Thursday, March 31, 2022

ஆர்.எஸ்.எஸ். முன்னோடி பாரதி

ஆர்எஸ்எஸ் முன்னோடி பாரதி - மஞ்சை வசந்தன் - திராவிடர் கழக (இயக்க) வெளியீடு - பக்கங்கள் 80 - நன்கொடை ரூ 80/

●  " மூட நம்பிக்கையில் முதல்நிலை மூடநம்பிக்கை - பலர் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்வது ! அப்படிப்பட்ட ஒரு மூடநம்பிக்கை தான் - பாரதி முற்போக்காளர்; புரட்சியாளர்; சமத்துவ போராளி; பெண்ணுரிமைக்கு குரல் கொடுத்தவர்; ஜாதி ஒழிப்புக்கு பாடுபட்டவர்; பொதுவுடைமைவாதி; தமிழை உயர்த்திப் பிடித்தவர் என்பன போன்ற சிறப்புகளை அவருக்கு சேர்ப்பது ! " ...என தனது முன்னுரையில் நூலாசிரியர் மஞ்சை வசந்தன் விளக்கம் தந்துள்ளார் !

●  மேலும் தனது முன்னுரையில், " உண்மையில் பாரதி அப்படிப்பட்ட பெருமைகளுக்கு உரியவரா என அறிய, உண்மையை உள்ளது உள்ளபடி ஒளிக்காமல், விருப்பு வெறுப்பின்றி இந்நூலில் உறுதி செய்துள்ளேன் ! " ..என தெளிவு படுத்தியுள்ளார். நூலின் பொருளடக்கமாக பத்து கட்டுரைகள் உள்ளன :

●  பாரதி ஓர் இந்து சனாதனவாதி | பாரதி ஜாதி ஒழிப்புப் போராளியா ? | ஆரிய இன மேலாதிக்கம் காத்தவர் | ஆரியத்தை உயர்த்தி தமிழைத் தாழ்த்தியவர் | திராவிட எதிர்ப்பாளர் ஆங்கில அரசின் ஆதரவாளர் | பாரதியின் இந்து மத வெறியும் மற்ற மத வெறுப்பும் | மத மாற்றத்தை எதிர்த்த பாரதி | ஆர்எஸ்எஸ் சித்தாந்த கர்த்தா பாரதி | பாரதியும் பெண்ணுரிமையும் | பாரதியும் பொதுவுடைமையும் |

●  பாரதி ஓர் இந்து சனாதனவாதி என்ற கட்டுரையில் இந்துத்துவாவின் முதன்மைக் கொள்கைகளை நூலாசிரியர் இவ்வாறு பட்டியலிடுகிறார் :

1) வர்ணாசிரம தர்மப்படி - பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்ற பிரிவுகள் இருக்க வேண்டும். அவை கடவுளால் செய்யப்பட்டவை.

2) வர்ணாசிரம தர்மப்படி, தாங்கள் தங்களது குலத் தொழிலை செய்ய வேண்டும்.

3) சமஸ்கிருதமே தேவமொழி. சமஸ்கிருதமே இந்தியாவின் ஒரே மொழியாக இருக்க வேண்டும்.

4) இந்தியா முழுக்க இந்து மதம் மட்டுமே இருக்க வேண்டும். மற்ற மதங்கள் ஒழிக்கப்பட வேண்டும்.

5) இந்துக்களுக்கு ஒரே கடவுள் இராமன் மட்டுமே.

6) மனுதர்மமே சட்டம். அதையே பின்பற்ற வேண்டும்.

7) இந்தியா முழுக்க ஒரே கலாச்சாரம் தான். மற்ற கலாச்சாரங்கள் ஒழிக்கப்பட வேண்டும். 

இந்த கொள்கைகளை முழுமையாக தீவிரமாக ஆதரித்தவர் பாரதியார் என நூலாசிரியர் குறிப்பிடுகின்றார் !

●  ஆர்எஸ்எஸ்க்கு அடித்தளம் அமைத்தவர் பாரதி என்பதை நிறுவ - " பாரதி ஓர் இந்து மத வெறியர். இந்தியாவெங்கும் சமஸ்கிருதத்தை திணிக்க வலியுறுத்தியவர். மற்ற மதத்தினரை வெறுத்து பேசினார். நால்வருண முறை உயர்ந்தது. அது பாதுகாத்து நிலை நிறுத்தப்பட வேண்டும் என்றார். இந்தியாவை ஆரிய நாடு என்றழைத்தார். இந்து மதத்தை காக்கவே இந்தியாவிற்கு சுதந்திரம் வேண்டும் என்றார். ஒரே மதம், ஒரே நாடு, ஒரே மொழி என்ற கொள்கையை கொண்டிருந்தவர். அதையே வலியுறுத்தியவர் ! " ...என தனது ஆணித்தரமான வாதங்களையும் அதற்கான ஆதாரங்களையும் நூலாசிரியர் வைத்துள்ளார் !

●  நம் நாட்டில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளுக்கும் பாரதி காணும் ஒரே தீர்வு - கலியுகம் ஒழிந்து மீண்டும் கிருதயுகம் வரவேண்டுமாம் ! அப்போது மீண்டும் நால்வருணம் ஏற்படுமாம். மேலும் வர்ணாசிரம முறை கைவிடப்பட்டதே பிராமணர் வீழ்ச்சிக்கு காரணமாம் ! என்னே ஜாதிய உணர்வு ! என்னே முற்போக்கு சிந்தனை !  

●  தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜெகத்தினை அழிப்போம் என பாரதி பாடியது - தனியொரு பிராமணர்க்கு உணவில்லையெனில் என்ற பொருளிலா ? பிராமணர் வீழ்ச்சிக்காக அவரின் துயரம் அதைத்தானே விளக்குகிறது ?

●  பாரதி தனது இந்தியா ஏட்டில் (18.08.1906) கிறித்தவ பள்ளிகளில் இந்துப் பிள்ளைகளை சேர்க்க கூடாது என்று வலியுறுத்தி எழுதியை கண்டு, எவரும் பாரதியை ஆர்எஸ்எஸ் சங்கி என்று தான் முடிவுக்கு வருவார்கள். " அப்பள்ளியில் படிப்பவர்களுக்கு இந்துக் கடவுள் பற்றி கூற மாட்டார்கள். அதனால் இந்து பிள்ளைகளுக்கு இந்துக் கடவுள் பற்றி தெரியாமல் போகிறது. அதனால் அவர்களுக்கு தேசபக்தி வராது. கிறித்தவர்களாக மாறி விடுவார்கள். எனவே அவர்களை அப்பள்ளிகளில் சேர்க்க வேண்டாம் என அறிவுறுத்துகிறேன் ! " ...என்று தனது உண்மை முகத்தை காட்டுகிறார் !

●  பாரதியின் இந்து மத விசுவாசத்திற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு - " இந்து மதம் ஜாதியைக் காக்கின்ற மதமாக இருந்தாலும், அந்த மதத்தால் பல கேடுகள் வந்தாலும், அது ஏழ்மைக்கும் வறுமைக்கும் காரணமாய் இருந்தாலும், அதன் சாஸ்திரங்களையும் நாம் கட்டாயம் காப்பாற்ற வேண்டும். இல்லையென்றால் நாம் அழிந்தே போவோம் ! "..

●  பாரதி, இந்து மதத்தை எந்த அளவிற்கு தூக்கி பிடிக்கிறார் பார்த்தீர்களா ?

அதனால் தான் தந்தை பெரியார் சொன்னார் - கடவுளை பரப்புகிறவன் அயோக்கியன் !

●  சோவியத் நாட்டில் லெனின் தலைமையில் நடைபெற்ற ரஷ்ய புரட்சியை, முண்டாசு கவிஞர் பாரதி எப்படி பாடினாரென்றால் - 

மாகாளி பராசக்தி உருசிய நாட்டினிற் | கடைக்கண் வைத்தாள் அங்கே | ஆகாவென் றெழுந்தது பார்யுகப் புரட்சி | கொடுங்கோலன் அலறி வீழ்ந்தான் | 

●  போற்றத்தக்க போல்ஷ்விக் புரட்சியை, மந்திரத்தால் வந்த மாங்காய் போல மாகாளி கடைக்கண் திறந்ததால் வந்ததாம் ! ஏன் அந்த மாகாளி தனது தாயகமான இந்தியா மீது கடைக் கண்ணை ஒரு முறை கூட திறக்க வில்லை என எந்த பாரதி விசுவாசிகளும் சிந்தித்து பார்க்க வில்லை ?

●  பாரதி தனது தொடக்க காலங்களில் (1908 - 26 வயது வரை ) முற்போக்கும் எழுச்சியும் கொண்டு எழுதியதை மறுக்கவில்லை.. ஆனால் பிற்காலத்தில் ( 1909 - 1921) முரண்பாடுகளும் பிற்போக்கு சிந்தனையாளராக தனது படைப்புகளை படைத்துள்ளார். பாரதியை ஆஹா ஓஹோ என தலையில் வைத்து கொண்டாடுபவர்கள் அவரது ஆரம்ப கால படைப்புகளை மட்டும் படித்து விட்டு பிற்கால படைப்புகளை படிக்காமலோ அல்லது கவலைப்படாமலோ கடந்து சென்றிருக்கின்றார்கள் என்பதைத்தான் இந்த நூல் நமக்கு புரிய வைக்கிறது !

●  பாரதி - யார் என்ற கேள்விக்கு

பாரதியாரின் படைப்புகளிலிருந்தே

பதில்களை தந்துள்ள பயனுள்ள நூல் !

பொ. நாகராஜன்.

பெரியாரிய ஆய்வாளர், சென்னை. 31.03.2022.

********************************************

Wednesday, March 30, 2022

குலக் கல்வித் திட்டம்

 இன்று !


குலக்கல்வி திட்ட எதிர்ப்புப் படை சென்னையை அடையும் முன்பே ராஜாஜி முதல்வர் பதவியிலிருந்து விலகிய நாள் இன்று 30.03.1954.

குலக்கல்வி திட்டதிற்கெதிராக தந்தை பெரியார் தனல் புயலாய், வெகுண்டெழுந்து, திராவிடர் கழகம் தீப்பிழம்பாய்க் கொந்தளித்துக் கிளர்ந்தெழுந்த காலகட்டம்.

முன்னதாக அதற்கு முந்தைய நாள் 29.03.1954 அன்று குலக்கல்வி எதிர்ப்பு படை தஞ்சாவூரிலிருந்து சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்தது.

ராஜாஜி குலக் கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்த நேரம். அரை நேரம் படித்தால் போதும், மீதி அரைநேரம் அப்பன் தொழிலை பிள்ளை செய்ய வேண்டும் என்ற சதித் திட்டம்!

அதற்கு இரு நாள்கள் முன்னர்தான் ஈரோட்டிலே புத்தர் கொள்கைப் பிரச்சார மாநாடும் (ஜனவரி 23), குலக்கல்வித் திட்ட எதிர்ப்பு மாநாடும் (ஜனவரி 24) நடைபெற்றன. 

இலங்கையிலிருந்து டாக்டர் ஜி.மல்லலசேகரா,அண்ணல் அம்பேத்கர் அவர்களின் அருமருந்தன்ன தளபதி ராஜ்போஜ் எம்.பி. முதலியோர் வந்து பங்கேற்றனர்.

ஆரியனை வெளியேற்றும் இந்தக் கிளர்ச்சிக்குப் பெரியார் நாள் குறிப்பிடுவார். பார்ப்பன விசுவாசிகள் எப்படியோ போகட்டும், பார்ப்பனத் துவேஷிகள் தயாராக இருங்கள் என்றது விடுதலை.

அப்படிப்பட்ட ஆவேசமான கால கட்டத்தில்தான் நாகை மாநாடு, 

30 ஆயிரம் பேர் அந்தக் கால கட்டத்தில் கூடினர் என்றால் சாதாரணமா? புலிக்குட்டிகள், சிங்கக் குட்டிகள் ஆயிற்றே!

மாநாட்டின் சிறப்பு என்ன தெரியுமா?

நாகையிலிருந்து சென்னையை நோக்கி ஒரு படை. ஆச்சாரியார் புதிய கல்வித் திட்ட எதிர்ப்புப் படை என்று பெயர் சூட்டினார் பெரியார்.

மாநாடு ஜனவரி 27, 28 ஆகிய தேதிகளில் நடந்தது என்றால் ஒரே ஒரு நாள் இடைவெளியில் ஜனவரி 30 ஆம் தேதியிலிருந்து புறப்பட்டது தான் பெரியாரின் கருஞ்சட்டைப்படை.

நாகையில் புறப்பட்ட இந்த இலட்சிய வீரர்களைக் கொண்ட படைக்கு வழி நெடுக வரவேற்பு - பிரச்சாரப் பொதுக்கூட்டங்கள்.

மார்ச் 30இல் கீழ்வேளூரில் புறப்பட்ட இந்தச் சீறிடும் சிங்கப்படையின் சுற்றுப்பயண விவரத்தை விடுதலை நாள்தோறும் வெளியிட்டு வந்தது. ஒவ்வொரு ஊரிலும் கழகத் தோழர்களும், பொதுமக்களும் போட்டி போட்டுக் கொண்டு வரவேற்று உபசரிப்பு மழையால் நனைத்தனர்.

வருணாசிரமக் கல்வியை ஒழிப்பதற்காக வரலாறு ஒரு படையை அனுப்பிக் கொண்டிருந்தது என்று பொருள் அல்லவா!

சென்னைக்கு அருகே படை வந்தபோது தந்தை பெரியார் அவர்களும், அன்னை மணியம்மையார் அவர்களும் படையை எதிர்கொண்டு அழைத்துப் பாராட்டினர்.

மார்ச் 30 இல் புறப்பட்ட இந்தப் பிரச்சாரப் புலிப்படை 500 மைல்கள் நடந்து ஏப்ரல் 14 ஆம் தேதி சென்னையில் தனது வரலாற்றுப் பொன்னடியைப் பதித்தது.

என்ன ஆச்சரியம்! இந்தப் படை சென்னைக்கு வந்து சேர்ந்ததும், ஆச்சாரியார் குலக்கல்வித் திட்டம் ஒழிந்ததும் பொருத்தமாகவே அமைந்துவிட்டது.

15 ஆயிரம் பேர் திரண்ட சென்னைக் கடற்கரைப் பொதுக் கூட்டத்தில் படை வீரர்களை தந்தை பெரியார் அறிமுகப்படுத்தினார். அதைவிட அந்தப் படை வீரர்களுக்கு வேறு என்ன புகழ் மாலையும், கிரீடமும் வேண்டும்?

அவ் வரவேற்புப் பொதுக் கூட்டத்தில் தந்தை பெரியார் பேசினார்:

''இந்தத் தோழர்கள் சென்னை வந்து போராடி சிறை செல்லலாம் என்று எண்ணினார்கள். பாவம், ஏமாந்தார்கள். காமராசர் இவர்களை ஏமாற்றி ஆச்சாரியார் திட்டத்தை ஒழித்துவிட்டார்'' என்று பேசினார்.

இருள் கவ்விற்றோ தமிழரின் வாழ்வை? மீண்டும் வருணாசிரம நச்சுப் பாம்பு தன் விஷப் பையைத் திறந்து தமிழரின் வாழ்வைப் பலி கொண்டுவிட்டதோ என்ற அச்சம் தமிழர்களை உலுக்கிக் கொண்டிருந்த அந்தக் கால கட்டத்தில் நாகை மாநாடும், பிரச்சாரப் படையும், தமிழரின் வாழ்வில் ஒளியேற்றிய ஒப்பற்ற நிகழ்ச்சிகளாகும்!

நாகை ஆர்.வி. கோபால், நாகை மணி, நாகை கணேசன், நாகை எஸ்.ஆர். ஆறுமுகம் என்று எண்ணற்ற போர் வீரர்களை ஈன்று புறந்தந்த கொள்கைப் பாடி வீடு நாகை!

நன்றி : #விடுதலை_நாளிதழ்.

Tuesday, March 29, 2022

திராவிடர் இயக்கப் பார்வையில் பாரதியார்


திராவிட இயக்கப் பார்வையில் பாரதியார் - வாலாசா வல்லவன் - நிகர் மொழி பதிப்பகம் - பக்கங்கள் 128 - விலை ரூ 100/

●  பெரியார் பெருந் தொண்டர் அய்யா வே. ஆனைமுத்துவால் அடையாளம் காணப்பட்டு, பெரியார் கொள்கையாளராகவும் ' மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் ' தலைவர்களில் ஒருவராகவும் இருப்பவர் - வாலாசா வல்லவன். அவர் ' சிந்தனையாளன் ' ஏட்டில் 1996 - 97 களில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த சிறிய நூல் !


●  வாலாசா வல்லவன் தனது முன்னுரையில், " பெரும்பான்மையான நூலாசிரியர்கள் பாரதியின் தொடக்க கால கவிதைகளை மட்டுமே படித்து விட்டு, பாரதியை பெரிய புரட்சியாளராக படம் பிடித்து காட்டுகிறார்கள். பாரதியின் முழுப் படைப்புகளாகிய கவிதை, கட்டுரை, கதை முதலியவற்றை ஒரு சேரப் படித்து, அவரை படம் பிடித்து காட்ட வேண்டும். அதுவே உண்மையான ஆய்வு ! பாரதியாரைப் பற்றி ஏறக்குறைய 500 க்கும் மேற்பட்ட நூல்களைப் படித்து, குறிப்பெடுத்து, பாரதியின் உண்மையான கொள்கைகள் என்ன என்பதை இந்நூலில் ஆய்ந்து கூறியுள்ளேன் ! " ...என விளக்கம் தந்துள்ளார் !

●  திராவிட இயக்கப் பார்வையென்பது - சாதியை சாடுவது; சாதி ஒழிப்பை பேசுவது;  வருணாசிரமத்தை எதிர்ப்பது; பெண்ணடிமைத்தனத்திற்கு எதிராக போராடுவது; தேவபாஷை என கூறிக்கொண்டு தமிழ் மொழியை ஆதிக்கம் செலுத்த முயலும் சமஸ்கிருதத்திற்கு சாவு மணி அடிப்பது; ஆதிக்க சாதி மனப்பான்மையோடு மக்களை அறிவாலும், உடலாலும், உணர்வாலும் அடக்கி வைத்த பார்ப்பனீயத்துக்கு எதிராக இறுதி வரை போராடுவது !.

இந்த அளவுகோல்தான் நூலாசிரியரின் ஆய்வுக்கு துணையாக இருந்திருக்கின்றது !

●  நூலின் பொருளடக்கம் காண்க:

பாரதியின் உயிர் மூச்சு தமிழா ? ஆரியமா ? | பாரதியின் ஏகாதிபத்திய எதிர்ப்பின் தன்மை என்ன ? | பாரதியின் பார்ப்பன இன உணர்வு | பாரதியின் பார்வையில் திராவிட இயக்கம் | பாரதி விரும்பிய பெண் விடுதலை எத்தகையது ? | பொதுவுடைமை பற்றி பாரதி | மதங்கள் பற்றி பாரதியின் பார்வை | ஆர்எஸ்எஸ் தோற்றத்துக்கு அடித்தளம் அமைத்த பாரதி | ஆய்வாளர்கள் காட்டும் பாரதி | 

●  பாரதி - ஆரிய பெருமையும்; ஆரிய விருப்பமும்; ஆரிய உயர்வும்; ஆரிய உணர்வும் கொண்ட படைப்பாளர் என்பதற்கு தரப்பட்ட பல சான்றுகளில் சிலவற்றை படித்தறியலாம் :

●  வாழிய நல்ஆரிய தேவியின் மந்திரம் | வந்தே மாதரம் |

●  வீரியம் அழிந்து மேன்மையும் ஒழிந்து நம் | ஆரியர் புலையர்க் கடிமைகள் ஆயினர் |

●  ஆரிய பூமியில் | நாரியரும் நர | சூரியரும் சொலும் | வீரிய வாசகம் வந்தே மாதரம் |

●  வேதம் நிறைந்த தமிழ் நாடு | உயர் வீரம் செறிந்த தமிழ் நாடு |

●  ஆன்ற மொழிகளுக்குள்ளே உயர் | ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன் |

●  ஸம்ஸ்கிருத பாஷை மிகவும் அற்புதமானது. அதைத் தெய்வ பாஷையென்று சொல்வது விளையாட்டன்று !

●  இவ்வாறாக ஆரியத்தையும் சமஸ்கிருதத்தையும் வீரியம் கொண்டு விளம்பரம் செய்தவர்  பாரதி ! அவ்வப்போது தமிழையை பெருமைப்படுத்தி பாராட்டி பாடியதெல்லாம் - ஹோட்டல்களில் வழங்கப்படும் பாயாசத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக மிதக்கும் முந்திரியைப் போல என உவமையாக எடுத்து சொல்கிறார், வாலாசா வல்லவன்.

அறிஞர் அண்ணாவின் மொழியில் இதற்கு பெயர் - ஆரியமாயை !

●  பாரதியை பெரிய ஏகாதிபத்திய த்தை எதிர்த்த வீரராக சித்தரிப்பவர்கள் - பாரதி அதே ஏகாதிபத்தியத்திடம் மண்டியிட்டு ' மன்னிப்பு கடிதம் ' கொடுத்து சிறையிலிருந்து வெளியே வந்த கதையை, இதுவரை வெளியே சொன்னதுண்டா ? இந்து மகாசபை இயக்கத்தின் ' சவார்க்கர் ' இது போன்று எழுதி தந்ததற்கு முன்பாகவே, பிரிட்டிஷ் அரசிடம் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்து, மன்றாடி கேட்டு வெளியே வந்த வீரர்தான் - முறுக்கு மீசை பாரதி ! அது பற்றிய ஆதாரபூர்வமான தகவல்களை தந்துள்ளார் நூலாசிரியர் !

●  சுதந்திர போர் வீரர் விபின் சந்திர பாலின் விடுதலையை கொண்டாட தூத்துகுடியில் ஏற்பாடு செய்திருந்தார் வ.உ.சி. இதை மாவட்ட ஆட்சியர் தடை செய்தார். தடையை மீறுவார் வ.உ.சியென அறிந்து அவரை 11.03.1908 அன்று கைது செய்தனர். அதை தொடர்ந்து நெல்லையில் கலவரம். அதை காரணமாக கொண்டு வழக்கை ஜோடித்து, வ.உ.சிக்கு 40 ஆண்டுகள் தண்டனை. பின்பு அது 10 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. 

●  வ.உ.சிக்கு இறுதியில் மேல்முறையீட்டின் காரணமாக, 6 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை தந்தார்கள். கை, கால்களில் விலங்கிடப்பட்டு, கல் உடைக்க வைத்து, செக்கிழுக்க வைத்து கொடுமை படுத்தினார்கள். இறுதி வரை பிரிட்டிஷ் அரசிடம் மன்னிப்பு கோராமல், சுயமரியாதை வீரராக விடுதலையானவர் தான் - செக்கிழுத்த செம்மல் வ.உ.சி !

●  இதே காலகட்டத்தில், இந்தியா வார இதழின் ஆசிரியராக இருந்தார் பாரதி. அப்போதெல்லாம் வீராவேசமாக எழுதி கொண்டிருந்தார். விபின் சந்திர பால் விடுதலையொட்டி சென்னையில் 09.03.1908ல் நடந்த பொதுக்கூட்டத்தில், " சட்டங்கள் நம் இயற்கை உரிமையில் குறுக்கிடுமேயானால் சட்டங்களை மீறுவோமாக ! " என கூட்டத்தினரை தூண்டி விட்டு பேசுகிறார். 

●  இதன் காரணமாக பாரதியை பிடிக்க வாரண்ட் பிறப்பிக்கப்படுகிறது. நம்ம எட்டயபுரம் சிங்கமா சிக்கும் ? வ.உ.சியை போல் தன்னையும் கைது செய்து சிறையிலடைத்து விடுவார்கள் என பயந்து, யாருக்கும் தெரியாமல், அன்று பிரெஞ்சு வசமிருந்த புதுச்சேரிக்குள் தப்பித்து தஞ்சமடைந்தார். 1908 முதல் 1918 வரை 10 ஆண்டுகள் தங்கிவிட்டு மீண்டும் தமிழக எல்லைக்குள் வந்த உடன் 20.11.1918ல் முதல் முறையாக கைது செய்யப்படுகிறார் !

●  பாரதி கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலிருந்த படியே சென்னை மாநில ஆளுநருக்கு ' மன்னிப்பு கடிதம் ' ஒன்றை எழுதி அனுப்புகிறார் ( கடிதத்தின் மூலப்பிரதியை நூலில் பதிப்பித்துள்ளார்கள் ).

●  28.11.1918 தேதியிட்ட அந்த கடிதத்தின் இறுதியில், " ஆங்கில அரசுக்கு என்றென்றும் விசுவாசமாக இருப்பேன். எனவே என்னை உடனடியாக விடுதலை செய்யுமாறு மேன்மை பொருந்திய உங்களை கெஞ்சி கேட்டுக் கொள்கிறேன். கடவுள் உங்களுக்கு நீண்ட மகிழ்வான வாழ்வை அருள்வாராக !

பிரபுவிற்கு உண்மையான கீழ்ப்படியும் பணியாளனாக இருக்க இறைஞ்சும் - சி. சுப்பிரமணிய பாரதி " ....

●  மன்னிப்பு கடிதம் எழுதி தந்திருந்தால், செக்கிழுக்காமல் தண்டனையிலிருந்து தப்பி வெளியே வந்திருக்கலாம் - தியாகி வ.உ.சி !

●  மன்னிப்பு கடிதம் எழுதி தந்திருந்தால், தூக்கு தண்டனையிலிருந்து தப்பி, உயிரோடு வந்திருக்கலாம் - தியாகி பகத்சிங் !

●  ஆனால் முண்டாசு கவிஞர் பாரதியோ ?

" உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் - அச்சமில்லை ! அச்சமில்லை ! " என ஏட்டில் எழுதியவர், வெட்கமில்லை ! வெட்கமில்லை ! என செயலில் காட்டியிருந்தார். பாரதியின்  போலித்தனத்தை இந்த நூல் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது ! நூலாசிரியர் வாலாசா வல்லவன் பாராட்டிற்குரியவர் !

●  பாரதியின் பார்ப்பன இன உணர்வை சிறப்பாக படம் பிடித்து காட்டியுள்ளார் நூலாசிரியர்.

" வேதம் அறிந்தவன் பார்ப்பான் பல | வித்தை தெரிந்தவன் பார்ப்பான் | "...என்று துவங்கும் பாடலில் இறுதியாக, " நாலு வகுப்புமிங்கு ஒன்றே இந்த | நான்கினில் ஒன்று குறைந்தால் | வேலை தவறிச் சிதைந்தே செத்து | வீழ்ந்திடும் மானிடச் சாதி | "...என பாரதி,  சாதியை வருணத்தை பாதுகாக்க வேண்டுமென பாடியுள்ளார்.

●  " வேள்விகள் கோடி செய்தால் சதுர் | வேதங்கள் ஆயிரம் முறைப்படித்தால் | மூளும் நற்புண்ணியந்தான் | " ...என எழுதுகிறார். வேதத்தை யார் படித்தது ? யாருக்கு சொல்லி தரப்பட்டது ? இதை அறியாதவரா பாரதி ? அக்கிரகாரத்து மீது அக்கறையும் பூணூல் பற்றும் பாரதியால் ஒளித்து வைக்க முடியவில்லை ! இன்றைய ஆர்எஸ்எஸ்க்கு பாரதியே முன்னோடி என்பதற்கு நிறைய சான்றுகள் தரப்பட்டுள்ளன !

●  ஒரு பிற்போக்கு சிந்தனையாளரை; சாதி, மத, வருண பாகுபாட்டை ஆதரித்த கவிஞரை; அவரது ஒரு சில பயனுள்ள படைப்புகளுக்காக -  ஆதிக்கத்திற்கு எதிரானவர் போலவும், விண்ணுக்கும் அதிக உயரத்திற்கு தகுதியானவர் போலவும் சித்தரிக்கப் பட்டுள்ள போலியான பிம்பத்திற்கு பதிலடியாக, 

இந்த நூல் நம் கண்களை திறக்க செய்யும் - ஒரு திறவுகோல் ! 

திறனாய்வுக்கு- ஒரு அளவுகோல் !


பொ. நாகராஜன். 

பெரியாரிய ஆய்வாளர், சென்னை. 29.03.2022.

********************************************

Monday, March 28, 2022

சீமான் பற்றி விவேகானந்தன் பதிவு -1

 சீமானின் அரசியல் வாரிசு நீட் கல்யாணசுந்தரமும், சிவராஜ் தாத்தாவும்.

அனிதாவின் மரணத்தின் போது நீட்டை ஒழிக்காமல் விட மாட்டோம் என கர்ஜித்த கல்யாணசுந்தரம், நீட் தேர்வுக்கு கோச்சிங் செண்டர் காண்ட்ராக்ட் பிடித்து நடத்தி வருகிறார் என்பதை அம்பலப்படுத்தியிருந்தேன்.

அதற்கு பதில் சொல்லியிருக்கும் அவர் “நீட் திணிக்கப்படும் போது அதை எதிர்கொள்ள எம் பிள்ளைகளை தயார் செய்வது எம் கடமை” என்று ஆயிரத்தில் ஒரு வார்த்தையை உதிர்த்துள்ளார். பண்ற பிசினசுக்கு பேரு சேவையாம். இதையேதான் அந்த தாத்தாவும் சொன்னாரு.

”பேர பசங்களா! தாத்தா சொல்றத கேளுங்கடா”-ன்னு இன்றைய இளைஞர்களின் மகிழ்ச்சியான வாழ்வுக்காக சிவராஜ் தாத்தா தினந்தோறும் தொலைக்காட்சியில் வந்து தொண்ட வற்ற கத்திக் கொண்டிருக்கிறார் பாவம்.

ஒரு தமிழ்த்தேசியம் பேசுவதாக சொல்லிக் கொள்ளும் கட்சியின் மாநில பொறுப்பாளரின் வேலை என்னவாக இருக்க முடியும்? தமிழ்நாட்டின் அனைத்து மாணவர்களையும் போராட வரச்சொல்லி, நீட் தேர்வை விரட்டுவதுதானே தமிழ்த்தேசியத்தின் வேலை. அதைவிட்டுவிட்டு, தம்பி, தங்கைகளே! நாம் தமிழர் ஆட்சி வந்தவுடன் ஒரே கையெழுத்தில் நீட் தேர்வை ஒழித்து விடுகிறோம். அதுவரை என்னிடம் வந்து நீட் தேர்வுக்கு Fees கட்டி கோச்சிங் எடுங்கள் என்று சொல்வதா அவரின் வேலை. தமிழ்நாடு முழுதும் உள்ள எத்தனை மாணவர்களுக்கு நமது பேராசிரியர் சுயம்புவால் பயிற்சி கொடுக்க முடியும்.

தமிழ்நாடு முழுதும் பயிற்சி வகுப்பு நடத்த மாவட்டந்தோறும் CISTEM Academy-ன் கிளை திறக்கப்படுமோ. இதற்குப் பதிலாக எடப்படி பழனிச்சாமிக்கு நன்றி சொல்லிவிட்டுப் போகலாமே. அவரும் இதையேதான் சொல்கிறார். நாங்க எவ்வளவோ ட்ரை பண்ணோம். But மோடி ஒத்துக்க மாட்டோம்னு சொல்லிட்டார். அதனால நீட் எழுதுங்க. நாங்க இலவச கோச்சிங் செண்டர் உருவாக்கித் தர்றோம்னு. 

இரண்டுக்கும் ஒரே வித்தியாசம் தான். எடப்பாடி இலவச பயிற்சி தரப்போறாராம். கல்யாணசுந்தரம் Full Time ல காசுக்கும், Free யா இருக்குற நேரத்துல 

Free யாவும் சொல்லித் தரப் போறாராம். கொண்ட கொள்கைக்கு எவ்வளவு பெரிய துரோகம் இது! 

இங்கு கவனிக்க வேண்டியது..இங்கு நான் நாம் தமிழர் கட்சியின் கடைக்கோடி தொண்டனைப் பற்றி பேசவில்லை. சீமானுக்கு அடுத்ததாக கட்சியில் கைகாட்டப்படும், மாநில இளைஞர் பாசறை பொறுப்பாளரை பற்றி பேசுகிறேன்.

இன்னொரு பக்கம் தேடிப்பார்த்தா இவங்க கொண்ட கொள்கையே இதுதான்னு நாம் தமிழர் ஆட்சி வரைவு ஆவணத்தை படிச்சதுக்கு அப்புறம்தான் தெரிஞ்சது. நாம் தமிழர் ஆட்சியில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிக்க மீண்டும் நுழைவுத் தேர்வு கொண்டு வரப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள் (நாம் தமிழர் ஆட்சி செயற்பாட்டு வரைவு - பக்க எண்91). கோச்சிங் செண்டர் பிசினசை பெருக்க எவ்வளவு யோசித்திருக்கிறார்கள். பிறகென்ன ம***த்துக்கு இந்த துரோகிகள் அனிதா படத்தை வைத்து உறுப்பினர் சேர்க்கை நடத்தவேண்டும். 

இது தெரியாம, அப்பாவி தம்பிகள் சிலர், அனிதா இறந்ததுக்கு முன்னாடி தான் கல்யாணசுந்தரம் நீட் கோச்சிங் செண்டர் நடத்தினார். இப்போ இல்லை என்று பதிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப்போதும் கல்யாணசுந்தரம் நீட் கோச்சிங் செண்டரை நடத்திக் கொண்டுதான் இருக்கிறார் என்பதற்கான ஆதாரத்தை இங்கு இணைத்துள்ளேன். (தம்பிகள் விருப்பப்பட்டு கேட்டால் Fees Detailsஐ கூட இணைக்க முடியும். NEET பயிற்சியறையில் பெருமிதத்தோடு இயற்பியல் ஆசிரியனாக என்று பதிவிட்டு அதனை delete செய்தது வேறு கதை)

இன்னொன்று அவரிடம் படிக்கும் மாணவர்கள் பல்வேறு போட்டித் தேர்வுகளை எழுதுறாங்களாம். அதில் நீட் தேர்வும் ஒன்றாம். அப்புறம் எதுக்கு Coaching Center விளம்பரத்துல கட்டம் போட்டு கொட்டை எழுத்துல NEET-னு போடனும்?

போராடுவது சாதாரண குடும்ப மாணவனின் வேலை இல்லையாம். உங்கள் முகத்தில் கரியைப் பூசித்தானே நுங்கம்பாக்கம் பள்ளி மாணவிகள் தமிழ்நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்த போராட்டத்தை நடத்தினார்கள். 

தான் நடத்துக்கும் Unethical Business-க்கு சேவை நிறம் பூச முயன்று கொண்டிருக்கிறார் சீமானின் அரசியல் வாரிசு. எல்லாவற்றிலும் இரட்டை நிலைப்பாட்டினை எடுத்து, அதற்கு எளிய பிள்ளைகள் என்று சொல்லி முட்டுக் கொடுக்கும் கலையை சீமான் மட்டுமல்ல, அவரின் அரசியல் வளர்ப்புகளும் மிக நன்றாக கற்றுத் தேர்ந்திருக்கிறார்கள்.

“துரோகத்திற்கு பதில் பாடை ஏறுவதே மேல்” என்று பதிவிட்டிருந்தார். சொன்ன வார்த்தையை எப்போது காப்பாற்றப் போகிறீர்கள் என்ற கேள்விக்கு இன்னும் அவரிடமிருந்து பதில் வரவேயில்லை.

சீமான் பற்றி விவேகானந்தன் இராமதாஸ் பதிவு -2

 நீட் கல்யாணசுந்தரம் அனிதாவிற்கு இழைத்த துரோகத்தைப் பற்றி பார்த்தோம்.

காவிரிச் செல்வன் விக்னேசுக்கு நிகழ்ந்த துரோகம் தெரியுமா?

கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் காவிரி உரிமைக்காக  செப்டம்பர் 15,, 2016 அன்று மாலை தொடர்வண்டிகளில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தோம். அப்போது ரயிலில் அமர்ந்திருந்த நாம் தமிழர் கட்சி தோழர் ஒருவர் உணர்ச்சிவசப்பட்டவாறே, தம்பி ஒருத்தன் தீக்குளிச்சிட்டான் தோழா, போராட்டத்தை பெரிதுபடுத்த வேண்டும், விடக் கூடாது என கத்தினார். பின்னர் அங்கிருந்து மருத்துவமனைக்கு புறப்பட்டோம்.

 காவிரி உரிமைக்காக கடுமையாக போராட வேண்டும் என வலியுறுத்தி, சீமான் அண்ணன் போராட்டத்தை விரிவுபடுத்துவார், தமிழகம் முழுதும் போராட்டங்கள் விரிவடையும் என நம்பி தீக்குளித்தான் நாம் தமிழர் கட்சியில் இருந்த விக்னேஷ்.

சீமானின் உணர்வு கொப்ப்aளிப்பான முகத்தைப் பார்த்தவுடன், அண்ணன் மிகப் பெரிய போராட்டத்தினை அறிவித்து நடத்தப் போகிறார் என்று நினைத்திருந்தேன். 

கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் பிணவறைக்கு வெளியே நாம் தமிழர் கட்சியின் தோழர்கள் கோபத்தின் விளிம்பில் நின்று கொண்டிருந்தனர். விக்னேசின் உடலை எக்காரணம் கொண்டும் எடுக்க விடமாட்டோம் என கொப்பளித்துக் கொண்டிருந்தனர். பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த தோழர்களும் அங்கு கோபத்துடன் குழுமியிருந்தனர். நானும் தோழர்களும் அங்கிருந்தோம்.

வெளியே உணர்வுகள் கொப்பளித்துக் கொண்டிருக்க சீமானோ காவல்துறையிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தார். இறுதியில் விக்னேசின் உடல் நாம் தமிழர் கட்சி அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்படும் என அறிவித்தார். அவரின் கட்சி உறுப்பினர் விக்னேஷ் என்பதால் அந்த முடிவை மற்றவர்கள் எதிர்க்கவில்லை.

விக்னேசின் உடலை சென்னை முழுவதும் ஊர்வலமாக கொண்டு செல்ல வேண்டும் என அனைவரும் நினைத்தனர். ஆனால் சீமான் பேசி முடித்தது வேறாக இருந்தது. ஆம்புலன்சை எடுக்க விடாமல் மறித்து நின்று போரடிய தோழர்களை சீமானுடன் சுற்றும் சிலர் வந்து விலக்கினர். அத்தனை பேரும் உற்றுப் பார்த்துக் கொண்டிருக்க சீமானின் கட்டளைப்படி ஆம்புலன்ஸ் புறப்பட்டது. முதலில் நம் அலுவலகத்திற்கு எடுத்துச் செல்வோம், பின்னர் பெரிய போராட்டங்களை நடத்துவோம் என்றெல்லாம் சீமானுடனே எப்போதும் சுற்றும் சிலர் முழங்கினார்கள்.

ஆம்புலன்ஸ் வேகமாக புறப்பட்ட போது, தோழர்கள் சிலர் விக்னேசுக்கு வீரவணக்கம் என்று முழக்கங்களை எழுப்பினோம். அப்போது சீமானின் அல்லக்கைகள் சிலர் எங்களை தடுத்து முழக்கங்கள் எழுப்பாமல் இருந்தால் தான் உடலையே தருவேன் என காவல்துறை சொல்லியிருக்கிறது. அதனால் எந்த முழக்கமும் போடக் கூடாது என தடுத்தார்கள்.

தமிழினத்துக்காக தன் உயிரை தியாகமாக கொடுத்த விக்னேசின் ஊர்வலம் முத்துக்குமாரின் எழுச்சியைப் போன்றதொரு எழுச்சியை உருவாக்கியிருக்க வேண்டும். ஆனால் விக்னேசின் உடலை ஏற்றிக் கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் மின்னல் வேகத்தில் சென்னையின் நெடுஞ்சாலைகளில் பறந்தது.

ஆம்புலன்சை பின் தொடர்ந்து வளசரவாக்கத்தை அடைந்தோம். அங்கும் மயான அமைதி நிலவியது. அங்கும் முழக்கமிட அனுமதிக்கப்படவில்லை. மீறி முழக்கமிட்ட தோழர்களுக்கும், காவல்துறை அப்படியெல்லாம் செய்யக் கூடாதென்று சொல்லியிருப்பதாக அறிவுரைகள் வழங்கப்பட்டன. ஒரு வயதான முதியவரின் இறுதி நிகழ்வைப் போல விக்னேசின் உடல் அங்கு வைக்கப்பட்டிருந்து. அதே அமைதியுடன் சென்னையிலிருந்து கொண்டு செல்லப்பட்டது. 

தலைநகரில் வைத்து போராடுவது என்ற கோரிக்கைகள் அனைத்தும் தூக்கி எறியப்பட்டு விக்னேசின் சொந்த ஊருக்கு எடுத்துச் சென்றனர். அந்த ஊரில் இறுதி ஊர்வலம் நடத்தி வீர முழக்கங்களை இட்டுச் சென்றவர்களின் மத்தியில் விக்னேசின் தியாகம் மீண்டும் சாகடிக்கப்பட்டது. 

சீமானின் மீது எனக்கு கொஞ்ச நஞ்சம் ஒட்டியிருந்த மரியாதையும் சுக்குநூறாய் உடைந்து நொறுங்கிய தருணம் அது. 

அதன் பிறகாவது சீமான் போராட்டங்களை பெரிது படுத்துவார் என நினைத்தேன். சில காலம் கழித்து வழக்கமான வீர வசனங்களுடன் ஒரு வீரவணக்கக் கூட்டம் நடத்தி விக்னேஷ் மறக்கடிக்கப்பட்டான். அதன் பிற்கு முதலாம் ஆண்டு வீரவணக்க கூட்டம் நடத்தப்பட்டது.


முத்துக்குமாரின் மரணத்தின் போது நாம் மட்டும் வலிமையாக இருந்திருந்தால் என்னென்னவோ செய்திருப்போம் என சீமான் சொல்வதெல்லாம் எத்தனை பெரிய பொய்கள் என்பதை அன்றுதான் விரிவாக உணர்ந்து கொண்டேன்.

பரலி சு.நெல்லையப்பர்

தம்பி நான் ஏது செய்வேனடா – பரலி சு. நெல்லையப்பர்

(நினைவு தினம் இன்று 28-03-1971)

பாரதிக்காக வாழ்ந்த மூவரில் தலைமகனாக கருதப்படுபவர் பரலி சு. நெல்லையப்பர்.

பாரதி பாடல்களின் நுட்பத்தை அறிந்த காரணத்தால் இந்திய மக்களிடையே பல்வேறு பத்திரிகைகள் மூலம் சுதந்திர உணர்ச்சிகளை பரப்பியவர் நெல்லையப்பர்.

வீரக்கனல் சுப்பிரமணிய சிவாவையும் சுதேசி பிழம்பு வ.உ.சிதம்பரனாரையும் இணைத்து வைத்த பெருமைக்குரியவர் .நெல்லையப்பரின் தமையனார் சண்முக சுந்தரம் பிள்ளை.

1907 ம் ஆண்டு நெல்லையப்பர் வ.உ.சி. வீட்டு திண்ணையில் அமர்ந்து எழுதிக் கொண்டிருக்க , பாரதியார் உரிமையுடன் நெல்லையப்பரின் கையை பற்றி உரிமையோடு “என்ன ஓய்! எழுதுகிறீர்? எழுதியது போதும்”என்று உரிமையோடு அழைத்தார். 

முன் பின் பார்த்தறியாத நெல்லையப்பர் தம் கையை பற்றி இழுக்கிறாரே என்று அவருடன் உலவ சென்று விட்டார். பிற்காலத்தில் நெல்லையப்பர்தான் பாரதிக்கு உற்ற நண்பராக, கவிதைகளை வெளியிடும் பதிப்பாளராக திகழும் நெல்லையப்பர்தான் இவர் என பாரதிக்கும் தெரியாது.

வ.உ.சி.க்கு வெள்ளையர் அரசாங்கம் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பிறகு வ.உ.சி.யின் மனைவி மீனாட்சி அம்மையாரும் , பரலி சு. நெல்லையப்பரும் தண்டனை குறைப்பு மேலீட்டிற்காக சென்னை வந்து பல வக்கீல்களை சந்தித்து பேசிய போது அனைவரும் அப்பீல் செய்ய இடமில்லை என்று கையை விரித்து விட்டனர்.

இச் செய்தியை சிறையிலிருந்த வ.உ.சி.க்கு நெல்லையப்பர் தெரிவித்த போது “ வக்கீலாய் நின்று வழிப்பறியே செய்கின்ற திக்கிலார்” என்று சோகம் ததும்பும் வெண்பா பாடல்களை நெல்லையப்பருக்கு வ.உ.சி. எழுதி அனுப்பினார்.

வ.உ.சி.க்கு சிறையில் இழைக்கப்பட்ட செக்கிழுத்தல், கல்லுடைத்தல் போன்ற துன்பங்களை கண்டு  பாரதியின் இந்தியா பத்திரிக்கையில் 28.01.1908 ல் “துன்பம் சகியான்’ என்ற புனை பெயரில் எழுதி வெளி உலகுக்கு கொண்டு வந்தவர் பரலி. சு. நெல்லையப்பர். இந்தியாவில் வந்த இவருடைய முதல் கட்டுரையும் இதுவே.

“தேசபக்தரான ஸ்ரீமான் சிதம்பரம் பிள்ளை ராஜத்துரோக  ஜாதித்துவேஷக் குற்றங்கள் சாட்டப்பட்டு, ஆறு வருடம் தீவாந்திர சீஷை விதிக்கப்பட்டிருக்கிறார். தற்சமயம்  சிறைப்படுத்தியிருக்கும் கோயம்புத்தூர் ஜெயில் அதிகாரி அவரைக் கைகால் விலங்கிட்டுக் கேவலம் மிருகம் போல் எண்ணெய் ஆட்டும் செக்கு இழுக்கும்படி செய்திருக்கிறாராம். 

அந்தோ! இக்கொடிய துன்பத்தை நினைக்கும் போது நெஞ்சு உருகுகின்றதே. இங்கு எழுதும் போதே நடுங்குகின்றதே! அக் கொடும் துன்பத்தைச் சகிக்கும் தேசபக்தர் பாடு எங்கனமோ? கடவுளே அறிவார்”

கைதிகட்கு எத்தனையோ விதமான வேலை இருக்க, இத்தேச பக்தருக்கு நாற்கால் மிருகங்களும் துன்புறக்கூடிய எண்ணெய் இயந்திரம் சுழற்றும் வேலையையா கொடுக்க வேண்டும்? அவர் கைகால்கட்கு விலங்கிடுவேனோ? என்று நெஞ்சுருக எழுதிக் கொண்டு செல்கிறார்.

கோவைச் சிறையில் வ.உ.சி. இருந்த போது கலெக்டர் ஆஷ் சுடப்படுகிறார்

அச் சமயம் நெல்லையப்பரையும் சந்தேகத்தின் பேரில் பிரிட்டீசார் தேடிவருகின்றனர்.

நெல்லையப்பரோ மாறுவேடத்தில் கோவை சென்று பாரதியார் தந்த கவிதைகளை வ.உ.சி.யிடம் இரகசியமாக சேர்க்கும் பணிகளை செய்கிறார்.

கோவை வழக்கறிஞர் , பெரியபுராண  உரையாசிரியர் சி.கே.சுப்பிரமணிய முதலியார் உதவியுடன் கோவை பேரூர் அருகே ஆசிரமம் ஒன்றை அமைத்துக் கொண்டு சாமியார் போல் செயல்பட்டு சிறையிலிருந்த வ.உ.சி.க்கு பல உதவிகளைச் செய்தவர். 

நெல்லையப்பர் வேண்டுகோளுக்கிணங்க வ.உ.சி. தனது சுயசரிதையை அகவற்பாவில் எழுதினார். இதனை வ.உ.சி. குறிப்பிடுகையில்,

”பூவுலகமதனைப் பொருத்தி நின்று

தேவுலகதனிற் சிறந்த உலகின்

நினைவோடு நிற்கும் நெல்லையப்பர்” 

என்று எழுதியுள்ளார்.

வெ. சாமிநாத சர்மா நெல்லையப்பரின் கோவை வாசத்தைப் பின்வருமாறு குறிப்பிடுகிறார். 

“கப்பலோட்டிய தமிழன் வெஞ்சிறையில் வாடிக் கொண்டிருந்த இடம் கோயமுத்தூர் சிறை. சிறைக்கு வெளியே சிதம்பரனாருக்கு உற்ற துணை நெல்லையப்பர். ஆனால் அவருக்கோ தலைமறைவு வாசம். எப்படிச் சிறைச்சாலைச் சுவர்களைக் கடந்து உள்ளே போய் வெளியே வருவாரோ? சிதம்பரனாரைப் பேட்டி காண்பார். சிறு சிறு காகிதத் துண்டுகளில் அவர் குறித்துக் கொடுக்கும் செய்திகளைப் பெற்றுக் கொள்வார். அவற்றின்படி வெளியே வந்து செயலாற்றி வ.உ.சி.யின் திட்டங்களை நிறைவேற்றுவார்.இப்படி ஒரு வருட காலம் நடந்தது.

1910 ம் ஆண்டு கர்மயோகி இதழில் “ஸ்ரீமான் தூத்துக்குடி சிதம்பரம் பிள்ளையின் சந்திப்பு என்ற கட்டுரை வ.உ.சி. சிறையிலிருந்த போது கட்டுரை எழுதினார்.

வெள்ளைக்கார கப்பல் கம்பெனி சுதேசி கப்பல் கம்பெனியை சீரழிக்கத் தொடங்கிய போது நெல்லையப்பர் வ.உ.சி. குடும்பத்தாருடன் உறுதுணையாக நின்று சுதேசி கப்பல் கம்பெனி சொத்துக்களை பரிபாலிக்க உதவி செய்தவர்.

வ.உ.சி. நெல்லையப்பர் குறித்து எழுதிய பாடல்கள் இருபதுக்கும் மேலாகும். ஒரு பாடலை மட்டும் இங்கு குறிப்பிடலாம்.

”அப்பனும் நீ ஐயனும் நீ ஆதியும் நீ யாவையும் நீ

செப்பமுடன் செப்பியதைச் செய்வாயேல் – தப்பில்

மனையாள் தன் மாதாவை மன்னிநிற்க மாயேன்

மனையெய்தும் மாதம் வரை.

இந்த பாடல் மூலம் நெல்லையப்பர் வ.உ.சி. குடும்பத்துடன் எந்த அளவுக்கு உறுதுணையாக இருந்துள்ளார் என்று புரிய வருகிறது.

நெல்லையப்பர் தனக்காக வாழாமல் வ.உ.சிக்கும், பாரதிக்காகவும் வாழ்ந்தவர் என்பார் சாமிநாத சர்மா. 

வ.உ.சி.யினுடைய சரித்திரத்தை நெல்லையப்பர் எழுத வேண்டி பலரும் விரும்ப அதற்கிசைந்து 1944 ஆம் ஆண்டு திரு.வி. க. முன்னுரையுடன் வ.உ.சி. சரித்திரத்தை வெளியிட்டார்.

வ.உ.சி.யைக் கலகக்காரராகவும், சுப்பிரமணிய சிவாவை பைத்தியக்காரனாகவும், பாரதியாரை பிழைக்கத் தெரியாதராகவும் தமிழக மக்கள் கருதி வந்த காலத்தில் பாரதியாருடைய வந்தேமாதரப் பாடல்களை ஓசைபடாமல் ஆயிரக்கணக்கில் அச்சிட்டு தமிழகத்தில் சுதந்திரதாகத்தைப் பரப்ப வழி செய்தவர் நெல்லையப்பர்.

வெள்ளையர்களின் கண்களின் மண்ணைத் தூவி பாரதியின் பாடல்களை வந்தேமாதரம் பாடல்கள் என்று தலைப்பிட்டு வெளியிட்டால் பிரிட்டீசாரின் சென்சாருக்கு உட்படும் என்று நினைத்து நாட்டுப் பாடல் என்ற தலைப்பில் வெளியிட்டார்.

1917 ம் ஆண்டு பாரதியின் பாடல்களை தொகுத்து கண்ணன் பாட்டு, நாட்டுப் பாட்டு, பாப்பா பாட்டு, முரசு பாட்டு நெல்லையப்பரின் தன்னடக்கமான முன்னுரையுடன் வெளியிட்டார்.

19-07-1917 ம் ஆண்டு நெல்லையப்பருக்கு பாரதியார் புகழ்மிக்க கடிதம் ஒன்றை எழுதினார்.

”எனதருமைத் தம்பியாகிய ஸ்ரீ நெல்லையப்ப பிள்ளையைப் பராசக்தி நன்கு காத்திடுக! என்று ஆரம்பித்து தம்பி- நான் ஏது செய்வேனடா! தமிழை விட மற்றொரு பாஷை சுகமாக இருப்பதைப் பார்க்கும் போது எனக்கு வருத்தமுண்டாகிறது. தமிழனை விட மற்றொரு ஜாதியான் அறிவிலும் வலிமையிலும் உயர்ந்திருப்பது எனக்கு சம்மதமில்லை.தமிழச்சியை காட்டிலும் மற்றொரு ஜாதிக்காரி அழகாயிருப்பதை கண்டால் என் மனம் புண்படுகிறது! என்ற பாரதியார் எழுதிய மாபெரும் மடலுக்கு உரியவராக இருந்தார் என்றால் பரலி சு. நெல்லையப்பருக்கு இதைவிட என்ன பேறு கிட்டும்.

பாரதியார் ஒரு தடவை சோர்ந்த முகத்துடன் வந்து நெல்லையப்பரை தனியாக அழைத்துச் சென்று  ‘ஏதாவது பணம் இருக்கிறதா? என்று கேட்க, அப்பொழுது தன்னிடமிருந்த ஒரு ரூபாயை பாரதியிடம் கொடுத்தார். அந்த அளவுக்கு பாரதி நெல்லையப்பரை தம்பியாகவே மதித்து உரிமையுடன் உதவி கோருவார்.

1921 ம் ஆண்டு பாரதியார் மறைந்த கடைசி நாளில் அவருடைய கடைசி நிமிடத்தில் உடனிருந்து அவரது பொன்னுடலைச் சுமக்கும் பேறு பெற்றவர் நெல்லையப்பர்.

சூரியோதயம், விஜயா,கர்மயோகி, லோகோபகாரி, தேசபக்தன் போன்ற பல்வேறு இதழ்களில் முத்தாய்ப்பான பங்களித்தவர்.

அடிசன் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நாரண துரைக்கண்ணன் பத்திரிகை உலகில் அறிமுகப்படுத்தியவர்.

ஜீவா என்றழைக்கப்படும் நாரண துரைக்கண்ணன், மாஜினி என்றழைக்கப்படும் ர.ரங்கசாமி போன்றோருக்கு பத்திரிக்கை வழிகாட்டி இவரே.

விகடன் பெயருக்குப் பொருத்தமாய் நகைச்சுவையாய் யாரேனும் எழுதமாட்டார்களா என்று எஸ்.எஸ். வாசன் ஏங்கிக் கொண்டிருக்கும் வேளையில் கல்கியை வாசனுக்கு அறிமுகப்படுத்தியவர் நெல்லையப்பர். 

சைதாப்பேட்டை காரணீசுவரர்  கோவில் தெருவில் கு. மகாலிங்கம் என்பவரால் சிறப்பாக நடத்தப்பட்டு வரும் காந்தி வாசக சாலை என்னும் நூலக வாசக சாலையை தொடங்கி வைத்தவர் நெல்லையப்பர்.

1954 ம் ஆண்டு பாரதியாரின் மகள் சகுந்தலா பாரதி அன்றைய தமிழக முதல்வர் காமராசரை சந்தித்து எனது  தந்தைக்கு ஒப்பான நெல்லையப்பர் குரோம்பேட்டை ராஜாஜி தெருவில்  குடிசையில் தங்கி வறுமையில் வாடுகிறார் அவருக்கு உதவி செய்ய வேண்டிக் கேட்க , உடனடியாக குரோம்பேட்டை நெமிலிச்சேரி புறம்போக்கில் 3ஏக்கர் 18 செண்ட் கொண்ட நிலத்தை காமராசர் ஒதுக்கி கொடுத்தார். 

அந்த நிலத்தின் ஒரு பகுதியை அதாவது குரோம்பேட்டை பகுதியில் வசிக்கின்ற ஏழை குழந்தைகள் படித்துப் பயன் பெறும்வகையில் இரண்டு கிரவுண்டு இடத்தை (29.11.1967 ல்) இனாமாக கொடுத்து பரலி சு. நெல்லையப்பர் நினைவாக பள்ளிக்கூடம் அமைக்கப்பட்டு இயங்கி வந்த பள்ளிக்கூடம் கடந்த 20 வருடங்களாக பள்ளிக்கூடம் இயங்காமல் மூடப்பட்டுள்ளது. இந்த பள்ளிக்கூடம் பல்லாவரம் நகராட்சிக்கு உட்பட்ட குரோம்பேட்டை பாரதிபுரம் 2வது தெருவில் இயங்கி வந்தது.

பரலி.சு.நெல்லையப்பர் எழுதிய நூல்கள்

1. பாரதியார் சரித்திரம்

2.வ.உ.சிதம்பரம் பிள்ளை சரித்திரம்

3.பாரதி வாழ்த்து

4.நெல்லைத் தென்றல்

5.உய்யும் வழி

6.தமிழ்த் திருமண முறை

7.ராதா ராணி (மொழிபெயர்ப்பு)

8.ஜோடி மோதிரம் (மொழிபெயர்ப்பு)

9.சுவர்ணலதா (மொழிபெயர்ப்பு)

10.மகாத்மா காந்தியின் சுயராஜ்யம் (மொழி பெயர்ப்பு)

11.சிவானநந்தர் உபதேசமாலை


பதிப்பித்த நூல்கள்:

1.பாரதியின் கண்ணன்பாட்டு

2.நாட்டுப்பாட்டு

3.பாப்பா பாட்டு,முரசு பாட்டு, குயில்பாட்டு, ராஜாஜியின் ஆத்மசோதனை, பி.பி.சுப்பையாவின் மாதர் கடமை, திருவாசகம் (மலிவுப்பதிப்பு) போன்றவை.

21.12.1939ல் பெரியவர் வ.உ.சி.க்கு சிலை வைத்த போது பஞ்சகம் பாடினார்.


"ஊக்கமும் வலிவும் குன்றி

 ஒளி இழந் துலகில் நீண்ட

தூக்கத்தில் வீழ்ந்த நாட்டைத்

துயிலெழச் செய்தாய் ஐய!


பாக்கியம் பெருகி நாட்டார்

பாரினில் உயரும் வண்ணம்

தூக்கிய வினைகள் செய்தாய்!

துணிவு மிக்குடைய கோவே!


பொற்சிலை வைத்திங் குன்னைப்

போற்றிட விரும்புகின்றோம்!

கற்சிலை நாட்டி இன்று

காண்கிறோம்! கலைவல் லோனே!

நற்செயல் பெரிதும் செய்தாய்

நாட்டினை அகத்திற் கொண்டு உன்

நற்பெயர் நிலவி நிற்கும்

ஞாலமுள்ளளவும் வாழி!

வீரச் சிதம்பரம் விதைத்து பாரதி பாட்டிற் பழுத்த பரலி சு. நெல்லையப்பரின் தியாகத்தை நினைவு  கூர்வோம்.

இப் பதிவை எழுத உதவிய நூல்கள்:

அ.மகாதேவன் எழுதிய தியாக ஒளி அமர் பரவி சு.நெல்லையப்பர்.

பெ.சு.மணி எழுதிய கட்டுரைகள்

Rengaiah Murugan முகநூல் பதிவு..

Thursday, March 24, 2022

பெரியார் மணியம்மை திருமணம்

பெரியார் மணியம்மை திருமணம் . ஒரு வரலாற்று உண்மை விளக்கம் - கி. வீரமணி - திராவிடர் கழக (இயக்க) வெளியீடு - பக்கங்கள் 280 - நன்கொடை ரூ 200/

●  தமிழக வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக இருந்தது தான் பெரியார் - மணியம்மை திருமணம் ! அந்த திருமணம் (1949) அப்போது பெரும் அதிர்வலையை  ஏற்படுத்தியது. எதிர்ப்பும் ஆதரவும் மாறி மாறி பத்திரிக்கைகளை நிறைத்தன ! பெரியாரின் விடுதலை இதழில் அறிக்கைகளும் ஆதரவுகளும் என்றால், அண்ணாவின் திராவிட நாடு இதழில் மடல்களும் எதிர்ப்புகளும் பரபரப்பாக வெளியாயின !

●   அண்ணா அப்போது பெரியாரின் நம்பிக்கையான தளபதியாக திராவிடர் கழகத்தில் இருந்தார் ! பெரியாரின் தன்னிலை விளக்கங்கள், தலைவர்களின் ஆதரவுகள், தொண்டர்களின் ஆதரவு மடல்கள், எதிரான அறிக்கைகள்,  இப்படி நிறைய தகவல்களை கொண்டு - இனி வரும் தலைமுறைக்கு சரியான வரலாற்றை சொல்வதற்கான முயற்சிதான் - இந்த நூல் !

●  நூலாசிரியர் கி. வீரமணி தனது முன்னுரையில், " இயக்கப் பாதுகாப்பு கருதி 1949ல் பெரியார் - மணியம்மை திருமணம் என்ற ஏற்பாடு நடைபெற்றது. திருமணம் என்பது சட்டப்படிக்கான பெயரே ஒழிய, காரியப்படி எனக்கு வாரிசு தான் என்றார் பெரியார். பெரியாரின் தொலைநோக்கு சிந்தனையை இன்று உலகமே வியந்து பாராட்டி கொண்டிருக்கிறது ! " என்று குறிப்பிட்டுள்ளார்.

●  மேலும், ' ஆய்வாளர்களுக்கு இந்நூல் ஓர் அரிய புதையல் ' என்றும், ' ஆய்வாளர்கள் தவறான முடிவுக்கு வராமல் இருக்க, எல்லா தகவல்களையும் தந்துள்ளதாக ' பதிவிட்டுள்ளார் ! ஆகவே இந்த நூலின் முக்கியத்துவம் இன்னும் அதிகமாகிறது !

●  நூலில் தரப்பட்டுள்ள பல அறிக்கைகள், தகவல்களிலிருந்து மிக முக்கியமான ஐந்து ஆவணங்களை நன்கு ஊன்றி படித்தாலே, உண்மைகள் விளங்க ஆரம்பிக்கும். அந்த ஐந்து ஆவணங்களின் அடிப்படையிலேயே இந்த நூலின் அறிமுகத்தை ஒரு ஆய்வு அறிக்கையாக தர விரும்புகிறேன் ! 

அந்த ஐந்து ஆவணங்கள் :

1)  மணியம்மையார் - வேலூர் அ. மணி என்ற பெயரில் குடிஅரசு இதழில் வெளியிடப்பட்ட சிறு அறிக்கை (23.10.1943).

2)  பெரியார் - விளக்கம் என்று தலைப்பிட்டு விடுதலையில் வெளியிட்ட அறிக்கை (19.06.1949).

3)  அண்ணா - வெட்கப்படுகிறோம். வேதனைப்படுகிறோம் இல்லை விரட்டப்படுகிறோம் என்ற தலைப்பில் திராவிட நாடு இதழில் வெளியிட்ட அறிக்கை (05.07.1949).

4)  பெரியார் - விளக்கம் கேட்ட தோழர்களுக்கு என்று தலைப்பிட்டு விடுதலையில் வெளியிடப்பட்ட அறிக்கை (07.07.1949).

★ பெரியார் - மணியம்மை திருமணம் நடந்தேறியது (09.07.1949) ★

5)  பெரியார் - திருமணம் எண்ணம் தோன்றுவதற்கும் அவசரத்திற்கும் முக்கிய காரணம் என்ற தலைப்பில் விடுதலையில் வெளியிட்ட அறிக்கை (13.07.1949).

●  தந்தை பெரியாருக்கு உதவியாகவும் அவரது நலனை பாதுகாக்க ஒரு தாதியாகவும் வந்து சேருகிறார் மணியம்மையார். பெரியாரின் உடல் நலன் பற்றியும் அவரை பேணிகாக்க தன்னலமற்ற ஆட்கள் வேண்டுமென்றும் குடிஅரசு இதழில் (1943) சிறு அறிக்கையை வெளியிடுகிறார். அந்த அறிக்கையில் அவர் தந்துள்ள காரணங்களையும் வேண்டுகோளையும் அறியும் எவரும், மணியம்மையாரை பாராட்டாமல் இருக்க இயலாது !

●  "  பெரியாரை பாதுகாக்க வரும் பெண்கள் - மானம், ஈனம், ஊரார் பழிப்பு யாவற்றையும் துறந்த நல்ல, கல்லுப் போன்ற உறுதியான மனதுடைய நாணயவாதியாகவும், வேறு தொல்லை இல்லாததர்களாகவும் இருக்க வேண்டும் ! பெரியாரை போற்றுதலும் பெரியார் செல்லுமிடங்களுக்கெல்லாம் சென்று இயக்க வேலைகளை செய்ய வேண்டும். பெண் மக்களே யோசியுங்கள் ! " என்று குறிப்பிட்டிருந்தார் .

●  சமுதாய பணி செய்ய வேறு யாரும் வராத காரணத்தால் அதற்கு, தான் யோக்கியதை உடையவராக எண்ணி,  பெரியார் அந்த வேலையை செய்ய வந்ததாக கூறியது போல - பெரியாரை பேணவும், அவருக்கு உதவவும், இயக்க பணிகளுக்கு துணையாக இருக்கவும், அவருக்கு உதவ வேறு யாரும் தன்னை அர்ப்பணிக்க முன் வராததால் -  மணியம்மையாரே பெரியாரின் வாரிசாக வருவதற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார் !


●  தந்தை பெரியார் -  திராவிடர் கழகத்தை காப்பாற்றுவதற்கும், தான் சேர்த்து வைத்த சொத்துக்களை பாதுகாக்கவும், அதற்கு டிரஸ்ட் ஏற்பாடு செய்யவும், அந்த ஏற்பாட்டிற்காக மணியம்மையாரை வாரிசாக்கவும், அந்த வாரிசு அந்தஸ்து பெற வேண்டுமென்றால் - மணியம்மையாரை திருமணம் செய்ய வேண்டிய சட்ட ஏற்பாடாகவே அவரது திருமணத்தை நடத்த முடிவு செய்தார்

●  பெரியார் வெளியிட்ட அந்த விவரமான நீண்ட அறிக்கைகளிலிருந்து தெளிவுபடுத்திய தகவல்கள்:

"  எனக்கும் எனது பொருளுக்கும் சட்டப்படியான ஒரு வாரிசை ஏற்படுத்தி கொள்வது அவசியம் ! "

" மற்றபடி பிரஸ்தாப திருமணம் என்பது சட்டப்படிக்கான பெயரே ஒழிய, காரியப்படி எனக்கு வாரிசுதான் ! "

" மணியம்மைக்கு இஷ்டமில்லாத, துன்பங்களை சகித்துக் கொண்டிருக்க வேண்டிய திருமணம் அல்ல ! " .

●  இவ்வாறு பெரியார் - இயக்கத்தை காக்க, சொத்துக்களை பாதுகாக்க, தன் உடல்நலனைப் பேண, அதிகாரபூர்வ வாரிசு அமைப்பதற்காக தனது 70வயதில் 30வயது மணியம்மையாரை - ஒரு தொலை நோக்கு பார்வையோடு, தீர்க்கமான முடிவோடு , சுகவாழ்வுக்காக அல்லாமல், பொது வாழ்வில் மேலும் சாதிக்க - திருமணம் செய்தார் !

●  அண்ணா இந்த திருமணத்தை 

 வெட்கப்படுகிறோம் ! வேதனைபடுகிறோம் இல்லை விரட்டப்படுகிறோம் என்ற அறிக்கையில் தனது வேதனையை தெரிவிக்கிறார்.

' தலைவருடைய நம்பிக்கைக்கே பாத்திரமாக முடியாத நாம், அவருடைய தலைமையின் கீழ் பணியாற்றி என்ன பயன் ' என்ற எண்ணத்தையும் வெளிப்படுத்துகிறார் !

●  அண்ணா - பெரியாரின் கடுமையான கட்டுப்பாடான, பகுத்தறிவு பிரச்சாரம் மட்டுமே செய்ய வேண்டிய அமைப்பாக கழகம் இல்லாமல், சுதந்திரமான அரசியல் கட்சியாக அதை மாற்றி அமைக்க விரும்பினார் ( பிற்காலத்தில், திமுக தலைவர்களே இதை பகிரங்கமாக ஒத்துக் கொண்டிருக்கின்றார்கள் ). அதற்கு சரியான வாய்ப்பாக இந்த திருமணம் அமைந்தது. அதன் காரணமாக பெரியாரை விட்டு விலகி, திராவிடர் கழகத்தை விட்டு விலகி - 17.09.1949ல் புதிய அரசியல் கட்சியாக திமுகவை தோற்றுவித்தார் !

●   வேதனையோடு வெளியேறிய அண்ணா - 18 ஆண்டுகள் தனது அரசியல் இயக்கமான  திமுகவை கட்டிக் காப்பாற்றி, காங்கிரஸ் பேரியக்கத்தை தோற்கடித்து, 1967ல், தமிழகத்தில் ஆட்சியை வென்று, அந்த ஆட்சியை பெரியாருக்கு சமர்ப்பித்து - தன் மீது விழுந்த பழியை துடைத்தார் ! 

அறிஞர் அண்ணாவானார் ! !

●   வேதனையோடு மணமுடித்த மணியம்மையார் - 24 ஆண்டுகள் பெரியாரை கண்ணும் கருத்துமாக கவனித்து, அவரது இறுதி மூச்சு வரை, பெரியாரின் 94 வயது வரை சேவை செய்து, கழகத்தையும் பெரியாரையும் காப்பாற்றி - தன் மீது விழுந்த பழியை துடைத்தார் ! 

அன்னை மணியம்மையானார் ! !

●  இந்த நூலை படித்த பின்பு நமக்கு தெளிவாக விளங்கும் உண்மை என்னவென்றால் - 

பெரியார் - மணியம்மை திருமணம் என்பது :

★ தாம்பத்தியத்தில் வாழ்ந்து, சேர்த்து, சுகத்தை காண்பதற்கல்ல !

★ தாம் - பத்தியமாய் வாழ்ந்து, சேர்த்த சொத்தை காப்பாற்றுவதற்காகவே ! !

பொ. நாகராஜன். 

பெரியாரிய ஆய்வாளர். சென்னை. 24.03.2022.

********************************************