Saturday, December 21, 2024

பெரியார் எனும் சுய மரியாதையின் அடையாளம் : அ. மார்க்ஸ்

 பெரியார் 5

1969 -1970  ஆம் ஆண்டுகளில் நான் சென்னை மாநிலக் கல்லூரியில் முதுகலைக் கல்வி படித்துக் கொண்டிருந்த போது கல்லூரி மற்றும் விடுதி வளாகங்களில் தந்தை பெரியார் உரை ஆற்றினார். கல்லூரி வளாகத்தில் பேசும்போது மாணவர்களுக்கான முதல் வரிசையில் அமர்ந்து அவரது உரையைக் கேட்கும் பேறு பெற்றவன் நான். 

கல்லூரியில் உரையாற்ற வந்தபோது அவர் தனது மூத்திரப் பையையும் சுமந்து வந்தார். அமர்ந்தவாரே பேசத் தொடங்கிய அவர், “பிள்ளைகளே! முதலில் ஒன்றைச் சொல்ல வேண்டும். எனக்கு ரொம்பவும் உடல் நலமில்லை. திடீர் திடீர் என தாங்க முடியாத வலி வந்து என்னை அறியாமல் கத்தி விடுகிறேன். இன்று நான் பேசும்போது திடீரென அப்படிச் சத்தம் போட்டால் பயப்படாதீங்க…”- என்று கூறி அவர் தன் உரையைத்  தொடங்கியது இன்று என் நினைவுக்கு வருகிறது. அன்று நல்ல வேளையாக அப்படி ஏதும் நடந்துவிடவில்லை. ஆனால் இப்போது அந்தக் காட்சியும் நினைவும் கண்முன் தோன்றி கண்களில் நீர் கசிகிறது. நான் என் நினைவில் இருந்துதான் இதைச் சொல்கிறேன். அப்போது இன்றைப்போல கைபேசிகள் எல்லாம் கிடையாது. 

அடுத்த சில ஆண்டுகளில் அவர் நம்மை விட்டுப் பிரிந்தார்.

அவரது கருத்துக்கள் அத்தனை எளிதாக எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியவை அல்ல. ’கடவுள் இல்லை’ என்பதையும், ‘தாலி’ ஒரு ஆணாதிக்க அடிமைச் சின்னம் என்பதையும் அத்தனை எளிதாக மக்கள் ஏற்றுக்கொள்ள இயலாது. ஆனாலும், அவற்றை ஏற்றுக் கொண்டவர்களும் அப்போது இருந்தனர். அதை ஏற்றுக் கொள்ளாதவர்கள் ஆனபோதிலும் அவரை நேசித்தவர்களும் இருந்தனர். 

தஞ்சை மாவட்டம் ஒன்றில் என் இளமைக்காலம் கழிந்தது. அப்போது நான் படித்த ஒரத்தநாடு அரசுப் பள்ளிக்கு அருகில் நடந்த திராவிடர் கழகக் கூட்டம் ஒன்று இப்போது என் நினைவுக்கு வருகிறது. சுற்று வட்டாரத்தில் உள்ள மிகச் சாதாரணமான எளிய மக்கள் கட்டுச் சோறு கட்டிக் கொண்டு. மாட்டு வண்டிகளில் வந்து இரண்டு நாட்கள் அங்கேயே தங்கி அங்கு பேசப்பட்ட உரைகளைத் தரையில் அமர்ந்து கேட்டுச் சென்ற காட்சியின் நினைவுகள் நிழலாடுகின்றன. 

தனது அரசியலை ஏற்ற மக்களுக்கு அப்படி அவர் என்ன சொன்னார். கடவுளை நம்பாதே என்றார். சுய மரியாதையை இழக்காதே என்றார். 

ஒருமுறை ’பகுத்தறிவுக் கல்வி’ எனச் சொல்கிறீர்களே அதென்ன? - என்கிற கேள்வி முன் வைக்கப்பட்டபோது அவர் சொன்ன பதில் இதுதான்:

“பகுத்தறிவுப் பள்ளிகளை’ வைத்து ’நிர்வாணமான’ சிந்தனா சக்தி தரும் படிப்பைக் கொடுத்து மக்களை எதைப்பற்றியும் எந்தப் பற்றுமற்ற வகையில் செல்லும் வரை சிந்தித்து முடிவுக்கு வரக் கற்பிப்போமே ஆனால்…..” 

என்று போகிறது அவரது கூற்று.

’பகுத்தறிவு’, ‘நிர்வாணம்’ ’பற்றறுப்பு’ ஆகியன பெரியாரியத்தில் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க இயலாதவை. இந்தச் சமூகம் மக்கள் மீது ஏராளமான மூட நம்பிக்கைகளைப் பதிய வைத்துள்ளது. அவற்றின் மீதான நம்பிக்கைகளையும் பற்றுகளையும் துடைத்தெறிந்து நாம் நம்மை, நம் சிந்தனை வெளியை நிர்வாணம் ஆக்கிக் கொள்ள வேண்டும் என்பதுதான். புத்தருக்கு மிக நெருக்கமானவர் பெரியார். ‘நிர்வாணம்’ எனும் கருத்தாக்கம் புத்தர் நமக்களித்த பெரும் கொடை. ஆழமான ஒரு சிந்தனை. 

கல்வி என்பது ”எந்தப் பற்றும்’ இல்லதவர்களாக மனிதர்களை ஆக்க வேண்டும்” - எனப் பெரியார் சொல்வது மிக மிக ஆழமான ஒரு கருத்து. எதெல்லாம் உன்னதமானவை என நம் சாத்திரங்களிலும், பொதுப் புத்தியிலும் முன்வைக்கப் படுகின்றனவோ அவை எல்லாவற்றில் இருந்தும் விடுதலை பெறுவதே நிர்வாணம். ஆம். கல்வி என்பது ஒரு வகையில் சமூக ‘உண்மைகளில்’ இருந்து விடுதலை பெறுவதே. அதாவது சமுகம் நம் மீது பதித்துள்ள பொய்யான மூட நம்பிக்கைகளிலிருந்து விடுதலை பெறுவதே.  பகுத்தறிவில்லாத எந்த ஜீவராசியும் தன் இனத்தை வருத்தி வாழ்வதில்லை. தன் இனத்தின் ஒரு சார்ரின் உழைப்பில் வாழ்வதில்லை. அதாவது உழைப்பைச் சுரண்டுவது இல்லை என்பதுதான்.

“ஒழுக்கம்” என்பதையும் கூடப் பெரியார் ஒரு "சூழ்ச்சியான கற்பிதம்” என்பார். 

'ஒழுக்கம்’ என்பதன் சமூக வரையறை எல்லோருக்கும் ஒன்றாக இல்லை என்பதை அவர் சுட்டிக்காட்டுவார்.  “தாசிக்கு ஒழுக்கம் ஒரு புருஷனையே நம்பி ஒருவனிடத்திலேயே காதலாய் இருக்கக் கூடாது என்பது. குலஸ்திரீ என்பவளுக்கு ஒழுக்கம் அயோக்கியன் ஆனாலும்,  குஷ்டரோகியானாலும் அவனைத் தவிர வேறு யாரையும் மனசால் கூட சிந்திக்கக் கூடாது என்பது...” என இப்படிப் பெரியார் சமூகப் பொதுப்  புத்தியில் நிலவும் மதிப்பீடுகள் குறித்து அவர் நிறையச் சொல்லுவார். முதலாளிக்கு ஒழுக்கம் தொழிலாளியைச் சுரண்டி பெரிய அளவில் லாபம் சம்பாதிப்பது. தொழிலாளிக்கு ஒழுக்கம் முதலாளிக்கு துரோகம் செய்யாமல் இருப்பது. பசுவை இரட்சிக்க வேண்டும் என்பது ஒருவர் நம்பிக்கை ஆனால்  இன்னொருவருக்கு பசுவைப் புசிக்கலாம் என்பதும் ஏற்புடைய ஒன்றுதான். கற்பு முறை ஒழிந்தால்தான் பெண்களுக்கு விடுதலை என்பார் பெரியார். இப்படிச் சமூகத்தில் நிலவும் நம்பிக்கைகள், வழமைகள், பொதுக் கருத்துக்கள், சாத்திரங்கள் என எல்லாவற்றைக் குறித்தும் ஆழமான சிந்தனைகளை முன்வைத்தவர் பெரியார்.

இரண்டு

ஒன்றை நாம் புரிந்துகொள்வது அவசியம். இப்படியெல்லாம் சொல்வதன் ஊடாகப் பெரியார் கல்விக்கு எதிரானவர் என்பதாகக் கருத வேண்டியதில்லை. இன்றைய கல்வி முறையில் உள்ள சிக்கல்கள், அவை மக்களுக்கான விடுதலைக் கல்வியாக அமையவில்லை என்பதை எல்லாம் இப்படிச் சுட்டிக்காட்டிய அதே நேரத்தில் அடித்தள மக்களின் கல்விமுறை, இட ஒதுக்கீடு, வேலை வாய்ப்பு ஆகியவற்றில் அக்கறை உள்ளவராகவும். அடித்தள மக்களின் கல்வி உரிமைக்காகவும், இட ஒதுக்கீடு முதலியவற்றிற்காகவும் களத்தில் நின்றவராகவும் அவர் இருந்தார் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. இந்தக் கல்வி முறையின் போதாமையைச் சுட்டிக் காட்டுவதே அவர் நோக்கம். கல்வியின் ஆக முக்கியமான நோக்கம் கற்பவர்களைச் சுய மரியாதை உள்ளவர்களாக ஆக்குவது. அதற்கு இன்றைய கல்வி முறை பயனற்றதாக மட்டும் அல்ல அதற்கு எதிராகவும் உள்ளதைச் சுட்டிக் காட்டத்தான். 

கடவுள் நம்பிக்கை குறித்த அவரது கருத்தும் நுணுக்கமான ஒன்று. 

“நான் ஒரு நாத்திகனல்ல. தாராள எண்ணமுடையவன். நான் ஒரு தேசியவாதியுமல்ல. தேசாபிமானியுமல்ல. ஆனால் தீவிர ஜீவரஷா எண்ணமுடையவன். எனக்கு சாதி என்பதோ, சாதி என்பதன் பெயரால் கற்பிக்கப்படும் உயர்வு தாழ்வுகளோ கிடையாது.”  - இது பெரியார் தன்னைப்பற்றி சொல்லிக் கொண்டது.

பெரியாரை ஆக இறுக்கமான ஒரு நாத்திகர் என நம்பிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒருவேளை அவரது இந்தக் கூற்று அதிர்ச்சியாக இருக்கக் கூடும். இது ஏதோ அவர் விளையாட்டாய்ச் சொன்னதல்ல. படு ‘சீரியசாகச்’ சொன்னது. 

கடவுள் இருக்கா இல்லையா என்பதெல்லாம் ஒரு வெட்டி வாதம். அதற்கு முடிவே கிடையாது. இருப்பதாக நம்புகிறவன் இல்லை எனச் சொல்பவனையும், இல்லை என்பவன் இருக்கிறது எனச் சொல்பவனையும் ஒருவனை ஒருவன் முட்டாள் எனச் சொல்லிக் கொண்டே காலம் கழிப்பதுதான்  என்பதே பெரியாரின் கருத்து. 

ஒருவர் கேட்டார்: 

’உங்கள் முன் கடவுள் தோன்றி இப்போது என்ன சொல்கிறாய் எனக் கேட்டால் என்ன பண்ணுவீர்கள்?’ 

பெரியார் சொன்ன பதில்: “அப்படி கடவுளே என் முன்னால் வந்து நின்றால் அவரை கும்பிட்டுட்டுப் போறேன்..”

பெரியார் லேசுப்பட்டவர் அல்ல. “மக்களுக்கு ஆத்திகம் நாத்திகம் என்பதற்குப் பொருள் தெரிவதே இல்லை. நாத்திகன் என்று சொன்னால் கடவுள் இல்லை என்று சொல்கிறவன் அல்ல. இருக்கிறது என்று நான் ஒப்புக்கொள்ளவும் இல்லை. புராண, இதிகாச, வேத, சாஸ்திரங்களை ஒப்புக் கொள்ளாதவர் களையே பார்ப்பனர் நாத்திகர் என்று குறிப்பிடுகின்றனர்” – என்பதுதான் இது குறித்த பெரியாரின் விளக்கம். 

“சமூக சீர்திருத்தம் என்றால் ஏதோ அங்கும் இங்கும் ஆடிப்போன, சுவண்டுபோன, இடிந்துபோன, பாகங்களைச் சுரண்டி, கூறுகுத்தி, சந்துபொந்துகளை அடைத்துப் பூசி மெழுகுவதுதான் என்று அநேகர் நினைத்திருக்கிறார்கள். ஆனால் நம்மைப் பொருத்தவரை நாம் அம்மாதிரித் துறையில் உழைக்கும் ஒரு சமுதாய சீர்திருத்தக்காரன் அல்லன் என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கிறோம். மற்றபடி நாம் யார் என்றால், என்ன காரணத்தினால் மக்கள் சமுதாயம் சீர்திருத்தப்பட வேண்டிய நிலைக்கு வந்தது என்பதை உணர்ந்து, உணர்ந்தபடி மறுபடி அந்நிலை ஏற்படாமலிருப்பதற்கு நம்மால் இயன்றதைச் செய்யும் முறையில் அடியோடு பேர்த்து, அஸ்திவாரத்தையே புதுப்பிப்பது என்கிறதான தொண்டை ஏற்றுக் கொண்டிருக்கிற படியால், சமுதாய சீர்திருத்தம் என்பதைப் பற்றி மற்ற மக்கள் அநேகர் நினைத்திருந்ததற்கு நாம் மாறுபட்ட கொள்கைகளையும், திட்டத்தையும், செய்கையையும் உடையவராய்க் காணப்பட வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

இதனாலேயேதான் பலவற்றில் மக்கள் உண்டு என்பதை இல்லை என்றும், சரி என்பதைத் தப்பு என்றும், தேவை என்பதை தேவையில்லை என்றும், கெட்டது என்பதை நல்லது என்றும், காப்பாற்றப்பட வேண்டியது என்பதை ஒழிக்க வேண்டும் என்றும், பலவாறாக மாறுபட்ட அபிப்பிராயங்களைக் கூறுபவராக, செய்பவராக காணப்பட வேண்டிய நிலையில் இருக்கின்றோம்.”

அத்தோடு நிறுத்தவில்லை. பெரியார் தொடர்வார்: 

”ஆனால் நம்போன்ற இப்படிப்பட்டவர்கள் பழிக்கப்படாமலும் குற்றம் சொல்லப்படாமலும் இருப்பதும் உலகில் நல்ல பெயர் சம்பாதிப்பதும், மதிக்கப்படுவதும், அருமை என்பது மாத்திரம் (எனக்கு) நன்றாகத் தெரியும்.”

பகுத்தறிவுக் கல்வி எனச் சொல்கிறீர்களே அதென்ன? - என்கிற கேள்விக்குப் பெரியார் சொன்ன பதில்: “இந்த நாட்டில் இன்று கல்வி என்னும் பெயரால் பலகோடிக் கணக்கான ரூபாய்களைச் செலவு செய்து பல்கலைகழகம், கல்லூரி, உயர்தரப்ப பள்ளி என்பதாகப் பல்லாயிரக் கணக்கான பள்ளிகளை வைத்து கல்வி கற்பிப்பதைவிட, பகுத்தறிவுப் பள்ளிகளை’ மாத்திரம் வைத்து நிர்வாணமான சிந்தனா சக்தி தரும் படிப்பைக் கொடுத்து மக்களை எதைப்பற்றியும் எந்தப் பற்றுமற்ற வகையில் செல்லும் வரை சிந்தித்து முடிவுக்கு வரக் கற்பிப்போமேயானால்...” - என்பதாகப் பெரியாரின் ‘பகுத்தறிவுப் பள்ளியின்’ வரையறை செல்கிறது. பெரியாரின்  ‘நிர்வாணம்’ எனும் கருத்தாக்கத்தை இப்படி நாம் பல்வேறு திசைகளின் ஊடாக நாம் புரிந்து கொள்ள வேண்டும். 

இரண்டு அம்சங்களை நாம் இதில் கவனிக்க வேண்டும்:

1. கல்வி ஒருவருக்கு நிர்வாணமான சிந்தனா சக்தியை அளிக்க வல்லதாக இருக்க வேண்டும்.

2. கற்பவரை அது எந்தப் பற்றுமற்ற நிலையிலிருந்து சிந்திக்கத் தக்கவராக ஆக்க வேண்டும்.

எனவே கல்வியின் நோக்கம் ஏதொன்றையும் திணிப்பது என்பதைக் காட்டிலும், ஏற்கனவே இந்தச் சமூகத்தால் திணிக்கப்பட்டவற்றிலிருந்து ஒருவரை மீட்டு நிர்வாணமாக்குவதே. எத்தகைய முன்முடிவுகளும் பற்றுகளுமின்றி ஒன்றை அணுகும்போதே சரியான முடிவுக்கு வர இயலும். எனவே முன்முடிவுகளைத் துறந்து நம்மை  நிர்வாணமாக்கிக் கொள்வது கற்றலின் முதற் படி.

மொத்தத்தில் அவர் சொல்வது இதுதான். இந்தச் சமூகம், உன் பெற்றோர் உட்பட, உனக்குச் சொல்லி வைப்பதை எல்லாம் காதில் வேண்டுமானால் வாங்கிக் கொள்ளலாம். ஆனால் அப்படியே புத்தியில் ஏற்காதே என்பதுதான். 

மூன்று

இப்படி ஒரு சுய சிந்தனையாளனாக நம் முன் வாழ்ந்து மறைந்தவர் பெரியார், மக்களுக்கு, குறிப்பாகத் தமிழ் மக்களுக்குச் சுய மரியாதையையும், சுய சிந்தனையையும் ஊட்டுவதைத் தன் வாழ்நாள் பணியாக முன்வைத்து நீண்ட காலம் நம்மோடு வாழ்ந்து தனது 94 வது வயதில் மறைந்தவர் அவர். தனது கருத்துக்களை அவ்வப்போது எழுத்தாக்கி இன்றளவும் நமக்குத் தந்து சென்றுள்ளவர். இன்று உலகளவிலும், இந்திய தமிழ்ச் சூழல்களிலும் பல்வேறு மட்டங்களில் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக மிகப் பெரிய அளவில் அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. .

பெரியார் உயிருடன் இருந்த போதும் பல்வேறு எதிர்ப்புகளையும் எதிர்கொண்டுதான் வாழ்ந்தார். அவர் மறைந்தபின்னும் இப்படியான எதிர்ப்புகளையும் அவதூறுகளையும் எதிர்கொள்பவையாகவே அவரது கருத்துக்கள் உள்ளன.

பெரியார் குறித்து ஏராளமாகப்பேசலாம். சுயமரியாதையுடன் வாழ வேண்டும் எனும் கருத்துடைய யாரும் இதை எளிதாகப் புரிந்துகொள்வார்கள். பெரியாரைக் கொண்டாடுவார்கள்.


(இப்போதைக்கு முற்றும். தேவையானால் இன்னும் இன்னும் தொடரும்)

Thursday, January 25, 2024

மாவோவின் நெடும்பயணம்- 3

 மாவோவின் நெடும்பயணம்- 3

"கோமின்டாங்"

1912 இல் மஞ்சு அரசகுலம் கவிழ்க்கப்பட்டு சீனா முதன் முறையாகக் குடியரசாகப் பிரகடனப்படுத்தப்பட்டபோது, ஒரு பழமை வாய்ந்த நாட்டுக்கு அப்போது அவசியமாயிருந்த நவீன நிர்வாகத்தை வழங்குவதில் தலைமை ஏற்க மிகவும் ஆயத்தமாக இருந்ததாகத் தோன்றிய அரசியல் அமைப்பு "கோமின்டாங்"தான்.

"கோமின்டாங்" என்றால் நேரடிப் பொருளில் 'மக்கள் கட்சி' என்பதாகும். ஆனால் அது மேற்கத்திய மொழிகளில் "தேசியவாதக்கட்சி" என்று வழக்கமாக மொழி பெயர்க்கப்படுகிறது.

இருபதாம் நூற்றாண்டில் சீனாவின் அரசியல் திசைவழியைத் தீர்மானிப்பதில் ஈடுபட்டிருந்த பல்வேறு தனிநபர் குழுக்கள், இராணுவக் குழுக்கள் போன்றவற்றிலிருந்து வேறுபட்டிருந்த கோமின்டாங் கட்சி முதலில் முன்னணிக் கட்சியாக ஆகியது.

சீனக் கிராமப்புறங்களில் இருந்த சீனப் பொதுவுடைமை அதிகாரத்தளங்களை அழித்து அவர்களை விரட்டுவது கிட்டத்தட்ட கோமின்டாங்குகளின் வெற்றியாக இருந்தது. அதுவே 1934இல் நெடும் பயணத்திற்கு இட்டுச் சென்றது.

கோமின்டாங்கின் தோற்றம் 1894-க்கு முந்திச் செல்கிறது. அப்போதுதான் ஒரு வெற்றிகரமான 27 வயது மருத்துவரான சன்-யாட்- சென் தனது மருத்துவத் தொழிலைத் தூக்கியெறிந்துவிட்டு முழுநேரப் புரட்சிகர அரசியலில் நுழைந்தார்.

ஒரு சில உறவினர்களுடனும் நண்பர்களுடனும் அவர் "சிங்சுங்கய் அல்லது சீனாவின் புத்துயிர்ப்பு சங்க"த்தை உருவாக்கினார். அது செயலூக்கமற்ற மஞ்சூக்களைத் சாக்கியெறிவதைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தது. 

சன், ஒரு அசாதாரணப் பண்பு நலன்களைக் கொண்ட 'கான்டனிய அறிவுஜீவி' ஆவார். அவர் கான்டனிலும் வியர்காங்ல் ஆங்கிலேய மருத்துவப் பேராசிரியர்களால் பயிற்றுவிக்கப்பட்டவர்.

மேற்கத்திய நாடுகளுக்கு இணையாக சீனா பலம்பெற வேண்டுமானால், மேற்கத்திய அறிவியல் மற்றும் சமூக முன்னேற்றத்தை சீனா எட்டவேண்டுமானால் எண்ணற்ற மாறுதல்களைத் தூண்டிவிட வேண்டியிருக்கும் என்று அவர் நன்கு அறிந்திருந்தார்.

அவருடைய குழுவுக்கு ஹாங்காங்கிலும் மலேயாவிலும் இன்னும் தென் கிழக்காசியாவின் பிற பகுதிகளிலுமிருந்த கடல்கடந்த சீன வணிகர்கள் நிதியளித்தார்கள்.

அவர்களும்கூட மேற்கத்திய ஏகாதிபத்தியங்களுக்கும், பலவீனமான முதுகெலும்பற்ற மஞ்சு பேரரசுக்கும் உள்ள இடைவெளியைப் பற்றிக் கவலைப்பட்டார்கள்.

சன் புகழ்பெற்ற மூன்று கொள்கைகளைப் போதித்தார். 

சீனர்களின் குறுகிய பிராந்திய மற்றும் குழு விசுவாசத்தை அகற்றுவதற்கான தேசியவாதம், கிராமப்புறங்களில் நிலவும் சுயாட்சி நடைமுறையை தேசிய வாழ்க்கைக்குக் கொண்டுவரும் ஜனநாயகம், சாதாரண மனிதனின் பொருளாதாரத் தரத்தை முன்னேற்றுவதற்கான பொருளாதார வளர்ச்சி ஆகியவையே அவை.

தனிப்பட்ட முறையில் களங்கமற்ற சன், ஒரு எளிய ஏமாற்றமடைந்த மனிதராக இறந்தார். 

அவரது பங்களிப்புகள் தேசிய மறு கட்டமைப்புக்கான நிர்வாக அம்சங்களாக இருந்ததைவிட புரட்சிக்கே மிகவும் உகந்தவையாக இருந்தன. சீனக்குடியரசுப் புரட்சி பற்றிய நெருங்கிய அறிவு பெற்றிருந்த- அமெரிக்க வரலாற்றாசிரியர் ஒருவர், 'அவரது பலம் ஆக்கபூர்வமான அரசியல்வாதியுடையதல்ல, சிலை வழிபாட்டையும் மூடநம்பிக்கையையும் ஒழிப்பவருடையதாக இருந்தது' என்று எழுதினார்.' 

லட்சியவாதமும் உற்சாகமும் மிக்க சன், புரட்சியின் வெகுஜன ஈர்ப்பை மிகையாக மதிப்பிட்டார். மேலும் தனது அமைப்புக்கு ஒரு உண்மையான அதிகார அடித்தளத்தை நிறுவத் தவறினார்.

அவருடைய குழு பேரரசனுக்கு எதிரான ஒரு கலகத்தை நடத்தி ஆட்சியைக் கைப்பற்றத் திரும்பத் திரும்ப முயன்றது. ஆனால் வெற்றியடைய வில்லை. அதன் காரணமாக சன் தானே நாட்டைவிட்டு வெளியேறி ஐரோப்பாவிற்குச் செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டார்.

 'குத்துச்சண்டையர் கலகத்தின்' போது அவரைப் பின்பற்றியவர்கள் க்வாங்டங் மாகாணத்தில் அரசின் மீது ஒரு தாக்குதலைத் தொடுத்தனர். அது வெற்றிபெறவில்லை.

1905இல் அவரது குழு டோக்கியோவில் 'டுங்மெங்குய்' அல்லது 'கூட்டணி சங்கம்' என்ற பெயரில் மீண்டும் ஒருங்கிணைக்கப்பட்டது. அது ஜப்பானில் இராணுவ அறிவியல் பயின்றுவந்த பல சீனர்களைக் கவர்ந்தது (அவர்களில் ஒருவர் சியாங் கே-ஷேக்).

1911-12 இல் புரட்சி தொடங்கியபோது சன் அமெரிக்காவில் இருந்தார். இரண்டு மாதங்கள் வரை அவரால் சீனாவை வந்தடைய முடியவில்லை.

இப்பொழுது 'கோமின்டாங்' அல்லது 'புரட்சிகரக்கட்சி' என்று அழைக்கப்பட்ட அவரது குழு போரில் முன்னணியில் இருந்தது.

புதிய கலக அரசாங்கத்தின் தற்காலிகத் தலைவராக சன் இதர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆனால் சன்யாட்- சென்னுக்கும் அவரது நண்பர்களுக்கும் கடமைப்பட்டிராத, பேரரசு எதிர்ப்புப் போரணியில் கலந்து கொண்ட தனிநபர்களும் குழுக்களும் இருந்தனர். இவர்களில் ஒருவர் பேரரசு இராணுவத்தின் முன்னாள் படைத்தலைவர் யுவான் ஷிஹ்-காய் ஆவார். இவர் வடக்குப் பகுதியைச் சேர்ந்த உயர்குடியைச் சார்ந்தவர்; மஞ்சு அரச குடும்பத்தோடு மோதலில் ஈடுபட்டிருந்தவர்: வெளிப்படையாகவே வரம்புக்குட்பட்ட முடியாட்சி பற்றியும் பிற சீர்திருத்தங்கள் பற்றியும் பேசியவர். 

சன் தனது கட்சிக்கு 'கோமின்டாங்' என்று மறுபெயரிட்டார். ஏனெனில் புரட்சி அடையப்பட்டு விட்டது. தேசிய ஒற்றுமை இப்பொழுது உடனடி முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியதாக இருந்தது. மேலும் மஞ்சு எதிர்ப்பு சக்திகளிடையே ஒரு ஐக்கிய முன்னணியை நிலைநாட்டும் பொருட்டு அவர் தம்மிச்சையாகவே தமது தலைமைப் பதவியை யுவானுக்கு ஒப்படைத்தார்.

ஆனால் யுவான் கூட்டணியின் மீது மேலாதிக்கம் செலுத்த முனைந்தார். மேலும் பல்வேறு சீர்திருத்தவாதிகளும் சீன விவகாரங்கள் நடத்தப்பட வேண்டிய முறைகள் பற்றி மிகவும் மாறுபட்ட கருத்துகளைத் தாம் வளர்த்துக் கொண்டு விட்டதை அறிந்தனர். பதட்டம் விரைவாக சீறியெழுந்தது. 

யுவான் தன்னைத்தானே பேரரசனாக அறிவித்துக் கொள்ள முடிவுசெய்தபோது, அவர் விரைவிலேயே வடக்கிலிருந்த பலம் வாய்ந்த போட்டியாளர்களால் வீழ்த்தப்பட்டார். 1917 வாக்கில் ஜப்பானின் கூட்டணியுடன் (நிதியளிக்கப்பட்டு) வடபகுதி யுத்தப் பிரபுக்களின் ஒரு குழுவின் கட்டுப்பாட்டில் பீஜிங் இருந்தது. அப்போது சன் யாட்-சென் தெற்கு மாகாணத்தின் தலைமைத் தளபதியாக அமர்ந்திருந்தார். சீனா பிரிக்கப்பட்டது. ஆனால் தேச முழுவதுமாக இருந்த அளவுக்கு சன் தெற்குப் பகுதியில் வெற்றிகரமாக இல்லை. அவரால் தெற்குப் பகுதிப் படைத்தலைவர்களை தனது உத்தரவுகளைப் பின்பற்றுவதற்கு இணங்க வைக்க முடியவில்லை.

மேலும் 1921இல் அவர்களில் ஒருவர் க்வாங்டாங் மாகாணத்தில் கைப்பற்றினார். வேறு எந்தப் பகுதியிலிருந்தும் பல்வேறு வடக்கு யுத்தப் பிரபுக்கள் மற்றும் அந்நிய சக்திகளிடமிருந்து சன் உதவி நாடவேண்டியிருந்தது.

இந்தக் கட்டத்தில் ஒரு, உண்மையான நட்புரீதியான அந்நிய உதவிக்கரம் சீனாவின் நன்றியறிதலைப் பெற முடிந்திருக்கலாம். ஆனால் பெரும்பாலான அந்நிய நாடுகள், இன்னும்கூட சீன அறிவுஜீவிகளால் நம்பப்பட முடியாதவையாக இருந்தன.

 1917இல் சீனக்குடியரசு, ஜெர்மன் மீது போரை அறிவித்திருந்தபோதிலும் வெர்செய்ல்ஸ் கூட்டணி வெற்றியாளர்கள் ஷான்டுங் மாகாணத்தில் முன்னாள் போது, 'சோவியத் யூனியனின் அனுபவம் வாய்ந்த தலைவர்கள் நமது கட்சியுடன் சேர்ந்து பணியாற்ற ஆர்வம் கொண்டுள்ளனர், அனுபவ மற்ற பொதுவுடைமைக் கட்சி மாணவர்களுடனல்ல' என்று பொதுவுடைமை அகிலத் தூதுவர்களில் ஒருவரது சொற்களை, அநேகமாகத் திரும்பவும், சன் குறிப்பிட்டார்.

சன் தற்போது தனது கட்சியையும் அதன் இராணுவத்தையும் சோவியத் வழியில் மறு ஒழுங்கமைப்பு செய்யத் தொடங்கினார். அவரது இளம் அதிகாரிகளில் ஒருவரான சியாங் கே-ஷேக் இராணுவப் பயிற்சிக்காக மாஸ்கோவுக்கு அனுப்பப்பட்டார்.

பொரோடின் என்று அறியப்பட்ட மிகாயில் மார்க்கோவிட்ச் குருஜென்பெர்க், சன்னுக்கு அவரது தாயகத்தில் உதவ, ரசியர்களால் அனுப்பிவைக்கப்பட்டார்.

1924இல் கோமின்டாங்கின் முதலாவது பேராயம் அதிகாரபூர்வமான முறையில் மூன்று கோட்பாடுகளுக்கு மறுவிளக்கம் அளித்தது. நிலவுடைமையைச் சமப்படுத்துதல், தொழிற்துறையின் மீதான அரசுக் கட்டுப்பாடு, மற்றும் பல்வேறு சமூக சீர்திருத்தங்களை அது உள்ளடக்கியிருந்தது, பின்னர் அந்த ஆண்டின் பிற்பகுதியில் பொரோடின் மற்றும் பொதுவுடைமை அகிலத் தூதுவரான (கேலென் என்று அறியப்பட்ட) வாசிலி ப்ளூச்சர் இருவரும் கோமின்டாங் வேம்போவா இராணுவக்கழகத்தை உருவாக்கினர். அதில் சன்னின் இராணுவம் பயிற்சியளிக்கப்படவிருந்து.

சீனப்பொதுவுடைமையர்களுக்கும் கோமின்டாங்குக்கும் இடை யில் முதலாவது ஐக்கிய முன்னணி என்று தற்போது அறியப்பட்ட ஏற்பாட்டிற்கு சியாங் கே-ஷேக் தலைவராகவும் செள-என்-லாய் அதன் அரசியல் தலைமையின் துணைத்தலைவராகவும் இருந்தனர். இந்த நிகழ்வு இந்தக் காலகட்டத்தின் சின்னமாக இருந்தது.

நெடும் பயணத்தின்போதும் அதற்குப் பிறகும் மிகுந்த கசப்புணர்வுடன் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக்கொண்ட, படைத்தலைவர்களில் பலர் இந்தப் நிறுவனத்தின் பட்டதாரிகளாக இருந்தனர்.

ஆனால் சன் 1925 இல் ஒரு ஏமாற்றமடைந்த மனிதராக இறந்துபோனார்; கோமின்டாங்கில் வாரிசுரிமைக்கான போராட்டம் தொடங்கியது. சன் இல்லாத நிலையில், அவரது இடதுசார்பு மற்றும் வலதுசார்பு ஆதரவாளர்கள் கட்சியில் தொடர்ந்து நீடிப்பதைக் கடினமாக உணர்ந்தனர். பொரோடினே இருதலைக்கொள்ளி எறும்பின் நிலையில் இருந்தார். 

ஒரு குழுவின் தொடக்கத்தில் சியாங் கே-ஷேக் இடம்பெற்றிருந்த ஒரு குழுவிற்கு அவர் தனது ஆதரவைத் தெரிவித்தார்.

இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்ட வரலாறு- 2

இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்ட வரலாறு- 2

தீக்குளித்த தியாகிகள்:

தமிழக வரலாற்றிலேயே- ஏன், உலக வரலாற்றிலேயே- இந்நாள் வரை கேட்டறியாத கண்டறியாத தியாக நிகழ்ச்சி 1965 சனவரி 26ஆம் நாள் நடந்தது.

சின்னச்சாமி:

திருச்சி மாவட்டம் கீழப் பழுவூர் என்ற சிற்றூரைச் சேர்ந்த சின்னச்சாமி என்ற தமிழ்மகன், அன்னை தமிழைக் காக்கத் தனக்குத்தானே தீயிட்டுக் கொண்டு உயிர் துறந்தார். தீக்குளித்த சின்னசாமிக்கு வயது 27. திருமணமானவர். திராவிடச் செல்வி என்ற அருமை மகள் உண்டு. கழகத்தின் பல போராட்டங்களில் பங்கெடுத்துக் கொண்டவர். கழக வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டு உழைத்தவர்.

இந்தி மொழி ஆட்சி மொழியாவதைக் கண்டு சகிக்காமல் தன் உடம்பில் பெட்ரோல் ஊற்றித் தீயிட்டுக் கொண்டு மடிந்தார். இப்படி இதற்கு முன்பு தாய் மொழிக்காகத் தன்னைத் தானே சாம்பலாக்கிக் கொண்டவர் வேறு யாரும் இலர். மொழிப்போரில் இப்படி தன்னைத் தானே தூக்கி நெருப்பில் போட்டுக் கொண்ட முதல் மனிதன்- முதல் வீரன்- முதல் தியாகி -சின்னச்சாமி ஆவார்.

சிவலிங்கம்:

கழகம் அறிவித்த துக்க நாளான சனவரி 26-ஆம் நாள் காலை, சிவலிங்கம் தன் உடலில் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு, தீயிட்டுக் கொண்டார். தீயில் கருகி அவர் மாண்ட கோரக் காட்சியைக் கண்ட ஆண்களும் பெண்களும் ஓ வெனத் கதறி அழுதார்கள்.

இவர் சென்னை கோடம்பாக்கம் விசுவநாதபுரத்தைச் சேர்ந்தவர். தி.மு.கழகத்தின் தீவிர உறுப்பினர். சென்னை மாநகராட்சியில் ஏவலராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

அரங்கநாதன்:

இந்தியின் ஆதிக்கத்தால் மனம் வெதும்பிய விருகம்பாக்கம் அரங்கநாதன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீயிட்டு மடித்தார்.

வீரப்பன்:

கடந்த சில நாட்களாக நடந்து வந்த கொடுமைகளைக் கண்டு மனங்கலங்கிய வீரப்பன். பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீயில் கருகிச் செத்தார். திருச்சி மாவட்டம் ஐயம்பாளையம் என்னும் கிராமத்துப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றியவர் அவர்.

முத்து:

விவசாயியான முத்து, தி.மு.க.வின் அனுதாபி. இந்தியை எதிர்க்கத் தன் உடலில் தீயிட்டுக் கொண்டார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிப்போய்த் தீயை அணைத்தனர். மருத்துவ மனைக்குத் தூக்கிச் சென்றும் அவர் பிழைக்கவில்லை-மாண்டு போனார்.

கோவை மாவட்டம் சத்தியமங்கலம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் அவர்.

மாயவரம் ஏ.வி.சி .சுல்லூரி மாணவரான சாரங்கபாணி, கல்லூரித்திடலில் தன்மீது மண்ணெண்ணெய் ஊற்றித் தீயிட்டுக் கொண்டு, "இந்தி ஒழிக! தமிழ் வாழ்க!" என்ற முழக்க மிட்டவாறு சுருண்டு விழுந்தார். அந்த முழக்கத்தைக் கேட்ட மாணவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயன்றனர். குற்றுயிராக இருந்த அவரை மருத்துவமனையில் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். "தமிழ்த் தாய்க்கு என் உயிரைத் தந்து விட்டேன்!" என்று முணுமுணுத்தவாறு அவர் உயிர் பிரிந்தது.

சிதம்பரத்தில் மாணவர் பலி!

அண்ணா மலை நகரில் நாலாயிரத்துக்கு மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் ஊர்வலம் சென்றார்கள். போலீசார் சுட்டதில் இராசேந்திரன் என்று கல்லூரி மாணவனின் நெஞ்சிலே குண்டு பாய்ந்தது. அவன் துடிதுடித்து இரத்த வெள்ளத்தில் விழுந்து அங்கேயே உயிரை விட்டான்.

(கே.ஜி.இராதாமணாளன் எழுதிய 'திராவிட இயக்க வரலாறு' என்னும் நூலில் இருந்து)

1965 இந்தி மொழி திணிப்பு எதிர்ப்புப் போராட்ட வரலாறு...1

1965 இந்தி மொழி திணிப்பு எதிர்ப்புப் போராட்ட வரலாறு...1

ஆட்சி மொழிச் சட்டத்தால் கொந்தளிப்பு!

பாராளுமன்றத்தில் 1963 ஏப்ரல் 13இல் உள்துறை அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரி ஆட்சி மொழி மசோதாவைத் தாக்கல் செய்தார்.

1965 சனவரி 26ஆம் நாள் முதற்கொண்டு இந்தி மொழி மட்டுமே ஆட்சிமொழியாக இருக்கும் என்று அறிவிக்கும் மசோதா ஆகும் இது. அதன்பிறகு அரசாங்கத்தின் ஆணைகள் அனைத்தும் இந்தி மொழியிலேயே வெளியாகும். எல்லாநடவடிக்கைகளும் இந்தியிலேயே நடக்கும். இவை மசோதாவின் முக்கிய விதிகளாகும்.

இம்மசோதாவின் மூன்றாவது விதியின் படி ஆங்கிலத்தின் இடத்தை இந்தி பூர்ணமாக ஆக்கிரமித்துக் கொள்கிறது. இதனால் இந்தி பேசாத மக்களுக்கு நிரந்தரத் தீங்கு ஏற்படும். இந்தி ஆதிக்கத்துக்கு அவர்கள் அடிமைகளாக வாழ நேரிடும்.

டில்லி மேலவையில் அறிஞர் அண்ணாவும் மக்கள் அவையில் நாஞ்சில் மனோகரனும், க. இராசாராமும் இம்மசோதாவைக் கண்டித்துப் பேசினார்கள்.

எதிர்ப்பை எல்லாம் துச்சமென உதறித் தள்ளிவிட்டுக் காங்கிரசு அரசு இம்மசோதாவை நிறைவேற்றி விட்டது.

இம்மசோதாவைக் கண்டித்துச் சென்னைக் கடற்கரையில் 1963 ஏப்ரல் 29ஆம் நாள் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்று நடை பெற்றது. ஆட்சி மொழிச் சட்டத்தைக் கண்டித்துப் பல கட்சித் தலைவர்கள் பேசினார்கள்.

கடைசியாகப் பேசிய அண்ணா, "ஆட்சி மொழி மசோதா மக்களின் எண்ணத்துக்கு மாறாக நிறைவேறிவிட்டது. தென்னக மக்கள் இதைத் தடுத்தே தீர வேண்டும். தமிழ் நாடெங்கும் அதற்கான கிளர்ச்சியில் மக்கள் ஈடுபடவேண்டும். இந்த அக்கிரமத்தைத் தடுத்து நிறுத்த நாம் போர்க்கோலம் பூண வேண்டிய காலம் வந்துவிட்டது என்பதை உணருகிறேன். அந்த உணர்வு ஒவ்வொருவர் மனதிலும் உருவாக வேண்டும் என்று விரும்பி வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.

ஆட்சி மொழிச் சட்டத்தை எதிர்த்துப் போராட்டம் நடத்துவது என்று கூட்டம் முடிவு செய்தது. 

எரிப்புப் போராட்டம்!

சென்னையில் இந்தி எதிர்ப்புப் பொதுமாநாடு 1963 அக்டோபர் 13-ஆம் நாள் நடைபெற்றது. அறிஞர் அண்ணா தலைமை வகித்தார்.

மாநாடு தொடங்குவதற்கு முன்பு மாபெரும் ஊர்வலம் ஒன்று நடைபெற்றது. மாநாட்டில் தலைவர்கள் அனைவரும் பேசிய பின்பு அண்ணா போராட்டத்திட்டங்களை அறிவித்து, உணர்ச்சி மிகு பேருரை நிகழ்த்தினார்.

அண்ணா பேசியதாவது:

திராவிட முன்னேற்றக் கழகம் போராட்டங்களுக்காக அலைந்து திரியாது. போராட்டம் நடத்த வேண்டிய நிலை வந்தால் சும்மா இருக்காது.

இந்த மாநாடு வெறும் மாநாடு அல்ல! இந்த நாட்டிற்கு வந்த கேட்டினை விளக்கவும், அலசி ஆராய்ந்து முடிவெடுக்கவும் கூட்டப்பட்ட மாநாடு ஆகும்.

தி.மு. கழகத்தினால் நடத்தப் படும் இந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம்- இரண்டு வகையில் நடைபெறும்.

ஒன்று அரசியல் சட்டத்தின் மொழிப்பிரிவான 37 வது விதியைப் பகிரங்கமாக அறிவித்துவிட்டுப் பொது இடத்தில் கொளுத்துவது, மற்றொன்று அரசாங்க அலுவலகங்களிலும், இந்திப் பிரச்சார சபைகளிலும் மறியல் செய்வது.

இந்தப் போராட்டங்கள் இரண்டையும் ஐந்து ஐந்து பேராக நடத்திச் செல்வார்கள்.

1963 நவம்பர் திங்கள் 17-ஆம் நாள் சென்னையில் துவங்குகின்ற இந்தப் போராட்டம், 1965 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 24-ஆம் நாளோடு முடிவடையும்.

இந்தப் போராட்டத்தின் முதல் அணியில் நான் பங்கு கொண்டு சட்டத்தை எரிக்க இருக்கிறேன்! அதற்கடுத்து பதினைந்து நாட்கள் பிரச்சாரம் நடைபெறும்! அதற்கு அடுத்த நாள் மறியல் போராட்டம் நடைபெறும்! இந்த மறியலிலும் ஐந்துபேர் பங்கு கொள்வார்கள்.

அதற்கு அடுத்து இன்னொரு மாவட்டத்தில் சட்ட எரிப்புப் போராட்டம் நடைபெறும். அதன்பிறகு பிரச்சாரம், அதன் பிறகு மறியல் போராட்டம்! இப்படியே எல்லா மாவட்டங்களிலும் சட்ட எரிப்பும், மறியலும் நடைபெற்றுக் கொண்டே இருக்கும்! 1965ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 24 ஆம் நாள் இந்தப் போராட் டத்தின் முதல் கட்டம் முடிவடையும். அதன்பிறகு இரண்டாவது கட்டப் போராட்டம் பற்றி முடிவு எடுக்கப்படும்.

உங்களிடத்தில் துப்பாக்கி இருக்கிறது. எங்களிடத்தில் உயிர் இருக்கிறது!

நீங்கள் சுடத் தயார் என்றால், நாங்களும் சாகத் தயார் என்ற உறுதியோடு ஆட்சியாளர்களுக்கு அறிவித்து விட்டுப் போராட்டக் களம் நோக்கிப் புறப்பட உங்களை அழைக்கிறேன்!

அண்ணாவின் இந்தப் போர்ப்பரணியைக் கேட்டு, மக்கள் வீறு கொண்டார்கள். எந்தத் தியாகத்துக்கும் தயார் தயார் என்று தோள் தட்டி எழுந்தார்கள். போர்க்களம் காணத் துடித்து நின்றார்கள்.

தி.மு.கழகத்தின் போராட்டத்தை அண்ணா வெளியிட்டதும் காங்கிரசு அரசு அடக்கு முறைகளைக் கட்டவிழ்துவிட்டது. முக்கிய நகரங்களில் 144 வது தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நவம்பர் 12-ஆம் நாள் இரவு கழக முன்னணியினர் பலர் கைது செய்யப் பட்டார்கள்.

சென்னைக் கடற்கரையில் சட்டப்பிரிவை எரித்துப் போராட் டம் நடத்துவதற்காக நவம்பர் 16-ஆம் நாள் அண்ணா காஞ்சி காரில் புறப்பட்டார். அவரோடு சட்ட எரிப்பில் ஈடுபடவிருந்த ஐவர் அணியினரும் வந்தனர். அமைந்தகரை அருகில் அண்ணாவின் காரைப் போலீசார் மறித்தனர். அண்ணாவையும், அவரோடு வந்த ஐவர் அணியின ரான டி.எம்.பார்த்தசாரதி, டி.கே.பொன்னுவேல், தையற்கலை கே.பி. சுந்தரம், வி.வெங்கா ஆகியோரையும் கைது செய்தனர்.

அறிஞர் அண்ணா மற்றும் நால்வர் கைது செய்யப்பட்ட செய்தி நகர்முழுவதும் காட்டுத்தீ போல் பரவி விட்டது. இவர்களை அழைத்துப் போகும் சாலையின் இருபக்கங்களிலும் மக்கள் கூடியிருந்து "அறிஞர் அண்ணா வாழ்க!"" "இந்தி ஒழிக!" என்று தொடர்ந்து முழக்கமிட்டவாறு இருந்தார்கள்.

அண்ணா கைது செய்யப்பட்டதால் அன்று சட்ட எரிப்புப் போராட்டம் நடைபெறவில்லை. இதனால் நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அண்ணாவுக்கு ஆறுமாதக் கடுங்காவல்:

அரசியல் சட்டப் பிரிவைக் கொளுத்த முயன்றதாக அண்ணா மீதும். டி. எம். பார்த்தசாரதி, டி.கே. பொன்னுவேல். கே.பி. சுந்தரம். வி. வெங்கா ஆகியோர் மீதும் வழக்குத் தொடுக்கப் பட்டது. இந்த வழக்கில் வழக்கறிஞரை வைக்காமல் அண்ணாவே வாதாடினார்.

இந்த வழக்கில் டிசம்பர் 10-ஆம் நாள் தீர்ப்புக் கூறப்பட்டது. அண்ணாவுக்கும் மற்ற நால்வருக்கும் ஆறுமாதக் கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது.

அண்ணா சிறைக்கோட்டம் புகுந்ததும், போராட்டம் தீவிர மடைந்தது.

தொடர்ந்து மாதந்தோறும் நடைபெற்றதால் தி.மு.கழகத் தலைவர்களும் தொண்டர்களும் நாடுமுழுவதும் போராட்டத்தில் குதித்துச் சிறைத் தண்டனை பெற்றார்கள். காஞ்சிபுரத்தில் ஏ.கோவிந்தசாமியும் அவர் அணியினரும் சட்டத்தை எரித்து 6 மாதம் கடுங்காவல் பெற்றார்கள். எஸ்.எஸ். தென்னரசு திருப்பத் தூரிலும், நாவலர் நெடுஞ்செழியன் கோவையிலும், பேராசிரியர் அன்பழகன், கே.ஏ. மதியழகள் சென்னையிலும் மறியல் செய்து தண்டனை பெற்றார்கள். சட்டத்தை எரித்து 75 மறவர்களும், மறி யல் போரில் 1200 மறவர்களும் சிறைக் கோட்டம் புகுந்தார்கள்.

சட்டஎரிப்புப் போராட்டமும் மறியல் போராட்டமும் தமிழக மக்களிடையே பெரும் எழுச்சியையும் துடிப்பையும் ஏற்படுத்தின.

( கே.ஜி.இராதா மணாளன் எழுதிய திராவிட இயக்க வரலாறு என்னும் நூலில் இருந்து)

Wednesday, January 24, 2024

தமிழ் புத்தாண்டு அறிவிப்பு செல்லும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை செப். 23, 2006

தை மாதம் முதல் தேதியை தமிழ் புத்தாண்டாக தமிழக அரசு அறிவித்தது செல்லும் என உயாநீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்த எஸ் . சிவசுப்பிரமணிய ஆதித்தன் என்பவர்,

மதுரை உயர் நீதிமன்ற கிளையில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்தார். சித்திரை மாதம் 1-ம் தேதி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்துவது இந்துக்களின் வழக்கம். எனவே, சித்திரை 1-ந் தேதி கோவிலில் தமிழ் பத்தாண்டு சிறப்பு பூஜை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று அவர் அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதி கே.சந்துரு விசாரித்து நேற்று (செப்-22) தீர்ப்பு அளித்தார். 

சித்திரை 1-ம் தேதி தான் தமிழ் புத்தாண்டு தொடக்கம் என்பதற்கான ஆதாரத்தை மனுதாரர் தாக்கல் செய்யவில்லை. கோவிலின் பழக்க வழக்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மனுதாரர் இந்து அறநிலையத் துறை அதிகாரிகளை சட்டப்படி அணுக வேண்டும் அவர்களை அணுகாமல் மனுதாரர் நேரடியாக நீதிமன்றத்தை அணுகமுடியாது.

பொதுவாக நாட்காட்டிகள் சம்பந்தமாக பல்வேறு விவாதங்கள் உள்ளன. மொத்தம் உள்ள 60 தமிழ் ஆண்டுகள் குறித்து பல்வேறு காரசார விவாதங்கள் நடந்து வருகின்றன...

முற்காலங்களில் தமிழ் நாட்காட்டிகள் மாற்றப்பட்டுள்ளன. எனவே தற்போது அரசு மாற்றி உள்ளது ஒன்றும் புதிதல்ல. அரசியல் சட்டப்படி அதுபோன்று மாற்றுவதற்கு அரசுக்கு உரிமை உள்ளது. அரசு ஒரு வல்லுனர் குழுவை அமைத்து மொத்தம் உள்ள 60 தமிழ் ஆண்டுகளின் சுழற்சியில் மாற்றம் கொண்டு வருவதற்கு ஆலோசனை கேட்கலாம்.

அதேபோன்று சமஸ்கிருதத்தில் உள்ள தமிழ் ஆண்டுகளின் பெயர்களை மாற்றம் செய்யவும் ஆலோசனை கேட்கலாம். தமிழ் மொழி தான் ஆட்சி மொழி என்று கொண்டு

வர அரசுக்கு எப்படி அதிகாரம் உள்ளதோ, அதேபோன்று தமிழ் நாட்காட்டிகள் எப்படி இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கவும் அரசுக்கு அதிகாரம் உள்ளது.

எனவே தை மாதம் 1-ம் தேதியை தமிழ் புத்தாண்டாக அறிவித்தது சட்டவிரோதம் இல்லை . சித்திரை மாதத்தில் தமிழ் புத்தாண்டு கொண்டாடுவது இந்து மத வழிபாடுகளில் ஒரு பகுதி என்று மனுதாரர் தெரிவித்து இருப்பது மதசாயம் பூசும் செயலாகும் என்று தனது தீர்ப்பில் கூறிய நீதிபதி மனுதாரரின் மனு தள்ளுபடி செய்யப்படுவதாக தெரிவித்தார்.

தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாட வேண்டும்'

தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாட வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

கடந்த 23-1-2008-ல் சட்டப்பேரவையில் ஆளுநர் ஆற்றிய உரையில், தை மாதத்தின் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடப்படும் என அறிவித்தார்.

இந்த அறிவிப்பை காங்கிரஸ் சார்பில் இ.எஸ்.எஸ். ராமன், பாமக சார்பில் கி. ஆறுமுகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் என். நன்மாறன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வை. சிவபுண்ணியம், மதிமுக சார்பில் மு. கண்ணப்பன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கு. செல்வம் ஆகியோர் சட்டப்பேரவையில் வரவேற்றுப் பேசினர்.

1939-ல் திருச்சியில் நடைபெற்ற அகில இந்தியத் தமிழர் மாநாட்டில் சோமசுந்தர பாரதியார், பெரியார், மறைமலை அடிகள், பாரதிதாசன், திரு.வி.க., தெ.பொ. மீனாட்சிசுந்தரனார், பி.டி. ராஜன், பட்டுக்கோட்டை அழகிரி, உமாமகேசுவரனார், ஆற்காடு ராமசாமி முதலியார் ஆகியோர் பங்கேற்றனர். அதில் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என அறிவிக்கப்பட்டது.

2008-ல் தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டாக அறிவிக்கப்பட்டதும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், கவிஞர் வைரமுத்து ஆகியோர் அதனை ஆதராங்களுடன் வரவேற்றனர்.

ஆனாலும் 2011-ல் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என அறிவித்தனர்.

இதனால் திமுகவுக்கு எந்த அவமானமும் இல்லை. அதிமுக அரசின் முடிவால் தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு இல்லை என ஆகிவிடாது. நான் ஏற்கெனவே தெரிவித்தவாறு, சித்திரை முதல் நாளில் விழா கொண்டாடுவோரை நாம் தடுக்க மாட்டோம். தை முதல் நாளை ஏழை - பணக்காரர் வேறுபாடின்றி தமிழ்ப்புத்தாண்டாகக் கொண்டாட வேண்டும் என கருணாநிதி தெரிவித்துள்ளார்.


மாவோவின் நெடும்பயணம் - 2

மாவோவின் நெடும்பயணம் - 2

சீன வரலாற்றில் விவசாயிகள் கிளர்ச்சி ஒரு பெரும் பங்கை வகிக்கிறது. பெரும்பாலான பேரரசர்கள், தம் மக்களிடமிருந்து வரி வசூல் கெடுபிடி, கட்டாய ராணுவ சேவை, கட்டாய உழைப்பு ஆகிய நடவடிக்கைகள் காரணமாக விவசாயிகள் கிளர்ச்சியும் கலமும் நடைபெற்றன.

இத்தகைய விவசாயிகள் எழுச்சி முதன் முதலில் ஷேண்டங் மகாணத்தில் கி.பி.18 ஆம் ஆண்டில் தொடங்கிய சிவப்பு புருவங்கள் ஆகும். புரட்சியாளர்களின் குழுக்கள் தங்கள் புருவங்களில், புரட்சியின் அடையாளக் குறியீடாக, சிவப்பு வண்ணத்தை தீட்டுக் கொண்டு, அரசு அதிகாரிகளையும் நிலப் பிரபுக்களையும் கொன்று குவித்தனர். இக் கிளர்ச்சி கி.பி.25 ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்தது.

பின்பு கி.பி.184 இல் 'மஞ்சள் தலைப்பாகைகள்' கிளர்ச்சி தொடங்கியது. ஒரு குறிப்பிட்ட மதம், சித்தாந்தத் தலைமை உருவானது.

கி.பி. 589 இல் சூய் அரசகுலம், டாங் அரசகுலம் ஆட்சிக்கு வந்தது. பண்ணை நிலங்களின் சமமான விநியோகத்தையும், விவசாயிகளின் உடைமையும் பாதுகாத்தது. கி.பி. 860 இல் செக்கியாங் மகாணத்தில் பஞ்சம் ஏற்படுத்திய பேரழிவு மீண்டும் ஒரு விவசாயிகள், படிப்பாளிகள் கிளர்ச்சியை தோற்றுவித்தது. கி.பி. 960 இல் சுங் அரசகுலம் நிறுவப்படும் வரை இது தொடர்ந்தது. கி.பி. 1280 இல்  மங்கோலியர் படையெடுப்பு நடைபெற்றது. பின் வாரிசு வகையில் துறவியான சூ யுவான் - சாங் என்ற விவசாயியால் மங்கோலியர்கள் தூக்கி எறியப்பட்டனர். அத்துறவி மிங் அரச குலத்தின் முதல் பேரரசன்.

சீனாவின் வடக்கில் மஞ்சுக்களின் படையெடுப்பு, ரகசியக் குழுக்களின் நடவடிக்கைகள் ஆகியவற்றோடு விவசாயிகள் எழுச்சியும் சேர்ந்து மிங் வம்சத்தை முடிவுக்கு கொண்டு வந்தன.

மஞ்சு அல்லது சிங் வம்சம் தொடக்கத்தில் புகழ்மிக்க ஒன்றாக விளங்கியது. சி யென்- லுங் காலத்தில், 18 ஆம் நூற்றாண்டில் மிகப் புகழ் பெற்று விளங்கியது.

பதினெட்டாம், பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் 'வெண்தாமரை', 'சொர்க்கத்தின் சட்ட சங்கம்' போன்ற ரகசியக் குழுக்கள் செயல்பட்டன. இதில் முதன்மையானது 'டாய்பிங்' எழுச்சியாகும்.

டாய்பிங்குகள் , பல அம்சங்களில் காலத்துக்கு முந்தியவர்களாக இருந்தார்கள். நிலங்களையும், உணவையும், உடையையும் தங்களுக்குள் நியாயமாகப் பகிர்ந்து கொண்டார்கள்.

அபின், புகைப்பிடித்தல், காலங்காலமாக இருந்து வந்த பழக்கமான பெண்களின் பாதங்களை கட்டி வைப்பது போன்றவற்றிக்கு எதிராக இருந்தார்கள். பெண் விடுதலை, விதவை மறுமணம் ஆகியவற்றிற்கும் குரல் கொடுத்தனர்.

சொத்தில் மீதுள்ள எல்லாப் பற்றுக்களையும் துறந்தார்கள்.

ஒரு நூற்றாண்டுக்குப் பின்னர் பொதுவுடமையாளர்கள் செய்தது போல பெரும் நகர்ப்புற மையங்களின் எதிர்ப்பைப் புறக்கணித்து கிராமப் புறங்களில் தங்களது ஆதரவைக் கட்டியமைத்தார்கள்.

"உலகின் நிலம் உலகின் மக்களால் பொதுவில் உழப்பட வேண்டும்" என்று டாய்பிங்கின் பாடநூல் ஒன்று கூறியது.

"இங்கே நமக்குப் பற்றாக்குறையிருந்தால் மக்கள் வேறு பகுதிக்குக் குடிபெயர்க்கப்பட வேண்டும். இதேபோல பிற இடங்களில் இப்படிச் செய்தால் ஒரு பகுதியின் உபரி இன்னொரு இடத்தின் பஞ்சத்தைப் போக்கலாம். சொர்க்கத்திலிருக்கும் தந்தையாகிய கடவுளால் வழங்கப்பட்ட மகிழ்ச்சியை உலகம் முழுவதும் அனுபவிக்க வேண்டும்.

நிலம் உணவு, உடை மற்றும் பணம் அனைத்தும் பொதுவில் வைக்கப்பட்டு பயன்படுத்தப்பட வேண்டும்; அதனால் சமத்துவமின்மை என்பது எங்கும் இருக்காது; யாரும் உணவோ, கதகதப்பான ஆடையோ இன்றி எங்கும் இருக்கமாட்டார்."

ஒரு கட்டத்தில் சீனாவின் தென்பாதியை 'டாய்பிங்குகள்' வசப்படுத்தியிருந்தனர். 1853இல் அவர்கள் தங்கள் தலைநகரத்தை 'நான்கிங்'கில் நிறுவினார்கள். ஆனால் அவர்களிடம் பயிற்சி பெற்ற நிர்வாகிகள் இல்லாததால் தாங்கள் ஆட்சிசெய்த கிராமப்புறங்களுக்கு எந்த முறைப்படுத்தப்பட்ட அமைப்பையும் உருவாக்கித் தர முடியவில்லை. மேலும் அவர்கள் தங்களது தீவிர நம்பிக்கைகள், விநோதமான பழக்க வழக்கங்கள் மற்றும் ஒரு அந்நிய நம்பிக்கையைப் பின்பற்றியமை காரணமாகப் பல கற்றறிந்த சீனர்களைத் துரத்தி விட்டிருந்தனர்.

அவர்களது வளர்ந்து வந்த மூர்க்கம் மற்றும் ஒரு தெய்வீக லட்சியத்தின் நம்பிக்கை ஆகியவையும் அவர்களை சாங்காய், கான்டோன் மற்றும் பிற உடன்படிக்கைப் பகுதிகளில் வலுவாகக் காலூன்றியிருந்த மேலைநாட்டு சக்திகளிடமிருந்து அந்தியப்படுத்தியிருந்தது. 

சீனாவிலிருந்த பல மேலை நாட்டினர், டாய்பிங் இயக்கம் வாழ்க்கையின் மீதான நவீனப் பார்வையைக் கொண்டிருந்த அடையாளங்களைக் காட்டியதால் அதனை ஆரம்பத்தில் ஆதரித் திருந்தாலும், இறுதியில் அவர்களின் கலகத்தை நகக்குவதில் பேரரசின் உதவிக்கு வந்தனர். 'அரசப் பொறியாளர்கள்' (ராயல் என்ஜினியர்கள்) தலைவர் சார்லஸ் கோர்டான் என்பவர் டாய்பிங் படைகளின் இறுதித் தோல்விக்கு ஒரு முக்கியப் பங்காற்றினார்!

டாய்பிங்குகள், ஒரு நூற்றாண்டுக்குப் பின் வந்த பொதுவுடைமையாளர் களை தெய்வீகச் சாயலில் இளம் காட்டியிருந்தனர். அவர்களும் அதே இக்கட்டான நிலைமையைச் சந்தித்தனர். 

1852இல் டாய்பிங்குகள் மஞ்கு பேரரசனை பதவியிறக்குவதற்கு வூகானிலிருந்து வடக்கு நோக்கி அணி வகுத்து இருக்க முடியும். ஆனால் வாய்ப்பை தவற விட்டார்கள்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் நடைபெற்ற குத்துசண்டையர் கலகம் தோல்வி அடைந்தது. சிங் வம்சம் முடிவுற்றது.

1898 இல் ஷாண்டுங் மாகாணத்தில் ஒரு ரகசிய குழுவாக குத்துச்சண்டை யர் கலகம் தோன்றியது.

குத்துச் சண்டையர் கலகம், மஞ்சூ எதிர்ப்பு மற்றும் அந்நிய எதிர்ப்பு என்பதாகத்தான் தொடங்கியது.

ஆனால் புகழ்பெற்ற டாவேஜர் ஜு சி என்ற பேரரசி கலகத்தின் பேரரசு எதிர்ப்பு சக்திகளை மழுங்கச் செய்வதில் வெற்றியடைந்தார். பின்னர் அச்சக்திகள் தேசியவாத, அந்நிய எதிர்ப்பு சக்திகளாக மட்டுமே ஆயின. 

இவ்விதமாக அது 1900ஆம் ஆண்டில் பீகிங்கில் புகழ்பெற்ற அந்நியத் தூதரகங்களின் முற்றுகையின்போது சிகரத்தை அடைந்தது. அந்த முற்றுகை ஐரோப்பாவில் இருந்து அனுப்பப்பட்ட ஒரு வலிமை வாய்ந்த சர்வதேசப் படையினால் தான் அகற்றப்பட்டது.

'குத்துச்சண்டையர் கலகம்' தோல்வி யடைந்தது. ஆனால் குத்துச்சண்டையர் கள்தான் நவீன சீனாவின் தேசியவாதத்தை உண்மையில் தோற்றுவித்தவர்கள். சீனக் கருத்துக்களில் இந்தக் கலகம் ஒரு தொடர்ந்து வளர்ந்த செல்வாக்கைப் பெற்றிருந்தது.

அது 'கோமின்டாங்' தேசியக்கட்சியின் நிறுவனராகிய சன் யாட்-சென்னின் கீழ் இருந்த தீவிரப் புரட்சிகரக் குழுக்களின் நிலைமையைப் பெரிதும் பலப்படுத்தியது. மஞ்சூ வம்சத்தைத் தூக்கியெறிந்த 1911-12-ன் புரட்சிக்குக் கட்டியங் கூறுவதாக குத்துச்சண்டையர் கலகம் அமைந்தது.

விவசாயிகளைத் தமது முதன்மையான ஆதரவாளர்களாகக்ப்கொண்டு ஒன்று அல்லது பல தளப்பிரதேசங்களிலிருந்து நீண்ட இராணுவப் போராட்டத்தின் பாரம்பரிய விவசாயிகள் கிளர்ச்சியின் ஒரு உருமாதிரியை (வரைபடத்தை) இந்த சீனாவின் சுருக்கமான வரலாறு எடுத்துக்காட்டுவதாக பொதுவுடைமையரல்லாத 'மாசேதுங்கின் வாழ்க்கை வரலாற்று ஆசிரியர் ஜெரோம் செ-யென்' குறிப்பிடுகிறார். 

நெடும் பயணத்திலிருந்த மாவோவும் பொதுவுடைமைத் தலைமையிலிருந்த அவரது கூட்டாளிகளும் விவசாயிகளின் முந்தைய யுத்தங்களின் கதாநாயகர்களின் ஆழ்ந்த செல்வாக்குக்கு ஆட்பட்டிருந்தனர். 

மாவோ தனது படைப்புகளிலும் உரைகளிலும் பற்பல குறிப்புகளைத் தருகிறார்.

உதாரணமாக, வடக்கு சங் வம்சத்தின் இறுதிப்பகுதியில் ஒரு விவசாயிகள் எழுச்சியைத் தலைமைதாங்கி நடத்திய 'லி குவெயின்' பற்றிக் குறிப்பிடுகிறார். லி குவெயின் வீரச் செயல்கள் 'நீர் எல்லை' என்ற புகழ்பெற்ற சீன நாவலில் வர்ணிக்கப்பட்டிருந்தன. அந்நாவல் 'மனிதர்கள் யாவரும் சகோதரர்களே' என்ற தலைப்பில் 'பேர்ல் பக் 'அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.

'நெடும் பயணம்' முழுவதும் மாவோ தன்னோடு எடுத்துச்சென்று படித்த

ஒரு சில நூல்களில் இதுவும் ஒன்றாக இருந்தது.

சீனாவில் உயர்நிலையை அடைவதற்காக பொதுவுடைமையாளர்கள் போராடிக் கொண்டிருந்த சமயம், முன்னர் நடந்த பல புரட்சிகளின் காலக்கட்டத்தைப் போலவே சீன விவசாயிகளின் நிலைமை மோசமாக இருந்தது. 

ஒரு சீன விவசாயப் பண்ணை சராசரி அளவு 3.3 ஏக்கர்களாக இருந்தது. அதிலிருந்து ஒரு வயது விவசாயி ஆண்டு ஒன்றுக்கு 65 யுவான்கள் (அல்லது 16 அமெரிக்க டாலர்கள்)தான் வருவாய் ஈட்ட முடிந்தது. நிலப்பிரபு வழக்கமாக இதில் பாதியை எடுத்துக்கொண்டான் மீதிப் பாதி அந்த விவசாயிக்கும் அவனது குடும்பத்திற்கும் வாழ்க்கைச் செலவிற்கும் போதுமான இல்லை. அவன் மந்தமான விளைச்சல் காலங்களில் ஈட்டிக்காரர்களிடம் கடன் வாங்கவும் ஆண்டுக்கு முப்பது சதவீதமும், மேலாகவும் வட்டி செலுத்தவும் நிர்ப்பந்திக்கப்பட்டான்''

1920களில் பயிர்செய்யும் நிலப்பரப்பின் அளவில் ஒரு சீரான வீழ்ச்சி ஏற்பட்டு வந்தது. மேலும் சொந்தமாகப் பயிரிடும் நிலங்களின் குறைந்தது. 1918இல் பண்ணை மக்கள் தொகையில் ஏறத்தாழ முப்பது சதவீதத்தினர் குத்தகைதாரர்களாக இருந்ததாக மதிப்பிடப்பட்டது.

ஆனால் ஒரு பத்தாண்டுக் காலத்திற்குப் பின்பு இந்த விகிதாச்சாரம் பாதிக்கும் மேலே உயர்ந்ததாக கருதப்பட்டது.

புகழ்பெற்ற ஆங்கில பொருளாதார நிபுணர் ஆர். எச். டானி 'சீனாவில் நிலமும் உழைப்பும்' என்ற தனது நூலில் ஹுனான் மாகாணத்தில் கிராமப்புற மக்கள் தொகை எண்பது சதவீதம் அளவுக்கு குத்தகை விவசாயிகளாக இருந்தனர் என்றும் குவான்டாங் மற்றும் ஃபுகியான் பகுதிகளில் இந்த சதவீதம் மூன்றில் இரண்டு பங்காக இருந்தது என்றும் முடிவு செய்துள்ளார்.

1934இல் வெளியிடப்பட்ட சர்வதேச சங்கத்தின் கணக்கெடுப்பு ஒன்றிலும் இதேபோன்ற முடிவுகள் காணப்பட்டன. 

இந்த ஏழைக் குத்தகை விவசாயிகள் முன் நூற்றாண்டுகளில் போலவே, மைய அரசாலும், மாகாண அல்லது பிராந்திய யுத்தப் பிரபுக்களின் அளவுக்கதிகமான வரிவிதிப்பாலும் கடின உழைப்பாலும் துன்புற்று வந்தனர்.

சுழற்சியின் அடுத்த தவணைக்குப் பொருத்தமாக நிலைமைகள் தெளிவாகவே கனிந்திருந்தன. சீனப் பொதுவுடைமைக் கட்சியின் யுத்த தந்திரத்தில் ஒரு பாதுகாக்கும் அம்சமாக அவர்களது துயரங்களைப் பயன்படுத்தி விவசாயிகளைத் திரட்டுவதற்கான திறமை இருந்தது.

"விவசாயிகளின் நிலத்திற்கான போராட்டம் சீனாவில் ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் நிலப்பிரபுத்துவ எதிர்ப்புப் போராட்டத்திலும் அடிப்படை அம்சமாக இருக்கிறது. சீனாவின் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி அதன் சாராம்சத்தில் ஒரு விவசாயப் புரட்சியேயாகும்.

எனவே முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியில் சீனப் பாட்டாளி வர்க்கத்தின் அடிப்படைக் கடமை விவசாயிகளின் போராட்டத்திற்குத் தலைமையளிப்பதாகும்” என்று மாவோ அறிவித்தார்.(3)