Tuesday, October 19, 2021

பெரியார் பேசியது தமிழ் தேசியமல்ல; அவர் வலியுறுத்தியது தனித் தமிழ் நாடே! –தலைவர் கொளத்தூர் மணி.

 பெரியார் பேசியது தமிழ் தேசியமல்ல; அவர் வலியுறுத்தியது தனித் தமிழ் நாடே! –தலைவர் கொளத்தூர் மணி.

மீண்டும் மீண்டும் பெரியாரை கொச்சைப்படுத்தும் சில தமிழ்த் தேசியவாதிகளுக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி விரிவாக பதிலளித்தார். டிசம்பர் 24 அன்று வடசென்னை பெரம்பூரில் நடந்த கூட்டத்தில் கழகத் தலைவர் ஆற்றிய உரை:

இன்று பெரியாரின் நினைவு நாளில் நாம் கூடியிருக் கிறோம். வழக்கமாக பெரிய அளவில் எடுக்கப்படும் பிறந்த நாள் விழாக்களைவிட, நினைவு நாள் விழாக்கள்தான் மிகவும் தேவையானதும், பொருத்தமானதும் என்று நாம் கருதுகிறோம். பிறந்த நாள் விழாக்களை அந்தந்த தலைவர்கள் வாழுகின்ற காலம் வரை எடுப்பார்கள். அவர்களிடமிருந்து ஏதாவது பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு இப்பொழுதெல்லாம் பார்க்கிறோம். அவர்களுக்கெல்லாம் கூச்சமாக இருக்கிறதோ இல்லையோ, அவர்களுக்கு கொடுக்கும் அடைமொழிகளை பார்த்து நமக்கு கூச்சமாக இருக்கிற அளவுக்கு, பல்வேறு அடைமொழிகளை கொடுத்து சுவரொட்டிகளிலும், பதாகைகளிலும் விளம்பரம் செய்கிறார்கள். ஆனால் மறைந்துவிட்ட தலைவர்களுக்கு நினைவு நாள் எடுப்பது என்பதுதான், அவர்களுடைய கொள்கைகளை, அவர்கள் ஆற்றிய தொண்டினை, அவற்றை நாம் தொடர்ந்து எடுத்துச் செல்ல வேண்டிய தேவையை, இவை எல்லாவற்றையும் எண்ணி பார்க்கிற நிகழ்ச்சியாகவும் இருக்கும். நினைவு நாள் கூட்டம் என்பதுதான் ஒரு இயக்கத்திற்கு மிகவும் தேவையானது என்ற அடிப்படையில், இன்று நாம் பெரியார் நினைவு நாள் எடுக்கிறோம்.

நம் நாட்டில் பல தலைவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். மிகப் பெரிய தலைவராக கருதப்பட்ட மனிதர்களுக்கும் மேலாக கருதப்பட்ட ‘மகாத்மா’க்களெல்லாம் வாழ்ந்திருக் கிறார்கள். அவர்களுக்கெல்லாம் நினைவு நாள் என்பது, அவருடைய படத்திற்கு மாலை அணிவித்து வணங்குவதை படம் பிடிக்க, செய்தியாளர்களை ஏற்பாடு செய்வது என்ற அளவோடு முடிந்து விடுகிறது. நினைவு நாள் கூட்டங்களில் அவருடைய கொள்கைகளைப் பற்றிப் பேசுவதில்லை. அவர் நம்மிடம் என்ன எதிர்பார்த்தார் என்பதையோ, நாம் அவருடைய வழியில் ஏன் செல்ல வேண்டும் என்ற தேவையை விளக்குவதற்கோ எந்த முயற்சியும் செய்வ தில்லை. தமிழ்நாட்டிலும் பெரியாருக்கு இணையாக (வயதில்) வாழ்ந்த தலைவர் ஒருவர் இருந்தார். இந்த நாட்டின் பொறுப்பில் இருந்தார். குடிஅரசு தலைவருக்கு இணையான, கவர்னர் ஜெனரலாக இருந்தார். பிறகு உள்துறை அமைச்சர், இலாகா இல்லாத அமைச்சர், முதலமைச்சர் என இருந்து ஊராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதற்குள் இறந்து போன இராஜாஜி, அவர் உயிரோடு இருந்த காலத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தினர், அவரை மூதறிஞர் என்றெல்லாம்கூட பாராட்டினர். இன்று அவரைப் பற்றிப் பேச ஆள் இல்லை. சேலம் மாநகராட்சி அலுவலகம் அருகில் இராஜாஜி சிலை இருக்கிறது. அவரின் பிறந்த நாளிலும், நினைவு நாளிலும், நகராட்சி ஊழியர்கள் சலிப்போடு ஒரு மாலை அணி விக்கிறார்கள். வேறு யாரும் மாலைகூட அணிவிப்பதில்லை.

ஆனால், பெரியார் மறைந்து இவ்வளவு காலங்களுக்குப் பின்னால், முப்பத்தி ஏழு ஆண்டுகள் கடந்த பின்னாலும், அவருடைய கொள்கைகளைப் பேச, செயலாற்ற பல இயக்கங்கள், பெரியாரை இன்றும் பேசியாக வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் பல இயக்கங்கள் இருப்பதை பார்க்கிறோம். பெரியார் வாழ்ந்த காலத்தில், அவரை விமர்சித்தவர்கள் கூட, இன்று பாராட்டி போற்றுவதை பார்க்கிறோம். பொதுவுடமை இயக்கங்கள் எல்லாம் அவரைப் பற்றி பேசினர். முதலாளித்துவ சிந்தனையாளர் என்று சொன்னார்கள். “அடிக் கட்டுமானத்தில்” இல்லாத சமயத்தை, சாதியைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார் என்று எகத்தாளம் செய்தவர்களெல்லாம், இன்று அவர் கொள்கைகளைத் தான் பேசிக் கொண்டிருக் கிறார்கள். அதை செயல் திட்டமாக வைத்துக் கொண் டிருக்கிறார்கள். உலகத்தில் தங்களைவிட அறிவாளி கள் யாரும் இல்லை என்று கருதிக் கொண்டிருக்கிற ஒரு இயக்கம் சி.பி.எம். கட்சி. அவர்கள் பெரி யாரைப் பற்றி செய்கிற விமர்சனங்கள் (பெரியாரை மட்டும் அல்லாமல், தமிழர், தமிழீழம் பற்றியும்) எதிராகத்தான் இருக்கும். இன்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி என்று வைத்துக் கொண்டு, சாதி ஒழிப்பை ஒரு செயல் திட்டமாக வைத்திருக்கிறார்கள். அதை நாம் விமர்சிக்கவில்லை; வரவேற்கிறோம். பெரியார் இறுதியாக கருவறை நுழைவு போராட்டத்தை அறிவித்திருந்தார். அனைத்து சாதி யினருக்கும் அர்ச்சகர் ஆகும் உரிமை வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்த மன்னார்குடி ராஜகோபால்சாமி கோவிலின் கருவறையில் தொண்டர்களோடு நுழையப் போவதாக அறிவித்தார். அப்போது வரவேற்றார்களோ இல்லையோ, இப்பொழுது வருகிற ஜனவரி 30-ம் நாளில், இந்திய பொதுவுடமைக் கட்சி அதே மன்னார்குடி ராஜ கோபால்சாமி கோவிலில் கருவறை நுழைவு போராட்டத்தை அறிவித்திருக்கிறார்கள். இன்னொரு பக்கம் மக்கள் கலை இலக்கிய கழகம், பெரியார் சொன்ன, சமய வழிபாட்டு இடங்களிலும் சமத்துவம், தமிழ் மொழிக்கு முன்னுரிமை வேண்டும் என்பதைப் பற்றியே பேசுகிறார்கள்.

பெரியார் 1925-க்கு முன்னால் பேசியவற்றை, சுமார் எண்பது, எண்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னால் இப்பொழுது எல்லோரும் பேச தொடங்கியிருக்கிறார்கள். ஒரு நல்ல மருத்துவர் என்பவர் நோயை துல்லியமாக தெரிந்து கொள்வார். அதுவே பாதி மருத்துவம் முடிந்தது போல என்று சொல்வார்கள். அதேபோல பெரியார், இந்த சமுதாயத்தின் நோயை மிகத் துல்லியமாக அறிந்திருந்தார். அதற்கான மருந்தை மிகச் சரியாக மக்களிடத்தில் கொண்டு போய் கொடுத்தார் என்பதை பெரியார் தொண் டர்களைவிட அவர்கள் சரியாக புரிந்து கொண்டிருக் கிறார்கள். இது ஒரு பக்கம். இன்னொரு பக்கம், பழுத்த மரத்தின் மீது தான் கல்லடி படும் என்று சொல்வார்கள். இப்பொழுது அரசியல்வாதிகளுக்கு தமிழ்நாடு முழுவதும் ஒரே ஒரு பழுத்த மரமாக கண்ணுக்கு தெரிவது பெரியார் தான். பெரிய தத்துவங்களை பேசுகிறவர்கள் எல்லாம், பெரியார் மீது தங்கள் விமர்சனங்களை பேச துடிக் கிறார்கள். முயற்சிக்கிறார்கள். அவர் மீது குற்றச்சாட் டுக்களை வைத்து தங்களை அறிவாளிகளாக காட்டிக் கொள்ள நினைக்கிறார்கள். தமிழ் தேச பொதுவுடமை கட்சியின் பொதுச் செயலாளர் மணியரசன் கூட, பெரியாரை தமிழ் தேசத்தின் தந்தையாக ஏற்றுக் கொள்ள முடியாது என்று சொல்லியிருக்கிறார். (அவரிடம் நாம் சான்றிதழ் கேட்டு நிற்கவில்லை) பெரியார் குழப்பமாக பேசினார் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

பெரியார், தமிழ் தேசியமே பேசவில்லை. தனி தமிழ்நாடு வேண்டும் என்று தான் பேசினார் என்பதை இவர்கள் முதலில் அறிந்து கொள்ள வேண்டும். தமிழ் தேசியம் என்றால், ஸ்டாலினும், லெனினும் ஒரு கொள்கையை உண்டாக்கி வைத்து விட்டார்கள் என்பதற்காக பெரியார் இங்கு தனி தமிழ்நாடு கேட்கவில்லை. ரஷ்யாவில் தைத்து விட்ட செருப்பை எடுத்துக் கொண்டு இங்குள்ள காலை வெட்டியவர் அல்ல பெரியார். இங்குள்ள காலை அளந்து பார்த்து செருப்பு தைத்தார் – அதுதான் தனி தமிழ்நாடு போராட்டம். பிரிந்து செல்லும் உரிமையோடு இணைந்து வாழ விரும்புகிற சிந்தனை அவருக்கு இருக்கவே இல்லை. நாம் இணைந்து வாழ முடியாது, பிரிந்தே சென்றாக வேண்டும் என்பதை அழுத்தமாக சொன்னவர். “அருகோ” எனும் தோழர் அரு.கோபாலன் சொல்லிக் கொண் டிருக்கிறார் “திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட சேலம் மாநாட்டு நாள் அன்று காலை வரை, தமிழர் கழகம் என்று பெயர் வைப்பதாக இருந்ததாம். நீங்கள் கன்னடராயிற்றே, தமிழர் கழகம் என பெயர் வைப்பதா என்று, சத்யமூர்த்தி அய்யர் பெரியாரிடம் தொலைபேசியில் கேட்டாராம். உடனே திராவிடர் கழகம் என பெரியார் மாற்றிக் கொண்டாராம்”. சத்யமூர்த்தி அய்யர் இறந்து மூன்று ஆண்டுகளுக்கு பிறகு தான், அந்த மாநாடே நடைபெற்றது. இறந்து போனவர் எப்படி தொலைபேசியில் பேச முடியும் என நமது பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் எழுதினார். பிறகு இராஜாஜி பேசியதாக மாற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். எப்படியும் நுணுக்கமான கேள்விகளைப் பார்ப்பனர்கள்தான் கேட்க முடியும் என்பதில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள் போலும். 1939 முதல் தமிழர், திராவிடர் என்பதை பற்றி பேசி விவாதிக்கப்பட்டு, பெரியார் தெளிவான விளக்கத்தையும் சொல்லியிருக்கிறார். தமிழர் கழகம் என்பது மொழி போராட் டத்திற்கு தான் பயன்படும். சமூக விடுதலை போராட்டத்தின் ஒரு பகுதி தான் மொழி போராட்டமே யொழிய, அதுவே முழு போராட்டமாகி விடாது. இந்தி எதிர்ப்பு என்பது மொழி போராட்டம் அல்ல, தமிழரின் கலை, இலக்கியம், பண்பாடு, சமயயியல் இவற்றில் ஆரியத்தை, மனுதர்மத்தை புகுத்த நினைக்கும் சூழ்ச்சிக்கு எதிரானது என்றே பெரியார் சொன்னார்.

பெரியார் மறைந்த அடுத்த மாதமே, 1974 ஜனவரியில் திராவிடர் கழகத்தால் ஒரு பிரச்சார பயணம் தொடங்கப் பட்டது. அப்பொழுது மணியம்மையார் தலைவராக இருந்த காலம். “பெரியார் அவர்கள் விட்டுச் சென்ற பணிகளை, அவர் போட்டு தந்த பாதையில், எவ்வித சபலங்களுக்கும் ஆளாகாமல், செய்து முடிப்போம்” என்று சூளுரையை பொதுக் கூட்டத்தில் நாங்களெல்லாம் உறுதிமொழியாக எடுத்தோம். உறுதிமொழியை எங்களுக்கு சொன்ன மணியம்மையார் மறைந்தார். அவருக்கு பின்னால் சொல்லிக் கொண்டிருந்தவர் சூளுரையை மறந்து விட்டார். இப்பொழுது நாங்கள் சொல்ல வேண்டிய தேவை இருக்கிறது. பெரியார் என்ன சொல்லியிருக்கிறார் என்பதை முதலில் மக்களுக்கு தெரியப்படுத்தினால் தான், அதை பின்பற்றச் சொல்ல முடியும். பெரியாரின் நூல்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்த வீரமணி அவர்கள், நாங்கள் வெளியிட்ட பெரியாரின் நூல்களுக்கு, ‘குடிஅரசு’ தொகுப்பு வெளியீட்டுக்கு நீதிமன்றத்தில் தடை வாங்கினார். பெரியார் நீண்டகாலமாக திராவிடர் என்ற சொல்லை எவ்வளவு அழுத்தமாக பதிவு செய்திருக்கிறாரென்பது அந்த குடிஅரசு பக்கங்களை புரட்டும்போது தெரிகிறது. திராவிடர் என்ற சொல்லை இன விடுதலைக்கு, சமூக விடுதலைக்கு அவர் பயன்படுத்தினார். நம்மை அடிமையாக்கிய ஆரியத்திற்கு எதிரான சொல்லாக திராவிடத்தை பார்த்தார். அரசியல் விடுதலைக்கு தமிழ்நாடு தமிழருக்கே என்று பேசினார். சமூக விடுதலை என்று வருகிறபோது திராவிடர் என்ற சொல்லைப் பயன்படுத் தினார்.

1944 இல் தென்னிந்திய நல உரிமை சங்கம், திராவிடர் கழகம் என மாற்றப்படுவதற்கு முன்பே, சுயமரியாதை இயக்க தலைமையோடு, நீதிகட்சி தலைமையையும் பெரியார் ஏற்றுக் கொண்டிருந்த காலத்திலேயே, பல்வேறு பகுதிகளில் திராவிடர் கழகம் என்ற அமைப்பு தோற்றுவிக்கப்பட்டு விட்டன. 1942 ஆம் ஆண்டிலேயே திருச்சியில் உள்ள பொன்மலையில் திராவிடர் கழக ஆண்டு விழா கூட்டத்தில் பெரியார் கலந்து கொண்டு பேசுகிறார். 1943 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கோவையில் திராவிடர் கழகம் என்ற அமைப்பை துவங்கி வைக்கிறார். 1944 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், சேலத்தில் உள்ள செவ்வாய்பேட்டையில் திராவிடர் கழகத்தின் முதலாம் ஆண்டு நிறைவு விழா கூட்டத்தில் பேசுகிறார். திராவிடர் கழகம் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் இயங்குகிறது என்றாலும், அதிகார பூர்வமாக பெயர் மாற்ற எப்பொழுது முடிவு செய்தார்கள் என்றால், சேலம் செவ்வாய்பேட்டை பகுதியிலுள்ள தேவாங்கர் பள்ளிக்கூடத்தில் நீதிக்கட்சியின் தலைமை நிர்வாகக் குழுக் கூட்டம் பெரியார் தலைமையில் நடை பெற்றிருக்கிறது. 1943 ஆம் ஆண்டு நவம்பர் மாத குடிஅரசில் (26.11.1943) அக்கூட்டத்தின் தீர்மானங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தென்னிந்திய நல உரிமை சங்கம் என்பதை, தமிழில் திராவிடர் கழகம் என்றும், ஆங்கிலத்தில் சௌத் இந்தியன் திரவிடியன் பெடரேசன் (South Indian Dravidian Federation) என்று பெயர் மாற்றப்பட வேண்டும் என்றும், கடந்த திருவாரூர் மாநாட்டில் திட்டமிட்ட படி அடுத்த ஆண்டு சேலத்தில் நடைபெறவுள்ள மாநாட்டில் இதை அறிவிப்பது என்றும் முடிவு செய்யப்படுகிறது. ஆனால் இன்று தமிழ் தேசியவாதிகள், காலையில் முடிவு செய்து, மாலையில் பெரியார் மாற்றிக் கொண்டதாக, பொய்ப் பிரசச்hரத்தை செய்து கொண்டிருக்கிறார்கள். காரணம் பெரியார் ஒரு பழுத்த மரம் என்பதுதான்.

பெரியார், திராவிட நாடு என்று சென்னை மாகாணத்தைதான் சொன்னார். நான்கு நாடுகளின் கூட்டு அரசே, திராவிட நாடு என்று அண்ணா தான் சொன்னார். அண்ணாகூட பிரிந்து செல்லும் உரிமையோடு கூடிய தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய நாடுகளின் கூட்டு அரசாகத் தான் திராவிட நாட்டை கூறினார். மொழி வழி பிரிந்தும், இன வழி கூடியும் உள்ள நாடாகத்தான் திராவிட நாட்டை கூறினார். முப்பது மாநிலங்கள் கொண்ட இந்தியாவில் இருந்து பிரிந்து செல்லும் உரிமையோடு நான்கு நாடுகள் கொண்ட அண்ணாவின் திராவிட நாட்டை ஏன் விமர்சிக்கிறார்களோ, நமக்கு புரியவில்லை.

அப்படித்தான் எல்லைப் போராட்டத்தில் பெரியார் அக்கறை காட்டவில்லை என்றும், இப்பொழுது ஒரு பிரச்சாரம் செய்து வருகிறார்கள். 1953 இல் ஆந்திரா பிரிந்தபோதுதான் இந்த சிக்கல் வந்தது. அப்போது நடந்த இரு நிகழ்ச்சிகளில் ஒன்று, திருத்தணியில் நடந்த ஒரு எல்லைப் போராட்டம், மற்றொன்று சென்னை நகரை ஆந்திராவுக்குக் கேட்டார்கள் என்பது. இதில் பெரியார் என்ன நிலைப்பாடு எடுத்தார் என்றால், 1956 ஆம் ஆண்டு, வேலூரில் ஒரு கூட்டத்தில் பெரியார் பேசுகிறார், எல்லைப் போராட்டத்தில் நீங்கள் கலந்து கொள்ளவில்லையே என்ற கேள்வி வருகிறது. அதற்கு அவர் விளக்கம் அளிக்கிறார். “முதல் கூட்டத்தில் ம.பொ.சி. உட்பட நாங்கள் எல்லோரும் கலந்து கொண்டோம். எல்லைப்போராட்டத்தைப் பற்றி பேசினோம். அப்போது நான் ஐந்து திட்டங்களை முன் வைத்தேன். எல்லைப் போராட்டத்தில் கலந்து கொள்ள தயார். இந்தப் போராட்டத்தோடு இந்தி எதிர்ப்பையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். படை, போக்குவரத்து, வெளியுறவு துறை தவிர அனைத்து அதிகாரங்களும் மாநிலத்திற்குதான் இருக்க வேண்டும். சென்னை ராஜ்யம் என்பதை தமிழ்நாடு என பெயர் மாற்றப்பட வேண்டும். காங்கிரஸ் கட்சி தட்சிண பிரதேசம் என்ற அமைப்பை உருவாக்க நினைக்கிறது அதை எதிர்க்க வேண்டும்” – என்று.

இந்த ஐந்து கோரிக்கைகளில், தமிழ் தேசியத்திற்கு எதிராக எதுவும் இல்லை. ஆனால், தமிழ் தேசத்தின் தந்தையாக கருதப்படுகிற ம.பொ.சி. சொன்னார் – அவர், “நான் இந்தியன் என்பதால் இந்தி மொழியை ஏற்றுக் கொள்கிறேன். நான் இந்து என்பதால் என் சமய சடங்குகளில், சமஸ்கிருதத்தை ஏற்றுக் கொள்கிறேன்” என்றவர். இதை இரண்டையும் எதிர்த்த பெரியார் வைத்த அந்த கோரிக்கைகளுக்கு, “கம்யூனிஸ்டுகள் ஏற்றுக் கொள்ளவில்லை, எனவே வேண்டாம்” என ம.பொ.சி. சொன்னார். ம.பொ.சி. உயிரோடு இருந்த காலத்தில் பெரியார் இதை பதிவு செய்துள்ளார். தாராளமாக நீங்கள் போராடுங்கள், நாங்கள் உங்களோடு இணைந்து நிற்க முடியாது என்று பெரியார் தெரிவித்து விட்டார்.

அதன் பின்னால் சென்னையைப் பற்றி விவாதம் வந்தபோது தான், நான் விஸ்தீரணத்திற்கு போராடுபவன் அல்ல. விடுதலைக்கு போராடுபவன் என்று அழுத்தமாக பெரியார் சொன்னார். இருந்தாலும் இதில் ஏன் சம்பந்தப் பட்டிருக்கிறேன் என்றால், மொழிவாரி என்று பேசுகிறவர்கள், மொழிவாரியாக பிரிந்துவிட்டு, மொழி அல்லாத நாட்டிலும் ஆதிக்கம் செலுத்த பார்க்கிறார்களே என்ற கருத்துதானே அல்லாமல், மற்றபடி சென்னை நகரம் தமிழர்களுக்கோ, தமிழ்நாட்டிற்கோ பெரிய தொண்டு செய்திருக்கிறது. செய்து வருகிறது. அல்லது செய்ய முன்வரும் என்பதற்காக அல்ல என்று பேசியிருக்கிறார். இந்த இரண்டையும் சொன்ன பெரியாரின் கருத்துகளை, எங்கள் பழைய தலைவர் (வீரமணி) மக்களிடம் கொண்டு சேர்த்திருந்தால், இந்த தமிழ் தேசியவாதிகள் சொல்லும் புரட்டுகளை மக்கள் புரிந்திருப்பார்கள். பெரியாரின் கொள்கைகள் திடலுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறது. வெளியே கொண்டு வருபவர்களையும், தடுக்க பார்க்கிறார்கள். குடிஅரசு வழக்கில் பார்த்திருப்பீர்கள். உச்சநீதிமன்றத்தில் தொடுத்த மேல் முறையீட்டு மனுவை விசாரணைக்கே தகுதி அற்றது என்று தள்ளுபடி செய்த செய்தி, வீரமணி அவர்களுக்கு பிறந்த நாள் பரிசாக கிடைத்தது. கோரிக்கைளை மாற்றிக் கொள்கிறோம் என்ற மனுவை, இப்பொழுது உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து பெரியார் நினைவு நாள் பரிசாக அவருக்கு கொடுத்திருக் கிறது.

பெரியார் கொள்கைகளை எடுத்துச் சொல்லுகிற, நடைமுறைபடுத்துகிற, பெரியாரின் வழியில் தொடர்ந்து போராடுகிற இயக்கமாக, பெரியார் திராவிடர் கழகம் இருக்கிறது. எங்களுக்குள்ள இயக்கமாக, பெரியார் திராவிடர் கழகம் இருக்கிறது. எங்களுக்குள்ள சக்தி குறைவாக இருந்தாலும், அதை முழுமையாக பயன்படுத்தி, செயல்படுத்த வேண்டும் என்று கருதுகிறோம். அதன் வெளிப்பாடாகத்தான், பல போராட்டங்களை நடத்துகிறோம். அண்மையில் ஆயுத பூஜை அன்று கூட ஒரு போராட்டம் நடந்தது. அரசியல் சட்டம் எழுதப்பட்ட போதே, இது மதசார்பற்ற நாடு என்று எழுதி விட்டார்கள். அரசு அலுவலகங்களை கோவிலாக்காதே, கடவுள் படங்கள் இருந்தால் அகற்றுங்கள் என அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது ஆணை பிறப்பித்தார். அதன் பின்னர், அடிக்கடி கலவரம் ஏற்பட காரணம் என்ன என்பதை கண்டறிய, 1994 ஆம் ஆண்டு பா.ஜ.க. ஆட்சி காலத்தில், உள்துறை மூலமாக ஒரு குழுஅமைக்கப்பட்டது. அரசு அலுவலகங்களில் மதம் கலப்பதுதான் இதற்கு காரணம் என அந்த குழு அறிவுறுத்தியது. அரசு அலுவல கங்களில் கடவுள் படங்களை நீக்கவும் மத வழிபாடுகள் கூடாது என்றும், மத சுலோகங்கள் எழுதப்படக் கூடாது என்றும், மத வழிபாட்டிடங்களை கட்டக் கூடாது என்றும் இந்தியா முழுவதும் எல்லா மாநிலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்படுகிறது. தமிழ்நாட்டில் ஜெயலலிதா ஆட்சி நடக்கிறது. தலைமை செயலாளர் இப்போது இருப்பதை போலவே அப்போதும் ஒரு பார்ப்பனர்தான் (ஹரி பாஸ்கர்). அவர் அனைத்து அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். மீண்டும் 2004 ஆம் ஆண்டு எ.டி.ஜி.பி.யாக இருந்த லத்திகாசரண் (இப்போது டி.ஜி.பி.), காவல் துறையின் அனைத்து பிரிவுகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் குறிப்பாக காவலர் குடியிருப்புகளில்கூட மதவழிபாடு நடத்தக் கூடாது என்று உள்ளது. இவ்வளவு இருந்தும் தொடர்ந்து காவல் நிலையங்களில் ஆயுதபூஜை நடைபெற்று வந்தது. இவ்வாறு இந்த ஆண்டும் நடக்குமேயானால், அதை தடுக்கும் நேரடி நடவடிக்கையில் இறங்குவோம் என, பெ.தி.க. தலைமை செயற்குழுவில் நிறைவேற்றிய தீர்மானத் தின்படி, பல இடங்களில் எங்கள் தோழர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சென்னையிலும், மேட்டூரிலும் தடுத்து, வழக்குகளை சந்தித்தார்கள். பெரியார் வன்முறையை விரும்ப மாட்டார் என்று அப்போது பலர் சொன்னார்கள்.

ஆனால், பாரதிதாசன் பாடல்களை பாட நூல்களில் சேர்க்கப்பட வேண்டும் என்ற செய்திகளைக் குறிப்பிட்டு விட்டு, “எனக்கு பின்னால் இதை சொல்லவும் ஆள் இல்லை, தி.மு.க.வை தவிர இதை செய்யவும் கட்சியில்லை. அரசு அலுவலகங்களில் கடவுள் படங்களை அகற்றாவிட்டால், நானும் எனது தோழர்களும் உள்ளே நுழைந்து அகற்றுவோம்” என, 1968 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பெரியார் விடுதலை நாளேட்டில் ஒரு அறிக்கை விடுகிறார். அதை இன்று நாங்கள் செய்திருக்கிறோம்.பெரியார் அவர்கள் விட்டுச் சென்ற பணிகளை, அவர் போட்டு தந்த பாதையில், எவ்வித சபலங்களுக்கும் ஆளாகாமல், செய்து முடித்திருக்கிறோம். இது தானே நாம் பெரியார் மறைந்த வுடன் எடுத்த உறுதிமொழி.

நாம் யாரை ஆதரிப்பது, எதிர்ப்பது என்பதில் பெரியாரின் நிலைபாடு என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். எப்பொழுதும் பெரியார் ஆளுங்கட்சியை ஆதரிப்பவர் என்று பார்ப்பனர்கள் சொல்லி கொண்டிருந் தார்கள். காங்கிரஸ் கட்சியை எதிர்த்த வண்ணம் இருந்த பெரியார், 1954 இல் காமராசர் வந்தவுடன் ஆதரித்தார். அடுத்து தி.மு.க.வை ஆதரித்தார் அவ்வளவுதான்.

காமராசர் ஆட்சியின்போதுகூட காங்கிரசை ஆதரிக் கிறேன் என்பது தவறு. காமராசரைத் தான் ஆதரிக்கிறேன் என்று பலமுறை தெளிவாக கூறியிருக்கிறார். காமராசருக்கு பின், ஆட்சிக்கு வந்த பக்தவத்சலத்தை எதிர்த்து, 1965இல் பக்தவச்சலம் ஆட்சி கண்டன கூட்டம் நடத்தியவர் பெரியார். எப்பொழுதும் ஆளுங்கட்சியை ஆதரிப்பவர் என்று சொல்லப்பட்டபோது, “எனது கொள்கை ஆதரவு மாற்றத்திற்கான காரணம்” என்ற தலைப்பில் 19.9.1968 இல் ஒரு அறிக்கை எழுதினார். எனது ஆசை யெல்லாம் மக்கள் பகுத்தறிவுவாதிகளாக (நாத்திகர்களாக) ஆக வேண்டும். சாதி ஒழிய வேண்டும். உலகில் பார்ப் பனர்கள் இருக்கக் கூடாது. பல கட்சிகளை ஆதரித்ததும் இதற்காகத்தான். இனி எந்த கட்சியை ஆதரிப்பேனோ, எதிர்ப்பேனோ, எனக்கே தெரியாது” என்று எழுதி விட்டு, கீழே குறிப்பு என்று ஒன்று எழுதுகிறார். அதில், “இந்த மூன்றுக்கும் தி.மு.க. எதிரியானால், என் நிலை இப்படியே இருக்கும் என்று சொல்ல முடியாது” என்று எழுதியுள்ளார். அண்ணா ஆட்சியில் இருக்கும்போதே இதை எழுதி யுள்ளார். கல்வித் துறை உட்பட எந்த துறையில் பார்ப்பனர்கள் இருந்தாலும், பெரியார் உடனடியாக “விடுதலை” நாளேட்டில் பட்டியல் போட்டுவிடுவார். ஆட்சியாளர்கள் மாற்றிக் கொள்வார்கள். எனவே தவறு நடந்தால் பட்டியல் போட்டு சுட்டிக்காட்ட ஒருவர் வேண்டும்.

இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன்

கெடுப்பார் இலானும் கெடும்…. 

என்கிறார் திருவள்ளுவர்.

ஒரு ஆட்சிக்கு ஜால்ரா அடிப்பதல்ல பெரியார் தொண் டனின் வேலை. 2001 முதல், இந்த நாட்டில் தொடர்ந்து யார் தலைமை செயலாளராக இருக்கிறார்கள்? பாப்பாத்தி ஆட்சியைகூட விட்டுவிடுங்கள். ‘திராவிடர்கள்’ ஆட்சி வந்த பின்னால், திரிபாதி, ஸ்ரீபதி, மாலதி உட்பட எல்லோரும் பார்ப்பனர்கள். இந்த நாட்டின் தலைமை செயலாளராக தொடர்ந்து பார்ப்பனர்களே இருந்தால் நமக்கு என்ன நடக்கும்? இதை சுட்டிகாட்ட வேண்டாமா? சுட்டிக்காட்டாமல் இருப்பது தவறு என்றுதான், எங்கள் பங்காளி இயக்கத் திற்கு சொல்கிறோம். கல்லூரி முதல்வராக இருந்தபோது ஆய்வுக்கு வந்த அதிகாரிகளை சரிசெய்ய மாணவிகளை அனுப்பி வைத்ததாக இரண்டு முறை குற்றம்சாட்டப்பட்ட மீனா என்ற ஒரு பார்ப்பன அம்மையார், திருச்சி பாரதி தாசன் பல்கலைக் கழகத்திற்கு இப்போது துணைவேந்தராக வந்துள்ளார். உடனே இவ்வளவு காலம் இயங்கி வந்த ‘பெரியார் உயராய்வு மய்யம், பாரதிதாசன் உயராய்வு மய்யம்’ உடனடி யாக மூடப்பட்டுவிட்டது. நாம் யாருமே போராடத் தான் இல்லை.

பெரியாரின் முதல் கொள்கையாக இருந்தது சாதி ஒழிப்பு. காங்கிரஸ்காரராக இருந்தபோதே, கோவிலை சுற்றியுள்ள வீதிகளில் நடக்க அனுமதி மறுக்கப்பட்டபோது, அது மலையாள நாடாக இருந்தபோதும், அங்கு சென்று போராடினார். அப்போது, தென்னாட்டில் நடந்த இரண்டு சம்பவங்கள் என் மனதை உலுக்கியது என்றும், அதில் ஒன்று வைக்கத்தில் இராமசாமி நாய்க்கர் நடத்திய போராட்டம் என்றும் புரட்சியாளர் அம்பேத்கர் தனது ஏட்டில் தலையங்கம் எழுதினார்.

1922 ஆம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளராக இருந்தபோது, தாழ்த்தப்பட்டவர் களையும், நாடார்களையும் கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்று, திருப்பூர் மாநாட்டில் தீர்மானம் கொண்டு வந்தார். பின்னாளில் கோவில் நுழைவு போராட்டம் நடத்தி யதாக சொல்லப்பட்ட வைத்தியநாத அய்யர் இராமா யணத்தையும் மனுதர்மத்தையும் எடுத்துக் காட்டி, அப்போது கோயில் நுழைவை எதிர்த்துப் பேசினார். இராமாயணமும் மனுதர்மமும் என் மக்களை கோவிலில் நுழைய தடுக்குமே யானால், அதை எரிக்க வேண்டும் எனப் பேசினார் பெரியார். சுயமரியாதை இயக்கம் தொடங்கியவுடன், சாதி ஒழிப்பு வேலைகளைத் தான் செய்தது. 1926 முதல் பெண்ணுரிமையைப் பற்றிப் பேசினார். 1928 இல் இருந்து பொதுவுடமையைப் பற்றிப் பேசினார். 1938 இல் தனி தமிழ்நாட்டைப் பற்றி பேச தொடங்கினார். பெரியார் தொண்டர்கள் என்பவர்கள் இந்த நான்கு கொள்கைகளை முன்னெடுத்து செல்வோர் தான்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் உரிமை வேண்டும் என்ற பிரச்சினையைப் பற்றி உங்களுக்கு தெரியும். 1971 இல் கலைஞர் சட்டம் போட்டார். 234 சட்ட மன்ற உறுப்பினர்களும் ஒரு மனதாக ஏற்றுக் கொண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அது. ஒட்டு மொத்த தமிழகமும் ஏற்றுக் கொண்டதை, பதினொரு பார்ப்பனர்கள், பதிமூன்று வழக்குகளை உச்சநீதிமன்றத்தில் தொடுத்தார்கள். அப்போது தமிழ்நாடு அரசின் சட்டம் செல்லும், அதே நேரத்தில் பார்ப்பனர் அல்லாதாரை நியமித்தால் என்னிடம் வா என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு சொன்னது. ‘ஆபரேசன் வெற்றி, நோயாளி மரணம்’ என பெரியார் சொன்னார். பி.வி.கானே என்ற ஒருவன் ஒரே ஒரு புத்தகம் எழுதினான் (சட்டபுத்தகம் அல்ல). இந்து சட்டங்கள் பற்றிய தொகுப்பு எழுதினான். அதை வைத்து தீர்ப்பு சொன்னார்கள். பெரியார் நூற்றாண்டு விழாவில் எம்.ஜி.ஆர். ஒரு குழு அமைத்தார். ஆய்வு செய்தார்கள். கலைஞர் ஆட்சிக்கு வந்து அர்ச்சகர் பயிற்சி கொடுத்தார். எல்லாம் முடிந்தது. மீண்டும் பார்ப்பனர்கள் தடை ஆணை வாங்கிவிட்டார்கள். நீதிமன்றம் சொல்லிவிட்டது. நான் என்ன செய்வது என கலைஞர் இப்போது சொல்லிவிட்டார்.

ஆனால், சட்டமன்றத்திலோ, நாடாளுமன்றத்திலோ உறுப்பினராக இல்லாத பெரியார், தேர்தலில் போட்டியிடக் கூடாது என்ற கொள்கையோடு வைத்திருந்த இயக்கத் தோழர்களை கொண்டு பெரியார் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தத்தை கொண்டு வந்தார். எனவே நாம் மக்களை திரட்டி போராடியிருக்க வேண்டும். கேரளாவில் ராகேஷ் என்ற தாழ்த்தப்பட்டவரை அர்ச்சகராக்கியதற்கு, ஆதித்யன் என்ற பார்ப்பான் வழக்கு தொடுத்தான். மாவட்ட நீதிமன்றமும், உயர்நீதிமன்றமும், மனுவை தள்ளுபடி செய்தது. உச்சநீதிமன்றத்தில் பராசரன் வாதாடினார். இந்தியாவில் அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்துவிட்ட பின்னால், சமவாய்ப்புகளை மறுக்கும் சாஸ்திரம் உட்பட எதுவும் செல்லாது என தீர்ப்பு சொல்லப்பட்டது. தீர்ப்பைச் சொன்னவர்கள், தமிழ்நாட்டை சார்ந்த துரைசாமி ராஜூ, கர்நாடகத்தில் பிறந்திருந் தாலும், தமிழ்நாட்டில் படித்து, பகுத்தறிவு பெற்ற ராஜேந்திரபாபு நீதிபதிகளாக இருந்தார்கள். தென்னாட்டைச் சார்ந்தவர்கள் சட்டம் தான் பெரிது என்றார்கள். ஆனால், நமக்கு எதிராக தீர்ப்பு சொன்ன வடநாட்டு பார்ப்பனர்கள், சாஸ்திரம் தான் பெரிது என்கிறார்கள்.

உங்களுக்கு சாஸ்திரம் பெரிது என்றால், எங்களுக்கு தமிழர்களுக்கு, குறைந்தபட்சம் இறை நம்பிக்கையுள்ள தமிழர்களுக்கு, திருமூலம் பெரிது. திருமூலர் சொல்கிறார்,

“பேர்கொண்ட பார்ப்பான் பிரான்தன்னை அர்ச்சிக்கில்

போர்கொண்ட மன்னர்க்கு பொல்லா வியாதியாம்

பார்கொண்ட நாட்டுக்கு பஞ்சமுமாம் என்றே

சீர்கொண்ட நந்தி தெரிந்துரைத்தானே”

பார்ப்பான் பூஜை செய்தால், நாட்டில் பஞ்சம், ஆட்சி செய்கிறவர்களுக்கு நோய் வரும் என்கிறார் திருமூலர்.

அதேபோல தொல்காப்பியம், பார்ப்பனர்களுக்கு என்ன வேலை என்பதை சொல்கிறது.

காமநிலை உரைத்தலும், தேர்நிலை உரைத்தலும்,

கிழவோன் குறிப்பினை எடுத்தனர் மொழிதலும்,

ஆவொடு பட்ட நிமித்தங் கூறலும்,

செலவுறு கிளவியும் செலவழுங்கிளவியும்

அன்னவை பிறவும் பார்பார்க்கு உரிய.


என்ன பொருள்? ஒருவரின் காம உணர்வை அவன் விரும்பும் பெண்ணிடம் கூறுவது, பிரிந்து சென்ற தலைவன் வந்து கொண்டிருக்கிற தேர் வரும் நிலைகளைச் சொல்வது (அதோ உன் காதலர் வந்து விட்டார், கார் ஹார்ன் சத்தம் கேட்கிறது பார் என்பது போல), மாட்டை வைத்து நல்லது கெட்டது கூறுவது (தலையாட்டி விட்டது, சாணம் போட்டுவிட்டது, சிறுநீர் கழிக்கிறது – இது நல்லது கெட்டது என்று கூறுவது);, செலவுறு கிளவி – இப்போது செல்ல லாம் – அப்பா வெளியூர் போயிருக்கிறார். அம்மா கோவிலுக்கு போயிருக்கிறார். அவள் தனி யாகத்தான் இருக்கிறாள் என்பது போல – செலவழுங்கிளவி – செல்லக் கூடாது என்ற செய்தி கூறுதல் (அவன் அண்ணன் கல்லூரியில் இருந்து விடுமுறையில் வந்திருக்கிறான். இன்று அந்த பக்கம் போய்விடாதே – உதைத்தான் விழும் என்பது போல…) இவைகள் தானய்யா தொல்காப்பியர் பார்ப்பனருக்குரிய வேலைகள் எனக் கூறுகிறார். பூஜை செய்வதை அல்ல….

அவ்வையார் சொல்கிறார்

“நூலெனிலோ கோல்சாயும் நுந்தமரேல் வெஞ்சமராம்,

கோலெனிலோ பாங்கே குடிசாயும் – நாலாவான்

மந்திரியுமாவான், வழிநடைக்குத் துணையும் ஆவான்,

அந்த அரசே அரசு”…


என்று! பார்ப்பான் ஆட்சி செய்தால் காட்டிக் கொடுத்து நாடு கெட்டுவிடும். சத்ரியன் ஆட்சி செய்தால், சண்டையாகவே இருக்கும். வைசியன் ஆட்சி செய்தால் வரி போட்டே ஒழித்து விடுவான். சூத்திரன் ஆள்வதுதான் நல்ல அரசு.

தமிழ்நாடு தனிநாடாக இருந்தால் இவைகளெல்லாம்தானே சட்டமாக இருந்திருக்கும். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் உரிமைக்கு எந்த தடையும் வந்திருக்காதே!

பெரியார், காரைக்குடி காங்கிரஸ் மாநாட்டிற்கு தலைமை தாங்கி பேசுகிறபோது சொல் கிறார், “பறையன், சக்கலியன் என்பதைவிட சூத்திரன் (வேசிமகன்) என்பவன் தாழ்ந்தவன் என்பதுதான் எனது கொள்கை. குடிப்பதற்கு தண்ணீர் தராமல், அவன் குளிக்கவில்லை என்று சொல்வது உன் தவறா? அவன் தவறா? என்று கேட்டார். இப்படி வாழ்கிறபோது இருக்கிற சாதி கொடுமை, இறந்த பின்னால் சுடுகாட்டிலும் இருக்கிறது. இதை ஆதிக்க சாதிகள் மட்டும் அல்ல, அரசும் செய்கிறது.

அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில் கட்டப்படும் சுடுகாட்டில், தாழ்த்தப்பட்டவர் சுடுகாடு, இதரர் சுடுகாடு என பிரித்து வைத்திருக்கிறார்கள். தீண்டாமை வன்கொடுமை சட்டம் யார் மீது பாய வேண்டும்? மாவட்ட ஆட்சி தலைவர், திட்ட அலுவலர், வட்டார அதிகாரிகள் மீதல்லவா பாய வேண்டும்? தீண்டாமையை ஒழிக்கிறேன் என போலித்தனமாக பேசிக் கொண்டிருந்த, காந்தி பிறந்த நாளான அக்டோபர் இரண்டாம் நாள், போராட்டத்தை எடுத்தோம். அப்போது, குறைந்தபட்சம் அரசு திட்டங்களில் கட்டப்படும், இரட்டை சுடுகாடுகளையாவது அகற்றுங்கள் என்று பெரியாரின் சிந்தனைகளை ஆட்சியில் நடைமுறைபடுத்த வேண்டும் என்று சொன்ன அண்ணா அவர்களின் நினைவுநாள் வரை அரசுக்கு ஒரு கால அவகாசத்தை கொடுத்தோம். பெரியார் நினைவு நாளில், பெரியாரின் விரல் பிடித்து அரசியல் நடை பயின்ற, கலைஞரிடம் நாம் வைக்கிற வேண்டுகோள், உங்களை ஆளாக்கி, அமைச்சரவையில் உட்கார வைத்த அண்ணா நினைவு நாளுக்குள் குறைந்தபட்சம் அரசு திட்டத்தில் கட்டப்பட்ட சுடுகாடுகளில், இடுகாடுகளில் இருக்கும், இடைச் சுவரை அகற்ற வேண்டும். இல்லாவிட்டால், சட்டவிரோதமாக இருக

Monday, October 18, 2021

ஆந்திராவில் இராவண விழா: தலைவர் தோழர்கொளத்தூர் மணி ஆற்றிய உரை,

 ஆந்திராவில் இராவண விழா: தலைவர் தோழர்கொளத்தூர் மணி ஆற்றிய உரை,

“இராம லீலா நடைபெறும் தருணத்தில் இராவண னின் மேன்மையைக் குறித்து பேச இங்கு கூடியிருக்கும் நம்மிடையே மூன்று கேள்விகள் எழுகின்றன.

முதலாவதாக, இராமாயணம் என்பது வெறுமனே ஒரு கற்பனைக் கதை மட்டுமே என்பதை புரிந்து ஏற்றுக் கொள்ளும் நாம் அதற்கு இந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய தேவை என்ன?

இரண்டாவதாக, இந்து மதத்தில் உள்ள நூற்றுக் கணக்கான கடவுள்களில் இராமனும் ஒரு கடவுள். அவ்வளவுதான். அப்படியிருக்க இராமனை மட்டும் நாம் இவ்வளவு தீவிரமாக எதிர்க்கவும் விமர்ச்சிக்கவும் தேவை என்ன?

இறுதியாக, இராமாயணம் ஒரு கதை என்ற அளவில், அக்கதையின் ஒரு பாத்திரமாக உள்ள இரா வணனை நாம் கொண்டாட வேண்டிய தேவை என்ன?

இது குறித்து பெரியாரின் சிந்தனைகளை நான் இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஏனெனில் தமிழகத்தில் இராமாயண எதிர்ப்பு இயக்கத்திற்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. இராவணனைத் தங்கள் இனத்தைச் சேர்ந்தவனாக கொண்டாடும் மரபு உள்ளது. இவற்றிற்கு காரணமாக இருந்தது பெரியாரும், பெரியார் இயக்கமுமே.

திராவிட மக்களின் மாண்பையும் பகுத்தறிவையும் முடமாக்கி அவர்களை மனிதத் தன்மையற்றவர்களாக ஆக்க ஆரியர்கள் பயன்படுத்திய கருவிகளில் முதன்மை யான பிரச்சாரக் கதைகளாக இராமாயணமும் மகாபாரதமும் இருப்பதாக பெரியார் கருதினார். இராமாயணம் ஒரு கதையாக இருந்த போதும் நாம் அதை ஏன் எதிர்க்க வேண்டும் என்பதை அவர் குறிப்பாக விளக்குகிறார்.

இராமாயணம் மனு தர்மத்தை வலியுறுத்துகிறது. நம் மக்கள் அதனை பின்பற்றத்தகுந்த அளவில் அதில் எவ்வித தெய்வீகத் தன்மையோ, நீதியோ, கற்க வேண்டிய பாடமோ இல்லை. உண்மையில் இராமாயணம் என்பது ஆரிய பார்ப்பனர்கள் மேலானவர்கள் என்பதை நிரூபிக்க மட்டுமே உருவாக்கப்பட்டக் கதையாகும். அக்கதை நெடுகிலும் திராவிடர்களுக்கு எதிரான ஆத்திரமும் பழி உணர்ச்சியும் அழுத்தமாக உள்ளது. பல முக்கிய வரலாற்று உண்மைகளை இழிவுப்படுத்தி, ஆரிய – திராவிடப் போரை தங்களது சொந்த கற்பனைகளுடன் அது விளக்குகிறது. திராவிடர்கள் இராட்சதர்கள், அரக்கர்கள், அசுரர்கள், குரங்குகள் என்றே அழைக்கப்பட்டுள்ளனர். திராவிட மக்கள், தாங்கள் எவ்வாறு இழிவுப்படுத்தப்பட்டுள்ளனர் என்பதை அவர்கள் உணருமாறு செய்ய வேண்டியது மிக முக்கியமானது என்று பெரியார் கருதினார்.

மேலும் இராமன் ஒரு சூழ்ச்சி மிகுந்த நேர்மையற்ற ஒருவனாக, நம் சொந்த மக்களை அழிக்க நம்மவர்களான குகன், சுக்ரீவன், அனுமான், விபீடணன் போன்றவர்களை பயன்படுத்தியவனாக, அதாவது நம் கையைக் கொண்டு நம் கண்ணைக் குத்துவதில் தேர்ந்தவனாகவே பெரியார் பார்க்கிறார். இந்தக் காரணங்களுக்காகவே இவற்றிற்கு எதிரான ஒரு கலகமாக பெரியார் இராவணனை முன்னிறுத்தத் தொடங்கினார்.

பெரியார் இராமனின் சூழ்ச்சி பாங்கையும் இராவணனின் உண்மையான வீரத்தையும் விளக்குகிறார். திராவிடர்களின் ஆயுதம் வேல். ஆரியர்களின் ஆயுதம் வில்லும் அம்பும். அதனால்தான் ஆரியர்கள் வேல், வேலாயுதம் எனும் பெயர்களை வைப்பதில்லை. தண்டபாணி, கோதண்டராமன் போன்ற பெயர்களை தான் வைப்பார்கள். வில் அம்பு என்பது எதிரியை மறைந்து இருந்து கொல்லும் வல்லமைக் கொண்டது. அந்த வகையில்தான் இராமன் வாலியை மறைந்திருந்து கொன்றான். இராமனுக்கும் வாலிக்கும் எந்த பகையும் இல்லை. ஆனால் நமது ஆயுதமான வேல் நேருக்கு நேர் நின்று எதிரிக்கு அருகில் சென்று அவனைக் கொல்லக் கூடியது. இதுதான் திராவிட போர் முறைக்கும் ஆரிய போர் முறைக்கும் உள்ள வேறுபாடு.

அதே போல, தமிழர் போர் மரபில் ஒரு வழக்கம் உண்டு. எடுத்த உடனேயே நேரடியாக போரை தொடுத்துவிட மாட்டார்கள். முதலில் சென்று எதிரி நாட்டில் உள்ள ஆடு மாடுகளை கவர்ந்து வருவார்கள். அது ஒரு எச்சரிக்கை. இதற்கு ஆநிரை கவர்தல் என்று பெயர். இந்த வகையில்தான் இராவணன் சீதையைத் தூக்கிச் சென்றான். தனது எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தாடகையைக் கொன்று, தனது காதலை தெரிவித்த சூர்ப்பனகையின் மூக்கை அறுத்து அவமானப் படுத்திய இராமனுக்குப் பாடம் புகட்ட இராவணன் விரும்பினான். இராமன் ஒரு மன்னனின் மகனாக இருந்த போதும் அச்சமயத்தில் அவன் ஏதுவுமற்றவனாகவே இருந்தான். அதனால் அவனது மனைவியான சீதையை இராவணன் தூக்கிச் சென்றான். சென்றாலும், அவளை அசோக வனத்தில் மிகுந்த பாதுகாப்பாக, பெண் காவலர்கள் துணையுடன் வைத்திருந்தான். அதிலும், தனது அரச குடும்பத்திலிருந்து ஒருத்தியை, தனது சொந்த தம்பி மகளான திரிசடையை அவளுக்கு ஏவல் புரிய அனுப்பி வைத்தான். ஆக ஆநிரை கவர்தல் என்ற முறையிலேயே சீதையை இராவணன் கவர்ந்து சென்றான்

அது போல போர்க்களத்தில் இராவணன் மரணத் தருவாயில் இருக்கும் போது இராமன், இராவணன் அருகில் சென்று ஆட்சித் திறன் நுணுக்கங்களை கேட்டறியுமாறு இலட்சுமணனிடம் கூறினான் என்று வால்மீகி இராமாயணம் கூறுகிறது. இதைதான் பெரியார் சொல்கிறார். இராமாயணம் ஒரு கதையாக இருந்த போதும் திராவிடர்களின் மகிமையை அவர் களால் முழுமையாக மறைக்க முடியவில்லை என்கிறார்.

காங்கிரசில் இருந்த போதே பெரியார் தனது இராமாயண எதிர்ப்பைத் தொடங்கிவிட்டார் என்றுதான் கூற வேண்டும். பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கியது 1925-ஆம் ஆண்டில்தான். ஆனால் அவர் காங்கிரசில் இருந்த போதே, 1922-ஆம் ஆண்டு திருப்பூரில் நடைபெற்ற காங்கிரசு மாநாட்டில், தாழ்த்தப்பட்ட மக்களின் கோயில் நுழைவை வலியுறுத்திய தீர்மானத்தை முன்மொழிந்தார். அதனை கடுமையாக எதிர்த்தும் மறுத்தும் வைத்தியநாத அய்யர் என்ற ஒருவர் பேசிய போது, இராமாயணம், மனு சாஸ்திரம் போன்ற புனித நூல்கள் கூட இவற்றைத் தவறு என்றுக் கூறுவதாகக் குறிப்பிடுகிறார். உடனே பெரியார், “நான் மனித உரிமைகளின் அடிப்படையில் இந்தத் தீர்மானத்தை முன்மொழிகிறேன். அப்படியான மனித உரிமைகளை இந்த நூல்கள் மறுக்குமாயின், அந்த இராமாயணத்தையும் மனு சாஸ்திரத்தையும் எரித்து விட வேண்டியதுதான்” என்று மிக எளிமையாக, ஆனால் வலுவாக தனது எதிர்ப்பைப் பதிவு செய்கிறார்.

1926-ஆம் ஆண்டு தனது வார இதழான ’குடி அரசில்’ இராமாயண ஆராய்ச்சி என்ற தலைப்பில் பேராசிரியர் இ.மு.சுப்ரமணியப் பிள்ளை என்பவர் எழுதிய கட்டுரைத் தொடரை வெளியிடுகிறார்.

தொடர்ந்து இராமாயணத்தை விமர்சித்து பல வாதங்களை பெரியார் முன் வைக்கிறார். ஆரியர்களின் நாயகர்களான இராமனும் கிருஷ்ணனும் நமது நாயகர்களாக, ஆரியர்களால் உள்வாங்கப்பட்ட மன்னர்களாக இருக்கலாம் என்கிறார் பெரியார். வர்ணாசிரமம் என்பது மனிதர்களை வர்ணம் எனப்படும் நிறத்தின் அடிப்படையில் படிநிலைப்படுத்துவது. அப்படி பார்த்தால் இராமனும் கிருஷ்ணனும் ஆரியர்களின் நிறத்தில் இல்லை. அவர்கள் கருப்பர்கள். ஆசிரமம் என்பது வாழ்வின் நான்கு நிலைகளான பிரம்மச்சரியம், கிரகஸ்தம், வனப்பிரஸ்தம், சன்னியாசம். ஆனால் இராமனும் கிருஷ்ணனும் கிரகஸ்த நிலையிலேயே மரணம் அடைந்து விடுகின்றனர். அவர்கள் வனப்பிரஸ்தத்திற்கும் செல்லவில்லை. சன்னியாசியாகவும் ஆகவில்லை. எனவே ஏன் அவர்கள் ஆரியர்களால் வெல்லப்பட முடியாத நமது மன்னர்களாக இருக்கக் கூடாது என்று பெரியார் கேள்வி எழுப்பினார்.

இட ஒதுக்கீட்டால் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். ஆன நமது அதிகாரிகளைப் பார்ப்பனப் பெண்கள் மணந்துகொள்வதின் வழியே அவர்கள் பார்ப்பனர்களுக்கு மட்டுமே பயன்படக் கூடியவர்களாய் மாற்றப்படுவதில்லையா?

ஜவகர்லால் நேரு உட்பட பலரும் மகாபாரதம் என்பது ஆரியர்களுக்குள் நடந்த போர் என்றும் இராமாயணம் என்பது ஆரியர்களுக்கும் திராவிடர்களுக்கும் நடந்த போர் என்றும் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில் பெரியார் இராமாயணத்தை மிகக் கடுமையாக எதிர்த்ததற்கு காரணம் உள்ளது. தமிழ் நாட்டுப் பார்ப்பனர்களின் நாயகராக இன்றளவிலும் போற்றப்படும் இராஜகோபாலாச்சாரியார், “பார்ப்பனர்களுக்கு சிக்கல் வந்தால் இராமாயணத்தை புரட்டிப் பாருங்கள், வழி கிடைக்கும்” என்று பலமுறை குறிப்பிட்டுள்ளார். அந்த அளவுக்கு பார்ப்பனர்களுக்கான நூலாக அது இருப்பதால்தான் நான் அதனை ஆராய முற்படுகிறேன் என்கிறார் பெரியார். தங்கள் மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்ள பார்ப்பனர்கள் இராமாயணத்தைப் பயன்படுத்தினால் அவர்களின் மேலாதிக்கத்தை தகர்க்க நான் இராமாயணத்தை விமர்சிக்கிறேன் என்றார் பெரியார்.

அதன் தொடர்ச்சியாக குழந்தைகளுக்கு இராவணன், இரணியன், மேகநாதன் என்று ஆரியர்களால் அரக்கர்கள் என்று அறிமுகப்படுத்தப்பட்டவர்களின் பெயர்களை குழந்தைகளுக்குச் சூட்டத் தொடங்குகிறார். தொடர்ந்து ஆரிய எதிர்ப்பின் அடையாளமாக புத்தரின் பெயர்களான கவுதமன், ராகுலன், சித்தார்த்தன் போன்ற பெயர்களையும் சூட்டுகிறார். இன்று வரை அந்த மரபு  தமிழ்நாட்டில் தொடர்கிறது.

நான் முன்பே குறிப்பிட்டதைப் போல இராமாயணம் குறித்து பெரியார் தொடர்ந்து எழுதுகிறார். இராமாயண குறிப்புகள், வால்மீகி இராமாயண சம்பாஷணைகள் என்று ஆய்வு நூல்கள் வெளிவருகின்றன.

இந்தப் பிரச்சாரங்களினால் ஈர்க்கப்பட்டு, சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்த பேரா. பூர்ணலிங்கம் பிள்ளை என்பவர் 1928-ஆம் ஆண்டு ‘சுயஎயயே – வாந பசநயவ’ என்ற ஆங்கில நூலை எழுதி வெளியிடுகிறார். பின்னர் அது தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டது.

இதற்கிடையே பல முறை இராமாயணம் எரிக்கப்பட வேண்டிய ஒரு நூல் என்பதை பெரியார் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார்.

இந்த குரல் வலுக்க வலுக்க, இதற்கு எதிர்ப்பும் எழுகிறது. 1943-ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கும் நாவலர் சோமசுந்தர பாரதியார், பேராசிரியர் இரா. பி. சேதுப் பிள்ளை போன்ற புகழ்பெற்ற தமிழ் அறிஞர்களுக்கும் இடையே “எரிக்கப்பட வேண்டியதா இராமாயணம்” என்ற தலைப்பில் பல விவாதங்கள் நடந்தன. சுயமரியாதை இயக்கத்தின் சார்பில் வாதிட்டவர் பின்னர் தமிழக முதல்வரான சி. என். அண்ணதுரை ( அண்ணா ) யாவார்.

1944-ஆம் ஆண்டு “இராமாயண பாத்திரங்கள்” என்ற தலைப்பில் இராமனின் உண்மை முகத்தைத் தோலுரித்தும், இராவணனின் மேன்மையை விளக்கியும் நூல் ஒன்றினை பெரியார் எழுதி வெளியிடுகிறார். இதில் சிறப்பு என்னவெனில், இந்த நூலில் மேற்கோள் காட்டப்பட்டவை அனைத்தும் வால்மீகி இராமாயணத்தில் இருந்து எடுக்கப்பட்டவை மட்டுமே. ஆரியர்கள் போற்றும் நூலிலிருந்தே அவர்களுக்கு எதிரான வாதங்களை முன் வைத்தார்.

1944-ஆம் ஆண்டு கான்பூரில் நடைபெற்ற அகில இந்திய பிறப்படுத்தப்பட் டோர் மாநாட்டில் பங்கேற்ற பெரியார் இராமாயணத்தை விமர்சித்து நீண்ட உரை ஆற்றுகிறார். அவரது உரை முடிந்த உடன் கூடியிருந்த மக்கள், “இராவணாக்கி ஜே“ என்று முழக்கமிடுகின்றனர்.

இந்தத் தொடர் பிரச்சாரங்களினால், தமிழ் நாட்டில் சாதாரண மக்களிடம் கூட இராவணன் என்ற பெயருக்கான பிம்பம் முற்றிலுமாக மாறுகிறது. சுய மரியாதை இயக்ககத்தின் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், இராவணனின் மேன்மையைப் போற்றி பா ஒன்றை படைக்கிறார். அதனால் ஈர்க்கப்பட்ட புலவர் குழந்தை 1946-ஆம் ஆண்டு இராவணனை காவியத் தலைவனைக் கொண்டு “இராவண காவியம்” என்ற ஓர் காப்பியத்தைப் படைக்கிறார். 12-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு தமிழில் வெளியான காப்பிய வகை நூல் இது மட்டுமே.

இந்த நூல் 1948-ஆம் ஆண்டு தடை செய்யப்படுகிறது. அதே ஆண்டு ஈரோட்டில் நடைபெற்ற திராவிடர் கழகத்தின் 19-ஆவது மாநில மாநாட்டில் இராமாயண எதிர்ப்பு இயக்கத்தைத் தொடங்குவதான அறிவிப்பு ஒரு தீர்மானமாக நிறைவேற்றப்படுகிறது.

1954-ஆம் ஆண்டு இராமனை கேலி செய்து “இராமாயணம்” என்ற தலைப்பிலான நாடகம் ஒன்றை எம். ஆர். இராதா மேடையேற்றுகிறார். இந்த நாடகத்தில் வால்மீகி இராமாயணத்தின் வரிகளை நேரடியாக மேடையிலேயே வாசித்து, அந்த வரிகளுக்கு ஏற்ப இராமன் ஒரு கையில் சோமபானமும் மறு கையில் மாமிசத்தையும் உண்டவாறு மேடையில் நுழைவார். பின்னர், பரத்வாஜரின் ஆசிரமத்திற்கு விருந்துண்ண சென்ற இராமனுக்கு பரத்வாஜர் கொழுத்த இளம் பசுங்கன்றின் மாமிசத்தை சமைக்கச் செய்வார். இதனை விளக்கும் வரிகளும் வால்மீகி இராமாயணத்தில் இருந்து வாசிக்கப்படும். இராமன் மாட்டுக்கறி உண்ணும் காட்சி மேடையில் அரங்கேறும். அவர் அந்த நாடகத்திற்கு இட்டத் தலைப்பு இராமாயணமாக இருந்த போதும், அதைத் தாங்கிக் கொள்ள இயலாதவர்கள் அதனை “கீமாயணம்” என்று விமர்சித்தனர்.

இந்நாடகத்திற்கு மக்கள் பெருங்கூட்டமாக எழுச்சியுடன் வந்ததைத் தொடர்ந்து இந்நாடகத்திற்கெனவே “தமிழ்நாடு நாடகக் கட்டுப்பாடு சட்டம் – 1954“ என்ற ஒரு புதிய சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றியது. இந்நாடகத் திற்காகவே எம். ஆர். இராதா அவர்கள் 54 முறை கைது செய்யப்பட்டுள்ளார். அப்படி அவர் கைது செய்யப்படும் பல நேரங்களில், ஒரு கையில் சோம பானம் கொண்ட மொந்தையையும், மறு கையில் மாமிசத்தையும் ஏந்தியவாறு, இராமன் வேடத் திலேயே எம். ஆர். இராதா செல்வார். “இராமன் செல்ல வேண்டிய இடத்திற்குதான் செல்கிறான்” என்று கூறியவாறே அவர் காவலர்களுடன் செல்வார்.

அரசின் இந்த ஒடுக்குமுறையைக் கண்டு வெகுண்ட பெரியார், தனது அனைத்து நிகழ்ச்சி களையும் இரத்து செய்து விட்டு சென்னையில் ஒரு மாதம் முழுவதும் இராமாயண எதிர்ப்புப் பிரச்சாரத்தை மட்டுமே மேற்கொண்டார்.

இந்த நிலையில் 1954-ஆம் ஆண்டு இராஜ கோபாலச்சாரி “சக்கரவர்த்தி திருமகன்” என்ற தலைப்பில்  தொடர் ஒன்றை எழுதத் தொடங்குகிறார். அவர் பதவியை இழக்கும் போதெல்லாம் இவ்வாறு ஏதாவது எழுதுவது வழக்கம். 1939-ஆம் ஆண்டு இதே போன்று முதலமைச்சர் பதவியை இழந்தபோது ’வியாசர் விருந்து’ என்று மகாபாரதத்தைக் குறித்து எழுதினார். பின்னர் 1954-இல் சக்கரவர்த்தித் திருமகன் என்று இராமாயணத்தைப் பற்றி எழுதத் தொடங்குகிறார். இதற்கு எதிர்வினையாக (பின்னர் தமிழத்தின் முதல்வரான) கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் “சக்கரவர்த்தியின் திருமகன்” என்ற தலைப்பில் கிண்டலாக எழுதத் தொடங்குகிறார். இராஜகோபாலாச்சாரியின் தந்தையின் பெயர் சக்கரவர்த்தி ஆகும். ஆக, இராமனையும் இராஜ கோபாலாச்சாரியையும் ஒரு சேர குறிக்கும் வகையில் அந்தத் தலைப்பை அவர் வைத்தார். பின்னர் கருணாநிதி “பரதாயணம்” என்றத் தலைப்பில் மற்றொரு தொடரையும் எழுதினார். நாளுக்கு நாள் இராமாயண எதிர்ப்புப் பிரச்சாரம் வலுபெற்று வந்த நிலையில் 1956-ஆம் ஆண்டு புத்தரின் 2500-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, இராமர் பட எரிப்புப் போராட்டத்தைப் பெரியார் அறிவித்தார்.

பெரியார் ஒரு நாத்திகராக அறியப்படுகிறார். அது உண்மைதான். அவர் கடவுள் மறுப்பாளர்தான். ஆனால் பெரியார் வெறுமனே நாத்திகர் மட்டுமல்ல. அவரது முதன்மைக் கொள்கை ஜாதி ஒழிப்பே. “நான் ஜாதியை ஒழிக்க வேண்டும் என்றேன். அவர்கள் அது மதத்துடன் இணைந்தது என்றார்கள். அப்படி ஆண்ட மதத்தை ஒழிக்க வேண்டும் என்றேன். அது வேதங் களினால் உருவாக்கப்பட்டது என்றார்கள். நான் வேதங்களை ஒழிக்க வேண்டும் என்றேன். அது கடவுளால் அளிக்கப்பட்டது என்றார்கள். எனவே நான் கடவுளை கேள்விக்கு உள்ளாக்க வேண்டி வந்தது. கடவுளை அழித்தால்தான் ஜாதி ஒழியு மெனில் அந்த கடவுளை நான் அழிப்பேன்” என்கிறார் பெரியார்.

“இந்நாட்டில் மதம் என்பது மக்களை முட்டாளாக்கி, அவர்களை அடிமைப்படுத்தவே உதவுகிறது. எனவே நான் இந்த இந்து மதத்தை ஒழிப் பதையே என் குறிக்கோளாகக் கொண்டுள்ளேன்” என்கிறார் பெரியார்.

இந்த அடிப்படையிலேயே பெரியார் இராமர் எரிப்புப் போராட்டத்தை அறிவிக்கிறார். வெறுமனே நாத்திகப் போராட்டமாக அல்ல. இதற்கு 3 ஆண்டு களுக்கு முன்னர்தான், இதே போன்றதொரு புத்தர் பிறந்த நாளில், விநாயகர் சிலை உடைப்புப் போராட் டத்தை அறிவித்து அதை செய்தும் காட்டியிருந்தார் பெரியார். எனவே இராமர் பட எரிப்புப் போராட்ட அறிவிப்பு பெரும் கொந்தளிப்பையும் எழுச்சியையும் ஏற்படுத்தியது. ஏறத்தாழ 6000 பேர் இந்தப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

1959-ஆம் ஆண்டு குடி அரசுக் கட்சி (சுநயீரடெiஉயn ஞயசவல) வட இந்தியாவில் பல இடங்களில் பெரியாரின் கூட்டங்களை நடத்தியது. இவற்றின் இறுதிக் கூட்டம் கான்பூரில் நடைபெற்றது. ஏற்கனவே 1957-ஆம் ஆண்டு பெரியார் எழுதிய “இராமாயண குறிப்புகள்” நூல் “சுயஅயலயயே – ய கூசரந சுநயனiபே” என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிப் பெயர்த்து வெளியிடப்பட்டிருந்தது.

அந்த ஆங்கில நூலினை லாலாபாய் சிங் யாதவ் என்பவர் “சச்சி இராமாயண்” என்ற தலைப்பில் இந்தியில் மொழிப் பெயர்த்து அம்மாநாட்டில் வெளியிடுகிறார். அந்த மாநாட்டிலேயே 3000 படிகள் விற்றுத் தீர்ந்தது. 1970-ஆம் ஆண்டு இந்நூல் உத்தர பிரதேசத்திலும் தில்லியிலும் தடை செய்தனர். பெரியார் இறந்து 3 ஆண்டுகளுக்குப் பிறகு 1976-ஆம் ஆண்டு பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17 அன்று இந்நூல் மீதான தடை உச்ச நீதிமன்றத்தால் இரத்துசெய்யப்பட்டது.

பெரியார் தொடர்ந்து இராமாயணத்தை விமர்சிப் பதைக் கண்டித்து பெரியார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் நாட்டு சட்டமன்றத்தில் காங்கிரசு கட்சியினர் கண்டனம் எழுப்புகின்றனர். இதனைத் தொடர்ந்து இராமாயண எதிர்ப்புப் பிரச்சாரத்திற்கு தடை விதிக்க அரசு முடிவு செய்கிறது. இதனை அறிந்த பெரியார், “நீங்கள் எங்கள் பிரச்சாரத்தைத் தடை செய்வீர் களானால், உண்மையில் அரசியல் சட்டத்திற்கு எதிராக உள்ள இராமாயணத்தைதான் நீங்கள் தடை செய்ய வேண்டும். அரசியல் சட்டம் அனைவருக்கு சம உரிமையும் வாய்ப்பும் வழங்க வேண்டும் என்று கூறுகிறது. ஆனால் இராமாயணமோ சமத்துவத்திற்கு முற்றிலும் எதிரானதாக உள்ளது. எனவே இராமா யணத்தை தடை செய்யாமல், இராமாயணத்தை நான் விமர்சிப்பதற்காக நடவடிக்கை எடுப்பீர்களானால்… இதோ நான் அதை எரிக்கவே போகிறேன்” என்று அறிவிக்கிறார். 1966ஆம் ஆண்டு மைலாப்பூரில் அய்யாயிரம் பேருக்கு மேலாக கலந்துகொண்ட நிகழ்வில் இராமாயண எரிப்புப் போராட்டம் நடைபெற்றது.

1971ஆம் ஆண்டு பெரியார், தமிழகத்தின் முக்கிய நகரமான சேலத்தில் மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் ஒன்றை நடத்தினார். அந்த ஊர்வலத்தில், வால்மீகி இராமாயணத்தில் கூறியபடி, ‘அசுவமேத யாகம்’ என்ற (குதிரைகளுடன் தசரதன் மனைவியர் உறவுகொண்டு இராமன் பிறந்தான் என்று வால்மீகி இராமாயணம் கூறுகிறது) முறையில் இராமன் பிறந்ததையும், இந்து கடவுள்களின் புராணங்கள் கூறும் ஆபாச பிறப்புகளையும் படங்களாக சித்தரித்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. அப்போது சில ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் (ஹிந்து மிஷன் ) ஊர்வலத்தின்மீது செருப்பு வீசினர். உடனே பெரியார் தொண்டர்கள் அந்த செருப்பை வீசியவர் மீது திருப்பி வீசாமல், ஊர்வலத்தில் எடுத்து வரப்பட்ட இராமன் படத்தின் மீது அடித்துக் கொண்டே ஊர்வலத்தில் வந்தனர். மாநாட்டின் இறுதியில் இராமனின் 10 அடி உயர உருவ பொம்மை எரிக்கப்பட்டது. அந்த நிகழ்வு இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தது.

அதே 1971-ஆம் ஆண்டு பெரியார் ஓர் அறிவிப்பை வெளியிடுகிறார். “15 நாட்களுக்குள் இராமாயணத்தை தடை செய்யவில்லை எனில், எங்கள் ஆட்கள் குடிகார இராமனாகவும் விபச்சாரி சீதையாகவும் வேடமிட்டு மாநிலமெங்கும் சென்று சூத்திர சம்பூகன் எவ்வாறு வஞ்சகமாக கொல்லப்பட்டான் என்பதை நடித்துக் காட்டுவார்கள்” என்று அறிவித்தார்.

இதே போன்றதொரு போர்க் குணத்துடன் இருந்தவர்தான் பெரியார். அவரைத்  தொடர்ந்து திராவிடர் கழகத்திற்கு தலைமையேற்ற மணியம்மை யார் அவர்கள். 1974ஆம் ஆண்டு மணியம்மையார் அவர்கள் பிரதமர் இந்திரா காந்தி அவர்களுக்கு ஓர் கடிதம் எழுதினார். “இராம லீலா என்ற பெயரில் எங்கள் திராவிடர் மன்னர்களான இராவணன் மற்றும் இந்திரஜித் ஆகியோரின் உருவ பொம்மைகள் எரிக்கப்படுகின்றன. இதனை உடனே தடை செய்ய வேண்டும். ஏனெனில் இது திராவிடர்களாகிய எங்களை இழிவுப்படுத்துவதாகவும் எங்களை இரண்டாம்தர குடிமக்களாக சிறுமைப் படுத்துவதாக வும் உள்ளது” என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடு கிறார். ஆனால் அந்த ஆண்டு அக்டோபர் 18-ஆம் நாள் இராம லீலா இந்தியாவெங்கும் கொண்டாடப் படுகிறது. இதற்கு எதிர்வினையாக, அதே ஆண்டு டிசம்பர் 24-ஆம் நாள், பெரியாரின் முதல் நினைவு நாள் அன்று நடைபெற்ற திராவிடர் கழக மாநாட் டில் “இராவண லீலா” என்ற பெயரில் இராமன், இலட்சுமணன் மற்றும் சீதையின் பொம்மைகள் எரிக்கப்பட்டன. அதற்காக திராவிடர் கழகத்தின் முன்னணி பொறுப்பாளர்கள் பலர் கைது செய்யப் பட்டனர்.

அதன் பின்னர் 1996-ஆம் ஆண்டு திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து வந்து தொடங்கப்பட்ட பெரியார் திராவிடர் கழகம் என்ற பெரியார் இயக்கம் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் இராவண லீலா நடத்தியது. எதிர் வரும் அக்டோபர் 12 அன்று, தோழர் இராமகிருட்டிணன் தலைமையிலான பெரியார் இயக்கமான தந்தை பெரியார் திராவிடர் கழகம், சென்னை சமஸ்கிருத கல்லூரியின் வாசலில் இராவண லீலா நடத்த உள்ளது. இராமன், இலட்சு மணன் மற்றும் சீதையின் பொம்மைகள் எரிக்கப்பட உள்ளன. அதுவும் ஆரியர்களின் அடையாளமாக உள்ள சமஸ்கிருதக் கல்லூரியின் வாசலில்.

தற்போதைய காலக்கட்டத்தில் இராமனின் உண்மை முகத்தைக் காட்டவும் இராவணனைப் போற்றவும் நமக்கு முன்னெப்போதையும் விட அதிக காரணம் உள்ளது. இவை இரண்டுமே கற்பனை கதா பாத்திரங்கள் என்பதை நாம் அறிவோம். இராமா யணம் என்பது நாம் சிறு வயதில் படித்த கற்பனை தேவதைக் கதைகளை போன்ற ஒன்றேயன்றி வேறு இல்லை என்பதையும்  நாம் அறிவோம். ஆனால் நாம் இராவணனை போற்ற வேண்டிய காரணம் என்ன? இராமாயணத்தை நமக்கு சொல்பவர்கள் நமது சிந்தனையில் எதனை திணிக்க விரும்புகிறார்கள்?

ஒரு காலத்தில் இராமனின் படங்கள் அவனது துறவு கோலத்தைக் குறிப்பதாக இருக்கும். காவியுடை அணிந்து மனைவி சீதையுடனும் தம்பி இலட்சு மணனுடனும் காட்டுக்குச் செல்லும் இராமனின் படங்களையே நாம் அதிகமாக பார்த்திருப்போம். அதற்கடுத்தக் காலக்கட்டத்தில் இராமன் பட்டா பிஷேகப் படங்கள் அதிகமாக வெளியாயின. தற்போது இந்துத்துவ அமைப்புகள் பெரும்பாலும் பயன்படுத்தும் இராமனின் படங்கள் போர்வீரன் கோலத்தில் கையில் வில்லேந்தியவையாக உள்ளன.  இப்போது கடவுளாக அல்லாமல் போர் வீரனாக இராமன் முன்னிறுத்தப்படுகின்றான்.

ஒரு காலத்தில் இந்து மதம் பக்தியை போதித்தது. அதற்கு துறவு இராமன் பயன்பட்டான். அதற்கடுத்தக் காலக்கட்டத்தில் ஆரியர்கள் வெற்றி பெற்றவர்கள் என்பதையும் திராவிடர்கள் தோற்றவர்கள் என்பதை யும் குறிக்க பட்டாபிஷேக இராமனின் படங்கள் பயன்பட்டன. தற்போது தனது எதிரிகளை அழித் தொழிக்கு போர் வீரனாக அவனை முன்னிறுத்து கின்றனர்.

யார் அவனது எதிரிகள்? : இராட்சர்கள் – யார் இக்காலத்திய இராட்சர்கள்? இசுலாமியர்கள், சூத்திரர்கள் மற்றும் தலித்துகள். எல்லா முஸ்லிம்களும், எல்லா சூத்திரர்களும் எல்லா தலித்துகளுமா? இல்லை. எதிர்த்து நிற்கும் முஸ்லிம்கள், சூத்திரர்கள் மற்றும் தலித்துகள்.

அனுமான்களும் உள்ளனர். அடிபணியும் சூத்திரர் களும் தலித்துகளும் முஸ்லிம்களும். அனுமன் எவ்வாறு இராமனின் காலடியில் உள்ளானோ அவ்வாறோ நமக்கு நமது இடத்தை காட்ட அவர்கள் விரும்புகிறார்கள். அப்துல் கலாம் போன்று பார்ப்பனிய மேலாதிக்கத்திற்கு அடிபணிந்து செல்பவர்களை அவர்கள் போற்றுகிறார்கள்.

பார்ப்பனிய மேலாதிக்கத்தை எதிர்ப்பவர்கள் அனைவரையும் அவர்கள் இராட்சசர்களாக, அரக்கர்களாக, தேச விரோதிகளாக முன்னிறுத்து கிறார்கள். அதிலும் பி.ஜே.பி அரசு பதவியேற்றப் பிறகு இது மிகுதியாக அதிகரித்துள்ளது.

தற்போதைய மோடி அரசு பதவியேற்ற பிறகு எவ்வளவு முனைப்புடன் சமஸ்கிருதத்தைத் திணிக்கிறது என்பதை நாம் பார்த்து வருகிறோம். ஆசிரியர் தின விழாவை குரு உத்சவ் என்பதும் பள்ளிகளில் குரு பூஜைகள் நடத்தச் சொல்வதும் நடக்கிறது. இது ஓர் எடுத்துக் காட்டு மட்டுமே. இவ்வாறு பல வழிகளில் சமஸ்கிருதம் திணிக்கப்படும் அதே வேளையில், இந்த இந்துத்துவ அரசு ஆரியர்கள் மேலானவர்கள் என்றும் திராவிடர்கள் கீழானவர்கள் என்றும் தொடர்ந்து மறைமுகமாகவும் நேரடியாகவும் வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில் இராவணனை நாம் உயர்த்திப் பிடிக்க வேண்டிய தேவை முன்னெப்போதையும் விட தற்போது அதிகரித்துள்ளது. அது இராவணன் என்ற ஒரு கதா பாத்திரத்திற்காக அல்ல. மாறாக, திராவிடர் களாகிய நமது சுயமரியாதையை நிறுவுவதற்காக. இராவணன், மகிசாசுரன் என்ற திராவிடர் இன பாத்திரங்களை கொடூரமானவர்களாக சித்தரித்து அதன் மூலம் நமது சுயமரியாதைக்கு அவர்கள் இழுக்குத் இழைப்பதற்கு எதிராக… நமது வளமான திராவிட மரபை நினைவுகூரும் விதமாக… நாம் இதனைச் செய்ய வேண்டிய தேவை உள்ளது.


ஓணம் பண்டிகைக்கு மாற்றாக வாமன ஜெயந்தியை பா.ஜ.க முன்னிறுத்திய போது, கேரளாவின் முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் இருவருமே அதனை எதிர்த்து “நாங்கள் எங்கள் திராவிட மரபை விட்டுக் கொடுக்க மாட்டோம். வாமன ஜெயந்தி என்று இதற்கு பெயர் சூட்ட முனைவதை கடுமையாக எதிர்க்கிறோம்” என்று அறிக்கை வெளியிட்டனர். இத்தகைய ஒன்றிணைந்த செயல்பாட்டினையே நாமும் மேற் கொள்ள வேண்டும் என்று கூறி விடைபெறுகிறேன்.

Saturday, September 25, 2021

புதுச்சேரியில் பெரியார் திராவிடர் விடுதலைக் கழகம் 15 ஆம் தொடக்கவிழா - கவி உரை

 24.9.2021அன்று புதுச்சேரியில் பெரியார் திராவிடர் விடுதலைக் கழகம் 15 ஆம் தொடக்கவிழா நடைபெற்றது. அதில் நான் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்.... 


பெரியார் திராவிடர் விடுதலைக் கழகத்தின் 15 ஆம் தொடக்க விழா மற்றும் திராவிடர்இயக்கக் கண்காட்சியை தொடங்கி வைக்க வாய்பளித்த கோகுல் அவர்களே!

அலைகள் இயக்கத்தின் நிறுவனத் தலைவர் வீர.பாரதி அவர்களே!

தோழர்களே வணக்கம்.

கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தோழர் கோகுல்காந்தி நாத் அவர்களுடன் நட்பை பேணி வருகின்றேன். 

1999 ஆம் ஆண்டு ‘குமுதம்’ இதழ் புதுச்சேரி மலர் ஒன்று வெளியிட்டிருந்தது. 

அதில் கோகுல் படத்தையும் பெரியார் புதுச்சேரியில் பேசிய ஒரு பொதுக் கூட்ட நிகழ்வு படத்தையும் வெளியிட்டிருந்து. 

அந்த குமுதம்இதழை கையில் வைத்துக் கொண்டே புதுச்சேரி பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்க வந்திருந்தேன். அங்கு கோகுலைக் கண்டதும், குமுதம் இதழைக் காட்டி இது நீங்களா? என்று வினவினேன். ஆம் என்றார் கோகுல். அன்று தொடங்கிய தோழமை இன்று வரை தொடர்கின்றது.

நான் இந்த புதுச்சேரி மண்ணில் தொடங்கிய பெரியார் பார்வை இதழ்.

 அதற்கு கோகுல் உதவியாக இருந்தார். 

பின்பு அவர் எழுதிய ‘கருப்புமலர்களின் நெருப்புப் பயணம்’ நூல். புதுவை திராவிடர் இயக்கத்தின் சுருக்கமான வரலாறும் 43 பெரியார் தொண்டர்களின் வாழ்க்கை வரலாற்றையும் உள்ளடக்கியது.

  பல ஆண்டுகளுக்கு முன்பே அதற்காக அரும்பணிகளையும் தேடல்களையும தொடங்கியிருந்தார். அந்நூல் இறுதி வடிவம் பெறும் காலத்தில் நான் துணையாக இருந்தேன். நூல் வெளியீட்டு விழாவையும் சிறப்பாக நடத்தினோம்.

அந்நூலில் பல அரிய செய்திகள் இருக்கின்றன.

புதுச்சேரியில், சுயமரியாதை இயக்கம் தொடங்குவதற்கு முன்பே பெரியாரின் ‘குடிஅரசு’ இதழக்கு பல நிறுவனங்கள் தங்கள் ஆதரவை தெரிவித்து வந்துள்ளனர். 

‘வைத்தியக்குப்பம் சோதிடாலயம்’, ‘கணித சோதிடம் தே. ஆறுமுகம் செட்டி’, ‘திரெளபதி அம்மன் கோயில் வீதி தேவி ஆஸ்ரமம்’, இரங்க பிள்ளை வீதியில் இயங்கிய ‘வஸந்தி நிலையம்’ ஆகியவை அவற்றுள் சில.

முத்தியால்பேட்டை பகுதியில் சுயமரியாதை இயக்க முழக்கம் ஒலிக்கத் தொடங்குகிறது என்பதை எடுத்துக் காட்டுகிறார் கோகுல்.

 தோழர் றா. பழனியப்ப செட்டியார் தனது தாயார் நினைவாகக் கொடுத்து வந்த திதி வழக்கத்தை  நிறுத்தி, தனது குடும்பத்தில் சமூகப் புரட்சியை நடத்தியுள்ளார் இது நடந்தது 1928 இல். இச் செய்தி 7.10.1928 நாளிட்ட குடிஅரசு இதழில் வெளிவந்திருக்கிறது.

புதுச்சேரிப் பகுதி 1954 ஆம் ஆண்டு வரை பிரஞ்சு ஆளுமைக்குக் கீழ் இருந்த பகுதியாகும். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய கொள்கைகளை பிரஞ்சு அரசு கொண்டிருந்தாலும், பொது உரிமை மற்றும் பொதுவுடைமை கொள்கைகளுக்காக இயங்கும் இயக்கங்களை நசுக்கியதை யாராலும் மறுக்க முடியாது.

சுயமரியாதை இயக்கம் முதல் திராவிடர் கழகம் தொடங்கிய காலம் வரை பதிவு செய்ய இயலாமல் செயல்பட்டு வந்தது.

சொசித்தேக்களில் (சங்கம்) தந்தை பெரியார் தொண்டர்கள் பங்கு கொண்டனர்.

சுயமரியாதை இயக்கம் முறையாக தொடங்கபடாத நிலையிலும் கூட, தோழர் ராஜகோபால் செட்டியாரின் புதுமனை புகுவிழாவில் தந்தை பெரியார், ஜே.எஸ். கண்ணப்பன், சாமி.சிதம்பரனார், தண்டபாணிப் பிள்ளை ஆகியோர் பங்கேற்றனர். அவர்களை வைத்து சாவடி மைதானத்தில் பொதுக்கூட்டம் நடத்தி இருக்கின்றனர்.

புதுச்சேரியில் தஞ்சம் புகுந்த கவிஞர் பாரதியார், வ.வே.சு. அய்யர் போன்ற பார்ப்பனர்களோடு கனக சுப்புரத்தினம் ( பாரதிதாசன்) நட்பு கொண்டிருந்தார்.

 ‘பொருளாதாரம், உத்தியோகம் முதலியத் துறைகளில் பிராமணரல்லாதார் சம நிலையடைய முடியாது’ என்ற வ.வே.சு. அய்யர் கூற்றுக்கு, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ‘பிராமணரல்லாதார் மிகப் பெரும்பாலோர் அடிதடியில் கிளம்பிவிட்டார்களோ’ என்று பதில் கொடுத்திருக்கிறார். 

பகுத்தறிவுக் கொள்கையில் ஆர்வமிக்க இளைஞராக விளங்கிய ம. நோயல், சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டார்.

மக்களிடையே சமத்துவம் ஏற்பட, அனைத்து சாதி மதத்தவரும் பங்கு கொள்ளும் வகையில் இவரின் சொந்த ஊரான உழவர்கரை பகுதியில் உள்ள தெருவிலேயே பெரிய பந்தலிட்டு சமபந்தி விருந்து வழங்கினார். 

நெல்லிக்குப்பத்தில் 22.2.1931 ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்க முதல் மாநாடு நடைபெற்ற போது புதுவையிலிருந்து அம்மாநாட்டிற்கு கலந்து கொள்ள சென்றிருந்த தோழர்கள் புதுச்சேரியிலும் இவ்வாறு ஒரு மாநாடு நடத்த முடிவு செய்தனர். 

ஒரு வாரக் காலத்திலேயே நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் மிக விரைவாக, பிரம்மாண்டமான முறையில் தோழர்களால் செய்யப்பட்டது. 

சுயமரியாதை இயக்கப் பொதுக் கூட்டம் 1.3.1931 ந் தேதி, காலையில் கப்ளே தியேட்டரிலும், மாலையில் ஒதியன்சாலை மைதானத்திலும் (தற்போது அண்ணா திடல்) நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. 

நிகழ்ச்சிக்கு பிரஞ்சிந்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்று சமயவாதிகள் சிலர் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதன் காரணமாக மாலையில் ஒதியன்சாலையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியை ரத்து செய்து கப்ளே தியேட்டரில் மட்டும் நிகழ்ச்சி நடத்த அனுமதி அளித்தது.

இதனை 3000 பேர் கலந்து கொண்ட சுயமரியாதை இயக்க மாநாடு என்று ‘குடிஅரசு’ இதழ் வர்ணித்தது.

இது சுயமரியாதை இயக்கத் தோழர்கள் ஒருங்கிணைந்து புதுச்சேரியில் பழமைவாதிகளின் தடைகளையும், எதிர்ப்புகளையும் உடைத்துக் காட்டிய நிகழ்ச்சி ஆகும். இந்நிகழ்ச்சியைப் பொதுக்கூட்டமாக நடத்தினாலும் 'மாநாடு' என்றே ‘குடிஅரசு’ வர்ணித்தது.(புதுச்சேரியில் 1.3.1931 இல் சொற்பொழிவு - குடிஅரசு, 8.3.1931).

ம.நோயேல், மான்ழினிபாலா போன்ற சிலரும் ரெவெய்செசியால் சங்கத்தில் பங்கு கொண்டு இருந்தபடியால் பல சீர்திருத்த வேலைகளைத் தொடர்ந்து செய்தனர். தங்களின் கருத்துகளைப் பரப்ப தமிழ் மன்றங்கள், இலக்கிய அமைப்புகள் ஏற்படுத்திக் கொண்டனர்.

பிரஞ்சு ஆளுநர் லூய் போன்வேன் அவர்கள் பொறுப்பேற்றிருந்த சமயத்தில், புதுச்சேரி திராவிடர் கழகம் விழா நடத்த பிரஞ்சு அரசு அனுமதியளித்தது. ஆனால் முறையாகப் பதிவு செய்யப்படவில்லை. துவக்க விழாவிற்கான அனுமதி பெற்றதிலே மிகுந்த மகிழ்ச்சியில் நிகழ்ச்சி நடத்துவதற்கான வேலையில் ஈடுபடத் துவங்கினார்கள்.

ஆர்.வி.கோபால் தலைமையிலான நாகை திராவிட நாடக கழகத்தினர் புதுச்சேரி வந்தனர்.

அவர்கள் நேரு வீதியில் அமைந்திருந்த கப்ளே தியேட்டரிலும், தகரக் கொட்டகையாக இருந்த, தற்போதைய  கம்பன் கலையரங்கத்திலும் பல நாடகங்கள் நடத்தினர். ‘சாந்தா அல்லது பழனியப்பன்’ என்ற நாடகமும் நடத்தப்பட்டது.  அந்நாடகத்தில் ‘சிவகுரு’ பாத்திரத்தில் கலைஞர் மு. கருணாநிதி, நிரவி ரத்தினவேல் ஆகியோர் நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

நாடகக் குழுவினர் நீடராஜப்பர் வீதியில் ஒரு இல்லத்தில் தங்கியிருந்தனர். அங்கேதான் திராவிடர் கழக துவக்க விழாவிற்கான ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடல் நடத்தப்பட்டது. 

இது தொடர்பாக ‘குடிஅரசு’ (14.7.1945)இதழில் வெளியான செய்தி: 

புதுச்சேரி தி.க. திறப்பு என்ற தலைப்பில் மேற்கண்ட கழகத் திறப்பு விழா 22.7.1945ந் தேதி பெரியார் ஈ.வே.ராமசாமி அவர்கள் தலைமையில் நடைபெறும். தோழர் டி. சண்முகம் பிள்ளை திறந்து வைப்பார். தோழர் சி.என். அண்ணாதுரை அவர்கள் கொடியேற்றுவார். தோழர்கள் கே.வி. அழகிரிசாமி, ஏ.பி. ஜனார்த்தனம், ஆர். நெடுஞ்செழியன், கே. அன்பழகன், சு.பெருமாள் (புதுவை), அப்துல் வகாப் (விழுப்புரம்), சத்தியவாணி முத்து (சென்னை), மஞ்சுளா பாய் ஆகியவர்கள் படங்களைத் திறந்து வைப்பார்கள். கனக சுப்புரத்தினம் (பாரதிதாசன்) வரவேற்புரை கழகத் தலைவராக. எஸ். சிவப்பிரகாசம், எஸ்.கோவிந்தராஜி ஆகியோர் செயலாளர்கள்.

மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டு பணிகளில் திராவிட நாடகக் கழகத்தினரும் ஈடுபட்டனர். மாநாட்டில் கலவரம் ஏற்படுத்த பொதுவுடைமைக் கட்சியினரும், காங்கிரஸ் தேசிய வாதிகளும் தீவிரமாக இறங்கினர். மாநாட்டில் கலவரம் ஏற்படும் சூழ்நிலை உள்ளதையும் விளக்கிய போது பெரியார் அவர்கள், திட்டமிட்டப்படியே மாநாடு நடத்த வேண்டும் என்று கூறினார். 

துவக்க விழாவிற்கு தந்தை பெரியார் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து தோழர்கள் புதுச்சேரி வந்தனர். தந்தை பெரியாருக்கு முத்தியால்பேட்டையில் பொன். இராமலிங்கம்  நடத்தி வந்த ‘சகுந்தலா சாயத் தொழிற்சாலை’யில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

மாநாட்டு துவக்கத்திலேயே கலவர ஏற்பாட்டோடு வந்த கலவரக்காரர்கள் ரகளையில் ஈடுபட்டு, கழகத் தோழர்களைக் கடுமையாகத் தாக்கினார்கள். அவர்களின் தாக்குதலுக்கு  கலைஞர் மு. கருணாநிதி ஆளானார்.

தன் மதிப்புக் கழகம்

உப்பளம் பகுதி முழுவதும் தாழ்த்தப்பட்ட மக்களே மிகப் பெரும்பான்மை யினராக வாழ்ந்தனர்.

இப்பகுதியில் தந்தை பெரியார் கொள்கையில் ஈடுபாடு கொண்டு அதிக எண்ணிக்கையில் தோழர்கள் குடும்பம் குடும்பமாக திராவிடர் கழகத்தில் பங்கு கொண்டனர். 

பிரஞ்சு அரசில், திராவிடர் கழகம் என்ற பெயரில் இயங்க முடியாத, பதிவு செய்ய இயலாத போது, சுயமரியாதை இயக்கத்தின் பெயரை கவிஞர் பாரதிதாசன் ஆலோசனையின் பேரில் தன்மதிப்புக் கழகமாகப் பெயர் மாற்றம் செய்து துவக்கப்பட்டது.

 இந்த அமைப்பை ஏற்படுத்தியதில் முக்கிய பங்கு ம.நோயேல் அவர்களைச் சாரும். 

தலைவராக பெருமாள், செயலாளராக மாணிக்கவேல் சகேர், பொருளாளதராக தூய்ழான் தர்மசிவம், கவுரத் தலைவராக ம.நோயேல் ஆகியோரைக் கொண்டு துவக்கப்பட்ட தன் மதிப்புக் கழகத்தில் பெரும்பாலோர் ஆலைத் தொழிலாளர்களாக இருந்தார்கள்.

எத்துவால் ரங்கசாமி, மாணிக்கவேல் சகேர், தூய்ழான் தர்மசிவம்,  உப்பளம் ஆர். பெருமாள், காலாஸ் ஜெகன்நாதன், இராமசாமி ஆகியோர் குறிப்பிடத்தக்க தன் மதிப்புக் கழகத் தோழர்கள் ஆவார்கள்.  

மாணிக்கவேல் சகேர் அவர்கள் ‘குமரிக்கோட்டம்’ நாடகத்தில் முக்கிய பாத்திரத்தில் பங்கேற்று நடித்தவர். பொன்.இராமலிங்கம் ஏற்படுத்திய கலைக்குழுவில் முக்கிய பங்கு வகித்தவர் இவர்.

தன்மதிப்புக் கழகத்தின் பொருளாளராக இருந்தவர் துய்ழான் தர்மசிவம். இவருடைய திருமணத்தில் திருக்குறள் முனுசாமி, ம.நோயேல், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், வாணிதாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

உப்பளம் ஆர். பெருமாள், பஞ்சாலையில் பிரம்புக் கூடை பின்னும் வேலை செய்ததால் பிரம்புக்கூடை பெருமாள் என்று அழைக்கப்பட்டவர். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், இவர் மீது அளவில்லா அன்பைக் கொண்டிருந்தார்.

இவருடைய கல்லறையில் திராவிடர் கழகக் கொடியின் அமைப்பு பொறிக்கப்பட்டுள்ளது. இவர் 16.1.1981 இல் மறைந்தார்.

தன்மதிப்புக் கழகத்தின் சார்பில் 'உழவன்' என்னும் கையயழுத்து இதழ் நடத்தப்பட்டது. இந்த கையயழுத்து இதழை சிறப்பாக தொகுத்து தயாரிப்பதில் காலாஸ் ஜெகன்நாதன் அவர்களின் பங்கு அளப்பரியது. 

1951 இல் சிறந்த நாடக நடிகராகவும், கால்பந்தாட்ட வீரராகவும் முற்போக்கு எழுத்தாளராகவும் விளங்கியவர்.

திருவள்ளுவருக்குப் புகழ் சேர்க்கும் வகையிலும் தன் மதிப்புக் கழக ஆண்டு விழாவாகவும் வள்ளுவர் விழாவை ஒவ்வொரு ஆண்டும் நடத்தினார்கள்.

 ‘குமரிக்கோட்டம்’ போன்ற நாடகங்களை நடத்தி அப்பகுதி மக்கள் பெரியார் கொள்கையை ஏற்கச் செய்தனர். 

ஞாயிற்றுக் கிழமை போன்ற விடுமுறை நாட்களில் கவிஞர் பாரதிதாசன், ம.நோயேல், எம்.ஏ. சண்முகம், வாணிதாசன், பொன். இராமலிங்கம் போன்றவர்கள் தன் மதிப்புக் கழகத் தோழர்களுடன் கூடி கருத்துப் பரிமாறிக் கொள்ளும் வாய்ப்பாக அமைத்துக் கொண்டனர்.

தமிழகத்திலிருந்து வரும் திராவிடர் கழகப் பிரமுகர்கள் உப்பளத்தில் பிரச்சாரம் செய்யாமல் போனதில்லை என்ற அளவிற்கு பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்துவந்தனர்.

உப்பளத்தில்  கிறிஸ்துவர்கள், பிரஞ்சு வெள்ளையர்கள்,  உயர் சாதிக்காரர்கள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்கள் என்று தனித்தனியாக பிரித்து கல்லறைகள் அமைக்கப்பட்டு இருந்தது. இதனை எதிர்த்துப் போராடி, அனைவருக்கும் பொதுவான கல்லறை அமைத்தது தன் மதிப்புக் கழகத்தின் சாதனையாகும். 

திராவிடர் கழகம் நடத்திய பிள்ளையார் சிலை உடைப்பு, இந்தி எதிர்ப்பு, இந்திய அரசியல் சட்டம் எரிப்பு ஆகிய போராட்டங்களில் அதிகமானவர்களைத் திரட்டி வந்து கலந்து கொள்ளச் செய்தனர். 

பஞ்சாலை போராட்டத்தால் கம்யூனிஸ்ட் கட்சி புதுச்சேரிலே ஓங்கி வளர்ந்திருந்த சமயத்திலே கம்யூனிஸ்ட் பக்கம் சாயாமல் தந்தை பெரியார் கொள்கைகளை ஏற்று தன் மதிப்பு இயக்கம் கண்டதே இவர்களின் தனிச் சிறப்பாகும்.

உருளையான் பேட் புதுப்பாளையம் பேட் -அழகிரி நூல் நிலையம்

தாழ்த்தப்பட்ட மக்கள் அதிகமாக வாழும் பகுதி புதுப்பாளையம் பேட் ஆகும். மு.ரங்கநாதன், வை.வடிவேலு, மு.சதாநந்தம் ஆகியோர் ‘நித்தியானந்தம் கல்வி சாலை’ என்ற பெயரில் சிறுவர்களுக்கு மாலை நேரப் பள்ளி ஒன்றை சிறிய அளவிலே நடத்தி வந்தனர். 

திராவிடர் கழகத் தோழர்கள் சிலர் விடுதலை, வெற்றி முரசு, திராவிடன் போன்ற இதழ்களை கல்விச் சாலையில் பயிலும் மாணவர்களுக்குப் படித்துக் காட்டுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

புதுப்பாளையம் பேட் இளைஞர்கள் பலர் ஆலைத் தொழிலாளர்கள் . தன் மதிப்புக் கழகத் தோழர்களும் திராவிடர் கழகத் தோழர்களுடன் ஆலை வேலையில் நெருங்கிப் பழகும் வாய்ப்பு ஏற்பட்டது.

வீ. பெருமாள், மு.வீரப்பன், ரஸ்கீன், ஆனந்தவேல், தே. சாரங்கன், வ.மலையாளத்தான்,  இரா.எத்துராசு, பொ.நடராசன் மற்றும் பல தோழர்கள் முயற்சித்து ‘நித்தியானந்தம் கல்விச்சாலையை ‘அழகிரி நூலகமாக’ மாற்றினார்கள். ம.நோயேல் அவர்கள் இந்த இளைஞர்களின் ஆர்வத்தைத் திராவிடர் கழகத்திற்குப் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக நூலகம் அமைய பல வகை உதவிகளைச் செய்தார். 

நூலக தலைவர் வீ.பெருமாள் அவர்களின் தம்பிக்குச் சீர்திருத்தத் திருமணம் நடந்தது.  இதன் தொடர்ச்சியாகப் பலரும் தங்களின் குடும்பத்தில் சுயமரியாதை திருமணத்தை நடத்தினார்கள். 

குத்தூசி குருசாமி தலைமையில் ஏராளமான திருமணங்கள் நடைபெற்றன. 

ம.நோயேல் அவர்கள் உருளையன் பேட்டை பக்கத்தில் உள்ள நெல்லித் தோப்பு மேற்றிராசன மாதா கோயிலில் தாழ்த்தப்பட்டவர்களையும் உயர்சாதியினரையும் பிரிக்கும் நடுக்கூடத்தை (தடுப்புக்கட்டை) அகற்றும் போராட்டத்திற்கு சுயமரியாதை இயக்க ஆரம்ப காலத் தோழர்களைப் பயன்படுத்திக் கொண்டார். 

பிரஞ்சிந்திய அரசில் அமைச்சராக இருந்த மாண்புமிகு ஆ.வே. முத்தையா அவர்கள் சுயமரியாதை இயக்கத்தில் ஆர்வம் கொண்டிருந்தார். சுயமரியாதை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இவர் ஆற்றிய உரை குடிஅரசு இதழ்களில் பதிவாகியுள்ளது. புதுவை முரசு 4.5.31 இதழில், உடன் முழங்கு என்ற தலைப்பில் இவரைப் பற்றி புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் எழுதியுள்ளார்.

புதுச்சேரியில் சுயமரியாதை இயக்கத்தின் முன்னோடி பகுதியாக விளங்கிய முத்தியால் பேட்டையில் சகுந்தலா சாயத் தொழிற்சாலையின் உரிமையாளர் பொன். இராமலிங்கம், திராவிடர் கழகம் புத்துணர்ச்சிப் பெற காரணமாக இருந்தார். இந்த சாயத் தொழிற்சாலை புதுச்சேரி திராவிடர் கழகத்தின் தலைமை அலுவலமாகவும் இயங்கியது.

தாழ்த்தப்பட்ட மக்களை கோயிலுக்குள் அழைத்துச் செல்லும் ஆலய நுழைவுப் போராட்டத்தை நடத்தியவர் பொன். இராமலிங்கம். புதுவையில் ஈஸ்வரன் கோயில், பெருமாள் கோயில் உள்ளிட்ட பல கோயில்களுள் தாழ்த்தப்பட்ட மக்களை மேள, தாளங்களோடு அழைத்துச் சென்றவர் பொன்.இராமலிங்கம். இது நடந்தது 1947 இல்.

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் எழுதிய 'இரணியன் நாடகம்' 1948 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தில் தடை செய்யப்பட்டது. ஆனால், பிரஞ்சிந்திய ஆட்சிக்குட்பட்டதால் புதுச்சேரியில் இந்நாடகம் நடத்தப்பட்டது. இதில் ‘இரணியனாக’ வேடம் ஏற்று நடித்தவர் பொன். இராமலிங்கம்.

புதுச்சேரி திராவிடர் கழகத் தலைவராக பொன். இராமலிங்கமும், துணைத் தலைவராக ம.நோயேல் அவர்களும் இருந்துள்ளனர்.

புதுச்சேரி சின்னக்கடை திராவிடர்கழகத் தொண்டர்களின் கோட்டையாக விளங்கியது. கோ. கோவிந்தராசு, நாராயணசாமி, கி. பார்த்தசாரதி, இராமசாமி தேவர், இவருடைய மகன் இரா. நக்கீரன், சைகோன் ராஜாமாணிக்கம், விக்டர் ஆரோக்கியதாஸ், அலேக்ஸிஸ் என்ற அ. தமிழ்த் தொண்டன் ஆகிய தோழர்கள் ஒன்று கூடி 1948 இல், காந்தி வீதி, தில்லை மேஸ்திரி வீதி சந்திப்பில் வள்ளுவர் தமிழ் நூற்கழகம் என்ற பெயரில் மன்றம் அமைத்து முறையாக, உறுப்பினர்களை இணைத்து பல ஆண்டுகள் தொடர்ந்து செயல்பட்டனர். இதன் தலைவராக அ. தமிழ்த்தொண்டன் இருந்தார்.

1950 இல் ‘குப்பையில் மாணிக்கம் (அல்லது) தமிழர் படும் பாடு’, 1951 இல் ‘கைகூடாக் காதல்’, 1965 இல் ‘என் முடிவு’, 1968இல் ‘நான் யார்?’ ‘அன்பு மலர்’ ஆகிய நாடகங்களில் சாதி, மதம், சாமியார் மோசடிகளை எதிர்க்கும் கருத்துக்களை  மிகச் சிறப்பாக, கதை, வசனம், பாடல்களை அமைத்து எழுதியுள்ளார் அ. தமிழ்த்தொண்டன்.

இந்த விழாவில் புதுச்சேரி திராவிட இயக்கக் கண்காட்சியை திறந்து வைக்க வாய்ப்பளித்த தோழர் கோகுல் காந்திக்கும், அலைகள் இயக்கத் தலைவர் வீர.பாரதிக்கும் மற்றும் தோழர்களுக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம்.

Friday, September 17, 2021

சிங்கப்பூர் தமிழவேள் கோ. சாரங்கபாணி நினைவுநாள்

 சிங்கப்பூர் தமிழவேள் கோ. சாரங்கபாணி நினைவுநாள் (16.03.1974)


தமிழவேள் கோ. சாரங்கபாணி அவர்கள், நாகை மாவட்டம் வேதாரண்யம் (திருமறைக்காடு) அருகில் உள்ள கொட்டையிடி என்ற சிற்றூரில்1903-ஆம் ஆண்டு ஏப்பிரல் 20 ஆம் நாள் பிறந்தார். திருவாரூர் கழக உயர்நிலைப் பள்ளியில் பள்ளியிறுதிப் படிப்பை முடித்தார்.


பின்பு, 1924-ஆம் ஆண்டு சிங்கப்பூர் வந்து சேர்ந்த தமிழவேள், அங்காடிச் (மார்க்கெட்) சாலையிலுள்ள வணிக நிறுவனம் ஒன்றில் கணக்கெழுதுபவராக வாழ்க்கையைத் தொடங்கினார். 

தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகளும் சீர்திருத்த கருத்துகளும் மலையகத் தமிழர் நடுவிலே நிலையாக வேரூன்ற வேண்டுமென்ற பேரவாவால் தமிழவேள், 16.1.1929-இல் வெ.சி. நாராயணசாமி அவர்களுடன் சேர்ந்து முன்னேற்றம் என்னும் பெயரில் ஒரு கிழமை (வார) இதழைத் தொடங்கி தமிழர்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டார். தொடக்கத்தில் அவ்விதழின் துணையாசிரியராகப் பணியாற்றிய தமிழவேள் 1930-ஆம் ஆண்டுவாக்கில் அவ்விதழின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றார்.


‘முன்னேற்றம்’ தொடங்கப்பெற்ற அதே ஆண்டு இறுதியில் 20.12.1929-இல் தந்தை பெரியார் அவர்கள், தம் துணைவியார் நாகம்மையார், ச. இராமநாதன், அ. பொன்னம்பலம், சி.நடராசன், சாமி சிதம்பரனார் ஆகியோருடன் பினாங்கு வந்து சேர்ந்தார்.


தமிழர்களை ஒன்று சேர்க்கும் அரியதொரு உணர்வால் உந்தப்பட்டுத் 1930/ஆம் ஆண்டு திரு. உ.இராமசாமி (நாடார்) அவர்கள் தலைமையில், திருவாளர்கள் காந்தரசம் அ.சி. சுப்பய்யா, கா.தாமோதரம், பி. கோவிந்தசாமி போன்றோருடன் இணைந்து கோ. சா., ‘தமிழர் சீர்திருத்த சங்கம்’ அமைக்கும் அரிய முயற்சியில் ஈடுபட்டு 1930-ஆம் ஆண்டு தமிழர் சீர்திருத்த சங்கம் உருக்கொண்டது.


அக்கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட ‘சீர்திருத்தம்’ என்னும் மாத இதழின் ஆசிரியர் பொறுப்பை ஏற்று நடத்தினார். தொடக்கத்தில் இக்கழகத்தின் செயலாளராகப் பொறுப்பேற்றிருந்த கோ. சா., பிறகு அதன் தலைவரானார்.


தமிழ் முரசு

1935-ஆம் ஆண்டு சூலைத்திங்கள் 6-ஆம் நாள் காரி (சனி)க் கிழமையன்று மாலை 6.00 மணிக்குச் சிங்கப்பூரில், 20, கிள்ளான் சாலையில், தமிழவேள் ‘தமிழ் முரசு’ என்ற பெயரில் ஒரு செய்தி இதழைத் தொடங்கினார். அன்று சிறிய அளவில் 4 பக்க அளவில் 1 காசு விலையில் கிழமை இதழாக வெளிவந்தது. நான்கு திங்கள் கடந்து இதழைக் கிழமை மும்முறை வெளியிட்டார். இவ் வளர்ச்சிக்கு ஏற்ப இதழின் விலை 3 காசாக உயர்த்தப்பட்டது.


1937-ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் முதல் தமிழ்முரசு, நாளிதழாக வெளிவரலாயிற்று. இரண்டாம் போருக்குப் பின் பதினைந்து காசு விலையில் பன்னிரண்டு பக்கங்களுடன் வெளிவரத் தொடங்கியது.


தமிழர்களின் அறியாமை, சிந்தனையின்மை போன்ற இருள்களை அகற்ற தமிழ்முரசு தோன்றியது.

தந்தை பெரியார் ஈ. வெ. இராமசாமி அவர்களின் பகுத்தறிவு-தன்மான-சீர்திருத்த- முன்னேற்றக் கருத்துகளை ஏற்று அவற்றை இந்நாட்டில் பரப்பி மக்களை மக்களாக வாழ வழி வகுப்பதற்கெனப் பிறந்த ஏடு தமிழ் முரசு.

அறியாமை இருளில் வேரூன்றிவிட்ட மக்களிடையே சீர்திருத்த இதழை நடத்த அஞ்சா நெஞ்சம் வேண்டும். இடையறாத இன்னல்களும் இடர்களும் பரிசாகக் கிடைத்தும், கொண்ட கொள்கைக்காகத் தமிழவேள் இறுதிவரை மனந்தளராமல் போராடினார்.


1952-ஆம் ஆண்டு பிற்பகுதியில் எழுத்தாளர்களுக்கென ‘எழுத்தாளர் பேரவை’ என்ற ஒரு புதுப் பகுதியைத் தொடங்கிற்று தமிழ் முரசு.


மாணவர்களையும் சிறுவர்களையும் எழுத்துலகில் நுழையச் செய்து அவர்களில் பலரைத் தமிழ் எழுத்துலகம் போற்றும் எழுத்தாளர்களாக உருவாக்குவதற்கு பயிற்சிக்களமாக இலவய இதழ் ஒன்றினைத் தமிழ்முரசுடன் இணைத்து வெளியிட்டார். அதுதான் ‘தமிழ் முரசு’ மாணவர் மணிமன்ற மலர். முதல் மலர் 6.7.1953-இல் மலர்ந்தது. இது மலேசியாவில் ஓர் எழுத்தாளர் மரபினரையே தோற்றுவித்தது.


Reform என்னும் திங்கள் இதழையும் Indian Daily Mailஎன்னும் நாளிதழையும் ஆங்கிலத்தில் சில காலம் வரை நடத்தினார். ‘தேச தூதன்’என்னும் மாலை நாளிதழும் இவரால் சில காலம் தலைநகரில் நடத்தப்பட்டது.


தமிழர் பிரதிநிதித்துவ சபை


சிங்கையில் இயங்கி வந்த 32 கழகங்களையும் (சங்கங்களையும்) இணைத்துத் ‘தமிழர் பிரதிநிதித்துவ சபை’யைக் கண்டார்.


தமிழர் திருநாள்


தமிழர் மொழி, கலை, இலக்கியம், பண்பாடு, விளையாட்டு ஆகியவற்றைப் பேணிக் காக்கவும் சாதி சமய வேறுபாடுகளால் பிளவுபட்டு நின்ற தமிழர்கள் தமிழன் என்ற தன்மான உணர்வோடு ஒன்று சேரவும், 1952-ஆம் ஆண்டு ‘தமிழர் திருநாள்’ என்னும் விழாவை ஏற்படுத்தினார்.


தமிழ் எங்கள் உயிர்

மலாயாப் பல்கலைக் கழக இந்தியப் பகுதியில் தமிழை ஒழித்து வாய் செத்த சமற்கிருதத்தை ஆட்சியேற்ற வந்த நீலகண்ட சாஸ்திரியாரை புறமுதுகுகாட்டி ஓடச் செய்து தமிழுரிமையைத் தமிழவேள் பேணினார்.

மலாயாப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் தாயை வீற்றிருக்கச் செய்ய ‘தமிழ் எங்கள் உயிர்’ என்ற பொருட் கொடைத் திட்டத்தை செயல்படுத்தினார். அவரின் பெரு முயற்சியால் பல்கலைக்கழக இந்தியப் பகுதியில் சிறந்த நூல் நிலையம் ஒன்று அமைந்தது. தமிழ்ப் பகுதியில் மாணவர்களை ஈர்ப்பதற்காக உதவிச் சம்பளத் திட்டத்தை அறிமுகப்படுத்தி அதிலும் வெற்றியே கண்டார்.


மறைவு

சிங்கை-மலையகத் தமிழர்களுக்காகவும் தமிழ் மொழிக்காகவும், தமிழ் மன்பதையின் மேம்பாட்டிற் காகவும் ஏறத்தாழ 45 ஆண்டுக் காலம் அயராது- ஒழியாது- ஓயாது பாடுபட்ட முத்தமிழ்க் காவலர் தமிழவேள் கோ. சாரங்கபாணி 1974-ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் 16-ஆம் நாள் இயற்கை எய்தினார்.


தனித்தமிழ் அரிமா தரங்கை பன்னீர்செல்வம் அவர்கள் சிங்கை வந்த போது நானும் அவரும் சிங்கப்பூரிலுள்ள தமிழவேள் கல்லறைக்குச் சென்று மரியாதை செய்த போது எடுத்தப்படம் (2010)

Tuesday, September 14, 2021

சுதந்திர நாடாக வாழும் எல்லா உரிமையும் மலேசிய நாட்டிற்கு உண்டு

சுதந்திர நாடாக வாழும் எல்லா உரிமையும் மலேசிய நாட்டிற்கு உண்டு

சிங்கப்பூர் வரவேற்பில் அண்ணா பேருரை

சிங்கப்பூர், சூலை 16 இரவு 9.30 மணிக்கு அறிஞர் அண்ணா அவர்களின் பேச்சு துவங்கியது. முதலில் சிறிது நேரம் ஆங்கிலத்தில் பேசிவிட்டு, பிறகு சுமார் ஒரு மணி நேரம் தமக்கே உரித்தான தனி பாணியில் அழகுத்தமிழில், நல்ல கருத்துக்களை நகைச்சுவை கலந்து அள்ளி வழங்கினார் அறிஞர் அண்ணா.

உங்களைக் கண்டுகளிக்க வேண்டும் என்று நானும் என்னைக் காண வேண்டும் என்று நீங்களும் பல ஆண்டுகளாக விரும்பி வந்திருக்கிறோம். அந்த அவா இன்று நிறைவேறியது காண பெரு மகிழ்வெய்துகிறேன்.

விமான நிலையத்தில் என்னை வரவேற்க வந்திருந்தவர்களின் கண்களில் உவகைக் கண்ணீரை, என்னைத் தொட்டு வரவேற்றக்கரங்களை, கட்டிய ணைத்து முத்தங்களீந்த அன்பு உள்ளங்களைக் காண அக மகிழ்ந்தேன், உங்களிடம் உள்ளன்பு இருக்கும் என்பது நான் எதிர்பார்த்ததுதான் என்றாலும் இந்த அளவு இருக்கும் என்று நான் எதிர்ப்பார்க்கவில்லை என்றார் திரு. அண்ணா.

தம்மை வரவேற்கக் கூடியுள்ள மாபெரும் கூட்டத்தின் முன்னே தான் நிற்கும் நிலையை திருமணமான புதிய தம்பதிகள் முதல் இரவில் இருக்கும் நிலைக்கு ஒப்பிட்டார் அறிஞர் அண்ணா. புதிதாக மணமான தம்பதிகள் முதல் இரவில் சந்திக்கும் போது எந்தவித பேச்சும் பேசத் தோன்றாது சினிமாவில் வேண்டுமானால் அவர்கள் பேசுவதாகக் காட்டியிருக்கலாம். ஆனால், உண்மையில் அப்போது பேசுவதற்கே எதுவும் தோன்றாது. அந்த நிலையில் நான் இப்போது இங்கு நிற்கிறேன். (சிரிப்பு). என்னைக் கவ்வும் கண்களுடன் நீங்கள் நோக்குவதை நான் கண்டு உங்களின் ஒளி நிறைந்த கண்களை உள்ளன்பை ஊடுருவி நோக்கி அதை எனது இதயத்தில் பதித்துக் கொண்டு செல்ல விரும்புகிறேன் என்றும் அவர் கூறினார்.

தமிழ்ப்பண்பு:

அறிஞர் அண்ணா அவர்கள் தமது உரையில் தமிழ்ப் பண்புக்குச் சிறந்த விளக்கம் அளித்தார்.

இந்த இயற்கை வளம் மிகுந்த பொன்னான நாட்டைப் பூங்காவாக ஆக்க தமிழர்கள் ஆற்றிய பணி பற்றியும் பங்கு பற்றியும் சிங்கப்பூர் பிரதமர் லீ அவர்கள் சுட்டிக்காட்டினார்கள். தமிழர்கள் எந்த நாட்டை தங்களின் சொந்த நாடாகக் கருதினார்களோ அந்த நாட்டின் நல் வாழ்விற்காக, அதை ஒளிமயமாக்க தங்களை அர்ப்பணித்துக் கொள்ளும் பண்புள்ளவர்கள். இதற்கு எடுத்துக் காட்டாக சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பகுதியை நிறுவுவதற்காக இந்த நிகழ்ச்சியில் என் மூலம் 13,000 வெள்ளிக்கான செக் ஒன்றை வழங்கியிருப்பதில் பெருமைப்படுகிறேன். மேன்மேலும் இது போன்ற சிறப்புக் காரியங்களுக்கு வாரி வழங்கும்படி வேண்டுகிறேன். தமிழ்மொழி எந்த ஒரு நாட்டுக்கும் சொந்தமானதல்ல. பல்வேறு பண்பாடுகள் கலாசாரங் களையுடைய மற்றவர்களுக்கும் தமிழில் காணப்படும் இலக்கிய வளங் களையும், கலாச்சாரப் படைப்புகளையும் எடுத்துக் கூறும் செயல்களை தமிழர்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

அரசியல் ஓய்வு:

எங்கள் நாட்டில் அல்லும் பகலும் அரசியலில் உழன்று கொண்டிருக்கும் நான், இங்கு பயணம் செய்யும் ஒரு பத்து பதினைந்து நாட்களுக்காவது அரசியலை மறந்திருக்கலாமென்று எண்ணுகிறேன். அரசியல் நடவடிக்கைகளையும் அரசயில் எச்சரிக்கைகளையும் மறந்து இயற்கை வளம் நிறைந்த இந்நாட்டில் உங்களின் உபசரிப்பிலும், உள்ளன்பிலும் இணைந்து இந்த பதினைந்து நாட்களையும் செலவிடலாம் என்றிருக்கிறேன். தமிழகத்திலிருந்து வரும் ஓர் எதிர்க்கட்சிக்காரர் என்பதை விட ஓர் இந்தியர் என்ற முறையில் என்னை வரவேற்பதாக உங்களின் கலாசார அமைச்சர் திரு.ராசரத்தினம் கூறினார்.

எதிர்க்கட்சிக்காரன் என்றாலும் அவனும் ஓர் இந்தியன் தான் என்று எண்ணும் பெருந்தன்மை இங்கு மட்டுமல்ல, எங்கள் நாட்டிலும் ஏற்பட வேண்டுமென்று விரும்புகிறேன்.

நான் இங்கு ஒரு கலைத்தூதுவனாகத்தான் வந்திருக்கிறேனேயன்றி அரசியல் தூதுனாக அல்ல என்பதையும் வலியுறுத்திக் கூற விரும்புகிறேன்.

நான் தமிழகத்தில் அரசியல் கிளர்ச்சியயான்றில் ஈடுபட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்த நேரம், செஞ்சீனர்கள் இந்திய எல்லையில் ஆக்கிரமிப்பு செய்திருக்கிறார்கள் என்ற அறிந்ததுமே எனது நாட்டிற்கு, இந்தியாவிற்கு வந்திருக்கும் ஆபத்தை உணர்ந்து நடந்து வந்த எல்லாக் கிளர்ச்சிகளையும் நிறுத்தி ஆபத்து நேரத்தில் அரசாங்கத்தின் கரத்தை வலுப்படுத்தும்படி சிறையிலிருந்தவாறே மக்களைக் கேட்டுக்கொண்ட பொறுப்புள்ள ஒருவன்தான் நான் என்பதை கலாசார அமைச்சர் ராசரத்தினம் அவர்களின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

தமிழர் பெருமை:

சிங்கப்பூரில் தமிழ்மொழியை ஆட்சிமொழிகளில் ஒன்றாக ஏற்று, துரைத் தனத்திலும் பொது வாழ்விலும் அதற்கு உரிய மரியாதையும் மதிப்பும் கொடுத்திருக்கும் இந்த அரசாங்கத்திற்கு எனது நன்றியைக் கூறிக் கொள்கிறேன்.

தமிழ்மொழியின் இலக்கியவளம் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னுள்ள வரலாற்றையுடையது. இன்று புதியவனாகக் காட்டும் பல விஞ்ஞான கருத்துகளை அன்றைய தமிழ் இலக்கியத்திலேயே கூறப்பட்டுள்ளன. இம்மொழி எந்த நாட்டவரும் ஏற்றுக் கொள்ளத் தக்க இனிய மொழி. அதிலுள்ள கருத்துக் கருவூலங்களை மாற்று மொழிக்காரர்கள் போற்றும் வண்ணம் எடுத்துக் கூற வேண்டும். உதாரணமாக கதிரவன் தன்னைத்தானே சுற்றி வருவதையும் பூமியும் மற்ற கோளங்களும் சூரியனைச் சுற்றி வரும் உண்மையை இன்றைய விஞ்ஞான உலகம் புதியதாகக் கூறுகிறது.ஆனால், இந்த உண்மை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்புள்ள தமிழ் இலக்கியங்களில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது .

சாதி:

மற்றொரு உண்மை பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவப் பெருந்தகையின் கூற்று. ஆதித் தமிழர்களிடம் சாதிமதப் பேதமிருக்கவில்லை. அது பின்னாலே வந்தவர்களால் புகுத்தப்பட்டது. இன்னும் கூறப்போனால் தமிழிலே ஜாதி என்ற வார்த்தையே கிடையாது. குரோட்டன்ஸ், டொமேட்கேப்பேஜ் போன்ற வார்த்தைகள் தமிழில் இல்லை. காரணம் அவை பழந்தமிழ் நாட்டுக் காய்கறி வகைகள் அல்ல. அது போன்றே ஜாதி என்ற வார்த்தையும் தமிழிலேயே கிடையாது. காரணம் பழந்தமிழ் நாட்டில் அது இல்லை. ஜப்பானை சப்பான் என்று சொல்வதால் தமிழாகி விடாது. அது போல ஜாதியை சாதி என்று கூறுவதால் தமிழாகி விடாது என்றும் அறிஞர் அண்ணா குறிப்பிட்டார்.

ஆய்ந்தறிக:

எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு என்பதே தமிழர்களின் பண்பாடு. ஆகவே யார் எது கூறினாலும், கூறுபவர் அறிஞராக இருந்தாலும் ஆட்சியாளராக இருந்தாலும் மனத்தைப் பறிகொடுத்து விடாமல் ஆராய்ந்து பார்த்துச் செய்யும் முடிவே பலன்தரும். பயன் தரும்.

நமது தமிழ் மொழியின் இலக்கிய வளத்தைத் தெரிந்து மற்றவர்கள் இத்தகைய வளமுள்ள மொழியினரின் வழியில் பிறக்காமல் போனோம் என்று வருந்துமளவுக்கு வளமுள்ள மொழிக்கு சொந்தக்காரன் என்பதில் நான் பெருமையடைகிறேன்.

கருவிலேயே:

கருவிலிருந்து வெளிவரும் குழந்தை கூட அது எந்த மொழியினரின் குழந்தையானாலும் முதன் முதலில் அம்மா என்று தமிழில் தான் பேசுகிறது. சில தமிழர்கள் என்ன தான் பிறமொழியில் ஈடுபாடுடையவராக இருந்தாலும் ஆங்கிலத்தையே பேசிக் கொண்டிருப்பவராக இருந்தாலும், திடீரென்று அவரது காலில் ஒரு கட்டெறும்பு கடித்து விட்டால் , ஆ! அய்யோ ! என்று தான் கூறுவாரே தவிர ஓ மை காட்! என்று கூற மாட்டார். இதைத்தான் தமிழ் உணர்வு என்று கூறுகிறோம்.

கெடுப்பவன் தமிழனல்லன்:

இந்த இயற்கையான தமிழ் உணர்வு , அம் மொழியின் மீதுள்ள பற்று, எந்த நாட்டையும் கெடுத்து விடாது. யாரையும் கெடுப்பது, தமிழ் பண்பல்ல. அப்படிக் கேடு நினைப்பவன் தமிழனாக இருக்க நேர்ந்தால் அவன் தமிழினத்தில் பிறந்தானே தவிர தமிழ்ப் பண்பை மறந்தவனாவான்.

அவன் சுவாசிக்கும் காற்றை, அருந்தும் நீரைத் தரும் இந்தப் பொன்னாட்டைத் தமிழர்கள் எந்நாளும் மறக்க மாட்டார்கள் என்பது நிச்சயம். யாதும் ஊரே , யாவரும் கேளிர் என்ற பண்பு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்களுக்கு ஏற்பட்டு விட்டது. வாழும் நாடு எந்த நாடோ அதையே தங்களின் சொந்த நாடாகக் கருதி வாழும் பண்புள்ளவர்கள்.

மலேசியத் தமிழர்கள்:

இங்கு வாழும் தமிழர்கள் தாங்கள் வாழும் இந்நாட்டிலேயே தங்கிவிட உறுதி பூண வேண்டும். தமிழகத்திற்குத் திரும்பிப் போய் வந்து கொண்டிருக்க வேண்டும் என்ற எண்ணத்தை விட்டு விட வேண்டும்.

மலேசியர்களாக விரும்பி மனு செய்த தமிழர்களையயல்லாம் இந்த அரசாங்கம் இந்நாட்டுக் குடிமகனாக ஏற்றுக் கொண்டது போல, இது வரை குடிமகனாகாதிருக்கும் மீதமுள்ள தமிழர்களையும் அவர்கள் விரும்பி மனு செய்தால் அவர்கள் அத்தனை பேரையும் பெருங்குடிகளாக ஏற்றுக் கொள்ளும்படி இந்த அரசாங்கத்தைப் பணிவன்புடன் வேண்டுகிறேன்.

தனித்தியங்கத் தகுதியுள்ளது:

தமிழ்மொழி தனித்தியங்கும் தகுதி பெற்றது என்று தமிழ்ப் புலவர்கள் நிருபித்துள்ளனர். நடைமுறையில் அது உண்மையானது என்பதை நான் உணருகிறேன். இரவல் வாங்கியே காலத்தைக் கழிப்பது ஒரு வாழ்வல்ல. குழம்பு இல்லை என்று அடுத்த வீட்டில் வாங்கி, வாங்கிய குழம்பில் காய்கறி இல்லை என்று பக்கத்து வீட்டில் இரவல் வாங்கிய குழம்பில், காய்கறியில் உப்பு இல்லை என்று பக்கத்து வீட்டில் இரவல் வாங்கி காலத்தைக் கழிப்பவன் தனிக் குடித்தனம் நடத்த தகுதியில்லாதவன். இது போன்று ஒவ்வொரு வார்த்தைக்கும் வேற்று மொழியிலிருந்து இரவல் வாங்கும் ஒன்றை மொழி என்று கூற முடியாது. ஓசை என்று தான் கூற வேண்டும்.

தமிழர்கள் தங்கள் மொழியின் பெருமையினைக் கூறிக் கொண்டிருப்பதால் பயனில்லை. நாங்கள் எப்படிப்பட்ட இனம் தெரியுமா? எங்கள் மொழி எப்படிப்பட்ட மொழி தெரியுமா? என்று கூறிக் கொள்வதில் சிறப்பில்லை. அந்த சிறப்புமிக்க மொழியினைக் கற்று, அதன் வளமிக்க இலக்கியத்திலுள்ள கருத்துக்களை உங்களின் வாழ்க்கையில் நடத்திக் காட்டி மற்றவர்களுக்கு எடுத்துக் கூற வேண்டும். மேடையில் பாடிக் கொண்டிருக்கும் பாடகன் தனது நிலைப்பாட்டை அடிக்கடி நிறுத்திக் கொண்டு ரசிகர்களை நோக்கிக் கைத் தட்டுங்கள் என்று கூறினால் அவன் ஒரு பாடகனுமல்லன். அவன் பாடுவது முறையான பாட்டுமல்ல என்றுதான் கூறவேண்டும்.

பண்டைய தமிழகத்தில் காணப்பட்ட ஏற்றத் தாழ்வுகளெல்லாம் இட்டார் பெரியார் இடாதார் இழிகுலத்தோர் என்ற வகையைச் சேர்ந்தவர்களாகத்தான் இருக்கும். தமிழகத்திலிருந்து இங்கு வந்திருக்கும் தமிழர்கள் தங்கள் கைகளை, கால்களை, கண்களை, காதுகளை மட்டும் இங்கு கொண்டுவந்து விட்டார்கள் என்ற அறிய வேதனைப் படுகிறேன். சாதியினால் தமிழர்கள் பெருமையடைய முடியாது.

விளக்கின் பயன் அதைப் பயன்படுத்தும் விதத்தில்தான் இருக்கிறது. கையில் பாட்டரி லைட் வைத்திருப்பவர்கள் இரவில் பூச்சி பொட்டுகள் பாதையில் இருக்கிறதா என்று பார்க்கப் பயன்படுத்துவதைவிட்டு கூட்டத்திலுள்ளவர்கள் பக்கம் விளக்கையடித்து அங்கு நிற்பவர்கள் யார், இங்கு நிற்பவர்கள் யார் என்று பார்க்கப் பயன் படுத்துவது தீமையாகும்.

பாராளுமன்ற ஜனநாயகம்:

இந்தியாவுக்கும் மலேசியாவுக்கும் இன்று பொதுவாக உள்ளது பாராளுமன்ற ஜனநாயகம், சில நாடுகளில் ஒரு மாதிரியான ஜனநாயகம் நடைமுறையில் இருக்கிறது. அங்கெல்லாம் ஒரே கட்சி தானிருக்கும். அதன் சார்பில் நிற்பவர் மக்களிடம் என்னை விரும்புகிறீர்களோ? இல்லையா என்ற கேள்வியோடு தேர்தலில் இறங்குவார்கள். யாரும் போட்டியிட முடியாது. அந்த நிலையில் நமக்கேன் வம்பு என்ற முறையில் மக்கள் அந்த ஒருவருக்கே ஓட்டளிப்பார்கள். உடனே பத்திரிக்கையில் அவருக்கு 98 சதவிகிதம் ஓட்டு கிடைத்ததாக செய்தி வரும். இது உண்மையான ஜனநாயகமல்ல.

நம்மிரு நாடுகளிலும் நடைமுறையிலுள்ளது பார்லிமென்டரி ஜனநாயகம். இந்த ஜனநாயகத்தில் அவசியம் ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிகள் இருக்கும். அவர்கள் தங்களின் திட்டங்களை மக்களின் முன் வைப்பார்கள். ஒன்று மக்களை இந்திரபுரிக்கு அழைத்துச் செல்கிறேன் என்று கூறும். மற்றொரு கட்சி சந்திரபுரிக்கு அழைத்துச் செல்வேன் எனலாம். மற்றொரு கட்சி இந்நாட்டிலேயே சுகவாழ்வு தருகிறேன் என்று கூறும். இவைகளை ஆராய்ந்து, மக்களுக்கு நன்மை செய்வதற்காக செயல்படும் தலைவர்கள் மக்கள் ஆட்சியில் அமர்த்துவர் அல்லது ஆட்சி மன்றத்தில் அமர்த்தி ஆளும் கட்சிக்கு ஆலோசனை கூறச் செய்வர். இதுதான் பாராளுமன்ற நாகரிகம்.

அதுவன்றி ஒரு கட்சியை மற்றொரு கட்சி வீழ்த்த, தாழ்த்த முனைந்தால் அது ஜனநாயகப் பண்புக்க முற்றிலும் மாறுபட்டது. ஜனநாயகத்தையே அது ஒழித்துவிடும். கட்சிகளுக்கிடையே மாச்சரியங்களின்றி மற்ற கட்சியின் கொள்கைகளுக்கு மதிப்பளிக்கும் பண்பு வளர்ந்தால் அங்கு பாராளுமன்ற ஜனநாயகம் நல்ல பயனைத் தரும். இத்தகைய ஆட்சி முறையில் குறைபாடுகள் இருக்கலாம். ஆனால், மக்களிடையே இந்தப் பண்பு வளர வளர நல்வாழ்வு பெற முடியும்.

ஆதியிலிருந்து நாங்கள் ஆண்டு வருகிறோம் என்பதாலோ, ஆண்டவன் அளித்தான் என்பதாலோ ஒருவருக்கு ஆட்சி உரியதாகிவிடாது. 22 வயதுக்கு மேற்பட்ட யாரும், அவர் ஆறாவதுவரை படித்திருந்தாலும் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் ஆறுவருடம் படித்திருந்தாலும், ஏழடி உயரமுடைய வரானாலும் என்னைப் போல் குள்ளமானவராக இருந்தாலும், சிகப்பாக இருந்தாலும், கருப்பாக இருந்தாலும், பணக்காரராக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும், தோட்ட முதலாளியாக இருந்தாலும் தொழிலாளியாக இருந்தாலும் மக்கள் ஆதரவைப் பெற்றவரே ஆட்சி பீடம் ஏற முடியும். இதுதான் பார்லிமெண்டரி ஜனநாயகம்.

ஆளும் கட்சியும் எதிர்க் கட்சியும்:

ஆளும் கட்சியும், எதிர்க்கட்சிகளும் ஒன்றுடன் ஒன்று பகைத்துக் கொள்ளாமல், மாச்சரியங்களை வளர்த்துக் கொள்ளாமல் இருக்க வேண்டும். ஒரு வீட்டிலே இரண்டு குடித்தனக்காரர்கள் இருக்கலாம். பின் வீட்டவர் இருக்கலாம். பின் வீட்டவர் சைவமாக இருக்கலாம். முன் வீட்டவர் இறைச்சி சாப்பிடுவராக இருக்கலாம். ஆனால் அவர்களுக்குள் பகை வளர்த்துக் கொண்டால் இருவருக்கும் நிம்மதி இருக்காது.

இறைச்சியை யார் தின்பது? மனிதன் தின்பதா ? கழுகல்லவா தின்னும் என்று சைவ உணவு உண்பவரும், காய்கறியை யார் உண்பார்கள்? காக்கை, கொக்ககளல்லவா தின்னும் என்று இறைச்சி சாப்பிடுபவரும் ஒருவரையயாருவர் திட்டிக் கொண்டால் அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் மத்தியஸ்தத்திற்கு வர வேண்டியிருக்கும். இவ்வித சச்சரவு நாட்டில் நிகழ்ந்தால் அண்டை அயல் நாடுகள் புத்தி சொல்ல வரும். புத்தகங்களோடு அல்ல, பீரங்கிகளையும், துப்பாக்கிகளையும் கொண்டு வரும். அது நாட்டின் பாதுகாப்புக்குக் கேடு தரும்.

அரசியல் ஈடுபடுபவர்கள் அதற்கேற்றவாறு அரசியல் திட்டங்கள் இலக்கணங்கள், மரபுகள் ஆகியவைகளை அறிந்து அதில் ஈடு பட வேண்டும். இல்லாவிட்டால் நாடு சர்வாதிகாரிகளின் கையில் சாய்ந்து விடும் வல்லரசுகளின் கைக்குப் போய்விடும். ஜனநாயகம் ஆலமரத்தைப் போன்றது. அதன் விழுதுகள் போன்று தழைத்து ஆழ ஊன்றி வளர வேண்டும். அதுவே உண்மையான பாராளுமன்ற ஜனநாயகம் என்றார் அண்ணா. அண்ணாவின் பேச்சிலே இடையிடையே தோன்றிய நகைச்சுவையை மக்கள் கையயாலி எழுப்பி மகிழ்ச்சியோடு ரசித்தனர் . (தமிழ்முரசு 17.07.1965)

Tuesday, September 7, 2021

பாரதியார் மறைவு கவிச்சிங்கம் ராஜரி´ சேலம் அர்த்தநாரிச வர்மா

 பாரதியார் மறைவு   

கவிச்சிங்கம் ராஜரி´  சேலம் அர்த்தநாரிச வர்மா

(27.7.1874 - 7.12.1964)

ராஜாஜியை விட 4 ஆண்டுகளும், மகாகவி பாரதியாரைவிட 8 ஆண்டு களும் வயதில் மூத்தவர். பாரதியார் மறைவுக்குப் பின் ‘வீரபாரதி’ என்று பாரதியாரின் பெயரில் பத்திரிகை நடத்தியவர். 

இப்பாடல் பாரதியார் மறைந்த மறுநாள் 13.09.1921 அன்று எழுதப்பட்டு, அடுத்த நாள் 14.9.1921 ‘சுதேசமித்திரன்’ இதழில் வெளி வந்துள்ளது. 

பாரதியார் ‘காலனுக்கு உரைத்தல்’ என்ற பாடலில் ‘காலா, உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன் - என்றன் காலருகே வாடா, சற்றே உனை மிதிக்கிறேன்’ என்று பல்லவியில் கூறி 1919 டிசம்பர் மாதம் சுதேசமித்திரன் பத்திரிகையில் வெளியிட்டார்.

‘காலன் தன்னைக் கெட்ட மூடன் என்று கேவலப்படுத்திய பாரதியாரைக் கொல்லச் சமயம் பார்த்துக் கொண்டிருந்தான். அவன், பாரதியார் தேங்காய் பழம் கொடுத்து, அன்பு செலுத்திய பார்த்தசாரதி கோயில் யானை மதம் பிடித்து அவரைத் தூக்கியயறிந்து காயப்படுத்தும்படி செய்து (பல நாட்கள் துயருற்ற நிலையில்) 11.9.1921 அன்று அவரது உடலையும் உயிரையும் வேறாக்கினான்’.

மறுநாள் வர்மா காலனைப் பழித்து பாரதியாருக்கு இரங்கற்பா பாடினார். இப்பாடல் 14.9.1921 அன்று ‘சுதேசமித்திரன்’ நாளிதழில் வெளியிடப்பட்டது.

 இக்கவிதையில் ‘நேற்று’ என்று குறித்திருப்பதைப் பார்த்தே இக்கவிதை இவர் பாரதி மறைந்த மறு நாளிலேயே, பாடி இருக்கிறார் என்பதை உணரலாம். தேச பக்தராகவும்,தேசிய கவிஞராகவும், (வன்னிய சமுதாயப் பிரமுக ராகவும்), விளங்கிய கவிச் சிங்கம் ராஜரி´ அர்த்த நாரிச வர்மா மகாகவி பாரதியாரைப் போலவே தேச பக்திப் பாடல்களைப் பாடியுள்ளார். 

இவர்சமஸ்கிருதத்தை கசடறக் கற்றவராகவும், ஆங்கிலப் புலமைப் பெற்றவராகவும், தமிழ்க் கவிஞராகவும், தமிழிசையான கர்நாடக சங்கீ தத்தை அறிந்தவராகவும் திகழ்கிறார்.

இவர் மகாகவி பாரதியின் பெயரால் வீரபாரதி என்ற வார மும்முறை இதழைக் காங்கிரசு கட்சியை ஆதரித்து வெளியிட்டார். பிரிட்டிஷ் அரசு அப் பத்திரிகையை எதிர்த்து வழக்குத் தொடுத்து நிறுத்தி விட்டது. (ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்று கூறுவது மரபு. வர்மா மீண்டும் பிறப்பாய் பணி புரிவாய் என்று கூறுகிறார்.)

                       - பேரா.தி.வ. மெய்கண்டார்

கவிச்சிங்கம் வர்மா பாரதி மீது எழுதிய இரங்கற்பா....

இடியேறு எதிர்த்து படவர வென்னச்

செந்தமிழ் மாது நொந்து வருந்தவும்

இசைத்தமிழ் வாணர் அசையா தழுங்கவும்

நேற்று நின்னுடலுயிர் வேற்றுமை கண்ட

கூற்றுவ னென்னும் மாற்றலன் நின்னுயிர்

பருகின னன்றி யுருகின னின்றே

தமிழ்ச்சுவை யின்பஞ் சற்று மறியான்

அமிழ்த்தின் றேறல் அதுவென வறியான்

ஒப்பிலா பாரதி சுப்பிர மணியநின்

நாட்டுப் பாட்டின் நலஞ்சிறி துணரான்

கண்ணன் பாட்டின் கருத்தைத் தேறான்

வீரச் சுவையதில் விளங்குவ துணர்கிலான்

நேர மின்னும் நெருங்கிலை யுண்டான்

நினைக்க நினைக்க நெட்டுயிர்ப் பெடுக்கும்

வினைவிளை காலம் வேறில்லை

பினையும் பிறப்பாய் பெறுவாய் பணியே!

 -ஆர்வலன் சு. அர்த்தநாரீச வர்மா

இரங்கல் பாடலுக்கு விளக்கம்: 

இடிபோல் முழங்கும் ஆண் யானை குணங்கெட்டு மதம் பிடித்து வர, செந்தமிழ் அன்னை மனம் நொந்து வருந்தவும் இசை பாடுவோரும் தமிழ்ப் புலவரும் காலசையாமல் மனம் வருந்தி யழியவும் நேற்று எமன் என்னும் பகைவன் உன் உடலையும் உயிரையும் பிரித்து வேறாக்கினான். அவன் உன் உயிரைக் குடித்தானே தவிர இரக்கப் பட்டவனல்லன் ; உன் தமிழின் சுவையின் இன்பத்தைச் சிறிதும் அறிய மாட்டான். அது அமிர்தத்தின் தெளிவென்று அவனுக்குத் தெரியாது. இணையற்ற சுப்பிரமணிய பாரதி! கூற்றுவன் நின்று நாட்டின் நன்மையைச் சற்றும் உணரமாட்டான். கண்ணன் பாட்டின் கருத்தைத் தெரிந்து கொள்ள மாட்டான். அதற்குள் உன் உயிரையுண்டான். இதை நினைக்க நினைக்க மூச்சு திணறுகிறது. ஊழ்வினை உருத்து வந்து உன் உயிரைக் குடிக்கும் கலம் இதைவிட வேறில்லை. மீண்டும் பிறப்பாய் சுதந்திரப் போராட்டப் பணி புரிவாய்.

(கவிதா மண்டலம், நவம்பர் 2001, மற்றும் ஜனவரி 2011)

காலஞ்சென்ற பாரதியாரின் நூல்கள்...

 காலஞ்சென்ற பாரதியாரின் நூல்கள்.....


தென்னாட்டுத் தாகூரெனப் போற்றப்பட்டு வந்த ஸ்ரீமான் சி.சுப்பிரமணிய பாரதியின் மனைவியார் நமக்கு அனுப்பியுள்ள ஒரு நிருபத்தை மற்றோரிடத்தில் வெளியிட்டிருக்கின்றோம். காலஞ்சென்ற பாரதியாரின் பாடல்களும் வசனங்களும் ஒழுங்காக வெளியிட முயற்சி செய்யப்படுகிறது என்பதை அறிந்த நாம் பெரிதும் சந்தோ´க்கிறோம். இதற்காகப் பொருளதவி செய்யும் படி தமிழ்நாட்டாரை ஸ்ரீமான் பாரதியாரின் மனைவியார் கேட்கிறார். இவ் வேண்டுகோளுக்கு தமிழ் நாட்டார் எவ்விதத்திலும் பின்வாங்க மாட்டார் என்று நம்புகிறோம். 

ஸ்ரீமான் பாரதியார் ஐரோப்பாவிலேனும் அமெரிக்காவிலேனும் பிறந்திருப்பாராயின் அவருக்கு இது காலை எத்தனை ஞாபகச் சின்னங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கும் என்பதை நாம் கூற வேண்டுவதில்லை. தமிழ் நாட்டாரிட மிருந்து அவ்வளவு பெரிய நன்றியறிதலை நாம் எதிர் பார்க்கவில்லையே யாயினும் அவருடைய நூல்கள் நல்ல முறையில் வெளி வருவதற்கேனும் போதிய துணை புரிவார்கள் என்று நம்புகிறோம்.

‘நவசக்தி’ உப தலையங்கம் 1921, செப்டம்பர் 30)

ஸ்ரீமான் சி. சுப்பிரமணிய பாரதி மனைவி செல்லம்மா பாரதியின் கடிதம்...

தேசாபிமானப் பெருங் கவியான எனது அரிய கணவர் ஸ்ரீமான் சி. சுப்பிர மணிய பாரதியாரின் அகால மரணத்தைக் குறித்து, எனக்கு பல வகைகளில் அநுதாபம் காட்டிய எண்ணிறந்த நண்பர்களுக்குப் பகிரங்கமாக நன்றி கூறுவதற்காக நான் இந்த கடிதத்தை எழுதலானேன். தமிழ் நாட்டிலுள்ள பல சங்கத்தார்களும், சபையார்களும், நண்பர்களும் என்பால் அநுதாபம் காட்டிக் கடிதங்கள் அனுப்பியிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் தனித் தனிக் கடிதம் எழுதுவதற்கு, நான் தற்சமயம் இயலாதவளாயிருக்கிறேன். எனவே, இப் பத்திரிகை வாயிலாக அவர்கள் அனைவருக்கும் எனது நன்றியை அறிவித்துக் கொள்கிறேன்.

பாரதியார் எனக்குப் பெரிய ஆஸ்தியாக வைத்து விட்டுப் போயிருப்பது அவரது அரிய பாடல்களும், வசன காவியங்களுமேயாகும். அவற்றை யயல்லாம் அச்சிட்டு வெளியிடுவதற்குரிய ஏற்பாடுகளை நானும் எனது நண்பர்களும் செய்து வருகிறோம். இந்த முயற்சியில் எனக்கு பொருள் உதவி புரிவதாகச் சில நண்பர்கள் முன் வந்திருக்கிறார்கள். 

பாரதியாரின் நூல்களை அச்சிட்டு வெளியிடுவதற்கு நிதி சேர்க்குமாறு அங்கங்கே சில இடங்களில் பஞ்சாயத்துக்கள் (கமிட்டி) ஏற்பட்டிருப்பதாகவும் அறிகின்றேன். எனவே இந்த வி­யத்தில் எனக்கு உதவி செய்ய விரும்புவோரெல்லாம் அடியிற் கண்ட  எனது விலாசத்திற்குத் தங்கள் உதவிகளைத் தாமதமின்றி அனுப்புபவர்கள் தங்களால் இயன்ற சிறு தொகையை அனுப்பினால், புஸ்தகம் வெளியானவுடன், அந்தத் தொகைக்குரிய புஸ்தகங்களை அனுப்ப சித்தமாயிருக்கின்றேன்.

 (பாரதியார் பாடல்கள் அடங்கிய முதல் தொகுதி நவம்பர் மாத இறுதிக்குள் வெளிவரும்). 

இவ்வி­யத்தில் எனக்கு எவ்வளவு சிறிய உதவி செய்பவர்களும், எனது குடும்பத்திற்கு உதவி செய்தவர்கள் மட்டுமல்ல, ‘தமிழ் நாட்டிற்குப் புத்துயிர் அளிக்கக் கூடிய’ பாரதியாரின் அரிய பாடல்களும், பிறவும் உலகத்தில் வெளிவரச் செய்யும் பெரு முயற்சிக்குத் துணை புரிபவர்களும் ஆவார்கள். தாய் வாழ்க! வந்தே மாதரம்!

இங்ஙனம்

செல்லம்மாள்,

67, துளசிங்க பெருமாள் தெரு ( நவசக்தி, 30.9.1921)

(கவிதா மண்டலம், ஜனவரி 2011)