Friday, October 17, 2014

பெரியார் - தமிழ்த் தேசத் தந்தை - 2

பெரியார் - தமிழ்த் தேசத் தந்தை - 2



பெரியாருக்குப் பின் பெரியார் (தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம், நவம்பர் 29, 2010) என்ற கட்டுரையில் தோழர் மணியரசன் அவர்கள்,
தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டத்தில் முனைவர் . செயராமன் எழுதிவரும் இனவியல்: ஆரியர் -திராவிடர் - தமிழர் என்ற ஆய்வுக் கட்டுரைத் தொடரும், .செந்தமிழன் எழுதிவரும் திராவிடம் குறித்த ஆய்வுக் கட்டுரைகளும் வாசகர்களின் கவனத்தைக் கூடுதலாக ஈர்த்துள்ளன.
இவ்விருவரின் கட்டுரைகளைப் பலர் உற்சாகத்தோடு வரவேற்கிறார்கள். அதே வேளை இவற்றால் பெரியாரியல் தோழர்கள் சிலர் வருத்தமும் எரிச்சலும் அடைந்துள்ளனர்.....
திராவிடம் குறித்து இவ்விருவரும் எழுதி வரும் கட்டுரைகளில் உள்ள சாரமான கருத்துகள் தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சிக்கு ஏற்புடையவைதாம். இத் திறனாய்வுகள் இறுதியில் பெரியாரை மறுப்பதில்தான் போய் முடியும் என்று மேலே குறிப்பிட்ட பெரியாரியல் தோழர்கள் சிலர் கருதுகிறார்கள்.
தான் பெரியார் பற்றி செய்யப்போகும் அவதூறுப் பரப்புரைக்கு இப்படி முன்னுரையோடு தோழர் பெ.மணியரசன் தொடங்குகிறார். அவர் கட்டுரைக்குள் போகுமுன் சில கேள்விகளுக்கு விடை காண முயல்வோம். முனைவர் ஒரு கருத்தை முன் வைத்து பெ.மணியரசன் அவர்கள் ஆசிரியராக உள்ள தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழில் தொடர் எழுதுகிறார். அதே கருத்தை முன்வைத்து தோழர் .செந்தமிழன் அவர்களும் எழுதுகிறார். இது என்ன இதழியல் தர்மம்? சரி. தோழர் .செந்தமிழன் என்ன அவ்வளவு பெரிய ஆராய்ச்சியாளரா? அவர் பெ.மணியரசனின் மகன், குமுதத்தில் பணியாற்றினார் என்பதைத் தவிர அவருக்கு என்ன தகுதி? இதழ்களிலேயே கழிசடை குமுதம். இவ்விதழில் தனது மகனை சேர்த்துவிட்ட அப்பா மணியரசன். போகட்டும்.
கோபிச்செட்டிப்பாளையம் வழக்கறிஞர் சிந்தனைச் செம்மல் அவர்கள் அண்ணாவிடம் மிகவும் நெருக்கமானவர். திருக்குறளின் உண்மைப் பொருள் என்ற தலைப்பில் ஆயிரம் பக்கங்களுக்கு மேல் திருக்குறளுக்கு உரை கண்டவர். தமிழக அரசின் திருக்குறள் விருது பெற்றவர். அவர் மலர்க மாநில சுயாட்சி என்ற நூலை ஆயிரம் பக்கங்களுக்கு மேல் எழுதினார். அதைக் கண்ட கலைஞர் கருணாநிதி அவர்கள் தனது அக்கா மகன் முரசொலி மாறன் அவர்களை வைத்து மாநில சுயாட்சி என்ற நூலை எழுதச் சொன்னார். அது தான் இப்போது திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில சுயாட்சி கொள்கை விளக்க ஆவணமாக உள்ளது.
கலைஞர் கருணாநிதி செய்த செயலுக்கும் தோழர் பெ.மணியரசன் தன் மகன் .செந்தமிழன் அவர்களை வைத்து எழுதச் சொன்னதற்கும் ஏதும் வேறுபாடு உள்ளதா? சரி. இப்போது கட்டுரைக்கு வருவோம்.
இத்திறனாய்வுகள் இறுதியில் பெரியாரை மறுப்பதில் தான் போய் முடியும் என்று மேலே குறிப்பிட்ட பெரியாரியல் தோழர்கள் சிலர் கருதுகிறார்கள் என்று தோழர் பெ.. அவர்கள் எழுதுகிறார். இந்த ஆய்வுகள் உண்மையான ஆய்வுகளாக இருக்கின்ற நிலையில் பெரியாரியல் தோழர்களுக்கு எந்த மனவருத்தமும் ஏற்பட வாய்ப்பில்லை. பெரியாரைத் தாங்கிப் பிடிக்க வேண்டிய அவசியமுமில்லை. ஆனால் நீங்கள் செய்கின்ற இந்த மாதிரியான மொக்கையான ஆய்வுகள் பார்ப்பனர்களைத் தூக்கிப் பிடிப்பதிலும் நீங்கள் அம்பலப்பட்டுப் போவதிலும் தான் போய் முடிகிறது என்பது தான் பெரியாரியல் தோழர்களின் கவலை.
தமிழரசுக் கழகம் நடத்திய .பொ.சி. அவர்கள் தமிழன் குரல் அக்டோபர் 1954 இதழில்,
திராவிட மாயையிலிருந்து விடுபட்டதாகக் கூறிக் கொண்டு மலையாளிகளின் ஆதிக்கத்தை எதிர்க்கப் புறப்பட்டிருக்கும் பெரியார் .வே.ரா முதலில் தமிழரைப் பிளவுபடுத்தும் பிராமணர்-பிராமணர் அல்லாதார் கூச்சலுக்கு முற்றுப்புள்ளி வைக்கட்டும். அப்பொழுது தான் தமிழகத்தில் தமிழர் அல்லாதாரின் ஆதிக்கத்தை ஒழித்துத் தமிழினத்துக்கு வாழ்வு தேட முடியும்.
இதோ பூனைக்குட்டி வெளிவந்துவிட்டது. .பொ.சி.யின் வழித்தோன்றல்களான பெ..வும் இதைத் தான் செய்கிறார் என்பது தான் எங்கள் குற்றச்சாட்டு.
திராவிடர் என்றழைக்கப்பட்டவர்கள் தென்னாட்டுப் பார்ப்பனர்களே - தோழர் பெ.மணியரசன் தீர்ப்பு.
திராவிடர் என்பது தென்னாட்டு பார்ப்பனர்களைத் தான் குறிக்கும் என்ற முனைவரின் ஆராய்ச்சிக்கு தோழர் மணியரசன் அவர்கள்,
திராவிடர் என்றால் அதற்குள் பார்ப்பனர் வர மாட்டார்; தமிழர் என்றால் அதற்குள் பார்ப்பனர் வந்துவிடுவர் என்று அவராகவே(பெரியாராகவே) ஒரு போடு போட்டார். அதற்கான வரலாற்றுச் சான்று எதையும் அவர் (பெரியார்) காட்டவில்லை. இப்பொழுது முனைவர் .செயராமன் திராவிடர் என்ற சொல் ஒரு கட்டத்தில் தென்னாட்டுப் பார்ப்பனர்களை மட்டுமே குறிக்கப் பயன்படுத்தப்பட்டது என்பதைச் சான்றுகளுடன் நிறுவி விட்டார் என்று நெல்லைக் கண்ணன் பாணித் தீர்ப்பை வழங்கி விட்டார்.
பேராசிரியர் செயராமன், மரபினக் கலப்பு நிகழ்ந்து கொண்டேயிருக்கும் நிலையில் இனங்களைப் பண்பாடுகளின் அடிப்படையில் அடையாளப்படுத்துவது சரியானதாக இருக்கும். அத்தகைய போக்கு 19 ஆம் நூற்றாண்டில் தொடங்கியது என்று தெளிவுரை கூறிய பின்னும் பெ..அவர்கள் எப்படி தென்னாட்டுப் பார்ப்பனர்களைக் குறிக்கின்ற சொல் திராவிடர் என்று பொருள் கொண்டார் என்பது விளங்கவில்லை.
மேலும் தோழர் பெ.மணியரசன் அவர்கள், பெரியார் தழுவி நின்ற தெலுங்கர், கன்னடர், மலையாளி ஆகியோர் தங்களை ஒரு போதும் திராவிடர் என்று கூறிக் கொண்டதில்லை. திராவிடர் என்ற கொச்சை சொல்லை தமிழர் மீது மட்டுமே பெரியார் திணித்தார் என்று கூறுகிறார்.
திராவிடர் என்ற சொல் தெலுங்கர், கன்னடர், மலையாளி ஆகியோரைத் தழுவி நின்ற சொல்லாக பெரியார் பயன்படுத்தினார் என்று தோழர் மணியரசன் அவர்கள் கூறுவது உண்மையா? திராவிடர் என்ற சொல்லை பயன்படுத்துவது குறித்து பெரியார் அவர்கள்,
நம் நாட்டுக்கு, சமுதாயத்திற்கு, இனத்திற்கு திராவிடம் என்று இருந்த பெயர், அது தமிழல்ல என்பதனாலும், நமக்கு அது ஒரு பொது குறிப்புச் சொல்லும், ஆரிய எதிர்ப்புச் சொல்லுமாக இருக்கிறதே என்று வலியுறுத்தி வந்தேன் என்று விளக்கிய பின் மேலும் பெரியார், அவர்கள் மூவரும் (ஆந்திரர்,கன்னடர், மலையாளி- கவி) ஒழிந்த பிறகு அவர்களையும் சேர்த்துக் குறிப்பிடத்தக்க ஒரு சொல் நமக்குத் தேவையில்லை என்றாலும், திராவிடன் என்ற சொல்லை விட்டுவிட்டு தமிழன் என்று சொல்லியாவது தமிழ் இனத்தைப் பிரிக்கலாம் என்றால், அது வெற்றிகரமாக முடிவதற்கு இல்லாமல் பார்ப்பான் (ஆரியன்) வந்து, நானும் தமிழன்தான் என்று கூறிக் கொண்டு உள்ளே புகுந்துவிடுகிறான்
என்று கவலையோடு விளக்கம் கூறியதற்கு இந்த போலித் தமிழ்த் தேசியவாதிகள் விடை கூற வேண்டாமா?
திராவிடன் என்றால் தென்னாட்டுப் பார்ப்பான்தான் என்றால் சோவும், சுப்பிரமணியசாமியும் தன்னை திராவிடன் என்று கூற முன்வருவார்களா? அல்லது இங்கிருக்கிற தமிழ்ப் பார்ப்பனர்கள் நாங்கள் தான் உண்மையான திராவிடர்கள் என்று கூறுவார்களா? பெரியார் தொடங்கிய திராவிடர் கழகம் தமிழ்ப் பார்ப்பனர்களுக்காக என்று இவர்கள் வாதாடுவார்களா?
திராவிடர் என்ற சொல் மனு தர்ம சாஸ்திரத்தில் ஒடுக்கப்பட்ட மக்களைக் குறிக்கப் பயன்பட்டிருக்கிறது என்பதை தோழர் அதிஅசுரன் அவர்கள் விரிவாக சான்று காட்டி விளக்கியுள்ளார்.
மேலும் வரலாற்றின்படியும் திராவிடர் என்ற சொல் ஒடுக்கப்பட்ட மக்களை குறிக்கிறது என்பதை தோழர் அதிஅசுரன் அவர்கள்,
சமண மதம் தமிழ்நாட்டுக்குள் வந்து, வளர்ந்து, இந்து மதத்தில் தேய்ந்து, மறைந்த வரலாற்றை மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் சமணமும் தமிழும் என்ற பெயரில் நூலாக வெளியிட்டுள்ளார். கிறித்து பிறப்புக்கு முன்பே தமிழ் நாட்டுக்குள் சமணம் வந்து விட்டது. ஆரம்ப காலங்களில் இந்து மதத்துக்கு எதிராகவே சமணம் இருந்தது. பார்ப்பனர்களுக்கு எதிரான, கடவுளுக்கு எதிரான மதமாகவே சமணம் இருந்தது. சமணத்தைப் பின்பற்றுவோர் தமிழ் நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்திருக்கின்றனர். எனவே கி.பி.3 ஆம் நூற்றாண்டுக்கு முன்பே சமண மதத்தில் நந்திகணம், சேன கணம், சிம்ம கணம், தேவ கணம் என நான்கு பிரிவுகள் உண்டாயின. அந்தப் பிரிவுகளில் ஒன்றான நந்தி கணத்திலிருந்து திரமிள சங்கம் அல்லது திராவிட சங்கம் உருவானது என்று மைசூர் நாட்டுச் சாசனம் ஒன்று கூறுகிறது (EC. Vol.V.Hassan Taluk, 131, Arsikera Tq, IEC.Vol. IV. Gundlupet Tq.27). மேலும் கி.பி. 470 ஆண்டு சமண சமயத்தவரான வச்சிர நந்தி என்பவர் திராவிட சங்கத்தை ஏற்படுத்தினார் என்று தர்சன சாரம் என்னும் நூலில் தேவ சேனர் என்பவர் எழுதியிருக்கிறார். சமண மதத்தின் இந்த திராவிட சங்கம் மதுரையில் தான் தொடங்கப்பட்டது என்றும் கி.பி.900 வரை அந்த திராவிட சங்கத்தைச் சேர்ந்த துறவிகள் வாழ்ந்தனர் என்றும் வரலாற்றுக் குறிப்புகளை ஆதாரங்காட்டி மயிலை சீனி. வேங்கடசாமி எழுதியுள்ளார். ஆக 5 ஆம் நூற்றாண்டின் இறுதிவரை கூட திராவிடர் என்ற சொல் ஆரியர்களுக்கு - பார்ப்பனர்களுக்கு - இந்து மதத்துக்கு எதிரான சொல்லாகவே இருந்திருக்கிறது என்று விளக்குகிறார்.
பேராசிரியர் செயராமன் அவர்களே தமது கட்டுரையில்,
‘‘திராவிட என்ற சொல் மகாபாரத்தில் வருகிறது. அது தென்னகப் பகுதியைக் குறிக்கப் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. திராவிடர் பற்றி மனு தர்மம் பேசுகிறது. மனு சாஸ்திரத்தில் (X,43,44) சாதி இறக்கம் செய்யப்பட்ட சத்திரியர்களைப் பற்றி வருகிறது. திராவிடர்கள் சத்திரியர்களாக இருந்தனர் என்றும், பின்னர் விருசாலர்களாக (சூத்திரர்கள்) தாழ்ந்தார்கள் என்றும் திராவிடச் சத்திரியர்கள், புனித சடங்குகளை விட்டுவிட்டனர் என்றும் அதனாலேயே தாழ்ந்தார்கள் என்றும் மனு நூல் குறிப்பிடுகிறது
என்று திராவிடர்கள் சூத்திரர்களாக தாழ்ந்தார்கள் என்று கூறிவிட்டு திராவிட சத்திரியர்கள் யார் என்பது நாம் அறியாத ஒன்று என்று கயிறு திரிக்கிறார். பேராசிரியர் செயராமன் ஏற்கனவே தென்னாட்டுப் பார்ப்பனர் தான் திராவிடர் என்ற முடிவை மனதில் வைத்துக் கொண்டுதானே இக்கட்டுரையை எழுதத் தொடங்கினார். பின் அவருக்கு ஏன் தயக்கம்?
ஆதிதிராவிடர்களின் பூர்வீகச் சரித்திரம் என்னும் நூலில் டி. கோபாலச்செட்டியார் அவர்கள், தமிழிலக்கண வித்துவான்களும் கூடத் திராவிட நாட்டிலிருந்தவர்களை மக்கள், தேவர், நரகர் என்றனர். இதில் நரகர் என்பது நாகர், மக்கள் என்பது தமிழ் மக்கள், தேவர் என்பது ஆரிய பிராமணர். நரகர் என்பது நாகர் என்கிற பூர்வ குடிகள். காடுகளிலும், தாழ்ந்த நிலங்களிலும் விளங்காத இடங்களிலும் (நரகம்) இருந்த பூர்வ குடிகளுக்கு நாகர் என்று பெயர். மேற்கூறியவைகளால் திராவிடர் என்பது ஆதிக் குடிகள் - நாகர் -தமிழர் என்கிற மூவகை ஜனங்கள் ஒன்றுபட்ட பிறகு உண்டான பெயர். ஆதிக் குடிகள் இல்லை என்று ஏற்பட்டதால், நாகரும் தமிழரும் சேர்ந்து திராவிட ராயினர்
என்று எழுதிவிட்டு தன் கூற்றுக்குச் சான்றாக,
நாக நன்னாட்டு நானூறி யோசனை
வியன்பாதலத்து வீழ்ந்து கேடெய்தும்
நக்க சாரணர் நாகர் வாழ்மலை (மணிமேகலை)
என்ற சிலப்பதிகாரத்தின் வரிகளை மேற்கோள் காட்டுகிறார்.

(தொடரும்)

No comments: