மொழிபெயர்த்தார். 

ஐரோப்பிய அறிஞரான பெட்ரண்ட் ரஸ்ஸலின் புகழ்பெற்ற நூலான ‘நான் ஏன் கிறிஸ்தவன் அல்ல’ என்பது அவரது முக்கியமான மொழிபெயர்ப்பு. 

தேர்தல் அரசியலில் ஈடுபடுவது குறித்து பெரியாருடன் கருத்து வேறுபாடு கொண்ட அண்ணா, 1949இல் பெரியார் - மணியம்மை திருமணத்தை முன்வைத்து தனி இயக்கத்தைத் தொடங்க முடிவு செய்தார். இதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றபோது, பிரிவைத் தடுக்க சமரச முயற்சிகளை மேற்கொண்டவர் குருசாமி.

குத்தூசி குருசாமி முன்வைத்த தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை, அவரது மறைவுக்குப் பிறகு 1978இல் எம்.ஜி.ஆர் அரசாங்கம் நடைமுறைப்படுத்தியது

தன் வாழ்நாளில் எழுத்துகளிலும், பேச்சுகளிலும் பகுத்தறிவுக் கருத்தியல் சார்ந்து குருசாமி எந்தச் சமரசமும் செய்து

கொண்டதில்லை. சுயமரியாதை இயக்கத்தின் அடையாளமாக இருந்த குருசாமி 1965 அக்டோபர் 11இல் காலமானார்.

இவரின் நூல்களையும், வாழ்க்கை வரலாற்றையும் அவரின் நண்பரான குருவிக்கரம்பை வேலு வெளியிட்டிருக்கிறார். 

Rajamani A.R. அவர்களின் பதிவு

மெக்காலே : பழமைவாதக் கல்வியின் பகைவன்

மெக்காலே: பழமைவாதக் கல்வியின் பகைவன் - முனைவர் இரா. சுப்பிரமணி - சாளரம் வெளியீடு - முதல் பதிப்பு 2023 - பக்கங்கள் 160 - விலை ரூ 180/

*  சமஸ்கிருதமே இந்திய மொழிகளுக்கெல்லாம் தாய் என்ற போலி பிம்பத்தை 1856ம் ஆண்டு உடைத்தெறிந்தவர் - கால்டுவெல் ! 

அவரது சிறப்பான ஆய்வு நூலான ' திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் ' உலகின் கண்களைத் திறந்து வைத்தது ! 

*  சமஸ்கிருதத்தையும், குருகுலத்தையும், வர்ணாசிரத்தையும் நம்பி, உயர் ஜாதி பிள்ளைகளுக்கு மட்டுமே கல்வி என்ற நடைமுறைக்கு 1835ம் ஆண்டு சமாதி கட்டியவர் - மெக்காலே ! 

அவரது ' ஆங்கில வழிக் கல்வி திட்ட முறை ' இந்தியர்களின் கல்விக் கண்ணை திறந்து வைத்தது !

*  யார் இந்த மெக்காலே ?

மெக்காலே அறிமுகப் படுத்திய ஆங்கில வழிக் கல்வி முறை நல்லதை செய்ததா ? அது  குமாஸ்தாக்களை உருவாக்குகின்ற கல்வி முறையா ? இந்தியாவின் அறிவுப் பாரம்பரியத்தை சிதைத்ததா ? அன்றைய இந்தியாவில் கல்வி நிலை என்ன ? ....போன்ற கேள்விகளுக்கு நிறைய நூல்களை ஆராய்ந்து விடை தந்துள்ளார் முனைவர் இரா. சுப்பிரமணி ! 

*  " மெக்காலே என்னும் ஆங்கில அதிகாரியை கொண்டாட வேண்டும் என்ற நோக்கில் இந்நூல் உருவாக்கப்படவில்லை. இந்திய தேசத்தின் கல்வி வரலாறு என்பது விருப்பு வெறுப்பற்ற நிலையில் வாசிக்கப்பட வேண்டும் என்பதாக எடுத்துரைக்கவே இந்த நூல் வெளி வந்துள்ளது ! ..." என்று தனது முன்னுரையில் குறிப்பிடுகின்றார் நூலாசிரியர் ! 

*  முதலில் ' யார் இந்த மெக்காலே ? ' என்ற கேள்விக்கு ஒரு சுருக்கமான அறிமுகம் இதோ : 

*  தாமஸ் பாபிங்டன் மெக்காலே ( 1800 - 1859 ).

மெக்காலே இங்கிலாந்தில் பிறந்தவர். பள்ளியில் சிறந்த மாணவர். 1818ல் கல்லூரிப் படிப்பு. சட்டம் பயின்றார். 1826ல் வழக்கறிஞரானார். சிறந்த கட்டுரைகளை எழுதியுள்ளார். 1830ல் நாடாளுமன்ற உறுப்பினரானார். அடிமைத்தனம், மூடநம்பிக்கை போன்றவற்றை தீவிரமாக எதிர்த்தார். மனிதாபிமான மிக்கவர் !

*  கிழக்கிந்திய கம்பெனியில் பணியாற்ற இந்தியாவுக்கு 1834ல் சென்று ,1838ல் இங்கிலாந்துக்கு திரும்பினார். உலகின் புகழ்பெற்ற நூலான ' இங்கிலாந்தின் வரலாறு ' நான்கு பாகங்களை எழுதி வெளியிட்டார். 1852ல் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தேர்வானார். 

1859ம் ஆண்டு டிசம்பர் 28ம் தேதி மரணமடைந்தார் ! 

*  இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனியை நிர்வகிக்கும் பொறுப்பில் ஆண்டு 1834 முதல் 1838 வரை இருந்தார். அப்போது அவருக்கு தரப்பட்ட முக்கியமான இரண்டு பணிகளை செய்து முடித்தார்.

1) இந்தியத் தண்டனைச் சட்டத்தை உருவாக்கியது !

2) இந்திய மக்களுக்கு எந்த மொழியில் கல்வி பயிற்றுவிப்பது என்ற நீண்ட விவாதத்திற்கு முற்றுப் புள்ளி வைத்த - ஆங்கில வழிக் கல்வியை சட்ட பூர்வமாக அறிமுகப்படுத்தியது ! 

*  மெக்காலேயின் ஆங்கில வழிக் கல்விமுறையை பரிந்துரைத்த 13 பக்க கல்விக்

 குறிப்பு, இந்தியாவின் கவர்னர் ஜெனரல் வில்லியம் பெண்டிங் பிரபுவிடம் 02.02.1835 அன்று சமர்பிக்கப்பட்டது . அதை ஆங்கிலேய அரசு 07.03.1835 அன்று ஏற்றுக் கொண்டது ! 

*  ஏறத்தாழ இருநூறு ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியாவில் கல்வி என்ற பெயரால் நடந்த வெட்கக் கேட்டை , மெக்காலே தனது 13 பக்க கல்விக் குறிப்பில் எழுதப்பட்டதிலிருந்து சில தகவல்கள் : 

*  " இங்கிலாந்திலுள்ள ஒரு இலாடக்காரன் கூட ஒப்புக் கொள்ள வெட்கும்படியான மருத்துவ முறைகளும் ; இங்கிலாந்திலுள்ள பாடசாலைகளில் படிக்கும் சின்னஞ்சிறிய சிறுமியருக்கும் நகைப்பை உண்டாக்கும் விபரீதமான வான சாஸ்திரங்களும் ;  முப்பதடி உயரமுள்ள அரசர்கள் அறுபதாயிரம் வருஷம் ஆண்ட வரலாறுகளைக் கொண்ட சரித்திரமும் ; பாற் கடலும், நெய் கடலும் கொண்ட பூகோள சாஸ்திரமும் இங்குக் காணப்படுகின்றன ! " ....

*  மெக்காலே மேலும் சொல்வதைக் கேளுங்கள் :

" இப்படி பலவிதமான முரண்பாடுகளுடன் இந்தியாவில் நிலவி வந்த சமஸ்கிருதக் கல்வி முறை என்பது திட்ட மிட்டு, இந்தியாவை இருளில் வைக்க சிறப்பாகத் திட்டமிட்ட முறையாகும் ( The Sanskrit system of Education would be the best calculated to keep the country in darkness ) " ....மெக்காலேயை சங்கிகள் வெறுப்பதற்கு இது தானே காரணம் ! 

*  மெக்காலேயின் கல்வித் திட்ட நிலைப்பாட்டில் சில கூறுகள் : 

1)  ஆங்கில வழிக் கல்வியை பயிற்று மொழியாக கொள்ள வேண்டும்.

2)  ஆங்கில பள்ளிகளில் தாய் மொழியும் கற்பிக்கப் படவேண்டும்.

3)  இந்து, முஸ்லிம் சமூகப் பிள்ளைகள் ஒன்றாக கல்வி கற்க வேண்டும்.

4)  இந்து பண்டிகையின் போது இஸ்லாமிய பிள்ளைகளுக்கும், இஸ்லாமிய பண்டிகையின் போது இந்து பிள்ளைகளுக்கும் விடுப்பு அளிக்க வேண்டும்.

5)  ஆங்கிலேயர் பிள்ளைகளும் இந்தியர்களின் பிள்ளைகளும் ஒரே பள்ளியில் படிக்க வேண்டும்.

6)  நிற பேதம், சாதி பேதம், சமய பேதம் கல்வி கூடங்களில் இருக்கக் கூடாது.

7)  30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதம் இருக்க வேண்டும்.

8)  ஆசிரியர்கள் மாணவர்களை அடிப்பதை தடுக்க வேண்டும்.

9) ‌ ஆசிரியர்களுக்கு நல்ல ஊதியம் வழங்க வேண்டும்.

10) மாணவர்களை மையப்படுத்தியே பள்ளிகளும், கல்வியும், பாடங்களும், கற்பித்தலும் அமைய வேண்டும்.

*  பிராமணர்களின் குருகுல கல்விக்கும், சமஸ்கிருத கல்விக்கும் முடிவுரை கட்டினார் என்பதாலேயே மெக்காலேயை சனாதனிகளும், சாதி வெறியர்களும், சமத்துவத்தை எதிர்ப்பவர்களும், கடுமையாக தொடர்ந்து விமர்ச்சிக்கின்றார்கள் ! 

*  மெக்காலே என்ற அந்த ஆங்கிலேயனின் தீர்க்கமான அறிவின் வெளிச்சத்தின் காரணமாக இந்தியாவில் மத நீக்கல் கல்வி அமலானது ! 

ஒருவேளை அப்படி நடக்காமல் இருந்தால், இந்தியா ஓரு மத வழிப்பட்ட நாடாக மாறி, இன்றைய ஆப்கானிஸ்தான் போல மாறி இருக்கும் என்று சமூகவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள் ! 

*  இந்த சிறந்த ஆய்வு நூலை எழுதி நமக்கு வழங்கியுள்ள முனைவர் இரா. சுப்பிரமணி அவர்களை பகுத்தறிவு உலகம் பாராட்ட கடமைப்பட்டுள்ளது ! 

தொட்டாலே தீட்டு என்று தூரத்தில் நிறுத்தியது - வர்ணாசிரமம் ! 

பட்டாலே நூலை அணிந்த பார்ப்பனரை உயர்த்தியது - 

சனாதனம் ! 

மூக்காலே முணுமுணுக்கும் சமஸ்கிருதம் ஆதிக்கத்தின் மொழியானது - ஆரியர்களால்!

மெக்காலே முன்னெடுத்த ஆங்கிலம் அனைவரின் மொழியானது - ஆங்கிலேயர்களால் !

பொ. நாகராஜன்,

பெரியாரிய ஆய்வாளர்,

சென்னை - 09.10.2023

********************************************

Tuesday, September 19, 2023

உடன்கட்டை ஏறுதல் 1798 இல் அய்ரோப்பியர் எழுதியது

உடன்கட்டை ஏறுதல்: நேரில் பார்த்த அனுபவத்தை எழுதி வைத்துள்ள ஐரோப்பியர் ..!

இது 1798ல் எழுதப்பட்டது ..

அவர் பெயர்: Donald Campbell ..

--

பெண் ஒருத்தி, இறந்து போன தன் கணவனோடு சேர்த்து எரிக்கப்படவிருந்த நிகழ்ச்சியைப் பார்க்கச் சென்றேன் ..

இந்த வேதனை தரும் கொடிய சம்பவத்தை நிகழ்த்தத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த இடம்  தஞ்சாவூர் கோட்டையிலிருந்து ஒருமைல் வடக்கே உள்ள காவிரி ஆற்றின் கரை ..

அந்தப் பெண்ணுக்கு 16 வயதிற்கு உள்ளே தான் இருக்கும் ..

வெள்ளை சேலை கட்டி இருந்தாள் ..

தலையிலும் கழுத்தைச் சுற்றிலும் வெள்ளை நிற மல்லிகை பூ சூடி இருந்தாள் ..

அவளைச் சுற்றி 20 பெண்கள் நின்று கொண்டு ஒரு வெள்ளைத் துணியை அவள் தலைக்கு மேல் வெயில் படாமல் பிடித்துக் கொண்டிருந்தார்கள் ..

அங்கிருந்து 20 அடி தள்ளி சில பிராமணர்கள் விறகுக் கட்டைகளால் எட்டடி நீளத்தில் நான்கடி அகலத்தில் சிதை தயாரித்துக் கொண்டிருந்தார்கள் ..

முதலில் மூன்றடி உயரத்திற்கு கம்புகளை செங்குத்தாக நிறுத்தினார்கள் ..

உள்ளே சிறிய மரத்துண்டுகளால் நிரப்பினார்கள் ..

பக்கத்தில் மூங்கில் கழிகளின் மேல் கிடத்தப்பட்டிருந்த இறந்தவருக்கு 60 வயதுக்கு மேல் இருக்கும் ..

இறந்தவரின் உடம்பைச் சுற்றி நான்கு பிராமணர்கள் முதல் முறை சூரியனுக்கு எதிர் திசையாகவும் அடுத்த மூன்று முறை சூரிய ஒளி வீசும் திசையிலுமாக சுற்றி வந்தார்கள் ..

இப்போது அவர்கள் தங்களுடைய நீண்ட தலைமுடியை அவிழ்த்து விட்டுக் கொண்டும் உடனே மீண்டும் முடிந்து கொண்டும் ஏதோ மந்திரங்களை உச்சரித்தார்கள் ..

மற்றவர்கள் மந்திரம் சொல்லிக்கொண்டு கையில் இருந்த பச்சை இலையால் தண்ணீரை எடுத்து அருகில் குவித்து வைக்கப்பட்டிருந்த சாண எருக்களின் மீது தெளித்துக் கொண்டிருந்தார்கள் ..

வடகிழக்கு மூலையில் அமர்ந்திருந்த ஒரு வயதானவர் கையில் இருந்த ஓலைச் சுவடியில் உள்ளதை வாசித்துக் கொண்டிருந்தார் .. 

அந்த சூழலின் அழுத்தமும் சோகமும் தாங்க முடியாமல் அருகில் இருந்தவரிடம் இன்னும் எவ்வளவு நேரம் நடக்கும் என்று கேட்டேன் ..

இன்னும் இரண்டு மணி நேரத்திற்கு மேலாகும் என்று சொல்லவே நான் கோட்டையை நோக்கித் திரும்பினேன் ..

500 கெஜ தூரம் நான் சென்றிருக்கும் பொழுது ஒருவர் என் பின்னாலேயே வந்து திரும்பி வருமாறு அழைத்தார் ..

சடங்கு உடனே நடத்தப்பட இருப்பதாகச் சொன்னார் ..

நான் சென்றபோது அந்தப் பெண்ணை மற்ற பெண்கள் அழைத்துச் சென்று ஆற்றில் குளிக்க வைத்துக் கொண்டிருந்தார்கள் .. 

அவள் நெற்றியில் செந்நிறத்தில் ஆறு பென்ஸ் காசு அளவுக்கு பொட்டு வைத்தார்கள் ..

பிறகு ஈரமண் போன்று எனக்குத் தெரிந்த ஏதோ ஒன்றை பிசைந்து அவள்  நெற்றியில் தடவினார்கள் ..

பிறகு அந்தப் பெண் சிதைக்கு  அழைத்து வரப்பட்டு அவள் சிதையைச் சுற்றி மூன்று தடவை நடந்தாள் ..

சிதையில் அவள் கணவன் உடல் ஏற்கனவே ஏற்றி வைக்கப்பட்டிருந்தது .. 

இவள் யாருடைய துணையும் இல்லாமல் தானாகவே அதில் ஏறி தன் கணவன் உடல் அருகில் அமர்ந்தாள் ..

பிறகு தான் அணிந்திருந்த நகைகளின் திருகுகளை,  திருகி கழற்றி அந்த ஆபரணங்களை கையில் எடுத்து மீண்டும் அந்த திருகுகளை பொருத்தி பக்கத்தில் நின்ற இரு பெண்களிடமும் ஆளுக்கு ஒன்றாக கொடுத்தாள் ..

தன் காதில் அணிந்திருந்த ஆபரணங்களையும் அவள் மிகுந்த நிதானத்துடன் திருகை கழற்றி எடுத்து, மீண்டும் திருகை பொருத்தி அந்த பெண்களிடம் பிரித்துக் கொடுத்தார் ..

பிரித்துக் கொடுக்கும் பொழுது ஏதோ சிறிய குழப்பம் ஏற்பட அவள் பொறுமையாக அதை சரியாகப் பிரித்துக் கொடுத்தாள் ..

பிறகு மெதுவாக அப்படியே மல்லாக்க சாய்ந்து படுத்தாள். ஒரு மஞ்சள் துணியால் தன் முகத்தை மூடிய பிறகு புரண்டு தன் கணவருக்கு நெருக்கமாக படுத்து தன் வலதுகையை தூக்கி அவர் மார்பின் மீது வைத்தாள் ..

அதன் பிறகு எந்த அசைவுமின்றி காத்திருந்தார் ..

பிராமணர்கள் இறந்தவரின் வாயில் சிறிது அரிசியையும் மீதி அரிசியை அவள் மீதும் தூவினார்கள் ..

பிறகு சிறிது நீரை இருவர் மீதும் தெளித்தார்கள் .. 

பிறகு ஒரு சிறிய கயிறு கொண்டு இருவரையும் சேர்த்துக் கட்டினார்கள் ..

 பிறகு,இருவர் உடலும் மற்றவர் கண்களில் மறையும் அளவுக்கு மரக்கட்டைகளை சுற்றி அடுக்கினார்கள் ..

குறுக்குவாக்கில் சிறிது கட்டைகளை அடுக்கிய பிறகு ஒரு பாத்திரத்தில் இருந்து எண்ணெய்  போன்ற திரவத்தை அந்த பெண் இருந்த பகுதியில் ஊற்றினார்கள் .. 

பிறகு மீண்டும் கட்டையை அடுக்கினார்கள் .. 

இப்போது வெறும் விறகு குவியலாகவே எனக்குத் தெரிந்தது ..

இதே நேரத்தில் ஒரு பிராமணர் சிதைக்கு அருகே இருந்தவர் அந்தப் பெண்ணின் தலைப்பகுதி அருகே குனிந்து அவளை கூப்பிடுவது போல் சத்தம் கொடுத்தார் ..

ஏதோ அவளிடம் சொல்வது போல சொல்லி பின் எல்லோரையும் பார்த்து சிரித்தார் ..

பிறகு முழுவதுமாக வைக்கோலால் மூடினார்கள் சுற்றிலும் கயிறால் இறுக்கிக் கட்டினார்கள் ..

பிறகு ஒருவர் சிறிது வைக்கோலை எடுத்து அருகில் கனன்று எரிந்து கொண்டிருந்த சாண எருக்களில் பற்ற வைத்து அதை சிதையில் போட்டார் ..

பிறகு தீ நன்றாக பற்றுமாறு விசிறி விட்டார்கள் ..

அப்போது காற்றும் அதே திசையில் வீச தீ வேகமாக பற்றி கொண்டது ..

ஏதோ ஒரு கிறீச்சிடும் ஒலியை நான் கேட்டது மாதிரியும் மற்ற இரைச்சலிடமிருந்து அதை தனிமைப்படுத்தி கேட்காதது மாதிரியும் இருந்தது .. 

சில நிமிடங்களில் அந்த குவியல் சாம்பல் ஆனது ..

நான்  அந்த மொத்த நடவடிக்கைகளையும் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன் ..

என் பார்வை முழுவதும் அந்தப் பெண்ணின் மீது தான் இருந்தது ..

இந்த கொடூரமான சடங்கை நடத்தியவர்கள் அதை நிறைவேற்றியதில் பெருமிதம் கொண்டிருந்த மாதிரியும், ஐரோப்பியன் ஒருவன் அதைப் பார்த்துக் கொண்டிருப்பது அவர்களை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை என்பதும் கோட்டைக்கு திரும்பிய வழியில் என் சிந்தனையாக இருந்தது ..

Friday, September 8, 2023

பெரியார் சிலை - நீதியரசர் சந்துரு தீர்ப்பு

 நீதிபதி கே. சந்துரு வழங்கிய மற்றொரு பெருமைக்குரிய தீர்ப்பு: பெரியார் சிலைகள் அவசியமானவை


  

 




கிருட்டிணகிரி மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் ஆண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியின் வளாகத்தில் ஒரு மூலையில் பள்ளிக் கல்வித் துறை ஒப்புதல் மற்றும் அரசு அனுமதி ஆணையோடு நிறுவப் பட்டுள்ள பெரியார் சிலையை எதிர்த்து உள்ளூர் பா.ஜ.க.வினர், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். பெரியார் சிலை நிறுவுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த பா.ஜ.க. ஆர்.எ°.எ°. அமைப்பின் நிறுவனரான ஹெட்கேவர் சிலை நிறுவப் போவதாக அறிவித்து, அதற்கான ஏற்பாடுகளையும் தொடங் கினர். இதற்கிடையே பா.ஜ.க.வினர், நேரடியாக பெரியார் சிலையை எதிர்த்து வழக்காட முன் வராமல், பெற்றோர் மாணவர் சங்கத் தலைவர் ஒருவர் மூலமாக வழக்குத் தொடர்ந்தனர். உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கே. சந்துரு மனுவை தள்ளுபடி செய்துள்ள தோடு, பெரியார் சமுதாய மாற்றத்துக்கு பங்களிப்பை வழங்கிய மகத்தான தலைவர் என்று தீர்ப்பில் பதிவு செய்துள்ளார்.


பெரியார் சிலையை பள்ளி வளாகத்தின் அருகே நிறுவுவதால் மாணவர்கள் நாத்திக சிந்தனைக்கு மாறிவிடுவார்கள் என்று மனுதாரர் கூறியிருந்ததுபற்றி நீதிபதி குறிப்பிடுகையில், ஒரு மகத்தான தலைவரின் சிலையை நிறுவிவிட்டாலே மாணவர்கள் எல்லோரும் தன்னிச்சையாகவே நாத்திகர்களாகி விடுவார்களா? என்று வியப்பு தெரிவித்தார். அதே நேரத்தில் பெரியாரின் சிலைகள் நிறுவப்பட வேண்டியதின் அவசியத்தையும் நீதிபதி சுட்டிக் காட்டியுள்ளார்.


“பள்ளி மாணவர்கள் பெரியாரின் வாழ்க்கையை யும் இலட்சியத்தையும் கட்டாயம் அறிய வேண்டியது அவசியமாகும். இத்தகைய மாபெரும் தலைவர்களின் தத்துவங்களைப் புரிந்து கொண்டால் நமது அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கடமையாக கூறப் பட்டுள்ள பிரிவு 51ஏ(எச்) இல் வலியுறுத்தும், விஞ்ஞான மனப்பான்மையை மேம்படுத்துதல், மனித நேயம், எதையும் ஏன் எதற்கு என்று விசாரணைக்குட் படுத்துதல், சீர்திருத்தம் ஆகியவற்றை செம்மையாக பின்பற்றுவதற்கு உதவும்” – என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.


பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் முறையான ஒப்புதலுக்குப் பிறகுதான் பெரியார் சிலை நிறுவப்பட் டுள்ளது. உள்ளூர் பா.ஜ.க. தலைவர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு, ஆர்.எ°.எ°. நிறு வனரான கேசவ் பாலிராம் ஹெட் கேவர் சிலையை நிறுவ வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்கள். எனவே, இந்த “மனுதாரர் இந்த மனுவைத் தாக்கல் செய்வதற்கு ஒரு அரசியல் கட்சியால் தூண்டி விடப்பட்டுள்ளார். அந்த அரசியல் கட்சி வெளிப் படையாக இப்படி ஒரு வழக்கை தாக்கல் செய்து எதிர்ப்பை சான்றாதாரமாக பதிவு செய்ய விரும்ப வில்லை. அதற்கு பதிலாக இத்தகைய மனுதாரர் களுக்கு அழுத்தம் தந்து, சட்டத்தின் முன் நிற்க முடியாத காரணங்களைக் கூறி, வழக்கு தொடரச் செய்திருக்கிறார்கள். இந்த மனுவை இந்த நீதிமன்றத்தால் ஏற்க முடியாது” என்று நீதிபதி மேலும் கூறியுள்ளார்.


“பெரியார் மக்களிடம் எடுத்துரைத்த கருத்துகள் பற்றி, மனுதாரர், மனுவில் கூறியிருப்பது அவரது அறியாமையையே வெளிப்படுத்துகிறது. தமிழ் சமூகத்தை சீர்திருத்தி மாற்றியமைப்பதில் பெரியாரின் பங்களிப்பது எத்தகையது என்பது குறித்த புரிதல் மனுதாரருக்கு இல்லை. பெரியாரை ஏதோ ‘நாத்திக பரப்புரையாளர்’ என்று மட்டுமே முத்திரை குத்திட முடியாது. சாதிய ஒடுக்குமுறை, சமூக சமத்துவம், பெண்கள் விடுதலை போன்றவற்றில் பெரியார் முன் வைத்த சிந்தனைகள், சமகால இந்தியத் தலைவர்களின் கருத்துகளையும் மிஞ்சி நிற்கக்கூடியவை. பூலே, அம்பேத்கரைப்போல, அயோத்திதாசர், பெரியார் போன்ற மாமனிதர்கள் நினைத்துப் பார்க்கவே முடியாத ஆழமான உண்மைகளைக் கண்டறிந்தவர் கள், உண்மையான கவலை கொண்டவர்கள். தங்கள் சுயசிந்தனைகளால் தங்கள் உடைமைகளை துறந்து சமுதாயத்துக்காக ஒப்படைத்துக் கொண் டவர்கள் தாங்கள் வாழ்ந்த சமூகம் அறியாமைச் சூழலில் மூழ்கிப் போய் அநீதிகளுக்கும் அவலங் களுக்கும் உள்ளாகிக் கிடந்ததைக் கண்டு, ஆழ்ந்த கவலை கொண்டு சமூக மாற்றத்துக்கு உழைத்தவர்கள் இந்த துயரங்களும் அநீதிகளுமே அவர்களை மிகக் கடுமையாக சிந்திக்க வைத்தது. எதைச் செய்தாவது மாற்றியாக வேண்டும் என்ற உறுதியான முடிவுக்கு வரத் தூண்டியது. இதேபோல் உலகம் முழுதும் வாழ்ந்த ஒடுக்கப்பட்ட மக்கள் எப்படி விடுதலை பெற்றார்கள் என்று சிந்திக்கவும், பகுப்பாய்வு செய்யவும், செயல்படவும் முன் வந்தார்கள். ஒடுக்கப் பட்ட மக்களை போராடுவதற்கு அணி திரட்டி னார்கள். அதன் வழியாக அவர்களுக்கு இழைக்கப் படும் அவமானங்களையும் ஒடுக்குமுறைகளையும் அடையாளம் காண முடிந்தது. சாதிய சமூக அமைப் பின் அநீதிகளையும் அந்த அமைப்பு நீடிக்கும் வரை சந்திக்க வேண்டிய சவால்களையும் சமூகத்துக்கு உணர்த்தியவர்கள். இப்படி இந்து சமூக அமைப்பின் ஆணிவேர் வரைச் சென்று அசைத்துக் காட்டிய தலைவர்கள் அவர்கள். இதில் மக்களைக் கவர்ந்து இழுத்த பெரியாரின் பேச்சுகள், முதன்மையான பங் காற்றியது” என்று நீதிபதி சந்துரு குறிப்பிட்டுள்ளார்.


பெரியார் திரைப்படத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.ஷா தலைமையிலான அமர்வு (இதில் நீதிபதி கே.சந்துருவும் உண்டு) அளித்த தீர்ப்பில், பெரியார் பற்றி சுட்டிக்காட்டிய பகுதிகளை நீதிபதி இத் தீர்ப்பில் எடுத்துக் காட்டியுள்ளார்.


“வாழ்நாள் முழுதும் பெரியார் ஈ.வெ.இராமசாமி தீண்டாமையை அகற்றவும், சாதி அமைப்பை ஒழித்துக் கட்டவும் பாடுபட்டார். சமூக நீதிப் போராளியாக நின்று, பெண்களின் உரிமைக்குக் குரல் கொடுத்தார். பகுத்தறிவு, சுயமரியாதை கருத்துகளுக்கும் சமூக புரட்சிக்கும் நாடு முழுதும் இயக்கம் நடத்தினார். ஒரு பகுத்தறிவாளர் என்ற முறையில் மக்களிடம் விஞ்ஞான மனப்பான்மையை வளர்த்தெடுத்தார். மூடநம்பிக்கைகளை கைவிடுமாறு வற்புறுத்தினார். அது வீணானது; ஆபத்தானது என்றார். 1926 இல் சுயமரியாதை இயக்கத்தை நிறுவினார்” என்று வ.கீதா, எ°.வி.ராஜதுரை எழுதிய நூலிலிருந்து பெரியார் திரைப்பட வழக்கில் நீதிமன்றம் சுட்டிக் காட்டியதை நீதிபதி சந்துரு பதிவு செய்துள்ளார்.


2010 இல் அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றத் தின் அமர்வு நீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பையும் எடுத்துக் காட்டியுள்ளார். அனுமதி இல்லாமலே பொது இடத்தில் அம்பேத்கர் சிலை அமைக்கப் பட்டது என்று தொடரப்பட்ட வழக்கில் அம்பேத் கரின் உயர்ந்த நிலையைக் கருதிப் பார்க்கும்போது, அந்த சிலையை இருக்குமிடத்திலிருந்து அகற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று அத் தீர்ப்பில் நீதிமன்றம் கூறியிருந்தது.


சமூகக் கண்ணோட்டத்தில் பல புரட்சிகர தீர்ப்புகளை வழங்கி வரலாறு படைத்து வருகிறார் நீதிபதி சந்துரு. இந்தத் தீர்ப்பும் அந்த வரிசையில் மற்றொரு மணி மகுடமாக திகழுகிறது.


(குறிப்பு: காவேரிப்பாக்கத்தில் திராவிடர் கழகம் நிறுவியுள்ள பெரியார் சிலையை எதிர்த்து தொடரப் பட்ட வழக்கு இது. இதே நீதிபதி கே.சுந்துரு, ‘குடிஅரசு’ வழக்கில் அவர்களுக்கு எதிராக நியாயமான தீர்ப்பை வழங்கிய போது, “நீதிபதி உபதேசம் செய்கிறார்” என்று கடுமையாக தீர்ப்பை விமர்சித்தது, தி.க.வின் ‘விடுதலை’ ஏடு. அதே நீதிபதி தான் இப்போது பெரியாரைப் பற்றிய பெருமைகளோடு அக்கழகம் நிறுவிய பெரியார் சிலை வழக்கில் இத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.)

Monday, September 4, 2023

நைந்த அரசியல் குறித்த 5 ஆட்சேபனைகள் - சுப. உதயகுமாரன்

நைந்த அரசியல் குறித்த ஐந்து ஆட்சேபனைகள்

சுப. உதயகுமாரன்

நாகர்கோவில்,

ஏப்ரல் 16, 2021.

நாம் தமிழர் கட்சியோடான முரண்பாடுகள் இப்போது திடீரெனத் தோன்றியவையல்ல; அவை 2011-2014 காலக்கட்டத்தில் இடிந்தகரை போராட்டப் பந்தலிலேயே முகிழ்த்தவை. அரசியல் சார்பற்ற ஒரு மாபெரும் மக்கள் போராட்டத்தில் நானும், தோழர்களும் இருந்ததால், “ஆபத்தான ஆறு, ஆதரவான நூறு” என்று மட்டுமே தமிழக அரசியல் களத்தைப் பகுத்துக்கொண்டு அணுவியல் பற்றி மட்டுமேப் பேசினோம்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான் அவர்கள் பலமுறை போராட்டக் களத்துக்கு வந்தார், அருமையாகப் பேசினார், ஆதரவு தெரிவித்தார், கூடங்குளம் அணுஉலைப் பிரச்சினைக்கு எதிராக உண்மையாகப் போராடினார்.. இடிந்தகரையில் போராடிய மக்களும், போராட்டக் குழுவினரும் பெரிதும் மெச்சினோம்; நன்றி தெரிவித்தோம்.

திரு. சீமான் அவர்கள் முதன்முறையாக இடிந்தகரைக்கு வந்தபோது (2011?), மேடையில் அருகருகே அமர்ந்து கூடங்குளம் பிரச்சினை பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். பேச்சுவாக்கில் நான் “ஜூனியர் விகடன்” இதழில் வெளிவந்துகொண்டிருந்த “அணு ஆட்டம்” தொடரைக் குறிப்பிட்டேன். “அதை என் தம்பி ஒருவன்தான் எழுதுகிறான்” என்று அவர் சொன்னார். “நான்தான் எழுதிக் கொண்டிருக்கிறேன்” என்று நான் தெரிவித்ததும், ஒருவித தர்மசங்கடமான நிசப்தம் எழுந்தது. இருவருமே அதைப் பற்றி மேலும் பேசாமல் கடந்து சென்றுவிட்டோம். அன்றாட வாழ்வில் அவ்வப்போது பயன்படுத்தப்படும் இதுபோன்ற “வெள்ளைப் பொய்களை” (White Lies – “யாதொன்றும் தீமை இலாத சொலல்”) பெரிதுபடுத்தத் தேவையில்லை.

அதன் பிறகு அப்பகுதி மக்களுக்கும், கடலுக்கும், கடல் வளத்துக்கும், பரந்துபட்டச் சூழலுக்கும் மாபெரும் கெடுதிகளைச் செய்யும் உள்ளூர் தாதுமணல் நிறுவனத்தோடான நெருக்கமான உறவு மற்றும் பரந்துபட்ட தாதுமணல் பிரச்சினை குறித்தெல்லாம் அவர் போராட்ட மேடையில் பேசாமல் தவிர்த்தது மக்களால் விவாதிக்கப்பட்டது. நண்பர் நான் பிறந்ததாகச் சொல்லப்படும் குறிப்பிட்ட சாதியைச் சார்ந்தவர் என்பதால்தான், நான் அவரை அடிக்கடி ஊருக்கு அழைத்துவந்து, திட்டமிட்டு வளர்க்கிறேன் என்றும் ஒருசிலர் என்மீது ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

ஒரு முறை போராட்டப் பந்தலில் வைத்து, நாம் தமிழர் கட்சியின் போக்குகளை விமரிசித்து திரு. ஆழி செந்தில்நாதன் அவர்கள் வெளியிட்டிருந்தப் புத்தகத்தைக் குறிப்பிட்ட நண்பர், “அதில் நீங்களும் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறீர்களே” என்று என்னிடம் கேட்டார். நான் “பச்சைத் தமிழ்த் தேசியம்” என்கிற சூழலியல் சார்ந்த தமிழ்த் தேசியக் கருத்தியலை முன்வைத்து ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன்” என்று தெரிவித்தேன்.

தமிழ்த் தேசியச் சிந்தனைகளை இளைஞர்கள் மத்தியில் விதைக்கிறாரே, திரைத்துறை பின்புலம் கொண்டிருந்தாலும், சில நடிகர்கள் போலல்லாமல் மக்களைச் சந்திக்கிறாரே, மக்களோடுக் களமாடுகிறாரே என்றெல்லாம் எண்ணிக்கொண்டு, நாளடைவில் முதிர்ச்சியும், பக்குவமும் பெற்றுவிடுவார் என்றே நான் எதிர்பார்த்தேன்.

ஆனால் நாம் தமிழர் கட்சி திருச்சி மாநகரில் நடத்திய (ஆண்டு நினைவில்லை!) ஒரு மாநாட்டில் கொலைகார மாபாதகன் ஹிட்லர் படத்தை வைத்திருந்ததையும், அந்த மாநாட்டு உரையில் நண்பர் அந்த கொலைகாரப் பாவியின் கருத்தை மேற்கோள் காட்டிப் பேசியதையும் என்னால் சீரணிக்கவே முடியவில்லை.

தனது மேடைப் பேச்சுக்களிலும், பேட்டிகளிலும், எழுத்துக்களிலும் மோசமான வார்த்தைகளை, வன்முறைச் சிந்தனைகளை, சர்ச்சைக்குரியக் கருத்துக்களை திரு. சீமான் அவர்கள் வெளியிடும்போதும், ஒரு தலைவர் போலல்லாது தரம் தாழ்ந்து பேசும்போதும், நாம் தமிழர் கட்சியின் மூத்தத் தலைவர்கள் பலரிடம் (பெயர்களைக் குறிப்பிட விரும்பவில்லை) “கொஞ்சம் இடித்துரையுங்கள்” என்று பலமுறை எடுத்துரைத்திருக்கிறேன்.

“தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி பதினாறடி பாயும்” என்பது போல, தங்களின் சமூக “ஏற்பாடுகளுக்கெதிரான” (anti-establishment) உணர்வுகளை, நிலைப்பாடுகளை அதே கோபத்தோடும், ஆத்திரத்தோடும் தலைவர் எடுத்துரைக்கிறாரே என்று உளமகிழ்ந்து ஆர்ப்பரிக்கிறார்கள் அந்தக் கட்சியின் இளம் தொண்டர்கள். கைத்தட்டி, விசிலடித்து, அப்படியேத் தொடருங்கள் என்று அவர்கள் தலைவரை ஊக்குவிக்கிறார்கள். உச்சிக் குளிர்ந்து உச்சாணிக்கொம்பில் இருக்கும் தலைவரும், தனது இளம் ‘பார்வையாளர்களை’ மேலும் மகிழ்விக்கும்பொருட்டு, இன்னும் அடித்து ஆடுகிறார் (playing to the gallery).

இது அவர்கள் கட்சியின் உள்விவகாரம் என்று விட்டுவிட முடியாது. காரணம், இந்நடவடிக்கைகள் பொதுவெளியில் நடக்கின்றன. இவை தமிழ்க் குடிமைச் சமூகத்தின் மீது பல்வேறு தாக்கங்களை எழுப்புகின்றன. ஐந்து முக்கியமான ஆட்சேபனைகளை மட்டும் நான் இங்கே விவாதிக்கிறேன்:

[1] தடம்புரளும் தமிழ்த் தேசியம்

[2] வளர்த்தெடுக்கப்படும் சர்வாதிகாரம்

[3] விதைக்கப்படும் வன்முறை

[4] பாஜக--ஆதரவு வேலைத்திட்டம்

[5] மாற்று எனும் பெயரில் ஏ-மாற்று

இந்த ஆட்சேபனைகளை விருப்பு வெறுப்பின்றி, வேறு ஏதும் உள்நோக்கங்கள் இல்லாமல், யாரிடமிருந்தும் எந்தவிதமானப் பிரதிபலனையும் எதிர்பாராமல், பொதுவெளியில் முன்வைக்கிறேன். ஓர் “இடிப்பாராக”த்தான் இவற்றை முன்வைக்கிறேனே தவிர, கெடுமதி கொண்ட “கெடுப்பாராக” அல்ல.

இந்த நல்லெண்ண விமரிசனங்களை நேர்மறையாக எதிர்கொண்டு, நிலைமையைச் சீரமைத்தால், அது தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கலாம். மாறாக, என்னைத் தனிப்பட்ட முறையில் திட்டித்தீர்த்து, வன்மத்தைக் கொட்டினால், யாரும் எந்தவிதமான பயனும் பெறப் போவதில்லை.

[1] தடம்புரளும் தமிழ்த் தேசியம்

தமிழக அரசியல் ஒரு திருப்பு முனையில் நின்றுகொண்டிருக்கிறது. பெரிய திராவிடக் கட்சிகள் இரண்டும் திறமைமிக்கப் பேராளுமைகளை இழந்து பரிதவித்துக் கொண்டிருக்கின்றன. தற்போதையத் தலைவர்களின் ஆற்றலும், ஆளுமையும்கூட அடுத்தத் தலைமுறை தலைவர்களுக்கு இருக்குமா என்கிற பெருத்த சந்தேகம் நிலவுகிறது. இது தமிழர் அறம் சார்ந்த தமிழ்த் தேசிய அரசியலை வளர்த்தெடுக்க அருமையானத் தருணம். 

கடந்த ஐம்பதாண்டு காலமாக தமிழக அரசியலின் அடிப்படை அம்சங்களாக இருந்துவரும் தனிமனித வழிபாடு, வெற்றுப்பேச்சு, சினிமாத்தனம், லஞ்ச ஊழல், வாரிசு அரசியல் போன்றவற்றை விலக்கி, ஒரு சித்தாந்தத் தெளிவையும், சிறப்பான அணுகுமுறையையும், மக்கள் சேவகர்களின் நன்னடத்தையையும் அன்பார்ந்த, அறிவார்ந்த, அறமார்ந்தத் தமிழர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஏராளமான இளைஞர்கள் அரசியல் நீரோட்டத்திலிருந்து விலகி நிற்பது ஆபத்தானது என்றுணர்ந்து, இனவிடுதலை அரசியலில் தைரியமாகக் குதிக்கும்போது, அந்தப் பேராற்றலை ‘நாம் தமிழர்’ வீணடிப்பது பெருங்குற்றமாகவேப் படுகிறது.

தமிழக அரசியலையும், தமிழீழ அரசியலையும் போட்டுக் குழப்பிக்கொண்டிருக்கும் நாம் தமிழர் கட்சி, தமிழ் நாட்டுத் தமிழர்களுக்கானக் கட்சியா, அல்லது ஈழத் தமிழர்களுக்கானக் கட்சியா என்கிற குழப்பம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. 

தனிநாடு, தன்னாட்சி பற்றியெல்லாம் பேசமாட்டேன்; தமிழ் நாட்டின் முதல்வர் பதவியில் அமர்ந்ததும், ஒரே கையெழுத்தில் அனைத்துப் பிரச்சினைகளையும் அப்படியேத் தீர்த்துவிடுவேன் என்றெல்லாம் ஒருபுறம் சொன்னாலும், இன்னொருபுறம் “நாம் தமிழர் ஆட்சி செயற்பாட்டு வரைவு” இப்படி குறிப்பிடுகிறது:

“நாம் தமிழர் அரசுக்கு ...மிக உயரிய உயிரான கொள்கை தமிழ்த்தேசிய இன மக்களுக்கென இந்தப் பூமிப் பந்தில் ஒரு நாடு அடைவதில் உறுதியாகவும், தெளிவாகவும் இருக்கிறோம். இதில் ...தனித் தமிழீழச் சோசியலிசக் குடியரசை அடைவதே இறுதி இலக்காக வைத்திருக்கும்” (செயற்பாட்டு வரைவு, பக்.246).

மேற்படி அறிக்கையில் “தமிழர் இன வரலாறு” பற்றிப் பேசும்போது, வரலாறு, எதிர்காலம் மற்றும் உயிர்த்தொடர்பு பற்றி ஹிட்லர் மேற்கோள் காட்டப்படுகிறார் (செயற்பாட்டு வரைவு, பக்.287). ஹிட்லரையொத்த ராஜபக்சேக்களால் ஓர் இனப்படுகொலையைச் சந்தித்துக்கிடக்கும் தமிழ்ச் சமூகத்தோடு ஹிட்லரை எப்படி தொடர்புபடுத்திப் பேச முடியும்? ஒருவேளை, ஆஸ்திரியாவில் பிறந்த ஹிட்லர் பின்னாளில் ஜெர்மனி நாட்டின் குடிமகனாகி, அந்நாட்டு ஆட்சி அதிகாரத்தை ஏற்றெடுத்து, அதன்பிறகு ஆஸ்திரியாவை ஜெர்மனியோடு பலவந்தமாக இணைத்துக்கொண்டது போல, ஏதாவது வேலைத்திட்டம் வைத்திருக்கிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

முன்னுக்குப்பின் முரணாகவும், வாய்க்கு வந்தபடியும், மேடைக்கேற்றபடியும் முழங்கும் ஒரு ஹிட்லர் பக்தரின் தனிமனித அதிகாரவெறியைத் தமிழ்த் தேசியம் என்று கொண்டாடுவது சரியாகுமா? கடந்த 2009-ஆம் ஆண்டுக்குப் பிறகு வீறுகொண்டெழுந்த தமிழ்த் தேசிய அரசியல் இன்றைக்கு மலினமாகி, கேலிப்பொருளாகி, நகைப்புக்குரியதாக மாறியிருப்பதை கவனிக்கிறோமா?

[2] வளர்த்தெடுக்கப்படும் சர்வாதிகாரம்

“எதையும் அறிவுப்பூர்வமாகச் சிந்தித்து உணர்வுப்பூர்வமாகச் செயலாற்று!

எதையும் ஜனநாயகமாக முடிவெடுத்து சர்வாதிகாரமாகச் செயலாற்று!” என்று அறிவுரைக்கும் செயற்பாட்டு வரைவு (பக்.285), “தன்னலமற்ற அன்பான சர்வாதிகார ஆட்சிமுறை” ஒன்றே தங்களின் விருப்ப ஆட்சிமுறை என்று ஓங்கி உரைக்கிறது. 

நோயுற்றுப் பரிதவிக்கும் பச்சைக் குழந்தைக்கு வலிக்கும் ஊசியால் மருந்தேற்றுவது போல, படிக்கத் திணறும் குழந்தைக்கு பாடத்தை மனதில் பதியவைக்க ஆசிரியர் பலமுறை எழுதச்செய்வது போல, பனை மரத்தில் கத்தியை வைத்து மட்டையைக் கழிப்பது போல, இந்த “தன்னலமற்ற அன்பான சர்வாதிகாரம்” வேலை செய்யுமாம். ஒரு சர்வாதிகாரிக்கு தன்னுடைய மக்கள் எந்த நிலையிலும் அறிவார்ந்தவர்களாக, தங்களின் உரிமைகளும், தேவைகளும், கடமைகளும் உணர்ந்தவர்களாகத் தோன்றவே மாட்டார்கள். பரிதவிக்கும் குழந்தைகளாக, வெறும் (பனை) மரங்களாகத்தான் தோற்றமளிப்பார்கள்.

கடந்த 2021 மார்ச் மாதம், தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசும்போது, திரு. சீமான் இப்படிப் பேசினார்:

“குப்பையை அதற்குரிய இடங்களில் கொட்ட வேண்டும். நீங்கள் மாடியிலிருந்து கொட்டினால் அங்கு சிசிடிவி கேமரா வைத்து கண்காணிக்கப்பட்டு உங்கள் நீர் இணைப்பு, மின்சார இணைப்பு ஆகியவை நிறுத்தப்படும். நீங்கள் குடியுரிமையை இழந்துவிட்டீர்கள் என்று கூறப்படும். இறங்கி வந்துதான் குப்பைகளைக் கொட்ட முடியும். இப்படி இல்லை என்றால் செதுக்க முடியாது. தன்னலமற்ற, அன்பான, சர்வாதிகார ஆட்சி முறையால் மட்டுமே ஒரு தேசத்தை வளர்த்தெடுக்க முடியும்.”

தேசிய இன விடுதலைப் போராட்டம் ஒன்றை நடத்துகிற ஒரு நல்ல தலைவர், கட்டுண்டுக்கிடக்கும் மக்களை சமூக-பொருளாதார-அரசியல் அவலத்திலிருந்து மீட்டெடுத்து, அதே கையோடு அவர்களை தன்னுடையத் தனிப்பட்ட அடிமைகளாக அடக்கிவைக்க மாட்டார். ஆண்டாண்டு காலமாய் அவல அரசியலால் பாதிக்கப்பட்டுக் கிடக்கும் மக்களை தனித்த அடையாளம், தகைமைசால் வாழ்க்கை, தலைநிமிர்ந்த நல்வாழ்வு எனும் இலக்கு நோக்கி அழைத்துச்செல்ல வேண்டுமேயன்றி, அதிகாரவெறி பிடித்த ஒருவரின் சர்வாதிகார ஆட்சியை நோக்கி அல்ல. எரியும் நெருப்பிலிருந்து மீண்டு, கொதிக்கும் எண்ணெய்ச் சட்டிக்குள் விழுவதால் தமிழர்களுக்கு என்ன பயன்?

சகலகலாவல்லவரான, அனைத்தும் அறிந்த, ஓர் அற்புதத் தலைவர் சினிமா ஹீரோ பாணியில் தன்னந்தனியனாய்க் களமாடி, ஒரே கையெழுத்தில் நம் பிரச்சினைகள் அனைத்தையும் தீர்த்து, நம்மையெல்லாம் சுபிட்சத்துக்கு இட்டுச்செல்வார்; நாம் செய்யவேண்டியதெல்லாம் வெறுமனே கைதட்டுவதும், விசிலடிப்பதும் மட்டும்தான் என்பது 21-ஆம் நூற்றாண்டில் ஏற்கத்தக்க அரசியல் அல்ல. உலகு தழுவிய பனிரெண்டு கோடித் தமிழர்களின் அரசியல், நல்வாழ்வு, வருங்காலம் அனைத்தையும் ஒரே ஒரு தனிநபரின் கைகளில் ஒப்படைக்கக் கூடாது, முடியாது.

ஐம்பது, அறுபது பேர் பயணம் செய்யும் ஒரு பேருந்துக்கு ஓர் ஓட்டுனர்தான் இருக்க முடியும் என்பது உண்மைதான். ஆனால் பயணிகள் போக விரும்பும் ஊர்கள், பேருந்து செல்லவிருக்கும் பாதை, பேருந்து நிற்கப்போகும் நிறுத்தங்கள் என அனைத்து விடயங்களையும் அவர் ஒருவரே --ஓட்டுனர் மட்டுமே-- தீர்மானிப்பார் என்றால், பேருந்தில் இருப்பவர்கள் பயணிகள் அல்ல, பணயக்கைதிகள்! எட்டுக் கோடி தமிழகத் தமிழர்களைப் பணயக்கைதிகளாக நடத்துவதன் பெயர் அரசியல் அல்ல, அராஜகம்!

கம்போடியா நாட்டில் ‘கமேர் ரூஜ்’ (Khmer Rouge) எனும் “புரட்சிகரக்” குழு போல் பாட் (Pol Pot) என்பவர் தலைமையில் நடத்திய அக்கிரமங்களிலிருந்து படிக்க வேண்டியப் பாடங்கள் ஏராளம் உள்ளன. ஒரு தனிநபர் சர்வாதிகாரியாக உருப்பெறும்போது, சமூக யதார்த்தங்களை விட்டு விலகி, தான்தோன்றித்தனமாக, பெரும் செருக்குடன், சுகபோக வாழ்வில் ஈடுபட்டு, தன்னையே ஏமாற்றிக் கொள்வார். மக்களின் நிலையோ ‘சர்வாதிகார அரசனை நம்பி, சனநாயகப் புருசனை கைவிட்டக்’ கதையாகவேப் போய் முடியும். அரசியல் சமூகத்துக்கும், குடிமைச் சமூகத்துக்கும் இடையேயான உறவை அரசியல்படுத்தல், விழிப்புணர்வு, பங்கேற்பு சனநாயகம் மூலம் மாற்றியமைப்பதுதான் சாலச்சிறந்தது.

[3] விதைக்கப்படும் வன்முறை

“எமது தமிழ்மொழியைத் தவறாக உச்சரிப்பதும், பிறமொழி கலந்து பேசுவதும்தான் மிகப் பெரிய வன்முறையாக நாம் தமிழர் அரசு கருதுகிறது” என்று அறிவிக்கும் செயற்பாட்டு வரைவு (பக்.302), ‘பச்சை மட்டைச் சிகிச்சை,’ “தோலை உரிப்பது,” “தொலைத்து விடுவது” பற்றியெல்லாம் எதுவும் பேசவில்லை. ஆனால் அதைப் பற்றியெல்லாம் கட்சித் தலைவர் மேடைதோறும் விலாவாரியாகப் பேசுகிறார். கடந்த 2020 “மாவீரர் நாள்” உரையில்கூட பச்சை மட்டையும், அன்பான வன்முறை மிரட்டல்களும் பல முறை குறிப்பிடப்பட்டன.

செயற்பாட்டு வரைவு முன்வைக்கும் பயங்கரமூட்டும் சமூக வன்முறையைப் பாருங்கள்:

“...50,000 புதிய காவலர்கள் நியமிக்கப்படுவார்கள். இவர்களுக்கு உடல் தகுதி, சீருடை ஏதும் இருக்காது. ...புதிய காவலர்களுக்குச் சர்வ தேசத் தரத்தில் உளவுப் பயிற்சி அளிக்கப்படும். இந்த ஊழியர்கள் மக்களோடு மக்களாக ஊடுருவியிருப்பார்கள். ...இந்த உளவாளிகள் பற்றிய தகவல் அனைத்தும் கமுக்கமாகவே வைக்கப்படும்” (பக்.135).

உடனிருக்கும் உறவினர்கள், நண்பர்கள், பணியாளர்கள், அண்டை அயலார்களில் யார் யார் உளவாளிகள், ஒற்றர்கள், காட்டிக்கொடுக்கிறவர்கள், காலை வாருகிறவர்கள் என்கிற நிரந்தர சந்தேகத்தோடு, அச்சத்தோடு, அவநம்பிக்கையோடு வாழும் மக்களை, பீதியிலிருக்கும் பரந்துபட்டச் சமூகத்தை, “கண்காணிப்பு அரசு” (Surveillance State) நடத்துகிற ஒரு சர்வாதிகாரி மிகவும் விரும்புவார். அம்மாதிரியான அமைப்பை அவரது கட்சித் தோழர்கள் அவரைவிட அதிகம் விரும்புவார்கள். ஆனால் அந்த அமைப்பு “பேச்சுரிமை, வழிபாட்டுரிமை, தேவைகளிலிருந்து விடுதலை, பயத்திலிருந்து விடுதலை” (Freedom of Speech, Freedom of Worship, Freedom from Want, Freedom from Fear)  என்று வாழ விரும்பும் சனநாயகச் சமூகக் குடிமக்களுக்கும், அவர்களின் மாண்புநிறை வாழ்க்கைக்கும் எப்போதும் எந்தவிதத்திலும் ஏற்றதாக இருக்காது.

விடுதலைப் புலிகள் இயக்கம் ஏற்றெடுக்காத, தேசியத் தலைவர் பிரபாகரன் “அது ஒரு துன்பியல் சம்பவம்” என்று மட்டுமே விவரித்த, இராஜீவ் காந்தியின் படுகொலையைப் பற்றி, நாம் தமிழர் கட்சித் தலைவர் “என் இனத்தின் எதிரியான ராஜீவ் காந்தியைத் தமிழர் தாய்நிலத்தில் கொன்றுபுதைத்தோம்” என்று 2019-ஆம் ஆண்டு விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பேசினார். தவறேதும் செய்யாத பனிரெண்டு கோடித் தமிழர்கள் மீது ஒரு பொல்லாதக் கொலைப்பழியை எந்தவிதமானத் தேவையுமின்றி, உண்மையுமின்றி வலிந்து ஏற்றிய வன்முறையும் கவனிக்கப்பட வேண்டியதாக இருக்கிறது.

தாங்கள் வீராதி வீரர்கள், கட்டற்ற வன்முறையால்தான் விடுதைலையை வென்றெடுத்தோம் என்று சில சனாதனத் திரிபுவாதிகள் இந்திய வரலாற்றை மாற்றியெழுத முற்படுவதுபோல, தமிழர்களாகிய நாம் வன்முறைவாதிகள், பழிவாங்குகிறவர்கள் என்கிற தவறான கருத்து தமிழர் நெஞ்சங்களிலும், பிறரின் மனங்களிலும் திட்டமிட்டுத் திணிக்கப்படுகிறதோ என்கிற சந்தேகம் எழுகிறது.

‘நாம் தமிழர்’ பேச்சிலும், மூச்சிலும் மண்டிக்கிடக்கும் வன்மமும், வன்முறையும் கட்சியின் கொள்கைகளாக, செயல்திட்டங்களாக வெளிவருவது, வன்முறையற்ற அறவழிப் பாதையிலேயேப் பயணிக்கும் தமிழக அரசியலுக்கு, (இடையில் சிங்களப் பேரினவாதத்தால் வலிந்துத் திணிக்கப்பட்ட ஆயுதப்போராட்டம் தவிர்த்து) அறவழிப் போராட்டங்களை மையப்படுத்தியே நடத்தப்படுகிற ஈழ அரசியலுக்கு, ‘அன்பு’ எனும் தத்துவத்தை அவனிக்கு வழங்கி, அதன்படியே உலகெங்கும் ஒழுகிக்கொண்டிருக்கும் தமிழர்களின் நலனுக்கு எந்தவிதத்திலும் உகந்ததல்ல. நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் பலரும் இதே வன்முறை மொழியை, அணுகுமுறையை, விழுமியத்தை ஏற்றொழுகுவது ஒரு பேராபத்தாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறது.

[4] பாஜக--ஆதரவு வேலைத்திட்டம்

ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. போன்ற இயக்கங்களின், கட்சிகளின் குருக்கள், மூர்த்திகள், பொன்ராக்கள், ‘சீக்ரெட்’ சீக்கியர்கள், சின்னம்மாக்கள், திரைமறைவு சிங்களவர்கள் போன்ற இடைத்தரகர்கள் இடையீடு செய்வதும், வழிநடத்துவதும் ‘நாம் தமிழர்’ கட்சியின் வேலைத்திட்டங்களில் தெளிவாகப் பரிணமிக்கிறது.

எடுத்துக்காட்டாக, ‘செயற்பாட்டு வரைவு’ சொல்லும் ஒரு மாபெரும் அறிவியல் பேருண்மையைப் பாருங்கள்:

“அரக்கு என்பது நாட்டுமாட்டுச் சிறுநீரைக் கொதிக்க வைத்து, நீராவியாக்கிக் குளிரூட்டிப் பெறப்படும் அருமருந்தாகும். புற்றுநோய் உள்ளிட்ட நானூறுக்கும் மேற்பட்ட பல நோய்களைக் குணமாக்கும். மேலும் இதிலிருந்து பற்பசை, சாம்பு (சீய்நெய்), சோப்பு (வழலை), நறுமணப் பொருட்கள் உருவாக்கப்படும். இவற்றில் தனிக்கவனம் செலுத்தி ஏற்றுமதி செய்யப்படும்” (பக்.55).

பங்கேற்பு சனநாயகத்தில், கருத்துப்பரிமாற்றத்தில், பொது விவாதத்தில், கூடி முடிவெடுத்தலில்  ஆழமான நம்பிக்கையும், அபாரமானப் பிடிப்பும் கொண்டவர்களைப் போல, ‘செயற்பாட்டு வரைவு’ இப்படி வாதிடுகிறது:

“இந்திய அரசியலமைப்புச் சட்டம் எழுதப்படுகிற காலத்தில் இந்நிலத்தில் வாழ்ந்த 30 கோடிமக்களின் கருத்துகளையும், இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் கருத்துகளையும், பல்வேறு மொழிவழித் தேசிய இனங்களின் கருத்துகளையும் கவனத்தில் எடுத்துக் கொண்டு சட்டம் தயாரிக்கப்படவில்லை.”

“எனவே தற்போது இருக்கிற தேசிய இனங்களின் உரிமைகளைக் கருத்தில் கொண்டு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைத் தற்கால அரசியல், சமூக, சூழல்களுக்கு உலக ஒழுங்கிற்கு ஏற்றார் போல மாற்றி அமைக்க வேண்டியது தேவையாய் இருக்கிறது” (பக்.306-7).

அதே போலவே, நாம் தமிழர் கட்சியின் செயற்பாட்டு வரைவு, தற்போதைய நாடாளுமன்ற ஆட்சி முறையை மாற்றியமைத்து அதிபர் ஆட்சிமுறையைக் கொண்டுவருவோம் என்று நேரடியாகச் சொல்லாமல், “மக்களே தங்கள் நாட்டின் குடியரசுத் தலைவரைத் தேர்தல் மூலம் நேரடியாகத் தேர்ந்தெடுக்கும் வண்ணம் அரசியலமைப்பு மாற்றம் செய்ய நாம் தமிழர் அரசு பாடுபடும்” என்று அறிவிக்கிறது (பக்.305). மாட்டு மூத்திர வியாபாரம், அரசியலமைப்புச் சட்ட மாற்றம், குடியரசுத்தலைவர் ஆட்சி போன்றவற்றை வேறு யார், யார் விரும்புகிறார்கள், அமல்படுத்தத் துடிக்கிறார்கள் என்பதை நாமனைவரும் நன்கறிவோம்.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்டு, அதனடிப்படையில் தமிழ் நாட்டின் ஆட்சி அதிகாரத்தை பெறத் துடிக்கும் ஒரு கட்சியும், அதன் தலைவரும், அந்த ஆவணத்துக்கு, அரசியல் ஒப்பந்தத்துக்கு, உண்மையாக இருக்க வேண்டும். அல்லது அதனை வெளிப்படையாக நிராகரிக்க வேண்டும். மாறாக, அங்கே தலையையும், இங்கே வாலையும் காட்டிக்கொண்டு, தமிழ் இளைஞர்களை பகடைக் காய்களாக்கி, அவர்கள் மனங்களில் குழப்பம் விளைவிப்பது ஏற்றுக்கொள்ளத்தக்க அணுகுமுறையல்ல.

[5] மாற்று எனும் பெயரில் ஏ-மாற்று

மீட்பு அரசியலை முன்வைத்து, விடுதலை மொழியைப் பேசி, புதிய துவக்கம் ஒன்றைச் சுட்டிக்காட்டியவாறே, தொன்மையும், தொலையாச் சிறப்புக்களும் கொண்ட ஒரு மாபெரும் தேசிய இனத்தை அடிமைப்படுத்துவது எந்தவிதத்திலும் மாற்று அல்ல. அதன் பெயர் ஏமாற்று. புரட்சிகர அரசியல் பேசுவதாக சொல்லிக்கொண்டே, பிற்போக்குத்தனங்களை வளர்த்தெடுப்பது கூடாது.

பல்வேறு குறைபாடுகளும், குளறுபடிகளும், கோளாறுகளும் இருந்தாலும், 135 கோடி மக்கள் சனநாயகத்தை அடிப்படை அரசியல் கோட்பாடாக ஏற்றுக்கொண்டு, அது வழங்கும் உரிமைகளைப் போற்றி, அதற்கான கடமைகளை விரும்பி ஏற்று, ஒரு குடியரசாக நாட்டை நடத்திக் கொண்டிருக்கிறோம். உலகிலேயே மிகப் பெரிய சனநாயக நாடு என்று அறியப்படும் நமது நாட்டை பார்ப்பனீய பாசிஸ்டுகளிடமிருந்து பாதுகாப்பதற்காக நாமெல்லாம் போராடிக் கொண்டிருக்கும் போது, “சர்வாதிகாரமே சிறந்தது, அதுதான் வளர்ச்சிக்கு உகந்தது” என்று ஒரு கட்சித் தலைவர் பேசுகிறார் என்றால், அவர் யாருக்காக அரசியல் செய்கிறார் என்கிற கேள்வி எழுகிறது.

சர்வாதிகாரம்தான் தமிழ் நாட்டுக்கான, தமிழருக்கான மாற்று அரசியல் என்று குறுக்குசால் ஓட்டுவது, தமிழர்களை பிற தேசிய இனங்களிடமிருந்து அந்நியப்படுத்தி, தனிமைப்படுத்தி, பலவீனமாக்கும் சூழ்ச்சியோ என்று எண்ணத் தோன்றுகிறது.

தேசபக்தியின் மொத்தக் குத்தகைதாரர் களான பார்ப்பனீய பாசிஸ்டுகள் தங்களைக் கேள்வி கேட்கிறவர்களை தேசத்துரோகி, அந்நியநாட்டுக் கைக்கூலி, நகர்ப்புற நக்சல், மாவோயிஸ்ட் என்றெல்லாம் அவதூறு பரப்புவதுபோல, தமிழ்த் தேசியத்தின் அகில உலக ஸ்டாக்கிஸ்டுகளாக தங்களை கருதிக்கொள்ளும் நாம் தமிழர் கட்சியினர், தங்களை கேள்வி கேட்கிறவர்களை, விமரிசிக்கிறவர்களை திமுக ஆதரவாளர், திராவிடச் சொம்பு, இருநூறு ரூபாய் கைக்கூலி, இனத்துரோகி என்றெல்லாம் பட்டம் சூட்டி வசைபாடுகின்றனர்.

பொறுப்பற்றப் பேச்சு, பொல்லா வன்முறை, உண்மையற்றக் கதையாடல்கள் போன்ற  அம்சங்களோடு ஒரு மாற்று அரசியலை முன்னெடுக்க இயலாது. இந்த மாதிரியான குழப்ப அரசியல் தமிழ் இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையைத் தொலைப்பதற்குக் காரணமாக அமைந்துவிடக் கூடாது.

தமிழ் இளைஞர்கள் தரமானக் கல்வியின்றி, தன்னம்பிக்கையின்றி, தகுதியான வேலையின்றி, போதிய வருமானமின்றி, ஒளிமயமான எதிர்காலமின்றி கையறு நிலையில் உழன்று கொண்டிருக்கிறார்கள். இப்போது அவர்களுக்கு உடனடியாகத் தேவைப்படுவது ஈழப் பயணக்கதையோ, இங்கிலாந்துப் பயணக்கதையோ அல்ல. மாறாக, தேசிய இன விடுதலைக் கோட்பாடுகளும், தெளிவானச் செயல்திட்டங்களும், அறிவார்ந்த வழிகாட்டலும்தான்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்,

அன்பிற்குண்டோ அடைக்குந்தாழ்,

யாதும் ஊரே, யாவரும் கேளிர்,

தீதும் நன்றும் பிறர்தர வாரா,

தாழக் கிடப்பாரை தற்காப்பதே தருமம்,

நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே,

என்பன போன்ற அருமையான மாந்தநேயக் கருத்துக்கள் மலர்ந்து, மணம்வீசும் தமிழ் மண்ணில், தவறான அரசியலை விதைக்க விடக்கூடாது.

தற்போது நடக்கும் கருத்துப்பரிமாற்றத்தை ஒரு வாய்ப்பாக மாற்றி, அடுத்த தலைமுறைக் கான அரசியல் விழுமியங்களை, அணுகு முறைகளை, செயல்பாடுகளை விரிவாக விவாதித்து, உரியவற்றை, உயரியவற்றைத் தேர்ந்தெடுத்தால், தமிழர்கள் நாம் வெல்வோம்.


சனநாயகமும், சகவாழ்வும், சமாதானமும் தமிழரிடம் வளரட்டும்!

சாதியமும், பாசிசமும், வன்முறையும் தமிழ் மண்ணிலிருந்து விலகட்டும்!

தகுதியான தமிழ்த் தேசியத்தால் தன்மானத் தமிழர் வாழ்வு ஓங்கட்டும்!

[] [] []


தரவுகள்:

[1] நாம் தமிழர் ஆட்சி செயற்பாட்டு வரைவு 2016, சென்னை: நாம் தமிழர் கட்சி, 2016.

[2] ஆழி செந்தில்நாதன், தொகுப்பாசிரியர், எங்கேப் போகிறது நாம் தமிழர் கட்சி? சென்னை: ஆழி பதிப்பகம், 2012.

[3] பத்ரி சேஷாத்ரி, “அன்பான சர்வாதிகார அறிக்கை,” இந்து தமிழ் திசை, ஏப்ரல் 18, 2016.

[4] த. ராஜன், “சிந்திக்கணும் சீமான்,” இந்து தமிழ் திசை, அக்டோபர் 22, 2019.

[5] “சர்வாதிகார ஆட்சி முறையால் மட்டுமே ஒரு தேசத்தை வளர்த்தெடுக்க முடியும்: சீமான் பேச்சு,” இந்து தமிழ் திசை, மார்ச் 22, 2021.

[6] Philip Short, Pol Pot: Anatomy of a Nightmare. New York: Henry Holt & Co., 2004.

Tuesday, August 29, 2023

அம்மை ஒரு நோய்

அம்மை என்பது ஒரு நோய் என்று அறியாமல், மாரியம்மன் என்னும் கடவுளின் கடுங்கோபம் என்று கருதிய காலம் ஒன்றுண்டு. அம்மை நோய் கண்டால் மாரியம்மன் கோவிலில் கூழ் காய்ச்சி ஊற்று வார்கள் - நோயாளியின் தலை மாட்டில் உட்கார்ந்து மாரியம் மன் தாலாட்டுப் பாடல்களைப் பாடுவார்கள்.

இந்த நிலையில் வெள்ளை யர்கள் ஆட்சியின்போது அம்மை நோய்க்குத் தடுப்பு நடவடிக்கைகள் என்றால், மூட நம்பிக்கையில் முட்டையிட்டுப் பொரித்த மூளை உள்ளவர்கள் ஏற்கமாட்டார்களே! என்ன செய்தனர்!

தடுப்பூசி நடவடிக்கையை அம்மன் பிரசாதம் என்றே கூறுவார்களாம்.

1937 ஆம் ஆண்டு காரைக் குடி ஊராட்சி உறுப்பினர் (கவுன்சிலர்) சார்பில் தெய்வத் தன்மை தெய்வீக முறை என்ற பெயரில் அம்மை நோய் போட்டுக் கொள்வதற்கான கையேடுகள் வெளியிடப்பட் டன. அதில் பெரியம்மை எனும் தொற்றுநோயை அழிக்க அம்மன் தந்த வரப்பிரசாதமே அம்மைப் பால் என்ற வகை யில் வரிகள் இடம்பெற்றிருந்தன.

இது மட்டுமா? நாடகங் களில்கூட அம்மைக்கான தடுப் பூசி அம்மன் பிரசாதமாகவே காட்டப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 1933 ஆம் ஆண்டு திருப்பத்தூரில் கிருஷ்ணசுவாமி என்ற சுகாதார துறை ஆய்வாளர் எழுதிய நாடகத்தின்மூலம் விழிப் புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்தத் தகவல்களை சென்னை நாளை முன்னிட்டு தரமணி ராஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் அறிவி யலுக்கும் மதத்துக்கும் தொடு புள்ளியாய் அம்மன் எனும் தலைப்பில் அமெரிக்க உதவிப் பேராசிரியை பெருந்தேவி குறிப்பிட்டுள்ளார். உண்மையில் அம்மை என்பதுதான் என்ன?

பெரியம்மை நோய்க்கு எப்படியாவது தீர்வு காண வேண்டும் என்ற வேட்கை காரணமாக செய்த எட்வின் ஜென்னர் இருபது ஆண்டுகள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்தார். தனது ஆய்வை ப்யூஸ்டெரின் மருத்துவ முறை மூலம் தீர்வு உண்டு என்று உறுதியாக நம்பினார் ஜென்னர்.

இதைச் சோதித்துப் பார்க்க எண்ணிய ஜென்னர் 1796 ஆம் ஆண்டு மே 14 ஆம் நாள் தனது தோட்டக்காரரின் மகனான ஜேம்ஸ் பிப்ஸ் என்ற எட்டு வயது சிறுவனுக்கு அம்மைக்கான தடுப்பூசி போட எத்தனித்தார் ஜென்னர். சாரான நில்மெசு என்ற பண்ணைப் பெண்ணின் கையிலிருந்த கவுபாக்சு கொப்புளத்திலிருந்து எடுத்த பாலை ஊசி மூலம் ஜேம்ஸ் பிப்ஸின் உடலுக்குள் செலுத்தினார். எதிர்பார்த்தது போலவே அச்சிறுவனுக்கு கவுபாக்சு நோய் ஏற்பட்டது. ஆனால் விரைவில் குண மடைந்தான்.

சில வாரங்கள் கழித்து பெரியம்மை கிருமியான அம்மைப் பாலை ஊசி மூலம் அதே சிறுவனுக்கு செலுத்தி னார். மற்ற மருத்துவர்கள் அவரை எள்ளி நகையாடினர். சிறுவனின் உயிரோடு விளை யாடுகிறான் என்று வசைபாடினர். ஆனால் ஜென்னர் சற்றும் மனம் தளராமல் அந்தத் தடுப்பூசியை சிறுவனுக்குக் குத்தினார். கிராமவாசிகள் எண்ணியதைப் போலவே, ஜென்னர் ஆராய்ச்சி செய்து உறுதிப்படுத்தியது போலவே அந்த சிறுவனுக்கு பெரியம்மை நோய் ஏற்பட வில்லை. அம்மைக்கான தடுப் பூசி கிடைத்துவிட்டது என் பதை உறுதி செய்தமைக்கும், ஜேம்ஸ் பிப்ஸ் என்ற அந்த சிறுவனுக்கும் மருத்துவ வர லாற்றில் அழியா இடம் கிடைத் தது.  அதன்பின் மேலும் பல ஆய்வுகளை செய்து தனது முடிவுகளை 1798 ஆம் ஆண்டு அம்மை நோயின் காரணங் களும், விளைவுகளும் பற்றிய ஓர் ஆய்வு என்ற தலைப்பில் ஒரு நூலாக வெளியிட்டார்.

எட்வர்டு ஜென்னருக்கு முன்னர் 1770-களிலேயே இங்கிலாந்து மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த அய்ந்து கண்டுபிடிப்பா ளர்கள் (செவெல், ஜென்சன், பெஞ்சமின் ஜெஸ்டி 1774, ரெண்டெல், பிளெட் 1791) கவுபாக்சு நோயிலிருந்து தடுப் பூசியினை பெரியம்மையால் பாதிக்கப்பட்ட மனிதர்களின் உடலில் செலுத்தி வெற்றிகரமாக சோதனை செய்திருந்தனர். இதில் பெஞ்சமின் ஜெஸ்டி என்பவர் பெரியம்மை நோய்க் கெதிரான தடுப்பூசியினை தானும், தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுக்கும் செலுத்தி வெற்றி பெற்றார். ஆனால் 20 ஆண்டுகள் ஆய்வு செய்து எட்வர்டு ஜென்னர் வெளியிட்ட முடிவுகளே விளக்கத்துடன் புரிந்து கொள்ளக் கூடியதாகவும் இருந்தது.

ஆக மூடத்தனம் என்ற நோயை ஒழித்ததால்தான் அறிவியல் அடிப்படையில் அம்மை நோய் ஒழிக்கப்பட்டது என்பதை அறிக.

- கவிஞர் கலி. பூங்குன்றன்