Monday, September 6, 2021

இந்திய அரசியற் பொருளாதார வரலாற்றில் பெரியவர் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் இடம் – குருசாமி மயில்வாகனன்

 

இந்திய அரசியற் பொருளாதார வரலாற்றில் பெரியவர் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் இடம் – குருசாமி மயில்வாகனன்

(பெரியவர் வ. உ. சிதம்பரம்பிள்ளையின் 84ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி)

 உலக வரலாற்றில் மனித சமுதாய அமைப்பானது இதுவரை ஐந்து வகைகளைக் கண்டிருப்பதாகப் பேராசான்கள் கார்ல் மார்க்ஸ், பிரடெரிக் எங்கெல்ஸ் மற்றும் விளாதிமீர் இல்யீச் லெனின் ஆகியோரால் உருவாக்கப்பட்ட மார்க்சிய – லெனினியம் எனும் சமூக அறிவியல் கொள்கை அறிவிக்கிறது.

அவை 

  1. புராதனப் பொது உடமைச் சமுதாயம்,
  2. ஆண்டான் – அடிமைச் சமுதாயம்,
  3. நிலப்பிரபுத்துவச் சமுதாயம்,
  4. முதலாளித்துவச் சமுதாயம்,
  5. சோசலிசச் சமுதாயம் 

ஆகும். இந்த வகைப்பகுப்பானது அச்சமுதாயத்தின் உற்பத்தி முறைகளைக் கொண்டே வகைப்படுத்தப்படுகிறது.

உற்பத்தி முறை என்பது மனிதர்கள் தாங்கள் வாழ்வதற்குத் தேவையான பொருட்களை உற்பத்தி செய்து கொள்கின்ற அமைப்பு முறையைக் குறிப்பதாகும்.

இந்த ஐவகையான உற்பத்தி முறைகளும் சொல்லப்பட்ட வரிசை முறையில் அடுத்தடுத்து உருவாகும் என்பதில்லை. இடைக்கட்டமாகவும் சில சூழ்நிலைகள் உருவாகலாம்.

உற்பத்தி முறையில் நேர்மறையும் எதிர்மறையும்

உலகிலுள்ள அனைத்தும் நேர்மறையும் எதிர்மறையும் கொண்டதாகும். எல்லா நேர்மறைக்கும் எதிர்மறை உண்டு. எல்லா எதிர்மறைக்கும் நேர்மறை உண்டு. 

நிலப்பிரபுத்துவ சமூக உற்பத்தி முறையை நேர்மறை எனக் கொண்டால் அதற்குள்ளேயே உருவாகின்ற எதிர்மறைக் கூறுகள்தான் முதலாளித்துவ சமூக உற்பத்தி முறைக்கான கூறுகளாகும்.

அதுபோல முதலாளித்துவ சமூக உற்பத்தி முறையை நேர்மறை எனக் கொண்டால் அதற்குள்ளே உருவாகின்ற எதிர்மறைக் கூறுகள்தான் தொழிலாளி வர்க்கக் சமூக உற்பத்தி முறை (சோசலிச)க்கான கூறுகளாகும். 

நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறைக்குள் உருவாகும் முதலாளி வர்க்கக் கூறுகள் வளர்ந்ததும் தக்க தருணத்தில் வெளிப்பட்டு நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையை அழித்து முதலாளித்துவ உற்பத்தி முறையினைச் சிறிதுசிறிதாக உருவாக்கி வளர்ப்பதற்காகப் போராடுகின்றன.

அதுபோன்றே முதலாளித்துவ உற்பத்தி முறைக்குள் உருவாகும் தொழிலாளி வர்க்கக் கூறுகள் வளர்ந்ததும் தக்க தருணத்தில் வெளிப்பட்டு முதலாளித்துவ உற்பத்தி முறையை அழித்து சோசலிச உற்பத்தி முறையினைச் சிறிதுசிறிதாக உருவாக்கி வளர்ப்பதற்காகப் போராடுகின்றன.

புரட்சியின் மூலம் மாற்றமடைந்த சமூக அமைப்புகள்

புரட்சி என்பது ஓர் அரசியற் சொல் ஆகும். பழைய சமூகத்தின் பழைய உற்பத்திமுறையை அழித்து புதிய சமூகத்திற்கான புதிய உற்பத்தி முறையை நிலை நிறுத்துவதற்காக பழைய சமூகத்தின் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் புதிய உற்பத்தி முறையின் செயல்தான் புரட்சி ஆகும். இதுவே புரட்சி எனும் சொல்லிற்கான உண்மையான பொருளாகும்.

மாற்றமடைந்து கொண்டிருந்த அடிமை வர்க்கம் நடத்திய புரட்சியின் மூலமாகத்தான் ஆண்டான் – அடிமைச் சமூகமானது நிலப்பிரபுத்துவ அமைப்பிற்குள் நுழைந்தது.

மாற்றமடைந்து கொண்டிருந்த விவசாயி வர்க்கம் நடத்திய புரட்சியின் மூலமாகத்தான் நிலப்பிரபுத்துவ சமூகமானது முதலாளித்துவ அமைப்பிற்குள் நுழைந்தது.

மாற்றமடைந்து கொண்டிருந்த தொழிலாளி வர்க்கம் நடத்திய புரட்சியின் மூலம்தான் முதலாளித்துவ சமூகமானது சோசலிச அமைப்பிற்குள் நுழைந்தது. 

இம்மூன்று வகையான மாற்றங்களும் புரட்சிகளே. ஆக, புரட்சி என்பது சமூகத்தில் சமூக வளர்ச்சியின் இயற்கை விதிகளின்படி இயல்பாக நடைபெற வேண்டிய நிகழ்ச்சிகள் ஆகும்.

ஆனால் ஒவ்வொரு சமூக அமைப்பும் தன்னை மாற்றிக்கொள்ள அனுமதிக்காமல் தொடர்ந்து தன்னையே நிலைநிறுத்திக் கொள்ள விரும்புகின்றன. அதனால் மாற்றத்தைக் கொண்டுவர முயலுகின்ற பிற சக்திகளைப் பலாத்காரமாக ஒடுக்குகின்றன.

ஒரு வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும்போது எதிர்ப்பக்கமாக இருக்கும் இன்னொரு வர்க்கம் இதை எதிர்கொண்டு வீழ்த்துவதற்காகக் கையாளும் வழிமுறைகளானது அதாவது ஒரு புரட்சியை எதிர்கொள்ளும் முறையானது எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அது ஆயுதத்தைத் தாங்கியும் எதிர்கொள்ளலாம். அல்லது ஆயுதம் தாங்காமலும் சரணடையலாம். இது இரண்டு வர்க்கங்களுக்கிடையிலான வாழ்வா? சாவா? போராட்டம் என்பதால் அதைக் களத்திற்கு வெளியே இருந்து தீர்மானிக்க முடியாது.

ஆயுதத்தை வைத்துத்தான் தீர்மானம் என எதிர்பார்த்திருந்தால் ஒருவேளை எதிரிகள் ஆயுதம் தாங்கி வந்தால் அதை எதிர்கொள்ள முடியும். ஆனால், ஏற்கனவே எதிரிகள் ஆயுதம் தாங்கியுள்ள சூழலில் ஆயுதம் தவறு எனத் தீர்மானித்துக் கையை வீசிக்கொண்டு களத்தில் இறங்கினால் அவ்வாறு இறங்கும் வர்க்கம் தோல்வியுறவும், அழிந்துபடவுமே நேரும்.

இதில் வன்முறை – மென்முறை; ஹிம்சை – அஹிம்சை; பாவம் – புண்ணியம்; ஜனநாயகம் – சர்வாதிகாரம், என்பதெல்லாம் பொருளற்றவை, போலித்தனமானவை. ஏமாற்றக்கூடியவை.

வரலாற்றில் ஆண்டான் – அடிமைச் சமூகத்தில் அடிமைகளின் வெற்றியை ஆயுதமே தீர்மானித்தது. அதுபோல நிலப்பிரபுத்துவ வர்க்கத்தை முதலாளித்துவ வர்க்கமானது ஆயுதத்தாலேயே வீழ்த்தியது. தொழிலாளி வர்க்கமும் அவ்வாறே வென்றது. நிற்க, நாம் விசயத்திற்கு வருவோம்.

ரஷ்யப் புரட்சி ஏற்படுத்திய மாற்றம்

சமூக வரலாற்றை அதாவது சமூக வரலாற்றின் இயக்கத்தை மார்க்ஸியம் இவ்வாறு விளக்கியபோது அப்போது உலகை ஆண்டு கொண்டிருந்த முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ வர்க்கங்கள் அதை நம்பவில்லை. மாறாக கற்பனைக் கதை என ஏளனம் பேசின. 1917ஆம் ஆண்டு ரஷ்யாவில் ஜார் மன்னரது அதிகாரமானது கம்யூனிஸ்டுக் கட்சியால் வீழ்த்தப்பட்டது. அப்போதும்கூட ஏதோ ஒரு எதிர்க் கட்சியினர் நடத்திய ராணுவப் புரட்சி என்றுதான் கருதினார்கள். ஆனால், முதலாளிகளின் சொத்துரிமை ரத்து செய்யப்பட்டதாக சோவியத் ரஷ்யாவில் அறிவிக்கப்பட்டபோதுதான் உலக முதலாளிகளும் உலக முதலாளித்துவவாதிகளும் அதிர்ச்சியடைந்தனர். ’’முதலாளிகள் இல்லாமல் ஒரு நாடா, அப்படியுமிருக்க முடியுமா?’’ எனப் பீதியில் கலங்கினர்.

உலகமெங்கும் உருவாகிக் கொண்டிருந்த தொழிலாளி வர்க்கத்தினரிடம் மார்க்சியக் கருத்துக்கள் புயல்வேகத்தில் பரவியதைக் கண்டு மேலும் அதிர்ச்சிக்குள்ளாயினர். உடனடியாக இதைத் தடுத்து நிறுத்தாவிட்டால் தாங்கள் சவக்குழிக்குள் விழுவது உறுதி என்பதையும் உணர்ந்து கொண்டனர்.

தொழிலாளரது கூலி மற்றும் பண்டங்களின் விலை ஆகியவற்றை நிர்ணயம் செய்வதையும், மூலதனமிடுவதால் அதற்கான லாபத்தைத் தாங்களே பெறுவதையும் தங்களது வர்க்கப் பிறப்புரிமையாகக் கருதிவந்த அவர்களால் இந்த மாற்றத்தை நம்பவே முடியவில்லை. சமூகத்தின் இயற்கையான வளர்ச்சிப் போக்கைத் தடுத்து தங்களது விருப்பத்திற்கேற்ப மாற்றியிருந்த அவர்கள் இம்மாற்றத்தை முறியடிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.

ஆனால், அவர்கள் எழுதி வைத்திருந்த உலகப் பொருளாதார வரலாற்றில் அவர்களுக்கான பதில் கிடைக்கவில்லை. மேலும் இவ்வாறான, சொத்துரிமையை ரத்து செய்யும் புரட்சி எவ்வாறு சாத்தியமானது என்பதை எந்த ஒரு முதலாளித்துவப் பொருளாதார, அரசியல் மேதையாலும் விளக்க முடியவில்லை. எனவே இறுதியில் அவர்கள் மார்க்சியத்திடமே தஞ்சமடைந்தனர். அதிலேயே தங்களைத் தற்காத்துக் கொள்வதற்கான வழிமுறைகளையும் தேடினர். அதைக் கண்டும்பிடித்தனர். 

முதலாளித்துவம் கண்டுபிடித்த வழி

தொழிலாளிகள் ஒன்று திரண்டு தொழிலாளி வர்க்கமாக உருவாவதற்கான கூறுகள் எங்கு நிலவுகின்றன என்பதை மார்க்சியம் எவ்வாறு குறிப்பிடுகின்றது என்பதை அறிந்து கொண்டனர். அக்கூறுகளை அழிக்கத் தொடங்கினர். இன்று உலக முதலாளிகளின் வேலையே இதுதான். தொழிலாளி வர்க்கம் எவ்வாறு அரசதிகாரத்தைக் கைப்பற்றும் வர்க்கமாக உருவாகிறது என்பதற்கு மார்க்சியம் சொன்ன அரசியற் பொருளாதாரக் காரணங்களையும் அதற்கான கூறுகளையும் முறியடிக்கும் விதமாக முதலாளித்துவம் தனது போக்குகளைத் திட்டமிட்டுக் கொண்டு செயல்பட்டு வருகிறது. அதற்கான இன்றைய ஒரு சிறு உதாரணம், அவுட்சோர்சிங் முறை (Out sourceing System).

குறிப்பாகத் தொழிலாளி வர்க்கத்திடம் தொழிலாளி வர்க்கக் கூறுகள் உருவாகாமல் தடுத்தது; தொழிலாளி வர்க்கப் பண்பாடுகளைச் சிதைத்தது பலவகையான சித்தாந்த மற்றும் நிறுவன வடிவங்களை எடுத்துச் செயல்பட்டது, ஆகியவற்றையும் சொல்லலாம்.

முதலாளித்துவ வர்க்கத்தின் இத்தகைய புதிய வடிவங்களை எதிர்கொள்ள முடியாத புரட்சிக் கட்சியினர் தாங்கள் புரட்சியை நடத்த வேண்டும் என்பதைக் கைவிட்டுச் சில்லறைச் சீர்திருத்தங்களில் சமாதானம் ஆகிக் கொள்வதன் மூலமாகத் தங்களின் புரட்சி ஆசையைத் தீர்த்துக் கொண்டனர். அதற்கான சாக்குப்போக்காக ஜனநாயக வடிவம், வன்முறை எதிர்ப்பு, ஆயுதப் போராட்ட மறுப்பு என சமரச சுத்த சன்மார்க்கவாதிகளைப்போல் பேசித் திரிகின்றனர்.

ஒரு கம்யூனிஸ்டுக் கட்சிக்கான வேலை புரட்சியை நடத்துவதைத் தவிர வேறேதும் இருக்க முடியுமா?

முதலாளித்துவம் செய்த அடுத்த முக்கியமான அதிரடி நடவடிக்கை என்னவென்றால், தான் அடித்து வீழ்த்திய நிலப்பிரபுத்துவ வர்க்கத்துடனான போரைத் தவிர்த்துக் கொண்டு சமரசமாகிக் கொண்டதுதான்.

1917க்குப் பின்னர் காலனியாதிக்கக் காலகட்டத்தின் வளர்ச்சிப்போக்கிலே இவ்வாறான முடிவுகளுக்கு முதலாளித்துவ வர்க்கம் தள்ளப்பட்டதால், அது எடுத்த முடிவானது ஒரு நாட்டின் சுயமான முதலாளித்துவ வளர்ச்சியைத் தடுத்ததில் போய் நின்றது. நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையினை வீழ்த்துவதைத் தடுத்து அதனுடம் சமரசமாகிக் கொண்டு அதை அனுமதிக்கும் போக்கினைக் கடைப்பிடித்தது. அதன்மூலம் தேசிய முதலாளித்துவ வளர்ச்சியினை மட்டுப்படுத்தியது.

ஆனால், நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையை அழிக்காமல் முதலாளித்துவ உற்பத்தி முறையை உறுதியுடனான தன்மையில் நிலைநிறுத்த முடியாது என்பதால் இப்படியான சிக்கலில் சிக்கிக்கொண்ட நாடுகள் தங்களது சுயமான வளர்ச்சியை அடையாமல் தேங்கி நின்றன, நிற்கின்றன.

நிலப்பிரபுத்துவத்திலிருந்து மீள முடியாத இந்தியாவின் நிலை

1900களின் தொடக்கத்தில் இந்தியாவிலும் இத்தகைய நிலைமையே நிலவியது. அதிலிருந்து மீள முடியாத நிலையே இன்றும் நீடிக்கிறது.

இந்தியாவில் ஏற்கனவே காலனியாதிக்க அதிகாரமானது நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையினைச் சிதைத்துக் கொண்டிருந்த வேளையில், இப்போது புதிதாக உருவாகும் முதலாளித்துவத்தின் சுயமான வளர்ச்சிக் கூறுகளும் சிதைக்கப்பட்டதன் மூலம் பலவீனமான தன்மை கொண்ட சார்பு வர்க்கமாக முதலாளித்துவ வர்க்கம் வடிவமைந்தது.

இந்தியாவில் நிலவிய இத்தன்மை குறித்து, ‘’இவ்வாறு புதிய உலகத்தைப் பெறாமலும் பழைய உலகத்தை இழந்தும் நிற்கின்ற நிலமையானது இந்தியரது இன்றைய துயரத்திற்கு ஒரு தனித்துவமான சோர்வைக் கொடுக்கிறது. மேலும் பிரிட்டனால் ஆளப்படும் இந்தியாவை, அதன் தொன்மையான மரபுகள் அனைத்திலிருந்தும் அதன் கடந்த கால வரலாறு முழுவதிலிருந்தும் பிரித்து வைத்திருந்தது.’’ (KM & FE collection works. vol.3 pa.194 – 195) எனப் பேராசான் கார்ல் மார்க்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

காலனியாதிக்க பொருளாதார முறையின் எதிர்மறைக் கூறு சுதேசியம்

இந்நிலையில், காலனியாதிக்கப் பொருளாதார முறைக்குள் உருவாகிய எதிர்மறைக் கூறுகள் சுயமான முதலாளித்துவப் பொருளாதார உருவாக்கத்தைக் கோருவதற்காக எழுந்து நின்றன. காலனியாதிக்க இந்தியப் பொருளாதாரத்தை ஆய்வு செய்த சோவியத் பொருளாதாரவாதிகள் இந்நிலையைப் பற்றிக் குறிப்பிடும்போது ’பொருளாதாரத்தின் அகநிலைப் போக்குகள்’ எனக் கூறுகின்றனர். இந்தியாவில் அப்போக்கின் செயல்பாட்டுப் பெயராக நாம் குறிப்பிட வேண்டியதுதான், ‘’சுதேசியம்’’.

’சுதேசியம்’ என்பது சாராம்சத்தில் ஒரு முதலாளித்துவ அரசியல் பொருளாதாரக் கொள்கையாகும். சுயமான முதலாளித்துவ வளர்ச்சிக் கூறுகளை நசுக்கிய காலனியாதிக்கப் பொருளாதாரக் கொள்கையை எதிர்த்து உருவானதுதான் சுதேசியப் பொருளாதாரக் கொள்கை ஆகும். இந்தியாவில் அக்கொள்கையை ஏற்றுக்கொண்டவர்கள் பலரிருந்தார்கள்.

ஆனால் அவர்களுள் அக்கொள்கையை மக்கள் மயமாக்கப்பட்ட போராட்ட நடைமுறையில் கொண்டுவந்து நிறுத்திய முதல் இந்தியர், தமிழராய்ப் பிறந்த பெரியவர் வ.உ. சிதம்பரம் பிள்ளை ஆவார்.

சுதேசியத்தை மக்கள் மயமாக்கிய தலைவர் வ.உ.சி

தமிழகத்தில் சுயமான முதலாளித்துவ வளர்ச்சிக்காக அறைகூவல் விடுக்கப்பட்ட சுதேசியப் போராட்டத்தை தலைமையேற்று நடத்திய முதல் மக்கள் தலைவரும் அவர்தான். தான் நடத்துகின்ற போராட்டத்தின் இத்தகைய தன்மை குறித்து அவர் அறிந்திருப்பதற்கான வாய்ப்புகள் அவருக்குக் கிட்டவில்லை. ஆயினும் அவரிடமிருந்த இயல்பான, உண்மையான நாட்டுப்பற்றும் நாட்டு மக்கள்மீது அவர் கொண்டிருந்த அக்கறையும்தான் இவ்வாறான முடிவுகளுக்குக் கொண்டுபோய் அவரை நிறுத்தியிருக்கிறது என்பதை அவரது வாழ்க்கைச் சம்பவங்களைச் சரியாகக் கவனிப்பதன் மூலமாக அறிய முடியும்.

சுதேசியப் பண்டக சாலை, கைத்தொழில் வளர்ச்சிச் சங்கம், தர்ம சங்கம், தர்ம நெசவுச் சாலை மற்றும் சுதேசிய நாவாய்ச் சங்கம் போன்ற அவரது முயற்சிகள் அனைத்தும் அவ்வாறானதே. குறிப்பாக சுதேசிய நாவாய்ச் சங்க முயற்சிகள் குறிப்பிடத்தக்கன. மேலும் அவரால் இயக்கப்பட்ட கோரல் மில் ஆலைத் தொழிலாளர் போராட்டமும் இத்தகைய நோக்கிலானதே. 

வ.உ.சி-க்கும், அவருக்கு முன்பு கப்பல் கம்பெனி துவங்கியவர்களுக்குமான வேறுபாடு

தூத்துக்குடி சுதேசி கப்பல் கம்பெனி தொடங்கப்படுவதற்கு சுமார் 22 ஆண்டுகளுக்கு முன்னரே வங்காளத்தில் ரவீந்திரநாத் தாகூர் குடும்பத்தைச் சேர்ந்த ஜியோதிந்தர நாத் என்பவர் 1884இல் ‘Inland River Steam Navigation Companyயைத் தொடங்கி நடத்தினார். ஐந்து கப்பல்களை வாங்கினார். குல்னாவிலிருந்து பாரிசால் வரை பயணிகளையும் கல்கத்தாவரை சரக்குகளையும் அக்கப்பல்கள் கொண்டு சென்றன. பிரிட்டிஷ் கப்பல் கம்பெனியான `ஃப்ளாடில்லா கம்பெனி` அரசுடன் கூட்டுச் சேர்ந்து சுதேசிக் கம்பெனியை நசுக்கியது. இதனால் கம்பெனி வீழ்ச்சியடைந்தது.

அதன் பின்னர் 1905இல் சிட்டாகாங் நகரைச் சேர்ந்தவர்கள் `பெங்கால் ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி`யைத் தொடங்கினர். இதுபோல சுமார் இருபது கம்பெனிகள் அப்போது இயங்கின. அவையனைத்துமே பெரியவர் முன்னின்று நடத்திய சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனியைப் போன்றே வீழ்ந்தன. இருப்பினும் மற்ற சுதேசியக் கப்பல் விடும் முயற்சிகளுக்கும் பெரியவரது கப்பல் விடும் முயற்சிக்கும் ஒரு வேறுபாடு உண்டு.

அது என்னவெனில் பெரியவருக்கு முன்னர் பிற கம்பெனிகளை நடத்தியவர்கள் எவரும் அரசியலின் பிற அமசங்களில் நேரடியாகக் களத்தில் இறங்கி ஈடுபடாதவர்களாக இருந்தார்கள். ஆனால், பெரியவரோ ஒரு தீவிரமான நடைமுறை அரசியல்வாதியாக இருந்தார். தனது கொள்கையை எவ்விடத்திலும் விட்டுக் கொடுக்காதவராகவும் இருந்தார்.

தமிழகத்தில் தனியொருவராக சுதேசியப் போராட்டத்தை தாங்கியவர்

தமிழகத்தைப் பொறுத்தவரையிலும் தனியொரு மனிதனாக சுதேசியப் போராட்டத்தைத் தாங்கிக் கொண்டிருந்தவர் பெரியவர் வ.உ.சிதம்பரம் பிள்ளைதான் என்பதற்கான ஆதாரங்கள் உண்டு. அவரில்லாத நிலையில் சுதேசியப் போராட்டங்கள் தோல்வியடைந்ததும் அவருக்கு வழங்கப்பட்ட சிறைத் தண்டனைக்கான தீர்ப்பினில் ஆங்கிலேய நீதிபதிகள் அவர் குறித்து கூறியுள்ள கருத்துக்களுமே அதற்கான ஆதாரங்களாகும்.

போராட்டக் களத்தில் அஞ்சா நெஞ்சனாக நின்ற அவரை அகற்றாமல் காலனியாதிக்கவாதிகள் தங்களுக்கான லாபத்தை நோக்கி ஓரடிகூட எடுத்து வைக்க முடியாது என்பதால்தான் அற்பக் காரணங்களைச் சொல்லிப் பெரியவரைச் சிறையில் தள்ளினார்கள்.

அவர் சிறையிலிருந்த சுமார் ஐந்தே ஆண்டுகளுக்குள் பல்வேறு திட்டங்களைக் கொண்டுவந்து (அவற்றை சீர்திருத்தம் என அவர்கள் அழைத்துக் கொண்டனர்) ’சுதேசியம்’ எனும் போராட்டக் கொள்கையை வெறும் நுகர்வுக் கொள்கையாக பிரிட்டிஷ் அரசின் கைப்பாவைகளாக இருந்தவர்கள் மாற்றினர். சிறையிலிருந்து வெளிவந்த பெரியவரால் ’சுதேசிய’க் கொள்கையைத் தனிமனித அளவில் கடைப்பிடிக்க முடிந்ததே தவிர, முன்புபோல அதைச் சொல்லி மக்களை அணி திரட்ட முடியவில்லை. அப்படி ஒரு அவசியமே அவருக்கு ஏற்படாத அளவிற்கு சூழ்நிலை மாற்றப்பட்டிருந்தது. 

பிரிட்டிஷாரின் போலிசுக்கு அஞ்சிய தலைவர்கள்

அவர் சிறையிலிருந்து வெளிவந்தபோது அவரை வரவேற்க ஒருவரும் செல்லவில்லை என்பதை ஒரு பெரும் குற்றச்சாட்டாகப் பலர் கூறுவதை நீங்கள் கேட்டிருக்கலாம். ஆனால் அது ஏன் நடந்தது என்பதை நாம் கவனிக்க வேண்டும். மக்கள் வரவேற்கச் செல்லவில்லை என்பதை விடுங்கள். பின்னாளில் தலைவர்களாக அறியப்பட்டவர்களெல்லாம்கூட அப்போது எங்கே போனார்கள்? அவ்வளவு ஏன், 1912லிருந்து சென்னையில் அவர் வாழ்க்கை எனும் செக்கை இழுத்துக்கொண்டிருந்தபோது எந்தத் தலைவன் அவரை ஆதரித்தான்? தமிழகத்தில் அப்போது யாருமேயில்லையா? எல்லோரும் வேற்றுக் கிரகத்திற்குப் போயிருந்தார்களா? இல்லையே?. அதற்கான காரணம் என்ன?.

இரண்டு காரணங்கள் புலப்படுகின்றன. ஒன்று, அவர்கள் போலீஸ், கைது, சிறை ஆகியவற்றிற்காகப் பயந்தார்கள். இரண்டு அவரின் தீவிரமான கொள்கைப் பிடிப்பிற்காகத் தயங்கினார்கள். 

இதில் முதலாவதாகச் சொல்கின்ற பிரிட்டிஷாரின் நெருக்கடி எவ்வாறு இருந்தது என்பது இன்னொரு கட்டுரைக்கான தலைப்பாகும்.

பிரிட்டிஷாரின் போலீசுக்குப் பயந்துதான், பிரிட்டிஷ் அரசு தொடுக்கும் வழக்கிற்குப் பயந்துதான் சிறைக்குப் பயந்துதான் அப்போதைய அனைத்துத் தலைவர்களும் பெரியவரைப் புறக்கணித்தார்கள். தொடர்புகொள்ள அஞ்சினார்கள். ஆதரிக்காமல் ஓடினார்கள்.

மீனாட்சியம்மாளின் தீரம்

கைதுக்கும் சிறைக்கும் பயந்துபோய் பல்வேறு சமாதானங்களைச் சொல்லிக் கொண்டு கடிதங்களை எழுதிக் கொடுத்தவர்களை நாமறிவோம். ஆனால், சிறையில் பெரியவரைக் கொடுமைப்படுத்துகிறார்கள் என்பதையறிந்து, விட்டுவிடுங்கள் என்று சொல்லாமல், ‘தீர்ப்பின்படி அவரை உடனே நாடு கடத்துங்கள்` என ஆங்கிலேய அரசிற்குக் கடிதம் எழுதினார் பெரியவரின் மனைவி மீனாட்சியம்மாள். கருணைகோரிக் கடிதம் எழுதிய தன் தந்தையைக் கடிந்துகொண்டானே பகத்சிங், அவனைப்போல.

மீனாட்சியம்மாளின் வாழ்க்கை குறித்து எந்தப் பெண்ணிலைவாதிகளாவது அறிந்து கொள்ள முயற்சி செய்திருக்கிறார்களா?.

பெரியவருக்கு ஏற்பட்ட இதே நிலைதான் சுதேசியம் பேசிய புதியகட்சிக்காரர்கள் அனைவருக்கும் அப்போது நிகழ்ந்திருக்கிறது. 

இந்தியச் சூழலானது, பிரிட்டிஷாரின் விருப்பத்திற்குட்பட்டவராக இருந்த காந்தியாரின் கைகளில் மக்கள் திரண்டிருந்த காங்கிரசு தஞ்சமாகிக் கிடந்தது. தமிழகச் சூழலானது, பிராமணர், பிராமணரல்லாதார் விசயங்களை முன்னிலைப்படுத்தியவர்களின் செல்வாக்கில் ஆட்பட்டிருந்தது.

இவ்விருபோக்குகளுமே சுதேசியத்தை ஒப்புக்குப் பேசியது அல்லது பேசாமல் கைவிட்டது.

காங்கிரசிற்குள் வ.உ.சி பேசிய சமூக அரசியல்

காங்கிரசில் இருந்தபோது சமூக நிலைமைகள் குறித்துத் தனது கருத்துக்களைச் சொல்லத் தயங்கிய அல்லது சொல்லாத விசயங்களைப் பெரியார் ஈ.வே.ரா தனி இயக்கம் தொடங்கித் தீவிரமாகச் சொல்லத் தொடங்கினார். ஆனால் அதே விசயங்களை காங்கிரசில் இருந்து கொண்டே பேசிய ஒரே தலைவர் பெரியவர் வ.உ.சிதான். சேலத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் அவர் பேசிய தலைமையுரையே அதற்குச் சாட்சி. ஆனால் அத்துடன் அவர் காங்கிரசுடான உறவினை முறித்துக் கொண்டார் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

மாறுதலடைந்திருந்த தமிழகச் சூழலானது பெரியவருக்கு மட்டுமல்ல சுதேசியம் பேசிய அவரது சகாக்களான சுப்ரமணிய பாரதிக்கும் சுப்பிரமணிய சிவத்திற்கும் அதே வரவேற்பைத்தான் கொடுத்தது. பால கங்காதரத் திலகரது போக்கும்கூட பிற்காலங்களில் அப்படியிருந்ததை நாம் அவதானிக்க முடியும்.

திலகருக்கும் வ.உ.சிக்கும் இருந்த வேறுபாடு

திலகரைப் பெருமைப்படுத்துவதற்காகவே அவரைத் தனது அரசியல் குருநாதர் எனப் பெரியவர் குறிப்பிட்டிருக்கிறார். உண்மையில் சமூகம் குறித்த கருத்துக்களில் மட்டுமல்லாமல், அரசியற் கருத்துக்களிலும்கூடப் பிற்காலத்தில் இருவருக்கும் சில அடிப்படையான விசயங்களிலேயே மாறுபாடு இருந்திருப்பதைக் கூர்மையாகக் கவனித்தால் நாம் அறிய முடியும். அதனாலேயே திலகரது போராட்ட நடைமுறைகளைப் பெரியவர் தமிழகத்தில் கடைப்பிடிக்கவில்லை. ஒருவேளை அப்போது திலகரது உண்மையான சீடராகப் பெரியவர் இருந்திருந்தால் அவருக்கு வரலாறு கொடுத்திருக்கும் இடம் வேறாக இருந்திருக்கும்.

உண்மை இவ்வாறிருக்க, பெரியவரை இந்துத்துவத் திலகரின் வாரிசாகவும் பிற்போக்கு இந்துத்துவக் கருத்தியலாளராகவும் முற்போக்காளர்கள் என்ற போர்வையில் ஒளிந்துள்ள சில பிற்போக்குவாதிகள் சித்திரிக்க முயல்வது பகுத்தறிவற்ற மூடச்செயலும் கண்டனத்திற்குரிய விஷமச் செயலுமாகும்.

பெரியவரின் சிறைக்குப் பின்னால் சுதேசியத்தின் நிலை

சரி, பெரியவர் சிறை மீண்டதற்குப் பின்னால் தமிழகத்தில் சுதேசியம் கைவிடப்பட்டிருந்ததா? என்றால், ஆம், கைவிடப்பட்டிருந்தது என்பதுதான் உண்மை. அதன்மூலமாக சுயமான முதலாளித்துவக் கூறுகளுக்கான ஆதரவும் கைவிடப்பட்டிருந்தது. அதனால் முதலாளித்துவ வளர்ச்சிக்கான கூறுகளும் மட்டுப்படுத்தப்பட்டன. இந்நிலை தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்தியா முழுமைக்குமானதாகத்தானிருந்தது. இதற்குத் தூண்டுதலாக காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சியிருந்தது.

சுதேசியக் கொள்கையானது வளர்த்தெடுக்கப்பட்டு இயக்கமாகி அதன்வழியாக முதலாளித்துவ வர்க்கம் சுயமானதாக வளர்ந்திருக்குமேயானால் சகல வளங்களும் உள்ள இந்தியாவில் முதலாளித்துவ வர்க்கம் வெகு சீக்கிரமாக வளர்ந்திருக்கும். அது வளர்ந்திருப்பதோடு மட்டுமில்லாமல் தொழிலாளி வர்க்கத்தையும் பிரம்மாண்டமானதாக உருவாக்கி வளர்த்தெடுத்திருக்கும். பின்னர் அதனுள் உருவாகும் எதிர்மறைக் கூறுகள் தொழிலாளி வர்க்கத்திற்கு அரசியற் பயிற்சி கொடுத்து அதிகாரத்தைக் கைப்பற்றும் நிலைக்குக் கொண்டுபோயிருக்கும்.

இது ஒரு ஊகம்தான். அனால், அவ்வாறு நடந்திருக்கும் எனச் சொல்வதை மறுத்தால் அவ்வாறெல்லாம் நடந்திருக்காது என சொல்லப்படுவதையும் மறுக்க  முடியும்.

எவ்வாறாயினும் இந்தியாவில் சுயமான முதலாளித்துவ வளர்ச்சிக்காக எழும்பிய ’சுதேசியம்’ எனும் கொள்கையானது கைவிடப்பட்டுவிட்டது என்பதைத்தான் வரலாறு நமக்குக் காட்டுகிறது.

சுதேசி கொள்கையின் முன்னோடி வ.உ.சியே என்பது சொல்லப்பட வேண்டும்

இன்றைய நிலையில் `சுதேசியம்’ எனும் கொள்கை அவசியமானதா என்றால் அது ஆய்வுக்குரியதே. ’சுதேசியம்` எனும் முதலாளித்துவக் கொள்கையை விடவும் அதிலிருந்து வளர்ச்சி பெற்ற முற்போக்கான கொள்கைகள் உருவாகிவிட்டன. அக்கொள்கைகளிலும் சுதேசிய மனப்பான்மை இல்லாமலில்லை. மேலும் சுதேசியக் கொள்கையை முதலாளித்துவம் இனிக் கைக்கொள்ளுமா என்பதும் கேள்விக்குரியது. ஆனாலும் வரலாற்றில் சுதேசியக் கொள்கையானது முற்போக்கான கொள்கை என்பதை யாரும் மறுக்க முடியாது.

எனவே, இந்தியாவின் இயல்பான, சுயமான வளர்ச்சிக்கான சுதேசிக் கொள்கைக்காக முன்னோடிச் செயற்பாட்டை ஒரு மக்கள் போராட்டமாக நடத்திக் காட்டிய, அந்த வகையில் இந்தியாவிற்கே முன்னோடியாக விளங்கிய ஒரே இந்தியத் தலைவர் பெரியவர் வ.உ.சிதம்பரம்பிள்ளைதான்.

அவரை அவர்க்குரிய அந்த இடத்தில் வைத்துப் பேச வேண்டும் என்பதே அவருக்கு நாம் செலுத்தும் மரியாதையும் நன்றியும் கடமையுமாகும். 

அதுமட்டுமல்ல, அதுதான் எதிர்கால விடுதலைக்கான பல்வேறு வழிகளின் ஓர்  அம்சத்தைச் சுட்டிக் காட்டக் கூடியதுமாகும். 

– குருசாமி மயில்வாகனன்

எழுத்தாளர், சமூக ஆய்வாளர், மார்க்சியவாதி என பல்வேறு பரிமாணங்களைக் கொண்டவர். வ.உ.சி அவர்களின் வாழ்க்கை குறித்து தொடர்ச்சியாக எழுதியும், ஆய்வு மேற்கொண்டும் வருபவர்.

தொடர்புக்கு: gmayil64@gmail.com

(இந்த கட்டுரையில் வரும் கருத்துகளும் பார்வைகளும் கட்டுரையாளருக்கு சொந்தமானவை – Madras Radicals)

சமூக நீதி, பார்ப்பனரல்லாதார் உரிமைப் போராட்டத்தில் வ.உ.சி.

 

சமூக நீதி, பார்ப்பனர் அல்லோதோர் உரிமைப் போராட்டத்தில் வ.உ.சி

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் பிறந்தநாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்பு பதிவு – Madras Radicals

திலகர், அரவிந்தர், சுப்ரமணிய சிவா, பாரதியார், ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் நேரடி சீடரான சுவாமி ராமகிருஷ்ணானந்தர் ஆகியோருடன் தனது விடுதலை அரசியலின் முதல் பகுதியில் செயல்பட்ட வ.உ.சி, சிறைவாழ்வில் இருந்து விடுதலை ஆன பிறகு ஆங்கில ஏகாதிபத்திய எதிர்ப்பில் இன்னும் தீவிரமாக செயல்பட்டார். அதேவேளையில் தமிழ்நாட்டில் நீதிக்கட்சியின் உருவாக்கத்திற்குப் பிறகு வளர்ந்திருந்த வகுப்புவாரி பிரதிநிதித்துவம் எனும் சமூகநீதி கருத்திலும் பழமையை எதிர்க்கும் பல சீர்திருத்த அரசியலிலும் பல்வேறு பரப்புரைகளை மேற்கொண்டார்.

காங்கிரசில் இருந்த பார்ப்பனர் அல்லாதாரின் இயக்கமான சென்னை மாகாண சங்கத்தின் வேலைத்திட்டத்தை வடிவமைத்தவர்களில் ஒருவர் வ.உ.சி என்று பெரியார் பதிவு செய்துள்ளார்.

வகுப்புவாரி உரிமைக்காக குரல்கொடுத்த வ.உ.சி

பெரியார் காங்கிரசிற்குள் இருந்து வகுப்புவாரி உரிமைக்காக குரல் கொடுத்துக் கொண்டிருந்தபோது, அதனை வலுப்படுத்திய பார்ப்பனர் அல்லாத தலைவர்களில் வ.உ.சி முக்கியமானவர். 1920-ம் ஆண்டு திருநெல்வேலியில் நடந்த காங்கிரசின் 26-வது மாகாண மாநாட்டில் வாக்காளர் எண்ணிக்கைக்கு ஏற்ப வகுப்புவாரி பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்ற தீர்மானத்தை வ.உ.சி கொண்டு வந்தார் என்று 20.11.1925 ஆம் நாள் குடியரசு பத்திரிகையில் என்.வி.கல்யாணந்தரம் பதிவு செயதிருக்கிறார்.

1926-ம் ஆண்டு டிசம்பர் 25, 26 ஆகிய தேதிகளில் நீதிக்கட்சியின் சார்பாக ஏ.பி.பத்ரோ தலைமையில் சென்னை மாகாண பார்ப்பனர் அல்லாதோர் மாநாட்டை எம்.டி.சுப்ரமணிய முதலியார் கூட்டினார். இதில் பட்டிவீரன்பட்டி சவுந்திர பாண்டியனார், வைக்கம் போராட்டத்தின் முக்கியத் தலைவரான ஜார்ஜ் ஜோசப் உள்ளிட்டோருடன் வ.உ.சியும் கலந்து கொண்டார். நீதிக்கட்சி தேர்தலில் தோல்வியடைந்து சோர்வுற்றிருந்த போது புத்துயிர் கொடுக்க கூட்டப்பட்ட முக்கியமான மாநாடாகும் இது.

ஒற்றுமையின்மைக்கு வகுப்புவாரி பிரதிநிதித்துவம் இல்லாததே காரணம்

அதனைத் தொடர்ந்து 5.11.1927-ல் சேலம் மாவட்ட அரசியல் மாநாட்டில் வ.உ.சி ஆற்றிய உரை தனி நூலாக வெளிவந்துள்ளது. அது வரலாற்று சிறப்பு மிக்க உரையாகும். அந்த மாநாட்டில் தலைமை உரையை ஆற்றுகையில் நாட்டு மக்களிடையே பிளவுகளும் பகைமைகளும் இருப்பதற்குக் காரணம் கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் இல்லாததுதான் என்று தெளிவாகக் குறிப்பிடுகிறார்.

“நம் தேசத்தாருள் நிலவும் ஒற்றுமையின்மை முதலியவற்றிற்கு முக்கியமான காரணம் தான் யாதோ? எனின் நம் தேசத்து இராசாங்க உத்தியோகங்களிலும், சட்டசபை முதலிய ஸ்தல ஸ்தாபன உத்தியோகங்களிலும், காங்கிரசு மகாசபை முதலிய பொது ஸ்தாபன உத்தியோகங்களிலும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கொடுக்கப்படாமையே”

வகுப்புரிமை போராட்டம் பிரிட்டிஷ் ஆதரவு என்பதை மறுத்த வ.உ.சி

வகுப்புரிமைப் போராட்டம் என்பது பிரிட்டிஷ் அரசின் ஆதரவில் உருவானதாக இன்று ஜெயமோகன் போன்றவர்கள் எழுதுவது புதிதல்ல. அன்றே பார்ப்பன தலைவர்கள் சொன்னதுதான். அந்த பொய்களையும் வ.உ.சி மறுத்து அந்த உரையில் பேசியிருக்கிறார்.

”பிராமணருக்கும் பிராமணரல்லாதாருக்கும் ஏற்பட்டுள்ள சண்டைகளை உண்டு பண்ணுகின்றவர் இராஜாங்கத்தாரே என்றும், சுதேச மன்னர்கள் அரசாட்சிக்குட்பட்ட நாடுகளில் சாதிச் சண்டைகள் இல்லை என்றும், நம் தேசத்துக்கு சுய அரசாட்சி வந்து விட்டால் சாதிச் சண்டைகள் எல்லாம் நீங்கிவிடும் என்றும் சிலர் சொல்லுகின்றனர். இந்த மூன்றும் முழுப் பொய்.

பிராமணர் – பிராமணரல்லாதார் சண்டைகளுக்குக் காரணம் ஒன்றுமே இல்லையெனின் இராஜாங்கத்தாராலோ மற்றவராலோ அவர்களுக்குள் சண்டையை உண்டு பண்ண முடியாது. சுதேச மன்னர்களின் அரசாட்சிக்குட்பட்ட நாடுகளிலும் சாதிச் சண்டைகள் இல்லாமல் இல்லை. அவற்றிலும் தென்னாடுகளில் பிராமணர் – பிராமணரல்லாதார் சண்டைகள் இருக்கின்றன. சுய அரசாட்சிக்கு முதல் வழி நமது தேசத்தினர்கள் எல்லாம் ஒற்றுமைப்படுதல்.

உண்மை அவ்வாறிருக்க, சுய அரசாட்சி வந்து விட்டால் நமது தேசத்தினர்களுக்குள் ஒற்றுமை உண்டாகிவிடும் என்று சொல்வது நீந்தக் கற்றுக் கொண்டால் நீரில் இறங்கலாம் என்பது போலாம். ஒருவன் நீரில் இறங்காமல் நீந்தக் கற்றுக் கொள்ளப் போவதில்லை. அதுபோல நம் தேசத்தார்களெல்லாம் ஒற்றுமைப்படாமல் நாம் சுய அரசாட்சி அடையப் போவதில்லை”

என்று பேசியவர் வ.உ.சி.

பார்ப்பனர் அல்லாதார் உரிமையோடு மட்டும் நின்றுவிடாமல் சமுதாய சீர்திருத்தக் கருத்துகளையும் பரப்பினார். தான் பின்பற்றும் சைவ மதத்தில் உள்ள பிற்போக்குத்தனங்களை அவர்களது மேடையில் நின்றே கண்டித்தார்.

மனுஸ்மிருதி மற்றும் ஆரிய நூல்கள் பற்றி

ஆரியர்களின் நூல் தமிழ் நூல்களில் கலந்த பின்னரே பிறப்பால் உயர்வு தாழ்வு என்பது தமிழரிடம் உருவாகியது. புறநானூறு உள்ளிட்ட சங்க இலக்கியங்களில் பிறப்பினால் உயர்வு தாழ்வில்லை என்று பேசியவர் வ.உ.சி.

மனுஸ்மிருதி பற்றி பேசுகிற பொழுது,

”எந்த நூலாக இருந்தாலும் அதில் உள்ள குறைகளை நாம் களைய வேண்டும். மனிதனாகப் பிறந்தவன் தவறு செய்வது இயற்கை. பிழை இருக்குமானால் வள்ளுவர் அல்ல சிவபெருமானே ஆகட்டும் யார் கூறினாலும் தள்ள வேண்டியது தான். எந்த நூலையும் மனிதன் எழுதினான், அறிஞன் எழுதினான், முனிவர் எழுதினார், கடவுள் என்று சொல்லத்தக்க ஒருவர் எழுதினார் என்றுதான் கூறவேண்டும். கடவுளே எழுதினார் என்று கூறப்படும் நூலிலும் பிழை இருக்குமானால் அதனைத் தள்ள வேண்டியது தான்”

என்று பகுத்தறிவுப் பரப்புரையில் ஈடுபட்டனர்.

பெண் விடுதலை குறித்து

”நம் நாட்டில் பெண் மக்களை சமைக்கும் இயந்திரமாக செய்துவிட்டனர். பிள்ளை பெறும் இயந்திரமாக அனைவருமே செய்துவிட்டோம். நம்மைப் போல் பெண்களுக்கும் சம உரிமை இருத்தல் வேண்டும். எல்லா விஷயங்களிலும் அவர்களை ஆலோசித்து செய்தல் அவசியமாகும் என்றும், ஐந்து வயது பெண்ணுக்கும் ஆறு வயது ஆணுக்கும் திருமணம் செய்கிறார்கள், இதனை பொம்மை கல்யாணம் என்றே சொல்ல வேண்டும். இதனால் விதவைகள் பெருகி விட்டார்கள்”

என்று பெண்களின் கல்விக்கான அவசியம் குறித்தும் பெண்களுக்கு சம உரிமை வேண்டும் என்றும் பேசியவர் வ.உ.சி.

சீர்திருத்த சைவராக

ராஜகோபாலாச்சாரி எல்லோரும் சமம் என்பார். ஆனால் ஒரு பலன் கிடைக்கும் என்றால், அதை அவர் தன் இனத்தாருக்குத் தான் கொடுப்பார் என்று பார்ப்பனர்கள் தங்கள் நலன் குறித்து எப்படி செயல்படுவார்கள் என்றும் எச்சரிக்கை செய்து பேசிய வ.உ.சி தன்னை கடைசிவரை சைவர் என்றே அடையாளப்படுத்தினார். ஆனால் தொடர்ந்து சீர்திருத்த சைவராக இருந்தார். சிவஞான முனிவரின் கருத்துகளுக்கு மாறுபட்ட கருத்தை எழுதியிருப்பதால், தான் எழுதிய சிவஞான போதக உரையை போலி சைவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று அவரே கூறியுள்ளார்.

சுதேசி இயக்கத்தில் துவங்கிய வ.உ.சிதம்பரனார், சமூகத்தில் நிகழ்ந்த மாற்றங்களை உள்வாங்குபவராக, அன்றைய மக்களின் தேவைக்கு எது சரியானதாக இருக்கும் என்று ஆய்ந்து அறிந்து தன்னை புதுப்பித்துக் கொள்ளும் பெருமக்கள் தலைவராக இருந்தார்.

வ.உ.சியின் தியாகம் முழுமையாக மக்களிடம் கொண்டு செல்லப்படாததற்கும், காங்கிரஸ்காரர்கள் வ.உ.சியை மறந்ததற்கும், அவர் பார்ப்பனர் அல்லாதவர் என்பதுதான் காரணம் என்று பெரியார் பல இடங்களில் பேசினார்.

”சிதம்பரம் பிள்ளையின் முதுகில் ஒரு பூணூல் மட்டும் தொங்கி இருக்குமேயானால், அவரது சிலை மூலைக்கு மூலை வைக்கப்பட்டு இருக்கும். அவரது படம் ஒவ்வொரு அக்கிரகார வாசிகளின் வீடுகளிலும் மாட்டப்பட்டிருக்கும். அவர் பேரால் மண்டபங்கள், மனைவி, பிள்ளை குட்டிகளுக்கு பதவி வாழ்க்கை வசதிகள் எல்லாம் கிடைத்து இருக்கும்.”

என்று பெரியார் ‘விடுதலை’ நாளேட்டில் 13.5.1961 அன்று எழுதினார்.

உதவிய நூல்கள்:

1)அரசியல் பெருஞ்சொல் வ.உ.சி பதிப்பாசிரியர் செ.திவான்
2)நீதி கட்சி வரலாறு க.திருநாவுகரசு.
3)வகுப்பு வாரி பிரதிநிதித்துவம் திருவிக-பெரியார் அறிக்கை போர் தொகுப்பு சு.ஒளிச்செங்கோ
3)திராவிட இயக்கமும் வேளாளரும் ஆ.இரா.வெங்கடாசலபதி

திருநெல்வேலி எழுச்சி

 

இந்திய விடுதலைப் போராட்டத்தில் திருப்பு முனையான திருநெல்வேலி எழுச்சி

திருநெல்வேலி எழுச்சி நடைபெற்ற நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு – Madras Review

இந்திய தேச விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு மாபெரும் திருப்பு முனையையும், எழுச்சியையும் ஏற்படுத்தியது திருநேல்வேலி மாவட்டம். அன்றைய ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் சுதேசி இயக்கத்தை மிகத் தீவிரமாக நடத்திக் கொண்டிருந்தனர். ஒட்டுமொத்த துணைக்கண்டத்திற்கும் விடுதலைப் போராட்டத்தை எப்படி நடத்த வேண்டும் என்று முன்னுதாரணமாக இந்த போராட்டம் நடந்து கொண்டிருந்தது. இதனை வ.உ.சிதம்பரனாரும், சுப்ரமணிய சிவாவும் செய்து கொண்டிருந்தனர்.

தீவிரமடைந்த சுதேசி உணர்வு

1905-ம் ஆண்டு இந்தியா முழுவதும் சுதேசி இயக்க உணர்வு தீவிரமாக பரவியது. 1906-ம் ஆண்டு தூத்துக்குடி, கொழும்பு துறைமுகங்களுக்கு இடையே வாடகைக் கப்பல்களை இயக்கும் சுதேசிக் கப்பல் கம்பெனி துவக்கப்பட்டது. அதனை முடக்க பல்வேறு முயற்சிகளை ஆங்கிலேய அரசு செய்து கொண்டிருந்தது.

1908-ம் ஆண்டு வ.உ.சி., சுப்பிரமணிய சிவா, ஆகியோர் பங்கேற்ற சுதேசி இயக்க பிரசாரக்கூட்டங்கள் நெல்லையில் நடைபெற்றது. அந்நிய நாட்டுப் பொருட்களை புறக்கணிக்கும்படி தலைவர்கள் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.

தொழிலாளர் போராட்டத்தை விடுதலைப் போராட்டத்தோடு இணைத்த வ.உ.சி

விடுதலைப் போராட்டம், தொழிலாளர் போராட்டம், அந்நியப் பொருள் புறக்கணிப்பு, சுதேசிக் கப்பல் என்று மாபெரும் ஒருங்கிணைப்போடு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நின்றனர். இந்த போராட்டத்தை எப்படி முடிவுக்குக் கொண்டு வராலாம் என்று சதிசெய்த ஆங்கிலேய ஆட்சியளர்கள் வ.உசி. மற்றும் சிவாவை கைது செய்யத் திட்டமிட்டனர்.

தொழிலாளர்களின் போராட்டத்தை விடுதலைப் போராட்டத்தின் அங்கமாக ஆக்கி, தொழிலாளர்களை விடுதலை இயக்கத்திலும் பங்கெடுக்கச் செய்தது வ.உ.சிதான் என்பதால் போராட்டம் முடிந்த சில தினங்களில், அதாவது 11.3.1908 அன்று பிரிவு 107-ன் கீழ் வ.உ.சி மற்றும் சிவாவின் மீது வழக்கு பதிய திட்டமிட்டனர்.

தடையை மீறி விபின் சந்திரபால் விடுதலை விழா கொண்டாட்டம்

வங்காளத்து சுதேசி தலைவரான விபின் சந்திரபால் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 1908-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதியை சுயராஜ்ஜிய நாளாக சுதேசி இயக்க வீரர்கள் கொண்டாடினர். திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றங்கரையில் தடையை மீறி விபின் சந்திரபால் விடுதலை விழா நடந்தது. அன்று கலெக்டர் அலுவலகத்தின் முன்னால் வ.உ.சி மற்றும் சிவா ஆகியோர் மக்களிடம் நீண்ட உரை நிகழ்த்தினர். தூத்துக்குடியில் விபின் சந்திரபால் விடுதலை விழாவைக் கொண்டாடிவிட்டு நெல்லைக்கு வந்த வ.உ.சி., சுப்பிரமணிய சிவா, பத்மநாப அய்யங்கார் உள்ளிட்டோர் 1908-ம் ஆண்டு மார்ச் 12-ம் தேதி கைது செய்யப்பட்டனர்.

வ.உ.சி கைதை எதிர்த்து எழுந்த மக்கள் எழுச்சி

வ.உ.சி கைது செய்யப்பட்ட அன்றிரவே, மக்கள் தூங்காமல் வீதிகளில் ’வந்தே மாதரம்’ என்ற முழக்கம் இட்டதாக சுதேசமித்திரன் பதிவு செய்திருக்கிறது. வ.உ.சி கைது செய்யப்பட்ட மறுநாளிலிருந்து கோரல் மில் தொழிலாளர்கள், பெஸ்ட் அண்ட் கம்பெனியின் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள். தூத்துக்குடியில் கடைகள் மூடப்பட்டது.

குதிரை வண்டிக்காரர்கள், கசாப்புக் கடைக்காரர்கள், நகர்மன்ற துப்புரவுத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். பொதுக் கூட்டங்கள் தடை செய்யப்பட்ட நிலையிலும், தூத்துக்குடி வண்டிப்பேட்டையில் கூட்டம் கூடி அடையாளம் தெரியாத ஒருவர் பேசினார். அங்கு குவிக்கப்பட்ட போலீசாருக்கு எதிராக மக்கள் கற்களை குவித்து வைத்து எறிந்து தாக்குதல் நடத்தினார்கள். காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது.

திருநெல்வேலியில் பற்றி எரிந்த எழுச்சி

தூத்துக்குடியிலிருந்து போராட்டம் திருநெல்வேலிக்கும் பரவியது. ரயில் நிலையத்தை சுற்றி இருந்த கடைகள் மூடப்பட்டன. அதுமட்டுமல்லாமல் ஆயிரக்கணக்கானவர்கள் இந்துக் கல்லூரிக்குள்ளும் நுழைந்தார்கள். இந்துக் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் இணைந்தனர். போராட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் பாளையங்கோட்டையில் இருந்து ரிசர்வ் போலீஸ் படையை வரச் செய்தார்கள். நகர மன்ற அலுவலகத்தை போராட்டக்காரர்கள் இடித்தார்கள். அங்கிருந்த ஆவணங்களைக் கொளுத்தினார்கள். அஞ்சலகங்களில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார்கள். நகரமெங்கும் இருந்த மண்ணெண்ணெய் தெருவிளக்குகள் உடைக்கப்பட்டது.

துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் பலியானார்கள்

காவல்துறை கையில் கிடைத்தவர்களையெல்லாம் அடித்தது. நெல்லையில் ஒரு சுதேசி கடை ஊழியர் தாக்கப்பட்டார். அதனால் மேலும் எழுச்சி விரிவடைந்தது. மீண்டும் திருநெல்வேலியிலும் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. அதில் நான்கு பேர் கொல்லப்பட்டார்கள். இறந்தவர்களில் ஒருவர் இஸ்லாமியர்.

நாஞ்சில் நாட்டிலும் பரவிய போராட்டம்

ஏற்கனவே வ.உ.சியுடன் கைது செய்யப்பட்ட பத்மநாப ஐயர் திருவாங்கூரில் சுதேசி பிரச்சார இயக்கத்தை ஏற்படுத்தி வைத்திருந்ததால், திருவாங்கூர் சமஸ்தானத்திற்கு உட்பட்ட நாஞ்சில் நாட்டிலும் இந்த போராட்டம் தீவிரமடைந்தது.

நாடாளுமன்றம் வரை எழுப்பப்பட்ட கேள்வி

நெல்லையில் விடுதலை உணர்வுடன் மக்கள் நடத்திய எழுச்சிப் போராட்டத்தில் நால்வர் பலியான நிகழ்வு குறித்து பிரித்தானிய நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. சென்னை சட்டசபையில் விவாதம் நடந்தது. நகராட்சிக் கட்டிடம் சேதப்படுத்தப்பட்டதால் அப்போதைய நெல்லை நகராட்சி மன்றம் எழுச்சியைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியது. கலவரத்தில் ஈடுபட்டதாக 53 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கு விசாரணை துரிதமாக மேற்கொள்ளப்பட்டு 37 பேருக்கு சிறைத் தண்டனை கிடைத்தது. பொருட்சேதங்களுக்கு தண்டத் தீர்வை வசூலிக்கப்பட்டது.

நெல்லையில் அனைத்து தரப்பு மக்களும் இணைந்து நடத்திய ‘திருநெல்வேலி எழுச்சி’ போராட்டம் பிற்காலத்தில் நடந்த பல போராட்டங்களுக்கு உந்துதலாக இருந்ததாக விடுதலைப் போராட்ட வரலாற்று ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.

’நெல்லைக் கலவரம்’ என பதிவு செய்த ஆங்கிலேய நகராட்சி

இந்த மாபெரும் மக்கள் போராட்டத்தை அன்றைய ஆங்கிலேய நகராட்சி, ‘நெல்லைக் கலவரம்’ எனப் பதிவு செய்தது. இந்தியாவை விட்டு ஆங்கிலேயர்கள் வெளியேறிய பின்னும் வரலாறு அவர்கள் பார்வையிலேயே எழுதப்பட்டிருந்தது. அதனை காங்கிரஸ் ஆட்சியாளர்கள் கூட மாற்றவில்லை. திமுகவின் ஏ.எல்.சுப்பிரமணியன் மேயராக இருந்தபோது, அந்த வரலாற்றுப் பிழை சரி செய்யப்பட்டு, ‘நெல்லை எழுச்சி தினம்’ எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சுதேசி கப்பல் நிறுவனத்தை வ.உ.சி. உருவாக்கியது எப்படி?

 

சுதேசி கப்பல் நிறுவனத்தை வ.உ.சி உருவாக்கியது எப்படி?

தற்சார்பு பொருளாதாரத்தை உருவாக்குவதன் ஒரு மாதிரியாக சுதேசி கப்பல் நிறுவனத்தை வ.உ.சி உருவாக்கியதன் பின்னணி வரலாறு.
வ.உ.சிதம்பரனார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்பு பதிவு – Madras Radicals

கப்பலோட்டிய தமிழன் என்று பெருமையுடன் நினைவுகூறப்படக் கூடிய வ.உ.சிதம்பரனார், அவரது காலத்தில் கப்பல் என்பது வணிகத்தின் அச்சாணியாக இருந்தது என்பதைக் கண்டடைந்தார். பிரிட்டிஷ் ஆதிக்கவாதிகளின் பெரும் வணிகம் இந்த கப்பலின் என்பதை அறிந்த வ.உ.சி சுதேசி கப்பல் என்பதை தற்சார்பு பொருளாதாரத்தின் வடிவமாகவே முன்னெடுத்தார்.

வ.உ.சி-க்கு முந்தைய இந்திய கப்பல் கம்பெனிகள்

அன்றைய தூத்துக்குடியிலிருந்து கொழும்புவிற்கு தினமும் பிரிட்டிஷ் இந்தியா ஸ்டீம் நேவிகேசன் கம்பெனியின் கப்பல்கள் சென்று கொண்டிருந்தது. சில இந்தியர்களும் கப்பல் நடத்திக் கொண்டிருந்தனர். 1884-ம் ஆண்டு கொல்கத்தாவில் ஜானகி நாத் உள்நாட்டு நதிப் போக்குவரத்து நாவாய் சங்கத்தைத் தொடங்கினார். அவருக்கு சொந்தமாக சரோஜினி, பாக்யலட்சுமி, ஸ்வதேசி, பாரத், லார்டரிப்பன் எனும் ஐந்து கப்பல்கள் இயங்கியது.

பிரிட்டிஷ் கப்பல் கம்பெனியின் பல்வேறு சதிகளுக்கு, அரசின் ஆதரவு இருந்தாதல் சுதேசிக் கப்பல் கம்பெனியின் முதல் முயற்சி முறியடிக்கப்பட்டது. அடுத்து 1897-ல் கிழக்கு வங்க நதிப் போக்குவரத்து கப்பல் கம்பெனி தோன்றியது. 1906 முதல் 1908 வரையிலான ஆண்டுகளில் இது வீறுபெற்று நடந்தாலும், பிரிட்டிஷ் கப்பல் கம்பெனியின் சதியினால் வீழ்த்தப்பட்டது.

தனுஷ்கோடி ராசு என்ற இந்திய கிறித்துவப் பணக்காரர் பொதுமக்கள் நலனுக்காக 1890-ம் ஆண்டு பிரிட்டிஷ் கப்பலுக்கு எதிராக தமிழ்நாட்டில் கப்பல் விட்டார்.

பிரிட்டிஷ் கடல் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து ஆதங்குடி செட்டியார் குடும்பத்தினர் தமிழ்நாட்டுக்கும் ஆந்திராவிற்கும் இடையில் ந.மு கம்பெனி என்ற பெயரில் சரக்கு கப்பல் கம்பெனி நடத்தினர்.

அதேபோல நாகப்பட்டினத்திற்கும் காக்கிநாடாவிற்கும் இடையில் சி.வ கப்பல் கம்பெனி என்ற பெயரில் சி.வ.நல்லபெருமாள் பிள்ளையின் கப்பல் ஒன்று பிரிட்டிஷ் இந்தியா கம்பெனிக்கு எதிராக ஓடியது. இந்த கப்பல் கம்பெனியின் படகுகள் மீது தொடர்ச்சியாக தங்கள் கம்பெனியின் படகுகளை மோதவிட்டு நஷ்டம் ஏற்படுத்தும் வேலையை பிரிட்டிஷ் கப்பல் கம்பெனி செய்தது. இன்னும் பல இடைஞ்சல்கள் செய்து அந்த கம்பெனியை மூடினர்.

இந்த கம்பெனிகள் அனைத்தையும் பிரிட்டிஷ் அரசு ஒடுக்கிய விதங்களைப் பார்க்கும்போது, உள்நாட்டில் உள்ள அனைத்து தொழில் முயற்சிகளையும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் ஒடுக்க நினைத்து செயல்பட்டது தெரியவருகிறது.

பிரிட்டிஷாரின் சதியை உடைத்து சுதேசி கப்பல் நிறுவனத்தை உருவாக்க முயன்ற வ.உ.சி

இவையனைத்தும் நாட்டு மக்களிடம் வெள்ளையர் மீதான வெறுப்பையும், கோபத்தையும் ஏற்படுத்தியது. தங்களுக்கென்று ஒரு தனி கப்பல் நிறுவனம் வேண்டும் என்று தமிழக வியாபாரிகள் நினைக்கத் துவங்கினர்.

இதனை வ.உ.சி,

”நமது சுதேசம் ஷேமத்தையடைந்து முன்னாளின் மேலான நிலைமைக்கு வருவதற்கு சகல தொழில்களிலும் வியாபரங்களிலும் மிக்க லாபத்தைக் கொடுப்பதான கப்பல் நடத்தும் தொழிலை நாம் கைக்கொள்வதே முக்கிய சாதனமாகும்”

என்று எழுதினார்.

கப்பல் நிறுவனம் மட்டுமல்ல பின்னாளில் சுதேசி நூல் ஆலைகள் உருவாக்கும் எண்ணமும் அவருக்கு இருந்தது. இவை அனைத்தும் பிரிட்டிஷாரை வெளியேற்றுவதற்கான வழிகள் என்றும் வ.உ.சி திட்டமிட்டிருந்தார்.

சுதேசிக் கப்பல் நிறுவனத்தின் பங்குகள் மற்றும் நிதி திரட்டல்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு நாளான அக்டோபர் பத்தாம் நாள் 1906-ம் ஆண்டு சுதேசி கப்பல் நிறுவனம் பதிவு செய்யப்பட்டது. 25 ரூபாய் விலை வைத்து 40,000 பங்குகள் வழியாக பத்து லட்சம் ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டனர். சென்னையில் அலுவலகம் எடுத்து கப்பல் நிறுவனம் இயங்கியது.

பாலவநத்தம் ஜமீன்தார் பாண்டித்துரை தேவர் 2000 பங்குகளை வாங்கினார். கே.வி.ராகவாச்சாரி, கந்தசாமி கவிராயர் என்று பலரும் தீவிரமாக பங்குகளைத் திரட்டினர். பம்பாயிலும் கல்கத்தாவிலும் பங்குகள் திரட்டப்பட்டன.

பம்பாய் பெரும் வணிகர் கே.ஜெ.முகம்மது பக்கீர் சேட், கப்பல் நிறுவனத்தின் 8000 பங்குகளை வாங்கினார். சுதேசி கப்பல் நிறுவனத்தின் முதலீட்டில் மூன்றில் ஒரு பங்கு இசுலாமியர்கள் கொடுத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

வ.உ.சி விடுத்த அறைகூவல்

பாண்டித்துரை தேவரை தலைவராகக் கொண்டு கப்பல் நிறுவனம் இயங்கத் தொடங்கியது. பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்பை முதல் நோக்கமாகக் கொண்டு கூட்டுறவு முறையில் உருவாக்கப்பட்ட முதல் கப்பல் நிறுவனமான இது வ.உ.சி-யின் அரும்பெரும் முயற்சியில் விளைந்துதான்.

ஏனென்றால்
“நமது சுதேசத்தை அந்நிய நாட்டார் கைப்பற்றிக் கொள்வதற்கு ஏதுவாக இருந்ததும், நம் தேசத்து பொருட்களையெல்லாம் அந்நிய நாட்டான் கொண்டு போவதற்கு ஏதுவாய் இருந்ததும், நமக்கு மிக்க லாபத்தை தரக்கூடிய கைத்தொழில் வியாபாரம் எல்லாம் அந்நிய நாடுகளுக்குக் கொண்டுபோவதற்கு ஏதுவாக இருந்ததும், அன்னிய நாட்டார் நம் தேசத்தின் மீது பிரவேசித்து நாம் நீடித்த நாளாகக் கைக்கொண்டிருந்த கப்பல் தொழிலை நம்மிடமிருந்து கைப்பற்றிக் கொண்ட தொன்றே. ஆதலால் நாம் அதி சீக்கிரமாகவும், அதிகமாகவும் கைக்கொள்ளத் தக்கதும் கைக்கொள்ள வேண்டியதுமான தொழில் கப்பல்கள் நடத்துவதே”

என்று அறைகூவல் விடுத்து இந்த காரியத்தை செய்து முடித்தவர் அவரே.

துவக்கத்தில் வாடகைக்கு எடுக்கப்பட்ட கப்பல்

துவக்கத்தில் கப்பல் நிறுவனத்திற்கு சொந்தமாக கப்பல் இல்லை. ’ஷாலேன் ஸ்டீமர்ஸ் கம்பெனி’-யிடமிருந்து கப்பல்களை வாடகைக்கு எடுக்க வேண்டியதாக இருந்தது. சுதேசி கப்பல் நிறுவனத்தை ஆரம்பத்திலேயே ஒடுக்க நினைத்த ’பிரிட்டிஷ் இந்திய ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி’யானது ’ஷாலேன் ஸ்டீமர்ஸ் கம்பெனி’யை வாடகைக்கு கப்பல் தரவிடாமல் தடுத்தது. அந்த நிறுவனம் கப்பல்களை வாடகைக்குக் கொடுக்கும் ஒப்பந்தத்தையும் ரத்து செய்தது.

சொந்த கப்பல்

உடனடியாக வ.உ.சி கொழும்பு சென்று வேறு ஒரு கப்பலை வாடகைக்கு எடுத்து வந்தார். ஆனாலும் சொந்தமாக கப்பல் வேண்டும் என்பதால் வ.உ.சி வட இந்தியாவிற்குப் பயணம் மேற்கொண்டார்.

“திரும்பினால் கப்பலுடன்தான் திரும்புவேன், இல்லையெனில் கடலில் விழுந்து மாண்டு போவேன்”, என்று சூளுரைத்துச் சென்றார் வ.உ.சி. அதன்பிறகு ’எஸ்.எஸ். காலியோ’ என்ற கப்பலுடன் திரும்பினார்.

மக்களிடையே வளர்ந்த சுதேசி கப்பல் நிறுவனத்தை தாக்கத் தொடங்கிய பிரிட்டிஷ் அரசு

சுதேசி கப்பல் நிறுவனம் மெதுமெதுவாக வளர்ந்தது. மக்கள் சுதேசிக் கப்பலிலேயே பயணம் செய்தனர். வணிகர்கள் தங்கள் சரக்குகளை சுதேசிக் கப்பலிலேயே அனுப்பினர். பிரிட்டிஷ் இந்திய கப்பல் நிறுவனம், சுதேசிக் கப்பலுடனான போட்டியை சமாளிக்க முடியாமல் கட்டணத்தைக் குறைக்க முடிவு செய்தது. கடைசியில் இலவசமாக அழைத்துச் செல்வதாகக் கூறியது.

அன்றைய பிரிட்டிஷ் அரசானது ’பிரிட்டிஷ் இந்தியா’ கப்பல் நிறுவனத்திற்கு ஆதரவாக மட்டுமல்ல, சுதேசி கப்பலுக்கு எதிராகவும் பல சதிகளில் ஈடுபட்டது. பிரிட்டிஷ் கப்பலில் மட்டுமே பயணம் செய்ய வேண்டும் என்று அரசு அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பியது.

கடற்சுங்க அதிகாரிகள், சுகாதார முறைகளை மேற்கொள்ளும் டாக்டர்கள், துறைமுக அதிகாரிகள் அனைவரும் ஒட்டு மொத்தமாகவும், தனித்தனியாகவும் சுதேசிக் கப்பலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு பல வழிகளில் தொல்லைகளைக் கொடுத்து, அவர்களது பயணத்தில் தொடர்ந்து வெறுப்புணர்வை உருவாக்கி வந்தார்கள்.

கோரல் மில் தொழிலாளர்களின் போராட்டத்தின் போது, சுதேசிக் கப்பல் நிறுவனத்தில் புகுந்து கலெக்டர் ஆஷ் தாக்குதல் நடத்தினார். வ.உ.சி-யும் சிறையில் அடைக்கப்பட்டதால் கப்பல் நிறுவனம் மூடப்பட்டது. வ.உ.சி தனது சுயசரிதையில் தான் சிறைப்பட்டதற்கும், சுதேசி கப்பல் நலிவடைந்ததற்கும் கலெக்டர் ஆஷ் தான் காரணம் என்று பதிவு செய்துள்ளார்.

தற்சார்பு பொருளாதாரத்தின் மாதிரியாக சுதேசிக் கப்பல்

அந்நியத் துணி எதிர்ப்பு, அந்நியக் கப்பல் எதிர்ப்பு, தொழிலாளர் போராட்டம் என அனைத்து போராட்டங்களையும் தேச விடுதலை எனும் ஒரு இலக்கை நோக்கிய பயணமாக வ.உ.சி ஒருங்கிணைத்தார். எல்லா தொழில்களையும் தற்சார்பாக இந்தியர்கள் நடத்த வேண்டும் என்ற இலக்கின் துவக்கமாகத்தான் கப்பல் என்பதை வ.உ.சி பார்த்தார்.

”நமது தேசம் மற்ற தேசங்களைப் பார்க்கிலும் மேலான நிலைமைக்கு வருவதற்கு, நாம் இவ்வுலகில் காணும் துறைமுகங்களுக்கு எல்லாம் நமது சுதேசிக் கப்பல்கள் போகி வரும்படி இருக்கச் செய்ய வேண்டியது அவசியமாயிருக்கிறது. நாம் பல வருஷங்களாக இழந்துவிட்ட தொழில்களை எல்லாம் ஒவ்வொன்றாக மெல்ல மெல்ல கைக்கொள்ள வேண்டும்”

என்று சுதேசி கப்பலுக்கான அழைப்பிலேயே வ.உ.சி குறிப்பிட்டார்.